கிரேக்க வரலாற்றெழுதியலைச் செழுமைப்படுத்திய மேலும் இருவரை அறிமுகப்படுத்திக்கொள்வோம். முதல் முறையாக மிகப் பரந்த அளவிலான ஒரு வரலாற்றை எழுதியவராக எஃபோரஸ் (பொஆமு 4ஆம் நூற்றாண்டு) அறியப்படுகிறார். கிரேக்கம், மாசிடோனியா, மேற்கு, கீழைநாடுகள் என்று பல தலைப்புகளின்கீழ் உலகின் கதையை இவர் எழுதியிருக்கிறார். ஆனால் இந்நூல் நமக்குக் கிடைக்கவில்லை. துண்டுத் துண்டாக மற்றவர்கள் எடுத்தாண்டுள்ள மேற்கோள்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
அதே காலத்தைச் சேர்ந்த தியோபோம்பஸ், துசிடிடீஸ் விட்ட இடத்திலிருந்து கிரேக்க வரலாற்றைத் தொடர்ந்திருக்கிறார். இவருடைய பாணி வரலாற்றை நிகழ்வுகளின்வழி சொல்லாமல் ஆளுமைகள்வழி சொல்வது. அந்த வகையில் அலெக்சாண்டரின் தந்தையும் மாசிடோனிய மன்னருமான பிலிப் மன்னர் குறித்த இவர் பதிவு முக்கியமானது. ஐரோப்பாவின் மிகப் பெரும் ஆளுமை என்று பிலிப்பை அழைக்கிறார் தியோபோம்பஸ். ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்து அதன்மீது கவனம் குவிப்பதன்மூலம் அந்தக் காலகட்டத்து வரலாற்றையும் சொல்லமுடியும் என்பதை உணர்த்தியவர்.
கிரேக்க வரலாற்றெழுதியலின் சாரத்தை இவ்வாறு தொகுத்துக்கொள்ளமுடியும். வரலாற்றின் நோக்கம் மனிதர்களை முன்னிலைப்படுத்துவது. மனிதச் செயல்பாடுகளையும் அவை உண்டாக்கும் விளைவுகளையும் ஆராய்வது. ஒரு வரலாற்றாளரின் பணி உண்மையைக் கண்டறிவது. செவிவழிச் செய்திகளை மட்டும் கொண்டல்ல, விரிவான கள ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு வரலாற்றாளர் எல்லாவிதமான தரவுகளையும் திரட்டவேண்டும். திரட்டிய அனைத்தையும் அல்ல; தகாதவற்றை ஒதுக்கி, தேவையானவற்றை மட்டும் தொகுக்கவேண்டும். வரலாறுக்குக் காலவரிசை முக்கியம். ஆனால் இது நடந்தது, அதன்பின் அது நடந்தது என்று நிகழ்வுகளை வரிசையாக அடுக்கிக்காட்டுவது மட்டுமல்ல; ஏன் அவ்வாறு நடந்தது என்னும் கேள்வியை ஒவ்வொரு கட்டத்திலும் எழுப்பி, காரணங்களைக் கண்டறிவது ஒரு வரலாற்றாளரின் பணியாகும்.
கிரேக்கம்தான் வரலாற்றைக் கண்டுபிடித்ததா என்று தெரியாது. நிச்சயம் வரலாற்றாளரைக் கண்டுபிடித்தது கிரேக்கம்தான் என்றொரு கூற்று உண்டு. நிகழ்வுகளின் மையத்தில் வரலாற்றாளரைப் பொருத்தி அவற்றின் கதையை எழுதும் பொறுப்பையும் அதிகாரத்தையும் அளித்ததில் கிரேக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. கடந்த கால நினைவுகளைப் பாதுகாப்பதற்கு ஒரே வழி, எழுதி வைப்பது. ஹோமர் போன்ற பெருங்கவிஞர்களும் கடந்தகாலத்தைத்தான் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் காப்பியங்கள் வரலாறாகாது. வரலாற்றைப் பதிவு செய்வதற்கு ஏற்ற வடிவம், உரைநடைதான் என்பதை கிரேக்கம் உறுதி செய்தது. இலக்கியத்துடனான உறவை முறித்துக்கொள்வதற்குப் பதில் இலக்கியத்திடமிருந்து வரலாறு பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கருதியதால் இலக்கிய வடிவங்களைத் தங்கள் படைப்பில் கையாள அவர்கள் தயங்கவில்லை. கடந்த காலத்திலிருந்து பாடம் கற்கவேண்டும், கடந்தகாலத் தவறுகளை மீண்டும் இழைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் போன்ற நோக்கங்களை வரலாறுமீது பண்டைய கிரேக்கர்கள் சுமத்தவில்லை.
0
பொஆமு 2ஆம் நூற்றாண்டில் கிரேக்க நகரங்கள் ரோமப் பேரரசின் ஆட்சியின்கீழ் வந்து சேர்ந்தன. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் நீண்டு, பரவிய ரோமின் அதிகாரம் ஐந்து நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது. கிரேக்கத்திடமிருந்து ரோம் பெற்றுக்கொண்டவை ஏராளம். கிரேக்கர்கள் தத்துவத்துக்கு அளித்த முக்கியத்துவத்தை ரோமானியர்கள் அளிக்கவில்லை. ஆனால் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆர்வம் கொண்டிருந்தனர். கடந்த காலத்தைப் பயபக்தியோடு அணுகினர். அவர்களுடைய பதிவுகளில் கிரேக்க வரலாற்றாசிரியர்களின் தாக்கம் அழுத்தமாக இருந்தது. ரோமானியர்கள் கிரேக்க மொழிநடையைப் பின்பற்றி கிரேக்க மொழியிலேயே தங்கள் வரலாறுகளை எழுதினர். கிரேக்க-ரோமனிய வரலாற்றெழுதியல் என்று இப்பிரதிகள் இன்று அழைக்கப்படுகின்றன. ரோமப் பேரரசின் எல்லை விரிவாக்கம், அதிகாரக் குவிப்பு ஆகியவற்றை மையப்படுத்தி இந்த வரலாறுகள் அமைந்திருந்தன. திமீயஸ் (பொஆமு 4-3 நூற்றாண்டு), பொலிபியஸ் (பொஆமு 3-2 நூற்றாண்டு), புளூடார்க் (பொஆமு 2-1 நூற்றாண்டு) போன்றோரின் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
ரோம வரலாற்றெழுதியல் தனித்த அடையாளத்தோடு வளர்ச்சி கண்டது அதன்பிறகுதான். ஆனால் இப்போதும் ரோமானியர்களிடம் கிரேக்கத்தின் தாக்கம் மறைந்துவிடவில்லை. (இவர்கள் மட்டுமல்ல எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், யூதர்கள் போன்றோரிடமும் கிரேக்கத் தாக்கம் இருக்கவே செய்தது). ரோமானிய வரலாற்றெழுதியலில் செல்வாக்கு மிக்கவர்கள் என்று இருவரைக் குறிப்பிடமுடியம். லிவி (பொஆ முதல் நூற்றாண்டு), டாசிடஸ் (1-2ஆம் நூற்றாண்டு).
ரோமப் பேரரசு எனும் பெருமிதத்தை, அதன் வண்ணமயமான வரலாற்றைப் பதிவு செய்யவேண்டும் எனும் விருப்பத்தோடு எழுதத் தொடங்கியர் லிவி. மற்றொரு பக்கம், வர்ஜில் எனும் மகாகவியும் இதே நோக்கத்தோடு தனது படைப்பை (Aeneid) இயற்ற ஆரம்பித்தார். அதன்பிறகே ரோமப் பேரரசு கவிதையிலும் வரலாற்றிலும் நிலைக்க ஆரம்பித்தது. லிவி தனது வாழ்நாளின் பெரும்பகுதியைத் தனது வரலாற்றுப் பணிக்கு ஒதுக்கினார். ரோமின் அடித்தளத்திலிருந்து (From the Foundation of the City)அவர் தன் பிரம்மாண்டமான வரலாற்றைத் தொடங்கினார். இதுவே ரோம வரலாற்றின் அடித்தளமாகவும் மாறியது. ரோமின் தொடக்கத்தையே வரலாற்றின் தொடக்கமாக ரோமானியர்கள் கருத ஆரம்பித்தனர். காலத்தின் தொடக்கமாகவும் அது பலருக்குத் திகழ்ந்தது. ரோமாபுரியின் வரலாறு புனிதமானது. அதன் எல்லைகள் புனிதமானவை. நம் கடந்த காலம் உன்னதமானது எனும் மயக்கமூட்டும் நம்பிக்கையை ரோமானியர்கள் வளர்த்துக்கொள்ள ஆரம்பித்ததற்கு லிவி ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்.
அடித்தளத்திலிருந்து அவர் வாழ்ந்த காலம்வரை விரிந்து செல்கிறது லிவியின் வரலாறு. மொத்தம் 142 பகுதிகள் என்றாலும் நமக்குக் கிடைத்திருப்பவை 35 மட்டுமே. அவற்றை அடக்கவே ஆறு தொகுதிகள் தேவைப்படுகின்றன என்றால் முழுமையான பிரதி கிடைத்திருந்தால் அந்நூல் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்! ரோம் நகரத்தின் கதையாகவும் இத்தாலியின் கதையாகவும் விரியும் இந்நூலில் போர்கள் தனிக்கவனம் பெற்றுள்ளன. இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகள்மீது லிவிக்கு ஆர்வம் இல்லை. ரோம் எவ்வளவு பளபளப்பான நகரமாக இருந்தது, அதன் பளபளப்புக்கும் படைப்பூக்கத்துக்கும் காரணம் என்ன போன்றவற்றை லிவி தன் நூலில் விவாதித்தார். ரோமப் பேரரசின் ஆட்சியை ஒரு பொற்காலமாக அவர் கட்டமைத்தார். ரோம் தனித்துவமானது. ரோம் அழிவற்றது. ரோம் செல்வம் கொழிக்கும் பூமி.
முந்தைய வரலாற்றாசிரியர்களின் படைப்புகள் லிவிக்கு உதவின. இன்னாரின் மேற்கோள் என்று சில இடங்களில் குறிப்பிடுவார், சில இடங்களில் குறிப்பிட மாட்டார். பதிவுகள் இல்லாத காலங்களில் எல்லாம் கட்டுக்கதைகளே கிடைத்தன. அவற்றைத் தவிர்த்தால் காலவரிசையில் இடைவெளி விழுந்துவிடும். சேர்த்தால் வரலாற்றின் பாங்கு பாதிக்கப்படும். இதைச் சமாளிக்க ஹெரோடோட்டஸ்போல், உறுதி செய்யமுடியாத தகவல் எனும் முன்னோட்டோடு செவிவழிக்கதைகளை ஆங்காங்கு சேர்க்கிறார் லிவி. ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டிருந்ததால் சகுனம், ஆரூடம் (ஆரக்கிள்) போன்றவற்றைக் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டார். இக்குறைகள் கடந்தும் லிவியின் வரலாறு நம்மோடு உயிர்ப்போடு உரையாடுகிறது. இன்று காணும்போது கறாரான ஒரு வரலாற்றாளராக அல்லாமல் இலக்கிய நயத்தோடு அமைந்த ஒரு சுவையான கதைசொல்லியாக லிவி நமக்குக் காட்சியளிக்கிறார். மினுமினுப்பான ஒரு ரோமை அவர் எழுத்துகளில் நாம் காண்கிறோம்.
வரலாற்றின் பணி என்ன? லிவியிடம் கேட்டால் அறத்தை வலியுறுத்துவது; கடந்த காலத்திலிருந்து பாடங்களைப் போதிப்பது; குடிமகக்களின் கடமைகளை எடுத்துச் சொல்வது; தேசபக்தியை வளர்த்தெடுப்பது என்பார். ரோமானியப் பேரரசின் மேன்மைக்குக் காரணம் என்ன எனும் கேள்விக்கு அதை ஆண்ட பேரரசர்கள் என்பதே பொதுவான விடையாக இருக்கும். லிவியோ மக்களைக் கைகாட்டுகிறார்கள். மக்களின் பண்புகள்தான் ரோமை உயர்த்தின. மக்கள்தான் ரோமைக் கட்டியெழுப்பியவர்கள். அவர்கள்தான் பேரரசின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள். சிக்கனம், துணிவு, ஒழுக்கம், சட்டத்தை மதிக்கும் பண்பு ஆகியவற்றை மக்கள் கொண்டிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, அறத்தின் கரங்களை அவர்கள் பற்றிக்கொண்டிருந்தனர். அதனால்தான் பேரரசு நிமிர்ந்து நின்றது என்றார் லிவி.
கார்னீலியஸ் டாசிடஸ் ரோம அரசாங்கத்தில் பல்வேறு பதவிகள் வகித்தவர். உரையாற்றல் மிக்கவர். சட்டம் பயின்றவர். இவருடைய இரு (The Histories, The Annals) முக்கிய வரலாற்றுப் படைப்புகளும் நமக்குப் பகுதியளவில்தான் கிடைத்துள்ளன. பொஆ 14 முதல் 96 வரையிலான ரோமப் பேரரசின் வரலாற்றைக் காலவரிசைப்படி இந்த இரு நூல்களில் தொகுத்திருக்கிறார் டாசிடஸ். கல்பா, டைபீரியஸ், காலிகுலா, கிளாடியாஸ், நீரோ போன்ற பலரை இவர் எழுத்துகளில் சந்திக்கிறோம். மன்னர்களை மையப்படுத்தினாலும் அவர்களை மகிமைப்படுத்துவதில்லை டாசிடஸ். கூர்மையாக மதிப்பிடவும் விமரிசிக்கவும் அஞ்சுவதில்லை. குரூரமாகவும் வஞ்சகமாகவும் நடந்துகொள்ளும் அரசர்களைச் சாடுகிறார். மலிந்துவரும் ஊழலை அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார். காலம் மாறிவிட்டது, நேர்மை குலைந்துவிட்டது என்று குறைபட்டுக்கொள்கிறார். என்ன செய்தும் நிலைமையைக் கட்டுப்படுத்தமுடியாது. சரிவுதான் ஒரே சாத்தியம் என்று தவிப்போடு கணிக்கிறார்.
ஒரு மன்னரைப் போற்றிப் பாடுவதன் நோக்கம் அவர் புகழ் நிலைத்திருக்கவேண்டும் என்பதால். ஒரு மன்னர் தவறிழைக்கும்போது அதைப் பதிவு செய்தால்தான் காலம் அவர் குறித்த சரியான பிம்பத்தை நினைவில் கொள்ளும். இடித்துரைப்பதும் ஒரு வரலாற்றாளரின் பணிதான் என்பதை டாசிடஸின் எழுத்துகள் உணர்த்துகின்றன. முழுமுற்றான அதிகாரத்தின் பாதகங்களை நேரடியாக உணர்ந்தவர் டாசிடஸ். காலிகுலா, டைபீரியஸ், நீரோ மூவரும் அதிகார போதையில் நிகழ்த்திய கொடுமைகளை டாசிடஸ் உள்ளவாறே பதிவு செய்கிறார். ‘ஆற்றலுள்ளவர்களைத் தண்டிப்பதன்மூலம் அதிகாரம் தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறது’ எனும் டாசிடஸின் வரி இன்றும் சுடுகிறது. எங்கே ஊழல் மிகுந்திருக்கிறதோ அங்கே புதிது புதிதாகச் சட்டங்கள் அதிகரித்துக்கொண்டே போவதைக் காணலாம் என்னும் டாசிடஸின் வரி ரோமைக் கடந்து, காலத்தைக் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது.
புதிதாகப் பலம் பெற்றுவந்த கிறிஸ்தவத்தின்மீதும் அதன் தலைவர்கள்மீதும் இதேபோன்ற அம்புகள் பாய்ந்ததைத் தொடர்ந்து டாசிடஸின் புகழ் சிறிது காலம் மட்டுப்பட்டிருந்தது. மறுமலர்ச்சி காலத்தில் மதத்தின்மீதான பற்று குறைந்ததைத் தொடர்ந்து டாசிடஸ் மீண்டும் கண்டெடுக்கப்பட்டார். நாம் எல்லா வகையான வாசகர்களுக்கும் எழுதுகிறோம் எனும் உணர்வோடு எளிமையாக எழுதினார் லிவி. டாசிடஸ் அவ்வாறு கருதவில்லை என்பதை அவருடைய அடர்த்தியான நடை உணர்த்துகிறது. விரித்து எழுதுவதைத் தவிர்த்துவிட்டுச் சொற்சிக்கனத்தைக் கடைபிடித்தார் அவர். சார்பெடுக்காமல் நடுநிலையான போக்கை அவர் கடைபிடித்ததையும் வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
வரலாற்றை அறம் சார்ந்த வகுப்புகள் எடுப்பதற்குத் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் டாசிடஸ். விருப்பு வெறுப்புகளோடு எழுதியவர்தான் என்பதால் அவருடைய தீர்மானங்களையும் முடிவுகளையும் இன்றைய வரலாற்றாளர்கள் விமரிசனக் கண்ணோட்டத்தோடுதான் அணுகுகின்றவர். அது சரியும்கூட. ரோமப் பேரரசின் பரந்து, விரிந்த வரலாற்றை எழுதுவதற்குப் பதில் ரோம நகரத்தை மட்டும் மையப்படுத்தி எழுதி முடித்துவிட்டார் என்னும் மதிப்பீடும் சரியானதே. வரலாறு குறித்து இன்றுள்ளதைப் போன்ற விரிந்த பார்வை அன்றில்லை. அன்றைய மன்னர்களின் அரசியல் முடிவுகளை அப்போது நிலவிய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் ஆராய்வதும் தீர்ப்பெழுதுவதும் சரியாகாது.
ரோமப் பேரரசின் பொது மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர்? அவர்களுடைய தினப்படி வாழ்க்கை எப்படி இருந்தது? என்னென்ன தொழில் வாய்ப்புகள் அவர்களுக்கு இருந்தன? அவர்களுடைய உணவு, உடை, நம்பிக்கை, பண்பாட்டுக்கூறுகள் குறித்து தெரிந்துகொள்ளமுடியுமா? பெண்கள் எப்படி வாழ்ந்தனர்? சமூகத்தில் அவர்களுக்கு இருந்த இடம் எத்தகையது? கலையும் இலக்கியமும் எத்தகைய வளர்ச்சியை அடைந்திருந்தன? தத்துவத்தில் ரோமர்கள் ஆர்வம் கொண்டிருந்தனரா? இத்தகைய கேள்விகளோடு டாசிடஸை அணுகுபவர்கள் ஏமாற்றமடைவது நிச்சயம். அவருடைய வரலாறு முழுக்கவும் அரண்மனையைச் சுற்றி மட்டுமே பின்னப்பட்டிருந்ததால் இதுபோன்ற ‘சிறிய’விஷயங்கள் அவர் பார்வைக்குச் செல்லவேயில்லை.
(தொடரும்)