வேதாளம் பறந்து செல்லவும், விக்கிரமாதித்தன் மீண்டும் சென்று அதைத் தூக்கி வருவதுமான நிகழ்வுகள் வழக்கம்போலவே நடந்தன. முனிவன் சுசர்மன் இருக்கும் வன துர்க்கையம்மன் கோயில் நோக்கி விக்கிரமாதித்தன் நடந்தான். சிறிது தூரம் போனதுமே வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.
‘மகாராஜனே விசித்திரக் கதை ஒன்றை உனக்குச் சொல்கிறேன் கேள். கணபத்திரம் என்னும் நகரத்தில் வேதகோபாலன் என்கிற பெரும் செல்வந்தனான வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனது மனைவி சௌபாக்கியவதி. இவர்களுக்கு ஒரே மகள் வேதவல்லி. இச்சிறிய குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் அன்புடனும் அக்கறையுடனும் செல்வச் செழிப்புடன் சுகபோகமாக வாழ்ந்து வந்தனர்.
இத்தருணத்தில் வேதவல்லி பருவவயதை எட்டியபோது ஒருநாள் வியாபாரி வேதகோபாலன் திடீரென்று மாரடைப்பால் இறந்து போனான். அதுநாள்வரை வியாபாரியின் மீது பொறாமை கொண்டிருந்த அவனது உறவினர்களும், பங்குதாரர்களும் இதுதான் சந்தர்ப்பமென்று வேதகோபாலனின் சொத்தை அபகரித்துக்கொண்டு, அவனது மனைவியையும், மகளையும் கொல்லத் திட்டமிட்டனர்.
இதை அறிந்த சௌபாக்கியவதி அந்தக் கொடியவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தனது பருவப் பெண்ணான வேதவல்லியை இரவோடு இரவாக அழைத்துக்கொண்டு தனது வீட்டிலிருந்து வெளியேறினாள்.
விடியும் முன்பாகவே அவ்வூரைவிட்டு வெளியேறி விடவேண்டுமென்று இருவரும் வேகவேகமாக நடந்து, இருளில் தட்டுத் தடுமாறி பயணம் செய்து நகரத்தின் எல்லைப்புறத்தை அடைந்தார்கள். எல்லையின் காட்டுப் பகுதியை அவர்கள் கடந்தபோது, சௌபாக்கியவதி எதன் மீதோ மோதிக்கொண்டாள்.
அப்போது, ‘ஐயோ! கடவுளே!’ என்று வேதனையுடன் ஒரு தீனக்குரல் ஒலித்தது.
சௌபாக்கியவதியும், வேதவல்லியும் பதறிப் போனார்கள். ‘யார்? யார் அது?’ என்றார்கள்.
சுற்றிலும் கும்மிருட்டில் இருளுக்குக் கண்கள் பழகியதும், அக்காட்டுப்பகுதியில், அவர்கள் கண்ட காட்சி அவர்களைத் தூக்கிவாரிப் போடச் செய்தது.
அங்கே காட்டுக் கோயிலின் பலி பீடத்தின் அருகே, ஒருவனைக் கழுவில் ஏற்றியிருந்தார்கள். அவன் ரத்தம் வடிய வலி வேதனையுடன் துடிதுடித்துக்கொண்டிருந்தான்.
சௌபாக்கியவதி பரிதாபத்துடன், ‘ஐயா நீங்கள் யார்? எதனால் உங்களுக்கு இந்த நிலைமை?’ என்று கேட்டாள்.
‘தாயே! நான் ஒரு திருடன். இந்நாட்டு அரசன் எனக்குத் தண்டனை விதித்ததன் காரணமாக என்னைக் கழுவிலேற்றி விட்டார்கள். நான் செய்த பாவத்தின் காரணமாக எனது ஜீவன் இன்னும் இந்த உடலை விட்டுப் பிரியவில்லை.’ என்று கூறியவன், ‘அதுபோகட்டும் நீங்கள் யார்? இந்த நள்ளிரவில் நட்ட நடுக் காட்டில் இளம்பெண்ணையும் அழைத்துக்கொண்டு பயணம் செல்கிறீர்களே! அப்படி என்ன அவசரம்? எங்கே செல்கிறீர்கள்?’ என்று விசாரித்தான்.
சௌபாக்கியவதி, தங்களின் துயரநிலையை அவனிடம் விவரித்துக் கூறினாள்.
பொழுது விடியத் தொடங்கியது.
சகல செல்வங்களையும் இழந்து, இனி என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிக் கொண்டிருக்கும் அந்த அபலைப் பெண்களின் கதையைக் கேட்டு வருந்திய அந்தத் திருடன், சௌபாக்கியவதியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தான். மிக விசித்திரமான விபரீதமான கோரிக்கை அது!
‘தாயே! இன்னும் சில நொடிகளில் நான் இறந்துவிடுவேன். எனக்குத் திருமணம் ஆகவில்லை. மனைவி மகன் என்று யாருமில்லை. எனவே நான் இறந்து போனால் சாஸ்திரப்படி கர்மகாரியங்களைச் செய்ய ஒருவருமில்லை. எனவே எனது ஆத்மா ஸ்வர்க்கப் பிராப்தி அடையாமல் நிம்மதியின்றி அலையத்தான் செய்யும். தாயே! இந்தப் பாவப்பட்ட ஜீவனுக்கு ஓர் உபகாரம் செய்யுங்கள். நான் கொள்ளையடித்து வைத்த பொன் பொருளையெல்லாம் இங்குதான் வைத்திருக்கிறேன். அவற்றை நான் முழுவதும் உங்களுக்குத் தருகிறேன். அதற்குப் பிரதி உபகாரமாக தங்களின் கன்னி கழியாத மகளை எனக்கு மனைவியாக்குவதாக வாக்குத் தாருங்கள்!’ என்றான்.
திடுக்கிட்டுப் போன சௌபாக்கியவதி விரக்தியான புன்னகையுடன், ‘உயிர் போகும் நிலையில் உனக்குச் சித்தம் கலங்கி விட்டதா என்ன? என்ன கேட்கிறோம் என்று உணர்ந்துதான் கேட்கிறாயா?’ என்று வினவினாள்.
‘தாயே! தங்கள் மகளை எனக்கு மனைவியாக்குவதாகத் தாரை வார்த்தால் போதும். பிறகு அவள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளட்டும். இந்த என் சம்மதத்தின் மூலமாக அவள் யார் மூலமாகக் குழந்தை பெற்றாலும் அக்குழந்தை எனது மகனே! அவன் எனக்குக் கர்ம காரியங்கள் செய்து கரையேற்றட்டும்! அதனால் என் ஆன்மா சாந்தியடையும். நான் ஸ்வர்க்கப் பிராப்தி பெறுவேன்!’ என்று வேண்டினான்.
அவன் கழுமரம் ஏற்றப்பட்டிருந்த இடத்துக்கு அருகாமையில் இருந்த பெரிய ஆலமரத்தினடியில் தோண்டிப் பார்க்கச் சொன்னான். அவன் சொன்னதுபோலவே ஏராளமான பொற்காசுகளும் நகைகளும், வைர வைடூரியங்களும் கொண்ட ஒரு மூட்டை அங்கிருந்து கிடைத்தது.
சௌபாக்கியவதி மகள் வேதவல்லியைப் பற்றிச் சிந்தித்தாள். கையில் செப்புக்காசு இல்லாமல் தனியொரு பெண்ணாக பருவ மகளுடன் வாழ்க்கை நடத்துவது சிரமம் என்பதால், அவள் அந்தப் பொன் மூட்டையை எடுத்துக்கொண்டாள். அருகாமையிலிருந்த நீரோடைக்குச் சென்று நீர் கொணர்ந்து, திருடன் கைகளில் இட்டு, தனது மகள் வேதவல்லியை அவனுக்கு மனைவியாக்குவதாகக் கூறித் தாரை வார்த்தாள்.
திருடனும் வேதவல்லிக்கு புத்திரனைப் பெற்றுக்கொள்ள அனுமதி தந்துவிட்டு உயிர் நீத்தான். சௌபாக்கியவதி திருடன் கேட்டுக்கொண்டபடி அவன் உடலை எடுத்து முறைப்படி தகனம் செய்து, அவனது அஸ்தியை நதியில் கரைத்து வாக்கை நிறைவேற்றினாள். பிறகு அவள் மகளை அழைத்துக்கொண்டு பக்கத்து நாடான சம்பாவதி தேசத்தை அடைந்தாள்.
அந்தச் சம்பாவதி தேசத்தை சந்திரஹாசன் என்கிற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குச் சகல செல்வங்கள் இருந்தும் புத்திர பாக்கியம் மட்டும் இல்லாமல் இருந்தது. அதற்காக அவன் நித்தமும் இறைவனை வேண்டிக்கொண்டு, நாளொரு பூஜையும், யாகமும் தானமும் தர்மமும் செய்து பிரார்த்தித்து வந்தான்.
சௌபாக்கியதி அந்நாட்டில் ஒரு வியாபாரியின் வீட்டை வாங்கிக்கொண்டு மகளுடன் குடியேறினாள். திருடன் அளித்திருந்த செல்வத்தின் மூலம் வறுமையின்றி சிக்கனமாகச் சிறப்பாக வாழ்க்கையை நடத்தி வந்தாள். மகள் வேதவல்லிக்கு விரும்பியவனவெல்லாம் செய்து தந்து அவளை அன்புடன் பார்த்துக் கொண்டாள்.
வேதவல்லி தனது வேலைக்காரத் தோழியுடன் தினமும் கோயிலுக்குச் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள். அவ்வாறு அவள் சென்று வருகையில் வழியில் ஓர் அழகான பிராமண இளைஞனைக் கண்டாள். தினமும் பார்க்கும் அவனிடம் தனது மனதைப் பறி கொடுத்தாள். அவன் மீது மையல் கொண்டாள். நாட்கள் செல்லச் செல்ல அவளை விரகதாபம் வாட்டியது.
இதைக் கண்ட வேதவல்லியின் அந்தரங்கத் தோழி, வேதவல்லியின் ஆசையைப்பற்றி அவளது தாயிடம் தெரிவித்தாள். சௌபாக்கியவதியும் வேதவல்லியின் தாம்பத்திய வாழ்க்கை குறித்து யோசித்துக் கொண்டுதான் இருந்தாள். ஏனெனில் திருடனுக்கு அவள் அளித்த வாக்குப்படி வேதவல்லி என்றேனும் யாருடனாவது இருந்து ஒரு மகனைப் பெற்றெடுக்கத்தான் வேண்டும் அல்லவா? எனவே அவள் மகளின் விருப்பத்தை நிறைவேற்றத் தீர்மானித்தாள்.
அந்தப் பிராமண இளைஞனிடம் சென்று பேசும்படி தனது அந்தரங்க வேலைக்காரியை அனுப்பி வைத்தாள்.
தேவஸ்வாமி என்கிற அந்தப் பிராமண இளைஞனோ அச்சமயத்தில் மதிவதனி என்கிற பரத்தையின் மேல் மோகம் கொண்டிருந்தான். ஒரே ஒருமுறையாவது அவளைச் சுகித்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் தவித்தான். ஆனால் அந்த மதிவதனியுடன் ஓர் இரவைக் கழிக்கவேண்டுமானால் அவளுக்கு ஆயிரம் பொன் அளிக்கவேண்டும். அதற்கு வழியில்லாமல்தான் தேவஸ்வாமி தத்தளித்துக்கொண்டிருந்தான்.
இச்சூழலில் சௌபாக்கியவதி அனுப்பிய வேலைக்காரி தேவஸ்வாமியிடம் வந்து வேதவல்லியின் விருப்பத்தைத் தெரிவித்தாள். தேவஸ்வாமி யோசித்தான். அவன் அந்த வேலைக்காரியிடம், பரத்தை மதிவதனியின் மேல் தான் கொண்ட மோகத்தைத் தெரிவித்து, அதற்குத் தேவைப்படும் ஆயிரம் பொன்னை தனக்குத் தந்தால் வேதவல்லியுடன் அவள் விருப்பத்துக்கேற்ப ஒரு நாளைக் கழிப்பேன் என்று நிபந்தனை விதித்தான்.
சௌபாக்கியவதியும் ஒப்புக்கொண்டு அவனுக்கு ஆயிரம் பொன்னை அளித்தாள். அதைப் பெற்றுக் கொண்ட அந்தப் பிராமண இளைஞன் வேதவல்லியுடன் ஓரிரவைக் கழித்துவிட்டு விடியும் முன்பாகவே வெளியேறிப் போய்விட்டான்.
நாட்கள் கடந்தன. பிராமண இளைஞனுடன் இணைந்த காரணத்தால் வேதவல்லி கருவுற்று ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
அன்றிரவு சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றினார். ‘உங்களின் இந்தக் குழந்தையை எடுத்துச் சென்று, இவ்வூர் அரசன் சந்திரஹாசன் அரண்மனை வாசலில் விட்டு விடுங்கள். குழந்தையுடன் கூடவே ஆயிரம் பொன்னையும் வைத்து விட்டு வந்து விடுங்கள்!’ என்று சொல்லி மறைந்தார்.
சௌபாக்கியவதியும் வேதவல்லியும் அவ்வாறே செய்து திரும்பினர்.
இதே நேரத்தில் சிவபெருமான் மன்னன் சந்திரஹாசன் கனவில் தோன்றி, ‘மன்னா இன்றோடு உனது பிள்ளையில்லாக் குறை தீர்ந்தது. உனது அரண்மனை வாசலில் ஒரு குழந்தை கிடக்கிறது. நீ சென்று அக்குழந்தையை எடுத்து உனது மகனாகவே எண்ணி வளர்த்து வா! ’ என்று அருளிச் சென்றார்.
மன்னன் சந்திரஹாசன் மனம் மகிழ்ந்து போனான். அக்குழந்தையை எடுத்து தனது மகனாகவே சுவீகரித்துக் கொண்டு, அக்குழந்தைக்கு ராஜவர்மன் என்று பெயரிட்டான். அந்நாட்டு இளவரசனாகப் பட்டம் சூட்டி வளர்த்து வந்தான்.
ராஜவர்மன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்து குணத்திலும் ஒழுக்கத்திலும் பெரியோர் மெச்சும்படியாகத் திகழ்ந்தான். பெரும் வீரனாகப் புகழ்பெற்றான்.
தனது மகன் ராஜவர்மன் நாட்டை ஆளும் திறன் பெற்றுவிட்டான் என்பதால் சந்திரஹாசன் மகனுக்கு மன்னனாக முடிசூட்டி விட்டு வனவாசம் மேற்கொண்டான்.
ராஜவர்மன் ஆட்சியில் நாடு மேலும் செழித்து வளமை பெற்றது. மக்கள் எந்தக் குறையுமின்றி நலமாக வாழ்ந்தனர். அண்டை நாட்டு அரசர்கள் அடிபணிந்தார்கள். பகைவர்கள் ராஜவர்மன் வீரத்துக்கு அஞ்சி ஓடிப் போனார்கள். காலம் விரைந்தோடியது.
வனவாசம் மேற்கொண்ட மன்னன் சந்திரஹாசன் கடும் தவத்தில் இருந்து உயிர் நீத்தான். தந்தையின் மரணத்தினால் மனம் கலங்கிய ராஜவர்மன், பின் தன்னைத் தேற்றிக் கொண்டு, தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதிக் கர்மங்களைச் செய்தான்.
பின்னர் மன்னனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு காசி சென்றவன், புண்ணிய நதியாகிய கங்கையில் ஸ்நானம் செய்து தந்தையின் அஸ்தியை நீரில் கரைத்தான். அடுத்து கயாவுக்குச் சென்று பலவகையான தான தர்மங்கள் செய்து சிரார்த்தம் செய்து முடித்தான்.
பிறகு இறுதியாக ஹோமகுண்டம் வளர்த்து அக்னியில் தனது தந்தைக்குப் பிண்டம் இட்டான். அப்பொழுது அந்த அக்னிக்குண்டத்திலிருந்து, ராஜவர்மனின் கையிலிருந்த பிண்டத்தைப் பெறுவதற்காக மூன்று கைகள் தோன்றின.
ராஜவர்மன் திகைத்துப் போனான்.
அதிர்ச்சியுடன், ‘அடடா! என்ன இது? இப்போது நான் எந்தக் கையில் பிண்டம் இடுவது?’ என்று அங்கிருந்த அந்தணர்களைக் கேட்டான்.
அந்த அந்தணர்களும் திகைத்துத் திடுக்கிட்டுப் போயிருந்தனர்.
‘அரசே! இது என்னவென்று எங்களுக்கும் விளங்கவில்லை. இம்மூன்று கைகளுள் ஒரு கையில் கன்னக்கோல் இருக்கிறது. எனவே அக்கைக்கு உரியவன் ஒரு திருடனாக இருக்கவேண்டும். மற்றொரு கையில் யாககுண்டத்தில் நெய் ஊற்றப் பயன்படும் மரக்கரண்டி இருக்கிறது. எனவே அக்கைக்கு உரியவன் ஒரு பிராமணன் என்று தெரிகிறது. மூன்றாவது கையிலோ மன்னர்களுக்கே உரித்தான முத்திரை மோதிரம் காணப்படுகிறது. எனவே அது ஓர் அரசனுடைய கையாக இருக்கலாம். இந்த மூன்று நபர்களும் யார் என்பதோ, இக்கைகள் ஒரே சமயத்தில் இந்த யாக குண்டத்திலிருந்து ஏன் தோன்றுகிறது என்றோ எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆகவே யார் கையில் பிண்டத்தை இடுவது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒரே புதிராக இருக்கிறது!’
அந்தணர்கள் இப்படிக் கூறியதால் மன்னன் ராஜவர்மனுக்கும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.’
இப்படியாகக் கதையை முடித்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேட்டது.
‘அகிலம் போற்றும் மன்னனே, நீ சொல். மன்னன் ராஜவர்மன் யார் கையில் பிண்டம் இடவேண்டும்?’
நொடி நேரமும் தாமதிக்காமல் விக்கிரமாதித்தன் உடனடியாகப் பதில் கூறினான்.
‘மன்னன் ராஜவர்மன் பிண்டத்தைத் திருடன் கையில்தான் இடவேண்டும். சௌபாக்கியவதி, தாரை வார்த்தபடி, வேதவல்லிக்குப் பிறக்கும் மகன் திருடனின் மகனே! பிராமண இளைஞனுக்குத்தான் அக்குழந்தை பிறந்தது என்றாலும் அவன் வேதவல்லியிடம் பணம் பெற்றுக் கொண்டே வேதவல்லியைக் கூடினான். அதனால் குழந்தையின் மேல் அவனுக்கு எந்தப் பாத்தியதையும் இல்லை. அதுபோலவே மன்னன் சந்திரஹாசனும் குழந்தையைத் தனது மகனாகவே கருதி உபநயனம் செய்வித்து வளர்த்து வந்தாலும், குழந்தையுடன் வைக்கப்பட்ட ஆயிரம் பொன்னையும் அவர் எடுத்துக் கொண்டார். அதனால் அவர் கூலி பெற்றுக்கொண்டு குழந்தையை வளர்த்ததாகவே கொள்ளப்படும். அதனால் குழந்தையின் மேல் அரசருக்கும் உரிமையில்லை. எனவே ராஜவர்மன் திருடனின் மகனே! வேதவல்லி திருடனின் மனைவியே! திருடனின் அனுமதியுடன் தான் அவளுக்கு இக்குழந்தை பிறந்தது. அக்குழந்தையை வளர்ப்பதற்கு உதவியதும் திருடனின் பணம்தான். ஆகவே ராஜவர்மன் பிண்டத்தைத் திருடன் கையிலேதான் இடவேண்டும்!’
விக்கிரமாதித்தன் உறுதியாகச் சொல்லி முடித்தான்.
அவனது சரியான பதிலால் வேதாளம் விக்கிரமாதித்தன் தோளிலிருந்து விடுபட்டு மீண்டும் சென்று முருங்கை மரமேறியது.
(தொடரும்)