கிரேக்க வரலாற்றெழுதியலை நாம் வந்தடையும்போது கடவுள் நம்மைவிட்டு வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகிறார். அற்புதங்களும் மாயங்களும் குறைந்து மனிதச் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. அச்செயல்களுக்கு அற்புத சக்திகள் அல்ல, மனிதர்களே காரணம் எனும் புரிதலையும் வரலாறு வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறது.
தேல்ஸ், அனாக்சிமேன்டர், அனாக்சிமினிஸ் ஆகிய சிந்தனையாளர்கள் பிரபஞ்சத்தின் அடிப்படை இயல்புகளைக் கண்டறிவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். பின்னர் வந்த டெமாக்ரிடஸ், எபிகியூரஸ் இருவரும் அணுக்கொள்கையை முன்வைத்தவர்கள். கடவுளோ அசாதாரண சக்திகளோ அல்ல இயற்கை விதிகளே இவர்களைக் கவர்ந்தன. இந்தப் போக்கு வரலாற்றிலும் பிரதிபலித்தது. கடந்த காலம் குறித்த ‘உண்மையான’ அறிவைத் தேடவேண்டும் எனும் துடிதுடிப்பு வரலாற்றுக்கு தோன்றியது. உண்மை என்று நான் கருதுவதை மட்டுமே எழுதுவேன் என்றார் மிலிடஸைச் சேர்ந்த ஹெகாடியஸ் (பொஆமு 5ஆம் நூற்றாண்டு). கதைகளைப் பிரித்தெடுத்து உண்மையை நாடவேண்டிய அவசியத்தை இவர் வலியுறுத்தினார். கடவுள் மனிதனைப் படைக்கவில்லை; மனிதன்தான் கடவுளைப் படைத்தான் என்றார் ஜெனோஃபேன்ஸ். அறிவியல் நோக்கும் தத்துவத் தேடலும் வரலாற்றிலும் பிரதிபலித்தது.
வரலாறு எழுதப்படும் முறையை வெகுவாக மாற்றியமைத்தவர், ஹெரோடோட்டஸ். பொஆமு 5ஆம் நூற்றாண்டில் ஆசியா மைனரில் (இன்றைய துருக்கி) பிறந்தவர், ஏதென்ஸில் வாழ்ந்தவர். ஒன்பது பகுதிகள் கொண்ட இவருடைய வரலாறுகள் (The Histories) கிரேக்கத்துக்கும் பாரசீகத்துக்கும் இடையிலான போர் குறித்த முக்கியமான பதிவாக இன்றும் கொண்டாடப்படுகிறது. இரண்டு காலகட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார் ஹெரோடோட்டஸ். பாரசீகப் பேரரசின் வளர்ச்சி, விரிவாக்கம்; கிரேக்க நகரங்களான ஏதென்ஸ், ஸ்பார்ட்டாவின் வளர்ச்சி இரண்டையும் முதல் பகுதி பேசுகிறது. இரண்டாவது பகுதி போர்களை விவரிக்கிறது. என்ன நடந்தது என்பதோ டு நிறுத்திக்கொள்ளாமல் இரு நாடுகளும் போரிடவேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வியையும் எழுப்பி காரணங்களைத் தேடுகிறார் ஹெரோடோட்டஸ்.
காதில் விழுந்தது, கண்ணால் கண்டது இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட முதல் பெரும் வரலாற்று நூல் இது. கேள்விப்பட்டதற்கு அதற்குரிய முக்கியத்துவத்தையும் தானே கண்டவற்றுக்கு மேலதிக முக்கியத்துவத்தையும் அளிப்பதன்மூலம் எத்தகைய தரவுகளுக்கு நம்பகத்தன்மை அதிகம் என்பதை ஹெரோடோட்டஸ் உணர்த்திவிடுகிறார். போர் நடைபெற்ற பல இடங்களை நேரில் சென்று பார்வையிடுகிறார். எழுதப்பட்ட தரவுகள் கிடையாது என்பதால் மக்களின் நினைவுகளைப் பயன்படுத்திக்கொள்கிறார். நினைவுகள் நிலையானவையல்ல என்பது அவருக்குத் தெரியும். எனவே காதில் வந்து விழும் அனைத்தையும் அல்லாமல், கிடைக்கும் தரவுகளை ஆராய்ந்து, மதிப்பை உறுதி செய்த பிறகு இணைக்கிறார். வாய்வழி மரபைப் பெரும்பாலும் பகுத்தாய்ந்து பயன் கொள்ளும் ஆய்வுமுறை அவருடையது.
போரில் பங்கேற்ற கிரேக்கர்கள், பாரசீகர்கள் (காட்டுமிராண்டிகள் என்றே அழைக்கப்படுகின்றனர்) இரு தரப்பினரின் புகழும் நிலைத்திருக்கவேண்டும் என்பதற்காக இந்நூல் எழுதப்படுகிறது என்று தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறார் ஹெரோடோட்டஸ். தனது நாடு என்பதால் கிரேக்கத்தை உயர்த்துவது, எதிரி நாடு என்பதால் பாரசீகத்தைத் தாழ்த்துவது இரண்டையும் அவரிடம் காணமுடியவில்லை. கிரேக்கத் தரப்பின் குறைபாடுகளை மட்டுமல்ல பாரசீக வீரர்களின் சிறப்புகளையும் தனித்துவத்தையும்கூட அவரால் வெளிப்படையாக விவாதிக்க முடிகிறது. இரு சமூகங்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், பண்பாடு ஆகியற்றை இயன்றவரை கவனம் கொடுத்துப் பதிவு செய்திருப்பதால் வரலாற்றாளர்கள் மட்டுமின்றி இனவரைவியல், புவியியல் துறைகளைச் சார்ந்தோரும் ஹெரோடோட்டஸைத் தங்கள் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதுகின்றனர். இவ்வளவு பரந்து விரிந்த தளத்தில் ஒரு வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறை.
இன்றுள்ள விரிந்த பொருளில் அல்லாமல் தேடலைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்லாகவே வரலாற்றை ஹெரோடோட்டஸ் பயன்படுத்தினார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். வரலாற்றின் தந்தை என்று பொதுவாக அழைக்கப்பதைவிடவும் மேற்கத்திய வரலாற்றெழுதியலின் தந்தை என்று அவரை அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். காலவரிசை, புவியியல், பண்பாடு, இனவரைவியல் என்று பலவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தவர் என்னும் வகையில் வரலாற்றுத் துறையினரைப் பொருத்தவரை உலகளவில் அவர் இன்றும் ஆர்வமூட்டுபவராகவே இருக்கிறார்.
ஆம், இவருடைய வரலாற்றில் கடவுள்களுக்கும் இடமுண்டு என்றாலும் பெருமளவில் மனிதர்களே நிறைந்திருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்போரின் குரல் மட்டுமல்ல, சாமானியர்களின் குரலும் பதிவாகியிருக்கிறது. ஒரு கதைசொல்லியாக ஹெரோடோட்டஸும் பல இடங்களில் (கிட்டத்தட்ட 500 முறை) குறுக்கிட்டு தன்னுடைய தனிப்பட்ட கருத்துகளை, நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் ஜெனிஃபர் ராபர்ட்ஸ். தன்னால் உறுதிசெய்ய முடியாத ஒரு நிகழ்வைச் சொல்லும்போது, இப்படித்தான் சொல்லப்படுகிறது அதன் உண்மைத்தன்மை எனக்குத் தெரியாது என்று ஹெரோடோட்டஸ் குறிப்பிடுவது வரலாற்றெழுதியலுக்குப் புதியது. ஒரு நிகழ்வு குறித்த வெவ்வேறு கண்ணோட்டங்களையும் எதிரும் புதிருமான நிலைப்பாடுகளையும் உள்ளவாறே பதிவு செய்துவிட்டு எது சரி என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வாசிப்பவர்களிடமே ஒப்படைத்துவிடும் புதிய அணுகுமுறையையும் அவரிடம் காண்கிறோம்.
ஒரு நிலப்பரப்பின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அதில் வாழ்பவர்கள் கொண்டிருக்கும் அறவுணர்வோடு தொடர்புடையது என்று ஹெரோடோட்டஸ் நம்பினார். புவியியலுக்கும் பண்பாட்டுக்கும் அழுத்தமான முக்கியத்துவத்தை அவர் அளித்தார். ஒரு பண்பாடு நமக்கு அந்நியமானதாகத் தெரியலாம். ஆனால் அந்தப் பண்பாட்டைப் பேணும் சமூகத்தின் வளர்ச்சிக்கு அது நிச்சயம் பங்காற்றியிருக்கும். அவரவர் பண்பாடு அவரவருக்குப் பொருத்தமானது என்றார் ஹெரோடோட்டஸ்.
ஹெரோடோட்டஸின் தொடர்ச்சியாக துசிடிடீஸ் (பொஆமு 460-395) அறியப்படுகிறார். கிரேக்கம் வேறொரு நாட்டுடன் மேற்கொண்ட போரில் ஹெரோடோட்டஸ் கவனம் செலுத்தினார் என்றால் துசிடிடீஸ் கிரேக்கத்துக்குள் நடைபெற்ற போரை, அதாவது ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவுக்குமான நீண்ட போரைத் தனது களமாக (History of the Peloponnesian War) அமைத்துக்கொண்டார். ஏதென்ஸில் பயின்றவர். கப்பல் படை தளபதியாக நியமிக்கப்பட்டு, போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏதென்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டவர். பெருந்தொற்றுக்கு ஆட்பட்டு மீண்டெழுந்தவர். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் விரிவாகப் பயணங்கள் மேற்கொண்டவர். போர் மூண்ட பெலோப்பனிஸ் (தெற்கு கிரேக்கம், தெற்கு பால்கன் பகுதிகள்) பகுதிகளின் நீள அகலங்களை நன்கறிந்தவர். நூல் நிறைவடைவதற்குள் இறந்துவிட்டார். கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பெலோப்பனிஸ் போர் இருபத்தேழு ஆண்டுகள் (பொஆமு 431 முதல் 404 வரை) நடைபெற்றது. இரு நகரங்களின் அதிகாரப் போட்டியாகத் தொடங்கி முழு கிரேக்கத்தையும் இப்போர் பெருந்தீயாகப் பற்றிக்கொண்டது. ஏதென்ஸின் வீழ்ச்சியோடு முடிவுற்றது. சமகாலப் போர் என்பதால் ஒவ்வொரு நாளும் அவதானித்து அவரால் குறிப்புகள் எடுக்க முடிந்தது. போரை விளக்குவதோடு நின்றுவிடாமல் அதிகாரத்தின் இயல்பையும் கூர்மையாகப் பரிசீலிக்கிறது அவருடைய படைப்பு. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இரு படைகளுக்கு இடையில் நடைபெற்ற ஒரு மோதலின் கதை மட்டுமல்ல இது. அனைவருக்குமான அடிப்படையான பாடங்களை எனது வரலாறு கொண்டிருக்கிறது என்று துசிடிடீஸ் நம்பினர். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. போர் முடிந்த பிறகே ஏதென்ஸுக்கு அவரால் திரும்பிச் செல்ல முடிந்தது.
துசிடிடீஸின் வரலாற்றிலும் கற்பனை அம்சங்கள் இருக்கின்றன என்றாலும் பெருமளவில் அறிவியல்பூர்வமான அணுகுமுறை கொண்டவராக அவர் பலரால் மதிப்பிடப்படுகிறார். உண்மை முக்கியம். எதையும் இருமுறை உறுதி செய்த பிறகே எழுதுகிறேன் என்கிறார் துசிடிடீஸ். காலவரிசைப்படி அவர் வரலாறு எழுதப்பட்டுள்ளது. கண்ணால் காண்பது மெய் என்பது அவர் நிலைப்பாடு. நேரடியாகப் போரில் பங்கேற்றவர் என்பதால் தனது அனுபவத்தைக் காட்டிலும் மேலான ஒரு தரவு இருக்கமுடியாது என்னும் அசாத்தியமான நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கிறது. அனுபவத்துக்கு எல்லை உண்டு என்பதால் சிலநேரம் ஹெரோடோட்டஸ் போலவே வாய்வழித் தகவலுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டிய தேவை இருப்பதை உணர்கிறார்.
களத்துக்குச் சென்று தொடர்புடையவர்களைச் சந்தித்து நேர்காணல் செய்து தரவுகள் சேர்ப்பது துசிடிடீஸின் வழக்கம். உண்மைத்தன்மையைச் சோதிக்க விரிவான குறுக்கு விசாரணைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஹெரோடோட்டஸ்போல் பரந்து விரிந்த வரலாற்றை எழுதவில்லை துசிடிடீஸ். போர் என்றால் போர் மட்டும். வேறு எங்கும் தன் கவனத்தை அவர் திரும்பவில்லை. முதலாமவரைக் காட்டிலும் இரண்டாமவரிடமே துல்லியத்தன்மை மிகுதி என்பது வரலாற்றாளர்களின் கருத்து. ஆனால் மொழிநடையில் மூத்தவரே வெல்கிறார். வாசிப்பதற்கு எளிதான, சுவையான நடையில் வரலாற்றை எழுதமுடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியர் ஹெரோடோட்டஸ்தான். பல தரப்புகளின் வாதங்களை முன்வைப்பதன்மூலம் பல உண்மைகள் இருக்கமுடியும் என்று நம்பியவர் ஹெரோடோட்டஸ். துசிடிடீஸைப் பொறுத்தவரை உண்மை என்பது ஒன்றுதான். அதைத் திட்டவட்டமாகத் தன்னால் சுட்டிக்காட்டிவிடமுடியும் என்பதில் துசிடிடீஸ் உறுதியோடு இருந்தார்.
அது நடந்தது, அதன்பின் இது நடந்தது என்று விலகி நின்று நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போவது வாசிப்பவர்களைச் சலிப்டையச் செய்யும் என்பதால் இருவருமே இவர் இப்படிச் சொன்னார், அவர் அப்படிச் சொன்னார் என்று உரையாடல்களை அவ்வப்போது தங்கள் வரலாற்றுப் பிரதிக்குள் கொண்டுவருவதைப் பார்க்கிறோம். ஓர் உரையாடலைப் புகுத்தும்போது இருவரும் ஒரே அணுகுமுறையையே கையாள்கின்றனர். நாம் அருகில் இல்லாதபோது நடைபெற்ற ஓர் உரையாடலைப் பதிவு செய்யும்போது யூகத்தின் துணையை நாடவேண்டியிருக்கிறது என்கிறார் துசிடிடீஸ். ஒருவர் பேசும்போது பயன்படுத்திய அதே சொற்களை மீட்டெடுத்துப் பயன்படுத்துவது கடினம். அத்தகைய சூழலில் இந்தச் சூழலில் அவர் இப்படித்தான் பேசியிருப்பார் என்று முடிவு செய்து எழுதவேண்டியிருக்கிறது. நான் வழங்கியிருக்கும் அதே சொற்களை ஒருவர் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் உணர்த்த விரும்பிய பொருளைதான் நான் எழுதியிருக்கிறேன். உண்மைக்கு நெருக்கமாகவே உரையாடல்களை எழுதியிருக்கிறேன் என்று விளக்கமளிக்கிறார் துசிடிடீஸ்.
ஹெரோடோட்டஸ் தனது வரலாற்றை எழுதி முடித்துக்கொண்டிருந்தபோது துசிடிடீஸ் தனது வரலாற்றை எழுதத் தொடங்கியிருந்தார். உலகின் செல்வாக்குமிக்க வரலாற்றாசிரியர்களில் ஒருவராக துசிடிடீஸ் இன்றளவும் திகழ்கிறார். ஏற்கெனவே நிலைபெற்றுவிட்ட ஓர் அதிகார மையம் (ஸ்பார்ட்டா) புதிதாக உருவாகிவரும் மற்றொரு அதிகார மையத்தைக் கண்டு (ஏதென்ஸ்) அல்லல்பட்டுத் தவிப்பதும் புதிய போட்டியாளரை வீழ்த்தும் நோக்கில் போர் தொடுப்பதும் இன்றளவும் தொடர்வதைக் காண்கிறோம். தவிர்க்கவே முடியாமல் தோன்றும் இப்பதற்ற நிலை ‘ துசிடிடீஸ் பொறி’என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பொறியில் ஒரு நாடு சிக்கிகொள்ளும் ஒவ்வொரு முறையும் போர் வெடிப்பதைப் பார்க்கிறோம். அழிவைப் பார்க்கிறோம். ஒவ்வொரு போரும் ஒவ்வோர் அழிவும் துசிடிடீஸ் பெயரை நமக்கு நினைவுபடுத்திவிடுகிறது.
(தொடரும்)