Skip to content
Home » உயிர் #19 – ஹெச்ஐவி வைரஸின் உதயம்

உயிர் #19 – ஹெச்ஐவி வைரஸின் உதயம்

ஹெச்ஐவி வைரஸ்

அடுத்ததாக மருத்துவ உலகில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு எப்படி மிகப்பெரிய மர்மத்தை விளக்குவதற்குப் பயன்பட்டது எனப் பார்க்கலாம். எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி வைரஸ் பற்றி நமக்குத் தெரியும். அது எப்படித் தோன்றியது என்பது சில ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் இருந்தது. அந்த மர்மத்தைத்தான் பரிணாமவளர்ச்சிக் கோட்பாடு கண்டறிந்து சொன்னது.

உயிர்களைக் கொல்லும் ஹெச்ஐவி வைரஸ் 1980ஆம் ஆண்டுத் தொடக்கத்தில்தான் திடீரெனப் பரவியது. அமெரிக்காவில் பரவத் தொடங்கிய அந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் திணறியது. யார் இதைப் பரப்பியிருப்பார்கள் என்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில், ஹெச்ஐவியின் பரவலுக்கு ஒரே ஒரு நபர்தான் காரணம் எனச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்மீது ஒட்டுமொத்த மனிதக் குலத்தின் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

முதன்முதலில் ஹெச்ஐவி கண்டறியப்பட்ட அந்த நபர் பிரான்ஸ்-கனடா நாட்டைச் சேர்ந்த விமானப் பணியாளர். அதனால் அவரிடம் இருந்துதான் அந்த நோய் உருவானதாகச் சொல்லப்பட்டது. அந்த நபர் மனித குலத்தையே அழிக்க முயற்சி செய்திருக்கிறார் என வழக்கம்போல அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உயிரியல் ஆய்வாளர்கள் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றை மறுத்தனர். ஒரே ஒரு நபர்தான் உண்மையில் ஹெச்ஐவியின் தோற்றத்துக்குக் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. அதுமட்டுமில்லாமல் அவர்தான் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட முதல்நபர் என்று எப்படி ஊர்ஜிதப்படுத்த முடியும்? வேறு யாராவது இந்த வைரஸின் பரவலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் இல்லையா என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினர்.

தங்களுடைய சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக, அந்த வைரஸின் உண்மையான தோற்றத்தைக் கண்டறிய ஆய்வுகளைத் தொடங்கினர். இங்கேயும் அவர்களுக்கு டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடுதான் கை கொடுத்தது. டார்வினின் கருத்துப்படி இந்தப் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. தனியாக ஓர் உயிர் தோன்றியிருக்க முடியாது. அதனால் இந்த வைரஸும் திடீரென்று ஒருநாள் வானத்தில் இருந்து வந்து குதித்திருக்காது. அதனால் அந்த வைரஸ் எப்படித் தோன்றியது என அறிய தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

விஞ்ஞானிகள், முதற்கட்டமாக அமெரிக்காவில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட பல்வேறு நோயாளிகளிடம் இருந்து மாதிரிகளைச் சேகரிக்கத் தொடங்கினர். அவை அனைத்தும் ஹெச்ஐவியின் திரிபுகள் எனத் தெரிய வந்தன. அதாவது ஹெச்ஐவி ஒவ்வொரு நபராகப் பரவும்போதும் சிறிது, சிறிதாக மாறுதலை அடைந்துள்ளது எனக் கண்டறியப்பட்டது. (கொரோனா வைரஸ் டெல்டா, ஒமிக்ரான் எனத் திரிந்துபோல்). அடுத்ததாக இவ்வாறு கண்டறியப்பட்ட அத்தனை ஹெச்ஐவி வைரஸ் திரிபுகளின் மரபணுக் குறியீடுகளையும் ஆய்வு செய்தனர். இதன் முடிவுகளை வைத்து அந்த வைரஸின் பரிணாம வளர்ச்சி வரைபடத்தை வரைந்தனர்.

பரிணாம வளர்ச்சி வரைபடம் என்பது ஒவ்வோர் உயிரினமும் மற்ற உயிரினத்துடன் மரபணு ரீதியாக எப்படி ஒன்றோடொன்று தொடர்புபடுகிறது, வேறுபடுகிறது என்பதை அறிய உதவும் வரைபடமாகும். இதன்மூலம் ஓர் உயிரினம் எந்த உயிரினத்திலிருந்து, எப்படி மாறி வந்திருக்க முடியும் என்பதை நாம் எளிதாக அறியலாம். (அதாவது ஓர் உயிரினத்தின் தோற்றம் நமக்குப் புலப்படும்). இப்படியாக ஹெச்ஐவி வைரஸின் மரபணு வித்தியாசங்களை இணைத்து அவற்றின் தோற்றத்தைக் கண்டறிய முயன்றனர்.

பரிணாம வளர்ச்சி வரைபடத்தை வைத்து ஒவ்வொரு ஹெச்ஐவி வைரஸ் திரிபுக்கும் இடையேயான மரபணு வேறுபாட்டை முதலில் கண்டறிந்தனர். ஒரு திரிபு இன்னொரு திரிபாக மாற்றம் அடைவதற்கு எத்தனைக் காலம் எடுத்துக்கொள்கிறது? இந்தத் திரிபுகள் தோன்றிய காலவரிசை என்ன என ஆராய்ந்தனர். இதை வைத்துப் பார்த்தபோது இந்தத் திரிபுகள் எல்லாம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த வைரஸ் 1966ஆம் ஆண்டு தோன்றி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதன்மூலம் அந்த விமானப் பணியாளர் பாதிக்கப்படுவதற்கு முன்பே அமெரிக்காவில் ஹெச்ஐவியின் திரிபுகள் இருந்துள்ளது தெரியவந்தது. இப்படியாக அந்த விமானப் பணியாளர் மீது இருந்த குற்றச்சாட்டு நீக்கப்பட்டது.

ஆனால், இங்கே இன்னொரு சிக்கலும் இருந்தது. இந்த வைரஸ் திரிபுகளின் மரபணு வேறுபாடுகளை வரைபடம்மூலம் இணைக்க முயன்றபோது சில திரிபுகளுக்கு இடையே விடப்பட்ட கண்ணிகள் இருந்தன. அதாவது ஒரு திரிபு இன்னொரு திரிபாக மாறியதற்கு இடையில் வேறு சில திரிபுகளாகவும் இருந்துள்ளன. ஆனால் அவற்றின் மாதிரிகள் கிடைக்கவில்லை. பரிணாம மாற்றங்கள் என்பது மரம் போன்றது என்று பார்த்தோம் இல்லையா? ஓர் உயிர் இன்னொரு உயிரில் இருந்து எப்படி வேறுபட்டுப் பிரிகிறது, எங்கு இணைகிறது என்பது சரியாகப் பொருந்தவேண்டும். இரண்டு உயிர்களுக்கு இடையில் ஒற்றுமை கண்டறியப்படவில்லை என்றால், அவற்றுக்கு இடையில் இரண்டையும் இணைக்கும் ஓர் உயிர் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படைப் புரிதல். இந்த வகையில் பார்க்கும்போதுதான் சில திரிபுகளுக்கு இடையே விடப்பட்ட வைரஸ் திரிபுகள் இருந்துள்ளது தெரிய வந்தது. அந்தத் திரிபுகளைக் கண்டடைந்தால் ஹெச்ஐவியின் தோற்றத்தைக் கண்டறிந்துவிடலாம் என விஞ்ஞானிகள் தேடத் தொடங்கினர்.

உயிரியலாளர்கள் உலகம் முழுவதும் பயணித்து மனிதர்களை, விலங்குகளைத் தாக்கும் வைரஸ் மாதிரிகளை எல்லாம் சேகரித்தனர். அப்போது அமெரிக்காவைத் தாண்டியும் பல நாடுகளில் ஹெச்ஐவி வைரஸின் திரிபுகள் இருப்பது கண்டறியப்பட்டது. சில விநோத காரணங்களுக்காக இறந்த மனிதர்களின் உடலில் இருந்து மருத்துவர்கள் சேகரித்து வைத்திருந்த திசுக்களின் மாதிரிகளையும்கூட விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் ஹெச்ஐவி வைரஸின் தொடக்கக்கால திரிபுகளும் கண்டறியப்பட்டன. இந்த மாதிரிகள் ஹெச்ஐவி மரபணு வரைபடத்தில் விடுபட்டுப்போன பிரிவுகளை இணைக்கத் தொடங்கின.

தொடர்ச்சியான ஆய்வில், ஹெச்ஐவியைப் போன்ற வைரஸ் ஒன்று குரங்குகள், சிம்பன்சிகள், கொரில்லாக்களுக்கு இடையே பரவி இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த வைரஸ்கள் மனிதர்களைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் இந்த வைரஸ்களையும் அந்த வரைபடத்தில் இணைத்தனர். குரங்குகளைப் பாதிக்கும் ஹெச்ஐவி போன்ற வைரஸின் மரபணுவையும், மனிதர்களிடம் பரவும் ஹெச்ஐவி வைரஸின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டையும் இணைக்கும் ஓர் இணைப்பு மட்டும் விடுபட்டிருந்தது. அந்த இணைப்பும் மத்திய ஆப்ரிக்காவில் தற்செயலாகப் பிடிபட்ட்து.

பீட்ரைஸ் ஹான் என்ற மருத்துவர், நோயால் பாதிக்கப்பட்ட மத்திய ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் சிம்பன்சி குரங்குகளின் கழிவுகளை ஆராய்ந்துகொண்டிருந்தார். அப்போது அவற்றில் ஒரு வைரஸைக் கண்டறிந்தார். அந்த வைரஸை ஆராய்ந்தபோது அது ஆப்ரிக்காவில் மனிதர்களிடம் காணப்பட்ட ஹெச்ஐவி வைரஸ் திரிபுகளை ஒத்திருந்தது. அதன் மரபணு அமைப்பை மற்ற வைரஸ் திரிபுகளின் மரபணு அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது அந்த வைரஸ்தான் மாற்றம் அடைந்து மனிதர்களை முதன்முதலில் தாக்கியுள்ளது என்று உறுதியானது. இதன்மூலம் அந்த வைரஸ்தான் ஹெச்.ஐ.வியின் மூதாதையர் என்றும், அது ஆப்ரிக்காவில் பரவியதில் இருந்துதான் ஹெச்.ஐ.வி பாதிப்பு தொடங்குகிறது என்பதும் நிரூபணமானது.

மத்திய ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டில் தென்கிழக்குப் பகுதிகளில் சிம்பன்சிக் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் குழு இருக்கின்றனர். அவர்கள் குரங்குகளின் இறைச்சியைக் கையாளும்போது, அதன் ரத்தத்தில் இருந்த வைரஸ் மனிதர்களின் உடலில் உள்ள காயத்தில் நுழைந்து, அதன் வழியாக அவர்களுக்குப் பரவியிருக்கிறது. இப்படியே ஆப்பிரிக்காவில் பலருக்கும் பரவி, பின் அமெரிக்காவிலிருந்த அந்த பிரெஞ்சு-கனடா அப்பாவி விமான பணியாளரையும் தாக்கியுள்ளது. இப்படித்தான் அந்த வைரஸ் மனிதர்களைத் இரக்கமில்லாமல் கொன்று குவிக்கும் நிலையை அடைந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதன்மூலம் அந்த வைரஸ் 1980களின் தொடக்கத்தில் பரவவில்லை, மாறாக 1900களிலேயே சிம்பன்சி குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிட்டது என்பதையும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். இப்படியாக ஹெச்ஐவி வைரஸின் புதிருக்கு விடை கிடைத்தது.

இந்தச் சம்பவத்தின் மூலம் டார்வின் கோட்பாடு எப்படி ஒரு நோயின் தோற்றத்தைக் கண்டறிய உதவியது என்று புரிந்துகொள்ளலாம். இந்தப் புரிதலை அடிப்படையாக வைத்துதான் இன்று திடீரென தாக்கும் புதிய வைரஸ் நோய்களின் தோற்றத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்து, அவற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளை உருவாக்குகின்றனர். அடுத்த எடுத்துக்காட்டில் டார்வின் கோட்பாடு எப்படிச் சுற்றுச்சூழலைக் காப்பதற்குப் பயன்பட்டது, இனியும் பயன்படப்போகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *