அவர் ஒரு தேவாலயப்பாதிரியார்; அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தாவைப்போலவே. அப்பா சுயசிந்தனையும் துணிச்சலும் கொண்டவர். கருப்பின சமுதாயத்தவருக்கான எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்துக்கு அருகிலிருந்தது அவர்களது வீடு. அங்கே அவர்தான் போதகர்.
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற ரீதியில் அனல் பறக்கும் அவரது பேச்சைக்கேட்ட மக்கள் உந்தப்பட்டனர். அப்படியெல்லாம் பேசியதற்காக அப்பாவை யாரும் அடிக்காமல் விட்டதே மகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு துணிச்சலாக அவர் பேசினார். கிறிஸ்தவம் போதித்த அன்பையும் சமத்துவத்தையும் பற்றி அடிக்கடி தேவாலயத்தில் சொற்பொழிவாற்றினார்.
போதிப்பதற்காகவே பிறந்தவர்கள் நாம் என்றுதான் நம்ம ஹீரோவுக்கும் தோன்றியது. அட்லாண்டாவில் ’ஸ்வீட் ஆபர்ன்’ என்ற பாதுகாப்பான பகுதியில்தான் ஆயிரக்கணக்கான கருப்பினத்தவர் வாழ்ந்தனர். முன்னால் அடிமைகள் மற்றும் அவர்களது வழிவந்தவர்கள். வேறு பகுதிகளில் கறுப்பர்களுக்கு பிரச்னை என்றால் ஸ்வீட் ஆபர்னுக்கு ஓடிவந்துவிடுவார்கள். அங்கேதான் நம் கதாநாயகனும் வளர்ந்து வந்தார்.
ஒவ்வொரு நாளும் புனித பைபிளோடு உறவுகொள்ளும் வாழ்க்கையாக அவர்களது இருந்தது. தினமும் பைபிளை வாசிப்பார்கள், சேர்ந்து பாடுவார்கள், சப்தமாகக் கூட்டுப்பிரார்த்தனை செய்வார்கள்.
பதிமூன்றாவது வயதிலேயே சுயசிந்தனை வெளிப்பட்டது நம் நாயகனுக்கு. உடம்போடு மீண்டும் உயிர்பெற்று இயேசு வந்தார் என்பதை மறுத்து அச்சிறுவன் பேசினான்! பைபிளில் சொல்லப்பட்டவை தொடர்பாக அப்போதிலிருந்தே அவனுக்குள் பல சந்தேகங்கள் எழுந்தன. பதினான்கு வயதிலேயே மக்கள் மத்தியில் பேசும் திறனை வளர்த்துக்கொண்டான். பேச்சுத்திறமை அவனது பரம்பரையின் ரத்த சொத்தாக இருந்தது.
ஒருமுறை டப்ளினிலிருந்து பேருந்தில் வந்தபோது ஒரு கசப்பான அனுபவம் முதன்முறையாக அவனுக்கு ஏற்பட்டது. பேருந்திலிருந்த இருக்கைகளில் உட்கார்ந்ததற்காக ஓட்டுனர் அவர்களை அசிங்கமாகத்திட்டினான். தன் குடும்பத்தினர் அடிக்கடி பேசும் விஷயத்தின் கசப்பு எத்தகையது என்பதை முதன்முறையாக அவன் சுவைத்தான். கருப்பு நிறம் கொண்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் அவர்கள் நசுக்கப்பட்டனர்.
கறுப்பர்களுக்கென ஒதுக்கப்பட்ட ‘சேரி’யில்தான் அவர்கள் வாழவேண்டும். வெள்ளையர்களோடு ஒன்றாக உட்காரவோ, சாப்பிடவோ, பேருந்து, ரயிலில் பயணம் செய்யவோ முடியாது. வெள்ளையர் பள்ளிகளில் படிக்கமுடியாது என்பது மட்டுமல்ல, கருப்பு நிறத்தில் ஒரு இருக்கைகூட அங்கே கிடையாது. வரிமட்டும் கொடுக்கவேண்டும், ஆனால் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது!
உணவகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள், எலிவேட்டர்கள், நூலகங்கள் என பொதுஇடங்களில் ‘வெள்ளையர் மட்டும்’ என்று போட்டிருக்கும்! எங்குமே, எதிலுமே செல்லமுடியாது. உலகெங்கிலும் இப்படிப்பட்ட பாரபட்சமான காலகட்டத்தைத்தாண்டித்தான் மனிதர்கள் வந்திருக்கிறார்கள்.
வாக்களித்தார் என்பதற்காக 1946ல் அட்லாண்டாவில் ஒரு கருப்பரைச் சுட்டுக்கொன்றனர். பின்னர் இரண்டு கருப்புத்தம்பதியரை இருபது பேர் சுட்டுக்கொன்றனர். அந்த அநியாயத்தை எதிர்த்து கிங் – நம் நாயகரின் பேரே அதுதான் – காட்டமான ஒரு கடிதம் எழுதினார். அவரது புரட்சி வாழ்வு அங்கே தொடங்கியது.
17 வயதானபோது மதகுருவாக விருப்பம் தெரிவித்தார் கிங். மனிதகுலத்துக்குச் சேவைசெய்யும் உந்துதலில் கிடைத்த உள்ளுணர்வின் வெளிப்பாடு அதுவென்று பின்னாளில் அவர் கூறினார். அவரது முதல் தேவாலய உரையே அவர் யார் என்பதைக் காட்டியது. தந்தையார் மகிழ்ந்துபோனார். 1948-ல் முறைப்படி மதகுருவாக அங்கீகரிக்கப்பட்ட அதே ஆண்டு சமூவியலில் இளங்கலைப்பட்டமும் பெற்றார். ஒரு கட்டத்தில் மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையால் கவரப்பட்டார்.
மதகுருவாக நாளுக்கு நாள் பிரபலமாகிக்கொண்டே போனார். அவரது நகைச்சுவை கலந்த, உணர்ச்சி மிகுந்த பேச்சு கேட்பவரைக் கட்டிப்போட்டது. அலபாமா மாகாணத்தின் தலைநகரான மாண்ட்கோமரியில் நடந்த ஒரு நிகழ்ச்சி கிங் மேற்கொண்டு பயணிக்கவேண்டிய திசையைக்காட்டியது.
’இங்கே வெள்ளையருக்கு மட்டுமே அனுமதி’ என்று 21 மாநிலங்களுக்கு மேல் நடப்பிலிருந்த பிரிவினைக்கோட்பாடு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்புகொடுத்திருந்தும் பிரிவினை வாதம் ஒழிந்துவிடவில்லை. தீர்ப்புகளில் உணர்ச்சி இருப்பதில்லை. உணர்ச்சிகளுக்கு அறிவிருப்பதில்லை. ஆனால் பிரிவினை வாதத்துக்கு எதிரான பிரமாண்டப் போராட்ட முயற்சியின் பிள்ளையார் சுழியாக அது இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் மாண்ட்கோமரி நகரில் வரலாற்றுப் புகழ்பெற்ற அந்த சம்பவம் நடந்தது.
மாண்ட்கோமரி நகரின் பேருந்துகளில் செல்பவர்களில் 75 விழுக்காடு கருப்பர்கள்தான். ஓட்டுநர்கள் அனைவரும் வெள்ளையர். பேருந்தின் முன்பக்கமாக ஏறி டிக்கட் வாங்கிக்கொண்டு அப்படியேபோய் காலி இருக்கையில் ஒரு கருப்பர் உட்கார முடியாது. முன்னாலிருக்கும் நான்கு வரிசை இடங்களும் வெள்ளையர்களுக்கானது. டிக்கட் வாங்கிக்கொண்டு, பஸ்ஸை விட்டுக்கீழிறங்கி, பின்பக்கமாக மீண்டும் ஏறி, பின்னாலுள்ள இருக்கைகளில்தான் உட்காரவேண்டும்.
வெள்ளையர்களுக்கான நான்கு வரிசைகளிலும் ஆட்களிருந்தால் பின்னாலுள்ள எந்த இருக்கையிலும் ஒரு வெள்ளைக்காரி உட்கார்ந்துகொள்ளலாம். ஆனால் இரண்டுபேர் உட்காரக்கூடிய இருக்கையில் ஒரு கருப்பினப்பெண் அமர்ந்திருந்தால் அவள் உடனே எழுந்துகொள்ளவேண்டும். அருகருகில் அமர்ந்து கருப்பரும் வெள்ளையரும் செல்வதற்கு அனுமதி இல்லை.
1955, டிசம்பர் 01, வியாழக்கிழமை. வரலாற்றைப் புரட்டிப்போட்ட ஒரு நிகழ்ச்சி அன்று நடந்தது மாண்ட்கோமரியில். ரோசா பார்க்ஸ் என்ற தையல்கார கருப்பினப்பெண் முறைப்படி டிக்கட் வாங்கிக்கொண்டு, கருப்பினத்தவர் அமரும் நான்கு பேருக்கான இருக்கையில் போய் அமர்ந்தார். கூடவே மூன்றுபேர் இருந்தனர். ஒரு வெள்ளைக்காரன் மட்டும் நின்றுகொண்டிருந்தான். அந்த நான்கு கருப்பினத்தவரையும் எழச்சொன்னான் ஓட்டுனர். மூன்றுபேர் எழுந்தனர். ஆனால் ரோசாபார்க்ஸ் எழ மறுத்து ஒரு கருப்பினப்புரட்சியைத் தொடங்கி வைத்தார்.
ஓட்டுனர் காவல்துறைக்குச் சொன்னதும், ரோசாவுக்கு 100 டாலர் அபராதம் விதித்தனர். அதை எதிர்த்து கிங்கும் இன்னும் சிலரும் இணைந்து டிசம்பர் 05 அன்று செய்த மாண்ட்கோமரி பேருந்துகளின் புறக்கணிப்பு வெற்றியடைந்தது. கிங்கின் சொல்லை மதித்து கருப்பினத்தவர் யாரும் பேருந்தில் செல்லவில்லை. ஒரு சில வெள்ளையர்களைத்தவிர. அது அரசாங்கத்துக்கு எச்சரிக்கையையும் கடுமையான வருமான இழப்பையும் கொடுத்தது.
‘அவர்கள் சபித்தால், திருப்பி சபிக்காதீர்கள், தள்ளினால் திருப்பித் தள்ளாதீர்கள், அடித்தால் திருப்பி அடிக்காதீர்கள்’ என்று அகிம்சை முழக்கமிட்டார் கிங். ‘அதிசயம் நிகழ்ந்துள்ளது. உறங்கிக்கொண்டிருந்த கருப்பின சமுதாயம் விழித்துக்கொண்டது’ என்றும் கூறினார்.
ஒரு ஆண்டுக்கும் மேலாகப்போராடிய பிறகு பேருந்துகளில் இருக்கைகளைப்பிரித்து வைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1956ல் தீர்ப்பளித்து அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கிங் தேசியத்தலைவரானார்.
பின்னர் பல பிரச்சனைகள், பல போராட்டங்கள், சிறைவாசம், விடுதலை என்று போனது அவரது வாழ்க்கை. ஒரு கட்டத்தில் 3000 கருப்பினக் குழந்தைகளைக்கூட அமெரிக்க அரசு சிறைவைத்தது! அவர்களின்மீது காவல்துறை நாய்களை ஏவிவிட்டது. பர்மிங்க்ஹாம் நகரில் ஆங்காங்கே ‘பாம்’ வெடித்தது. ’பர்மிங்ஹாம் பாம்பிங்ஹாம்’ ஆகிவிட்டது என்றார் வரலாற்று ஆசிரியர்.
1964-ன் ஆண்மகனாக கிங்கை டைம்ஸ் பத்திரிக்கை தேர்ந்தெடுத்தது. அதே ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு 22 கோடி அமெரிக்கக் கருப்பினத்தவருக்காகப் போராடிய அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதுவும் 35 வயதில்!
கருப்பினத்தவரின் விடுதலைக்காக 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி நடத்தப்பட்ட நடைபயணத்தில் கிங் பேசிய ‘எனக்கொரு கனவுண்டு’ என்ற பேச்சு உலகப்புகழ்பெற்றது. இன்றும் யூட்யூபில் அதைப் பார்க்கலாம். இரண்டரை லட்சத்துக்கும் மேலானோர் கூடியிருக்கும் அந்த பிரம்மாண்டமான கூட்டம் பார்க்க ஒரு காவியத்தன்மை கொண்டதாக இருக்கும். அவரது அந்தப்பேச்சு ஆங்கில இலக்கியத்தில் ஒருபாடமாக வைக்கப்பட்டிருந்தது.
1968-ம் ஆண்டு, மெம்ஃபிஸ் என்ற ஊரிலிருந்த ஒரு ஹோட்டல் பால்கனியில் ஏப்ரல் 4ம் தேதி நின்று பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு 39 வயதில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் இறந்தார்.
அந்த அமெரிக்க அம்பேத்கரின் உடல் மட்டும்தான் போய்விட்டது. புகழும் அவரது செய்தியும் என்றும் நிலைத்திருக்கும்.
0