Skip to content
Home » உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #26 – மார்க் டுவெய்ன் – ஒரு கதையைச் சொல்லும் விதம்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #26 – மார்க் டுவெய்ன் – ஒரு கதையைச் சொல்லும் விதம்

Mark Twain

நான் ஒரு தலைசிறந்த கதைசொல்லி எனச் சொல்லிக் கொள்ளமாட்டேன். ஆனால் ஒரு கதையை எங்ஙனம் சொல்லவேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் ஆண்டுக்கணக்காகச் சிறந்த கதைசொல்லிகளோடு அன்றாடம் பழகிய அனுபவம் எனக்கு இருக்கிறது.

கதைகளில் பலவகை உண்டு. அதில் நகைச்சுவைக் கதைகள்தான் மிகச் சிரமமானவை. அவ்வகை நகைச்சுவைக் கதைகளைத்தான் இங்குப் பேசப்போகிறேன். நகைச்சுவைக் கதைகள் அமெரிக்காவிற்கும்; கேலிக் கதைகள் இங்கிலாந்திற்கும்; விகடக் கதைகள் பிரெஞ்சு நாட்டிற்கும் உரியன. இவற்றுள் கேலிக் கதைகளும் விகடக் கதைகளும், கதையின்‌ உள்ளடக்கத்தைக் கொண்டு நகர்பவை. ஆனால் நகைச்சுவைக் கதைகள் இதற்கு மாறானவை. கதையின் உள்ளடக்கத்தையும் தாண்டி, அவை சொல்லப்படும் விதத்தால் அதற்குரிய அங்கீகாரத்தைக் கவர்ந்திழுக்கும் கடமை அதற்கு உண்டு.

நகைச்சுவைக் கதைகளுக்கு இதுதான் எல்லையென்றில்லாமல், வரன்முறைத் தாண்டி எங்கு வேண்டுமானாலும் கதையை நகர்த்திக் கொண்டு செல்லலாம். அதற்கு மையப்புள்ளி என்று எதுவும் தேவையில்லை. ஆனால் கேலிக் கதைகளும் விகடக் கதைகளும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டிய பொறுப்போடு, குபீர் என்ற சிரிப்பையும் இறுதிப் பத்தியில் உறுதிசெய்ய வேண்டும். நகைச்சுவைக் கதைகள் சின்னச் சின்னதாய் குமிழிகள் தோற்றி நடை பழகினால், மீதமிரண்டு கதைகளும் சடாரென்று வெடித்துச் சிதறி ஓட்டம் போட வேண்டும்.

நகைச்சுவைக் கதை என்பது ஒரு கலை வடிவம். திறமை வாய்ந்த கலைஞனால் மட்டுமே அதை மேம்படச் சொல்ல முடியும். ஆனால் கேலி மற்றும் விகடக் கதைகளுக்குப் பெரிய உழைப்பு தேவைப்படாது. யார் வேண்டுமானாலும் எளிதில் உருவாக்கலாம். நகைச்சுவைக் கதைகள் உருவாக்கும் விஷேசக் கலை, குறிப்பாக எழுதுவதைத் தாண்டி கேலியாகவே அதைச் சொல்லும் திறன் அமெரிக்காவில் தோன்றி, அமெரிக்காவிலேயே கிளை பரப்பி நின்றுபோனது.

நகைச்சுவைக் கதையைச் சொல்லும் ஒருவர், அந்தக் கதையில் உண்மையிலேயே சிரிப்புக்கு இடமுள்ளதா என்பதுபோல் கதையை உள்ளார்ந்து சந்தேகித்து, தாமாகச் சிரிப்பை வெளிப்படுத்தாமல் தீவிரமாகச் சொல்லுவார். ஆனால் கேலிக் கதைசொல்லி, தொடங்கும் முன்பே இதுபோன்றதொரு சிரிப்பூட்டும் கதையைத் தான் கேட்டதில்லை என அறிவித்துவிடுவார். ஆர்வ மிகுதியில் கதைச் சொல்லலுக்கு இடையிலும், இறுதியிலும் வெடித்துச் சிரிப்பார். கூட்டத்தில் முதல் ஆளாகச் சிரிப்பவரும் அவராகத்தான் இருப்பார். சிலசமயம் கதையின் நகைச்சுவைப் பகுதி எடுபடாமல் போனால், மீண்டும் அந்தப் பகுதியை மகிழ்ச்சியோடு கூறி பார்வையாளர்களின் கைத்தட்டல்களை எதிர்பார்ப்பார். இதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.

சிலசமயம் நகைச்சுவைக் கதைகளில், நோக்கமின்றிச் சுற்றிவளைக்கும் பேச்சுகள் அதிகம் இருக்கலாம். கதையின் ஓட்டத்தை அவை அங்குமிங்கும் அலைக்கழிக்கலாம். ஆனால் ஆச்சரியமூட்டும் திருப்பமும், வேடிக்கையான முடிவும் இறுதியில் அமையும். நீங்கள் அதைக் கவனமாகக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். நகைச்சுவைக் கதைசொல்லி அதையொரு பொருட்டாகக் கொள்ளாமல், திருப்பங்களை வாரிப் போட்டுக்கொண்டு அவர் போக்கில் செல்வார்.

ஆர்ட்டிமஸ் வார்ட் இந்த யுத்தியை அடிக்கடிப் பிரயோகிப்பார். சிறு மௌனத்திற்குப் பிறகு, நகைச்சுவையைப் புரிந்துகொண்ட பார்வையாளர்கள் கண்மண் தெரியாமல் விழுந்துச் சிரிப்பார்கள். ஆனால் அந்தச் சிரிப்புக்குக் காரணம் தெரியாதவர்போல், அவர்களை விசித்திரமாகப் பார்ப்பார். அவருக்கு முன்பே டேன் செக்சில் இந்த யுத்தியைப் பயன்படுத்தியிருந்தார். இன்றைக்கும் நய் மற்றும் ரிலே போன்றோர் இந்தப் பாணியைப் பின்பற்றுகின்றனர்.

ஆனால் கேலிக் கதைகளைச் சொல்பவர் இதுபோன்று மென்மையாகக் கடந்துபோகமாட்டார். குறிப்பிட்ட நகைச்சுவைப் பகுதியை மேலும் அழுத்தமாக, திரும்பத் திரும்ப உரக்கச் சொல்வார். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இக்கதைகளை அச்சில் கொண்டு வருகையில், மற்றுமொரு வேடிக்கையான சம்பவம் நிகழ்வதுண்டு. நகைச்சுவைப் பகுதிகளைச் சாய்வுச் சொற்களில் அச்சிட்டு, பற்பல ஆச்சரியக்குறிகளை இறுதித் தொடரில் சேர்த்து விடுகின்றனர். சில நேரங்களில் இதுதான் நகைச்சுவை என்று அடைப்புக் குறியில் விவரமாக எழுதித் தீட்டுகின்றனர். இவற்றையெல்லாம் பார்த்தால், இனியும் எனக்கு நகைச்சுவை வேண்டாம், ஆளைவிடுங்கள் என்று உதறித்தள்ளிவிட்டு நான் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழத் தொடங்குகிறேன் என்று ஒருவரை நிர்ப்பந்திக்க வைக்கிறது.

இந்த உத்திமுறை எப்படிக் கையாளப்படுகிறது என்று ஓர் உதாரணம் சொல்கிறேன். ஆயிரத்து இருநூறில் இருந்து ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழைமையான நகைச்சுவைக் கதை ஒன்றைக் கேலிக்கதையின் அச்சு வடிவுக்குப் பொருத்தி, இதை எளிதில் புரிந்துகொள்ளலாம். அக்கதை பின்வருமாறு…

காயம்பட்ட வீரன்

முன்பொரு காலத்தில், போர்க்கள யுத்தத்தில் சமரிட்டுக் கொண்டிருக்கையில் வீரன் ஒருவன், துப்பாக்கி குண்டடிபட்டு தன் காலை இழந்தான். உடனிருந்த சக வீரனை அழைத்து, ‘என் காலில் குண்டடிபட்டுள்ளது. என்னைப் போர்க்களத்தின் பின்பகுதிக்கு அழைத்துச் செல்வாயா?’ என்று தனக்கு ஏற்பட்ட இழப்பைச் சொல்லி அவசரப்படுத்தினான். பெருந்தன்மை மிக்க அவ்வீரனும் உடனே சரியென்று சொல்லி, அவனைத் தன் தோளில் போட்டுக்கொண்டு களத்தின் பிற்பகுதிக்கு விரைந்தான். கண்ணில் படும் இடமெல்லாம் தோட்டாக்களும் பீரங்கிக் குண்டுகளும் காதைப் பிளக்கும் சத்தத்துடன் டமார் டமார் என்று விழுந்தன.

அதிலொரு குண்டு, காயம்பட்ட வீரனின் கழுத்தைப் பதம் பார்த்தது. ஆச்சரியம் என்னவென்றால், சுமந்து சென்றவனுக்கு இது தெரியாது. சிறிது நேரத்தில், வழியில் எதிர்ப்பட்ட அதிகாரி ஒருவர் வீரனிடம் கேட்கிறார்:

‘இந்தச் சவத்தை எங்குக் கொண்டு போகிறாய்?’

‘இவன் ஒரு காலை இழந்துவிட்டான். எனவே பின்புறம் தூக்கிச் செல்கிறேன்’ என்றான் அந்த வீரன்.

‘என்ன, காலா?’ என்று ஆச்சரியப்பட்ட அதிகாரி, ‘அட புத்தி கெட்டவனே, தலை என்று சொல்’ என்றார்.

பின்னர் அந்த வீரன் உடலைக் கீழே வைத்துவிட்டு, பெரும் குழப்பத்துடன் மேலும் கீழுமாகப் பார்த்தான். இறுதியில், ‘நீங்கள் சொன்னது சரிதான் சார்’ என்றான். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, ‘ஆனால் அவன் என்னிடம் கால் என்றுதான் சொன்னான்!!!!!!’

இங்கு இந்தக் கதைசொல்லி, சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்குகிறார். மூச்சுவிட நேரம் கிடைக்கும்போதெல்லாம் நகைச்சுவைத் தோன்றும் குறும்பகுதியைத் திரும்பத் திரும்பப் பலமுறை சொல்கிறார்.

வெறும் ஒன்றரை நிமிடத்தில், இதனைக் கேலிக்கதை வடிவில் சொல்லிவிடலாம். ஆனால் பெரிதாகச் சிரிப்பு மத்தாப்பு வெடிக்காது. ஒருவேளை இதனை நகைச்சுவைக் கதையாகப் புனைந்து கொண்டுவந்தால், குறைந்தது பத்து நிமிடம் தாக்குப்பிடிக்கும். ஜேம்ஸ் விட்கோம் ரிலே போன்றோர் இதனைக் கதையாடினால், நான் கேட்கும் ஆகச் சிறந்த நகைச்சுவையாக மாறிப்போகும் .

தன்னையொரு வயது முதிர்ந்த விவசாயியாகப் பாவித்துக் கொண்டு, இந்தக் கதையை முதல்முறையாகக் கேட்டுக் குதூகலிப்பதுபோல் அவர் சொல்லத் தொடங்குவார். வயது முதிர்ந்தவர் என்பதால், கதை அவருக்குத் தெளிவாக நினைவில் இருக்காது. முழுவதும் குழம்பிப்போய், மீண்டும் மீண்டும் கதைக்குத் தேவையில்லாத செய்திகளை கதாபாத்திரங்களின்மேல் அடுக்குவார்; கதையின் வேகத்தை மட்டுப்படுத்துவார்; தேவையில்லாத விஷயங்களை இடையில் சொருகுவார், தேவையானவற்றை வேண்டுமென்றே நீக்குவார்; பின்னர் ஏன் அதனை நீக்கினேன் என்று விளக்கம் கொடுப்பார். சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட மறந்த செய்திகளையும் கதையின் ஓட்டத்தில் முன்சென்று பதிவுசெய்து வருவார். கதையின் முக்கியக் கதாபாத்திரமான அடிப்பட்ட போர் வீரனின் பெயரை உண்மையிலேயே மறந்துபோய் சிந்திப்பதாகச் சொல்லி வெகுநேரம் எடுத்துக் கொள்வார். பின்னர் அது தேவையில்லாத வஸ்து என்று ஓரங்கட்டுவார். இதுமாதிரி முன்னும் பின்னும் கதையை வளர்த்துக் கொண்டே செல்வார்.

கதை சொல்பவர் எப்போதும் ஒரு வேடிக்கைச் செயல்புரிந்த குழந்தையைப் போல், சிரிப்பை அடக்கமுடியாமல் திணறுவார். சத்தமாக வாய்விட்டுச் சிரித்துவிடக்கூடாது என்று எத்தனைப் போராடினாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அடக்க முடியாத சிரிப்பால், ஜெல்லியைப் போல் அவர் உடல் குலுங்கும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, பார்வையாளர்கள் எல்லாரும் சிரித்துக் களைத்த அயர்ச்சியில், கன்னத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிய உட்கார்ந்திருப்பார்கள்.

வயது முதிர்ந்த விவசாயிபோல் எளிமையும் அப்பாவித்தனமும் நிறைந்த நேர்மையான முகஜாடையை மனத்திலிறுத்தி, தான் இங்கு நகைச்சுவை செய்ய வந்திருக்கிறோம் என்பதையே மறந்து நடிப்பார். அவரின் கதையைக் கொண்டாட்டத்திற்குரியதாய் மக்கள் போற்றி விரும்புவதற்கும் அதுதான் காரணம். கிட்டத்தட்ட இது ஒரு கலைநயம் மிக்க தொழில். தேர்ந்த கலைஞனால் மட்டுமே இதனைத் திறம்படச் செய்ய முடியும். மற்றக் கதைகளை எல்லாம், வெற்று இயந்திரங்களேகூட சொல்லலாம்.

கலைநயமிக்க அமெரிக்கப் பாணியைப் பின்பற்றுவது என்பது அறிவற்ற செயல்களும் விசித்திரமான செயல்களும் சேர்த்துக் குழைத்து, இறுதியில் எல்லாம் ஒத்துவரும் என்பதுபோல் கபடமாய் நடித்து, எந்தவொரு செயல்திட்டமும் இல்லாமல் சீரற்று நகர்வதில்தான் உள்ளது. இது அதனிலொரு பகுதி. இரண்டாம் பகுதி என்னவென்றால், கருப்பொருளை வெளிப்படையாகச் சொல்லாமை. தானாகப் பேசிக்கொள்வதுபோல் அரிய பெரிய செய்திகளைப் போகிற‌ போக்கில் மேம்போக்காகத் தூக்கி வீசுவது மூன்றாம் பகுதி. இறுதிப் பகுதி, முக்கியமான இடங்களில் மௌனத்தைக் கடைப்பிடித்து பார்வையாளருக்கு நகைச்சுவையைக் கடத்துவது.

ஆர்ட்டிமஸ் வார்ட் மூன்று மற்றும் நான்காம் பகுதிகளில் சிறந்து விளங்கக் கூடியவர்.‌ மிகுந்த ஆரவாரத்துடன் ஒரு கதையைச் சொல்லத் தொடங்குவார். பின்னர் அதில் ஏனோ ஸ்திரத்தன்மை கெட்டுப்போய், தமக்குத் தாமே பேசுவதைப் போல் வேறொன்றைச் சொல்லி, பின்னர் சிறுபான்மையாகச் சொல்லவந்த விஷயத்தின் மூலம் மக்களைச் சிரிப்பலையில் கிடத்திவிடுவது அவர் வழக்கம்.

நான் ஓர் உதாரணம் சொல்கிறேன். மிகுந்த உற்சாகத்துடன், ‘நியூசிலாந்தில் எனக்கு ஒரு நபரைத் தெரியும். ஆனால் அவருக்கு வாயில் பற்களே கிடையாது,’ என ஒரு கதையைப் பிரமாதமாகத் தொடங்குவார். சில கணம் எதையோ யோசித்தவர்போல அமைதியாக நிற்பார். பின்னர் திடுக்கென, ‘ஆனால் உங்களுக்குத் தெரியுமா, அவர் மிக நன்றாக டிரம்ஸ் வாசிப்பார்’ என முடித்து எல்லோரையும் சிரிக்க வைப்பார்.

அனைத்துவகைக் கதைகளிலும் மௌனத்தைக் கையாள்வது முக்கிய அங்கமாக விளங்குகிறது. எனவே அதை‌ அடிக்கடி கையாள்கின்றனர். அது ஒரு சிறிய, உடைபடக்கூடிய, விநோத யுக்தி. மிகச் சரியான சந்தர்ப்பத்தில் தேவைக்கு ஏற்ப மிகுதியோ, குறைவோ இல்லாமல் தேவையான அளவில் பிரயோகிக்க வேண்டும். ஒருவேளை அது மிகக் குறைந்த இடைவெளியாக இருந்தால், நீங்கள் சிறப்பிக்க விரும்பும் கணம் சீரழிந்துவிடும். நமக்கு ஏதோ ஆச்சரியம் காத்திருக்கிறது என்று பார்வையாளர்கள் மோப்பம் பிடித்து விடுவார்கள். ஆகவே அது ஒருபோதும் ஆச்சரியமூட்டாது.

நான் மேடையில் சொல்லும் ஒரு கறுப்பின பேய்க் கதையில், கதையோட்டத்தின் முக்கியப் பகுதியில் சிறிய இடைவெளி விட்டுக் காத்திருப்பேன். ஒட்டுமொத்தக் கதையிலும் அதுவொரு முக்கியக் கரு. அந்த இடைவெளியை மிகச் சரியான அளவுக்குக் கையாண்டிருந்தால், என்னால் ஒரு பெண்ணைச் சிரித்துச் சிரித்தே நாற்காலியில் இருந்து எகிறிக் குதிக்கச் செய்ய முடியும். இதுவே என் பிரதான நோக்கம். அந்தக் கதையின் பெயர் ‘பொற்கரம்’. கீழ்வரும் மாதிரியில் அதனைச் சொல்வார்கள்.

நீங்களும் உங்கள் விஷேச உத்திகளைப் பயன்படுத்திச் சரியான இடத்தில் இடைவெளிவிட்டு, மௌனம் காக்க முடிகிறதா என்று பரிசோதித்துப் பாருங்கள்.

பொற்கரம்

முன்பொரு காலத்தில், ஒரு மோசமான மனிதர் தன் மனைவியோடு தனியாளாகப் பெரும் நிலப்பரப்பில் வசித்து வந்தார். அவர் மனைவி திடீரென இறந்துவிட, அம்மனிதர் தன் மனைவியின் உடலைச் சுமந்துகொண்டு போய் அந்த வெற்று நிலத்தில் குழிதோண்டிப் புதைத்தார். அப்பெண்மணியின் கரம் ஒன்று பொன்னால் செய்யப்பட்டிருந்தது. அவர் மிக மிக மோசமான மனிதர். அன்றிரவு, அந்தப் பொற்கரத்தை நினைத்து அவரால் நிம்மதியாகத் தூங்க முடியாமல் போனது.

நடுராத்திரி இருக்கும். அவர் முழுமையாக நிம்மதி இழந்திருந்தார். உடனே படுக்கையில் இருந்து, லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு புயலைக் கண்டும் அஞ்சாமல், அந்தப் பொற்கரத்தைத் தோண்டும் முயற்சியில் இறங்கினார். காற்றைக் கண்டு சிரம் தாழ்த்தி, பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தோண்டிக்கொண்டே இருந்தார். ஒருகணம் திடீரென உறைந்துபோனார். (ஏதும் சொல்லாமல் மௌனமாகி, ஆச்சரியப்படுவது போல் உற்றுநோக்க வேண்டும். பின்னர் கவனமாகச் சொல்லுங்கள்) ‘அடக் கடவுளே, அது என்ன சத்தம்’ என்றார்.

அவர் எதையோ கவனமாகப் பார்த்தார். காற்றில் கலந்து வரும் தொலைதூர அழுகைக் குரலும், ‘ப்ப்பஸ்’ என்ற மூச்சுத்திணறல் சத்தமும் அவருக்குக் காதில் கேட்டது. (நீங்கள் இதைச் சொல்லும்போது அப்படியே நடித்துக் காட்ட வேண்டும்). காற்றொலியிருந்து அழுகுரல் சத்தத்தைப் பெயர்த்தெடுப்பது சிரமமாக இருந்தது. ஆனாலும் அந்தக் குரல் அவர் காதில் ஒலித்தது. ‘ப்ப்பஸ்ஸ்.. எ-ன-து–பொ-ற்-க-ர-த்-தை–எ-டு-த்-த-து–யா-ர்?’ (நீங்கள் இப்போது வெடவெடுத்து நடுங்க வேண்டும்).

அந்த நபர் உடல் நடுங்கி, தள்ளாடிப் போய், , ‘அட..! அடக் கடவுளே!’ என்று சொன்னார். லாந்தர் ஒளியைக் காற்று அணைத்துவிட்டது. கொட்டும் பனி அவர் முகத்தில் அப்பியதால், மூச்சு விடச் சிரமப்பட்டார். முழங்கால் உயரப் பனியில் சாவுப் பயத்தில், தப்பித்தோம் பிழைத்தோம் என்று முண்டியடித்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தார். சிறிது நேரத்தில், மீண்டும் அந்தச் சந்தம் கேட்டது. (சிறு மௌனத்திற்குப் பிறகு) அது அவரைப் பின்தொடர்ந்து ‘ப்ப்பஸ்ஸ்.. எ-ன-து–பொ-ற்-க-ர-த்-தை–எ-டு-த்-த-து–யா-ர்?’ என மீண்டும் கேட்டது.

அவர் அங்கிருந்து மேய்ச்சல் நிலத்திற்கு ஓடினார். அங்கும் அந்தக் குரல் விடாமல் பின்தொடர்ந்தது. இருளிலும் புயலிலும் அவரை நெருங்கி வந்தது. (காற்றின் சத்தத்தையும், பின்தொடரும் குரலையும் இங்குத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்) வீட்டை அடைந்ததும், மாடிப் படிக்கட்டில் வேகமாக ஏறிப் படுக்கையில் குதித்து தலையும் காதும் வெளியே தெரியாதபடி போர்த்திக் கொண்டார். தூரத்திலிருந்து மீண்டும் அந்தக் குரல் அவரை நெருங்குவதுபோல் தெரிந்தது. இறுதியில், ‘பட்-பட்-பட்’ என்ற சத்தத்துடன் படி ஏறி மேலே வந்தது. அதற்குப்பின் தாழ்ப்பாள் திறக்கும் சத்தம். அந்தக் குரல் தன் அறைக்குள் நுழைந்ததை அவர் உணர்ந்தார்.

படுக்கைக்கு மிகச் சமீபத்தில் வந்துவிட்டது. அது தன்னை நோக்கிச் சாய்ந்து நிற்பது அவருக்குப் புலனானது. மிகுந்த சிரமத்திற்கு இடையில் மூச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். பின் – பின்னர் – அவர் குளிர்ச்சியாக உணர்ந்தார். அவர் தலைப்பகுதி குளிர்ச்சியாக இருந்தது.

அவர் காதை நெருங்கி, ‘எ-ன-து–பொ-ற்-க-ர-த்-தை–எ-டு-த்-த-து–யா-ர்?’ என்றந்தக் குரல் மீண்டும் கேட்டது. (சோகம் கலந்து, குற்றஞ் சுமத்தும் தொனியில் இப்போது உங்கள் குரல் அமையட்டும். கதையில் மூழ்கித் திளைக்கும் பார்வையாளர் ஒருவரைக் கண்டுபிடியுங்கள். அவர் ஒரு பெண்ணாக இருந்தால் நல்லது. சத்தமில்லாமல் மெல்ல பற்றியெரியும் பயம் கலந்த ஆச்சரியத்திற்கு, இடம் கொடுங்கள். மிகச் சரியான இடைவெளியில் மௌனம் காத்த பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘நீ கண்டுபிடித்துவிட்டாய்!’ என்று கத்துங்கள்.)

நீங்கள் மிகச் சரியான காலமுறைமையைப் பின்பற்றியிருந்தால், அந்தப் பெண் தானும் ஆச்சரியமடைந்து துள்ளலாக எகிறிக் குதிப்பார். ஆனால் மிகச் சரியான இடைவெளியைக் கண்டுபிடிப்பதுதான் மிக நுட்பமான, தலையைப் பிய்த்துக் கொள்ளும், உறுதியற்ற முயற்சி வேண்டும் வேலையாய் இருக்கும். நீங்கள் இதுவரை செய்து பார்த்திடாத உழைப்பை எதிர்பார்க்கும்.

0

_________
‘How Tell a Story’ by Mark Twain (Published in How to Tell a Story and Other Essays – 1897 )

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *