Skip to content
Home » உலகின் கதை #6 – கலாபகஸ் : ஓர் உயிரியல் அருங்காட்சியகம்

உலகின் கதை #6 – கலாபகஸ் : ஓர் உயிரியல் அருங்காட்சியகம்

கலாபகஸ்

கலாபகஸ் தீவுக்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு தீவாகப் பயணம் செய்தார் சார்லஸ் டார்வின். இசெபெல்லா என்று அழைக்கப்படும் ஆல்பெமார்லே தீவில் பார்த்தவற்றைத் தன் குறிப்பேட்டில் பதிவு செய்கிறார். தீவு முழுவதும் கறுப்பு நிற எரிமலைக் குழம்பினால் நிரவப்பட்டிருந்தது. எரிமலை கக்குவதைப் பார்ப்பதற்குக் கொதிக்கும் பானையின் வாயிலிருந்து வழிவதுபோல இருந்தது. பக்கவாட்டில் இருந்த சிறிய ஓட்டைகளின் வழியாகவும் பொங்கி வழிந்து கடற்கரை முழுவதிலும் பல மைல் தூரத்துக்குப் பரவியிருந்தது. இன்னொரு பெரிய எரிமலையின் உச்சியில் இருந்து புகை கசிந்தது.

இந்தத் தீவுக்கூட்டத்தைச் சூழ்ந்துள்ள கடற்பகுதியில் மூன்று பெருங்கடல் நீரோட்டங்கள் சங்கமிக்கின்றன. அதனால் இப்பகுதி உலகிலேயே வளமிக்க கடல் உயிர்க்கோளமாக இருப்பதால் ‘உயிரோடிருக்கும் அருங்காட்சியகம்’ எனவும் ‘பரிணாம வளர்ச்சியின் காட்சிப் பெட்டி’ எனவும் அழைக்கப்படுகிறது.

கலாபகஸின் இயற்கை வரலாற்றை ஆர்வத்துடன் கூர்ந்து நோக்கினால். இத்தீவுக்கூட்டம் ஒரு குட்டி உலகம் என்று சொல்லலாம், இல்லையென்றால் தென் அமெரிக்காவின் துணைக்கோளைப் போன்ற நிலப்பகுதி எனலாம். தீவுகள் பரப்பளவில் சிறியவை என்றாலும் ஒவ்வொன்றிலும் இருக்கும் தொன்மையான உயிரிகளின் எண்ணிக்கை ஆச்சரியமூட்டும்.

இந்த உயிரினங்களை உலகில் வேறு எங்கும் காணமுடியாது என்பதோடு ஒவ்வொரு தீவைச் சேர்ந்த உயிரினமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. அதேநேரம் தென் அமெரிக்காவில் இருப்பவையோடு நெருங்கிய தொடர்புகொண்டவை. இன்னொன்றையும் சொல்லவேண்டும்; இந்தத் தனித்துவம் கொண்ட உயிரினங்களோடு மற்ற நிலப்பகுதிகளில் இருந்து வந்த குடியேறி விலங்குகளும் தாவரங்களும் இங்கே உள்ளன. காலப்போக்கில் இவையும் இந்தச் சூழலுக்கேற்ப மாறியுள்ளன.

கலாபகஸ் தீவுகளில் 26 விதமான நிலப் பறவைகளையும் 11 நீர்ப் பறவைகளையும் பார்த்தார் சார்லஸ் டார்வின். பிரம்மாண்டமான ஆமை, ஃபிஞ்ச் எனப்படும் சிறிய பறவை, கோர்மொரான்ட் எனப்படும் நீர்க்காக்கை, கலாபகஸ் லாவா பல்லி, இகுவானா எனப்படும் கடல்வாழ் உடும்பு, நிலத்தில் வாழும் நத்தை, பிரம்மாண்டமான சப்பாத்திக்கள்ளி போன்றவை இங்கே இருக்கும் சில உயிரினங்கள். பனிபடர்ந்த பிரதேசங்களில் காணப்படும் பென்குயின், சீல் எனப்படும் கடல் நாய் ஆகியவையும் இங்கே இருந்தன.

ஆமை, உடும்பு, பாம்பு இவற்றில் வெவ்வேறு இனங்களைப் பார்த்தாலும் தவளையையோ தேரையையோ காணவில்லை. மிதமான தட்பவெப்பமும் ஈரப்பதமும் இருக்கும் இதுபோன்ற இடம் அவற்றுக்கு ஏற்ற சூழல் என்பதால் ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதுகிறார். எரிமலைத் தீவுகள் எதிலும் தவளையோ தேரையோ காணப்படுவதில்லை என்பதை அவருக்கு முந்தைய இயற்கையியல் வல்லுநர்களும் சொல்லியிருப்பதைச் சுட்டுகிறார். ஆனால் எங்கு பார்த்தாலும் உடும்புகளும் பல்லிகளும் இருந்தன. உப்புக் கரிக்கும் கடல் நீரில் தவளையின் தலைப்பிரட்டைகளால் உயிர்பிழைத்திருக்க முடியாதோ என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.

ஆமைகளில் நிலத்தில் வாழும் இனங்களும் நீரில் வாழ்பவையும் இருந்தன. ஆமை அதிக அளவில் நீர் குடிக்கும் என்பதால் தீவின் நடுப்பகுதியில் இருக்கும் நன்னீர் ஊற்றுகளைத் தேடிப் போகும். நீர்நிலையை அடைந்ததும் தலை முழுவதையும் நீருக்குள் நுழைத்து வேகவேகமாகக் குடிக்கும். ஒவ்வொரு ஆமையும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை இங்கேயே தங்கியிருந்து வேண்டியமட்டும் நீரைக் குடித்த பிறகு இருப்பிடத்துக்குத் திரும்பிச் செல்லும். எட்டு மைல் தூரத்தை இரண்டு அல்லது மூன்று நாட்களில் இரவு பகல் பாராமல் கடக்கும். வழியில் உணவுக்காகச் சிறிது நேரம் இளைப்பாறும்.

அத்தனை பெரிய கனத்த விலங்கினம் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்துக்குச் செல்லும்போது காலப்போக்கில் நிலத்தில் தெளிவான தடம் உருவாகும். முதன்முதலில் இங்கு வந்திறங்கிய ஸ்பானியர்கள் இந்தத் தடங்களின் உதவியால் நன்னீர் இருக்கும் இடத்தைச் சுலபமாகக் கண்டுபிடித்தனர்.

ஒவ்வொரு தீவிலும் இருக்கும் ஆமையும் உருவத்தில் சிறிய மாற்றங்களைக் கொண்டிருப்பதைக் கவனித்தார் சார்லஸ் டார்வின். முதலில் இப்படி உருவத்தில் பலவிதமான மாறுதல்களைக் கொண்டிருப்பது உயிரினங்களின் தோற்றத்தில் நிலைத்தன்மை இல்லாமல் செய்துவிடும் என நினைத்தார். இங்கிலாந்து வந்து சேர்ந்து பல வருட ஆய்வுக்கும் சிந்தனைக்கும் மற்ற அறிவியல் வல்லுநர்களுடனான அறிவுப் பரிமாற்றத்துக்கும் பிறகுதான் இயற்கைத் தேர்வினால் தோற்றத்தில் மாறுதல் ஏற்படுகிறது என்பதையும் இதுவே பரிணாம வளர்ச்சிக்கு உதவுகிறது என்பதையும் புரிந்துகொண்டார்.

குருவியைப் போன்ற உருவம்கொண்ட ஃபிஞ்ச் பறவை ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு விதமாக இருப்பதைப் பார்த்தார் சார்லஸ் டார்வின். ஆனால் அவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்பதை உணரவில்லை. ஒவ்வொரு தீவிலும் இருந்த ஃபிஞ்ச்சின் அலகின் அமைப்பும் அளவும் வித்தியாசமாக இருந்ததால் அவை வெவ்வேறு பறவைகள் என்று நினைத்துக்கொண்டார். சொல்லப்போனால், ஃபிஞ்ச் பறவையை மாக்கிங் பேர்ட் என்று தவறுதலாக எண்ணினார். அதனால் எந்தெந்தத் தீவில் எந்த மாதிரியான ஃபிஞ்ச் பறவையைப் பார்த்தேன் என்பதைக் குறித்து வைக்கவில்லை.

இங்கிருக்கும் பறவைகள் மனிதர்களைக் கண்டு பயப்பதில்லை. அவர்களுக்கு மிக அருகிலோ அல்லது கையிலோகூட வந்து உட்காரும். கனத்த தடியினால் அடித்து அவற்றை எளிதில் கொன்றுவிடமுடிகிறது என்கிறார். ஒரு முறை அவர் அருகே ஆமை ஓட்டினாலான பாத்திரம் நிறைய நீரை வைத்திருந்தார். மாக்கிங் திரஷ் எனப்படும் பறவை பயமின்றி அவரருகே வந்து நீரைப் பருகியது.

எச்.எம்.எஸ். பீகிள் குழுவினரின் வருகையைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலாபகஸ் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். ஆமை, திமிங்கிலம், கடல் நாய், ட்யூனா எனப்படும் சூரை மீன் போன்ற உயிரினங்களை வரைமுறையின்றி வேட்டையாடினர். இதன் விளைவாகப் பல கடல்வாழ் உயிரினங்கள் முற்றிலும் அழிந்துபோயின அல்லது அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டன. கூடவே அயல் நிலப்பகுதியைச் சேர்ந்த ஆடு, பன்றி போன்ற உயிரினங்களும் இங்கே வந்துசேர்ந்ததால் சுற்றுச்சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டன. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகமானது. இவையெல்லாம் இந்தத் தீவுகளின் மென்மையான சுற்றுச்சுழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்தன.

0

1935ஆம் ஆண்டு கலாபகஸுக்கு சார்லஸ் டார்வின் வருகைதந்து நூறாண்டுகள் ஆனதின் நினைவாக சான் கிறிஸ்டொபெல்லில் அவருக்குச் சிலை வைக்கப்பட்டது. 1936ஆம் ஆண்டு கலாபகஸ் தீவுகளின் ஒரு பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது எக்குவடார் அரசாங்கம். 1959ஆம் ஆண்டில் தேசியப் பூங்கா என அங்கீகாரம் பெற்றது. 1978ஆம் ஆண்டு முதல் உலகப் பாரம்பரியக் களம் என்ற பெருமையைப் பெற்றது. 1986ஆம் ஆண்டு தீவுகளைச் சுற்றியிருக்கும் கடற்பகுதியும் பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளமாக அறிவிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதி இன்னும் பல பத்தாயிரம் சதுர கிலோமீட்டருக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.

என்னென்ன காரணத்தால் கலாபகஸ் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது என்பதை யுனெஸ்கோ நிறுவனம் பட்டியலிடுகிறது. பவழப் பாறை, சுறா மீன், பென்குயின், கடல்வாழ் பாலூட்டிகள் என இங்கிருக்கும் பல்வகையான உயிரினங்களின் எண்ணிக்கையைப் போல உலகில் வேறெங்குமே கிடையாது. இந்தப் பகுதியில் கடலுக்கடியில் இருக்கும் நிலவியல் அமைப்புகளும் தனித்தன்மை வாய்ந்தவை.

கலாபகஸ் தீவுகள் உலகின் மற்ற தீவுக்கூட்டங்களைக் காட்டிலும் சமீபத்தில் உருவானவை. இசபெல்லா, பெர்னாண்டினா – இந்த இரண்டு தீவுகளும் ஒரு மில்லியன் ஆண்டுக்கு முன்னர்தான் தோன்றின. எஸ்பானோலா, சான் கிறிஸ்டோபெல் ஆகிய தீவுகள் உருவாகி மூன்று முதல் ஐந்து மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம். தொடர்ந்து எரிமலை வெடிப்பு, நில நடுக்கம், மண் அரிப்பு போன்ற நிலவியல் அமைப்பில் மாற்றங்கள் நடந்தபடியே இருக்கின்றன. உலகில் இங்கே மட்டும்தான் இதுபோன்ற நிலவியல் மாற்றத்தின் தொடர் நிகழ்வுகள் காணக் கிடைக்கின்றன.

இந்தத் தொடர் மாற்றங்களோடு சுற்றுச்சூழல், பரிணாம வளர்ச்சி, உயிரிய-நிலவியல் செயல்பாடுகள் ஆகியவை உயிரினங்களின் தோற்றம், உடல் அமைப்பு, பழக்கவழக்கம் ஆகியவற்றின்மீது ஏற்படுத்தும் தாக்கங்களை இங்கே கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. கூடவே நிலத்தில் வாழும் சில உயிரினங்கள் கடலைச் சார்ந்து இருப்பதால் அவற்றின் வாழ்க்கைமுறையில் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களைக் உற்றுக்கவனிப்பதுமூலம் நிலப்பகுதி, கடற்பகுதி இரண்டையும் இணைக்கும் கண்ணியைப் பற்றிப் புரிந்துகொள்ளமுடிகிறது.

இத்தனை இளைய தீவுகளில் எத்தனை எத்தனை வகையான உயிரினங்கள் என்பது ஆச்சரியமூட்டுகிறது. ஒவ்வொரு வருடமும் இதற்கு முன்னர் பார்த்திராத புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்து இந்தப் பட்டியலில் சேர்ப்பது தொடர் நிகழ்வாகிவிட்டது என்றால் மிகையல்ல. கலாபகஸ் உலகப் பாரம்பரியக் களமானதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

1960ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியது. தீவுகளில் ஏற்கனவே வசித்தவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தாலும் வருவாயைத் தந்தது. சுற்றுலா, மீன்பிடித்தல், விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுவதற்காக எக்குவடார் நாட்டில் இருந்து மக்கள் இங்கே குடிபெயர்ந்தனர். இவற்றால் எல்லாம் கலாபகஸின் உயிரினங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது எக்குவடார் அரசு. அதற்கான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தியது.

பால்ட்ரா, சான் கிறிஸ்டோபெல், இசெபெல்லா தீவுகளில் விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் இசெபெல்லாவில் இருப்பது உள்ளூர்ப் பயணத்துக்கானது. மக்கள் வசிக்கும் தீவுகளில் துறைமுகங்கள் அமைப்பட்டுள்ளன. தீவில் வசிக்கும் மக்கள் இங்கிருக்கும் இயற்கை வளங்களில் எவற்றை எந்த அளவில் பயன்படுத்தலாம் என்பது முதல் ஒவ்வொரு வருடமும் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்பது வரையில் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் பணிகளைச் செய்கிறது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட பன்னாட்டுத் தரத்தைப் பின்பற்றுகிறது.

வருடமுழுவதும் கலாபகஸ் தீவுகளுக்குச் செல்லலாம். முதலில் எக்குவடார் நாட்டுக்குப் போய் அங்கிருந்து பால்ட்ராவுக்கு விமானத்தில் போகவேண்டும். சாண்டா குரூஸ், சான் கிறிஸ்டோபெல் அல்லது இசெபெல்லா தீவுகளில் இருக்கும் ஓட்டல்களில் தங்கலாம்.

0

இந்தத் தொடரில் எந்தக் களத்தைப் பற்றி முதலில் எழுதலாம் என்று யோசிக்கையில் உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி போன்ற கோட்பாடுகள் உருவாகக் காரணமான கலாபகஸ் தீவு குறித்து எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

முதல் கட்டுரையை எழுதத் தொடங்கியது பிப்ரவரி 11ஆம் தேதி. சார்லஸ் டார்வினின் பிறந்தநாள் பிப்ரவரி 12ஆம் தேதி. பெர்னாண்டோ நொரோனா தீவை அவர் அடைந்தது பிப்ரவரி 20ஆம் தேதி. சற்றேறக் குறைய அதே நாளில்தான் அந்தக் கட்டுரையை எழுதினேன். பிரேசில் கார்னிவல் கொண்டாட்டத்தில் டார்வின் கலந்துகொண்டது மார்ச் 4ஆம் தேதி. ஓரிரு நாட்கள் கழித்து அந்தக் கட்டுரையை எழுதினேன்.

இன்று காலை இந்தக் கட்டுரையை எழுதிவிட்டுப் பார்த்தால் கலாபகஸில் இருப்பதாக உறவினர் ஒருவர் புகைப்படத்தைச் சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார். இவையெல்லாம் தற்செயலாக இருந்தாலும் இயற்கையைக் கடந்த நிகழ்வாக இருக்கிறதே என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. எழுதுவதோடு இதுபோன்ற அனுபவங்களும் சேர்ந்துகொள்வது கூடுதல் சுவாரசியம்தானே.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *