Skip to content
Home » விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்

நியூட்டனுக்கு ஒரு தலைமுறை முன் வாழ்ந்த ஆங்கிலேயக் கணித மேதை ஜான் நேப்பியர் (John Napier). லாகரிதம் (Logarithm) கண்டுபிடித்தவர். இவரது வம்சாவளி இங்கிலாந்தின் அரசருக்கு நெருக்கமாகப் பிரபு பட்டம் பெற்று லார்டு நேப்பியர் ஆனது. இந்த வம்சத்தில் வந்த பிரான்சிஸ் என்னும் ஐந்தாம் லார்டு நேப்பியர், தன் முன்னோர் ஜான் நேப்பியர்போல் கணிதம் மேல் ஆர்வம் கொண்டு கணித வரலாற்றைப் புத்தகமாக எழுதத் தொடங்கினார். இவருக்கு உதவியாளராக காலின் மேகன்சீ (Colin Mackenzie) என்பவர் நில அளவை எஞ்ஜினியராக (Surveyor) பணி சேர்த்தார். நில அளவைக்குக் கணிதத்திறமை முக்கியம்; மேக்கன்சியின் இத்திறன் உதவியது.

தெக்கணம் ஓடி சுவடியைத் தேடு – காலின் மேக்கன்சீ

ஆனால் அகாலமாக பிரான்சிஸ் நேப்பியர் இறந்துவிட்டார். வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தாவுக்கு வந்த அதே 1783-ல் மேக்கன்சீ சென்னைக்கு வந்து கிழக்கிந்திய கம்பெனியின் படையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு முப்பது வயது. நேப்பியரின் மகள் ஹெஸ்டர் (Hester), மதுரையில் அலுவல் செய்த சாமுவேல் ஜான்ஸ்டனின் (Samuel Johnston) மனைவி. இவர்களது மகன் அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் (Alexander Johnston) பிற்காலத்தில் இலங்கையில் ஆங்கிலேயர்கள் நிறுவிய உச்சநீதி மன்றத்தின் முதல் தலைமை நீதிபதி (Chief Justice of Sri Lanka) ஆனார்.

காலின் மேக்கன்சீ
காலின் மேக்கன்சீ

மதுரைக்கு வந்து, இந்திய ஜோதிடர்களிடம் பண்டைய கணித நூல்களைத் தேடி வாங்கிக்கொள்ள, மேக்கன்சீயை அழைத்தார் ஹெஸ்டர். அவருக்குக் கணித நூல்கள் கிடைத்ததா என்று தெரியாது. ஆனால் மதுரைக்கு வந்த மேக்கன்சீ மீனாட்சியம்மன் கோவிலின் அழகிலும், திருமலை நாயக்கர் மகாலின் அழகிலும் மயங்கிவிட்டார். திருமலை நாயக்கர் மகால் ஓர் இத்தாலியரால் கட்டப்பட்டதாயினும், அதுவே இந்தியக் கட்டடக் கலையின் மேல் தீராத ஆர்வத்தை மேக்கன்சீயிடம் தூண்டியது.

இந்தியப் பண்டிதர்களிடமும் பாமரர்களிடமும் பேசி பழகி ஆங்கிலேயர்கள் தமிழோ தெலுங்கோ கற்றுக்கொள்ளாதது மேக்கன்சீக்கு ஆச்சிரியமும் ஆத்திரமும் மூட்டியது. நெல்லூர் அருகே காவலி (Kavali) எனும் ஊர். அவ்வூரில் பிறந்த போரையா ராமையா லக்ஷ்மையா சகோதரர்களைத் தன் உதவிக்குப் பணியமர்த்தினார். இச்சகோதரர்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளில் புலமை கொண்டவர். அவர்களிடம் இந்த மொழிகளை எல்லாம் மேக்கன்சீ கற்றுக்கொண்டார்.

முதல் பதிமூன்று வருடங்கள் அவருக்கு ராணுவக் கடமைகள் அதிகமாக இருந்தன. திண்டுக்கல், கோயம்புத்தூர், நெல்லூர், குண்டூர் என்று பல இடங்களுக்கு சென்றார். ராணுவப் பணிகளுக்கிடையே மலைகளையும் நிலங்களையும், ஓவியம் வரைந்தார். ஊர் மக்கள், கிராம மக்கள், பண்டிதர்களோடு பேசி குறிப்பு எடுத்துக்கொண்டார். அங்கும் இங்கும் பழைய ஓலைச்சுவடிகளைத் தேடி, விற்கத் தயாராக இருந்தவர்களிடம் தன் காசை செலவழித்து வாங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக பெரும் களஞ்சியத்தையே சேகரித்துவிட்டார்.

வணிகத்தில் பிரதான நோக்கம் கொண்ட கம்பெனி, தன் ஆட்சிக்குள் வந்த நிலங்களின் வளத்திலும் வருவாயிலும் ஆர்வம் காட்டியது. பயிர்களைத் தவிர வேறு என்ன செடிகொடி மரங்கள் வளர்கின்றன, விலங்குகள் உள்ளன, தாது பொருட்கள் யாவை என்பதிலும் ஆர்வம் காட்டியது. ஐரோப்பியக் கண்டத்தில் நிகழ்ந்த அறிவொளி இயக்கத்தின் (Enlightenment) ஒரு தாக்கம் இது. தேயிலை, காபி, கரும்பு, சக்கரை, பஞ்சு, பட்டு, மிளகு, கடுகு, மஞ்சள், சந்தனம், இத்யாதி தாவரங்களை ஏற்றுமதி செய்து லாபம் பெறலாம்.

இந்திய நிலத்தை அறிவியல் பூர்வமாக அளந்து, வளங்களைப் பதிவு செய்து, சேகரித்த தகவல்களை ஆலசி ஆராய்ந்தால், பெரும் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் வழி வகுக்கலாம் என்று கருதினர். மேக்கன்சீ நடத்திய நில அளவை, பெருஞ்செல்வம் ஈட்டக் கூடிய பணி. இதனால் மேக்கன்சீ பிரதான நில அளவை அதிகாரியாக (Surveyor General) நியமிக்கப்பட்டார்.

1792-93 திப்பு சுல்தானை மூன்றாம் மைசூர் போரில் தோற்கடிக்க மேக்கன்சீயின் ராணுவப் பணி முக்கியமானது. போர் முடிந்த பின், மைசூர் அருகே உள்ள சரவணபெலகோலா மலை மேல் பிரம்மாண்டமான பாகுபலியின் சிலையைப் பார்த்து, ரசித்து, அதனையும் படம் வரைந்தார் மேக்கன்சீ. வில்லியம் ஜோன்ஸ் ஆராய்ந்த வங்காளம், பீகார், புகானன் பயணித்த நேபாளம், பர்மா ஆகிய இடங்களிலும் புத்த மதத்தை பற்றிப் புதிதாகத் தகவல்கள் அறிந்தார். ஆனால் அங்கே சமணம் எனும் ஜைன மதம் அக்காலத்தில் பரவலாக இல்லை போலும். மைசூர், பம்பாய், குஜராத் போன்ற ராஜபுத்திரத் தேசங்களில் சமணர்கள் பரவலாக இருந்தனர். இன்று போல் அன்றும் அவர்கள் செல்வந்தர்கள்தான்.

பம்பாய் நகரம் தவிர்த்து இவ்விடங்கள் கம்பெனி கையில் இல்லை. பணத்தில் மட்டுமே அக்கரை காட்டிய கம்பெனியாருக்கு பம்பாய் சமணர்களின் மதம், தத்துவம், கலை, கோவில் போன்றவற்றில் ஆர்வமில்லை. ஜோன்ஸ் போன்ற கல்வியிலும் கலையிலும் ஆர்வம் கொண்ட மேக்கன்சீ, இந்தியாவில் ஒரு புது மதமாகிய சமணத்தைத் தான் கண்டுபிடித்தாக அறிவித்தார். இது புத்த மதத்தைப்போலத் துறவை முன்நிறுத்தி, கொல்லாமை அகிம்சையைப் போதித்து, நான்கு வேதங்களை ஏற்காமல், மாற்றுச் சிந்தனைகள், தத்துவம், இலக்கியம் யாவையும் கொண்டவை என்று அறிவித்தார்.

வில்லியம் ஜோன்ஸ் இந்தியாவுக்கு வரும்போது தனக்கே வகுத்துக்கொண்ட ஆராய்ச்சி பட்டியலைப்போல் மேக்கன்சீயும் ஒரு பட்டியலைத் தயாரித்தார். இது தன் சுயசரிதைக்கு பின்னர் உதவும் என்று அலெக்ஸாண்டர் ஜான்ஸடனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

இந்தப் பட்டியலின் முக்கியப் புள்ளிகள் கீழ்வருமாறு:

1. சமண மதம், தத்துவம், பௌத்தத்திலிருந்து வேறுபாடு

2. லிங்காயதம், சைவம், போன்ற பண்டைய மதங்களின் விவரங்கள்

3. மடம், பண்டாரம் ஆகியவற்றின் நிர்வாகம், வரலாறு

4. கல்வெட்டு, செப்பேடு சாசனங்களின் ஆராய்ச்சி. நாட்டு நிர்வாகத்தில் அவற்றின் பங்கு.

5. குமரி முதல் டில்லி வரை காணப்படும் வீரக்கல் மஸ்திக்கல் ஆய்வு

6. முதுமக்கள் தாழி, வட்டங்கள், குவியல்கள் ஆகிய பண்டைய கால மனிதர்களின் சின்னங்கள் கட்டுமானங்கள்

7. இவற்றை யாவும் படம் வரைதல்

இந்தப் பட்டியலில் குறிப்பிடாதவை பண்டைய கால அரசுகளின் நாணயம் சேர்த்தல். சங்க காலத்தில் ரோமாபுரியிலிருந்து வந்தவை முதல், அவர் காலம் வரை கிடைத்த நாணயங்களால் மிகப்பெரிய ஒரு களஞ்சியத்தை மேக்கன்சீ சேமித்தார்.

1799-ல் கடைசி மைசூர் போரில் திப்பு சுல்தானை ஆங்கிலேயர் கொன்றனர். அதே வருடம் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டனர். தமிழ்நாட்டிலுள்ள (அன்றைய மதறாஸ் ராஜதானி) மற்ற பாளையக்காரர்கள் தங்களுக்குப் பெரும் எதிரியாக இருந்த திப்புவை கொன்ற ஆங்கிலேயரே பரவாயில்லை என்று முடிவுக்கு வந்து, கம்பெனியோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். தஞ்சை மராட்டிய மன்னரும் ஓய்வுத் தொகை வாங்கிக்கொண்டு, தன் ராஜ்ஜிய நிர்வாகத்தை கம்பெனியிடம் விட்டார். 1803-ல் கம்பெனி நிரந்தர தீர்மானம் (Permanent Settlement) என்று ஒன்றை அறிவித்து நிலம், நிர்வாகம், வரிவசூல், பொறுப்புகளை எஞ்சிய பாளையக்காரர்கள், ஜமீந்தார்கள் ஆகியோருடன் செய்து கொண்டது. இதற்கு சாமி நாயக் என்ற தமிழர் மிகவும் உதவியாக இருந்தார்.

திப்புவின் மரணத்திற்குப் பின் மைசூர் மாகாணத்தின் நாற்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் அளவிட்டார் மேக்கன்சீ.

ஐதராபாத் நிசாமும் ஆங்கிலேயர் படைக்கு இக்காலத்தில் அடங்கி, கடல் பகுதிகளை கம்பெனிக்குத் தாரை வார்த்தப் பின், மேகன்சீ நிசாம் நிலங்களையும் அளவெடுத்தார். இக்காலத்தில் குண்டூர் அருகே அமராவதி எனும் ஊரிலுள்ள ஒரு பெரிய மண்குவியலில் இருந்து ஒரு ஜமீந்தார் பல பளிங்கு கற்களைத் தன் மாளிகை கட்ட எடுத்து சென்றார். இதைக் கேள்விப்பட்டு, அமராவதிக்கு சென்றார் மேக்கன்சீ. தென்னிந்தியாவிலியே மிகப் பெரிய புத்த ஸ்தூபா அங்கே உள்ளது என்பதை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதை ஒரு சமண ஸ்தூபம் என்று நினைத்து, அதில் சித்தரித்த கதைகள் சமணக் கதைகள் என்று நம்பினார்.

பிரான்சில் நிக்கலாஸ் லகெய்ல் (Nicholas laCaille), தென் அமெரிக்காவில் ஹம்போல்ட்(Alexander von Humboldt), தென்னிந்தியாவில் மேக்கன்சீ என்று அடுத்தடுத்த சில பத்தாண்டுகளில் பெரும் நில அளவைப் பணிகள் இயங்கின.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் நில அளவைக் கல்லூரி (Survey School) ஒன்று நிறுவப்பட்டு அங்கே இந்தியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிதான் பின்னால் விரிவாகி கிண்டி பொறியியல் கல்லாரியாக (Guindy Engineering College) மாறியது. இதன் முக்கிய ஆசிரியர் ஜான் கோல்டிங்காம் (John Goldingham). ஆளுநருக்கு ஒரு விருந்து மாளிகை (Banqueting Hall) கட்டினார். 1947க்குப் பின் அந்த மாளிகைக்கு ராஜாஜி அரங்கம் என்று பெயரிடப்பட்டது.

சென்னையில் விஞ்ஞான வரலாற்று ஆராய்ச்சிகள்

சென்னை நகரில் பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சிகள் அரங்கேறின. மருத்துவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) பட்டு வளர்க்கவும், சிவப்பு சாயம் செய்யவும் ஆய்வுகளில் இறங்கினார். முதலில் சென்னை மாம்பலத்தில், பிறகு சைதாப்பேட்டையில் நோபல்ரி (nopalry) என்ற ஆராய்ச்சி சாலை நிறுவினார். சீனாவில் இருந்து மல்பரிச் செடிகளை இறக்குமதி செய்து பட்டுப் பூச்சிகளை வளர்க்கப் பார்த்தார். சீனாவிலிருந்து ஒரு வகை சப்பாத்திமுள் செடி (cactus) வரவழைத்து, அதில் வளரும் நோபல் எனும் காகினீயல் (cochineal) பூச்சியை வளர்த்து, இந்தப் பூச்சிகளை லட்சக்கணக்கில் சேர்த்து நசுக்கி, அதன் ரத்தத்தில் ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளின் அடையாள சின்னமாகிவிட்ட சிவப்பு உடைகளைத் தயாரிக்க முற்பட்டார்.

நுங்கம்பாக்கத்திலும் வேறு சில தாவர சோதனைகளை ஆண்டர்சன் செய்யத் தொடங்கினார். நுங்கம்பாக்கதில் இன்றும் அவர் பெயரில் ஆண்டர்சன் சாலை, ஆண்டர்சன் தோட்டம் உள்ளன. தொண்டை மண்டலத்தில் வீடுகளைப் பூச சுண்ணாம்பு (chunam) பரவலாகப் பயன்பட்டது. உலகிலேயெ மிகச் சிறந்த சுண்ணாம்பு இதுவே என்று இயம்பி, இந்தச் சுண்ணாம்பு தயாரிக்கும் முறையைப் பதிவு செய்தார்.

1796-ல் இங்கிலாந்தில் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner) மாடு மேய்ப்பவர்களுக்கு அம்மை நோய்கள் வராததைக் கவனித்தார். மற்றவர்களை மிகவும் மோசமாகத் தாக்கி, ஆயிரக்கணக்கில் கொன்று, தப்பிப் பிழைத்தவர்களின் உடம்பெல்லாம் கொப்புளமும் கரும்புள்ளியுமாய் மாற்றிய அம்மை மாடு மேய்ப்பவர்களை மட்டும் ஏன் தாக்கவில்லை என்று ஆராய்ந்தார். பசு அம்மை (cowpox) தாக்கி பால் கறப்பவர்களின் கைகளில் கொப்புளங்கள் தோன்றும். இந்தக் கொப்புளங்கள் தானாகச் சரியாகிவிடும். பசு அம்மை வந்தவர்களுக்குச் சின்னம்மை (chicken pox) பெரியம்மை (small pox) நோய்கள் வருவதில்லை என்று வேறு பல மருத்துவர்கள் ஜென்னருக்கு முன்பே கூறிவந்தனர். சாரா நெல்மிஸ் (Sarah Nelmes) என்னும் பெண்ணின் கொப்பளத்தைச் சுரண்டி, ஜேம்ஸ் ஃபிப்ஸ் (James Phipps) எனும் சிறுவனைக் கீறிவிட்டார் ஜென்னர். தற்காலிக ஜுரத்திற்குப் பின் ஜேம்ஸுக்கு எந்த அம்மை நோயும் வரவில்லை. இதைப்போல் பல்வேறு நபர்களில் பசு அம்மை கொப்புளத்தைச் சுரண்டி கீறிவிட்டதில் அவர்களுக்கு அம்மை வருவதில்லை என்று கண்டுபிடித்து, லண்டன் ராஜ்ஜிய சங்கத்தில் கட்டுரையைப் பதிவிட்டார் ஜென்னர். ஐரோப்பாவில் பத்தில் ஒருவரைக் கொன்று குவித்த அம்மை நோய்கள் இதனால் மிகவும் குறைந்து வந்தன என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஊசிவைத்துக் கீறுவதால் தடுப்பூசி என்றும், பசுவிலிருந்து வேக்சினேஷன் என்றும் (வேக்கா vacca லத்தீனச் சொல்; பசுவை குறிக்கும்) என்றும் புகழ்பெற்றது.

இக்காலத்தில் சென்னையிலும் அம்மை நோய் பரவ, ஆண்டர்சன் சென்னையில் வேக்சினேஷன் (vaccination) எனும் தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தினார். அக்காலத்தில் ஐரோப்பியரின் மருத்தவ அறிவியலைவிட, ஆயுர்வேதம் சித்த மருத்துவம் போன்ற இந்திய மருத்துவ முறைகளே சிறப்பாக விளங்கின. ஆட்சியிலிருந்தாலும், செல்வத்தில் மிளிர்ந்தாலும் மிலேச்சர்கள் என்றே அவர்களை இந்தியர்கள் கருதினார்கள். அம்மனின் அருளால் தான் அம்மை தீரும் என்றும் பாமரர்கள் நம்பினர். மற்றவர் சிரங்கிலிருந்து ஊசி வைத்து கீறி ஒரு நோயைக் குணமாக்க முடியும் என்ற மக்களை நம்பவைக்க முடியவில்லை. கிழக்கிந்திய கம்பெனிப் படையில் மருத்துவ உதவியாளராய் பணி செய்த உதயகிரி சாமி நாயக் (Woodeyagiri Sammy Naick), தன் திறமையாலும் ஆங்கில மொழியாற்றலாலும் கம்பெனி அதிகாரிகளின் நம்பிக்கை பெற்றுவிட்டார். பாளையக்காரர்களுக்கும் கம்பெனிக்கும் 1803-ல் ஒப்பந்தமான நிரந்தரத் தீர்மானத்திற்கு உதவி செய்தார். சென்னை மக்களிடம் தடுப்பூசிக்குப் பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் மக்கள் தடூப்பூசியை ஏற்க மிகவும் தயங்கினர். நிற்க.

ஆண்டர்சனுக்கு முன்பே பிரான்சிஸ் புகானன் (Francis Buchanan) என்பவர் இம்மாதிரி தாவர ஆய்வுகளைச் செய்து வந்தார். இந்திய ஓவியக் கலைஞர்களைப் பணிக்கு அமர்த்தி ஆயிரக்கணக்கான செடிகளையும் பூக்களையும் இலைகளையும் கனிக்காய்களையும் வரைந்து புத்தகங்கள் செய்தார். இவற்றில் சில பிரதிகள் இன்றும் சென்னை கன்னிமாரா (Connemara) நூலகத்தில் உள்ளன. புகானனை கல்கத்தாவில் தாவரத் தோட்டம் (Botanical Garden) அமைக்க அழைத்தார்கள். விதியின் வசத்தில் நேபாளத்திற்கு சென்று அங்கே புத்த மதத்தைப் பற்றி ஆய்வுகளில் இறங்கிவிட்டார்.

நுங்கம்பாக்கத்தில் ஒரு வானியல் மையத்தை (Astronomical observatory) மைக்கல் டாப்பிங் (Michael Topping) என்ற வானியல் ஆர்வலர் நிறுவினார். லண்டன் நகரருகே கிரீன்விச் (Greenwich) வானியல் மையத்தை ஆங்கிலேய உலகின் பிரதான தீர்க்கரேகையாய் (Prime Meridian) வைத்து, சென்னையில் நட்சத்திரங்களைக் கவனித்து, பதிவு செய்து, சென்னையின் தீர்கரேகையை (Longitude) டாப்பிங் நிலைநாட்டினார். இதற்குச் சில வானியல் இயந்திரங்கள் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டன. ஒரு தூணில் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கில மொழிகளில் கி.பி. 1792-ல் கலியுக வருடம் 4893-ல் இந்தப் பணி நடந்ததை கல்வெட்டாய் டாப்பிங் பொறித்தார். இன்றும் இந்தத் தூணை நுங்கம்பாக்கத்தில் காணலாம்.

மைக்கல் டாப்பிங் தூண்
மைக்கல் டாப்பிங் தூண்

மேக்கன்சீயை விட மிகத் துல்லியமாக, பக்குவமாகத் திரிகோண முறையில் பரத கண்டம் முழுதும் அளக்கவேண்டும் என்று வில்லியம் லாம்ப்டன் (William Lambton) எனும் நில அளவை ஆர்வலர் கம்பெனிக்கு ஒரு மநு கொடுத்தார். இதற்கு ஐந்து வருடமும் இத்தனை பணமும் ஆகும் எனக் குறிப்பிட்டார். லண்டன் தலைமை அலுவலகத்தின் பெரும் எதிர்ப்பை மீறி இதற்கு கம்பெனியின் இந்திய அதிகாரிகள் பணம் ஒதுக்கினர். தியோடொலைட் (theodolite) எனும் ஐநூறு கிலோ எடையுள்ள அளவைக் கருவியை வரவழைத்து, புனித தாமஸ் மலை எனும் பரங்கி மலையில் இந்த மகா திரிகோண அளவை (Great Trigonometrical Survey) தொடங்கியது. சென்னை முதல் கேரளத்தின் தெளிச்சேரி வழியாக, மங்களூர் வரை, முதல் அளவை இயங்கியது. காவிரி பகுதியில் மலைகள் ஏதுமில்லாமல் அளவைப் பணியைத் தொல் நெடும் கோவில் கோபுரங்களின் மேல் அரை டன் தியோடொலைட் ஏற்றி, நிலம் அளந்தனர். தஞ்சையில் ராஜராஜசோழன் கட்டிய பெருவுடையார் கோவிலில் லாம்ப்டன் ஏற்றிய தியோடோலைட், சிகரத்திலிருந்து விழுந்து சில சிற்பங்களை சேதம் செய்து, சுக்கு நூறாய் நொறுங்கியது. கோவில் விமானத்தின் வடக்கு முகத்தில் சேதமான ஒரு சிற்பத்தைப் புனரமைத்த சிற்பி, நன்றியுணர்வில் லாம்ப்டன் முகத்தை ஒரு தொப்பியோடு பொறித்தார் என்று சொல்வோரும் உண்டு. பரங்கி மலையில் லாம்படனுக்கு ஒரு உருவச்சிலை சமீபத்தில் வைக்கப்பட்டது. விரும்புவோர் இவ்விறு சிற்பங்களையும் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

வில்லியம் லாம்ப்டன்
வில்லியம் லாம்ப்டன்

நுங்கம்பாகம் வானியல் மையத்தின் உச்சியிலிருந்து, மேற்கே பரங்கி மலை ராணுவ முகாமும், கிழக்கே கடலோரம் ஜார்ஜ் கோட்டையும் தெரியும். சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் குறிக்கும் வகையில் கோட்டையில் கம்பெனி பீரங்கியில் ஒரு குண்டு வெடிக்கும். காலை எட்டு மணிக்கும் மாலை எட்டு மணிக்கும் பரங்கிமலையில் பீரங்கி ஒலிக்கும். அக்காலத்தில் மணிக்கூண்டுகளோ கடிகாரங்களோ கிடையாது. இந்தப் பீரங்கி கூறும் நேரத்தை கன் டைம் (gun time) என்று மக்கள் அழைத்தனர். 1990கள் வரை இந்த கன் டைம் சொற்றொடர் புழக்கத்தில் இருந்தது.

கைக்கடிகாரத்தை வைத்து பீரங்கியில் தீப்பொறியைக் கவனித்து, அதன் பிறகு ஒலி கேட்க எத்தனை நொடிகள் ஆயின என்று வானியல் மையத்தில் கோல்டிங்காம் பல நாட்கள் கவனித்துக் குறிப்பெடுத்து பதிவு செய்தார். ஒலியின் வேகத்தை நிற்ணயிக்க உலெகெங்கும் நடந்த அறிவியில் பரிசோதனைகளில் இதுவும் ஒன்று.

வில்லியம் சேம்பர்சுக்கு (William Chambers) அடுத்து மாமல்லபுரம் சென்று கட்டுரை எழுதிய புகழ் கோல்டிங்காமைச் சேரும். காலின் மேக்கன்சீயோடு சென்ற காவலி லக்ஷ்மையாவும் மகாபலிபுரத்தைப் பற்றி ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரை எழுதினார். ஹரிசேகரன் எனும் ஒரு மன்னன் மகாபலிபுரத்துக் கோவில்களை எல்லாம் கட்டினான் என்று அதில் ஒரு குறிப்பு. மகாபலிபுரத்தின் முதன் நில அளவை வரைபடத்தை மேக்கன்சீ வரைந்தார். சில கல்வெட்டுகளைப் பதிவு செய்தார்.

1830களில் பெஞ்சமின் கை பேபிங்டன் (Benjamin Guy Babington) என்ற மருத்துவர் அடுத்த முக்கிய மகாபலிபுரக் கட்டுரையை எழுதினார். தர்மராஜ ரதத்தில் உள்ள பல பல்லவக் கல்வெட்டுகளைப் பதிவு செய்தார். அவை, கிரந்தம் எனும் லிபியில் எழுதப்பட்ட சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் என்று அறிவித்தார். கணேச ரதத்தில் ஒரு நீண்ட சம்ஸ்கிருதக் கல்வெட்டைப் படியெடுத்து மொழிபெயர்த்து அச்சிட்டார். இப்படி மகாபலிபுரத்தைப் பற்றிய சீரான ஆய்வுகள் தொடங்கின. ஆனால் அவற்றைக் கட்டிய பல்லவ மன்னர்களைப் பற்றியும், மகேந்திர வர்மன், வாதாபி கொண்ட நரசிம்ம வர்மன் பற்றியும், பல்லவ வம்சம் பற்றியும் வரலாற்றின் சரியான தகவல்கள் வெளிவரப் பல ஆண்டுகள் ஆயிற்று.

சென்னைப் பட்டணத்து எல்லீசன்

1796-ல் கிழக்கிந்திய கம்பெனியில் குமாஸ்தாவாக (Writer) பணியில் சேர்ந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis), தன் அபார திறமையாலும் உழைப்பாலும் 1798-ல் வருமானத்துறையில் உதவிச் செயலாளராகி 1802-ல் செயலாளர் ஆனார். தமிழில் ஆர்வம் கொண்டு ஆழமாகத் தமிழைக் கற்றுக்கொண்டார். காலின் மேக்கன்சீயின் நண்பரானார்.

ஆண்டர்சன் தலைமையில் தடுப்பூசி அறிமுகமாக மக்கள் புறக்கணித்த காலம் இது. எல்லிஸ் ஒரு யுக்தி செய்தார். பசுவைப் புனிதமாக கருதிய மக்கள், பஞ்சகவ்யம் எனும் பசு தரும் ஐந்து பொருட்களாம் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகியவற்றையும் புனிதமாகவே கருதினர். பசுவிலிருந்து எடுக்கப்பட்ட தடுப்பூசி கீறலை ஆறாம் பஞ்சகவ்யமாக எல்லிஸ் பறைசாற்றினார். அம்மையால் தாக்கப்பட்ட மக்களின் துன்பம் தீர, அம்மனிடமே தனவந்தரி எனும் மருத்துவத் தேவன் வேண்டிக்கொள்ள, அம்மனும் கருணையால் தடுப்பூசி என்றும் ஆறாம் பஞ்சகவ்யத்தை அருளியதாக, ‘ஆறாம் ஆ வர விளக்கம்’ எனும் ஒரு கவிதையை எல்லிஸ் தமிழில் இயற்றினார். இதன் தாக்கமோ, அரசாங்கம் அறிவித்த ஊக்கத் தொகையோ, சாமி நாயக்கின் தடுப்பூசி முயற்சிகள் வெற்றி பெற தொடங்கின. மதறாஸ் ராஜதானியின் தலைமை தடுப்பூசி அதிகாரியானார். இதில் என்ன அதிசயம் என்றால், ஏழூர் வேதம் என்ற ராபர்டோ தெநோபிலி இயற்றிய போலி நூலை, ஆராய்ந்து போலி என்று அறிவித்தவர் எல்லிஸ். ஆனால் தானே மக்கள் நலனுக்காக ஒரு போலி நூலை உருவாக்கினார். இந்த நூலின் செய்யுள் கிடைத்துள்ளது.

1806-ல் தஞ்சையில் நீதிபதியாய் எல்லிஸ் நியமிக்கப்பட்டார். ஒரு வழக்கில் தஞ்சாவூர் ராஜக் குடும்பத்துக்குப் பிடிக்காத ஒரு தீர்ப்பை அளித்ததால் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசூலிபட்டிணத்திற்கு கம்பெனியால் பணிமாற்றப்பட்டார். அங்கே பொமகொண்டி சங்கரையா சாஸ்திரி (Bomakonti Sankara Sastri) என்ற பண்டிதர் அறிமுகமானார். தெலுங்கு, தமிழ், சம்ஸ்கிருதம் மூன்று மொழியிலும் புலமை பெற்றவர் சங்கரையா. ‘சரஸ்வதி விலாசம்’ எனும் அக்கால இந்து மத சட்டநூலில் நிபுணர் என்பதால் நீதி நிர்வாகத்தில் எல்லீசுக்கும் கம்பெனிக்கும் உதவியாக இருந்தார். எல்லிஸ் மசூலிபட்டிணத்தில் தெலுங்கு கற்றார். இரண்டு மொழிகளையும் கற்றபின் அவ்விரண்டிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை எல்லிஸ் கண்டார். சம்ஸ்கிருத தெலுங்கு மொழிகளின் இலக்கணத்தை நன்று கற்றிருந்த சங்கரையா, தமிழிலிருந்து தெலுங்கு பிறந்திருக்கலாம் என்று கருதினார். ஆனால் தெலுங்கு மொழியின் இலக்கண நூல்கள் சம்ஸ்கிருத இலக்கண நூல்களின் அமைப்பைத் தழுவி இயற்றப்பட்டன; தமிழின் இலக்கண அமைப்பில் இல்லை என்றும் கருதினார்.

1810-ல் சென்னை கலெக்டரான எல்லிஸ், திருக்குறள் மேல் ஆர்வம் கொண்டு அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அறத்துப்பாலை மட்டும் எல்லிஸ் மொழிபெயர்த்தார்; பிற்காலத்தில் ஜி.யு. போப் என்பவர் மற்ற இரு பகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

1800-ல் கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை கம்பெனியின் கவர்னர் ஜெனரல் வெல்லஸ்லீ தொடங்கிவைத்தார். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு கம்பெனியில் வேலை செய்ய வரும் ஆங்கிலேயருக்கு சமஸ்கிருதம், பாரசீகம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகளைப் பயிற்றுவிக்க இந்தக் கல்லூரி தொடங்கியது. இங்கு படித்து தேர்வெழுதியவர்கள் மதறாசுக்கும் பம்பாய்க்கும் மற்ற பகுதிகளுக்கும் அதிகாரிகளாக அனுப்பப்பட்டனர்.

தென்னிந்தியாவில் வந்த அதிகாரிகளுக்கு இந்த மொழிகள் பெரிதும் உதவாது என்று கம்பெனி அதிகாரிகள் உணர்ந்து, சென்னை ஜார்ஜ் கோட்டையில் ஒரு கல்லூரியைத் தொடங்கினர். 1812-ல் தொடங்கிய இக்கல்லூரியில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், கன்னடம், கொடுந்தமிழ், செந்தமிழ் என்று ஐந்து மொழிகள் பாடமாகக் கற்பிக்கப்பட்டன. ஐந்து மொழிகளுக்கும் பொது மொழியாகச் செந்தமிழ் கற்றுக்கொடுக்கலாம் என்று எல்லிஸ் பரிந்துரைத்தார். இந்தக் கல்லூரியின் தேர்வுக்குழுவின் தலைவராக எல்லிஸ் இருந்தார்.

ஜார்ஜ் கோட்டை கல்லூரி

வீரமாமுனிவர் எழுதிய ‘கொடுந்தமிழ் அகராதி’ ஒரு பாட நூல். மற்ற மொழிகளுக்கும் ஆங்கிலத்தில் அகராதிகள் தேவை என்று உணர்ந்து, அதற்கான பணி தொடங்கியது. தென்னிந்திய மொழிகளுக்கு அச்சு இயந்திரங்கள் செய்யப்பட்டன. சீகன்பால்கு தமிழில் விவிலியத்தை முதலில் அச்சில் கொண்டுவந்தாலும், காகிதம் தெக்கணத்தில் பரவலாக ஏற்கப்படவில்லை. மரபில் வந்த ஓலைச்சுவடிகளைப் புனிதமாய் நினைத்தனர். பண்டிதர்களும் அவர்களைப் பேணிய மன்னர்களும் பாளையக்காரர்களும் செல்வந்தர்களும் மடங்களும் ஓலைச்சுவடியைக் கைவிடவில்லை. கம்பெனியும் இதுவரை இதை மாற்றவில்லை. ஆனால் முழுத் தென்னிந்தியாவும் கம்பெனியின் கட்டுப்பாட்டில் வந்ததாலும், நிர்வாகத்திற்கும் வணிகத்திற்கும் கல்விக்கும் காகிதமும் அச்சு இயந்திரங்களும் ஓலைச்சுவடியை விடச் சிறப்பானவை என்றும், இயந்திரப் புரட்சி சில தசாப்தங்களாக ஐரோப்பாவில் பரவியதாலும், காகிதம் மேலோங்கி, ஓலைச்சுவடி யுகம் முடிவுக்கு வந்தது. தெலுங்கு-ஆங்கில அகராதியை (A Grammar of the Teloogoo Language) அலெக்ஸாண்டர் டங்கன் கேம்ப்பெல் (Alexander Duncan Campbell), மலையாள ஆங்கில அகராதியை சார்ல்ஸ் விஷ் (Charles Whish) ஆகியோர் இயற்ற, ஜார்ஜ் கோட்டை கல்லூரி அச்சில் வெளியிட்டது. வேறு பல நூல்களும் அங்கில மொழிபெயர்ப்புகளும் அச்சில் ஏறின.

திராவிட மொழிக் குடும்பம்

1816 வெளிவந்த கேம்ப்பெலின் தெலுங்கு அகராதிக்கு எல்லிஸ் ஒரு முன்னுரை எழுதினார். இந்த முன்னுரையில் தமிழ் தொன்மையான மொழி; மிகத்தொன்மையான இலக்கிய நூல்களைக் கொண்ட மொழி; சமஸ்கிருதத்திற்கு நிகராக இப்படி ஒன்று தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இல்லை என்று இயம்பினார். சமஸ்கிருத இலக்கண நூல்கள் சொற்களின் மூலங்கள் தத்பவம், தத்சமம், தேசியம், கிராமியம், அந்தரதேசியம், மிலேச்சம் என்று ஆறுவகையாக வகுக்கப்பதை சங்கரையா சுட்டிக்காட்டினார். இவ்வாறு சமஸ்கிருத சொற்கள் தமிழில் இருந்தாலும், அவை தமிழுக்கு அழகூட்டுகின்றன; ஆனால் அடிப்படை தேவையில்லை என்று எல்லிஸ் கூறினார். சம்ஸ்கிருதத்திலிருந்தே அனைத்து இந்திய மொழிகளும் தோன்றியவை என்பது தவறான கருத்து என்றும் வாதிட்டார். மாறாக, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் துளு ஆகிய தென்னிந்திய மொழிகளில் பல பெயர்சொற்களும் வினைச்சொற்களும் பொதுவான வேர்கள் கொண்டவை; இந்த வேர்கள் ஆரிய மொழிகளிலிருந்து குறிப்பாக சமஸ்கிருதத்திலிருந்து வரவில்லை என்று, ஒரு ஒப்பீட்டுச் சொல் பட்டியலை அமைத்து, அதையே சான்றாகக் காட்டினார். இதனால் இந்த மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சேரா; வேறு ஒரு தனி மொழிக் குடும்பம் என்று எல்லிஸ் புதுமையான கருத்தை முன்மொழிந்தார். இந்த மொழி குடும்பத்திற்கு ‘திராவிடம்’ என்றும் பெயர்சூட்டினார்.

நாற்பது வயதாகும் வரை புத்தகம் ஏதும் இயற்றப்போவதில்லை என்று எல்லிஸ் முடிவெடுத்தார். அகாலமாக 1819-ல் நாற்பத்தியோராவாது வயதில் மரணமடைந்தார். அவருக்கு ராமநாதபுரத்தில் கல்லறை உள்ளது.

இக்காலத்தில் வங்காள ஆசியாடிக் கழகம்போல சென்னையிலும் மதறாஸ் இலக்கிய சங்கம் ஒன்று 1812-ல் தொடங்கியது. இதன் தலைவர் மதறாஸ் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபது சர் ஜான் நியூபோல்ட். செயலாளர் பெஞ்சமின் பாபிங்டன். 1819-ல் சங்கத்தின் ஆய்வுகளை அச்சில் ஏற்ற ஒரு பத்திரிகை தொடங்கியது. மாமல்லபுரத்தை ஆராய்ந்து, அதைப் பற்றி பல கட்டுரைகளைப் பதிவிட்டு, தென்னிந்திய வரலாற்றையும் தாவர விவசாய வளத்தையும், இசையைப் பற்றியும் பல ஆராய்ச்சிகளை வெளிகொண்டுவந்த இந்த இலக்கிய சங்கம், ஏனோ எல்லிஸின் இந்த ஆய்வுகளைத் தொடரவில்லை. நாற்பது ஆண்டுகள் பின்னர் மதப்பிரசாரத்திற்காக தமிழகம் வந்த ராபர்ட் கால்டுவெல் பாதிரி, ‘திராவிட இலக்கணம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு திராவிட மொழிகளைக் கண்டுபிடித்தவர் என்று புகழ்பெற்றார்.

1818-ல் தண்ணீர் பஞ்சம் சென்னையில் பெருகியபோது, கலெக்டராய் இருந்த எல்லிஸ் பஞ்சம் தீர்க்க இருபத்தியேழு கிணறுகளை வெட்டினார். இதற்கு நீண்ட ஒரு கவிதையை ஆசிரியப்பாவில் இயற்றி கல்வெட்டாய் அந்தக் கிணற்றின் சுவரில் பொறித்து பதித்தார். காலின் மேக்கன்சீயின் நட்பாலும் ஆய்வாலும் சாசனத்தின் அருமையை எல்லிஸ் உணர்ந்திருந்தார் போலும். கல்வெட்டில் திருவள்ளுவரை ‘மயிலையம்பதி தெய்வப் புலவர்’ என்று புகழ்ந்து, சென்னை நகரத்தை ‘குணக்கடல் முதலா குடக்கடல் வரையில் ஆழியில் இழைத்த அழகுறு மாமணி’ என்று கவிச்சுவை சொக்க வர்ணித்து, தன்னையே ‘சென்னைப்பட்டணத்து எல்லீசன்’ என்று தமிழ்ப்பெயரால் குறிப்பிட்டு, ‘இருபுனலும் வாய்த்த மலையும் வல்லரனும் வருபுனலும் நாட்டிற் குறுபு’ என்ற குறளை எடுத்துக்காட்டி, ‘சுபயோக சுபதினித்தில் வார திதி யோக நக்ஷத்திரம் கரணம் பார்த்து புண்ணியாகவாசநம் பண்ணுவித்தேன்’ என்று முடித்தார். இன்று இந்தக் கல்வெட்டு, மேக்கன்சீயின் மனம் கவர்ந்த மதுரை திருமலை நாயக்கர் மகாலில் அருங்காட்சியகத்தில் உள்ளது.

காணியாட்சி, காணியாளர், நாட்டாமை, என்று ஆயிரமாயிரம் ஆண்டுகள் பெயர்கொண்ட கிராம அதிகாரிகளுக்கு ஆற்காடு நவாபு ஆட்சிக் காலத்தில் பெயர்கள் மருவி மிராசுதார், மிராசி, ஜமீந்தார் என்று பாரசீகப் பெயர்கள் பரவலாயின. இந்துக்களின் சட்டங்கள், சட்டநூல்கள், அதிகாரங்கள், மராட்டியரின் நிர்வாக முறை, வரிவழக்கங்கள் என்று ஆராய்ச்சி செய்ய விரும்பி, மனுஸ்மிரிதியை கல்கத்தாவில் ஆராய்ச்சி செய்தது போல், தமிழ்நாட்டிலும் ஆராய கம்பெனியார் விரும்பினர். மிராசி உரிமை பற்றி பதினேழு கேள்வி எழுப்பி எல்லீசனுக்குப் பதில் தரும் பணி கொடுத்தனர். தென்னிந்தியாவில் நீதி சாஸ்திரங்களின் சாராம்சமாக ‘சரஸ்வதி விலாசம் ‘ என்ற நூல் விளங்கியதையும், கல்வெட்டு செப்பேடு சாசனங்களில் பல அன்றாட வழக்கங்கள் பதிவாகி உள்ளதையும் சங்கரையா விளக்க, அவர் தமிழில் இந்தப் பதினேழு கேள்விகளுக்கு ஆராய்ந்து ஒரு அறிக்கை (Treatise on Mirasi Rights) தயாரித்தார். இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எல்லீசன் கம்பெனிக்கு சமர்பித்தார். முகலாயர், துருஷ்ர் எனும் துளுக்கர், பாரசீகர்கள் ஆகியோரின் சட்டமுறைக்கும், பண்டைய இந்து மத, பாரத நீதி சட்ட நிர்வாகத்திற்கும் பெரும் வேறுபாடுகளை உணர்ந்து, டில்லியிலோ வங்காளத்திலோ நிலவுவதைப் பாரதம் முழுதும் நிலவுவதாகவோ நிலவியதாகவோ கருதக்கூடாது என்ற வரலாற்று அறிவு அவர்களுக்கு இருந்தது.

1816 மீண்டும் அமராவதி சென்ற மேக்கன்சீ, கிட்டத்தட்ட அனைத்து சிற்பங்களும் அழிந்து போனதைக் கண்டு, 88 சிற்பங்களை மசூலிபட்டிணத்திற்கும், எழு சிற்பங்களை கல்கத்தாவிற்கும் அனுப்பிவைத்தார். 1850களில் இவை சென்னைக்கும் லண்டனுக்கும் சென்றன. இவற்றுள் சில சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளன.

1821-ல் கல்காத்துவிற்குச் சென்ற மேக்கன்சீ, நோய்வாய்பட்டு இறந்தார். அவர் வாழ்நாள் முழுதும் சேகரித்த களஞ்சியத்தைப் பட்டியலிட, லக்ஷமையா முன்வந்தார். ஆனால் ஆசியாடிக் கழகத்தின் தலைவர் ஹோரேஸ் வில்சன் அந்தப் பணியை மேற்கொண்டார். மேக்கன்சீயின் முழுக்களஞ்சியத்தையும் கம்பெனி அவர் விதவையிடம் பதினைந்தாயிரம் பவுண்ட் கொடுத்து வாங்கிக்கொண்டது. லண்டன் நூலகமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் போடலேயன் நூலகமும் இதிலிருந்து பல பொக்கிஷங்களைப் பெற்றாலும், பெரும்பான்மையான ஓலைச்சுவடிகளும், மற்ற ஆவணங்களும் கீழ்த்திசை சுவடி நூலகம் என்று சென்னையில் தொடங்கிய நூலகத்தில் உள்ளன. சென்னை பல்கலை வளாகத்திலிருந்து சமீபத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு இவை இடம் மாறின.

வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தாவில் ஒரு மொழிக் குடும்பத்தைக் கண்டுபிடித்தார். எல்லீசன் எனும் எல்லிஸ், சென்னையில் ஒரு மொழிக் குடும்பத்தைக் கண்டுபிடித்தார். ஆனால் எல்லீசனுக்குப் புகழ் சமீபம் வரை கிடைக்கவில்லை. சாமி நாயக்கருக்கு 1964-ல் கோமளிசுரன்பேட்டையில் ஒரு சிலை வைக்கப்பட்டது. 1968-ல் கால்டுவெலுக்கும் ஜியு போப்பிற்கும் வீரமாமுனிவருக்கும் சென்னை கடற்கரையில் சிலைகள் வைக்கப்பட்டன. எல்லீசனின் படம்கூட இல்லை. அமெரிக்க மிசிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமஸ் திரௌட்மனின் 2008 நூலில் எல்லீசனின் பணிகளை வெளிக்கொண்டு வந்தபின் கொஞ்சம் புகழ்பெற்றுள்ளார். ஓரமாக இருந்த கிணறு கல்வெட்டை அடையாளம் கண்டு, தொல்லியல் துறையை அதைக் காட்சியில் வைக்கக்கோரி, மதறாசபட்டணம் புத்தகத்தில் பதிவு செய்த ஆசிரியர் நரசையாவுக்கும் பாராட்டுக்குறியவர்.

ஆசிரியர் நரசையா
ஆசிரியர் நரசையா

0

________

உதவிய புத்தகங்கள், வலைதளங்கள்

–  மதறாசபட்டணம் – கே.ஆர்.ஏ நரசையா
–  Languages and Nations, by Thomas Trautmann
–  Buddha and the Sahibs, by Charles Allen
–  எஸ் முத்தையாவின் உறை – ஆங்கிலேய மூவர் Notes from a lecture by S Muthiah on Buchanan, Mackenzie and Lambton
–  The Madras Literary Society by NS Ramaswamy
–  Treatise on Mirasi Rights, by FW Ellis, Bomakonti Sankara Sastri
–  The Seven pagodas of Mamallapuram by Capt MW Carr

சுட்டிகள்

–  எல்லீசனின் தமிழ் கல்வெட்டு (http://varahamihiragopu.blogspot.com/2014/06/englishmans-tamil-inscription.html)

–  சென்னைப்பட்டணத்து எல்லீசன் (காணொளி) https://www.youtube.com/watch?v=GkoLmAu4FA4&t=1s

பகிர:
கோபு ரங்கரத்னம்

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *