Skip to content
Home » உலகின் கதை #13 – ஏதென்ஸ் அக்ரோபோலிஸ்

உலகின் கதை #13 – ஏதென்ஸ் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ்

உலகின் தொன்மையான நாகரிகங்கள், மொழிகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டால் அவற்றுள் பண்டைய கிரேக்கமும் இடம் பிடிக்கும். தத்துவம், கணிதம், வானியல், மருத்துவம், சிற்பக் கலை, கட்டடக் கலை, இலக்கியம், நாடகம் என கிரேக்கர்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை என்று சொல்லலாம். கிரேக்க நாகரிகம் பண்டைய ரோமானியப் பேரரசின்மீதும் மற்ற நாகரிகங்களின்மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கிரேக்கர்களின் பல கண்டுபிடிப்புகள் நம்முடைய அன்றாட வாழ்வோடு இன்றளவும் பின்னிப் பிணைந்துள்ளன. அதே நேரம் எகிப்தின் நைல் ஆற்று நாகரிகம், மெசபடோமிய நாகரிகம் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகள், அறிவுத்திறன் இவற்றையும் உள்வாங்கிக்கொண்டு வளர்ந்தது கிரேக்க நாகரிகம்.

ஐரோப்பாவின் முதன்மை நகரங்களுள் மத்திய கிழக்குப் பகுதிக்கு மிக அருகில் இருப்பது ஏதென்ஸ். எனவே மற்ற ஐரோப்பிய நகரங்களைவிடவும் கிழக்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தை இங்கே அதிகமாகப் பார்க்கமுடியும். ஓட்டோமான் ஆட்சிக்காலத்தின் விளைவு என்றாலும் ஏதென்ஸ் தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிடவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.

பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரம் மேற்கத்திய நாகரிகத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. கிரேக்கத்தின் தெற்குப் பகுதியில் இஜியன் கடலின் கரையில் சற்றே உள்ளடங்கி அமைந்துள்ளது ஏதென்ஸ். அதிக நீரோட்டமில்லாத இரண்டு ஆறுகள் நகரின் கிழக்கிலும் மேற்கிலும் ஓடுகின்றன. நகரைச் சுற்றிலும் நான்கு குன்றுகள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் ஒரு வறண்ட நிலப்பகுதி என்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும் பல அறிவார்ந்த சிந்தனைகளும் கலையுணர்வும் இங்கே ஊற்றெடுத்தது என்ற உண்மையை யாரும் மறுக்கமுடியாது.

ஏதென்ஸ் அக்ரோபோலிஸ் என்றழைக்கப்படும் ஏதென்ஸ் நகரின் உள்ளரண் கடல் மட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்தில் சுனைகள் காணப்படுகின்றன. குன்றின் மேல் பகுதி சமதளமாகப் பரந்து விரிந்திருக்கும். செங்குத்தாக அமைந்த இந்தக் குன்றுக்கு மேலே செல்ல மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரே ஒரு பாதைதான் வழி என்பது இயல்பான அரணாகிவிட்டது. இந்த இயற்கை அமைப்பினால் பண்டைய காலம் முதலே ஏதன்ஸ் கோட்டையாகவும் புகலிடமாகவும் இருந்தது.

ஏதென்ஸ் அக்ரோபோலிஸும் அங்கிருக்கும் நினைவுச்சின்னங்களும் பண்டைய கிரேக்கத்தின் கட்டடவியலுக்கும் கலைத்திறனுக்கும் ஒட்டுமொத்த சான்றாகும். மேலும் பழமையான நாகரிகம் ஒன்று இந்த உலகுக்குத் தந்த கொடையாகவும் கொள்ளலாம்.

கி.மு. 8ஆம் நூற்றாண்டில் நகரின் காவல் தெய்வமாக இருந்த ஏதெனா என்ற பெண் தெய்வ வழிபாடு மக்களிடையே பரவி நிலைபெற்றது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்துக்கும் பாரசீகத்துக்கும் இடையே நடைபெற்ற போர்களில் இரு தரப்பினரும் மாறி மாறி வெற்றிக் கனியைக் கொய்தனர். இரண்டாவது பாதியில் கிரேக்கர்கள் பாரசீகத்தை வென்றனர். கிரேக்கப் பேரரசு மத்தியத்தரைக்கடல் முதல் கருங்கடல் வரை பரவியிருந்தது. அதே காலகட்டத்தில் மக்களாட்சி கிரேக்கத்தில் நிறுவப்பட்டது. பண்டைய உலகில் இருந்த மற்றெந்த அரசைக்காட்டிலும் முன்னிலை வகித்தார்கள் கிரேக்கர்கள். இதைத் தொடர்ந்து கிரேக்கத்தில் பலவிதமான கருத்துகளும் சிந்தனைகளும் மலர்ந்தன. பலவிதமான கலைகள் வளர்ந்து பொலிவுபெற்றன. மக்களாட்சி, தத்துவம், நாடகம், பேச்சுரிமை போன்ற இன்றைய உலகின் அறிவு, ஆன்மிகப் புலங்களுக்கான வித்து இந்தக் குன்றின்மீதுதான் ஊன்றப்பட்டது.

ஏதென்ஸின் சிறந்த அரசியல் மேதகையாளரான பெரிக்ளிஸ் கிரேக்கர்களின் பெருமையை நிலைத்து நிற்கச்செய்யும் பொருட்டு நகரை மறுகட்டமைப்பு செய்ய விரும்பினார். அவரின் தலைமையில் திறமைவாய்ந்த கலைஞர்கள் ஒன்றிணைந்து அவருடைய எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் வடிவம் தந்தனர். ஃபிடியஸ் என்ற தலைமைச் சிற்பியின் வழிகாட்டுதலின்படி பாறைகள் சூழ்ந்த குன்றைக் கலைநயமிக்க நினைவுச்சின்னமாக மாற்றினர். பார்த்தனன், எரிக்தயன், பிரோபெலா, ஏதெனா நைகியின் சிறிய வழிபாட்டிடம் ஆகியவை இந்தக் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட முக்கியமான நினைவுச் சின்னங்கள்.

போர், குண்டுவெடிப்பு, எதிரிகளின் முற்றுகை, சூரையாடல், தீ விபத்து, நிலநடுக்கம், திருத்தியமைத்தல், இடையீடுகள், வெவ்வேறு நாகரிகங்கள், மதங்களைச் சேர்ந்தவர்களின் மாறுபட்ட பயன்பாடுகள் எனக் கடந்துசென்ற நூற்றாண்டுகளில் எண்ணற்ற இடர்களை எதிர்கொண்டது ஏதென்ஸ். அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து சுமார் இருபத்தைந்து நூற்றாண்டுகளாக இந்த நினைவுச்சின்னங்கள் அசையாமல் நிற்கின்றன என்பது வியப்பை ஊட்டுகிறது.

0

ஏதென்ஸ் அக்ரோபோலிஸ் குன்றின்மீது அமைக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் இயற்கையோடு இயைந்த கட்டடக்கலைக்குச் சான்றாக இருக்கின்றன. அவற்றுள் பார்த்தனன் சொலிக்கும் விலையுயர்ந்த அணிகலன் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கக் கடவுளான கன்னி ஏதெனாவின் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் புழங்கிய மூன்று முக்கிய கட்டடப் பாணிகளில் டோரிக் என்ற எளிமையான பாணியின் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்டது. துல்லியமான கட்டுமானப் பணியைச் செய்யும் கைவினைஞர்களின் திறமைக்குச் சான்றாக நிற்கிறது பார்த்தனன்.

இதன் கட்டுமானப் பணி கி.மு. 447இல் ஃபிடியஸ் என்ற தலைமைச் சிற்பியின் தலைமையில் தொடங்கியது இக்டினஸ், காலிகிரேட்டஸ் என்ற இரண்டு கட்டடவியல் வல்லுநர்களால் கி.மு. 438இல் கட்டி முடிக்கப்பட்டது. தங்கம், தந்தம் என்ற இரண்டு விலைமதிப்புமிக்க பொருட்களைக்கொண்டு ஏதெனாவின் உருவச்சிலையை உருவாக்கினார் ஃபிடியஸ். பார்த்தனின் வெளிப்புற வடிவமைப்பு கி.மு. 432 வரை தொடர்ந்தது.

எண்ணற்ற பளிங்குத் தூண்களாலான மண்டபம்போன்ற அமைப்பைக் கொண்டது பார்த்தனன். கிழக்கே அமைக்கப்பட்ட வாயிலின் வழியாகவும் பளிங்குக் கற்களாலான கூரையின் வழியாகவும் சூரிய ஒளி கோயிலினுள் பாய்ந்தது. இங்கே அமைந்துள்ள சிற்பங்கள் கிரேக்கப் புராணத்தையும் ஏதெனாவின் வழிபாட்டையும் கிரேக்கத்துக்கும் பாரசீகத்துக்கும் இடையே நடந்த போர்களையும் சித்தரிக்கின்றன.

கிழக்குப் பகுதியில் கடவுள்களுக்கும் பெருத்த உடல்கொண்ட ராட்சதர்களுக்கும் இடையே நடந்த போர் சித்தரிக்கப்பட்டுள்ளது. தெற்கே இருக்கும் சுவரில் லாப்பித் எனப்படும் கிரேக்க இனமும் பாதி மனித உடலும் பாதி குதிரை உடலும் கொண்ட செண்டார்களும் மோதிக்கொண்டது செதுக்கப்பட்டுள்ளது. மேற்குச் சுவரில் ஏதெனியர்களுக்கும் அமேசானியர்களுக்கும் மத்தியில் நடைபெற்றுவந்த போர் சித்தரிக்கப்பட்டுள்ளது. வடக்குப் புறத்தில் அழிக்கப்பட்டாலும் கிரேக்கர்கள் டிராய் நாட்டை முறியடித்த போர்க் காட்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டன.

காலப்போக்கில் மாற்றங்களை எதிர்கொண்டாலும் கிறிஸ்துவம் வேரூன்றியபோது கிறிஸ்துவ தேவாலயமாக உருப்பெற்றது பார்த்தனன். ஏதெனாவின் சிலை கோயிலில் இருந்து அகற்றப்பட்டது. பல சிற்பங்கள் உருக்குலைக்கப்பட்டன. பின்னர் ஓட்டோமான் துருக்கியர்களின் ஆட்சியில் மசூதியாக மாற்றியமைக்கப்பட்டது. வெனிஸுடன் நடந்த போரில் பார்த்தனனை வெடிமருந்துக் கிடங்காகப் பயன்படுத்தினர் துருக்கியர். இதனால் கட்டடத்தின் பெரும்பகுதி வெடித்துச் சேதமடைந்தது.

பார்த்தனின் பெரும்பாலான சிற்பங்கள் தற்போதும் ஏதென்ஸிலேயே இருக்கின்றன. தனிப்பட்ட சேகரிப்பாளர்களின் வசம் இருந்த சிற்பங்கள் இப்போது இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளின் அருங்காட்சியகங்களின் சேகரிப்பில் உள்ளன.

0

பார்த்தனின் மேற்குச் சுவரில் காணப்படும் அமேசானியர்களைப் பற்றிய கிரேக்கப் புராணக் கதை சுவாரசியமானது. யாராலும் வெல்ல முடியாத பெண் வீராங்கனைகளின் இனத்தின் கதை அது. வெவ்வேறு காலகட்டத்தில் பல்வேறு விதமாகச் சொல்லப்பட்ட கதை என்றும் சொல்லாம். திறமையான வேட்டுவர்களாகவும் வில்லாளர்களாகவும் போர்வீரர்களாகவும் குதிரையேற்றம் முதலான பல்வேறு போர் முறைகளிலும் தேர்ந்தவர்களாகவும் விளங்கினார்கள் இந்தப் பெண்கள். உடல் வலுவிலும் சுறுசுறுப்பிலும் லாவகத்திலும் ஆண்களைவிடவும் திறன்வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.

அவர்களின் வாழ்விடத்தைத் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகச் சித்தரித்தார்கள் கிரேக்கர்கள். முதலில் கருங்கடல் பகுதியில் வசிப்பதாகச் சொன்னார்கள். கருங்கடல் பகுதியை வெற்றிகொண்ட பிறகு அமேசானியர்கள் அங்கே வசிக்கவில்லை என்பது தெளிவாகியதும் வேறு ஒரு விளக்கத்தைச் சொல்லவேண்டியிருந்தது.

கிரேக்கப் புராணத்தின் வெற்றி நாயகர்களுள் ஒருவனாகக் கொண்டாடப்பட்ட ஹிராக்ளிஸ் அமேசானியர்களின் அரசியான ஹிப்போலைட்டின் இடுப்புப் பட்டியை எடுத்துவருவதற்காக அனுப்பப்பட்டான். அவன் அவர்களை வென்று கருங்கடல் பகுதியில் இருந்து துரத்தியடித்தான் என்று சொல்லப்பட்டது. அமேசானியர்களின் மற்றொரு அரசியான பெந்தசீலியா கிரேக்கர்களை எதிர்த்து டிராய் மக்களுக்கு ஆதரவாகப் போர்புரிய படைதிரட்டிக்கொண்டு போனாள். ஆனால் அகிலிஸ் என்ற மாபெரும் வீரனால் கொல்லப்பட்டாள்.

ஒரு நாடு முழுவதும் பெண்கள் மட்டுமே வாழ்ந்தால் அடுத்தடுத்த சந்ததி எப்படித் தோன்றியிருக்கும் என்ற தர்க்கரீதியான கேள்விக்கும் மற்றொரு கதைமூலம் விடை சொல்லப்பட்டது. மற்ற இனத்தைச் சேர்ந்த ஆண்களுடன் இணைசேர்ந்து பிறந்த குழந்தைகளில் பெண்களை மாத்திரம் வைத்துக்கொள்வார்கள், ஆண் குழந்தைகளைத் தந்தையிடம் அனுப்பிவைப்பார்கள் என்பதுதான் அது.

இன்னுமொரு கதையில் கிரேக்க வீரர்கள் தெசீயஸும் ஹிராக்ளிஸும் ஒன்றாகச் சேர்ந்து அமேசானியர்களைத் தாக்கினார்கள். அதற்குப் பதிலடியாக தெசீயஸின் நாடான அட்டிகாவின்மீது போர் தொடுத்த அமேசானியர்கள், இறுதியில் தோற்கடிக்கப்பட்டார்கள். தெசீயஸ் அவர்களில் ஒருவரான அண்டியோப் என்ற பெண்ணை மணந்துகொண்டான்.

அமேசானியர்கள் உருவில் ஏதெனா தெய்வத்தை ஒத்திருந்தந்தாகச் சித்தரிக்கப்பட்டனர். கைகளில் வில், ஈட்டி, கோடரி, கேடயம் ஆகியவற்றை ஏந்தி இருப்பதோடு தலைக்கவசமும் அணிந்திருந்தனர். பிற்காலத்திய சித்தரிப்புகளில் ஆர்ட்டெமிஸ் என்ற பெண் கடவுளைப்போல அமைக்கப்பட்டனர். மெல்லிய ஆடையை வேகமாக நகர்வதற்கேற்ப தொடைக்கு மேலே ஏற்றிக்கட்டியிருந்தனர். அதற்கும் அடுத்த காலகட்டத்தில் அவர்களின் ஆடைகள் பாரசீகர்கள் அணிபவற்றை ஒத்திருந்தன.

எல்லாம் சரி, தென்னமெரிக்காவின் அமேசான் ஆற்றின் பெயருக்கும் கிரேக்கப் புராணத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பெண்களுக்கும் என்ன தொடர்பு. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிய ஆராய்ச்சியாளர் ஃபிரான்சிஸ்கோ டி ஓரெல்லெனா தென்னமெரிக்காவில் பயணம் செய்தபோது அங்கே போரில் ஈடுபடும் பெண்களைப் பார்த்ததாகவும் அதன் காரணமாக மாரனான் என்று அழைக்கப்பட்ட ஆற்றுக்கு அமேசான் என்று பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது. வரலாறும் தொன்மங்களும்தான் எத்தனை எத்தனை விந்தையான வண்ணமயமான கதைகளைச் சொல்கின்றன.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *