பூமியில் உயிரினங்கள் தோன்றியதற்குக் காரணம் பரிணாம வளர்ச்சி என்று பார்த்தோம். பரிணாம வளர்ச்சி, மரபணுவில் ஏற்படும் தன்னிச்சையான மாற்றத்தால் நிகழக்கூடியது. ஓர் உயிரினத்தில் ஏற்படும் சிறிய சிறிய மாற்றம் பல தலைமுறைகளாகத் தொடரும்போது பெரிய மாற்றமாக, வேறோர் உயிரினமாகவே பரிணமத்துவிடுகிறது என்பதையும் பார்த்தோம்.
இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். தன்னிச்சையாக நடைபெறும் மாற்றம் எப்படி உயிரினங்களைக் கச்சிதமாக உருவாக்கிட முடியும்? பறவைகள் வானில் பறந்துதான் இரை தேட முடியும். அதற்கு ஏற்றாற்போல் எப்படிச் சரியாக இறக்கைகள் கிடைத்தன? மீன்கள் நீரில் வாழ வேண்டும் என்றால் அதற்கு ஏற்றாற்போல் சுவாசிக்கும் உடல் அமைப்பு அவசியம். தன்னிச்சையாக நடைபெற்ற மாற்றத்தில் எப்படி மீன்களுக்கு சரியாக நீருக்குள் சுவாசிக்கும் அமைப்புக் கிடைத்தது? அப்படியென்றால் இந்த மாற்றம் தன்னிச்சையானது இல்லையா? திட்டமிட்டதா? யார் திட்டமிட்டது? மதங்கள் கூறுவதுபோல கடவுள்தான் திட்டமிட்டு உயிரினங்களைப் படைத்தாரா? இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளிடம் இருந்தது. இதற்கான பதிலைத்தான் சார்லஸ் டார்வின் கண்டறிந்தார்.
டார்வினுக்கு முன்னமே லமார்க் என்கிற விஞ்ஞானி உயிரினங்களில் ஏற்படும் மாற்றம் குறித்துத் தன் கருத்தை முன் வைத்தார். உயிரினங்கள் புறச்சூழலுக்கு ஏற்றாற்போல தங்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்கிறது என்றார். உதாரணமாக, ஒட்டகச்சிவிங்கிகள் முதலில் குதிரைகளைப்போலத்தான் இருந்தன. பின்பு உயரமான மரங்களை ஒடித்து உண்ண வேண்டும் என்பதற்காக அவை தங்களுடைய கழுத்தை நீண்டதாக வளர்த்துக்கொண்டன என்றார். வளர்ந்த கழுத்து என்ற பண்பை அடுத்தத் தலைமுறைக்கும் அவை கடத்தியதால் அதன்பின் பிறந்த ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்தும் கால்களும் உயரமாகவே இருந்தன என்றார். அவரது கருத்து அந்த விலங்கே திட்டமிட்டுத் தனக்குத் தேவையான பண்பை உருவாக்குகிறது என்பதுபோல இருந்தது.
விலங்குகளுக்குள் உள்ளூர இருக்கும் மர்மமான ஆற்றல் அவற்றுக்குத் தேவையான மாற்றங்களைத் திட்டமிட்டு செய்கிறது என்றார் லமார்க். ஆனால், அதற்குப் பின் வந்த டார்வினின் கருத்து லமார்க்கின் கருத்தை மறுத்தது. லமார்க் கூறுவதுபோல புறச்சூழலுக்கு ஏதுவான வகையில் விலங்குகள் மாற்றங்களை அடைவதில்லை என்றது. பிறகு எப்படித் தனிச்சிறப்பு வாய்ந்த விலங்குகள் தோன்றின? இதற்குக் காரணம் இயற்கைத் தேர்வு என்று கூறினார். இயற்கைத் தேர்வு என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
பரிணாம வளர்ச்சியின் இரண்டு அம்சங்கள்
இயற்கைத் தேர்வை புரிந்துகொள்ள நாம் பரிணாம வளர்ச்சியின் இரண்டு முக்கிய அம்சங்களைப் பார்க்க வேண்டும். ஒன்று மரபுவழி மாற்றம் (Descent With Modification), மற்றொன்று பொது மரபுவழிக் கொள்கை (Common Descent). மரபுவழி மாற்றம் என்பது உயிரினங்களில் தலைமுறை தலைமுறையாக ஏற்படும் மாற்றம். இந்த மாற்றம் மரபணுக்கள் திரிவதன் (Mutation) மூலம் நடைபெறுகிறது. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல ஒரு பெற்றோரின் மரபணுக்கள் குழந்தைகளுக்குக் கடத்தப்படும்போது அதில் மாற்றங்கள் ஏற்பட்டுச் சில தனித்துவமான பண்புகளைக் குழந்தைகள் பெறுகின்றன. உதாரணமாக உயரம் குறைவான இரண்டு பெற்றோருக்குப் பிறக்கும் ஒரு குழந்தை உயரமானதாக இருக்கும். இதனை நாம் மரபுவழி மாற்றம் என்கிறோம்.
இதேபோல் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின்கீழ் வரும் மற்றொரு விஷயம், பொது மரபுவழிக் கொள்கை. பொது மரபுவழிக் கொள்கை என்பது இந்தப் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பொது மூதாதையர்களின் வழி தோன்றியவை என்பதுதான். ஓர் உயிரினத்தின் அடுத்தடுத்தத் தலைமுறைகளில் ஏற்படும் மரபுவழி மாற்றம், பல தலைமுறைகளாகத் தொடர்ந்து நடைபெறும்போது அவை காலப்போக்கில் தனி உயிரினமாகவே பரிணமிக்கும் நிலையை அடைந்துவிடுகிறது. இப்படியாக முதன்முதலில் தோன்றிய ஒற்றைச் செல் உயிரினங்கள்தான் பல்வேறு சூழல்களில் மாற்றங்கள் அடைந்து இன்று பூமியில் காணப்படும் பலதரப்பட்ட உயிரினங்களாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்கிறது பொது மரபுவழிக் கொள்கை. இதனால் எல்லா உயிர்களும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டவை என்பதுதான் இதன்பொருள்.
மேலே கூறியவற்றில் மரபுவழி மாற்றத்தை நாம் நேரடியாகக் கண்டுணரலாம். பெற்றோரைவிட மாறுபட்ட நிறம், உயரம், குணாதிசயங்கள் கொண்ட குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், பொது மரபுவழிக் கொள்கை என்று அழைக்கப்படும் எல்லா உயிரினங்களும் ஓரே உயிரினத்தில் இருந்துதான் தோன்றியது என்பதை நம்மால் நேரில் பார்த்து உணர முடியாது. காரணம், மனிதர்களின் ஆயுட்காலம் அவ்வளவு பெரிய மாற்றத்தை அவதானிக்கும் வகையில் இல்லை. பரிணாம வளர்ச்சியில் ஒரு விலங்கு மற்றொரு விலங்காகப் பரிணமிப்பதற்கு எடுத்துகொள்ளும் காலத்தைவிட மனித ஆயுட்காலம் குறைந்தது என்பதால் அவற்றை நாம் நேரில் பார்த்துச் சாட்சி சொல்ல முடியாது. நமக்குக் கால இயந்திரமும் கிடையாது என்பதால், கால ஓட்டத்தில் பின்னோக்கி சென்று பொது மரபுவழிக் கொள்கைச் சரிதானா என்று உறுதி செய்வதற்கும் வழியில்லை.
இதனாலேயே பொது மரபுவழிக் கொள்கை என்ற கருத்து, அறிவியல் வளர்ச்சி அடைவதற்கு முந்தைய பண்டைய காலங்களில் இருந்தே சொல்லப்பட்டு வந்தாலும், பெரும்பாலான தத்துவஞானிகளால், விஞ்ஞானிகளால் புறக்கணிக்கப்பட்டே வந்தது. இதற்கு அவர்கள் சொன்ன காரணமும் நியாயமானதாகவே இருந்தது. அது, உயிரினங்களுக்குள் தன்னிச்சையாக நடைபெறும் மாற்றம் எப்படிச் சிக்கலான , ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பை உருவாக்கும் என்பதுதான். உதாரணமாக ஒரு எலி குட்டிகளை ஈன்றால் அவற்றுக்குத் தாய் எலியைவிட சற்றே நீண்ட காதுகள், அதிக ரோமம், கூரான பற்கள் போன்ற மாற்றங்கள்தான் ஏற்படுமே ஒழிய, ஒரு துதிக்கையோ, ஒரு இறக்கையோ ஏற்படாது. (அதாவது ஒரு எலியால் பறவையாகவோ, யானையாகவோ பரிணமிக்க முடியாது என்பதுதான் அவர்களுடைய வாதம்). இதனால் ஆரம்பத்தில் தோன்றிய எளிய ஒற்றைச் செல் உயிர்கள், சிக்கலான அமைப்பைக் கொண்ட பல வகை உயிரினங்களாக எப்படித் தன்னியல்பாகவே பரிணமித்தன என்ற கேள்வி யாராலும் விளக்கப்படாமலேயே இருந்தது. இதற்கான பதிலைத்தான் லமார்க் விளக்க முயன்றார். புறச்சூழலுக்கு ஏற்றவாறு உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொண்டதால் பல உயிர்கள் தோன்றியது என்றார். ஆனால், லமார்க்கின் பதில் போதுமானதாக இல்லை. இந்தச் சூழலில்தான் இயற்கைத் தேர்வு என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி அதற்கான பதிலைச் சார்லஸ் டார்வின் நிறுவினார்.
டார்வினின் கதை
சார்லஸ் டார்வின் 1809 முதல் 1882 வரை வாழ்ந்த இயற்கை விஞ்ஞானி. அவர் தனது ஆய்வின் தொடக்கக் காலத்தில் பீகல் என்ற கப்பலில் பல நாடுகளுக்குப் பயணித்து தாவரங்களையும் விலங்குகளையும் ஆய்வு செய்தார். அவற்றின் பண்புகளை ஆவணப்படுத்தினார். எல்லா உயிரினங்களும் ஒரே உயிரில் இருந்து தோன்றியவை என்ற கருத்தாக்கத்தில் டார்வின் நம்பிக்கையுடன் இருந்தார். அது எப்படிச் சாத்தியம் என்ற தேடலில் ஈடுபட்டிருந்தார். இதற்கான விடை பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கலாபகஸ் தீவுகளில் அவருக்குக் கிடைத்தது.
பீகல் கடல் பயணத்தில் அவர் பல்வேறு தீவுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அங்கே அவர் கண்ட தாவரங்களும் உயிரினங்களும் அந்தப் பகுதிக்கு அருகில் இருந்த கண்டங்களில் காணப்பட்ட உயிரினங்களுடன் ஒற்றுமைகளைக் கொண்டிருப்பதைக் கண்டார். உதாரணமாக, கலாபகஸ் தீவுகளில் இருந்த ஆமைகள் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஆமைகளைவிட வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருந்தன. ஆனால், அருகில் இருந்த தென் அமெரிக்க நில ஆமைகளுடன் பெரும்பான்மையான பண்புகளை ஒத்திருந்தன. ஒரு சில வேற்றுமைகள் மட்டுமே அவற்றின் இடையே இருந்தன. இந்த ஒற்றுமையைப் பொது மரபுவழிக் கொள்கை மூலம் விளக்கலாம் என டார்வின் நம்பினார்.
ஏதோ ஒரு நேரத்தில் தென் அமெரிக்க நிலத்தில் இருந்த ஆமைகள் புயல், வெள்ளம் காரணமாகக் கடலில் அடித்து வரப்பட்டு இந்தத் தீவுகளை அடைந்திருக்க வேண்டும். பின் இந்தப் புதிய நிலத்தில் வாழ முற்படும்போது அவற்றின் அடுத்தடுத்தத் தலைமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, சில ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தச் செயல்பாட்டினால், தென் அமெரிக்க ஆமைகளில் இருந்து கொஞ்சம் வேறுபட்டதாக மாறி இருக்க வேண்டும் எனக் கூறினார். இந்தக் கண்டுபிடிப்பு ஒரு விலங்கு எப்படி வேறொன்றாக பரிணமிக்கிறது என்பதை விளக்கியது.
அத்துடன் கூடுதலாக ஒரு விஷயமும் பிடிப்பட்டது. கலாபகஸ் தீவுகளில் காணப்படும் ஆமைகள், தென் அமெரிக்க நிலங்களில் காணப்படும் ஆமைகளில் இருந்து தன்னிச்சையான சில வேறுபாடுகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. அவை தாங்கள் வாழும் தீவுகளுக்கு ஏற்றாற்போல தங்களைத் தகவமைத்துக் கொண்ட மாற்றங்களையும் பெற்றுள்ளன என்பதை உணர்ந்தார். அதாவது அந்த ஆமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அதன் சுற்றுப்புறங்களுக்கு ஏற்றாற்போல இருந்தது. இது எப்படி நடந்தது என்று ஆராய்ந்தபோதுதான் இயற்கைத் தேர்வின் ரகசியம் வெளிப்பட்டது.
கலபாகோஸ் என்பது 18 தீவுகளின் கூட்டு. அதில் ஒவ்வொரு தீவும் ஆமைகளுக்கு வாழ்விடங்களாக உள்ளன. இதில் பெரிய அளவில் இருக்கும் தீவுகளில் அதிக அளவு புற்களும், தாவரங்களும் காணப்பட்டன. இந்தத் தீவுகளில் வாழ்ந்த ஆமைகளோ கனமான ஓடுகளைக் கொண்டிருந்தன. அவற்றின் கால்கள் குட்டையாகவும், கழுத்து சிறியதாகவும் இருந்தது. கலாபகஸில் சின்னஞ்சிறிய தீவுகளும் இருந்தன. அந்தத் தீவுகளிலும் ஆமைகள் இருந்தன. ஆனால் அவற்றின் ஓடு பெரிய தீவுகளில் இருந்த ஆமைகளைப்போல கணமானதாக இல்லை. அவற்றின் கழுத்தும், முன்னங்கால்களும் பெரிய தீவுகளின் ஆமைகளை விட நீண்டதாக இருந்தன.
இது ஏன் என்று ஆராய்ந்தபோது, அவை வாழ்ந்த புறச்சூழலுக்கு ஏற்றவாறு இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று தெரிய வந்தது. அதாவது, சிறிய தீவுகளில் மிகக் குறைந்த அளவு புற்களே காணப்பட்டன. உயரமான கள்ளிச்செடி வகைகளே அதிகம் இருந்தன. அந்த உயரமான செடிகளைச் சாப்பிட வேண்டும் என்றால் ஆமைகள் உயரமாக இருக்க வேண்டும். ஆச்சரியமூட்டும் வகையில் அதற்கு ஏற்றாற்போலவே அவற்றின் கழுத்தும் முன்னங்கால்களும் நீட்டமாகவும் ஓடுகள் லேசாகவும் இருந்தன. இதைக் கவனித்தபோதுதான் அந்தத் தீவுகளுக்கு ஏற்றாற்போல் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் நிகழ்கிறது என்று புரிந்தது.
ஆனாலும் இன்னும் ஒரு கேள்வி மிச்சமிருந்தது. இந்தத் தனித்துவமான மாற்றம் புறச்சூழலுக்கு ஏற்ற வகையில் எப்படி நடைபெற்றிருக்க முடியும்? தனிச்சையாக நடைபெறும் மரபுவழி மாற்றத்தினால் மட்டும் இதுபோன்ற தனிச்சிறப்பான உருவாக்கம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லைதானே? ஒருவேளை லமார்க் சொன்னதுபோல உயிரினங்களுக்குள் உள்ளூர இருக்கும் ஆற்றல் ஒன்று புறச்சூழலுக்கு ஏற்ற வகையில் ஆமைகளை மாற்றி அமைத்திருக்குமா? நிச்சயமாக இருக்காது. இதற்குப் பின் வேறு ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று டார்வின் யோசித்தார். அதற்கான விடையைத்தான் இயற்கைத் தேர்வு எனக் கண்டடைந்தார்.
(தொடரும்)