வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய வேண்டும். அதுவே மரபான அறிமுக முறை. இரண்டாவது, கேள்விகளை எழுப்புவதுதான் வரலாற்றின் அடிப்படையான குறிக்கோள். விடைகள் கிடைப்பது அரிது அல்லது கிடைக்காமலே இருப்பதுதான் இயல்பு என்று தெரிந்தும் வரலாறு புதிய கேள்விகளை எழுப்புவதை நிறுத்திக்கொள்வதில்லை. எனவே நாமும் கேட்கலாம். வரலாறு என்றால் என்ன?
இக்கேள்விக்குப் பலவிதமான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. சிலவற்றை மட்டும் பார்வையிடுவோம். இது எவ்வாறு நிகழ்ந்தது என்னும் கேள்வியை நீங்கள் எழுப்பும்போது கிடைக்கத் தொடங்கும் விடைகள்தான் வரலாறு என்கிறார் அர்னால்ட் டாய்ன்பி. நாகரிகமடைந்த மனிதர்களின் கடந்தகாலச் சிந்தனைகளும் செயல்பாடுகளும்தான் வரலாறு என்கிறார் வில் டியூரன்ட். நிகழ்காலத்தைக் கடந்த காலத்தோடு அர்த்தமுள்ள வகையில் இணைத்துத் தெளிவாக விளக்கும் துறையே வரலாறு என்கிறார் ஈ.ஹெச். கார். பல்வேறு நிகழ்வுகள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதையும் சிந்தனைகள் எவ்வாறு வளர்ச்சியடைகின்றன என்பதையும் விவரிப்பதே வரலாறு என்கிறார் ஈ.ஜே. ராப்சன். குறிப்பிட்ட ஒரு காலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பொரு காலத்தில் நிகழ்ந்தவற்றில் தகுதியானவை என்று கருதுபவற்றைப் பதிவு செய்வதன் பெயர்தான் வரலாறு என்கிறார் ஜேக்கப் பர்க்ஹார்ட்.
வரலாறு எனக்குக் கற்றுக்கொடுத்ததெல்லாம் ஒன்றுதான். மனித குலம் மாறவேயில்லை. பழைய நடிகர்கள் மறைந்து, புதியவர்கள் தோன்றிக்கொண்டிருக்கிறார்களே தவிர, திரைக்கதை என்னவோ ஒன்றுதான் என்கிறார் ரிச்சர்ட் எவான்ஸ்.
இறந்தகாலத்தை நாம் ஏன் திரும்பிப் பார்க்கவேண்டும்? நிகழ்காலப் பிரச்சினைகளை விட்டுவிட்டு ஏன் கற்காலம், இரும்புக் காலம், மௌரியர் வரலாறு, கிரேக்க வரலாறு என்று நேரம் கழிக்கவேண்டும்? மண்ணில் புதைந்திருக்கும் கற்கோடரி எவ்வளவு பழையது, தூணிலும் பாறையிலும் அசோகர் என்ன பொறித்து வைத்திருக்கிறார், குகை ஓவியங்களில் காணப்படும் வண்ணம் எங்கிருந்து வந்திருக்கும், எகிப்திய மம்மியின் ஆடை எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று தொடங்கி ஒவ்வொரு காலகட்டம் குறித்தும் ஒவ்வொரு நிகழ்வு குறித்தும் கிடைக்கும் ஒவ்வொரு சிறு சான்று குறித்தும் எழுப்பப்படும் எண்ணற்ற கேள்விகளால் யாருக்கு, என்ன பலன்?
நம் காலத்தின் வேர் கடந்த காலத்தில் புதைந்திருக்கிறது. கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ளாமல் நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. அதனால்தான் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று ஒரு துப்பறிவாளர் போல் வரலாற்றை ஆராய வேண்டியிருக்கிறது என்கிறார் ஜவாஹர்லால் நேரு. வரலாற்றுக்கு அவர் அளிக்கும் விளக்கம் இது. இயற்கை, இயற்கைச் சக்திகள், விலங்குகள், காடுகள், அழுத்திச் சுரண்டும் சக மனிதர்கள் ஆகியோருக்கு எதிராக மனிதன் காலம் காலமாக மேற்கொண்டுவரும் போராட்டத்தின் கதைதான் வரலாறு.
மனிதர்கள் தங்கள் சொந்த வரலாற்றை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால் தாங்கள் விரும்பிய வண்ணம், விரும்பித் தேர்ந்தெடுத்த சூழலில் அதை உருவாக்கிக்கொள்ளமுடியாது. கடந்தகாலம் நமக்களித்த, ஏற்கெனவே நிலவிவரும் சூழல்களில்தான் வரலாறு உருவாகிறது என்கிறார் கார்ல் மார்க்ஸ். அவரைப் பொருத்தவரை கடந்த காலம் என்பது இறந்து, மறைந்துவிட்ட காலமல்ல. கடந்த தலைமுறைகளின் மரபுகளை நாம் இன்னமும் சுமந்து கொண்டிருக்கிறோம். ஒரு கொடுங்கனவாக அந்த நினைவுகள் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கின்றன என்கிறார் மார்க்ஸ். இறந்த காலம் என்றொன்று கிடையாது; வரலாறு நம்மிடையே உயிர்த்திருக்கிறது என்பதுதான் டி.டி. கோசாம்பியின் கருத்தும்.
வரலாறு ஒரு பலனற்ற, பணமற்ற துறை; எனவே தேவையற்றது என்று கருதுபவர்களுக்கும் பஞ்சமில்லை. வகுப்பறைமூலமே வரலாறு ஒருவருக்கு அறிமுகமாகிறது என்பதால் ஆசிரியரின் குறைகளும் குற்றங்களும் வரலாற்றின் குறைகளாகவும் குற்றங்களாகவும் மாறி நிற்பதைப் பார்க்கிறோம். மூச்சுமுட்டச் செய்யும் அளவுக்குத் தேதிகளையும் பெயர்களையும் அறிமுகமற்ற இடங்களையும் மாணவர்கள்மீது கொட்டிக் கவிழ்த்து, வரலாறு என்றாலே தெரித்து ஓடக்கூடிய அளவுக்கு அவர்களை மாற்றி வைத்திருப்பதில் ஆசிரியர்களுக்கும் அவர்கள் கையில் ஏந்தியிருக்கும் பாடப்புத்தகங்களுக்கும் பங்கு இருப்பதை ஒருவராலும் மறுக்கமுடியாது. இவற்றையெல்லாம் கடந்து வரலாற்றை ஒரு விருப்பத் துறையாகத் தேர்ந்தெடுத்து, கற்று, பட்டம் பெற்று வெளிவரும் ஒரு மாணவருக்கு இன்றைய பொருளாதாரக் கட்டமைப்பு எதை அளிக்கிறது என்று கேட்டால் ஏமாற்றத்தைத் தவிர எதையும் அளிப்பதில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நம் வாழ்வோடும் வாழ்வியல் சிக்கல்களோடும் எந்த வகையிலும் தொடர்பற்று அருங்காட்சியகக் காட்சிப்பொருள்போல் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைந்து கிடக்கிறது வரலாறு. பலன் கருதாது அறிவுத் தேடலில் ஈடுபடுவோர்கூட ஒரு கட்டத்தில் ஓய்ந்து விடுகின்றனர். தேடல் விரிவடைய, விரிவடையத் தெளிவின்மையும் குழப்பமும் இருளும்தான் கிடைக்கும் என்றால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஆர்வத்தை நீட்டித்துக்கொண்டே போகமுடியும்?
வரலாற்றின்மீதான அவநம்பிக்கைக்கும் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. வரலாற்றைவிடவும் கவிதை தத்துவார்த்தமானது, தீவிரமானது என்கிறார் அரிஸ்டாட்டில். உண்மையைக் கண்டறிவதுதான் வரலாற்றின் நோக்கம் என்பதை புளூடார்க் நம்பத் தயாராக இல்லை. வரலாறு என்பது இறந்தவர்கள்மீது மேற்கொள்ளப்படும் தந்திரங்கள் என்கிறார் வால்டேர். ஜேன் ஆஸ்டின் வரலாற்றின்மீது வைக்கும் விமரிசனங்கள் பல இன்றும் பொருந்தக்கூடியவை. அவருடைய நாவலொன்றில் இடம்பெறும் வரிகள்தான் என்றாலும் அவற்றை அவருடைய கருத்தாகவே கொள்வதற்கு இடமிருக்கிறது. ‘உங்கள் புனித வரலாறுமீது எனக்கு ஆர்வமில்லை. ஆர்வம் கொள்ளவும் முடியாது. கடனே என்று சிலவற்றைப் படித்திருக்கிறேன். என்னைக் கோபமுறச் செய்யாத, சலிப்படையச் செய்யாத எதையும் வரலாற்றில் நான் கண்டதில்லை. போப்பாண்டவர்களுக்கும் அரசர்களுக்குமான மோதல்கள், போர்கள், கொள்ளை நோய்கள்… ஒவ்வொரு பக்கத்திலும் இவைதான் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் உபயோகமில்லாத ஆண்களைக் காண்கிறேன். பெண்கள்? பெரும்பாலும் காண இயவில்லை. மிகவும் சோர்வாக இருக்கிறது.’
என்ன பெரிய எகிப்திய நாகரிகம்? என்ன பெரிய பிரமிட்? நைல் நதியில் எறிய வேண்டிய ஒரு சடலத்துக்குப் பிரமாண்டமான ஒரு கல்லறை தேவையா? அதைக் கட்டுவதற்கு இவ்வளவு பேர் திரண்டு வந்து பணியாற்றி, உயிரைக் கொடுக்கவேண்டுமா? என்ன பெரிய வரலாறு என்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறார் ஹென்றி டேவிட் தொரோ.
0
வரலாறு கடவுளும் அல்ல, சாத்தானும் அல்ல. அதை ஓர் அருமருந்தாகவும் கருதவேண்டியதில்லை, கொடுஞ்சாபமாகக் கருதி அஞ்சவேண்டியதும் இல்லை. அது மனிதர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சமூக அறிவியல் துறை. மாசு மருவற்ற மனிதன் எப்படி இல்லையோ அப்படியே மாசு மருவற்ற வரலாறும் இல்லை.
வரலாறு என்பதைவிட, யாருடைய வரலாறு என்பது முக்கியம் என்கிறார் மால்கம் எக்ஸ். ‘நம் ஆற்றலை நாம் பயன்படுத்தவேண்டும். நம் வரலாற்றின்மீது நாம் பெருமை கொள்ளவேண்டும். நம் பண்பாட்டை நாம் வெளிப்படுத்தவேண்டும். நாம் என்பதில் பெருமை கொள்ளவேண்டும். அப்போதுதான் நம் வரலாறு உருவாகத் தொடங்கும்.‘ அவருக்கு மட்டுமல்ல பலருக்கு வரலாறு ஓர் அரசியல் கருவியாக இருந்திருக்கிறது. இன்றும் இருந்துவருகிறது. ஆனால் வரலாற்றின் பணி நம் பெருமிதங்களை மீட்டெடுப்பதோ நம் மரபுகளை வலுப்படுத்துவதோ அல்ல. அதன் ஆழத்தையும் அகலத்தையும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது இதை உணரமுடியும்.
வரலாற்றாளர்கள் கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்கிறார்கள் என்னும் வாதத்தை ஆர்தர் மார்விக் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த காலத்தை எப்படி நம்மால் மறுகட்டுமானம் செய்யமுடியும்? கடந்த காலம் மறைந்துவிட்டது. அதற்கு உயிரூட்டும் ஆற்றல் ஒருவருக்கும் கிடையாது. ஒரு வரலாற்றாளரால் செய்யமுடிந்ததெல்லாம் கடந்த காலம் குறித்த அறிவை உருவாக்குவது மட்டுமே. அந்த வரலாற்றாளர் எத்தகையவர், அவர் படைப்பு எத்தகையது என்பதைப் பொருத்து அவர் உருவாக்கி, அளிக்கும் அறிவின் தன்மை அமையும். இந்த வாதத்தைக் கொண்டு பார்த்தால் வரலாறு என்பது கடந்த காலம் குறித்து வரலாற்றாளர்கள் திரட்டியிருக்கும் அறிவின் தொகுப்பு என்று கொள்ளமுடியும். அந்த அறிவு எவ்வாறு திரட்டப்பட்டது, எவ்வாறு பரப்பப்பட்டது என்பதும் வரலாறுதான்.
கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அழுத்தமான தொடர்பு இருக்கிறது என்றாலும் நாம் தற்சமயம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் யாவற்றையும் வரலாறு தீர்த்துவிடும் என்று எளிமைப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஒன்று நிச்சயம். கடந்த காலம் குறித்த அறிவு இல்லாமல் நிகழ்காலச் சிக்கல்களை நம்மால் அணுகக்கூட முடியாது.
அடிக்கடிச் சொல்லப்படுவதுபோல் வரலாறு திரும்புவதில்லை. கடந்த காலத்தில் என்ன நடந்ததோ அதுவேதான் இப்போதும் நடக்கிறது என்று வாதிட முடியாது. சாயல் இருக்கலாம். ஒப்பீடுகள் செய்துகொள்ளலாம். வரலாறு ஓர் உயிரி அல்ல என்பதால் மீண்டும் தன்னையே நிகழ்த்திக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை. ஒரு நிகழ்வை இன்று நாம் திரும்பிப் பார்க்கும்போது ஒரு பொருளும் நாளை பார்க்கும்போது வேறொரு பொருளும் நமக்குக் கிடைக்கலாம். அதே நிகழ்வுதான் என்றாலும் பொருள் மாறுவதற்குக் காரணம் நாம். நாம் அளிக்காவிட்டால், நாம் உணராவிட்டால் கடந்த காலத்துக்குப் பொருள் இல்லை. ரொமிலா தாப்பரின் பார்வையும் இதுதான்.
கடந்த காலம் உன்னதமானது, தூய்மையானது, சிக்கல்களற்றது என்றெல்லாம் நாம் சொல்லும்போது நாம் நம் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கடந்த காலத்தின்மீது ஏற்றி, மகிமைப்படுத்துகிறோம். உன்னதமான, தூய்மையான, சிக்கல்களற்ற காலம் என்றொன்று எப்போதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எந்தப் பேரரசின் கீழும் – அவர் எவ்வளவு அற்புதமானவராக இருந்தாலும் — அப்படியொரு சமூகம் நிலவியதில்லை. இருந்தும் அப்படியொரு கனவோடு நாம் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதற்குக் காரணம் கடந்த காலமல்ல, நிகழ்காலம். இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சூழலே அத்தகைய ஏக்கங்களை நமக்கு ஏற்படுத்துகிறது. வரலாற்றாளர்கள் கடந்த காலத்தை இப்படி உணர்வுப்பூர்வமாக அணுகுவதில்லை.
வரலாற்றைக் காலம்தோறும் ஏற்படும் படிப்படியான வளர்ச்சிக் கட்டங்களாகவும் அணுகத் தேவையில்லை. பழங்குடிச் சமூகத்திலிருந்து இன்றைய நவீன அறிவியல், தொழில்நுட்பக் காலத்துக்கு நாம் வந்து சேர்ந்த கதையாக வரலாற்றைக் குறுக்கமுடியாது. எல்லாக் காலங்களிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எல்லாக் காலங்களிலும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. காலத்துக்கு ஏற்ப எல்லாக் காலங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி நடைபெற்றிருக்கிறது. எல்லாக் காலங்களும் பிழைகளை, குற்றங்களை, சறுக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றன. வீழ்ச்சி, வளர்ச்சி என்று ஒரேயொரு அம்சத்தை மட்டும் கொண்டு வரலாறு இயங்குவதில்லை.
ஏன் வரலாறு? வரலாற்றால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு ஆர்தர் மார்விக் அளிக்கும் பதில் கேள்வி இது. கடந்த காலம் குறித்து எதுவும் தெரியாத ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சமூகம் எப்படி இயங்கும் என்று யோசித்துப் பாருங்கள். வரலாறு என்ன செய்யும் என்பது புரியும்.
0
வரலாறு எனும் துறை எப்படி, எங்கே தோன்றியது? தோற்றுவித்தவர்கள் யார்? அது எப்படி வளர்ந்து இன்றுள்ள நிலையை அடைந்தது? வரலாற்றாளர் என்பவர் யார்? அவர் எவ்வாறு இயங்குகிறார்? அவர் எத்தகைய கருவிகளைக் கையாள்கிறார்? வரலாறு எப்படி எழுதப்படுகிறது? உண்மையைக் கண்டறிவது வரலாற்றின் பணி அல்ல என்றால் அதன் பணிதான் என்ன? வரலாற்றுக்கென்று தனித்த குறிக்கோள் ஏதேனும் இருக்கிறதா? வரலாறு மேற்கத்தியக் கண்டுபிடிப்பா? வரலாறு ஏன் ஒரு போராட்டக்களமாகத் திகழ்கிறது? கடந்த காலத்தை ஏன் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்? அதற்கு முன்னால், தெரிந்துகொள்வது சாத்தியம்தானா? பார்ப்போம்.
(தொடரும்)