Skip to content
Home » வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 2 – ஆஷ், வாஞ்சி மற்றும் பெல்ஜியம் நாட்டுத் துப்பாக்கி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 2 – ஆஷ், வாஞ்சி மற்றும் பெல்ஜியம் நாட்டுத் துப்பாக்கி

2011ஆம் ஆண்டு ஆஷ் மற்றும் வாஞ்சிநாதன் மறைந்து நூறாண்டுகள் நினைவுகூரும் நாளில், வாஞ்சிநாதன் குடும்பத்திற்கு அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷின் பேரன் ராபர்ட் ஆஷ்  கடிதமொன்றை அனுப்புகிறார். இக்கடிதம் பேராசிரியர் வேங்கடாசலபதி வழியாக அனுப்பப்பட்டுள்ளது.

‘துயரமும், பெருமிதமும் ஒருங்கே அமைந்த இந்த நாளில், ராபர்ட் வில்லியம் ஆஷ் அவர்களின் பேரனும் கொள்ளுப் பேத்திகளுமாகிய நாங்கள், வாஞ்சி அய்யரின் குடும்பத்துக்கு ஆறுதலையும் நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். லட்சிய நோக்கமுள்ள அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சிநாதன். அவரது விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது. இருவருமே அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள். அவர்கள் ஆட்சியாளர்களானாலும் ஒடுக்கப்படுபவர்களானாலும், பெரும் பிழைகளைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இப்போது உயிர் வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ள நாம், பழையவற்றை மறந்து சமாதானத்துடன் வாழ்வது முக்கியமானது.’

அன்புடன்,

ராபர்ட் ஆஷ் குடும்பத்தினர், அயர்லாந்து.

நடந்ததை மறந்து சமாதானமாக இருப்போம் என முடியும்படி இருக்கும் கடிதம் தமிழக மக்களுக்கு எழுதிய கடிதமாகவே பார்க்கலாம். பதில் கடிதமாக, ஆஷின் வாரிசுகள் இந்தியா வந்தால் வரவேற்போம் என வாஞ்சி குடும்பத்தினர் எழுதினர். இங்ஙனம் இவர்கள் எழுதிக்கொண்ட கடிதங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமென்ன? வாஞ்சிநாதனுக்கும் வ.உ.சிக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைச் சில முக்கிய வரலாற்று நிகழ்வுகள் மூலமும் இந்தியாவைப் புரட்டிப் போட்ட சரித்திர சம்பவங்களின் வழியும் காணலாம்.

கொடைக்கானலில் படிக்கும் தனது குழந்தைகளைக் காண்பதற்காகத் தனது மனைவி மேரியுடன் ஜூன் 17, 1911 அன்று ரயில் மூலம் மணியாச்சி ரயில் நிலையம் வந்து சேர்ந்தார் கலெக்டர் ஆஷ். அவர் அமர்ந்திருந்த முதல் வகுப்புப் பெட்டியை, சிலோன் போட் மெயில் ரயிலுடன் இணைத்து கொடைக்கானல் கிளம்ப ஆயத்தமாயினர்.

ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் என்கிற ஆஷ், நவம்பர் 23, 1872இல் அயர்லாந்தில் பிறந்தார். டப்லினிலும், ட்ரினிட்டியிலும் படிப்பை முடித்தார். 1894இல் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 1895ஆம் ஆண்டில் இந்தியா வந்தடைந்தார். முதலில் துணைக் கலெக்டராகவும், பின் 1907ஆம் ஆண்டில்  திருநெல்வேலி  மாவட்ட கலெக்டராகவும் பதவி உயர்வு பெற்றார்.

இந்தக் காலகட்டத்தில்தான் வ.உ.சியின் தலைமையில் நெல்லையில் சுதந்திரப் போராட்டம் எழுச்சி கண்டது. சுதேசி இயக்கமும் சுதந்திரக் கனலும் ஒருசேர கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்தது. நெல்லை விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டு, வ.உ.சி சிறைக்குச் செல்லக் காரணமாயிருந்தவர்களுள் ஒருவர்தான் கலெக்டர் ஆஷ்.

நெல்லை எழுச்சி அடங்கிய மூன்றே வாரங்களில் ஆஷ் கோதாவரி மாவட்டத்திற்கு மாற்றலாகிப்போனார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் தன் குழந்தைகளைக் காண்பதற்கு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மனைவியுடன் ரயில் பெட்டியில் இருந்தார் ஆஷ்.

நேரம், காலை 10.38 மணி. ஆஷின் காவலர் தண்ணீர் நிரப்புவதற்காகச் சென்ற நேரம் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர், ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பில் ஏறினார். இளைஞனின் கையிலிருந்த பெல்ஜியம் நாட்டு ப்ரவுனிங் வகை துப்பாக்கியிலிருந்து கிளம்பிய தோட்டாக்கள் ஆஷின் மனைவியின் கண்ணெதிரே ஆஷின் நெஞ்சைத் துளைத்தது. மூன்று முறை துப்பாக்கிச் சப்தம் ரயில் நிலையத்தின் காதைப் பிளந்தது. மனைவியின் தோளில் சாய்ந்து உயிரை விட்டார் ஆஷ்.

ரத்தக் களறியான ரயில் பெட்டியை விட்டு இளைஞன் தப்பியோடி அருகே இருந்த கழிவறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான். எவ்வளவோ பிரயத்தனம் எடுத்தும் அவ்விளைஞனை வெளியே கொண்டுவர இயலவில்லை. அதற்குள் அந்த இளைஞன் துப்பாக்கியை வாயில் வைத்து ட்ரிகரை அழுத்த, மீண்டுமொருமுறை துப்பாக்கிச் சப்தம். கதவைத் திறந்த காவலாளிகளுக்குக் கிடைத்தது, அவரின் சட்டைப் பையில் இருந்த இரண்டாம் வகுப்பு பிராயண டிக்கெட்டும், இரண்டு கடிதங்களும் மட்டுமே.

ஒன்று, பிரான்சிலிருந்து வெளிவந்த ‘வந்தே மாதரம்’ பத்திரிக்கையின் தலையங்கப் பகுதி. ‘வெள்ளையர்களைக் கொன்று பாரத மாதாவுக்கு ரத்த அபிஷேகம் செய்ய வேண்டும்’ என்று அதில் எழுதி இருந்தது.

மற்றொன்று, காவல் துறைக்கு அந்த இளைஞன் எழுதியிருந்த கடிதம். அதில், ‘இங்கிலாந்து கயவர்கள் நமது நாட்டைக் கைப்பற்றிச் சனாதன தர்மத்தை அழிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் அவர்களை விரட்டியடித்து சனாதன தர்மத்தை நிலை நாட்ட அவரவர் பங்கிற்கு முயல்கிறார்கள். ராமன், கிருஷ்ணன், வீர சிவாஜி, குரு கோவிந்த், அர்ஜுனன் போன்றவர்கள் ராஜ்ஜியம் செய்து தர்மத்தைப் பாதுகாத்தனர். அப்படிப்பட்ட நம் நாட்டில் ஐந்தாம் ஜார்ஜ்க்கு முடிசூட்டி அழகு பார்க்க நினைக்கிறது ப்ரிட்டிஷ் அரசு. நமது மதராசிகள் மூவாயிரம் பேர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை இந்திய மண்ணை மிதித்ததும் அவரைக் கொல்லச் சபதம் எடுத்திருக்கிறார்கள். எங்களது எண்ணத்தை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காக எங்கள் கூட்டத்தின் மிகச் சிறியவனான நான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் இதுபோன்ற செயல்களைச் செய்வதைத் தங்கள் கடமையாகக் கருதுகிறார்கள்.’ என்றெழுதி ஆங்கிலத்திலும் தமிழிலும் தேதி குறிப்பிடாமல் வாஞ்சி அய்யர்  எனக் கையொப்பமிட்டிருந்தது.

கொலை செய்தவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணைத் தொடங்கி தேடுதல் வேட்டை துரிதமாக நடந்தன. முடிவில் பதினாறு பேர் ஆஷின் கொலைச் சதிக்கு உடன்பட்டோர் எனப் பட்டியல் தயாரானது. ஏற்கெனவே பாரதிக்கும் வாஞ்சிநாதனுக்கும் இருந்த தொடர்பு பாரதியை குற்றவாளிகளில் ஒருவராகச் சேர்த்தது. பாரதியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்குச் சன்மான தொகை தருவதாகவும் அறிவித்தது அரசாங்கம்.

கைது நடவடிக்கைக்குப் பயந்து ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்டார். மற்றொருவர்  விஷம் குடித்து இறந்துபோக, மீதமுள்ள பதினான்கு பேரையும் கைது செய்து கடுங்காவல் தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் அரசாங்கம்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஆஷின் படுகொலை தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களைக் கொதிப்படையவும், நிலைகுலையவும் செய்திருந்தது. இந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கெதிராக நடந்த எதிர்ப்பில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஆஷைக் கொன்ற வாஞ்சிநாதன், 1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாகப் பிறந்து, செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். இயற்பெயர் சங்கரன். திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பு முடித்தவர். படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலராகவும் பணியாற்றினார்.

பிரிட்டிஷ் அரசு மேல் கோவமுற்று இருந்த வாஞ்சிநாதனுக்கு, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் விடுதலை உரைகள் மனதைக் கவர்ந்தன. தன்னையும் சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, தன் அரசு வேலையைத் துறந்தார்.

பின்னர் புதுவையில் வ.வே.சு. ஐயர் வீட்டில் சென்று தங்குவதும், மகாகவி பாரதியுடனான நெருக்கமும் அவரைப் பாரத மாதா இயக்கத்தில் இணைத்தது. ஆங்கிலேயருக்கு எதிராக முழு வீச்சுடன் போராடத் தூண்டியது. விளைவு, ஆஷை சுட்டுக் கொன்றதுடன் உயிரையும் காவு வாங்கியது.

வ.உ.சிக்கு இழைக்கப்பட்ட அநீதியும், நீதிமன்றத்தின் அநியாயத் தீர்ப்புமே ஆஷின் படுகொலைக்கு முக்கியக் காரணம். ஆஷ் கொலை வழக்கு தொடர்பான செய்திகள் மட்டும் 1911ஆம் ஆண்டு ஜூன் 19ம் தேதி முதல் 1912 பிப்ரவரி 15ஆம் தேதி வரை சுமார் எழுநூற்றைம்பது பக்கங்களுக்கு மேல் சுதேசமித்திரனில் வந்துள்ளதாகக் குறிப்புகள் சொல்கின்றன.

தீவிரப் போராட்டக் குழுவினர் மேலும் இரண்டு பேரின் உயிரை நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அம்மீதமுள்ள இருவர், 1908ஆம் ஆண்டில் திருநெல்வேலி ஆட்சியராக இருந்த வின்ச்  மற்றும் நீதிபதி பின்ஹாம்.

வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைப்பதற்குக் காரணம் இம்மூவரே. இந்தியா முதல் இங்கிலாந்து வரை அதிர்ந்த அந்த இரட்டை ஆயுள் தண்டனைத் தீர்ப்பினைப் பெறும் அளவிற்கு ஆங்கிலேயர்களுக்கு வ.உ.சி மேல் இருந்த கோபம், வன்மம் என்ன? வ.உ.சி. செய்த குற்றம்தான் என்ன? அனைத்தையும் விரிவாக வரலாறெனும் கடலில் இறங்கி ஆழமாகக் காண்போம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *