ரோமானிய வரலாற்றைப் பதிவு செய்தவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது செல்வாக்கும் நேரமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே வரலற்றை உருவாக்குபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மோசமான அரசர்களை இவர்கள் விமரிசித்தது உண்மை என்றாலும் அவர்கள் பார்வை இறுதிவரை சாமானியர்கள்மீது படரவேயில்லை. சாதாரண மக்கள்தானே, குறிப்பிட்டுச் சொல்வதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை என்று இளக்காரமாக ஒதுக்கியிருக்கிறார்கள். வரலாற்றில் யார் இடம்பெறவேண்டும், யார் இடம்பெறவேண்டிய அவசியமில்லை என்பது குறித்து எழுதப்படாத விதி இருந்திருக்கிறது போலும்.
உண்மையைக் கண்டறியவேண்டும், நடுநிலையோடு செயல்படவேண்டும், தரவுகளை ஆராயவேண்டும் போன்றவற்றைவிடக் கடந்த காலத்திலிருந்து பாடங்கள் புகட்டவேண்டும் என்று மட்டுமே ரோமானியர்கள் சிந்தித்திருக்கிறார்கள். வரலாற்றின் தாக்கத்தை நிகழ்காலம் உணரவேண்டும் என்பது ரோமர்களின் விருப்பம் என்றால் கடந்த காலத்தின் செய்திகள் எதிர்காலத்தைச் சென்றடைய வேண்டும் என்பது கிரேக்கர்களின் விருப்பமாக இருந்தது.
முதல் இரு நூற்றாண்டுகளில் ஜுபிடர், அப்போலோ, வீனஸ் போன்ற கடவுள்களோடு இயேசுவையும் சேர்த்து ரோமானியர்கள் வழிபட்டு வந்தனர். ரோமப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் (பொஆ 312) கிறிஸ்தவத்தைத் தழுவியதைத் தொடர்ந்து அம்மதம் அங்கீகரிக்கப்பட்ட அரசு மதமாக உயர்ந்தது. காலப்போக்கில் ரோமானியக் கடவுள்களின் செல்வாக்கு குலைய, வலுவான ஒற்றை மதமாக கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்தது. கிறிஸ்தவத்தின் வளர்ச்சியால் வரலாற்றெழுதியலில் கிரேக்க, ரோமானியத் தாக்கங்கள் மறைந்தன. கடந்த காலமோ நிகழ்காலமோ அல்ல, பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் எதிர்காலத்தில் விடுதலை பெறுவதொன்றே நம் இலக்கு எனும் போதனை அறிவுத்தளத்திலும் ஊடுருவியது.
செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆஃப்ரிகானஸ் (3ஆம் நூற்றாண்டு) ஹீப்ரு மரபைப் பின்பற்றி, இறைவன் உலகைப் படைத்த புள்ளியிலிருந்து தனது உலக வரலாற்றை எழுதினார். கிறிஸ்தவ வரலாற்றெழுதியலின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்றாக இவர் படைப்பு அமைந்தது. அவருக்குப் பின் வந்தவர்கள் செக்ஸ்டஸை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு படைப்புக் கோட்பாட்டை வரலாற்றுக்குள் கொண்டு வந்தனர். கடவுள் உலகைப் படைத்தது பொஆமு 5500இல் என்று திட்டவட்டமான முறையில் குறிப்பிட்டா செக்ஸ்டஸ். கிரேக்க ரோமானிய காலத்தில் வரலாற்றுக்கு வெளியில் தள்ளப்பட்டிருந்த கடவுள் முழு வலுவோடு உள்நுழைந்தார். உலகம் மட்டுமல்ல, வரலாறும் அவரிடமிருந்து தொடங்கியது.
ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குக் கிறிஸ்தவமே காரணம் எனும் வாதத்தை மறுப்பதற்காகவும் தனது மதத்தின் தத்துவத்தையும் மாண்பையும் வெளிப்படுத்துவதற்காகவும் புனித அகஸ்டின் (5ஆம் நூற்றாண்டு) எழுதிய நூல் (The City of God) ஒரு முக்கியச் செவ்வியல் படைப்பாகப் போற்றப்படுகிறது. இறையியலும் தத்துவமும்தான் இவர் துறை என்றாலும் வரலாற்றை (இறையியலை என்றும் வைத்துக்கொள்ளலாம்) தத்துவார்த்தமாக அணுகிய தொடக்ககாலச் சிந்தனையாளர்களுள் இவரும் ஒருவர். வரலாறு என்பது கதையாடல். அது மாற்றங்களைப் பதிவு செய்கிறது. மாற்றம் என்றொன்று இருந்தால் மாற்றமின்மையும் இருக்கும். அதுவே கடவுள் என்றார் அகஸ்டின். மாற்றங்களையும் அவரே உண்டாக்குகிறார் என்பதால் வரலாற்றை உருவாக்கியவர் யார் எனும் கேள்விக்கான விடை கடவுள். மாற்றமில்லாதவரால்தான் மாற்றங்களைப் புரிந்துகொள்ளமுடியும். உலகில் நடைபெறும் தவறுகளுக்குக் கடவுளை அல்ல, மனிதனையே பொறுப்பாக்கவேண்டும். ஏனெனில் அவனுடைய தேர்வுகளின்படியே செயல்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் மனிதன் தன் வரலாற்றைத் தானே எழுதிக்கொள்கிறான்.
ரோமப் பேரரசின் பேரழிவுக்கு வேறு யாருமல்ல ரோம்தான் காரணம் என்கிறார் அகஸ்டின். கொடுங்கோல் மன்னர்களின் மிதமிஞ்சிய செருக்கும் அதிகார வெறியும் ஊழலும் மனிதர்களை அடிமைப்படுத்தும் பண்பும்தான் பேரரசை நொறுக்கியது. ரோமானியக் கடவுள்களிடம் உண்மையிலேயே ஆற்றல் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்தத் தோல்வி வந்திருக்குமா? எனும் கேள்வியையும் எழுப்ப அவர் தயங்கவில்லை.
கிறிஸ்தவ வரலாற்றெழுதியலின் போக்கைத் தெரிந்துகொள்ள ஒரு சோறு பதம், அகஸ்டின். கடவுளைக் கொண்டுவந்தாலும் அகஸ்டின் போன்றோர் பரந்த அளவில் காலத்தை (தொடக்கம்முதல் இன்றுவரை) வரலாற்றுக்குள் கொண்டுவரமுடியும் என்பதைத் தங்கள் படைப்புகள்மூலம் நிரூபித்தனர். ஒரு நீண்ட, தொடர்ச்சியான கதைபோல் கடந்தகாலத்தைக் கட்டம் கட்டமாக நகர்த்திச் செல்லும் போக்கை இவர்கள் வளர்த்தெடுத்தனர்.
யூத வரலாற்றாளர்களும் கடவுளுக்கு வரலாற்றில் இடம் ஒதுக்கிக்கொடுத்தவர்கள்தாம். அவர்களுடைய ஹீப்ரு பைபிளில் வரலாறு குறித்த உணர்வு நிறைந்திருப்பதைக் காணலாம். தங்களுடைய பழமையான மரபைப் பதிவு செய்யவேண்டும் எனும் முனைப்பு அவர்களிடம் இருந்தது. புகழ்பெற்ற இறையியலாளரும் வரலாற்றாளருமான ஃபிளாவியஸ் ஜோசஃபஸ் (2ஆம் நூற்றாண்டு) யூதர்களின் ஐந்தாயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கடவுளிடமிருந்து தொடங்கி ரோமானிய காலம்வரை நீட்டித்து எழுதினார். நிகழ்வுகளை விவரிப்பது மட்டுமல்ல, மேலதிக நோக்கம் ஒன்றும் அவருக்கு இருந்தது. கிரேக்கர்களோ ரோமானியர்களோ அல்லர், நாங்களே பழைமையானவர்கள்; அவர்களுடைய பண்பாடு அல்ல, எங்களுடையதே உயர்ந்தது என்பதைத் அழுத்தந்திருத்தமாக அவர் பதிவு செய்ய விரும்பினார். மேலும் யூத இனமே தூய்மையானது என்றும் அவர் வாதிட்டார். தன் வாதத்துக்கு வலு சேர்க்க அவர் இறையருளை அழைத்துக்கொண்டார். வரலாறு அவர் கரங்களில் ஒரு கருவியாக மாறியது. யூத வரலாற்றெழுதியலின் அடிப்படையான தன்மையாக இது மாறியது. தம் இனத்துக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கவேண்டும் எனும் குறிக்கோளோடு யூத வரலாற்றாளர்கள் இயங்கினர். அதற்கான புனித அங்கீகாரத்தைக் கடவுள் வழங்கியதாக உரிமை கோரினர்.
யூத, கிறிஸ்தவ வரலாறுகள் இரண்டுமே கடவுளை மையப்படுத்தின. கடந்த கால நிகழ்வுகளைத் தங்களுக்குச் சாதகமான முறையில் அவர்கள் திரட்டிக்கொண்டனர். தீர்ப்புகளையும் அவ்வாறே வழங்கினர். எழுதியவர்களின் இனமும் மதமும் முக்கியத்துவம் பெற்றன. பிற இனங்களும் மதங்களும் கீழிறக்கப்பட்டன. தரவுகளை ஆராய்ந்து ஏற்கும் போக்கைக் காணமுடியவில்லை. கிரேக்க, ரோமனிய வரலாறுகளிலிருந்து தாக்கம் பெற்றாலும் அவற்றிலிருந்து பெருமளவு விலகியே யூத, கிறிஸ்தவ வரலாற்றாளர்கள் இயங்கினர். 5ஆம் நூற்றாண்டில் இறுதியில் (473ஆம் ஆண்டு) ரோமானிய மன்னர் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டார். ஐரோப்பிய இடைக்காலத்தின் தொடக்கமாக இந்நிகழ்வு அமைந்தது.
0
நாம் இதுவரை பார்த்த அனைத்துச் சிந்தனைகளின் தாக்கத்தையும் இடைக்கால ஐரோப்பிய வரலாற்றெழுதியலில் காணமுடியும் என்றாலும் கிறிஸ்தவ வரலாற்றாளர்களின் பார்வையே இக்காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. மனித இயக்கம் முக்கியத்துவமற்றது, அதை நாம் அளவு கடந்து பொருட்படுத்த வேண்டியதில்லை எனும் பார்வை மேலோங்கியது. வரலாற்றின் மையக்கருவாக இறையாதிக்கம் மாறியது. அரசர்களின் வரலாறு, நிலங்களின் வரலாறு, ஆளுமைகளின் வரலாறு அனைத்தும் இறையருளை வலியுறுத்தி இயற்றப்பட்டன.
கிரிகோரி (6ஆம் நூற்றாண்டு) எழுதிய வரலாற்றில் மனிதச் செயல்பாடுகளோடு புனிதர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களும் ஒன்று கலந்திருந்தன. நல்லவர்களையும் தீயவர்களையும் அடையாளம் காட்டி நற்செயல்கள் செய்வதால் கிடைக்கும் லாபங்களையும் தீங்கிழைப்பதால் ஏற்படும் இழப்புகளையும் விவரித்தார். பாவம், புண்ணியம்; சொர்க்கம், நரகம் ஆகிய கருத்தாக்கங்கள் வரலாற்றில் உறுதியாக நிலைகொண்டன. இறைவனிடம் அனைவரும் அடைக்கலம் புகவேண்டும் எனும் பெருஞ்செய்தியை தனது மையப்புள்ளியாக அவர் அமைத்துக்கொண்டார். ஒழுக்கத்தை உயர்த்திப் பிடிப்பதற்கான வாகனமாக வரலாறு உருமாறியது. கடந்தகாலத் தவறுகளிலிருந்து நாம் பாடம் படித்துக்கொள்ளவேண்டும் என்று கிரிகோரி விரும்பினார். பாடங்களுக்கு ஏற்ப தான் விவரிக்கும் நிகழ்வுகளை அவர் அமைத்துக்கொண்டார் என்று சொல்லலாம்.
ஆரம்பத்தில் எல்லா வரலாறுகளும் லத்தீனிலும் பின்னர் வட்டார மொழிகளிலும் எழுதப்பட்டன. கிறிஸ்தவ மடாலயங்கள் வருடாந்திரப் பதிவேடுகளை (annals) ஒவ்வோராண்டும் உருவாக்கின. அவற்றில் பலவிதமான அன்றாட மடாலய நிகழ்வுகள் இடம்பெற்றன. ஓரிடத்தில் ஆரம்பித்த இந்த வழக்கம் விரைவில் பல மடாலயங்களுக்குப் பரவியது. இடைக்கால ஐரோப்பாவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள இந்த மடாலயக் குறிப்புகள் உதவிக்கு வந்தன.
தாங்கள் செலுத்திவந்த மேலாதிக்கத்தை நியாயப்படுத்த திருச்சபையினருக்கு வரலாறு தேவைப்பட்டது. கிறிஸ்துவைக் மக்கள் ஏற்றுக்கொண்டால் திருச்சபையினரின் அதிகாரத்தையும் அவர்கள் கேள்வியின்றி ஏற்கவேண்டிவரும், இல்லையா? இதுபோக, தாங்கள் பின்பற்றி வந்த புனித மரபுகளை எதிர்காலச் சந்ததியினருக்குப் பதிவு செய்யவேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருந்தது. உண்மையில், வரலாறு எனும் பெயரை இந்த ஏடுகள் கொண்டிருக்கவில்லை. இவற்றை உருவாக்கியவர்களும் தங்களை வரலாற்றாளர்கள் என்று அழைத்துக்கொள்ளவில்லை. தொகுப்பாளர்களாகவே இவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர்.
சாமானியன், இறைவன். அற்பம், அற்புதம். அன்றாடம், புனிதம். இப்படி இரு கூறுகளாக உலகமும் அது குறித்த கண்ணோட்டமும் துண்டாடப்பட்டது. கவனிப்பதும் ஆராய்வதும் முக்கியமல்ல; நாம் செய்யவேண்டியதெல்லாம் விளக்கவேண்டியது மட்டுமே. இறைவனின் ஒளிதான் உண்மையான அறிவு. அந்த அறிவைக் கொண்டு அனைத்தையும் விளக்கவேண்டும் என்று இறையியலாளர்கள் வாதிட்டனர். வெளிப்படையாக நாம் காணும் நிகழ்வுகள் போலியானவை. நாம் தேடும் உண்மை மறைந்திருக்கிறது. அந்த உண்மைதான் அனைத்தையும் இயக்குகிறது. அந்த உண்மையின் கதையைத்தான் நாம் பதிவு செய்யவேண்டும் என்று குரல் கொடுத்தனர். இடைக்கால ஐரோப்பிய வரலாற்றெழுதியலின் குரலும் இதுவே.
(தொடரும்)