1980-81ல் அவருடைய ஆயிரமாவது பிறந்த நாளைக்கொண்டாட யுனெஸ்கோ முடிவு செய்தது. கிழக்கத்திய நாடுகளின் அறிவுலக ஞானி என்றும், மருத்து அறிவின் தந்தை என்றும் அவர் வர்ணிக்கப்படுகிறார். மிகச் சரியாக.
யார் அவர்… அவரை ஏன் உலகம் கொண்டாடவேண்டும்… அவருடைய திறமைகள் என்னென்ன… என்றெல்லாம் பார்த்தால் நமக்கு வியப்பு மட்டுமே மிஞ்சும். ஏன், லேசாகப் பொறாமைகூட வரலாம்!
அவர் என்னவாக இருந்தார் என்ற கேள்வியைவிட அவர் என்னவாகவெல்லாம் இல்லை என்று வியப்பதே சரியாக இருக்கும். கவிஞர், விஞ்ஞானி, விமர்சகர், வைத்தியர் (மருத்துவரல்ல; வித்தியாசத்தைக் கவனிக்கவும்), தத்துவஞானி – என பன்முகத்தன்மை கொண்ட அறிவுக்களஞ்சியமாக விளங்கியவர்.
அவர் ஏன் பரவலாக அறியப்படவில்லை? அவர் முஸ்லிமாக இருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் மேற்கத்திய அறிஞர்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. ஒரு துறையில் மேதையாக இருப்பவரின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிடுவார்கள். ஜாதி மதமெல்லாம் பார்ப்பதில்லை. மாக்ஸ்முல்லர் மொழிபெயர்த்த உபநிஷதங்கள், நிகல்சன் மொழிபெயர்த்த மௌலானா ரூமியின் மஸ்னவி போன்றவை சிறந்த உதாரணங்கள். அவர்களெல்லாம் அறிவை மட்டுமே வியந்தார்கள். மதங்களுக்குள் சென்று தங்களைச் சுருக்கிக்கொள்ளவில்லை.
உலகின் பெரும் மேதைகளாக இருந்த பலர் வெளிச்சத்துக்கு வராமல் போனதற்கு அவர்கள் சார்ந்திருந்த மதம் ஒரு காரணமாக இருந்துள்ளது வருத்தத்துக்குரிய உண்மை. அவிசென்னா என்று மேற்கத்திய உலகில் அறியப்படும் இப்னு சீனாவுக்கும் இது மிகச் சரியாகப் பொருந்தும்.
அரபியில் இப்னு என்றால் இன்னாரது மகன் என்று பொருள். இப்னு சீனா என்றால் சீனாவின் மகன் என்று அர்த்தம். ஆனால் இப்னுசீனாவின் அப்பா பெயர் சீனா அல்ல! தாத்தாவுக்குத் தாத்தாவின் பெயர்தான் சீனா! சீனம் சென்றேனும் ஞானம் தேடு என்று நபிகள் நாயகம் இதற்காகத்தான் சொன்னார்கள் போலும்!
தனது ’மருத்துவ விஞ்ஞான நெறிமுறைகள்’ (அல் கானூன் ஃபில் திப்) என்ற நூலில் பல நாடுகளில் நிகழ்ந்த மருத்துவ சாதனைகளைப்பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் இப்னு சீனா குறிப்பிடுகிறார். 12ம் நூற்றாண்டில் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த மருத்துவக் களைக்களஞ்சியம் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பிய மருத்துவர்களாலும், விஞ்ஞானிகளாலும் ஆதார ஆலோசனை நூலாகப் பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.
ஆனால் அது இப்னு சீனாவின் சாதனைகளுக்கு ஒரேயொரு உதாரணம்தான்.
வாழ்வு
அபூ அலீ அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு சீனா என்ற நீண்ட பெயர் கொண்ட இம்மேதை கிபி 980ம் ஆண்டு உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் முக்கிய நகரான புகாராவில் அஸ்ஃபஹானா என்ற ஊரில் பிறந்தார். குடும்பம் பின்னர் புகாராவுக்கு வந்தது. ஆரம்பக்கல்வி புகாராவில்தான்.
திருமறையை முழுவதையும் பத்து வயதில் மனனம் செய்து முடித்தார். தத்துவம், இறையியல், இந்தியக் கணிதவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். தத்துவத்தில் ஏதாவது புரியாவிட்டால் உடனே பள்ளிவாசல் சென்று தொழுதுகொண்டே இருப்பாராம். தெளிவு ஏற்படும்வரை. இறையருளால் அவருக்கு உதிப்புகள் மூலம் இறைவன் தெளிவைக் கொடுத்துவந்தான்.
ஒருமுறை அரிஸ்டாட்டிலின் ’மெடஃபிசிக்ஸ்’ நூலை நாற்பதுமுறை படித்தும் தெளிவு ஏற்படவில்லை. ஆனால் அல்ஃபராபி என்பவர் அதுபற்றி எழுதிய சிறு நூலைப் படித்தபின் தெளிவு ஏற்பட்டது. உடனே பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தினார். ஏழைகளுக்கு தர்மமும் செய்தார்.
இறைவன் இல்லை என்று சொல்பவனே அறிவாளி என்ற நினைப்பு சமுதாயத்தில் சிலருக்கு உள்ளது. ஆனால் தனக்கொரு தெளிவு ஏற்பட்டதும் இறைவனுக்கு நன்றிசெலுத்தும் இப்னு சீனா போன்ற உண்மையான மேதைகள் உலகில் இருக்கத்தான் செய்துள்ளார்கள்!
நோய்வாய்ப்பட்டிருந்த சாமர்க்கண்டின் இளவரசருக்கு சிகிச்சை அளிக்க இப்னு சீனா அழைக்கப்பட்டபோது அவருக்கு வயது பதினேழுதான்! அந்த வாய்ப்பு அவருக்கு புகாராவிலிருந்த பிரமாண்டமான அரசு நூல்நிலையத்தைக் காட்டியது. அங்கே பல நூல்களில் அவர் ஆழ்ந்துபோனார்.
பதினெட்டு வயதிலேயே படிக்க வேண்டியதையெல்லாம் படித்து முடித்துவிட்டார். இருபத்தோரு வயதானபோது புகழ்பெற்ற, தலைசிறந்த வைத்தியராகவும் சிந்தனாவாதியாகவும் தன்னை ஸ்தாபித்துக்கொண்டார்.
புலம் பெயர்ந்து சென்ற இப்னு சீனா ஊர் ஊராக அலைந்து இறுதி 14 ஆண்டுகள் ஈரானின் இஸ்ஃபஹான் என்ற ஊரில் நிம்மதியாக வாழ்ந்தார். அவ்வூரின் அமீர் கேட்டுக்கொண்டபடி அங்கே ஒரு வானிலை ஆய்வுக்கூடமும் அவர் தலைமையில் அமைக்கப்பட்டது. வானவியல் ஆராய்ச்சி தொடர்பான சில உபகரணங்களையும் உருவாக்கினார்.
16-ம் நூற்றாண்டில் மசூத் கஜ்னவியால் இஸ்ஃபஹான் தாக்கப்பட்டபோது இப்னு சீனாவின் நூலகம் சூறையாடப்பட்டது. அதிலிருந்த ஹிக்மத்துல் மஷ்ரீகிய்யா, அல் ஹிக்மத்துல் அர்ஷிய்யா ஆகிய நூல்கள் கஜ்னாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டன.
1037-ல் ஹமதான் நகரில் ஈரானில் இப்னு சீனா மறைந்தார். ஈரானிய அரசு அவருக்கு ஒரு சமாதி எழுப்பி, அருகிலேயே அவருடைய முக்கிய கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய ஒரு நூலகத்தையும் நிர்மாணித்தது.
பகலில் அரசு சேவைகளை ஆற்றிய இப்னு சீனா இரவுகளில் மருத்துவ நூல்களை எழுதினார். அதன் பின்னர் இசை கேட்டுக்கொண்டே தன் நாளை முடித்துக்கொள்வார்.
தன் நினைவுப்பெட்டகத்திலிருந்தே பெரும்பாலும் அவர் எழுதினார். குதிரைகளின் முதுகுகளிலும், சிறையில் எழுதுவதற்காகக் கொடுக்கப்பட்டவற்றிலும்கூட எழுதினார். பிரதிகள் எதுவும் எடுத்து வைத்துக்கொள்ள மாட்டார். அதற்காக இன்னொரு குதிரையா வாங்க முடியும்?! ஆனால் சில மாணவர்கள் அவர் சொன்னவற்றை எழுதி வைத்துக்கொண்டனர்.
தன் காலத்தில் வாழ்ந்த அல் பரூனி போன்ற பல பிரபலங்களை அவர் அறிந்துவைத்திருந்தார். அவர்களைச் சந்தித்து, அவர்களோடு கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொண்டிருந்தார்.
இப்னு சீனாவின் படைப்புகள்
இப்னு சீனாவின் படைப்புகளின் அளவு வியப்பூட்டுபவை. நமக்குக் கிடைத்தவை முழுமை பெறாதவை. ஜுஸ்ஜானி என்ற அவரது பிரதான சீடரின் மூலமாகவே நமக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஆதாரபூர்வமானவையும், ஐயத்துக்கிடமானவையும் உண்டு.
450க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் எழுதியுள்ளார்! அவற்றில் 240 மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன! அவற்றில் 150 தத்துவம் பற்றியவை. 40 மருத்துவம் பற்றியவை. மிக மிக முக்கியமான சிலவற்றைப் பற்றிய குறிப்புகளை மட்டும் கீழே கொடுக்கிறேன்.
அல் கானூன் ஃபில் திப் – நோய்கள், அதற்கான தீர்வுகள் பற்றிய ஐந்து பாகங்கள் கொண்ட கலைக்களஞ்சியம் இது. பல மருத்துவப் பல்கலைக்கழங்களில் நிரந்தரப் பாடமாக இருந்தது. 760 வகையான மருந்துகளைப் பற்றி இந்நூல் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் பல கிரேக்கர்களுக்கே தெரியாதவை.
அஷ்ஷிஃபா – ’குணமடைதல்’ என்று பொருள். இது 18 பாகங்களாக எழுதப்பட்டது. தர்க்கம், கணிதம், இயற்கை விஞ்ஞானம், இறையியல், இசை, இயற்பியல் என பல விஷயங்களைப்பற்றி இந்நூல் பேசுகிறது.
அல் இஷாரத் – இப்னு சீனாவின் தத்துவங்களின் சுருக்கம்.
ஹய் பின் யக்ஸான் – ஆன்மிக விஷயங்களை உருவகக் கதைமூலமாகப் பேசுகிறது.
அல் மஷாயிலுல் அஷ்ரா – ஆதிகாலம், இயற்கையின் நிஜம், பிரபஞ்ச ஆன்மாவின் தன்மை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், செயலுக்கும் செய்பவருக்கும் இடையில் உள்ள உறவு – இப்படிப் போகிறது இந்நூல்.
ஃபீ ம’ஆரிஃபதின் நஃப்ஸ் – உடலின் நிஜம், மனதின் நிஜம், ஆன்மாவின் அழிக்க முடியாத தன்மை, இறையருள், இறைக்கோபம் காரணமாக ஆன்மா அடையும் நிலைகள் பற்றியது.
அல் ஃபைசுல் இலாஹி – வஹீ எனும் உள்ளுணர்வுத் தூண்டுதல், அற்புதங்கள், கனவுகள், மாந்திரீகம், சூனியம் போன்ற விஷயங்களை பற்றிப்பேசுகிறது. அல் ஃபலக், அந்நாஸ் போன்ற திருமறையின் அத்தியாயங்களையும் விளக்குகிறது.
இப்னு சீனாவுக்கு எதிரான கருத்துகளே அவருக்கு புகழைத்தேடித் தந்தன. ஏனெனில் அவரது கருத்தை மறுப்பதற்குமுன் அது என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் எதிரிகளுக்கு இருந்தது. ரோஜர் பேகன், டன்ஸ் ஸ்காட்டஸ் போன்றவர்கள் இப்னு சீனாவின் கருத்துகளால் உந்தப்பட்டனர்.
கிபி 1037ல் ஈரானில் உள்ள ஹமதான் நகரில் இப்னு சீனா இறந்தார். 2003-ல் அவர் பெயரில் ஒரு விஞ்ஞான விருதை யுனெஸ்கோ அறிவித்தது. அவர் வாழ்ந்த காலம் இஸ்லாமியப் பொற்காலம் என்று அறியப்படுகிறது. சரிதானே.
0