Skip to content
Home » விக்கிரமாதித்தன் கதைகள் #7 – விக்கிரமாதித்தனும் வேதாளமும்…

விக்கிரமாதித்தன் கதைகள் #7 – விக்கிரமாதித்தனும் வேதாளமும்…

விக்கிரமாதித்தன் கதைகள்

இந்திரன் அளித்த தேவ சிம்மாசனத்தை ஒரு சுபயோக சுப முகூர்த்தத்தில் தனது கொலு மண்டபத்திலே ஸ்தாபித்த விக்கிரமாதித்தன் அதன் மீது வீற்றிருந்து மிகுந்த சந்தோஷத்துடன் ராஜ்ஜியப் பரிபாலனம் செய்தான்.

ஆனால் விக்கிரமாதித்தன் தேவலோகம் சென்று வந்த நாளிலிருந்து மதிமந்திரி பட்டிதான் சற்று வருத்தத்துடன் காணப்பட்டான். இதைக் கண்டுகொண்ட விக்கிரமாதித்தன், ஒருநாள் தனிமையில் பட்டியிடம் கேட்டான்.

‘பட்டி, சற்று நாளாக உன் முகத்தில் வாட்டத்தைக் காண்கிறேன். சொல், என்ன உன் துன்பம்?’ என்று கேட்டான்.

‘அண்ணா, வாழ்நாள் முழுதும் எப்போதும் தங்களுடனேயே இருக்கப் பேராசைப்பட்டவன் நான். ஆனால் தேவேந்திரனால் ஆயிரம் ஆண்டு காலம் ஆயுள் வரம் பெற்று வந்த தங்களுடன் கடைசிவரை என்னால் எப்படி இருக்கமுடியும்? அதனை நினைத்துத்தான் சஞ்சலப்பட்டேன்!’ என்றான்.

இப்போது விக்கிரமாதித்தனையும் துயரம் சூழ்ந்து கொண்டது. ‘அடடா எத்தனை சுயநலவாதி நான். உன்னைப் பற்றி யோசிக்காமல் போனேனே. உனக்கும் சேர்த்தல்லவா நான் வரம் பெற்று வந்திருக்க வேண்டும்!’ என்று சொல்லி வருந்தினான்.

அண்ணன் விக்கிரமாதித்தனின் துன்பம் கண்டு பொறுக்காத பட்டி உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு, ‘அண்ணா வருத்தப்படாதீர்கள். உங்கள் தம்பி புத்திசாலி என்பது உண்மையானால் ஆயிரம் என்ன, இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயுள்கூட நான் பெற்று விடுவேன். கவலைப்படாதீர்கள்’ என்று கூறி விக்கிரமாதித்தனைக் கலகலப்பாக்கினான்.

அண்ணனிடம் விளையாட்டுக்குச் சொன்னாலும், அதை உண்மையாக்கிக் கொள்ள விரும்பிய பட்டி, நள்ளிரவில் தங்களது குல தெய்வமான மாகாளி அம்மன் கோயிலுக்குச் சென்றான். தேவியை மனமுருகிப் பிரார்த்தித்து அவளைத் தரிசிக்க வேண்டினான்.

தேவி பத்ரகாளியம்மன், பட்டியின் முன்னே பிரசன்னமானாள். ‘மகனே பட்டி இந்த நடுநிசி வேளையில் என்னைப் பார்க்க விரும்பிய காரணம் என்ன?’ என்று கேட்டாள்.

‘தேவி, எனது சகோதரன் விக்கிரமாதித்தனுக்குத் தேவலோக அதிபதியாகிய இந்திரன் ஆயிரம் ஆண்டுகள் வாழ ஆயுள் வரமளித்துள்ளான். எனக்கு வரமருள தாயாகிய உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள். உன் பிள்ளை மீது கருணை காட்டு தாயே! எனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ வரம் தரவேண்டும் அன்னையே!’ என்று தேவியின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினான்.

‘பட்டி, நீ கேட்கும் வரத்தைப் பெறவேண்டுமானால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. குற்றமே இல்லாத முப்பத்திரண்டு லட்சணங்களும் பொருந்திய ஓர் ஆண் மகன், அதுவும் அவன் சத்ரிய வம்சத்து மன்னனாக இருக்க வேண்டும்; அப்படிப்பட்ட ஒருவனது தலையைத் துண்டித்து நீ எனக்குக் காணிக்கையாகத் தந்தால் நீ விரும்பியது கைகூடும்! செய்கிறாயா?’ என்றாள்.

‘இதோ இப்போதே கொண்டு வருகிறேன் தாயே!’ என்ற பட்டி அரண்மனைக்கு விரைந்தான். ஆம்! பத்ரகாளி கூறிய நிபந்தனைக்கு முழுத் தகுதியாக இருந்தவன் விக்கிரமாதித்தன் மட்டும்தான்!

விக்கிரமாதித்தனின் பள்ளியறைக்குள் வேகமாக நுழைந்த பட்டி, மகாராணியுடன் படுத்திருந்த அவனை எழுப்பி தனியே அழைத்து வந்து, ‘அண்ணா! எனக்கு உங்கள் தலை தேவைப்படுகிறது!’ என்று கேட்டான்.

விக்கிரமாதித்தன் ஏன், எதற்கு என்று எந்தக் கேள்வியும் கேட்காமல், ‘அதற்கென்ன எடுத்துக்கொள் பட்டி!’ என்று சொல்லி தயாராகத் தலையைக் குனிந்து நின்றான்.

பட்டி ஒரே வீச்சில் விக்கிரமாதித்தனுடைய தலையைத் துண்டித்து எடுத்துக்கொண்டு சென்று, காளியம்மன் பாதத்தில் வைத்து, ‘தாயே இதோ நீங்கள் கேட்டபடியே சர்வ லட்சணங்களும் கொண்ட எனது தமையன் தலை, உனக்குக் காணிக்கை’ என்று பணிந்தான்.

‘பட்டி, நிபந்தனையைக் குறையில்லாமல் நிறைவேற்றியதால் நீ விரும்பியவாறே, உனக்கு இரண்டாயிரம் வருடங்கள் ஆயுள் வரமளிக்கிறேன். தவிர எப்போதும் செல்வச் சுகத்துடனும், பூரண புத்திசாலித்தனத்துடனும் இறுதிவரை வாழ்வாயாக!’ என்று வாழ்த்தினாள்.

அவள் சொல்லி முடித்த மறுகணமே பட்டி கலகலவென்று கேலியாகச் சிரித்தான்.

‘பட்டி எதற்காக இந்தக் கேலிச் சிரிப்பு?!’ பத்ரகாளி வியப்புடன் கேட்டாள்.

‘மன்னியுங்கள் தாயே! தேவர்கள் தலைவனான தேவேந்திரன், எங்கள் விக்கிரமாதித்த மகாராஜாவுக்கு அளித்த வரமே பலிக்காமல் போய், ஆயிரம் ஆண்டு ஆயுள் வாங்கினவன் சிரம் இதோ அறுபட்டுப்போய் தரையில் கிடக்கிறது. இதில் தாங்கள் அளித்த வரத்தை நான் எப்படி நம்புவது தாயே? அதைத்தான் நினைத்தேன்; சிரித்தேன்!’

’பட்டி! நீ மிகச் சிறந்த அறிவாளி என்பதில் சந்தேகமேயில்லை. உன் திறமையான வாதத்தால் என்னை நீ வென்றுவிட்டாய்! கவலைப்படாதே! நான் உனக்கு அளித்த வரம் தப்பாது. தேவேந்திரன் விக்கிரமாதித்தனுக்கு அளித்த வரமும் பிழையாகாது!’ என்றவள் பட்டியிடம் எலுமிச்சம் பழமும், திருநீறும், தீர்த்தமும், ஒரு பிரம்பும் தந்து, ‘பட்டி! விக்கிரமாதித்தன் தலையை அவனது உடலோடு சேர்த்து வைத்து இந்தத் தீர்த்தத்தைத் தெளித்து, வெட்டுப்பட்ட இடத்தில் இந்தத் திருநீற்றைப் பூசு. பிரம்பால் தடவிக் கொடு. விக்கிரமாதித்தன் உயிர் பெறுவான்!’ என்று சொல்லி மறைந்தாள்.

காளியம்மனின் பிரசாதத்தோடும், விக்கிரமாதித்தனின் தலையோடும் அரசனின் பள்ளியறைக்கு விரைந்த பட்டி, தேவி சொன்னதுபோலவே தலையை உடலோடு வைத்து தீர்த்தம் தெளித்து திருநீற்றைப் பூசினான். பிரம்பால் வருடினான். மறுகணமே விக்கிரமாதித்தன் உயிர் பெற்று எழுந்தான்.

பட்டி நடந்தது அனைத்தையும் அவனிடம் சொல்ல, இப்போது விக்கிரமாதித்தன் முகம் வாட்டமுற்றான்.

‘தம்பி பட்டி, எனது ஆயுளோ ஆயிரம் ஆண்டுகள்தான்; ஆனால் நமது மாகாளியம்மன் உனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயுள் அளித்துள்ளாள். கடைசிவரை நாம் இருவரும் சம ஆயுளுடன் வாழச் சாத்தியமே இல்லையா?’ என்று கூறி வருந்தினான்.

‘அண்ணா தங்களது வருத்தம் நியாயம்தான். ஆனால் நான் இதை எண்ணிப் பார்க்காமலா இருப்பேன். நாம் இருவரும் சம ஆயுளுடன் வாழ வழியிருக்கிறது!’ என்றான் பட்டி.

‘அப்படியா? என்ன வழி அது?’ ஆவலுடன் கேட்டான் விக்கிரமாதித்தன்.

‘அண்ணா, தேவேந்திரன் உங்களுக்கு வரமளித்தபோது, ‘இந்த அதிசயச் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வாய்’ என்றுதானே வரமளித்துள்ளான். எனவே நீங்கள் ஆறுமாத காலம் இந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யுங்கள். அடுத்த ஆறுமாதம் தேசாந்திரியாக நாடு நகரமெல்லாம் காடு மேடெல்லாம் சுற்றி வாருங்கள். இப்படி நாடாறு மாதமும் காடாறு மாதமுமாகக் காலம் கழித்தால் நீங்களும் இரண்டாயிரம் ஆண்டுகள் நீடூழி வாழலாம்!’ என்று யோசனை தெரிவித்தான்.

விக்கிரமாதித்தனும் மனம் மகிழ்ந்துபோய் பட்டியைப் பாராட்டிக் கட்டித் தழுவிக் கொண்டான். பட்டியின் ஆலோசனைப்படியே காடாறு மாதம் நாடாறு மாதம் என்று ஆட்சி நடத்தத் தொடங்கினான்.

0

இப்படியாக விக்கிரமாதித்தனது தொடக்கக் காலச் சரித்திரத்தைச் சொல்லி முடித்த முதலாம் பதுமையான சுகேசி, ‘போஜராஜனே, எங்களது விக்கிரமாதித்தன் சரித்திரம் கேட்டீர்கள் அல்லவா? இப்போது சொல்லுங்கள். எங்கள் சக்ரவர்த்திக்குள்ள வீரம், விவேகம், தைரியம், புத்திக்கூர்மை இவையெல்லாம் உங்களுக்கு இருக்கிறதென்று நினைத்தால் நீங்கள் தாராளமாக இந்தச் சிம்மாசனத்தில் ஏறி அமரலாம்!’ என்றது.

முதலாம் பதுமை கதை சொல்லி முடிக்கும் தறுவாயில் அன்றைய நாள் முடிந்து சூரியன் அஸ்தமனமாகி விட்டதால், சிம்மாசனத்தில் அமர வேண்டிய முகூர்த்த காலமும் கழிந்து விட போஜராஜனும், அவனது மந்திரியும் ராஜ சபையை விட்டு அவரவர் இல்லத்துக்குச் சென்றார்கள்.

0

இரண்டாம் நாள், மீண்டும் ராஜ சபை கூடியது.

அன்றைய தினம் ஒரு நல்ல முகூர்த்த காலத்தில் போஜ மன்னன் முப்பத்திரண்டு படிகள் கொண்ட சிம்மாசனத்தின் முதல்படி ஏறி இரண்டாம் படி மீது கால்வைக்கும் தருணம் அந்தப் படிக்குக் காவலாயிருந்த இரண்டாம் விசித்திரப் பதுமையான திரிலோசனை முன்தினம் போலவே கேலியாகச் சிரித்து, ‘போஜராஜனே சற்று நில்லும். பயம் என்பதின் அர்த்தமே அறியாத, எமது சக்ரவர்த்தி விக்கிரமாதித்தனின் சாகசங்கள் பெரும் வியப்புக்குரியது மட்டுமல்ல, போற்றுதலுக்கும் உரியது! அவரது வீரதீரமானது உமக்கு இருக்கிறதென்று உணர்ந்தாலல்லவா நீர் இந்தப் படியை ஏறி சிம்மாசனம் அமர முடியும்?’ என்றது.

‘இரண்டாம் பதுமையே, உமது விக்கிரமாதித்த பூபதியிடம் கண்டு வியந்த அந்த வீரப் பிரதாபத்தை சாகசச் செயல்களை எனக்கும்தான் சொல்லேன்! கேட்டு மகிழ்கிறேன்’ என்றான் போஜராஜன்.

‘ஓ! அப்படியே ஆகட்டும்! எத்தனைமுறை கூறினாலும் திகட்டாத எங்களது மன்னனுடைய பெருமையைக் கூறுகிறேன் கேளும் பூபதியே!’ என்ற திரிலோசனைப் பதுமை அக்கதையைச் சொல்லத் தொடங்கியது.

0

விக்கிரமாதித்த மன்னன் அரசாளும் உஜ்ஜயினி நகரத்தின் அருகாமையில் ஒரு பெரும் காடு இருந்தது. அந்தக் காட்டின் மையத்தில் ஒரு வன துர்க்கையம்மன் கோயிலும், அந்தக் கோயிலிலிருந்து நான்கு காத தூரத்தில் மயானம் ஒன்றும், அந்த மயானத்தில் நடுவில் ஒரு முருங்கை மரமும் இருந்தன.

அது சாதாரண முருங்கை மரம் இல்லை! பார்க்கவே விசித்திரமான வளைந்து நெளிந்து காணப்பட்ட அந்த முருங்கை மரத்தில்தான் வேதாளம் ஒன்று தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

அந்த வேதாளமும் சாமானியமானதில்லை. அதை ஒருவன் வசப்படுத்தி விட்டால், அந்த வேதாளத்தின் மூலம் அவன் நினைத்த காரியங்கள் எல்லாவற்றையும் சாதித்துக் கொள்ள முடியும். இந்த உலகையே ஆட்டிப் படைக்க முடியும்!

முனிவர்கள், மந்திரவாதிகள், ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள் என்று அந்த வேதாளத்தைப் பற்றித் தெரிந்த பலரும் எப்பாடு பட்டாவது அந்த வேதாளத்தை வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று முயற்சித்து வந்தனர். ஆனால் ஒருவராலும் அதைச் சாதிக்க முடியவில்லை.

வேதாளத்தை வசப்படுத்த முயற்சித்தவர்களுள் சுசர்மன் என்கிற தேவி உபாசகன் முக்கியமானவன். இவன் தனது தீவிரப் பக்தியினால் வன துர்க்கையம்மனையும், வேதாளத்தையும் வசப்படுத்திக்கொண்டு சகல சித்திகளும் பெற்று, இந்தப் பூவுலகையே ஆட்டிப் படைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

அதற்காகவே வன துர்க்கையம்மன் கோயிலில் பெரும் யாக குண்டம் வளர்த்து கடும் தவமிருந்து பூஜை செய்தான். ஒருநாள் தேவி வன துர்க்கையம்மன் அவன் முன் காட்சி தந்தாள்.

‘சுசர்மா! பக்தி சிரத்தையுடன் கூடிய உனது கடுமையான தவம் கண்டு மனம் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள்.

சுசர்மன் பரவசமாக, ‘தேவி! எனக்கு இறவா வரம் வேண்டும். தவிர இந்த மண்ணுலகில் அரசாளும் அத்தனை மன்னர்களையும் வென்று மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக நான் இந்தப் பூவுலகையே அரசாள வேண்டும். மகா சக்ரவர்த்தியாகத் திகழ வேண்டும். அதற்கு நீதான் அருள்புரிய வேண்டும்!’ என்று கேட்டான்.

‘சுசர்மா, நீ கேட்ட வரங்கள் உனக்குக் கிடைக்க வேண்டும் என்றால் ஆயிரம் அரசர்களைக் கொன்று அவர்களது உடல்களை யாக குண்டத்தில் போட்டு யாகம் செய்ய வேண்டும். தவிர அந்த மன்னர்களது தலைகளை வெட்டி எனது பாதத்தில் காணிக்கையாக வைத்தால் நீ விரும்பியது நடக்கும்!’ என்று சொல்லி மறைந்தாள்.

அதற்கு மேல் சுசர்மன் நேரத்தை வீணாக்க விரும்பாமல் நாடு நாடாகப் புறப்பட்டான். பலப்பல யுக்திகளாலும், வஞ்சக சூழ்ச்சிகளாலும், கபட நாடகங்களாலும் அநேக மன்னர்களை ஏமாற்றி தனியே அழைத்து வந்து வன துர்க்கையம்மன் பாதத்தில் வைத்துப் பலியிட்டான். இம்மாதிரி அவன் பலியிட்ட மன்னர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது (999) ஆகி விட்டது. ஆயிரமாவது தலைக்கு விக்கிரமாதித்தனுடைய தலையைத் திட்டமிட்டான் சுசர்மன்.

ஆனால் விக்கிரமாதித்தனைப் பலி கொடுக்கும் முன்னதாக அவன் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய காரியம் ஒன்று இருந்தது. அது வேதாளத்தை வசப்படுத்தும் திட்டம். அதற்கான முயற்சியில் இறங்கினான் சுசர்மன்.

0

ஒரு பெரும் மகரிஷி போல் சாந்தசொரூபியாக வடிவம் கொண்டு விக்கிரமாதித்தன் சபைக்குச் சென்றான் சுசர்மன். தன்னை அன்புடனும் பணிவுடனும் வரவேற்ற விக்கிரமாதித்தனை ஆசீர்வதித்து ஒரு மாதுளங்கனியை அவனுக்குக் கொடுத்து வாழ்த்தி விட்டு வேறு ஏதும் பேசாமல் விடைபெற்றுக் கொண்டான்.

முனிவர் தந்த மாதுளம் கனியை விக்கிரமாதித்தன் அருகிலிருந்த பட்டியிடம் தர முயற்சிக்க, அப்போது கைதவறி பழம் கீழே விழுந்து உடைந்தது.

அட! என்ன ஆச்சரியம்! பழத்திலிருந்து மாதுளை முத்துகளுக்குப் பதிலாக விலையுயர்ந்த ரத்தினக் கெம்புக் கற்கள் சிதறித் தெறித்தன. வியந்து போனான் விக்கிரமாதித்தன். அந்த ரத்தினக் கற்களை எடுத்துப் பார்த்த மகாமந்திரி பட்டி, அவைகள் விலைமதிப்பில்லாதவை என்று உணர்ந்து கொண்டான். பின் யோசனையுடன் விக்கிரமாதித்தனிடம் சொன்னான்: மீண்டும் அந்த முனிவர் கண்டிப்பாக இங்கு வருவார்!

பட்டி சொன்னதுபோலவே மறுநாள் மீண்டும் ராஜ சபைக்கு விஜயம் செய்தார் முனிவர். அவரை வரவேற்று உபசரித்த விக்கிரமாதித்தன், ‘மகா முனிவரே, நேற்று தாங்கள் அளித்த அதிசய மாதுளம் கனியில் விலை மதிப்பில்லாத ரத்தினக் கற்கள் இருந்ததைக் கண்டேன். பொன் பொருளில் நாட்டமில்லாத துறவியான தாங்கள் எனக்கெதற்காக இத்தனை விலையுயர்ந்த கற்களைப் பரிசளித்தீர்கள்? பதிலுக்கு என்னிடமிருந்து ஏதோ எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது! சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ விக்கிரமாதித்தன் நேரிடையாக விஷயத்துக்கு வந்தான்.

‘ஆம் விக்கிரமா! மிகச் சரியாகக் கணித்து விட்டாய்! எனக்கு உனது உதவி தேவைப்படுவது உண்மைதான்! நான் நமது உஜ்ஜயினியின் கானகப் பிரதேசத்திலுள்ள வன துர்க்கையம்மனைப் பூஜித்து ஒரு யாகம் நடத்த உத்தேசித்திருக்கிறேன். யாகம் பூர்த்தியானால் அதன் மூலம் எனக்கு அஷ்டமாசித்திகளும் கைவசமாகும். ஆனால் அந்த யாகத்தை நடத்தவிடாமல் செய்யச் சில துஷ்ட சக்திகள் காத்திருக்கின்றன. எனவே பத்ரகாளியின் பரம பக்தனான நீ யாகத்தின்போது என்னருகில் இருந்தால் அந்தத் துஷ்ட சக்திகள் தொல்லை தராமல் விலகிப் போய் விடும். இந்த உதவி ஒன்றைத்தான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்!’ என்றான்.

‘அப்படியே ஆகட்டும் முனிவர் பெருமானே! கண்டிப்பாக உங்கள் விருப்பத்தை நான் நிறைவேற்றி வைக்கிறேன். சொல்லுங்கள், நான் எங்கு எப்போது வரவேண்டும்?’

முனிவன் சுசர்மன் விக்கிரமாதித்தன் வரவேண்டிய இடத்தையும் நாளையும் நேரத்தையும் சொல்லி விட்டு, ‘விக்கிரமா, யாகத்துக்கு நீ தனியாகத்தான் வரவேண்டும். இது மிக முக்கியம்!’ என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டான்

0

முனிவன் சுசர்மன் சொன்னதுபோலவே குறிப்பிட்ட நாளில் நடுஜாமத்தில் வன துர்க்கையம்மன் கோயிலுக்குத் தன்னந்தனியாகச் சென்றான் விக்கிரமாதித்தன்.

அங்கே பெரும் யாககுண்டம் வளர்த்து அமர்ந்திருந்தான் சுசர்மன். அவனைச் சுற்றிலும் குறளிகளும், சில ஏவல் பேய்களும் கிடந்து கூத்தாடிக்கொண்டிருந்தன.

‘முனிசிரேஷ்டரே! தாங்கள் சொன்னபடியே தனியே வந்துவிட்டேன். இப்போது நான் தங்களுக்குச் செய்ய வேண்டிய காரியம் ஏதாவது உள்ளதா?’ என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.

‘ஆம், விக்கிரமாதித்தா! ஒரு முக்கிய காரியத்தை நீ செய்ய வேண்டும்! இக் கோயிலின் தென் பகுதியில் நான்கு காத தூரத்தில் மயானம் ஒன்று இருக்கிறதல்லவா? அதன் நடுவே வளைந்து நெளிந்த முருங்கை மரம் ஒன்று உள்ளது. அதன் உச்சாணிக் கிளையில் பிணம் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பிணத்தை நீ இங்கே கொண்டுவந்து என்னிடம் சேர்த்து விட்டால் போதும்! அதுதான் முதல் காரியம்!’ என்றான் சுசர்மன்.

‘அவ்வளவுதானே! இதோ, இப்பொழுதே சென்று அப்பிணத்தைக் கட்டித் தூக்கி வருகிறேன்!’

விக்கிரமாதித்தன் மயானத்தை அடைந்தான். முருங்கை மரத்தை தேடிக் கண்டுபிடித்து அதன் உச்சாணிக் கிளையில் தொங்கிய பிணத்தை எடுத்துத் தோளின்மீது போட்டுக் கொண்டு கீழிறங்கினான். அப்போது பிணம் வாய் விட்டு அழுதது.

அதிர்ச்சியடைந்த விக்கிரமாதித்தன் பிணம் உயிரோடு இருப்பதாகப் பதறிப்போய் அதைத் தரையில் கிடத்தினான். மறுநொடியே பிணம் மீண்டும் பறந்துபோய் முருங்கை மரத்தின் உச்சாணிக் கிளையில் தலைகீழாகத் தொங்கியது.

விக்கிரமாதித்தன் ஆச்சரியமடைந்தான். இதென்ன விசித்திரம்? பிணம் பறக்கிறதே! மீண்டும் மரத்தில் ஏறி அந்த சவத்தைச் சுமந்து கொண்டு கீழிறங்கினான்.

அப்போது பிணத்துக்குள் புகுந்திருந்த வேதாளம், ‘ஏ விக்கிரமாதித்த மகாராஜாவே! இந்தப் பிணத்துக்குள் புகுந்திருக்கும் வேதாளமாகிய நான், உன்னை நன்கு அறிவேன்! உன்னை அனுப்பி வைத்த அந்த சுசர்மனையும் அறிவேன். என்னை அவனிடம் கொண்டுசேர்ப்பதற்காகத்தானே இம்முயற்சியில் இறங்கியிருக்கிறாய்? போகட்டும். உன்னுடன் நான் வரவேண்டுமானால் ஒரு நிபந்தனை இருக்கிறது. நாம் போய்ச் சேரும்வரை வழி முழுக்க நீ பேசவே கூடாது. பேசினால் நான் மீண்டும் முருங்கை மரத்து உச்சிக்கே போய் விடுவேன். ஆனால், நான் உன்னிடம் வழிநெடுகப் பேசிக்கொண்டு வருவேன். என்னைச் சுமந்து செல்லும் களைப்புத் தெரியாமல் இருக்க வழிப் பயணத்தில் உனக்குச் சுவாரசியமான கதை சொல்லுவேன். கதையின் முடிவில் ஒரு புதிரும் போடுவேன். அந்தப் புதிருக்கான சரியான விடையை நீ சொல்ல வேண்டும். விடை தெரிந்தும் நீ பதில் சொல்லாவிட்டால் உனது தலை சுக்குநூறாகச் சிதறி விடும்.’ என்றது.

விக்கிரமாதித்தன் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் தவித்தான். ‘வழியில் பேசக் கூடாது; பேசினால் வேதாளம் மீண்டும் மரத்துக்கே போய் விடும்! ஆனால், வேதாளம் கேட்கும் கேள்விக்குப் பதிலும் சொல்ல வேண்டும். அப்படிக் கதையின் புதிருக்கான விடையைச் சொல்லாவிட்டாலோ தலை வெடித்துச் சிதறிப் போய் விடும்! என்னதான் செய்வது?

சரி! வேறு வழியில்லை. அப்படி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்துக்கே போய் விட்டால் மறுபடியும் கட்டித் தூக்கி வரவேண்டியதுதான்’ என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டான்.

ஏதும் பதில் பேசாமல் பிணத்தைச் சுமந்துகொண்டு நடக்கத் தொடங்கினான். வேதாளமும் அவனது பதிலை எதிர்பார்க்காமல் கதை சொல்லத் தொடங்கியது.

(தொடரும்)

பகிர:
உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *