1784இல் வில்லியம் ஜோன்ஸ் தொடங்கிவைத்த மொழியியல் புரட்சி மற்ற நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. 1789இல் அமெரிக்கப் புரட்சிக்கு உதவியதாலும், நாட்டுச் செலவில் கட்டுப்பாடு தவறியதாலும், நிதிபற்றா நிலைமைக்குச் சென்ற பிரெஞ்சு அரசாங்கம், வரிகளை ஏற்றியது. உணவு விலை அதிகரித்து. பட்டினி பெருகி, பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது.
பாஸ்டீல் (Bastille) என்னும் சிறைச்சாலையிலிருந்து அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மக்களைச் சமாதானப்படுத்த புதியதொரு நாடாளுமன்றத்தை (National Assembly) அரசர் லூயி (Louis) உருவாக்கினார். அது ஜனநாயக நாடாளுமன்றம் இல்லை. பரம்பரை மேட்டுக்குலத்தாரும் (Ancient Regime), கத்தோலிக்க சர்ச்சின் பாதிரியார்களும் இடம்பெற்ற நாடாளுமன்றம். இவ்விருக் குழுவினரும் வரி வசூலிப்பவர்கள்; அரசை ஆதரிப்பவர்கள். வரி கட்டும் மற்ற பாமர மக்களின் வேட்பாளர்கள் மூன்றாம் அணி. முதல் இரண்டு அணியும் மன்னர் வீற்ற சிம்மாசனத்தின் வலதுபக்கமும், மூன்றாம் அணி இடதுபக்கமும் அமர்ந்தனர். வலதுசாரி (Right), இடதுசாரி (Left) என்ற பொருளாதார வேறுபாட்டின் ஆரம்பம் இதுவே.
வரிச்சுமையாலும் உணவுப் பற்றாக்குறையாலும் சினங்கொண்ட மூன்றாம் அணி, இந்த மன்றத்தில் ஆட்சி அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று புரிந்துகொண்டு ஆட்சி மாற புரட்சி செய்தனர். மன்னராட்சி கவிழ்ந்து, அடுத்த இரண்டாண்டுகளில் மன்னர் குலமும் ஆயிரக்கணக்கான பிரபுக்களும் கொல்லப்பட்டனர். ரோபஸ்பியரி (Robespierre) தலைமையில் புரட்சியாளர்கள் முதல் குடியரசு (First Republic) எனும் மக்களாட்சியை நிறுவினர். மக்களாட்சி என்ற பெயரில் கொடுங்கோல் ஆட்சி செய்தனர். அந்துவான் லவோசியே(Lavoisier), கந்தோர்சே (Condorcet) போன்ற ஆரம்பகாலத்துப் புரட்சி ஆதராவாளர்கள் துரோகிகள் என்று பட்டம் பெற்று மரணதண்டனை பெற்றனர். புரட்சியாளர்கள் தங்களையும் ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொலை செய்துகொண்டனர்.
1795இல் முதல் குடியரசு வீழ்ந்தது. டைரக்ட்ரி (Directory) என்று அழைத்துக்கொண்ட இரண்டாம் குடியரசு (Second Republic) ஆட்சிக்கு வந்தது. இதுவரை மன்னருக்காகவும் மதத்திற்காகவும் கம்பெனிக்காகவும் போர்தொடுத்த படைகள், மதச்சார்பற்ற தேசியத்திற்காக (secular nationalism) இரண்டாம் குடியரசின் சார்பில் போர் தொடுத்தன. இத்தாலியைக் கைபற்றியது பிரெஞ்சுப் படை. இக்காலத்தில் லுயிகி கால்வானி (Luigi Galvani) பிரெஞ்சு ஆதிக்கத்தை ஏற்க மறுத்ததால் வறுமையில் இறந்தார்; ஒத்துழைத்த வோல்டா (Alessandro Volta) செழித்தார்; பிரெஞ்சுப் படைகளுக்கு வெற்றி மேல் வெற்றி தந்தார் தளபதி நெப்போலியன் (Napoleon). அலெக்ஸாண்டரின் மறு அவதாரமாகத் தன்னைப் பாவித்துக்கொண்ட நெப்போலியன், எகிப்தைத் தாக்கி வென்றார். எகிப்தைத் தாக்கிய படையில் பிரஞ்சுப் புரட்சியில் தலை தப்பிய விஞ்ஞானிகளும், வரலாற்று வல்லுனர்களும், மொழியியல் ஆர்வலர்களும் (linguists) இருந்தனர். ‘படைவீரர்களே, நாற்பது நூற்றாண்டுகள் பிரமிடுகளின் உச்சியிலிருந்து உங்களைப் பார்க்கின்றன,’ என்று அவர்களுக்கு வரலாற்றுக் கண்ணோட்டத்தைத் தந்தார் நெப்போலியன்.

இந்தியாவைப் பற்றி அறியப்படாத தகவல்களை வில்லியம் ஜோன்ஸ் (William Jones) தலைமையில் ஆங்கிலேயர்கள் ஆய்ந்து வந்ததுபோல், எகிப்தைப் பற்றி அறியப்படாத தகவல்களை பிரெஞ்சு ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கவேண்டும் என்பது நெப்போலியனின் ஆசை. கல்கத்தாவின் தாக்கம் கைரோவில் எதிரொலித்தது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் ரோம ராஜ்ஜியத்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியபோது, அவர்களின் காலனியாக இருந்த எகிப்தின் பண்டைய மதத்தை, கலாச்சாரத்தை, மொழியை அழித்த ஆதிக்க மனப்பான்மைக்கு நேர் எதிரான மனப்பான்மை இது.
மெட்ரிக் அளவுமுறை
1789 பிரெஞ்சுப் புரட்சி, மன்னராட்சியை மட்டும் எதிர்த்த புரட்சியல்ல. கிறிஸ்தவ மதத்தையும், மத ஆதிக்கத்தையும், பொதுவாக கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து நடந்த புரட்சி. மதப்போதகர் ஆதிக்கமும், தொன்மையான மேட்டுக்குலமும் ஒழிய வேண்டியவை, விஞ்ஞானமும் வளர்ந்துவிட்டது, பகுத்தறிவு யுகம் தொடங்கிவிட்டது, பழையன கழிதலும், புதுவன புகுதலும் காலத் தேவை என்று வாதாடி சமூகத்திலும் ஆட்சியிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தனர். யோகான் காஃட (Johann Goethe), அறிவொளி இயக்கம் (Enlightenment) என்று போற்றிய விஞ்ஞான வளர்ச்சியின் தாக்கத்தில் பிரான்சில் தோன்றிய பகுத்தறிவு யுகத்தின் (Age of Reason) விளைவு இது.
இதனால் இயேசு பிறந்த ஆண்டு முதல் தொடங்கிய கிறிஸ்தவ கேலண்டரை (Almanac – பஞ்சாங்கம்) புறக்கணித்து, ரோம ராஜ்ஜியத்திற்கும் கிறிஸ்தவத்துக்கும் தொடர்பில்லாத புதிய மாதப் பெயர்களுடன் ஒரு கேலண்டரை உருவாக்கியது முதலாம் குடியரசு. கிறிஸ்தவப் பாரம்பரியத்தின்படி வாரத்தின் புனித நாள் ஞாயிற்றுக்கிழமை. அன்று கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு செல்வது வழக்கம். அதைத் தவிர்க்க, ஞாயிற்றுகிழமை வார விடுமுறையை நீக்க, ஏழு நாள் வாரத்தை பத்து நாள் வாரமாக மாற்றி புதிய வார நாட்கள் உருவாக்கியது. அடுத்தடுத்து புரட்சிகள் நடந்து 1804இல் புரட்சிகள் ஓய்ந்து, நெப்போலியன் தன்னை மன்னனாய் முடிசூடிக்கொண்டபோது இந்தப் புதிய கேலண்டர் முறை ஒழிக்கப்பட்டு பழைய கிறிஸ்தவ கேலண்டர் மீண்டும் புழக்கத்துக்கு வந்தது.
டஜன் (12), அரை டஜன்(6), ஸ்கோர் (score – 20), போன்ற பண்டைய எண்முறை அழிக்கப்பட்டு, தசம கணித அடிப்படையில் (Decimal measurement system) அளவுகள் அறிமுகம் ஆயின. லவோசியே, லாப்லாஸ்(Laplace), லக்ராஞ்ச் (Lagrange) போன்றவர்கள் இதை ஏற்கெனவே தொடங்கிவைத்தனர்.
மெட்ரிக் அளவுமுறை (Metric System) அதிகாரபூர்வமாக அறிமுகமாகியது.
இரண்டாம் குடியரசு, நாணயங்களைத் தவிர்த்து காகிதத்தில் பணம் (paper currency) வெளியிட்டது. குப்லாய் கான் ஆட்சியில் சீன தேசத்தில் முதலில் அறிமுகமான காகிதப் பணம், ஸ்வீடனிலும் இங்கிலாந்திலும் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்தது. ஆனால் காகிதத்தில் பணம் அச்சிடுவதில் அரசுக்குப் புரிதலோ கட்டுப்பாடோ இல்லை என்றால் பெரும் விலைவாசி ஏற்றத்திற்குக் கொண்டுபோய், ஒரு பொருளாதார சீரழிவைக் கொண்டுவரும். இதுவே நடந்தது.
இதனால் இரண்டாம் குடியரசு 1799இல் ஆதரவையும் வலியையும் இழந்தது. கான்சுலேட் (Consulate) என்று பின்னர் அழைக்கப்பட்ட மூன்றாம் குடியரசால் இரண்டாம் குடியரசு கவிழ்க்கப்பட்டது.
எகிப்திய மொழியின் மீட்சி
மூன்றாம் குடியரசு (Third Republic) காலத்தில் நெப்போலியன் எகிப்தின் மேல் படையெடுத்தபோது அவனுடன் சென்ற பண்டிதர்கள், ஃபாரோ (Pharaoh) காலத்து எகிப்தின் பழைய வரலாற்றை மீட்கப் பண்டையை மொழியைப் படிக்க முனைந்தனர். பண்டைய எகிப்தின் கோவில்களிலும், மன்னர்களின் கல்லரைகளான பிரமிடுகளிலும் வரிசை வரிசையாக ஒன்றுகொன்று சம்பந்தமில்லாத சித்திரங்கள் இருந்தன. இந்திய மொழிகள், ஐரோப்பிய மொழிகள் போலன்று, பண்டைய எகிப்தின் எழுத்துருவம் கோடு வடிவங்களில் இல்லை. சித்திரங்களாக இருந்தன. பறவை, பாம்பு, சிங்கம், வட்டம், சதுரம், கயிறு, கை, கால் என்று விதவிதமான சிற்றோவியங்கள் எதைக் குறித்தன? ஒலியா, எழுத்தா, சொல்லா, சித்திரமா, கதையா?
கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகள் அற்றுப்போன மொழியின் ஒலிகள், எழுத்துவடிவங்கள் இவை. இன்றுபோல் பதினெட்டாம் நூற்றாண்டிலும் எகிப்தின் மக்கள் தொகையில் 90 சதவிகிதம் இஸ்லாமியர்கள். 10 சதவிகிதம் கிறிஸ்தவர்கள். குறிப்பாக காப்டிக் (Coptic) கிறிஸ்தவப் பிரிவினர். ஐரோப்பியர் மதம் மாறும் முன்பே கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியவர்கள் இந்த காப்டிக் மக்கள்.

முஸ்லிம்கள் பேசிய அரபு மொழிக்கும், பண்டைய எகிப்திய மொழிக்கும் தொடர்பில்லை. ஆனால் காப்டிக் கிறிஸ்தவர்கள் பேசிய மொழியின் எழுத்துருவமும், ஒரு சில பிரமிடுகள், பண்டைய எகிப்தியக் கோவில்களில் காணப்பட்ட டெமொட்டிக் (Demotic) என்ற எழுத்துவடிவத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது தெரிந்தது.
நெப்போலியனின் படைகள் ரஷீத் (Rasheed) என்னும் நகரத்தில் விசித்திரத்தைக் கண்டுபிடித்தனர். அது ஒரு கல். மூன்று லிபிக்களில் ஏதோ தகவல் பொறிக்கப்பட்ட கல். முதல் லிபி, பண்டைய எகிப்தின் சித்திர எழுத்து. . கோவில்களிலும் பிரமிடுகளிலும் இருப்பதால் தெய்வீக (hiero) தகவல்களைச் சொல்லும் லிபி (கிளிஃப் – glyph) என்று கிரேக்க மொழியில் பெயர்சூட்டி, அந்த லிபியை ஹெய்ரோக்ளிஃப் (hieroglyph) என்றே அழைத்தனர்.
இரண்டாம் லிபி மக்களின் பாமரத் தகவல்களை எழுத பயன்பட்டது. இதற்கு டெமொட்டிக் (Demotic) லிபி, அதாவது, பாமர மக்களின் எழுத்துருவம் என்று பெயர்சூட்டினர். டெமோக்ரசி என்றால் மக்களாட்சி. அதேபோல் டெமொட்டிக் மக்களின் லிபி. மூன்றாவது பண்டைய கிரேக்க லிபி. அலெக்சாண்டரின் மரணத்திற்கு பின்பு எகிப்தை ஆள்வதற்கு அலெக்சாண்டர் நியமித்த தளபதி டாலெமி (Ptolemy), தன்னை ஃபாரோ என அறிவித்து மெம்ஃபிஸ் எனும் தலைநகரில் முடிசூட்டிக்கொண்டான். அதற்குபின் அடுத்த 250 ஆண்டுகள் அவன் வம்சாவளியினாரான கிரேக்கர்களே ஃபாரோவாக எகிப்தை ஆண்டனர். அவர்கள் அனைவரும் ப்தாலமி என்றே பெயர்சூட்டப்பட்டனர்.
ரஷீத் எனும் அரபு பெயர் பிரெஞ்சில் ரொசெட்டா என்று மறுவியது. இந்தக் கல் பிற்காலத்தில் ரொசெட்டா கல் (Rosetta stone) என்று புகழ்பெற்றது. ஓரிரு ஆண்டுகளில் அங்கிலேயர்கள் எகிப்தில் புகுந்து பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தனர். பின்னர் ரொசெட்டா கல்லை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். இன்று அது லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியில் உள்ளது. அது லண்டனுக்குச் செல்லும் முன்னர் அதன் பிரதிகள் அச்சிடப்பட்டு ஆர்வலர்களிடம் பரவியது.
ஐந்தாம் டாலெமியின் (ப்டாலெமி Ptolemy என்று ஆங்கிலத்தில் எழுதுவர்) ஒரு சாசனம்தான் இந்த ரோசெட்டா கல்லில் இருந்தது. தாங்கள் பூர்வீக கிரேக்கர்கள் என்பதால் டாலெமி மன்னர்களின் சாசனங்களில் கிரேக்க மொழியிலும், கிரேக்க லிபியிலும் சாசனத்தைப் பொறித்தனர். கிரேக்க மொழி அழியாமல் புழக்கத்தில் இருந்ததால் அந்தப் பகுதியை ஆங்கிலேயரும் பரங்கியரும் (பிரெஞ்சு) எளிதாகப் படித்துவிட்டனர். இதே தகவல்தான் மற்ற இரண்டு லிபியிலும் இருக்கவேண்டும் என்று யூகித்தனர்.
கிரேக்க மொழியில் இருந்த கல்வெட்டு பகுதியில் ஐந்தாம் டாலமியின் மெய்கீர்த்தி இருந்தது. அவன் பல கோவில்கள் கட்டினான், கோவில்களுக்கு நிதியும் தானியமும் நன்கொடையாக வழங்கினான், சமூக பதற்றத்தைக் குறைக்கவும், அமைதி நிலவவும் வரிகளைக் குறைத்தான், நீதி நிலைக்கவும் நாடு செழிக்கவும் பல செயல்கள் புரிந்தான் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. டாலமியின் சிலையைக் கோவில்களில் அமைக்கவும், தூண்கள் அமைத்து, இந்தக் கல்வெட்டு புனித லிபி, பாமர லிபி, கிரேக்க லிபி ஆகிய மூன்றும் அதில் பொறிக்கப்படும் என்றும் கல்வெட்டிலேயே தகவல் இருந்தது.
எகிப்திய மொழியில் சூரியனைக் குறிக்கும் சொல் ‘ரா’. சூரியக் கடவுளின் பெயரும் இதுவே. உயிரெழுத்து மெய்யெழுத்து என்று ஏதும் எகிப்திய மொழியில் இல்லை. சித்திரங்கள்தான் எழுத்துக் குறிகள். ஒரு வட்டம் வரைந்தால், அது வட்டத்தை மட்டும் குறிக்கலாம். அல்லது, சூரியனைக் குறிக்கலாம். அல்லது, ரா எனும் ஒலியைக் குறிக்கலாம். அரிவாள் மூக்கன் (Ibis) பறவைக்கு தொத் (Thoth) என்று பெயர். தொத் என்று ஒரு கடவுளும் இருந்தார். அந்தப் பறவையை வரைந்தால் அது பறவையைக் குறிக்கலாம். அல்லது, தொத் கடவுளைக் குறிக்கலாம். அல்லது, தொ எனும் ஒலியைக் குறிக்கலாம்.
சித்திர எழுத்து இல்லாத தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் இதைப் புரிந்துகொள்வது கடினம். ஓர் உதாரணம் பார்க்கலாம். தமிழை எழுத கசடதபற, அஆஇஈ போன்ற எழுத்து ஏதும் இல்லாமல், சித்திரங்களால்தான் எழுத வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அன்றாடம் நாம் பழகிய பொருட்களின் சிறு சித்திரங்களை வைத்து ஒரு எழுத்துவடிவம் உருவாக்க வேண்டும்.
உதாரணத்திற்கு விரல், தலை, காகம், கழுகு, மயில், தாமரை, அல்லி போன்றவைதான் தமிழ் எழுத்து. இதில் எப்படி எழுதுவது?
கழுகு வரைந்தால் அது கழுகு எனும் பறவையைக் குறிக்கலாம். அல்லது, க எனும் ஒலியைக் குறிக்கலாம். விரல் வரைந்தால் அது விரல் அல்லது வி எனும் ஒலியையும், தாமரை வரைந்தால் அது மலர் அல்லது தா எனும் ஒலியையும் குறிக்கலாம்.
கழுகு-விரல்-தாமரை என்று அடுத்தடுத்து வரைந்தால் அதற்கு அர்த்தம் ஏதுமில்லை. ஆனால் மூன்று சித்திரங்களும் குறிக்கும் ஒலியைச் கோர்த்தால், கவிதா எனும் சொல் கிடைக்கும். இது கவிதையைக் குறிக்கலாம். அல்லது, கவிதா எனும் ஒரு பெண்ணின் பெயரைக் குறிக்கலாம். வாக்கியத்தில் இடம்பெறுவதைப் பொருட்டு அதன் அர்த்தம் தெளிவாகும். இப்படித்தான் எகிப்திய மொழியின் ஹெய்ரொகிலிப் எழுத்து வடிவம் உருவாகி, மூவாயிரம் வருடங்கள் பயனில் இருந்தது. இதைப் புரிந்துகொள்ள ஹென்றி யங், சம்போல்லியான் போன்ற அறிஞர்களுக்கு இருபது ஆண்டுகள் எடுத்தது.

இந்த எழுத்துருவில் பெரிதும் உதவியது கார்ட்டூஷ் (cartouche) எனும் குறிப்பு முறை. அரசன் அல்லது அரசியின் பெயரை ஒரு நீள்சதுரத்தில் எழுதுவது அவர்கள் பழக்கம். சித்திர எழுத்தில் மட்டுமின்றி, டெமோட்டிக் லிபியிலும் கிரேக்க லிபியிலும் இதைத் தொடர்ந்தனர். சாசனத்தில் கிரேக்க மொழியில் கார்ட்டூஷில் ‘ப்டாலெமி’ எனும் மன்னர் குலத்தார் பெயர்கள் பல இடத்தில் இருந்ததால், மற்ற இரண்டு லிபியிலும் இருப்பதும் இந்தப் பெயர்தான் என்று ஜோசஃப் தெ ஜுயின் (Joseph de Guignes) புரிந்துகொண்டனர். அவர், ‘அலேக்ஸாண்டர்’ (Alexander), ‘பெரணிகே’ (Berenice) ஆகிய மன்னர் பெயர்களும் பல இடங்களில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதை வைத்துக்கொண்டு டெமோட்டிக் லிபியில் கார்டூஷில் எழுதிய இந்தச் சொற்களை அடையாளம் கண்டு, 29 டெமோட்டிக் எழுத்துகளின் பட்டியலை வெளியிட்டார்.

எகிப்து எனும் சொல்லை எகிப்தியர், எகிஃப்து என்பர். ஆங்கிலம் ஈஜிப்ட் என்று ஒலிவதை செய்துள்ளது. இதுவே மருவி, கிப்து என்று சுருங்கி, காப்து என்றும் காப்டு என்று பெயர் மாறியது. கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் எகிப்தியர் கட்டாயமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாறியபோது, முதலில் மாறியவர்கள் அந்த எகிப்திய மொழியைத் துறந்து காப்டு மொழியைப் பேசத் தொடங்கினர். இன்று காப்டு மொழியை எகிப்திய கிறிஸ்தவ பாதிரியார்கள் சிலர் மட்டும் பேசி பழகி வருகின்றனர்.
ஸில்வஸ்டர் த ஸேஸி (Silvestre de Sacy), பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அரபு மொழி பேராசிரியர். அவர் டெமாடிக் லிபியில் சில வார்த்தைகளை அடையாளம் கண்டுகொண்டார். யோகான் அகெர்பிலாட் (Johan Akerblad) எனும் சுவீடன் நாட்டு ஆர்வலர், காப்டிக் மொழியின் அடிப்படையில் டெமாடிக் லிபியைப் புரிந்துகொள்ளலாம் என்ற முன்மொழிந்தார். இதன் அடிப்படையில் டெமாடிக் லிபியல் பல சொற்களைச் சரியாக வாசித்தார். இருபத்தியொன்பது டெமாடிக் எழுத்துகளைப் பட்டியலிட்டார். பின்னாளில் இவற்றில் சரி பாதி தவறு என்று தெரியவந்தது. சீன லிபியே எகிப்தியச் சித்திர லிபியிலிருந்துதான் பிறந்தது என்று பிடிவாதமாக நிரூபிக்க நினைத்தார் அகெர்பிலாட். ஆனால் விசித்திரமாக டெமாடிக்கும் சித்திர எழுத்தாக இருக்கலாம் என்று அவர் கருதவில்லை. இதனால்தான் அவரது எழுத்துப்பட்டியல் பாதி தவறாக இருந்தது.
இங்கிலாந்தில் பிறந்த தாமஸ் யங் (Thomas Young), ஜெர்மனியில் மருத்துவம் படித்துவிட்டு இயற்பியலில் புகழ் பெற்ற விஞ்ஞானி. ஹம்ப்ஃப்ரீ டேவி, மைக்கேல் ஃபாரடே இருவரும் மின்சாரத்திலும் வேதியியலிலும் பரிசோதனைகள் செய்த காலத்தில் ஒளியின் இயற்பியலை ஆராய்ந்தவர் யங். ஒளி, துகள்களால் ஆனது என்று ஐசக் நியூட்டன் முன்மொழிந்த கொள்கையை மறுத்து, ஒளி அலையாய் பாய்வது என்று கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் முன்மொழிந்த கருத்தை தாமஸ் யங் ஆதரித்தார். 1803இல் ஓர் அட்டையில் இரண்டு சிறிய கீறல்களைக் கிழித்து, இவ்விரண்டு கீறல்கள் (double slit) வழியாக மறுபக்கம் செல்லும் ஒளி அலைகள் கறுப்பு-வெள்ளைக் கோடுகளாகத் திரையில் விழுகின்றன என்று காட்டினார். இது யங்கின் இருகீறல் பரிசோதனை (Young’s double slit experiment) என்று புகழ்பெற்றது. எகிப்திலும் அதன் அண்டை நாடான சூடானிலும் கிறிஸ்தவம் வளர்ந்த வரலாற்றை ஆராய்ந்து ஒரு நூல் எழுதினார்.
1802இல் ஆகர்பிலாட் உருவாக்கிய டெமாடிக் லிபி பட்டியலைப் படித்து, எகிப்தியச் சித்திர லிபியைப் புரிந்துகொள்ள யங் ஆர்வம் கொண்டார். ரொசெட்டா கல்லில் உள்ள கிரேக்க லிபியின் அடிப்படையில் டெமாடிக் கல்வெட்டை வாசிக்க நினைத்ததால் ஆகர்பிலாட் தடுமாறியதுபோல, சித்திரலிபியை வாசிக்க நினைத்த யங்கும் தடுமாறினார். 1814இல் ஒரு தூணில் ஒன்பதாம் டாலமியின் இருமொழி இருலிபி கல்வெட்டைக் கண்டுபிடித்து ஒரு பிரதியை யங்கிடம் அனுப்பினார். ஆகர்பிலாடின் டெமாடிக் வாசிப்பின் அடிப்படையில் சித்திரலிபியில் டாலமியின் பெயரில், சதுர சித்திரத்தை ப என்றும், அரைவட்ட சித்திரத்தை ட என்றும் யங் சரியாக வாசித்தார். ஆனால் மற்ற சித்திரங்களைத் தவறாகவே யூகித்தார்.
1790இல் பிரான்சில் பிறந்த ழான் பிரான்சுவா சம்போல்லியோன், சிறு வயதிலியே வில்லியம் ஜோன்ஸைப்போலப் பல்வேறு மொழிகளில் ஆர்வமும் புலமையும் கொண்டவன். ழானின் அண்ணன் ஜோசப், தம்பி ழானின் கல்விக்கு முழு நிதியுதவி செய்தார். லத்தீனம், கிரேக்கம், ஹீப்ரு, அரபு, காப்டு என்று பல்வேறு மொழிகளை ழான் கற்றுக்கொண்டான். ஜோசஃப் ஃபூரியே (Joseph Fourier) எனும் கணித மேதை, கிரணொபிள் (Grenoble) நகரின் அதிகாரி. அவரை எகிப்திய வரலாற்று ஆவணங்களைத் தொகுத்து வெளியிட நெப்போலியன் நியமித்தார். பதினொரு வயதில் ழான், ஃபூரியேவைச் சந்திக்க நேரிட்டது. அவர் பல்வேறு எகிப்திய ஆவணங்களைக் காட்டி, அதுவரை பண்டிதர்கள் அறிந்த தகவல்களை ழானிடம் பகிர்ந்தார். எகிப்தின் மேல் ழானுக்கு தீராக்காதல் உண்டாகி, அந்த மொழியை, லிபியைப் புரிந்து புகழடையவேண்டும் என்ற ஆசை பிறந்தது.
சீன பாரசீக மொழிகளை இக்காலத்தில் ழான் கற்றுக்கொண்டு, படிப்புக்கு பாரிஸ் நகரம் செல்ல, அங்கே 1807இல் சில்வஸ்டர் ஸேஸியைச் சந்திக்க நேர்ந்தது. 1810இல் கிரணோபிளில் ஆசிரியராகப் பணி சேர்ந்த ழான், தன் எகிப்திய மொழி ஆர்வலத்தால் எப்படியோ ராணுவத்தில் சேராமல் தப்பித்தார். நெப்போலியனையே ஒருமுறை ழான் சந்திக்கும்போது, ழானின் எகிப்தியப் பணி எப்படிப் போகிறது என்று நெப்போலியன் வினவினான். காப்டிக் மொழிக்கு ஓர் இலக்கண நூலை எழுதிமுடித்ததை ழான் தெரிவித்தான். 1815இல் தன் எகிப்திய ஆய்வுகளை நூலாக தாமஸ் யங் வெளியிட்டார். தான் சாதிக்க நினைத்தத்தை யங் சாதித்துவிட்டார் என்று முதலில் ழான் மனமுடைந்தாலும், நூலை படித்தபின் யங் செய்த பல பிழைகளைப் புரிந்துகொண்டு தன் கனவு உயிரோடு இருப்பதால் மகிழ்ச்சி அடைந்தான்.
இதற்குள் பல்வேறு கல்வெட்டுகளும், பண்டைய சித்திர லிபியில் இயற்றப்பட்ட எகிப்தியப் புத்தகங்களும் கிடைத்து அச்சில் வந்தன. தீவிர ஆராய்ச்சியில் ழான் இறங்கிய காலம் இது. 1821இல் ஹைரோகிளிபிக் என்னும் சித்திர லிபி மருவி ஹைராடிக் எனும் கோட்டுவடிவ லிபி உருவானது. அதுவும் மருவி டெமாடிக் லிபியாக மாறியது என்று பல ஆவணங்களை ஒப்பிட்டபின் ழான் சம்போலியான் முடிவுக்கு வந்தார். சித்திர லிபியின் எழுத்துக்கள் ஓவிய வடிவமா (pictogram), கருத்து வடிவமா (ideogram), ஒலிவடிவமா (phonetic), இவ்விரண்டின் கலவையா? ரொசெட்டா கல்லின் கிரேக்கப் பகுதியில் 486 சொற்கள். சித்திர லிபியிலோ 1419 வடிவங்கள். சித்திரலிபி கருத்துவடிவமாகவோ, ஓவிய வடிவமாகவோ இருந்தால் சொற்களைவிடக் குறைவான எழுத்துக்களே இருக்கவேண்டும். அதனால் சித்திர லிபி பிரதானமாக ஒலிவடிவமாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்தார். இது மிக முக்கிய கணிப்பு. லிபியைப் புரிந்துகொள்ள இன்றியமையாத தத்துவ வழிகாட்டி.
166 தனிச் சித்திரங்கள் இருந்தன. தான் அறிந்த எந்த ஒரு மொழியிலும் இத்தனை ஒலிகள் இல்லை. ஆதலால் ஒரு சித்திரம், ஒரு ஒலி என்ற கணக்கும் செல்லாது. கார்டூஷில் ப்டாலமியின் பெயரில் உள்ள சின்னங்களின் ப(சதுரம்), ட(அரைவட்டம்), ஒ (படம் பார்க்கவும்), ல(சிங்கம்), இ(இரண்டு சிறகுகள்) என்று ஐந்து எழுத்துக்களை அடையாளம் கண்டுவிட்டதாக நினைத்ததால், மிச்சமுள்ளது ம என்று யூகித்தார். கிளியோபாட்ராவின் பெயரும் இந்தக் கல்வெட்டின் கிரேக்கப் பகுதியில் இருந்ததால் மற்றொரு கார்டூஷில் அவள் பெயர் இருக்கவேண்டும். கலஇஒபஅடரஅ என்றிருக்கவேண்டும் – இதில் ப,ட,ல,ஒ,இ ஏற்கெனவே டாலமி பெயரிலுள்ளவை.
ஆனால் கிளியோபாட்ராவின் பெயரில் கடைசியில் மீண்டும் ஒரு அரைவட்டம் உள்ளது. அது ட எனும் எழுத்தைக் குறிக்கவில்லை. மற்ற சில கார்டூஷ்களில் பெண் பெயர்களின் கடைசியில் இருப்பதால் பெண்ணைக் குறிக்கிறது என்று யூகித்தார். அதாவது சித்திரலிபி வெறும் ஒலிவடிவ லிபி மட்டுமல்ல. அறிகுறி (Determinative-டிடெர்மினேடிவ்) வடிவங்களையும் கொண்டது.
1822இல் அபுசிம்பல் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டுப் பிரதியை நிக்கலாஸ் ஹுயோட் சம்போலியானிடம் கொடுத்தார். அதில் ம ஸ ஸ என இருந்தது. தொடக்கத்தில் இருக்கும் முழுவட்டம் சூரியனின் பெயரான ரா என்பதைக் குறித்தால், இந்த அபுசிம்பல் கார்டூஷில் இருந்த பெயர் ராமஸிஸ் என்று யூகித்தார். இதேபோல் வேறொரு கார்டூஷில் ஐபிஸ் பறவையில் (தொத்) தொடங்கியது. மன்னன் மற்ற எழுத்துக்கள் ரா தவிர்த்த ராமஸீஸ் போன்றே இருந்தன. அதனால் இதனை தொத்மோஸிஸ் என்று வாசித்தார். இவ்விரு பெயர்களும் மிகமிகப் பழைய ஃபாரோக்களின் பெயர்கள். கிரேக்க நகரங்கள் தோன்றும் முன்னரே நிலைத்த பண்டைய எகிப்தியப் பெயர்கள்.
அதனால் கார்டூஷில் உள்ளவை அந்நிய நாட்டர் பெயர் மட்டுமல்ல, சித்திரலிபியின் ஒலிவடிவத் தத்துவம் அந்நிய மொழி ஒலிகளுக்கு மட்டுமல்ல என்று புரிந்துகொண்டார். இந்த வகையில் போதுமான சித்திரவடிவங்களைப் புரிந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக முழு எகிப்திய லிபியையும், எகிப்திய மொழியையும் உயிருடன் கொண்டு வந்தார். இரண்டாயிரம் ஆண்டுகள் புதைந்து மறந்துபோன மொழி மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தது.
பிரமிடுகளில் தங்களைப் புதைத்தால் மீண்டும் உயிர்பெற்று வருவோம் என்பது பண்டைய எகிப்திய ஃபாரோ மன்னர்களின் நம்பிக்கை. சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்து கல்லரையிலிருந்து மீண்டும் உயிர்பெற்று வந்தார் என்பது கிறிஸ்தவ மத நம்பிக்கை. பிரமிடுகளில் உள்ள சித்திரங்களும் ஓவியங்களும் லிபிகளும், புதையுண்ட கோவில்களின் சுவர்களில் பொறிந்த கல்வெட்டுகளும், உயிர்த்தெழுந்தது சம்போலியன் செய்த வரலாற்றுச் சாதனை. மூவாயிரம் ஆண்டுகளாய் பெரிதும் மறைந்து புதைந்து மறந்த எகிப்திய வரலாறு, நெப்போலியனின் தொல்லியல் ஆர்வத்தாலும், அறிவொளி (Enlightenment) இயக்கத்தாலும் உலகறிய வெளிவந்தது.
இக்காலத்தில் இந்தியாவில் பணியாற்ற வந்த ஜேம்ஸ் பிரின்செப் (James Prinsep) எனும் தொல்லியல் மொழியியல் ஆர்வலருக்கு இந்த எகிப்திய சாதனை பெரிதொரு தாக்கத்தையும் தாகத்தையும் கிளறியிருக்கும். அது ஒரு தனி கதை.
0
________
உதவிய புத்தகங்கள், வலைதளங்கள்
– The Story of Scripts – Lectures and PowerPoint by Prof Swaminathan, THT
– Jean Francois Champollion and the true story of Egypt by Muriel Misak Weissbach
– Wikipedia, Encylopaedia Brittanica
எகிப்திய ஹைரோகிளிஃப்ஸ் பற்றி இவ்வளவு விரிவான தகவல்களுடன் ஒரு கட்டுரை தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். 5 ஆண்டுகளுக்கும் மேலாக ரொசேட்டா கல் பற்றிய தகவல்களை ஆங்காங்கே படித்து வந்தாலும் இங்கே நீங்கள் விளக்கியிருக்கும் விதத்தால், அதன் அருமை, அது படிக்கப்பட்டதன் அடிப்படை மிகத் தெளிவாகப் புரிகிறது. ராமசிச என்று கண் முன்னால் அபு சிம்பல் கல் பொறிப்பு எழுந்து வருகிறது. மிக்க நன்றி உங்கள் கட்டுரைக்கு.