அந்தணனாகிய சோமசர்மன், ராஜா பர்த்ருஹரி ஆண்ட உத்கல தேசம் என்னும் ராஜ்ஜியத்தில்தான் வசித்து வந்தான். சகல சாஸ்திரங்களையும் கற்றிருந்த சோமசர்மன் வைதீகக் காரியங்களில் ஈடுபட்டும், உஞ்சவிருத்தி செய்து யாசகம் பெற்றும் வாழ்க்கை நடத்தி வந்தான்.
ஆனால் அவன் முதுமையடைந்த பிறகு எங்கும் செல்வதற்கு முடியாமலும், பொருளீட்ட முடியாமலும் வறுமையில் வாடினான். நாலு இடத்துக்கு போய் யாசகம் கேட்கக்கூட உடலில் வலு இல்லை. பசி பட்டினியாக மிகவும் துன்பப்பட்டான்.
அப்போது சோமசர்மன், வறுமையிலிருந்து மீள்வதற்காக தேவி மகாலக்ஷ்மியை நோக்கித் தவம் செய்யத் தீர்மானித்தான். அதன்படியே மிகுந்த சிரமத்துடன் தட்டுத் தடுமாறி காட்டுக்குச் சென்று, லக்ஷ்மிதேவியை நோக்கித் தவமிருந்தான்.
மழை, வெயில், காற்று, புயல், மிருகங்கள் போன்ற அத்தனை இடைஞ்சல்களையும் தாண்டி, சோமசர்மன் விடாப்பிடியாக தவமிருந்ததால் மகாலக்ஷ்மி மனம் மகிழ்ந்து போய் அவன் முன் தோன்றினாள். ‘சோமசர்மனே! உனக்கு என்ன வரம் வேண்டும்? தயங்காமல் கேள்’ என்றாள்.
தேவியின் தரிசனம் கண்ட சோமசர்மன் மெய் சிலிர்த்துப் போய் அவளது திருப்பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.
‘தேவி, மகாலக்ஷ்மி, இந்த வயதான காலத்தில் நான் வறுமையில் மிகவும் துன்பப்படுகிறேன் தாயே! தயவுசெய்து என் மேல் கருணை கொண்டு பொன், பொருள் செல்வச் சுகங்களைத் தந்தருள வேண்டும் தயாபரியே!’ என்று வேண்டினான்.
‘சோமசர்மா, உனது இந்த விருப்பத்தை என்னால் இப்போது நிறைவேற்றி வைக்கமுடியாது. அதற்கு விதியில் இடமில்லை. செல்வச் சுகங்களை அனுபவிக்கும் பாக்கியம் இந்தப் பிறவியில் உனக்கு இல்லை! வேறு ஏதாவது கேள்’ என்று கூறினாள்.
சோமசர்மனுக்கு வருத்தமாக இருந்தாலும் வறுமையிலிருந்து மீள வேறு என்ன வரம் கேட்கலாம் என்று யோசித்தான். மீண்டும் இளமை திரும்பி, பழைய உடல் வலிவு பெற்றால் முன்பு போல வீடு வீடாகச் சென்று யாசகம் செய்தாவது இந்த வறுமையிலிருந்து மீண்டு விடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.
அதையே வரமாகக் கேட்டான். ‘தாயே மகாலக்ஷ்மி! எனது இந்த வயோதிகத் தன்மை போய் நான் மீண்டும் இளமை பெற வேண்டும்!’
‘சரி! அப்படியே ஆகட்டும்!’ என்று கூறிய பூமாதேவி, ஒரு பெரிய கனிந்த மாதுளம் பழத்தை வரவழைத்து சோமசர்மனிடம் தந்தாள். ‘சோமசர்மா! இந்தப் பழம் சாதாரணப் பழமல்ல. என்றுமே மாறாத இளமையைத் தரக்கூடியது. பழத்தைச் சாப்பிடு. நீ விரும்பியது நடக்கும்!’ என்று சொல்லி மறைந்தாள்.
சோமசர்மன் மிகுந்த சந்தோஷத்துடன் வீட்டுக்குத் திரும்பினான். மறுநாள் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து பூஜை புனஸ்காரங்கள் செய்து பய பக்தியுடன் பழத்தைச் சாப்பிடலாம் என்று அமர்ந்தபோது அவனது மனத்தில் ஒரு பொறி தட்டியது. தீர்க்கமாகச் சிந்தித்தான்.
‘இந்தப் பழத்தை நான் சாப்பிட்டால் மாறாத இளமை கிடைக்கும். அதன்மூலம் இறப்பைக்கூடத் தள்ளிப் போடலாம். ஆனால் இதன் மூலம் நான் சாதிக்கப் போவதென்ன? இந்த இளமையைச் சுக போகமாக அனுபவிக்கச் செல்வம் இருக்கிறதா என்ன? அல்லது எனது வறுமைதான் தொலைந்து விடப் போகிறதா? இல்லவேயில்லை! காலமெல்லாம் யாசகம் செய்து மற்றவரிடம் கையேந்திதான் எனது பிழைப்பு நகரப் போகிறது. அப்படியிருக்க, எதற்கு இந்த அபூர்வப் பழத்தை நான் வீணடிக்க வேண்டும்?’ சோமசர்மனுவுக்கு அந்தப் பழத்தை சாப்பிடும் விருப்பமில்லாமல் போனது.
வேறு யாருக்கு இந்தப் பழத்தை அளிப்பது? யோசிக்கும்போது பழத்தை உண்ணத் தகுதியானவன் நாட்டை ஆளும் அரசனே என்ற முடிவுக்கு வந்தான். காலம் தாழ்த்தாமல் உடனே புறப்பட்டு அரண்மனைக்குச் சென்றான். ராஜ தர்பாரில் மன்னனைப் பார்த்து வணங்கினான்.
‘தர்மநெறி தவறாத மாமன்னரே நீவிர் நீடுழி வாழ்க!’ என்று வாழ்த்தி, ‘மன்னா, இந்த அபூர்வக் கனியைத் தங்களுக்கு அளிக்கவே நான் இங்கு வந்தேன்!’ என்று சொல்லி மாதுளம் பழத்தைக் கொடுத்தான்.
பழத்தைப் பெற்றுக் கொண்ட மன்னன், ‘அந்தணரே! உமக்கு என் நன்றி. அபூர்வமான பழம் என்கிறீரே! அப்படியென்ன சிறப்பு இதில்?’ என்று ஆர்வத்துடன் கேட்டான்.
‘அரசே, திருமாலின் தேவியான ஸ்ரீமதி மகாலக்ஷ்மியின் திருவருளால் இந்தப் பழம் எனக்குக் கிடைத்தது. இதைச் சாப்பிட்டால் அழியாத இளமையும், அதனால் நீண்ட ஆயுளும் கிட்டும். இந்தப் பழத்தை பரம தரித்திரனான நான் சாப்பிடுவதைவிட, இந்த ராஜ்ஜியத்தை நீதிநெறி தவறாமல் பரிபாலிக்கின்ற தாங்கள் சாப்பிட்டு நீண்ட ஆயுளும், பூரண இளமையும் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்!’ என்றான்.
ராஜா பர்த்ருஹரி, சோமசர்மனுக்கு ஏராளமான பொன்னும் பொருளும் திரவியங்களும், நிலபுலன்களும் அளித்து அவனைக் கௌரவித்து அனுப்பி வைத்தான்.
பின், பழத்துடன் அந்தப்புரத்துக்கு விரைந்தான்.
ராஜா பர்த்ருஹரி ஒரு கலா ரசிகன். அழகை ஆராதனை செய்யும் மன்மதப் பிரியன். அவனது அந்தப்புரம் முன்னூற்றுக்கும் மேலான பேரழகிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராஜா பர்த்ருஹரிக்கு அத்தனை பேருமே பிரியமானவர்கள்தாம் என்றாலும், அவர்களுள் பேரழகியும், பட்ட மகிஷியுமான பிங்கலையின் மேல் தனது உயிரையே வைத்திருந்தான். அவன் மாதுளம் பழத்துடன் அந்தப்புரத்துக்கு விரைந்தது பிங்கலைக்குக் கொடுப்பதற்காகத்தான்.
ராணி பிங்கலையின் அறைக்குச் சென்ற, ராஜா பர்த்ருஹரி அவளிடம் மாதுளம்பழத்தைக் கொடுத்து அதன் அற்புத மகிமையைப் பற்றி விளக்கிக் கூறினான்.
‘என் ஆருயிரே, நீ இந்தப் பழத்தைச் சாப்பிட்டு எப்போதும் மாறா இளமையுடன் திகழ வேண்டும். அந்த உனது இளமை அழகை நான் திகட்டத் திகட்ட ருசிக்க வேண்டும். இந்தா சாப்பிடு’ என்றான்.
‘மன்னவா தங்களின் இந்த அன்பு எனது பாக்கியம்! குளித்து முடித்து நியமத்துடன் நான் இப்பழத்தைச் சாப்பிடுகிறேன்! நிச்சயமாகத் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்’ என்று சொல்லி வாங்கிக் கொண்ட பிங்கலை, அந்த மாதுளம் பழத்தை அவள் சாப்பிட விரும்பவில்லை.
ராணி பிங்கலைக்கு ஓர் ஆசை நாயகன் இருந்தான். அரண்மனையின் குதிரை லாயத்தைப் பராமரிக்கும் குதிரைப் பாகன் அவன். தனது மோகத்தைத் தணிக்கும் மன்மதன் என்று அவனைத்தான் கருதினாள் பிங்கலை. எனவே தனது கள்ளக் காதலன் இளமை குறையாமல் இருந்தால் காமக் கடலில் ஆசை தீர முங்கிக் குளிக்கலாம் என்று கருதி குதிரைப் பாகனை ரகசியமாகச் சந்தித்து அந்த மாதுளம் கனியைக் கொடுத்து விட்டுப் போனாள்.
குதிரைப்பாகனும் அந்தப் பழத்தைச் சாப்பிடவில்லை. பட்டத்து மகிஷியின் ஆசைநாயகனாக இருந்தபோதும் மகாராணியின் மேல் அவனுக்குப் பெரியளவுக்குப் பிரியமொன்றுமில்லை. அவன் அரண்மனை வேலைக்காரி ஒருத்தியிடம் மோகம் கொண்டிருந்தான். மகாராணி பிங்கலை தனக்கு அளித்த பழத்தை அவன் அந்த வேலைக்காரிக்குக் கொடுத்தான்.
அந்த அரண்மனை வேலைக்காரியும் சாமான்யப்பட்டவளில்லை. அவளுக்கு இடையன் ஒருவனுடன் கள்ளத் தொடர்பிருந்தது. பழத்தை அவனுக்கு அளித்தாள்.
இடையன் அதை வாங்கி, தன்னுடன் மாட்டுக் கொட்டகையில் சாணி அள்ளிப் போட்டு கொட்டகையைச் சுத்தம் செய்து போகும் தனது ஆசை நாயகியான வேலைக்காரப் பெண்ணுக்கு அந்தப் பழத்தைக் கொடுத்தான்.
வேலைக்காரப் பெண் அந்த மாதுளம் பழத்தை வாங்கி தனது சாணிக் கூடையின் மேலாக வைத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் சாப்பிடலாம் என்று புறப்பட்டாள்.
அப்போது, அரண்மனையின் மேல் மாடத்தில் நின்று இயற்கையழகை ரசித்துக் கொண்டிருந்த ராஜா பர்த்ருஹரியின் கண்களில் யதேச்சையாக அந்த வேலைக்காரி தென்பட்டாள். அவளது கூடையின் மேலாக இருந்த பிரகாசம் மிகுந்த மாதுளம் கனியைப் பார்த்ததும் மன்னனுக்குச் சந்தேகம் எழுந்தது. ‘அந்தணன் சோமசர்மன் நமக்கு அளித்த கனியைப் போல இருக்கிறதே?’
சேவகனை விட்டு அந்த வேலைக்காரியை அழைத்து வரச் சொல்லி விசாரித்தான். அவள் மாட்டுக் கொட்டகை இடையன் தனக்கு அந்தப் பழத்தைத் தந்ததாகச் சொன்னாள்.
மன்னன் குழப்பமடைந்தான். ‘ஒருவேளை இது அந்தணன் அளித்ததைப் போன்ற இன்னொரு அபூர்வக் கனியோ? அப்படியானால் இந்த மற்றொரு அபூர்வக் கனியை, தான் சாப்பிட்டால் பிங்கலையைப் போல் தானும் என்றும் இளமை மாறாமலும், இறவாத்தன்மையுடனும் அவளுடன் சுகித்திருக்கலாமே!’ அரசனுக்குள் ஆசை மூண்டது.
‘பெண்ணே இந்தக் கனியை எனக்குத் தருவாயா?’ என்று கேட்டான்.
கொட்டகை கூட்டும் வேலைக்காரிக்கு அந்த அபூர்வப் பழத்தைப் பற்றி இடையன் சொன்னதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. அவளது சாதாரண வாழ்க்கையில் அற்புதங்களுக்கெல்லாம் இடமும் இல்லை. எனவே மன்னன் கேட்டதுமே மறு பேச்சில்லாமல் பழத்தைத் தந்து விட்டாள். தவிர மன்னன் கேட்டு எதைத்தான் மறுக்க முடியும்!
ராஜா பர்த்ருஹரி வேலைக்காரிக்கு நிறையப் பொன் ஆபரணங்களைக் கொடுத்து அனுப்பி வைத்தான். அவனுக்கு முதலில் இந்த மற்றொரு கனியைப் பற்றிய தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டுமென்று தோன்றியது.
அரண்மனைச் சேவகர்களை அனுப்பி சோமசர்மனை அழைத்து வரச் செய்தான். ‘அந்தணரே, சில நாட்களுக்கு முன்பாக மகாலக்ஷ்மி உமக்கு அளித்ததென்று சொல்லி பழமொன்றைக் கொடுத்துச் சென்றீரல்லவா? இப்போது அதுபோலவே இன்னொரு பிரகாசம் பொருந்திய மாதுளம்பழம் எனக்குக் கிடைத்துள்ளது. அப்படி இன்னொரு பழமும் இருக்க வாய்ப்புள்ளதா?’ என்று கேட்டான்.
சோமசர்மன் திட்டவட்டமாக மறுத்தான். ‘அரசே! உறுதியாகச் சொல்கிறேன். தேவி மகாலக்ஷ்மி அளித்தது ஒரேயொரு மாதுளம் கனிதான். நீங்கள் என்னை நம்பலாம். கடவுளுக்கு நிகரான தங்களிடம் நான் பொய் சொல்ல மாட்டேன்!’ என்றான்.
‘அப்படியானால் இந்தக் கனி ஏது?’ என்று அந்த மாதுளம்பழத்தைக் காட்டினான்.
பழத்தை வாங்கிப் பார்த்த சோமசர்மன், ‘இது நான் தந்த கனிதான்!’ என்றவன் தொடர்ந்து, ‘மன்னா, நான் தந்த கனியை நீங்கள் சாப்பீட்டீர்களா?’ என்று கேட்டான்.
‘இல்லை! அதை நான் எனது பட்டமகிஷிக்குத் தந்துவிட்டேன்!’ என்றான்.
‘சரி, மகாராணியார் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார்களா என்று விசாரியுங்கள்.’
இப்போது ராஜா பர்த்ருஹரியின் மனத்திலேயே சந்தேகம் அழுத்தமாக விழுந்தது. உடனே பிங்கலையை வரவழைத்துக் கேட்டான்.
‘மகாராணி பொய் சொல்லாமல் சொல். நான் உனக்குத் தந்த அபூர்வ மாதுளம் பழத்தைச் சாப்பிட்டாயா? இல்லையா? அல்லது வேறு யாருக்கேனும் தந்தாயா? உண்மையை மறைக்காமல் கூறு!’
மகாராணி நடுங்கிப் போனாள். விபரீதம் அவளுக்குப் புரிந்து விட்டது. இனி மன்னனிடம் பொய் சொல்ல முடியாது. அவன் தீர விசாரித்துத் தெரிந்துகொண்டால் மரண தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.
பிங்கலை தயங்கித் தயங்கிப் பேசினாள்: மன்னவரே, தயவுசெய்து கேளுங்கள். எனக்கு எந்த தண்டனையும் தரமாட்டீர்கள் என்று உறுதியளித்தால் நான் உண்மையைக் கூறுகிறேன்!’ என்று சொல்லி, மன்னனிடம் சத்தியம் பெற்றுக்கொண்டு, ‘நான் அதைக் குதிரைப் பாகனிடம் கொடுத்து விட்டேன்!’ என்று சொல்லி ராஜா பர்த்ருஹரியின் முகத்தைப் பார்க்கத் திராணியின்றித் தலை கவிழ்ந்தாள்.
மன்னனுக்கு நொடி நேரத்தில் எல்லாம் புரிந்து போனது. ராஜ பத்தினி சோரம் போனது அவனுக்குத் தலை குனிவாக இருந்தது. பின் குதிரைப் பாகனை அழைத்து விசாரித்தான். அவன் அரண்மனை வேலைக்காரிக்குக் கொடுத்ததும், அந்த வேலைக்காரி இடையனுக்குத் தந்ததும், இடையன் கொட்டகைப் பெண்ணுக்குக் கொடுத்ததுமான சங்கிலித் தொடர் ரகசிய நிகழ்வுகள் முழுதும் அம்பலமாகின.
ராஜா பர்த்ருஹரி மிகுந்த மன வேதனையடைந்தான். ராஜ்ஜியத்தின் பட்டமகிஷி கேவலம் ஒரு குதிரைப் பாகனோடு மோகம் கொண்டிருந்தது அவனைச் சகிக்க முடியாத துயரத்தில் மூழ்கடித்தது.
பெண்களின் மன ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று பெரியோர்கள் சொன்னதுதான் எத்தனை உண்மையானது! தான் நேசிப்பவர் தன் மீது அன்பு செலுத்த வேண்டும்; நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்துச் சாதிக்கும் பெண்கள் உண்மையில் அவர்கள் யார் மீதும் பூரண அன்பு செலுத்துவதும் இல்லை; நம்பிக்கைக் கொள்வதும் இல்லை. மோகமும், ஆசையும் நிறைந்த துரோகப் பதுமைகள்தான் இந்தப் பெண்கள்!’ என்றெல்லாம் சிந்தித்த பர்த்ருஹரி, பிங்கலையைத் தண்டிப்பதால் மட்டும் ஆகப் போவதென்ன என்று கருதி அவளை விட்டு விலகிப் போகத் தீர்மானித்தான்.
அரண்மனை ஆடம்பர வாழ்வும், உறவுகளின் பொய் நாடகமும் அவனுக்கு வெறுத்துப் போக, பரிபூரணமாக உலகப் பற்று நீக்கி, பந்த பாசங்களை விலக்கி, துறவு மேற்கொள்வதென்ற முடிவுக்கு வந்தான்.
ராஜா பர்த்ருஹரி ராஜ்ஜியத்தைத் தனது சகோதரன் விக்கிரமாதித்தனுக்கு அளித்து பட்டம் சூட்டி விட்டு, துறவியாகிக் காட்டுக்குச் சென்றான்.
(தொடரும்)