தற்போதைய ஈராக்கில் இருக்கும் பாக்தாத் நகருக்குத் தெற்கே 85 கிமீ தொலைவில் பண்டைய பாபிலோன் நகரின் சிதைவுகளைப் பார்க்கலாம். பொஆமு 626 முதல் 539 வரையில் நியோ-பாபிலோன் பேரரசின் தலைநகராக இருந்தது பாபிலோன்.
பண்டைய பாபிலோன் நகரின் நிலவமைப்பை அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள், க்யூனிஃபார்ம் எழுத்து, ஹெரடோடஸ், இன்னும் அவரைப் போன்ற வரலாற்றாசிரியர்களின் விவரணைகள் ஆகியவற்றின் வழியாகத்தான் தெரிந்துகொள்ளமுடிகிறது.
பொஆமு 1124இல் இசின் வம்சத்தின் முதலாம் நெப்யூகெட்னேசர் என்ற மன்னன் நகரம் முழுவதையும் மறுகட்டமைப்பு செய்ததால் அவர் காலத்துக்கு முந்தைய கட்டட அமைப்புகளின் தொல் எச்சங்கள் அழிந்துபோயின. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரடோடஸின் பதிவுகள் நெப்யூகெட்னேசர் உருவாக்கிய பாபிலோனைப்பற்றிய குறிப்புகளை மட்டுமே வழங்குகின்றன.
நெப்யூகெட்னேசரின் காலத்தில் உலகின் மிகப் பெரிய நகரமாக இருந்தது பாபிலோன். சுமார் பத்து சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. நகரின் நடுவே யூப்ரடிஸ் நதி பாய்ந்தது. நகரின் பழைய பகுதி நதியின் கிழக்குக் கரையில் இருந்தது. இப்போது இயற்கையின் நிகழ்வால் யூப்ரடிஸின் பாதையே மாறிவிட்டது என்பது தனிக்கதை.
பண்டைய பாபிலோன் நகரின் உட்புற, வெளிப்புறச் சுவர்கள், வாயில்கள், அரண்மனைகள், வழிபாட்டிடங்கள் ஆகியவற்றின் சிதைவுகள் பண்டைய உலகின் செல்வாக்குமிக்க பேரரசின் இருப்புக்குச் சான்றாக உள்ளன. நியோ-பாபிலோனியப் பேரரசின் படைப்பாற்றலின் உச்சத்தை எடுத்துக்காட்டுகின்றன.
நகரின் உட்புறச் சுவர்கள் ஹமுராபியால் கட்டப்பட்டவை. பின்னர் இரண்டாம் நெப்யூகெட்னேசர் 40 அடி உயரமுள்ள சுவர்களை எழுப்பினான். பாபிலோனின் சுவர்களின்மீது தேர்ப் பந்தயங்கள் நடத்தப்பட்டன; அத்தனை பருமனும் வலுவும் கொண்டவை என்கிறார் ஹெரடோடஸ்.
இரண்டாம் நெப்யூகெட்னேசர் மூன்று ஆடம்பர அரண்மனைகளை பாபிலோன் நகரில் அமைத்தான். அவற்றை நீலம், மஞ்சள் என வண்ணத் தரைஓடுகளால் அலங்கரித்தான்.
பண்டைய காலத்தின் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான தொங்கும் தோட்டம் பாபிலோனில்தான் அமைக்கப்பட்டது. அன்று தொடங்கி தற்காலம் வரையிலும் பன்னாட்டளவில் கலையுணர்வு, பொதுமக்களின் ரசனை, சமயம்சார்ந்த கலாசாரம் எனப் பலவிதமான வெளிப்பாடுகளுக்கு உந்துதலாக இருந்துள்ளது.
கிரேக்கப் பாரம்பரியப்படி தொங்கும் தோட்டம் என்பது மரம் செடி கொடிகள் எனத் தாவரவகைகள் செழித்து வளரும் செயற்கையாக அமைக்கப்பட்ட குன்று; கீழே நிலவறையொன்று இருக்கும். பாபிலோனின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் அரண்மனையின் கீழ்ப்பகுதியில் நிலவறைகள் இருப்பது அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தொங்கும் தோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனாலும் உண்மையாகவே தொங்கும் தோட்டமொன்று இருந்ததா என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
எசகிலா என்றழைக்கப்பட்ட மர்டுக் கடவுளின் வழிபாட்டுத்தல வளாகம்தான் பாபிலோன் நகரின் முக்கிய பகுதியாக இருந்தது. அதில் எடமெனன்கி என்ற பெயர்கொண்ட பல அடுக்குகளைக் கொண்ட ஜிக்குரட்டை இரண்டாம் நெப்யூகெட்னேசர் கட்டினான் என நம்பப்படுகிறது. இதன் அடித்தளம் சதுரவடிவமானது, ஒரு பக்கம் சுமார் 91 மீட்டர் நீளமுள்ளது. ஏழு மட்டங்களைக் கொண்டது. அதன் உச்சியில் இருக்கும் கோவில் நீல வண்ண ஓடுகளால் அமைக்கப்பட்டது. மொத்த உயரம் அடித்தளத்தின் பக்க அளவை ஒத்திருந்தது. நகரின் கிழக்குப் பகுதியில் இன்னும் நான்கு வழிப்பாட்டிடங்கள் இருந்ததை அகழ்வாராய்ச்சி செய்கையிலும் ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்ட தகவல்களைக் கொண்டும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
எசகிலாவுக்கு வடக்கே கற்கள் பாவப்பட்ட ஊர்வலப் பாதை என அழைக்கப்படும் பாதையொன்று இருந்தது. அதன் சுவர்களில் வண்ணம் பூசப்பட்ட சிங்க உருவங்கள் நிறுவப்பட்டிருந்தன. இஷ்டார் வாயிலின் சுவர்களில் வண்ணம்பூசப்பட்ட எருது, டிராகன் உருவங்களைக் காணலாம். அந்தப் பாதை வழியே சென்றால் ஊருக்கு வெளியே இருக்கும் அகிடு வீடு எனப்படும் சிறிய வழிபாட்டிடத்தை அடையலாம். புதுவருடப்பிறப்பின்போது மர்டுக் அங்கே வருகைபுரிவார் என்று நம்பப்பட்டது. இஷ்டார் வாயிலுக்கு மேற்கே 40 ஏக்கர் பரப்பளவில் காப்பரண் கட்டுமானத்தோடு கூடிய இரண்டு அரண்மனை வளாகங்கள் இருந்தன.
ஹமுராபியின் காலம் முதலே ஊர்வலப் பாதையின் கிழக்கே மையத்தில் இருக்கும் முற்றங்களைச் சுற்றிலும் தனிப்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டன. இரட்டைக் கற்களாலான கோட்டைச் சுவரும் அகழியும் நகரைப் பாதுகாத்தன. இவற்றைத் தாண்டி வெளிப்புறத்தில் இன்னுமொரு கோட்டைச் சுவர் எழுப்பப்பட்டது. இந்த உட்புற, வெளிப்புறச் சுவர்களுக்கு நடுவே கால்வாய்களின் வலையமைப்பொன்று உருவாக்கப்பட்டது.
யூப்ரடிஸ் நதியின் கரையில், குறிப்பாக எசகிலாவில், வர்த்தகக் கலன்களுக்கான துறைமுகங்கள் இருந்ததும் தெரியவந்தது. பாபிலோன் வாணிபத்துக்கான தொடக்கப் புள்ளியாக இருந்தது என்ற உண்மையும் தெற்கு பாபிலோனியாவில் வாணிபத்துக்கான பொருட்களை வைக்கும் கிடங்குகளும் பண்டகச் சாலைகளும் இருந்தன என்பதைச் சொல்லும் பதிவுகளும் கிடைத்துள்ளன.
நதியின் குறுக்கே இருந்த பாலம் செங்கல், கருங்கல் ஆகியவற்றால் கட்டப்பட்டது. நகரின் சாலைகள் செங்கோண வடிவில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மையக்கோடு நதிக்கு இணையாக இருந்தது.
பாபிலோன் நகரைப் பற்றிய குறிப்புகள் யூதம், கிறிஸ்தவம் என இரு சமயங்களின் புனித நூல்களிலும் காணப்படுகின்றன. கிறிஸ்தவப் புனித நூல்கள் பாபிலோனைத் தீய நகரமாகச் சித்தரித்தன. யூதத்தைப் பின்பற்றிய மக்களை நெப்யூகெட்னேசர் சிறைப்பிடித்தான் என்பதைச் சொல்கின்றன அவர்களின் புனித நூல்கள்.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் பேபல் கோபுரம் பற்றிய கதை சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் மனித இனம் முழுவதும் ஒரே மொழியைப் பேசியது. மனித இனம் கிழக்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டு இறுதியில் ஷினார் என்ற பண்டைய மெசபடோமியாவின் தெற்குப் பகுதியை வந்தடைந்தது. அங்கே சுட்ட செங்கற்களாலான நகரம் ஒன்றை அமைத்து வானையெட்டும் கோபுரத்தை அமைக்கவேண்டும் என்று முடிவுசெய்தது.
யாஹ்வே என்ற இஸ்ரேல், யூதேயா நாடுகளின் கடவுள் மனித இனம் சொர்க்கத்தை எட்டும் கோபுரமொன்றை எழுப்பும் முயற்சியில் ஈடுபடுவதைப் பார்த்தார். உடனே அந்தக் கோபுரத்தை இடித்துத் தரைமட்டமாக்கினார். கூடவே மனித இனத்தை உலகம் முழுவதும் சிதறிப்போகச் செய்து அவர்கள் பல மொழிகளைப் பேசும்படியும் செய்தார். அதனால் அவர்களால் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளமுடியாமல் போனது.
பலால் என்றால் குழப்பம் எனப் பொருள். எனவே அதைப் பேபல் கோபுரம் என்றழைத்தனர். தற்காலத்தில் பேபல் என்பது ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசுவதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும்.
மர்டுக் கடவுளின் வழிபாட்டுக்காக எழுப்பப்பட்ட ஜிக்குரட்தான் பேபல் கோபுரம் என அறியப்பட்டது என்ற கருத்தைச் சில வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கிறார்கள்.
(தொடரும்)