விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து விடுவித்து தோள்மீது போட்டுக்கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் போனதுமே வேதாளம் அவனிடம் பேச்சுக் கொடுத்தது.
‘அறிவிலும், வீரத்திலும் இணையில்லாதவன் என்று போற்றப்படும் விக்கிரமாதித்தரே, என்னைச் சுமந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க உமக்கு ஒரு கதை சொல்கிறேன். காது கொடுத்துக் கேளும்!’ என்று கதையைச் சொல்லத் தொடங்கியது.
‘பிரஹத்புரம் என்னும் நகரத்தை யட்சகேது என்கிற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ராஜ்ஜியத்தில் பிரசித்திப் பெற்ற துர்க்கையம்மன் கோயில் ஒன்று அமைந்திருந்தது. அங்குக் கோயில் கொண்டிருந்த துர்க்கையம்மன் மகா வரப்பிரசாதி. பக்தர்கள் வேண்டியதைத் தந்து அருள்பாலிப்பவள். அதனால் பிரகஹ்புரம் குடிமக்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியிருந்த நாடு நகரங்களில் இருந்தெல்லாம்கூட பக்தர்கள் அக்கோயிலுக்கு வந்து துர்க்கையம்மனை தரிசனம் செய்து பலனடைந்தார்கள்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அக்கோயிலின் திருவிழா நடைபெறும். பத்துநாட்கள் நடைபெறும் அத்திருவிழாவில் மன்னர் முதல் எளியவர்வரை அத்தனை பேரும் ரதத்திலும், மாட்டு வண்டிகள் கட்டிக் கொண்டும், கால்நடையாகவும் உற்றார் உறவினருடனும் கூட்டம் கூட்டமாகத் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வந்து தங்கி கோயில் தீர்த்தக் குளத்தில் நீராடி துர்க்கையைத் தரிசித்து மகிழ்வார்கள். அவர்களுள் சிலர் தங்களது கஷ்டங்களைச் சொல்லி பிரார்த்திக்கொள்வார்கள். மற்றும் சிலர் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்காக தாங்கள் வேண்டிக் கொண்டபடி வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வார்கள்.
அப்படிக் கோயிலுக்கு வந்தவர்களில் பவளவண்ணனும் ஒருவன். பிரஹத்புரத்தை அடுத்த ஆலப்பாக்கம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். சற்று வசதிக்கார இளைஞன். அவனது ஒரே குறை தாழ்வு மனப்பான்மை. அதனால் கொஞ்சம் கோழைத்தனம் உண்டு. ஆனால் அளவுகடந்த அம்மனின் பக்தன். துர்க்கையம்மனின் மீது எல்லையில்லாத நம்பிக்கையும், பக்தியும் கொண்டவன்.
அதனால்தானோ என்னவோ அந்தத் துர்க்கையம்மனின் திருவிழாவில் பவளவண்ணனின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் நேர்ந்தது.
பிரஹத்புரம் வந்து துர்க்கையம்மன் கோயில் திருவிழாவில் மிகுந்த பக்தியுடனும், பரவசத்துடனும் சுற்றி வந்த பவளனின் கண்களில் பட்டாள் அந்தத் தேவதை. நிலவை உருக்கி வார்த்து, நட்சத்திர மின்னலால் இழைத்தது போன்ற வனப்புடன் திகழ்ந்த அந்தப் பெண்ணைக் கண்டதுமே அவள் மேல் காதலானான் பவளவண்ணன்.
திருவிழாவில் அவள் நடந்த திசையெல்லாம் தொடர்ந்து போய் அவளது அழகைக் கண்களால் விடாமல் பருகி தன் இதயம் முழுக்க நிரப்பி மகிழ்ந்தான். ஆனால் மனத்துக்குள் இத்தகைய பேரழகி தனக்குக் கிடைப்பாளா என்கிற ஏக்கமும் எழுந்தது. மேலும் அவளைப் பின்பற்றி அவளைக் குறித்த தகவல்களைத் திரட்டிக்கொண்டான். அவளது பெயர் மதன மோகினி என்பது உச்சரிக்கும் போதெல்லாம் அவனது நாக்கை தித்திக்க வைத்தது.
‘மதன மோகினி… மதன மோகினி… மதன மோகினி’ என்று அவள் பெயரை மந்திரம் போல் உச்சரித்தவன், அதே வேகத்துடன் நேராக துர்க்கையம்மன் சந்நிதிக்குச் சென்றான். தேவியை வணங்கி மனம் உருகப் பிரார்த்தித்தான்.
‘தாயே துர்க்காதேவி! இப்போது என் வாழ்க்கையின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்! இதோ உன் கோயிலில் நான் பார்த்து விரும்பிய அந்தப் பெண்ணே, அந்த மதன மோகினியே எனக்கு மனைவியாக வாய்க்கவேண்டும். பேரழகியான அவளுடன் சில நாட்களே வாழ்ந்தாலும் போதும். என் ஜென்ம பலன் பூர்த்தியாகி விடும். இதற்கு நீதான் அருள் செய்ய வேண்டும். அப்படி நீ என் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தால், அடுத்தமுறை உனது இந்த ஆலயத்துக்கு வரும்போது என் தலையை வெட்டி உனக்குக் காணிக்கையாக்குகிறேன்!’ என்று வேண்டிக் கொண்டான்.
துர்க்கையம்மன் கோயிலிலிருந்து வீடு திரும்பிய பவளவண்ணன், நாளெல்லாம் மதன மோகினியின் நினைவாகவே கிடந்தான். அவளை நினைத்தே ஏங்கினான். தனக்குத்தானே பேசிக் கொண்டான். தானே சிரித்துக் கொண்டான். சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் இளைத்துத் துரும்பானான்.
பவளவண்ணனின் இந்த நிலையைக் கண்டு அவனது பெற்றோர் பெரும் கவலை கொண்டனர். ஒருநாள் பவளவண்ணனின் தாயார் அவனை அழைத்து, ‘மகனே! பவளவண்ணா! ஏன் இப்படிப் பித்துப் பிடித்தவன் போல் கிடக்கிறாய்? என்ன உன் துயரம்? சொன்னால்தானே நாங்கள் அதைத் தீர்த்து வைக்க முடியும்!’ என்று கேட்டு விசாரிக்க, பவளவண்ணன் திருவிழாவில் தான் கண்ட மனம் கவர்ந்த பெண்ணைப் பற்றி அவளிடம் கூறினான்.
தாயார் இதைப் பவளவண்ணனின் தந்தையிடம் கூற, அவர் பவளவண்ணனிடம், ‘அந்தப் பெண் யார்? எந்த ஊர்?’ என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொண்டு, ‘இதற்காகவா, உண்ணாமல் உறங்காமல் நீயும் துன்பப்பட்டு, எங்களையும் கஷ்டப்படுத்தினாய்? அந்தப் பெண்ணின் தகப்பன் எனது நண்பன்தான். பொன் பொருள், குலம், அந்தஸ்து என்று அனைத்திலும் நாமும் அவனுக்கு நிகரானவர்கள்தான். எனவே நான் பெண் கேட்டால் அவன் மறுக்க மாட்டான். கவலைப்படாதே!’ என்றார்.
அதுபோலவேதான் நடந்தது. மதன மோகினியின் தந்தை மிகுந்த சந்தோஷமாக பவளவண்ணனுக்குத் தனது மகள் மதன மோகினியை திருமணம் செய்து தர ஒப்புக்கொண்டார். அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.
மனைவி மதன மோகினியுடன் வீடு திரும்பிய பவளவண்ணன் மிகுந்த சந்தோஷமாக அவளுடன் இல்லறம் நடத்தினான். மணமக்கள் சல்லாபக் கடலில் மூழ்கித் திளைத்து இன்பத்தை அள்ளி அள்ளிப் பருகினார்கள். காலம் களிப்புடன் நகர்ந்தது.
திருமணமாகி சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில் ஒருநாள் மதன மோகினியின் அண்ணன் மதனபாலன் தனது தங்கையின் வீட்டுக்கு வந்தான். தங்கையும், தங்கையின் கணவனான பவளவண்ணனும், அவனது பெற்றோரும் மதனபாலனை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். அன்றைய தினம் தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்து மதனபாலனைத் திணறத் திணற உபசரித்து மகிழ்ந்தனர்.
சாப்பாடு இன்னபிற உபசாரங்கள் எல்லாம் முடிந்ததும் மதன மோகினியின் அண்ணன் தங்கையின் புகுந்த வீட்டாரிடம், சொன்னான். ‘ஊரிலே துர்க்காதேவி கோயில் உற்சவத் திருவிழா தொடங்கிவிட்டது. தங்கையுடன் உங்கள் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி அப்பா அனுப்பி வைத்தார்’ என்று கூறினான்.
பவளவண்ணனின் அப்பா அவனிடம், ‘அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்.’ என்றவர், தனது மகன் பவளவண்ணனிடம் திரும்பி, ‘பவளா! முதலில் நீயும் உன் மனைவியும் நாளைக் காலையே உனது மைத்துனனுடன் புறப்பட்டுச் செல்லுங்கள்! எனக்கு இங்கே ஒரு சிறிய வேலை இருக்கிறது. அதை முடித்துக்கொண்டு நானும் உன் அம்மாவும் இரண்டொரு நாள் கழித்து வருகிறோம்!’ என்றார்.
அவர் சொன்னதுபோலவே மறுநாள் காலையில் பவளவண்ணன், மனைவி மதன மோகினி, மைத்துனன் மதனபாலனுடன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டான்.
அவர்கள் பிரஹத்புரத்தை அடையும்பொழுது உச்சிப்பொழுது நெருங்கி விட்டது. நகரத்தின் நுழைவாயிலிலேயே அமைந்திருந்த துர்க்கையம்மனின் கோயிலைக் கண்டபோதே பவளவண்ணனின் இதயம் சிலிர்த்தது. கடந்து போன திருவிழா நாள்கள் நினைவுக்கு வந்தது. மதன மோகினியைக் கண்டு ஏங்கியதும், அம்மனின் சந்நியில் தான் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையும், அதுபோலவே பேரழகி மதன மோகினி தனக்கு மனைவியாகக் கிடைத்த ஆனந்தமயமான வாழ்க்கையும் மனத்துக்குள் அலைமோதியது.
நன்றியுணர்வில் மனம் நெகிழ்ந்த பவளவண்ணன் உணர்ச்சிப் பெருக்கு மேலிட துர்க்கையம்மன் சந்நிதியில் தனது பிரார்த்தனையை நிறைவேற்றத் தயாரானான். மனைவி மைத்துனனிடம் ஏதும் சொல்லாமல் அவர்களைக் கோயிலின் பிரமாண்டமான ஆலமரத்து நிழலில் அமர்த்தி விட்டு, ‘மோகினி, நீயும் உனது அண்ணனும் களைத்துப் போயிருக்கிறீர்கள். எனவே இங்கேயே அமர்ந்து இளைப்பாறுங்கள். நான் போய் துர்க்கையம்மனை தரிசித்து வணங்கிவிட்டு வருகிறேன்!’ என்று சொல்லி அவர்களை அமரச் செய்து விட்டு சந்நிதிக்குள் புகுந்தான்.
மகிஷாசூரமர்த்தினியாக கோலம் கொண்டிருந்த துர்க்கையம்மனைத் தரிசித்தவன், அவளிடம், ‘தேவி தயாபரி! துர்க்கா மாதா! எனது ஆசையை நிறைவேற்றி ஆனந்த வாழ்வளித்தாய். இந்த ஒரு வருடம் மிகுந்த மனத் திருப்தியுடன் என் மனைவியுடன் வாழ்ந்துவிட்டேன். அது போதும் எனக்கு. இதோ, நான் உனக்கு அளித்த வாக்குப்படி என் தலையை உனக்குக் காணிக்கையாக்கிறேன்!’ என்று சொல்லிவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தான்.
சந்நிதிக்குள் கிடந்த வெட்டுக் கத்தி ஒன்றை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டவன், கோயிலினுள் ஆலயமணி கட்டியிருந்த கயிற்றில் ஆலயமணியைக் கழற்றி விட்டு, அந்தக் கயிற்றில் தனது தலை முடியை உயர்த்திக் கட்டினான். பின் வெட்டுக் கத்தியால் ஒரே வீச்சில் கழுத்தை அறுத்துக் கொண்டான். ரத்தம் சொட்டச் சொட்ட அவனது தலை கயிற்றில் தொங்கி ஊசலாட, முண்டமாகிய உடல் தள்ளாடித் தரையில் விழுந்தது.
வெளியே காத்திருந்ததில் மதன மோகினி மரத்தில் சாய்ந்தபடி தூங்கியே போனாள். அவளது அண்ணன் மதனபாலனோ நேரம் விரைந்தோடியதில் பொறுமையிழந்துபோய், தூங்கிக் கொண்டிருந்த தங்கையை அப்படியே விட்டு பவளவண்ணனைத் தேடி கோயிலுக்குள் நுழைந்தான்.
அங்கே, தங்கையின் கணவன் தலை வேறு உடல் வேறாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ‘அடடா! என்ன காரியம் செய்து விட்டேன். தங்கையின் கணவனைத் தனியே விட்டிருக்கக்கூடாது. இப்போது எப்படி நான் இதை என் உயிருக்குயிரான தங்கையிடம் போய் சொல்வேன்.’
மதனபாலன் மனம் உடைந்து போனான். தங்கையின் கணவன் இறந்து விட்டான் என்ற தகவலைப் போய்ச் சொல்ல அவனுக்கு இதயத்தில் திராணியில்லை. அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.
பவளவண்ணன் இறந்தது போலவே அவனும் அதே வழியில் அதே கத்தியால் தனது தலையைத் துண்டித்துக் கொண்டு மாண்டு போனான்.
இது எதுவும் அறியாத மதன மோகினி, தூக்கம் கலைந்து பார்த்தபோது பக்கத்தில் யாரும் இல்லாததால் திகைத்துப் போனாள். என்னைத் தனியே விட்டுவிட்டு இருவரும் எங்கே சென்றார்கள்? கணவனையும், அண்ணனையும் தேடிக் கோயிலுக்குள் சென்றாள்.
அங்கே, நேசத்துக்குரிய கணவனும், பாசத்துக்குரிய அண்ணனும் இருவரும் மாண்டு கிடக்கும் கொடிய காட்சியைக் கண்டாள். கதறினாள். துடித்தாள். இதயம் வெடித்து விடுவதைப் போலக் குமுறிக் குமுறி அழுதாள்.
அழுது அழுது கண்ணீர் வற்றித் துவண்டதும், ஒரு முடிவுக்கு வந்தவளாக எழுந்தாள். துர்க்கையம்மன் முன் சென்று ஆவேசத்துடன், ‘தாயே, என்னைக் காத்து ரட்சிக்க வேண்டிய நீயே என்னைக் கைவிட்டு விட்டாய். உனது சந்நிதியிலேயே, உன் கண்ணெதிரிலேயே எனது கணவனும், சகோதரனும் உயிர் விட்டிருக்கிறார்கள். நீ அவர்களைக் காப்பாற்றவில்லை. போகட்டும்! எனது மஞ்சள் குங்குமத்தையும், மங்கலத்தையும் காக்க மனமில்லாதவளே, இனி நான் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன். இதோ உன் கண்ணெதிரேயே நானும் உயிர்விடப் போகிறேன். இந்த ஜென்மத்தில் என்னைக் கை விட்டதுபோல இல்லாமல் அடுத்த ஜென்மத்திலும் இந்த இருவருமே எனது கணவனாகவும், சகோதரனாகவும் அமைய வரம் கொடு!’ என்று வேண்டிக் கொண்டாள்.
பின் மதன மோகினி ஆலயத்தின் உள்ளேயே ஓர் ஆலமரத்தின் விழுதைக் கட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ளப் போனாள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! கருவறையில் இருந்து ஓர் அசரீரிக் குரல் ஒலித்தது.
‘மகளே மதன மோகினி, அவசரப்படாதே! நீ ஆத்மஹத்தி செய்துகொள்ளத் தேவையில்லை. உனது பதி பக்தியும், அண்ணன் மீது கொண்ட பாசமும் மன உறுதியும் போற்றத்தக்கது. போ! போய் இருவரது தலைகளையும் அவரவர் உடலுடன் பொருத்தி வை! எனது அருளால் அவர்கள் உயிர் பெற்று எழுந்திருப்பார்கள்!’ என்று கூறியது.
மனம் மகிழ்ந்து போன மதன மோகினி, தூக்கிலிருந்து இறங்கி ஆவலுடன் இருவரது உடல் கிடந்த இடத்துக்கு ஓடினாள். இருவரது தலைகளையும் உடலுடன் பொருத்தினாள். ஆனால்… ஆனால்…
அடடா! அவள் என்ன காரியம் செய்துவிட்டாள்? தலைகால் புரியாத சந்தோஷத்தினாலும், பதற்றத்தினாலும் என்ன செய்கிறோம் என்பதே அறியாமல் மதன மோகினி இருவரது தலைகளையும் மாற்றி மாற்றிப் பொருத்தி விட, கணவனின் தலை அண்ணன் உடலிலும், அண்ணனின் தலை கணவன் உடலிலும் பொருந்திப் போய் இருவரும் உயிர் பெற்று எழுந்து நின்றார்கள்.
மதன மோகினி மனம் கலங்கிப் போனாள். அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. இந்த இருவரில் யார் எனது கணவன்? யார் எனது அண்ணன்? கணவன் தலையோடு நிற்கும் அண்ணனின் உருவமா? அண்ணனின் தலையோடு இருக்கும் கணவனின் உருவமா? எப்படிக் கண்டுபிடிப்பது?’
குழப்பத்தின் உச்சத்தில் கதையை நிறுத்திய வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது: ‘சொல்லுங்கள் விக்கிரமாதித்தரே! இந்த இரண்டு உருவங்களில் யார் மதன மோகினியின் கணவன்? யார் மதன மோகினியின் அண்ணன்?’
‘வேதாளமே, ஒருவனது எண்சாண் உடலில் சிரசே பிரதானம் என்பர் பெரியோர். நாமும் தலையைக் கொண்டுதான் மனிதரை அடையாளம் கண்டுகொள்கிறோம். அதுமட்டுமல்ல தலையில் உள்ள மூளைதான் அனைத்தையும் யோசிக்கிறது. செயலாற்றத் தூண்டுகிறது. எனவே அந்த இருவரில் எவன் மதன மோகினியை மனைவி என்று நினைக்கிறானோ அவனே அவளின் கணவன் ஆவான்!’
அவ்வளவுதான்! சரியான பதிலைக் கேட்ட வேதாளம் முருங்கை மரம் செல்ல, விக்கிரமாதித்தன் அதைத் தொடர்ந்து போனான்.
(தொடரும்)