விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் சென்றான். தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான். முனிவன் சுசர்மன் இடம் நோக்கி நடந்தான்.
வேதாளம், அவனது விடாமுயற்சி கண்டு மெல்ல நகைத்தது. ‘கேளுமையா விக்கிரமாதித்த மன்னரே! செல்லும் வழி சலிக்காமலிருக்க இன்னொரு கதை சொல்கிறேன், கேளும். கதை முடிவில் பதில் சொல்லும்’ என்றபடி மற்றொரு கதையைத் தொடங்கியது.
‘அவிமுக்தா க்ஷேத்திரம்’ அதாவது ‘பாவங்களிலிருந்து விடுபடுதல்’ என்று போற்றப்படும் புண்ணிய பூமியாம் காசி நகரத்தில் ஆரணஸ்வாமி என்கிற பிராமணன் இருந்தான். அவன் தனது மனைவி தேவயானியின் மீது அபரிமிதமானக் காதல் கொண்டிருந்தான். பிரம்மன் தனது ஒட்டுமொத்தத் திறமையும் கொண்டு படைத்ததுபோன்ற அதிரூப சுந்தரி அவன் மனைவி தேவயானி.
ஆரணஸ்வாமி அவ்வூர் அரசனின் அபிமானம் பெற்றவன் என்பதால் அவனுக்குச் செல்வத்துக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் செல்வத்துக்கெல்லாம் மேலான செல்வமாக, பெரும் புதையலாக அவன் தனது மனைவியையே கருதினான்.
ரதியும் மன்மதனும் போல மனைவி தேவயானியும் அவனும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு கொண்டு, நாளும் காதல் கடலில் திளைத்து மூழ்கி இனிய இல்லறம் நடத்திவந்தனர். தேவலோக மங்கை போன்ற அழகிய மனைவியை அடைந்த காரணத்தால், இப்பூமியில் தானே மிகுந்த பாக்கியவான் என்று ஆரணன் அகம் மகிழ்ந்திருந்தான்.
ஆனால், விதிவசத்தால் அவனது இந்தச் சந்தோஷம் நீடிக்கவில்லை.
ஒருநாள், வசந்த கால இரவொன்றில் தனது மாளிகையின் உப்பரிகையில் மனைவியுடன் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான் ஆரணஸ்வாமி. அப்போது வான்வெளியில் ஆகாயமார்க்கமாகச் சென்றுகொண்டிருந்த விஸ்வாவசு என்கிற கந்தர்வன் ஒருவன், உப்பரிகையில் உறங்கிக்கொண்டிருந்த தேவயானியைக் கண்டு திகைத்துப் போனான். அவள் அழகில் மயக்கம் கொண்டு கீழிறங்கி வந்தான்.
ஆழ்ந்த தூக்கத்திலும் தீட்டிய ஓவியம்போல ஒயிலாகப் படுத்திருப்பவளைக் கண்டதும் அவள்மீது மோகம் அதிகரித்து, தேவயானியைத் தூக்கிக்கொண்டு பறந்து போனான்.
காலையில் கண் விழித்தெழுந்த ஆரணஸ்வாமி, பக்கத்தில் மனைவியைக் காணாமல் திகைத்தான். ‘எப்போதும் ஒன்றாகத்தானே இறங்கிச் செல்வோம். இன்றென்ன அதிசயம். முன்பாகவே குளிக்கப் போய்விட்டாளோ?’
உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து குரல் கொடுத்தான். தேவயானியிடமிருந்து பதில் குரல் கேட்கவில்லை. கவலைப்பட்டான். மாளிகை முழுக்கத் தேடினான். தோட்டத்தில் சென்று சுற்றிப் பார்த்தான். தேவயானியை எங்குமே காணோம். ஆரணஸ்வாமி மனம் கலங்கிப் போனான்.
தேவயானி எங்கே போய்விட்டாள்? என்னவானாள்? நெஞ்சு பதறியது. பக்கத்தில் எங்காவது சென்றிருக்கிறாளா? தெரு முழுக்கச் சென்று மூலை முடுக்கெல்லாம் தேடினான். கண்ணில்பட்டவர்களிடம் எல்லாம் ‘என் மனைவியைப் பார்த்தீர்களா?’ என்று வாய் ஓயாமல் கேட்டான். இதயம் துடித்துத் தவித்தது. இரவுப் பொழுதும் வந்துவிட்டது. தேவயானியைக் காணவில்லை. ஆரணஸ்வாமி தூக்கம் மறந்தான்.
மறுநாள், அடுத்தநாள், அதற்கு அடுத்தநாள், தேடலிலேயே நாட்கள் ஓடித்தொலைந்தன. ஆரணன் கவலையில் இளைத்துப் போனான். வேதனையில் புலம்பித் தவித்தான். கண்ணீர் விட்டான்.
ஆரணனின் நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தார் அனைவரும் வந்து அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். தேவயானியை மறந்துவிட்டு வேறு திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழும்படி அறிவுரை கூறினார்கள். ஆனால் ஆரணஸ்வாமி எதையும் காதில் வாங்கவில்லை.
ஆரணஸ்வாமி ஒரு முடிவுக்கு வந்தான்.
‘ஏதோ முன் ஜென்மப் பாவம்தான் எனது தேவயானியை என்னிடம் இருந்து பிரித்துவிட்டது. இதோ இப்போதே நான் எல்லாப் புனித க்ஷேத்திரங்களுக்கும் தீர்த்தயாத்திரை செல்லப் போகிறேன். புண்ணியத் தலங்களின் தீர்த்தங்களில் நீராடி எனது பாவத்தைப் போக்கிக்கொள்வேன். அப்படி எனது பாவம் கழியும்போது நிச்சயம் எனது மனைவி மீண்டும் கிடைப்பாள். நான் அவளுடன்தான் மறுபடியும் இங்கு வருவேன்!’
தீர்மானத்துக்கு வந்தவன் அந்த நிமிடமே வீடு, வாசல், சொத்து சுகங்களை அப்படியே விட்டு உடுத்திய உடையுடன் புண்ணிய யாத்திரை தொடங்கினான்.
கொட்டும் பனி, கொளுத்தும் வெயில், இடி, மின்னல், சூறாவளிக் காற்று, பேய் மழையிலும் அவனது யாத்திரை தொடர்ந்தது. ஊர் ஊராக, நாடு நாடாகச் சென்றுகொண்டே இருந்தான்.
ஒரு கோடைக்காலத்தில் தகிக்கும் வெப்பத்தால் நா வறண்டு, உடல் துவண்டு நடக்கவே இயலாமல் தள்ளாட்டத்துடன் ஊர் ஒன்றை அடைந்தான் ஆரணஸ்வாமி. பசி, தாகத்தால் கண்ணை இருட்டியது. யாராவது உணவிடமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்புடன் அவன் நடந்தபோது, அக்கிரஹாரத்தின் வீடு ஒன்றில் அன்னதானம் நடப்பது தெரியவந்தது. அங்கே கணநாதர் என்கிற அந்தணர் புண்ணியகர்மா ஒன்றைச் செய்து அதன் காரணமாக அன்னதானம் நடத்திக்கொண்டிருந்தார். அவ்விடத்தில் பலரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆரணஸ்வாமி அந்த வீட்டின் வாசலை நெருங்கி கூட்டம் குறைவதற்காகக் காத்திருந்தான். நிற்கக்கூட இயலாமல் ஓரமாகச் சென்று அமர்ந்தான். இதைக் கண்ட கணநாதரின் மனைவி ஆரணன் மீது பரிதாபம் கொண்டாள்.
‘ஐயோ பாவம் பார்த்தாலே உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த கிரகஸ்தன் என்பது தெரிகிறது. பசிக்கொடுமையால் முகம் வாடிக் களைத்துப் போயிருக்கிறான். எங்கோ வெகுதூரத்திலிருந்து வருகிறான் போலிருக்கிறது. பாவம்! ஏதோ காலச் சூழல்தான் அவனை இப்படி உணவுக்காகக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு தள்ளியிருக்கிறது என்று நினைத்து வருத்தப்பட்டாள். பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அது நிறைய புளியோதரை அன்னத்தையும் இன்னும் பலகாரங்களையும் நிரப்பி, ஆரணஸ்வாமியிடம் சென்று, ‘ஐயா! இந்தாருங்கள் இதைச் சாப்பிட்டுப் பசியாறுங்கள்!’ என்று சொல்லிக் கொடுத்தாள்.
‘மிக்க நன்றி தாயே!’ என்று ஆரணன் அவளிடம் இருந்து அன்னத்தைப் பெற்றுக்கொண்டான். அங்கிருந்து புறப்பட்டு அருகிலிருந்த ஆற்றங்கரைக்குச் சென்று, அன்னப் பாத்திரத்தை அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் வைத்து விட்டு ஆற்றில் இறங்கி முகம் கை கால் கழுவி வருவதற்காகச் சென்றான்.
அப்போது அந்த ஆலமரத்தின் மீது ஒரு கழுகு வந்து அமர்ந்தது. அதன் அலகில் பற்றியிருந்த நாகப்பாம்பைக் கால் நகங்களால் பற்றிக் கிளையின் மீது வைத்துக் கொத்தித் தின்னத் தொடங்கியது. வலி தாளாமல் அந்த நாகம் கடும் விஷத்தைக் கக்கியது. அந்த விஷம் ஆலமரத்தின் அடியில் ஆரணன் வைத்து விட்டுப் போன சோற்றுப் பாத்திரத்தில் விழுந்து சாதத்துடன் பரவியது.
ஆற்றிலிருந்து திரும்பிய ஆரணன் பசி வேகத்தில் அப்பாத்திரத்திலிருந்த சாப்பாட்டைச் சிறிதும் மிச்சமில்லாமல் சாப்பிட்டு முடித்தான். அங்கேயே படுத்து உறங்க முயன்றான். முடியவில்லை. வயிற்றில் ஏதோ இம்சித்தது. படிப்படியாக அடுத்த சில நிமிடங்களில் விஷத்தின் வேகம் அவன் உடலில் பரவியது. உடல் நெருப்பாகத் தகித்தது.
ஆரணஸ்வாமி வேதனையுடன் தட்டுத் தடுமாறி அன்னமிட்ட வீட்டுக்கே திரும்பி வந்து கணநாதரின் மனைவியிடம், ‘தாயே! நீங்களிட்ட உணவு எனக்கு விஷமாகி விட்டது. என் உடல் முழுவதும் தகிக்கிறது. வேதனை தாளமுடியவில்லை. தயவுசெய்து உடனே ஒரு மருத்துவரையோ, விஷம் இரக்கும் மந்திரவாதியையோ அழைத்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள். இல்லாவிட்டால் உங்களைப் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கும்!’ என்று சொல்லித் தரையில் விழுந்தான்.
இதைக் கேட்டதும் கணநாதரின் மனைவி பதறிப் போனாள். இரக்கம் கொண்டு தான் செய்த காரியம் எதனால் இப்படி ஆனது என்று அறியாமல் திகைத்துப் போனாள். அவள் தனது கணவரை அழைத்து அடுத்து என்ன செய்வது என்று கேட்கும் முன்பே ஆரணஸ்வாமி உயிர் பிரிந்து பிணமானான்.
இதையெல்லாம் கண்டதும் அந்தணன் கணநாதன் தனது மனைவியின் மேல் மிகுந்த கோபம் கொண்டான். இவ்வளவுக்கும் நீதான் காரணம். இனி இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது. வெளியே போ’ என்று சொல்லி மனைவியை வீட்டை விட்டு விரட்டி விட்டான்.
பாவம்! நிரபராதியும், கருணை உள்ளம் கொண்டவளுமான அந்தப் பெண்மணி ஒரு பிராமணனின் உயிர் போக ஏதோ ஒரு வகையில் தான் காரணமாகி விட்டோமோ என்று குற்ற உணர்வு கொண்டு, தனது பாபத்தைத் தொலைக்கப் புண்ணியத் தலங்களையும் புண்ணியத் தீர்த்தங்களையும் நாடிப் புறப்பட்டாள்.’
என்று சொல்லி கதை முடித்த வேதாளம், ‘விக்கிரம வீரரே! இந்தப் பிரம்மஹத்தி தோஷமும், ஆரணஸ்வாமி உயிர் நீத்ததற்கான பழி பாவமும் இவர்களில் யாரைச் சேரும் என்று சொல்லுங்கள். பதில் தெரிந்தும் கூறாமலிருந்தால்…’ என்று நிறுத்தியது.
மௌனம் கலைத்து தான் பேசினால் வேதாளம் ஓடிவிடும் என்று தெரிந்தும் வேறு வழியின்றித் தலை சுக்கு நூறாகச் சிதறாமல் இருப்பதற்காக விக்கிரமன் பதில் கூறினான்:
இந்நிகழ்வில் யாருமே குற்றவாளியல்ல! பசிக்கும்போது தனக்குத் தேவையான உணவுக்காகப் பாம்பை வேட்டையாடி எடுத்துவந்த அந்தக் கழுகின் மீது துளியும் குற்றமில்லை. தனது பகைவனான கழுகின் பிடியில் சிக்கி வேதனை தாளாமல் விஷத்தைக் கக்கிய நாகப்பாம்பின் மீதும் குற்றமில்லை. அதுபோலவே தமது கடமையில் சிறிதும் தவறாத அந்த அந்தணக் குடும்பத் தம்பதிகளும் தருமத்தில் வழுவாத வாழ்க்கை நடத்தியவர்கள் என்பதால் அவர்கள் மீதும் குறையோ தவறோ சொல்ல என்ன இருக்கிறது? ஆகவே ஆராய்ந்து யோசிக்காமல் இவர்களில் யாராவது ஒருவரைக் குற்றவாளி என்று யார் பழி சொல்லுகிறார்களோ அவர்களையே பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கும்!’
இந்தச் சரியான பதிலைக் கேட்டதும் வேதாளம் வழக்கம்போல் கட்டவிழ்த்துக் கொண்டு மரத்தை நோக்கிப் பறந்தது. விக்கிரமன் அதைப் பின் தொடர்ந்தான்.
(தொடரும்)