ஃபார்மோசா தீவைச் சார்ந்த சல்மனசார் என்பவர் மூலம் இந்த யோசனையைத் தாம் பெற்றதாக, என் நண்பர் சொன்னார். சல்மனசார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் வந்திருக்கிறார். அப்போது என் நண்பரிடம் இந்த விசித்திரப் பழக்கம் பற்றி அவர் சொல்லியிருக்கக் கூடும். அவர் நாட்டில் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உடலை, பெரும் பணக்காரர்களுக்கு விலைமதிப்பற்ற விஷேச உணவாகக் கொலை செய்தவர்கள் விற்றுவிடுவார்களாம்.
சல்மனசார் அங்கிருந்தபொழுது, 15 வயது பருமனான இளம்பெண் ஒருத்தி மன்னருக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்ததால் சிலுவையில் அறைந்து கொலை செய்த கணமே, அவள் உடலைத் துண்டுத் துண்டாக வெட்டி பேரரசின் முக்கிய மந்திரிகள் முதல் அவையின் காரியதரிசி வரை பலருக்கும் 400 பிரிட்டன் நாணயங்களுக்கு விற்பனை செய்த சம்பவம் அங்கு நிகழ்ந்திருக்கிறது.
தம்மிடம் போதுமான பணம் இல்லாவிட்டாலும், அழகு நயமிக்க ஆடைகளை உடுத்திக் கொண்டு தனக்கு ஒப்பில்லா விருந்து உபசார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நம் நாட்டுச் சதைப்பிடிப்புள்ள இளம் பெண்களையும் இதுபோல் செய்வதால், பேரரசுக்கு யாதொரு இழப்பும் நேராது என்பதை நான் இங்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.
வயதாகி, நோய் பீடித்து, உடல் காயப்பட்டுக் கிடக்கும் எண்ணிலடங்காத பல ஏழைகளின் மோசமான சூழலைக் கண்டு பலரும் வருந்துகின்றனர். இந்தச் சோகச் சுமையை இறக்கிவைப்பதற்கு உபாயம் உண்டா? நாட்டின் தலையாயப் பிரச்சினையை முடித்துவைப்பதற்கு வழியேதும் இருக்கிறதா என்று என்னைக் கேள்வியால் துளைக்கின்றனர். ஆனால் ஒருபோதும் நான் இவற்றைக் கண்டு கவலைப்படுவதில்லை. குளிர், பசி, தூசி, விஷப்பூச்சி என்று நாளும் ஒவ்வொரு காரணத்தால் மடிந்துபோகும் இவர்களை எண்ணி வருத்தப்பட எண்ண இருக்கிறது? நாம் நினைப்பதைக் காட்டிலும் வெகு சீக்கிரத்தில் இவர்கள் இறந்துபோகிறார்கள்.
இளம் தொழிலாளிகளின் நிலை இதைக் காட்டிலும் பரிதாபமானது. வேலை இல்லாக் காரணத்தால் போதுமான உணவின்றி, நாளும் துரும்பாய் இளைத்து ஓடாய் தேய்ந்து வருகின்றனர். இறுதியில் நல்ல சம்பாத்தியத்திற்கு ஏற்ற வேலை கிடைத்தாலும், அதைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவு உடம்பில் வலுவிருக்காது. ஆக நாடும் நலிந்தோரும், எதிர்காலத் துன்பத்திற்கு ஆட்படாமல் விரைவில் மடிந்துபோவதே இவர்களுக்கு உசிதமாக இருக்கும்.
மற்ற விஷயங்களைப் பற்றி நான் அதிகம் பேசிவிட்டேன். முடிந்தவரை தெளிவுபடுத்திய நம்பிக்கையில், நான் இப்பொழுது மையப்புள்ளிக்கு வருகிறேன். என் திட்டத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
முதலில், நம் நாட்டில் பிரவேசிக்கும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை இது பெருமளவு குறைக்கும். புற்றீசல்போல் அவர்கள் பெற்றுப்போடும் குழந்தைகள் நமக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். ஸ்பெயின் நாட்டுப் புரட்சியாளர்களோடு சேர்ந்து, புரட்டஸ்தாந்து சமயத்தினர் வெளி செல்லும் சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு, நம் ஆட்சியைக் கவிழ்க்க காத்திருக்கின்றனர்.
இரண்டாவது யோசனை. ஏழைக் குடியானவர்களிடம் விலை மலிந்த பொக்கிஷமென்று ஏதேனும் ஒன்று இருக்கும். வாடகைச் செலுத்தாத குடியானவர்களிடம் நாம் அதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும். ஏற்கெனவே வாடகைப் பாக்கி வைத்தவர்களிடம் கால்நடை மற்றும் தீவனங்களைப் பறிமுதல் செய்த பிறகு நாம் இந்த உபயத்தைக் கையிலெடுக்கலாம்.
மூன்றாவது யோசனை. இரண்டு வயதுக்கு மேற்பட்ட 1,00,000 குழந்தைகளைப் பராமரிப்பதால், ஒரு குழந்தைக்குப் பத்து ஷில்லிங் வீதம் ஒவ்வொரு ஆண்டும் நிறையப் பணம் செலவு செய்யவேண்டி இருக்கும். ஆனால் இத்திட்டத்தைப் பிரயோகிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 50,000 பவுண்ட் வரை நாட்டிற்கு இலாபம் உண்டாகும். கூடுதலாக வசதி படைத்தோர் உண்ணும் ருசிகர உணவும் கைமேல் கிடைக்கும். இதனால் தனித்த இலாபமுண்டு. குழந்தைக் கறி முழுவதும் சொந்த நாட்டிற்குள்ளேயே விற்பனை செய்வதால், இலாபமான பணமும் நாட்டிற்குள்ளேயே சுழற்சி முறையில் இயங்கிக்கொண்டிருக்கும். உணவுக்கு உணவும், இலாபத்திற்கு இலாபமும் இரட்டை வசூல்!
நான்காவது யோசனை. தொடர்ச்சியாகக் கருத்தரிப்பவர்கள் குழந்தை விற்பதால் பணம் சம்பாதிப்பதைத் தாண்டி, ஓராண்டுக்குமேல் குழந்தையின் பராமரிப்புச் செலவு இல்லாத காரணத்தால் சம்பாதித்த பணத்தைச் சேமிக்கத் தொடங்குவர்.
ஐந்தாவது யோசனை. இந்த விஷேச மாமிசத்தால் உணவகங்கள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கப் போகின்றன. இதை மேலும் சுவையூட்ட, வெவ்வேறு பதார்த்தங்கள் கொண்டு பரிசோதனை முறையில் சிறந்த செய்முறையைக் கற்றுக்கொள்ள உணவக உரிமையாளர்கள் அலைமோதுவர். நல்ல உணவைத்தேடி உண்ணும் விஷேச விரும்பிகள், இத்தகைய உணவகங்களை நாடி வருவர். திறமைவாய்ந்த சமையல்காரர்களும் நாடி வரும் மக்களுக்கு நுனி நாக்கில் நிற்கக்கூடிய சுவையான உணவை அரிதின் முயன்று சமைத்துக் கொடுப்பர்.
ஆறாவது யோசனை. பல அறிவார்ந்த நாடுகள் சட்டத்தின் வாயிலாகவும், பரிசுகளின் வாயிலாகவும் திருமணத்தை ஊக்குவிக்கும் இக்காலத்தில், நான் முன்மொழியும் திட்டத்தால் பலரும் திருமண செய்துகொள்ள ஆர்வத்தோடு முன்வருவர். தன் குழந்தைகளால் ஒவ்வொரு ஆண்டும் அரசின் நிதித்திட்ட உதவி பெறும் தாய்மார்கள், அளவுக்கு விஞ்சிய நேயத்துடன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளத் தொடங்குவர். குழந்தை வளர்ப்பு செலவினச் செயல் என்றிருந்தவர்கள், இனி அதை இலாபகரச் செயலாகப் பார்க்கத் தொடங்குவர்.
யார் குழந்தை ஆரோக்கியமானது என்று திருமணமானவர்கள் இடையே போட்டியிட்டு குழந்தை வளர்க்கும் சூழல் உருவாகும். குதிரை, பசு, பன்றி போன்ற விலங்குகளை அதனதன் கர்ப்பக் காலத்தில் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்வதுபோல், பணம் கொப்பளிக்கும் குழந்தைகளைப் பெற்றெடுக்கப்போகும் தன் மனைவிமாரையும் அன்பு கலந்த பாதுகாப்பு உணர்வுடன் ஆண்கள் பார்த்துக்கொள்வர்.
இத்திட்டத்தால் இன்னும் பல அனுகூலங்கள் உண்டு. நாம் ஏற்கெனவே ஏற்றுமதி செய்யும் மாட்டிறைச்சியோடு இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைக் கறியை ஏற்றுமதி செய்தால் நல்ல இலாபம் சம்பாதிக்கலாம். கூடவே பன்றிகளைச் சரியான பருவம்வரை பராமரித்து, ஏற்ற நேரத்தில் கறியாக்கி சுவையான பன்றிக்கறிகளைப் பரிமாறலாம். மிகுதியாகப் பன்றி இறைச்சி உண்ணும் நம் நாட்டில் இதற்கு நல்ல வரவேற்பு உண்டு. இவை என் திட்டத்தின் ஒன்றிரண்டு பலன்கள்தான். நீள அகலம் கருதி நான் அவற்றைச் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.
விருந்து நிகழ்ச்சி, திருமணம், சமய நிகழ்வு போன்ற வெவ்வேறு தறுவாயில் இந்த டப்ளின் நகரில் மட்டும் சுமார் 1000 குடும்பங்கள் தொடர்ச்சியாகக் குழந்தைக் கறி வாங்குவதாய் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த நகரத்தில் மட்டும் சுமார் 20,000 குழந்தை உடல்கள் ஓராண்டில் விற்றுப்போகும். நாட்டின் பிற பகுதிகளில் விலை சற்றுக் குறைவாக இருப்பதால், மீதமுள்ள 80,000 குழந்தைகளும் எளிதில் விற்றுப்போவார்கள்.
இத்திட்டத்தால் நாட்டின் பெரும்பான்மை மக்கள்தொகை குறைந்துபோகும் எனக் குறைசொல்பவர்களைத் தாண்டி இதை வேண்டாமென்று வெறுத்து ஒதுக்குபவர்கள் யாரும் இருக்க முடியாது என்று எண்ணுகிறேன். நான் இந்தத் திட்டத்தை முன்மொழியும் முக்கியக் காரணமே, அந்தவொரு அம்சம்தான். இந்தத் திட்டம் அயர்லாந்துக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். உலகில் வேறெந்த நாட்டிற்கும் இதைப் பொறுத்திப் பார்க்கக்கூடாது.
எனவே இங்கு இல்லாத பணக்காரர்களுக்கு வரி விதிக்கச் சொல்வது, சொந்த நாட்டுப் பொருட்களை மட்டுமே உபயோகிக்க வற்புறுத்துவது, அந்நிய நாட்டுப் பொருட்களுக்குத் தடை விதிப்பது, நம் நாட்டுப் பெண்களின் செலவினத்தைக் குறைப்பது போன்ற பிற யோசனைகளைப் பரிந்துரைக்க வேண்டாம்.
நம் பணத்தில் கறாராக இருப்பது, சொந்த நாட்டை நேசிப்பது, தங்கள் நாட்டைப் பிறிதொருவர் கைப்பற்றிய பிறகு சண்டையிட்ட யூதர்களைப்போல் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, நமது நம்பிக்கைக்காக நாட்டை அடமானம் வைப்பது, நிலப்பிரபுக்கள் குடியானவர்களை நேசமாகப் பார்த்துக்கொள்வது, நம் நாட்டு வியாபாரிகளுக்கு நியாயமாக நடந்துகொள்ளச் சொல்லித்தருவது போன்ற யோசனைகளை அறவே விட்டுவிடுங்கள்.
அயர்லாந்தில் உற்பத்தியாகும் சொந்த நாட்டுப் பொருட்களைத்தான் வாங்கவேண்டும் என்றால், வியாபாரிகள் விலை அதிகம் வைத்து தரத்தில் சமரசம் செய்துவிடுவர். நாம் பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும், ஒரு நியாயமான ஒப்பந்தத்திற்கு வருவதில் அவர்களிடையே தயக்கம் நீடிக்கிறது.
இத்திட்டங்களை உறுதியாகவே ஒருவரால் செய்துகாட்ட முடியும் என உங்களுக்கு நம்பிக்கைத் தோன்றும்வரை, இதுபோன்ற திட்டங்களை என்னிடம் கொண்டுவராதீர்கள்.
நான்கூட பயனற்ற பல திட்டங்களையும், இயல்புக்கு மாறான பல யோசனைகளையும் சொல்லிச் சொல்லிப் பல ஆண்டுகள் வீணே கழித்துவிட்டேன். எல்லாவற்றிலும் நம்பிக்கைபோனது. அதிர்ஷ்டவசமாக நான் இந்தத் திட்டத்தை இறுதியில் கண்டடைந்தேன். நடைமுறைச் சாத்தியத்திற்கு உட்பட்ட, அதிகப் பணத் தேவையில்லாத, சுலபமான, முற்றிலும் நம் கைப்பிடிக்குள் அடங்கக்கூடிய நூதனத் திட்டம் இது. கூடவே இத்திட்டம் எவ்வகையிலும் இங்கிலாந்து தேசத்தை வருத்தமூட்டாது.
இவ்வகை மாமிசங்கள் நீண்ட காலம் உப்பில் இருந்தால், அதன் மென்மைப்பதம் நீர்த்துப்போய்விடும். ஆக இதனை ஏற்றுமதி செய்ய முடியாது. இருப்பினும் அதே தன்மையில் அதை அப்படியே உட்கோள்ளும் ஒரு நாடு நிச்சயம் இருக்கும்.
நான் என் தீர்க்கமான முடிவிலிருந்து சிறிது வளைந்து கொடுக்கிறேன். அறிவுத்திறன் வாய்ந்தவர்கள் சொல்லும் பாதுகாப்பான, எளிய, பயன்தரவல்ல மாற்றங்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன். ஆனால் என் திட்டத்தை மறுத்து, அதைக் காட்டிலும் சிறந்த மாற்றங்களை முன்மொழிபவர்கள், இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
ஒன்று. பெரிதாகச் சம்பாத்தியப் பலமில்லாத 1,00,000 பேருக்கு உணவும் உடையும் கிடைக்க இவர்களிடம் வேறு என்ன யோசனை இருக்கிறது?
இரண்டு. இந்நாட்டில் பத்து இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் எல்லோர் பேரிலும் சுமார் 20 இலட்சம் பவுண்ட் கடன் இருக்கிறது. இதில் பிச்சைக்காரர்கள், குறுநில விவசாயிகள், குடிசைவாழ் ஏழைகள், தொழிலாளிகள், அவர்தம் குடும்பம் என்று போராடி வாழ்க்கை நடத்தும் எல்லோரும் அடக்கம். இவர்கள் அனைவரின் பெற்றோரிடமும் சென்று, குழந்தையாக இருந்தபோதே உங்களைப் பணத்திற்கு விற்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்களா என்று என்னிடம் சூசனை சொல்பவர்கள் கேட்க வேண்டும்.
அவ்வாறு விற்றிருந்தால் தொடர்ச்சியாக உழைத்து கொட்டி, பொல்லாத நிலப்பிரபுக்களிடம் சமர்செய்து, வாடகைச் செலுத்த முடியாமல், உண்பதற்கு ஏதுமின்றி, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு, அதைத் தம் குழந்தையின் தலைமுறைக்கும் கடத்தும் பாவப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்க மாட்டார்கள்.
நான் இத்திட்டத்தை எவ்வகையிலும் தனிப்பட்ட சுயநலத்திற்காக முன்மொழியவில்லை என்று உங்களிடம் இதயப்பூர்வமாக உறுதியளிக்கிறேன். நம் நாட்டுப் பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும், குழந்தைகளை நன்முறையில் பராமரிக்க வேண்டும், ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும், செல்வந்தர்களுக்குப் பூரிப்பு உண்டாக்க வேண்டும் என்பதுதான் என் ஒரே குறிக்கோள். என் கடைசிக் குழந்தைக்கு ஒன்பது வயது ஆகிறது. என் மனைவியும் கருத்தரிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே நான் முன்மொழியும் இத்திட்டத்தால் ஒற்றைப் பென்னிகூட என்னால் பலனடைய முடியாது.
0
_________
‘A Modest Proposal for preventing the Children of Poor People From being a Burthen to Their Parents or Country, and For making them Beneficial to the Public’ By Jonathan Swift (Published in 1729)