Skip to content
Home » விண்வெளிப் பயணம் #10 – பிரபஞ்சம் உருவான கணிப்பு

விண்வெளிப் பயணம் #10 – பிரபஞ்சம் உருவான கணிப்பு

நட்சத்திர மண்டலங்கள்

நீங்கள் எந்தத் திசையில் தொலைநோக்கியை வைத்துப் பார்த்தாலும் நட்சத்திர மண்டலங்கள் நினைத்தே பார்க்கமுடியாத வேகத்தில் விலகி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறு ஏன் நட்சத்திரம் நகர்கிறது என்றால் நமது பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருப்பதுதான் அதற்குக் காரணம்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றலாம். பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருக்கின்றது என்றால் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் மட்டும் ஏன் ஒன்றையொன்று விலகிச் செல்லவில்லை?

உதாரணமாக ஏன் சூரியனும் பூமியும் விலகிச் செல்லவில்லை? காரணம் ஈர்ப்பு விசைதான். நட்சத்திரங்கள் கூட்டமாக இருக்கும்போது ஈர்ப்பு விசை அவற்றில் ஒவ்வொன்றையும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது. ஆனால் நமது ஈர்ப்பு விசையின் கட்டுக்குள் வராத நட்சத்திர மண்டலங்கள் விலகிச் சென்றுகொண்டிருக்கின்றன.

இப்படி நட்சத்திர கூட்டங்கள் விலகிச் செல்கின்றன என்பதை வைத்துதான் பிரபஞ்சம் உருவான காலத்தை விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சம் உருவாகியதில் இருந்து விரிவடைந்துகொண்டே செல்கிறது என்பதைதான் நட்சத்திர மண்டலங்கள் நம் சூரியக் குடும்பத்தை விட்டு அகன்று சென்றுகொண்டே இருக்கும் நிகழ்வு குறிக்கிறது. (ஒரு பலூன் விரிவடைவது போல கற்பனை செய்துகொள்ளுங்கள்).

அவ்வாறு நீண்ட தூரம் சென்றுள்ள நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரே இடத்தில் இருந்திருக்க வேண்டும். பின்புதான் விரிவடைதல் தொடங்கியிருக்க வேண்டும். அப்படி என்றால் இந்த விரிவடைதல் தொடங்கிய காலத்தை நாம் பிரபஞ்சம் உருவான காலமாகக் கருதலாம் இல்லையா? பெருவெடிப்பு நிகழ்ந்த காலமாக எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?

இப்போது நட்சத்திர மண்டலங்கள் இருக்கும் தூரத்தை அளவிட்டு, அது விரிந்து செல்லும் வேகத்தையும் அளவிட்டு, அது அதே வேகத்தில் திரும்பி வந்தால் எப்போது நாம் இருக்கும் இடத்தில் இருந்திருக்கும் என்பதைக் கணித்துவிட்டால், அந்தக் காலத்தை பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சம் உருவான காலம் என கூறிவிடலாம் இல்லையா?

அப்படி அனைத்தையும் ஒன்றிணைந்து கூட்டி, கழித்த பின்புதான் நாம் பிரபஞ்சம் உருவான காலம் 1400 கோடி வருடங்களுக்கு முன்பு என்ற முடிவிற்கு வந்திருக்கிறோம். இவ்வாறுதான் 1200 – 1400 கோடி வருடங்களுக்கு முன் பெரு வெடிப்பில் (Big Bang) இந்த பிரபஞ்சம் தோன்றி, அது விரிவடைந்துகொண்டே சென்றுகொண்டிருக்கிறது என்பதைதான் அறிவியல் கூறுகிறது.

0

சரி, பெருவெடிப்புக்கு முன் என்ன இருந்திருக்கும்? தெரியாது. காலமும், வெளியும்கூட பெருவெடிப்புக்குப் பின்புதான் தோன்றியதாக அறிவியல் கூறுகிறது. அவற்றை புரிந்துகொள்ள முடியுமா? நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், தற்போதைய பரிணாம வளர்ச்சியில் உருகொண்ட மனித மூளைக்கு அவற்றை புரிந்துகொள்ளக்கூடிய தன்மை கிடையாது என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வேண்டுமானாலும் அறிவியலும் துணையுடன் எதிர்காலத்தில் அதுகுறித்த புரிதல் நமக்கு ஏற்படலாம்.

மேற்கூறிய வகையில்தான் நம் பிரபஞ்சம் உருவானதை தொலைநோக்கி மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பின் உதவியுடன் விஞ்ஞானிகள் கணித்து வருகின்றனர்.

விண்வெளியில் காலப்பயணம்

சரி இப்போது ஒரு கேள்வி வருகிறது. வானில் தினமும் பல கோடி நட்சத்திரங்கள் பிறக்கின்றன. பல கோடி நட்சத்திரங்கள் அழிகின்றன. இந்தப் பிரபஞ்சம் எப்போது உருவானது என்ற முடிவுக்கு ஒருவகை கணிப்புகள் மூலம் வந்திருக்கிறோம். ஆனால் இந்தப் பிரபஞ்சம் உருவானபோது தோன்றிய நட்சத்திரங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் எப்படி நம்மால் படம் எடுக்க முடிகிறது?

பிரபஞ்சம் உருவாகி பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது தோன்றிய நட்சத்திரங்களை இப்போது எப்படிப் படம் பிடிப்பது சாத்தியம்? எப்படி நம்மால் கடந்த காலத்திற்குள் சென்று நட்சத்திரங்களைப் பார்க்க முடிகிறது?

இந்தப் பிரபஞ்சத்தில் ஒளியைவிட வேகமாகப் பயணம் செய்யக்கூடியது வேறு எதுவும் அல்ல. இந்தப் பிரபஞ்சம் உருவானபோது தோன்றிய நட்சத்திரங்களின் ஒளி, பிரபஞ்சம் எவ்வளவு தூரம் விரிவடைந்து சென்றுகொண்டே இருக்கிறதோ அத்தனை தூரமும் பயணித்துக்கொண்டே இருக்கும்.

அந்த ஒளி இடையில் உள்ள நம் பூமியையும் வந்த அடைந்து செல்லும். அவ்வாறு அது நம் பூமியை அடைய எத்தனை ஆண்டுகள் பயணித்து வருகிறதோ அதை நாம் ஒளி ஆண்டுகள் என்கிறோம்.

சூரியனையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். சூரிய ஒளி நம் பூமியை அடைய 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. அதனால் நாம் பூமியில் இருந்து 8 நிமிடங்களுக்கு முன்னர் இருந்த சூரியனைதான் பார்க்கிறோம். ஒருவேளை சூரியன் வெடித்துச் சிதறிவிட்டால், அந்த ஒளி நம்மை அடைய 8 நிமிடங்கள் ஆகும். அதாவது சூரியன் வெடித்து சிதறியவுடனேயே நமக்குத் தெரியாது. அந்த ஒளி 8 நிமிடங்களுக்குப் பிறகு பூமியை வந்து அடைந்தவுடன்தான் நமக்குத் தெரியவரும்.

அந்த வகையில்தான் 1000 கோடி வருடங்களுக்கு முன் தோன்றிய நட்சத்திரங்களின் ஒளி இவ்வளவுதூரம் பயணித்து இப்போது நம்மை வந்தடைகிறது. இவ்வாறுதான் நாம் பல கோடி வருடங்களுக்கு உள்ள நட்சத்திரத்தையும், நட்சத்திர மண்டலங்களையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் படங்களில் பார்த்தோம்.

இங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு ஒளி அத்தனை கோடி ஆண்டுகள் பயணித்து வரும்போது இடையில் உள்ள தூசு மண்டலங்களிலும், வாயுக்களிலும், பிற நட்சத்திரங்கள், கோள்களிலும் பட்டு மறைந்துவிடாதா? ஆம், மறைந்துவிடும்.

பிறகு எப்படி நாம் அந்த ஒளியை பார்க்க முடிகிறது? இங்கேதான் நாம் மீண்டும் மின்காந்த அலைகளை குறித்த விளக்கத்தை நினைவுக்கூற வேண்டும். ஒளியைத் தாண்டிய அலைநீளங்களை உடைய மின்காந்த அலைகளை நாம் பார்த்தோம் இல்லையா? அவற்றில் ஒன்றுதான் அகச்சிவப்பு கதிர் (Infra red wave).

அந்தக் கதிருக்கு கண்ணுறு ஒளியை விட அலைநீளம் அதிகம் என்பதால் ஒளியைவிட நீண்ட தூரம் பயணித்து வந்து நம்மை சேர்கிறது. அதேபோல் ஒளியைப் போன்று தூசு மண்டலங்களில் போன்ற இடையீடுகளில் எல்லாம் பட்டு தெறிக்காமல் அனைத்து தடைகளையும் தாண்டி நம்மிடம் வந்து சேர்க்கின்றன.

ஹப்பிள் தொலைநோக்கி கண்ணுறு ஒளியின் அலைநீளத்தை உள்வாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் கண்ணுறு ஒளியின் அலைநீளத்தில் எந்தெந்த விண்பொருட்கள் ஒளியை வெளியிடுகின்றனவோ அவற்றையெல்லாம் மட்டும் ஹப்பிள் தொடர்ந்து படம்பிடிக்கும்.

ஆனால் தற்போது உள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இந்த அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கும் தன்மை உண்டு என்பதால், நீண்ட தூரம் பயணித்து வரும் அகச்சிவப்பு கதிர்களைப் பதிவு செய்து, அவற்றை நாம் பார்க்கும் வடிவத்தில் உருமாற்றி காட்டுகிறது. இதன்மூலம்தான் நாம் பல கோடி ஒளி ஆண்டுகளுக்கும் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தை வெகு துல்லியமாகப் பார்க்க முடிகிறது. அதாவது நாம் கடந்த காலத்தை காலப்பயணம் செய்து கண்டுகளிக்கிறோம்.

சரி, இப்போது மிக முக்கியமான கேள்விக்கு வருவோம். இந்தப் பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருக்கிறதா? வேறு உயிர்கள் உருவாவதற்கான சூழல் நம் பூமியைத் தவிர வேறு கோளில் இருக்கிறதா? அதை எப்படி நம்மால் அறிந்துகொள்ள முடியும்?

இதற்கான விடையும் வானவில்லிடம்தான் இருக்கிறது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *