Skip to content
Home » வரலாறு தரும் பாடம் #20 – அஞ்சா நெஞ்சன்

வரலாறு தரும் பாடம் #20 – அஞ்சா நெஞ்சன்

நெப்போலியன்

ஆகஸ்ட் 15 என்று சொன்னால் நமக்கு சுதந்தர தினம் நினைவுக்கு வரும். ஆனால் உலகத்தையே ஆட்டி வைத்த ஒரு மாமனிதன் பிறந்த தேதியும் அதுதான்! கார்சிகா என்ற ஃப்ரெஞ்சுத்தீவில் பிறந்தது அந்தக் குழந்தை! அத்தீவு து ஐரோப்பாவையே கலக்கப்போகிறது என்று தத்துவவாதியான ரூஸோ சொன்னார். அங்கே பிறந்த அந்தக் குழந்தைக்காக அவர் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அந்தக் குழந்தையின் வாழ்க்கையோடு அவர் சொன்னது பொருந்திவிட்டது.

1769 மே 8ம் தேதி ப்ரெஞ்சுக்காரர்களுக்கும் போலி என்ற மக்களுக்கும் நடந்த போரில் போலி என்ற தலைவனைப் பின்பற்றியவர்கள் போலியோடு தோற்றோடினர். அதில் கார்லோ என்பவரும் அவரது 19 வயது ஆறுமாதக் கர்ப்பிணி மனைவியும் இருந்தனர். பிறக்க இருந்த குழந்தைதான் இக்கட்டுரையின் கதாநாயகன். அவள் ஒரு தேவாலயத்தில் வணங்கிக்கொண்டு அல்லது அல்லேலூயா பாடிக்கொண்டிருந்தபோது பிரசவவலி ஏற்பட்டது.

மெல்ல அருகிலிருந்த தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே ஒரு வேலைக்காரப் பெண்மணியின் உதவியுடன் ஆண் குழந்தை பிறந்தது. அதை அங்கிருந்த ஒரு கம்பளத்தின்மீது அவள் வைத்தாள். அக்கம்பளத்தில் இலியட், ஒடிஸி காவியங்களின் போர்க்களக்காட்சிகள் வரையப்பட்டிருந்தன. உலகையே உலுக்கப்போகும் போர்வீரனாக அந்தக் குழந்தை உருவாகும் என அக்கம்பளம் முன்னறிவித்ததோ என்று இப்போது தோன்றுகிறது! ‘பாலைவனச் சிங்கம்’ என்று பொருள்படும் பெயரை அக்குழந்தைக்கு வைத்தனர். அப்படி என்ன பெயர் என்று இப்போது சொல்லமாட்டேன்.

எழுதப் படிக்க, கணக்குப்போட, அப்புறம் வரலாறு, கொஞ்சம் லத்தீன் எல்லாம் ஏழு வயதில் குழந்தை கற்றுக்கொண்டது. அந்த வயதில் அம்மா கொஞ்சம் வண்ணக்கலவையைத் தன் குழந்தைகளுக்குக் கொடுத்தபோது மற்ற குழந்தைகளெல்லாம் பொம்மைகளை வரைந்தபோது இவன் மட்டும் ராணுவ வீரர்களை வரைந்தான்! அப்படி வரைந்தது விதியோ விதியின் சதியோ, ப்ரையன் என்ற ஊரிலிருந்த ராணுவப்பள்ளிக்கே அவன் அனுப்பப்பட்டான்.

அந்தப்பள்ளியில் ஓரினச்சேர்க்கை அதிகமாக இருந்தது. இவனை மற்ற கணவர்கள், மன்னிக்கவும் மாணவர்கள், பயன்படுத்த முயன்றபோதெல்லாம் சண்டைதான். சுயகௌரவம் உள்ள யாருக்குத்தான் அந்த அசிங்கம் பிடிக்கும்? மானத்தைக் காப்பாற்றவே ராணுவப்பள்ளியில் அவன் முதன் முதலில் சண்டை போட்டான்! கடற்படையில் சேரவேண்டும் என்ற அவனது ஆசையும் நிறைவேறவில்லை.

அப்பா இறந்தபோது ஒரு நினைவுச்சின்னம் எழுப்பலாமா என்று அவனிடம் கேட்கப்பட்டது. ‘வேண்டாம், இறந்தவர்களை நிம்மதியாக இருக்கவிடுங்கள். தாத்தா, கொள்ளுத்தாத்தா வெல்லாம் இறந்துதான் போனார்கள். அவர்களுக்கெல்லாம் ஏன் நினைவுச்சின்னம் எழுப்பவில்லை’ என்று கேட்டு அந்த விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். அவனுக்கும் அப்பாவுக்கும் இடையிலிருந்த உறவு அவ்வளவுதான்.

ராணுவத்தில் சேர்ந்த அவன் கொஞ்சம் குள்ளமாக இருந்தான். ஆனால் உலகத்தையே புரட்டிப்போட்ட மகா ஆளுமைகளான சீஸர், ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் போன்றோரும் குள்ளம்தான்! இவனும் அப்படி ஆவானா என்று தெரியாமல் உலகம் காத்துக்கொண்டிருந்தது.

அவனுக்கு பணப் பிரச்னையும் இருந்தது. பிரச்னை தீர எழுத்தாளராகிவிடலாமா என்று நினைத்தான்! அவனிருந்த நாடு அப்படி! நம் நாட்டில் எழுத்தாளராக இருப்பது என்றால் வறுமையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது என்று ஒரு பொருளுண்டு! ஒரு சில கொடுத்துவைத்தவர்களைத்தவிர!

தனது ஹீரோவான ரூஸோவைத் தாக்கி எழுதப்பட்ட ஒரு நூலை மறுத்து இவனொரு நூல் எழுதினான். ஒரு அரேபிய தீர்க்கதரிசியைப்பற்றி ஒரு கதை எழுதினான். தற்கொலை செய்துகொள்ளலாமா என்று பலமுறை நினைத்துள்ளான். ‘தனிமையிலேயே இருக்கிறேன். வாழ்க்கை சுமையாகவே உள்ளது. சந்தோஷமே இல்லை’ என்று டயரியில் எழுதிவைத்தான்.

பதினெட்டாவது வயதில் ஒருநாள் தன் கன்னித்தன்மையை இழந்துவிட்டான்! ஒரு கன்னியிடம் அல்ல; விலைமாதுவிடம்! ஆனாலும் அவனது வாழ்வில் ஒரு ஒழுங்கு இருந்தது. காலையில் நான்கு மணிக்கு எழுவான். ஒரு ஞானியைப்போல ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுவான். பகல் மூன்று மணியளவில். பதினெட்டு மணிநேரம் படித்துக்கொண்டிருப்பான். இரவு பத்து மணிக்கெல்லாம் படுக்கப்போய்விடுவான். இதனால் அவன் உடல்நலமும் கொஞ்சம் பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட பதினைந்து மாதங்கள் தொடர்ந்து படித்து, பீரங்கிப்படைத் தாக்குதல், வரலாறு, தத்துவம் போன்றவற்றைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டான். அவற்றைப்பற்றி அவனது குறிப்புகள் மட்டுமே 36 நோட்டுப்புத்தகங்களை நிறைத்திருந்தன!

இப்படியெல்லாம் செய்துகொண்டும், பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக்கொண்டும் இருந்தவன் திடீரென்று செய்த அதிரடியான காரியங்களால் ஃபிரான்ஸ் நாட்டுக்கே ராஜாவானான்! ஆமாம். இவ்வளவு நேரமும் நெப்போலியனைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஐந்துபேர் கொண்ட ஒரு குழு அப்போது ஃபிரான்ஸை ஆண்டுகொண்டிருந்தது. அவர்களை எதிர்த்து நடந்த ஒரு சின்ன யுத்தத்தில் வெகு தீவிரமாகவும் திறமையாகவும் துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைப் புரட்சியாளர்களிடமிருந்து நெப்போலியன் காப்பாற்றினார். பின்னர் 1796ல் ஆஸ்திரியர்களுக்கு எதிராக நடந்த ராணுவ நடவடிக்கையில் பெருவெற்றி கிடைத்தது. அதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவர் ஹீரோ ஆகிவிட்டார்.

1799-ல் அவர் நடத்திய ஒரு அதிரடித்தாக்குதலில் ஃப்ரெஞ்சுக்குடியரசின் தலைவரானார். அதாவது நாட்டின் மகாராஜா ஆனார். ரோமானியர், ரஷ்யர், பிரஷ்யர், ஆஸ்திரியர் ஆகியோரோடு நடந்த பல போர்களில் தொடர்ந்து வென்றார்.

இறுதியாக 1813-ல் அவரை எதிர்த்து ரஷ்யா, பிரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் போன்ற நாடுகள் இணைந்து நான்கு நாட்கள் நடத்திய போரில் தோற்று எல்பா என்ற தீவுக்கு கடத்தப்பட்டார். அந்தப் போரில் மட்டும் 1,33000 பேர் இறந்து போனார்கள்!

1815-ம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று எல்பா தீவிலிருந்து ஒருநாள் 700 பேருடன் நெப்போலியன் தப்பித்தார்! இரண்டு நாள் கழித்துத் தரையிறங்கியபோது அவரை வழிமறுத்துக் கைதுசெய்ய ஐந்தாம் படைப்பிரிவு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களை நோக்கி அவர் தனியாகச் சென்றார்!

‘இதோ உங்கள் மன்னன் வந்திருக்கிறேன். என்னைச் சுட்டுக் கொல்வதாக இருந்தால் கொல்லுங்கள்’ என்றார். உலக வரலாற்றின் வினோதமான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. என்ன துணிச்சல், என்ன ஒரு தீர்க்க தரிசனம்! அவர் நினைத்தபடியே வீரர்கள், ‘வாழ்க, சக்கரவர்த்தி’ என்று கோஷமிட்டு அவருக்கு அடிபணிந்தனர்! அவரைக் கைதுசெய்து கொண்டுவருவேன் என்று சூளுறைத்திருந்த ‘நே’ என்பவன் நெப்போலியனின் கையைத்தொட்டு முத்தமிட்டான்! மீண்டும் அரியணை ஏறினார் நெப்போலியன். ஆனால் நூறு நாட்கள் மட்டும்தான் அந்த ஆட்சி நீடித்தது.

மீண்டும் பிரிட்டிஷ் வீரர்களால் பிடிக்கப்பட்டு செயிண்ட் ஹெலனா என்ற தீவில் ஒரு வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டார். உடல்நலம் குன்றி இறக்கும்வரை அங்கேயேதான் இருந்தார். அந்தத் தனிமையிலும் ஜூலியஸ் சீசரைப்பற்றி ஒரு புத்தகம் எழுதினார்! நேரு ஜெயிலில் இருந்தபோது ‘டிஸ்கவரி ஆஃப் இண்டியா’ நூலை எழுதிய மாதிரி. எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனதை லகுவாக வைத்துக்கொள்ள மகாபுருஷர்களால் மட்டுமே முடியும் போலிருக்கிறது.

இறந்தபிறகு அவர் உடலை அங்கங்கே வெட்டி பிரேத பரிசோதனை செய்தார் ஒரு டாக்டர். நெப்போலியனின் உடலின் சில பாகங்களை வெட்டி எடுத்துக்கொண்டார். கூடவே அவரது ஆண்குறியையும்! அதன்மேல் அவருக்கு அப்படியொரு வெறி ஏனென்று தெரியவில்லை!

1927-ல் நியூயார்க்கின் ‘ஃப்ரெஞ்சு கலைப்பொருள் கண்காட்சி’யில் ‘அது’வும் வைக்கப்பட்டது! 1977-ல் ஜான் லாட்டிமர் என்பவர் அதை மூவாயிரம் டாலருக்கு வாங்கினார்! அது இப்போது அவர் மகளிடம் இருக்கிறதாம்! ஒரு லட்சம் டாலர் தருவதாகச் சொல்லியும் அதை அவள் கொடுக்கவில்லையாம்! அதிலென்ன சந்தோஷமோ அந்தப் பெண்ணுக்கு!

இறப்பது பெரியவிஷயமல்ல. ஆனால் தோற்கடிக்கப்படுவது ஒவ்வொரு நாளும் இறப்பதாகும் என்று நெப்போலியன் சொன்னார்!

0

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *