சென்ற ஆண்டு ‘நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் தான் எழுதிய கட்டுரை ஒன்றில், வெள்ளையர்கள் ‘சலவைச் செய்யப்பட்டவர்கள்’ என்று அர்னால்ட் டாய்ன்பி குறிப்பிட்டார். (அவர் வார்த்தைகளில் சொல்வதானால்: வட ஐரோப்பாவில் தோன்றிய வெள்ளையர்கள் (அதாவது, சலவை செய்யப்பட்டவர்கள்) . . . ) மேலும் ஐரோப்பிய நிலவியலைப் பார்த்துவிட்டு, அது ஆசியக் கண்டத்தின் தீபகற்பம் என்றார். அவரைப் பொறுத்தவரை ஐரோப்பா என்றொரு கண்டமே கிடையாது.
ஆனால் பூகோள உருண்டையை எடுத்துப் பார்த்தால், அமெரிக்காதான் ஆசியாவின் நீட்சி என்பது நம் எல்லோருக்கும் கண்கூடாகத் தெரியும். (வரலாற்றை வெள்ளையடித்தவர்களுக்கு ஆதரவாக டாய்ன்பி பேசினார். ஆப்ரிக்கக் கண்டத்திற்கு மட்டும்தான் வரலாறு என்பதே கிடையாது என்றும் எழுதத் துணிந்தார். ஆனால் இனி அவ்வாறு எழுத முடியாது. ஒவ்வொரு நாளும் உண்மை வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.)
அடிமை முறையின் ஒட்டுமொத்த வரலாற்றையும் படித்தப் பிறகு, நான் அடைந்த அதிர்ச்சியை ஒருபோதும் மறக்க மாட்டேன். பின்னாளில் திரு. முகமதின் ஆசிபெற்ற மறை பரப்புநராக மாறியபோதும், என்னில் இவை ஆழ்ந்த தாக்கம் செலுத்தின. உலகின் மிகக் கொடூரமான குற்றங்கள் இழைக்கும் வெள்ளைக்காரனின் பாவம் படிந்த கரங்களும், இரத்தக் கறை படிந்த வாழ்வும் கிட்டத்தட்ட நம்பமுடியாத அளவுக்கு வஞ்சனை நிறைந்ததாய் இருக்கிறது.
ஆப்ரிக்க அடிமைகள் அமெரிக்க மண்ணில் தரையிறங்கியதிலிருந்து என்னென்ன கொடுமைகள் அனுபவித்தார்கள் என்று தெரிந்துகொள்வதற்குப் பிரெட்ரிக் ஓம்ஸ்டெட் எழுதிய புத்தகங்கள் கண்திறப்பாக இருந்தன. ஐரோப்பியப் பெண்மணி ஃபேனி கிம்பால் தென்னகத்து அடிமை முதலாளியை மணந்துகொண்ட பிறகு, அங்கிருந்த மனிதர்கள் எத்தனைத்தரம் தாழ்த்தி நடத்தப்பட்டார்கள் எனத் தன் நூலில் விவரித்துள்ளார். இந்தச் சமயத்தில் ‘அங்கிள் டாம்’ஸ் கேபின்’ என்ற நாவலை வாசித்து முடித்தேன். தீவிர வாசிப்பைத் தொடங்கிய பிறகு, நான் வாசித்த ஒரே நாவல் இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.
பார்க்ஹர்ஸ்ட்’ன் சேகரத்தில் புதிய இங்கிலாந்தின் அடிமைத்தன ஒழிப்புச் சங்கத்தின் சில கெட்டிப் பிரசுரங்கள் இருந்தன. அதில் வெள்ளையர்கள் செய்யும் அட்டூழியங்களை விவரமாகப் படித்தேன். கறுப்பினப் பெண்மணியின் கை, கால்களைக் கட்டிவைத்து சாட்டையால் அடிக்கும் முதலாளிகள், தங்கள் குழந்தைகள் பறித்துச் செல்லப்படுவதைச் சோகமாகப் பார்க்கும் கறுப்பினத் தாய்மார்கள், மீண்டும் தன் பெற்றோரைக் காண முடியாத துக்கத்தைத் தொண்டையில் அடைந்திருக்கும் குழந்தைகள், நாய்களுக்கு அடுத்தபடியான அடிமைகள், வில்லங்கமான வெள்ளையர்கள் சாட்டை, சங்கிலி, துப்பாக்கிகளுடன் அடிமைகளைத் துரத்தும் காட்சியென்று மேற்சொன்ன எல்லா உருவங்களும் அந்தத் துண்டுப் பிரசுரத்தில் தெரிந்தன.
நட் டர்னர் என்றொரு அடிமைப் போதகர் பற்றி நான் படித்திருக்கிறேன். வெள்ளையின அடிமை முதலாளிகளுக்குக் கடவுள் பயத்தைக் கண்முன் கொண்டு வந்தவர். நட் டர்னர் அமைதியைப் போதித்தவர் அல்ல. கறுப்பின மக்களின் விடுதலைக்கு வன்முறையே வழியென்று சொன்னவர். 1831ஆம் ஆண்டு விர்ஜீனியா நகரின் ஒரு ராத்திரி நேரத்தில், நட் டர்னரும் அவரது ஏழு அடிமை நண்பர்களும், தங்கள் முதலாளி பண்ணையிலிருந்து ஒவ்வொரு பண்ணையாக முன்னேறி, விடிவதற்குள் 57 வெள்ளையின முதலாளிகளைக் கொலை செய்திருந்தனர். விடிந்தபிறகு டர்னரின் பின்னிருந்த ஏழு பேர், எழுபது பேராக உயர்ந்தனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரைந்த வெள்ளையர்கள் தங்கள் வீட்டை விட்டுத் தப்பியோடியும், பொதுக் கட்டடங்களில் மறைந்து கொண்டும், காட்டிற்குள் பதுங்கியும், ஊரைவிட்டே காலிசெய்தும் மறைமுகமாக வாழ்ந்தனர்.
சிறிய அளவிலான இராணுவக் குழு ஒன்று, நட் டர்னரை இரண்டு மாதக் காலமாகத் தேடிப் பிடித்துத் தூக்கில் போட்டது. நட் டர்னரின் இந்தச் செயலால் உந்தப்பட்ட ஜான் பிரௌன், சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு பதிமூன்று வெள்ளையர்கள் மற்றும் ஐந்து கறுப்பின நண்பர்களோடு கூட்டுச் சேர்ந்து விர்ஜீனியாவில் உள்ள ஹார்பர் ஃபெர்ரியைத் தாக்கினார் என்று எங்கோ படித்திருக்கிறேன்.
‘வரலாற்றின் தந்தை’ என்றழைக்கப்படும் எரோடோட்டஸ் பற்றிப் படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகப் பிற நாடுகளின் வரலாற்றைத் தெரிந்துகொண்டேன். அவை எனக்குப் பெரும் கண்திறப்பாக இருந்தன. உலக வரலாற்றைத் தெரிந்துகொண்ட பின்னர்தான், ஒட்டுமொத்த உலகிலும் உள்ள வெள்ளையர்கள் எத்தனைக் காட்டுமிராண்டித்தனமாக உள்ளனர் எனத் தெரிந்தது. உலகில் உள்ள அனைத்துமட்டக் கறுப்பின மக்கள் மீதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என இரத்தவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். வில் டூரண்ட்’ன் ஓரியண்டல் சிவிலைசெஷன் பற்றிய புத்தகங்களும், பிரிட்டிஷார்களை இந்தியாவிட்டு விரட்டியடித்த மகாத்மா காந்தியின் போராட்ட முறைச் சிந்தனை பற்றிய புத்தகங்களும் எனக்கு இப்போது நினைவிற்கு வருகின்றன.
புத்தகம் மாற்றிப் புத்தகமாகக் கையிலெடுக்கும் ஒவ்வொரு பிரதியிலும் உலகில் வாழும் கறுப்பு, பழுப்பு, சிகப்பு, மஞ்சள் என வெவ்வேறு இனத்தவரை வெள்ளையர்கள் சுரண்டிக் கொழுத்த கதைகள் மலைபோல் விரிந்தன. ‘கிறிஸ்தவ வியாபாரிகள்’ என்றழைக்கப்படும் வெள்ளையர்கள், ஆசியா, ஆஃப்ரிக்கப் பேரரசின் செல்வ வளங்களையும் அதிகாரத்தையும் கொள்ளையடிக்கும் பொருட்டுப் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பேராசையோடு கடலில் அலைந்ததைத் தெரிந்துகொண்டேன். இயேசுநாதர் சொல்லித்தந்ததைப்போல் அன்பு – பரிவு – பாசம் போன்ற பண்புகளை, வெள்ளையர் அல்லாத ஒருவரிடம் அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டியது இல்லை.
நாடு பிடிக்கும் ஆசையில் தந்திரமான கடல் கொள்ளையர்களைப்போல் வெள்ளையர்கள் நடந்துகொள்கிறார்கள் என்று நான் படித்து உள்வாங்கியதிலிருந்து தெரிந்துகொண்டேன்.
‘கிறிஸ்தவத்தை’ ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டு, வேற்று நாட்டில் கால்பதிக்கின்றனர். பின்னர் வழக்கம்போல், வெள்ளையர் அல்லாதவர்களை ‘புறசமயத்தான்’ அல்லது ‘பாகால்’ என்று சொல்லி மாற்றுச் சமய முத்திரையிட்டு அவர்கள் கலாசாரத்தையும் நாகரிகத்தையும் மோசமாகச் சித்திரிக்கின்றனர். பின்னர் திட்டமிட்டதுபோல், யுத்தம் என்னும் ஆயுதத்தால் அவர்களைப் பழிவாங்குகின்றனர்.
ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பழுப்பு நிற மக்கள் வசிக்கும் சமயப்பற்றுள்ள இந்தியத் தேசத்தில், 1759ஆம் ஆண்டு சத்தியத்தின் பெயரால் சூழ்ச்சி வலைபின்னியும் கையாடல் செய்தும் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற போர்வையில் பிரிட்டிஷார் நுழைந்தது பற்றி நான் படித்திருக்கிறேன். ஓர் ஒட்டுண்ணியைப்போல், துணைக்கண்டத்தின் பாதிப் பகுதியைப் பிரிட்டிஷ் நிர்வாகம் பிடித்துக்கொண்டது.
பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சியடைந்த உள்நாட்டு மக்கள் கூட்டம் 1857ஆம் ஆண்டில் மாபெரும் கலகம் செய்தது. ஆப்ரிக்க அடிமைக் கலாச்சாரத்திற்குப் பிறகு, நான் கேள்விப்பட்ட மிக மிருகத்தனமான செயல் என்றால் இந்தியர்களை எதிர்த்து பிரிட்டிஷார் மேற்கொண்ட இம்மனிதத் தன்மையற்ற தாக்குதல் என்பேன்.
1930களில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கட்தொகையை ஈடுசெய்யும்படி 115 மில்லியனுக்கும் அதிகமான ஆப்ரிக்க மக்கள் கொலை செய்யப்பட்டோ, அடிமை வியாபாரத்தில் விலைக்கு விற்கப்பட்டோ இருக்கலாம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அடிமைச் சந்தையில் அளவுக்கு அதிகமான நபர்கள் விற்கப்படும் அதே சமயத்தில், ஆப்ரிக்காவின் முக்கியப் பகுதிகள் ஐரோப்பாவின் வெள்ளையதிகார நாடுகளின் காலனித்துவ ஆட்சியின் கைப்பிடிக்குள் சென்றன. ஐரோப்பிய நாடுகள் தன் இரும்புக்கரத்தால், இந்தச் சாதகமானச\ சுழலைப் புரிந்துகொண்டு தென்னமெரிக்காவின் ஹார்ன் முனையிலிருந்து எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் வரை அதற்கு அடுத்த நூற்றாண்டில் சுரண்டிக் கொழுத்தன.
பத்துக் காவலர்களும் ஒரு காப்பாளரும் சேர்ந்து முயன்றால்கூட என்னை ஒருபோதும் புத்தகங்களிடம் இருந்து பிரிக்க முடியாது. வரலாற்று நெடுக ஒட்டுமொத்த வெள்ளையர்களும் கறுப்பின மக்கள் மீது அநீதி இழைத்த கதையை எலிஜா முகமதால் கூட, புத்தகங்கள் சொல்வதுபோல் விவரணையோடு சொல்ல முடியாது. ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று செய்தி நுகரும் ஒவ்வொரு மூலங்களிலும், சீனா பற்றி வெள்ளையின மக்களின் கூட்டுப் பயத்தையும் பதற்றத்தையும் உணர்கிறேன். சீனர்கள் ஏன் நம் மீது இத்தனைப் பொல்லாப்புடன் இருக்கின்றனர் என வெள்ளையர்கள் அப்பாவித்தனமாய் கேள்வியெழுப்புவதைப் பார்க்கிறேன். சிறையில் நான் படித்த செய்தி ஒன்று நினைவிற்கு வருகிறது. முன்னொரு காலத்தில் சீனத் தேசம் நலிவடைந்து, நம்பிக்கைக்குப் பாத்திரமாய் ஆங்கிலேயர்களிடம் கைநீட்டி நின்றபோது, வெள்ளையர்களின் மூதாதையர்கள் அடித்துத் துவம்சம் செய்தார்களாம்.
உண்மையான ‘கிறிஸ்தவ வியாபாரிகள்’ லட்சக்கணக்கான எடை மதிப்பில் அபினி வஸ்துவைச் சீனாவிற்குள் சந்தைப்படுத்தினர். 1839ஆம் ஆண்டுவாக்கில் பல சீனர்கள் அபினிக்கு அடிமையானதை அறிந்து அதிர்ச்சியடைந்த சீன அரசு, இருபதாயிரம் அபினி கிடங்குகளை இழுத்து மூடியது. முதல் அபினிப் போரை ஆங்கிலேயர்கள் வெளிப்படையாக அறிவித்தனர். போதைப் பொருள் பயன்பாட்டை எதிர்க்கும் ஒருவர் மீது போர்த்தாக்குதல் செய்வதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? இப்போரில் சீனர்கள் கண்டுபிடித்த வெடி மருந்துகளாலேயே, சீனத் தேசத்திற்குப் பலத்த காயம் உண்டானது.
நாஞ்சிங் உடன்படிக்கைப்படி சீன அரசாங்கத்தால் இழப்பு ஏற்பட்ட அபினிக்கு மாறான பணத்தைத் தண்டம் கட்டச்சொல்லி பிரிட்டிஷார் நிர்ப்பந்தித்தனர்; சீனாவின் முக்கியத் துறைமுகங்களைப் பிரிட்டிஷாருக்குத் திறந்துவிடச் செய்தனர். ஹாங்காங் நகர் கைவிட்டுப் போனது. இறக்குமதி வரியைக் குறைத்து, தன் நாட்டுப் பண்டங்களால் சீனாவைப் பிரிட்டன் திணறடித்தது. ஒட்டுமொத்தமாகச் சொன்னால் சீனாவின் தொழில் வளர்ச்சி முடங்கிப்போனது.
இரண்டாம் அபினிப் போருக்குப் பிறகு, தியான்ஜின் உடன்படிக்கைப்படி அபினி வர்த்தகம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. சீனாவின் சுங்க அதிகாரத்தைப் பிரிட்டிஷ் – பிரெஞ்சு – அமெரிக்கா ஆகிய மூன்று தேசங்களும் பங்குபோட்டுக் கொண்டன. சீனா இவ்வுடன்படிக்கைக்கான ஒப்புதல் வழங்கத் தாமதித்ததால், பீக்கிங் நகரம் சூரையாடப்பட்டுத் தீக்கிரையானது.
1901இல் நிகழ்ந்த பாக்சர் புரட்சியில், ‘வெளிநாட்டு வெள்ளைச் சாத்தானைக் கொல்லுங்கள்’ என்பதுதான் சீன மக்களின் கோஷமாக இருந்தது. ஆனால் மீண்டும் தோல்வியுற்றதால், பீக்கிங் நகரிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். வீம்பு மிக்க பிரிட்டிஷார்கள் விரோத மனப்பான்மையுடன், ‘சீனர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி கிடையாது’ என்ற தம் புகழ்பெற்ற வசையை முன்வைத்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சிகப்புச் சீனாவில் மேற்கத்திய வெள்ளையர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. லைஃப் இதழ் சமீபத்தில் பதிப்பித்த நூலொன்றில், சீனாவின் அசாத்திய வேளாண்மைச் சாதனைகளும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழிற்சாலை எத்தனங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. சிகப்புச் சீன வாசிகள் சிலரின் கணிப்புப்படி, உலகில் இதுவரை வெள்ளை எதிர்ப்பு பிரச்சாரங்கள் இத்தனை மட்டத்தில் தீவிரமாக நிகழ்ந்தது கிடையாது. சீனாவின் குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கணக்கெடுத்துப் பார்த்தால், அடுத்த ஐம்பது ஆண்டிற்குள் உலகின் சரிபாதி மக்கட்தொகையில் சீனர்கள் இருப்பார்கள். சீனாவின் சமீபத்திய அணுகுண்டுப் பரிசோதனை வெற்றியடைந்திருப்பதைப் பார்த்தால், ஏதும் பதில் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனத் தெரிகிறது.
சரி, நாம் நடைமுறைக்கு வருவோம். வெள்ளையர்கள் அல்லாத தேசங்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய உலக ஆணையை அமல்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை காய்நகர்த்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் அட்லாய் ஸ்டீவன்சன் என்பவர், ‘ஏய்த்துப் பறிக்கும் விளையாட்டு’ நடைபெறுவதாகப் புகார் எழுப்பியுள்ளார். அவர் சொல்வது சரி. நடைமுறையை எதிர்கொண்டுள்ளார்.
‘ஏய்த்துப் பறிக்கும் விளையாட்டு’ நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தூதர் சொல்லும் குற்றச்சாட்டு ஜெஸ்ஸி ஜேம்ஸ்போல் துப்பாக்கி ஏந்தியிருக்கும் மார்ஷல் மீது சுமத்தப்பட்டது. வெள்ளையர்கள்போல் ‘ஏய்த்துப் பறிக்கும்’ ஆட்டத்தைச் சாமர்த்தியமாக விளையாடும் நபர் யாரேனும் உலகில் உண்டா?
எலிஜா முகம்மதின் போதனைகளைப் புத்தகமாக ஆவணப்படுத்துவதன் மூலம் என் வெளியுலகம் மேலும் விசாலமாகியிருப்பதை, நான் அன்றாடம் கடிதம் எழுதும் அவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தத்துவம் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்ததும், தத்துவ வளர்ச்சியின் முக்கியக் காலகட்டங்களைத் தேடிப் படிக்க முயற்சித்தேன். படிப்படியாக மேலை மற்றும் கீழை நாட்டுப் பழம் அறிஞர்கள் ஒவ்வொருவராக வாசித்து முடித்தேன். தனிப்பட்ட முறையில் கீழைத்தேயத் தத்துவங்கள் எனக்குப் பிடித்துப் போனது. மேலை நாட்டுத் தத்துவங்கள் பெரும்பாலும், கீழைத் தத்துவங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை என்பது என் கொள்கை. உதாரணமாக, சாக்ரடீஸ் எகிப்து நாட்டிற்குப் பயணப்பட்டிருக்கிறார். அங்கு அவர் எகிப்திய ரகசியங்களைக் கற்றுக்கொண்டதாகச் சிலர் சொல்வர். அவ்வாறே அங்கு அவர் கீழைத் தேய ஞான மரபில் உதித்த தத்துவ அறிஞர்களின் கருத்துக்களை உள்வாங்கியிருக்க வேண்டும்.
வாசிப்பினால் நான் கண்ட புதிய காட்சிகளை அவ்வப்போது பிரதிபலித்திருக்கிறேன். சிறைவாசக் காலத்தில் நான் படிக்கத் தொடங்கியதும், அங்கிருந்து என் வாழ்க்கையே வேறு கோணத்தில் மடைமாறியது. அப்போது படிக்கத் தொடங்கிய பிறகு, நான் முடங்கிப்போயிருந்த காலத்திலேயே என்னுள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்திருப்பதை உணர்ந்தேன். கல்லூரிகள் மாணவர்களைக் கௌரவிப்பது போல் நிச்சயமாக நான் எவ்விதப் பட்டங்களுக்கும் ஆசைப்படவில்லை.
நான் வீட்டளவில் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும், அதில் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு துணுக்குச் செய்தியும் அமெரிக்க வாழ் கறுப்பின மக்களின் வாழ்வை அல்லல்படுத்தும் குருட்டுத்தனத்தையும் ஊமைத்தனத்தையும் காதுகேளாமையையும் குணப்படுத்தும். சில நாட்களுக்கு முன்பு, இலண்டனிலிருந்து தொலைபேசியில் அழைத்த ஆங்கிலேய எழுத்தாளர் ஒருவர், ‘நீங்கள் எந்த நிறுவனத்தில் கல்வி பயின்றீர்கள்?’ எனக் கேட்டார். நான் அவரிடம், ‘புத்தகங்களிடம் இருந்து பயின்றேன்’ எனப் பதில் சொன்னேன். ஒரு பதினைந்து நிமிடங்களுக்குப் புத்தகங்கள் இல்லாமல் நீங்கள் என்னை வெட்டியாகப் பார்க்க முடியாது. அந்த ஒவ்வொரு நிமிடமும் கறுப்பின மக்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் சமாச்சாரத்தைப் படிக்கப் பயனுள்ளதாக இருக்குமே என உணர்வேன்.
நேற்று நான் இலண்டனில் உரையாற்றினேன். பயணத்தில் அட்லாண்டிக்கைத் தாண்டிச் செல்லும் இருவழிச் செலவிலும், நான் ஓர் ஆவணத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். உலகளவில் நசுக்கப்படும் சிறுபான்மையினரின் மனித உரிமைகளை மீட்டுக் கொணரும் வழிவகைகளாக ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த கோரிக்கைகள் அவை. அமெரிக்கவாழ் கறுப்பின மக்கள்போல் அதிகமாக நசுக்கப்படும் சிறுபான்மையினரை நீங்கள் பார்க்கமுடியாது. ‘குடிசார் உரிமை’ என்று சுலபமான இரண்டு வார்த்தைகளை முன்னிறுத்திப் போராடுவதால், இது ஓர் உள்நாட்டுக் கலகம் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் ‘மனித உரிமைகளை’ வென்றெடுக்காமல் அமெரிக்கவாழ் கறுப்பின மக்களுக்கு ‘குடிசார் உரிமைகள்’ கிடைப்பது எங்கனம்?
அமெரிக்கவாழ் கறுப்பின மக்கள், மனித உரிமைகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி, உலக மக்கள் தொகையில் தானும் ஒருவன் என அடையாளப்படுத்திக் கொண்டால், உலக அரங்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் தீர்த்துவைக்கப்பட வேண்டிய முக்கிய வழக்கு ஒன்றை அவர்கள் தாக்கல் செய்யலாம்.
இதைக் காட்டிலும் சிறந்த வழக்கை என்னால் சுட்டிக் காட்ட முடியாது. நானூறு ஆண்டுக் காலமாகக் கறுப்பின மக்கள் தங்கள் வியர்வையும் ரத்தமும் சிந்தி அமெரிக்காவிற்காக உழைத்துள்ளனர். அப்படியிருந்தும் கப்பல் ஏறி இறங்கும் அயல்நாட்டுக்காரர்களுக்கு நொடிப்பொழுதில் கிடைக்கும் சலுகைகள், இங்குக் கறுப்பின மக்கள் வெள்ளையர்களிடம் மடியேந்திப் பிச்சையெடுத்தால் மட்டுமே வாய்க்கும் சூழல் நிலவுகிறது.
பேசவந்த கருத்திலிருந்து திசைமாறிப் போகிறேன். நான் அந்த ஆங்கிலேயரிடம் புத்தகங்கள் நிரம்பிய ஒரு நல்ல நூலகமே நான் படித்த நிறுவனம் என்று சொன்னேன். ஒவ்வொரு முறையும் விமானம் ஏறும்போது, நான் வாசிக்கும் புத்தகத்தை மறவாமல் எடுத்துக் கொள்வேன் – இப்போது பல புத்தகங்கள் சுமந்து செல்கிறேன். நான் அனுதினமும் வெள்ளையர்களுடன் சமர் செய்துகொண்டு போராடாமல் போயிருந்தால், ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையில் என் வாழ்க்கை முழுவதையும் புத்தகங்கள் படிக்கச் செலவிட்டிருப்பேன். ஏனெனில் நான் எந்த விஷயத்தில் ஆர்வப்பட்டவன் என்று உங்களால் எளிதில் சொல்ல முடியாது.
என்னைக் காட்டிலும் அதிகப் பலனுடன் சிறைச் சென்று வந்தவன் எவனும் இருக்க முடியாது என நம்புகிறேன். ஒருவேளை சிறைக்குச் செல்லாமல் என் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருந்தாலோ, கல்லூரிக்குப் போய் பாடம் கேட்டிருந்தாலோ இத்தனைத் தீவிரமான படிப்பை நான் கைக்கொண்டிருப்பேனா என்றால் சந்தேகம்தான். விஷேச விருந்துகள், நண்பர் பட்டாளம், கும்மாளம் எனக் கல்லூரிப் படிப்பைத் திசைதிருப்பப் பல அம்சங்கள் இருப்பதாய் நான் யோசிக்கிறேன். நான் எனது அறியாமையை உணர்ந்துகொண்டு, சில சமயங்களில் நாள் ஒன்றுக்கு பதினைந்து மணிநேரம் கூடப் படிக்க உகந்த இடமாகச் சிறைச்சாலை அன்றி வேறு எவ்விடம் இருக்க முடியும்?
(தொடரும்)
_________
‘Learning to Read’ excerpt from The Autobiography of Malcolm X (1965)