இதற்கு முன் நான் எழுதியதெல்லாம் எனது சொந்தக் கதை அல்லது அனுபவங்கள். ஆகையால், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. காரணம், எந்தத் தவறும் பிழையும் என்னைத்தான் பாதிக்கும்! இப்போது எழுதப்போகும் யானை டாக்டரின் கதை அப்படியல்ல. எப்போதோ ஒருமுறை பிறக்கும் ஓர் அபூர்வ மனிதரைப் பற்றியது. எந்தப் பிழை நேர்ந்தாலும், அது அவருடைய மதிப்பையும் மாண்பையும் பாதிக்கும். இந்த நினைவே என்னைச் சற்று மிரட்டியது. உண்மைதான்! இதில் கற்பனைக்கு இடம் இல்லை என்பதோடு, எந்த இடத்திலும் அவர் மாண்பைக் குறைக்காமல் நடந்தவற்றைக் கூற வேண்டும். என்னடா, இவன் இத்தனை பெரிய பீடிகை போடுகிறானே என்று நீங்கள் நினைக்கலாம். இங்கு வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அப்போதுதான் யானை டாக்டரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தாக்கம் சரியானவாறு உணரும்படி இருக்கும்!
முதலில், இந்த நிகழ்வுகள் நடந்த காலகட்டம். 1960களில் இருந்து 1998 வரையிலான நான்கு தசாப்தங்கள் என்று உத்தேசமாகக் கொள்ளலாம். அந்தக் காலங்களில், இப்போது உள்ளதுபோல தகவல்தொடர்பு சாதனங்கள் கிடையாது. குறிப்பாக, கைபேசி. டெலிபோன் வசதிகள் வந்தது 1970இன் பின்னால், சிறுகச் சிறுக, அதுவும் தரை தொடர்பு மூலம்! அருகில் உள்ள தபால் நிலையத்தில் இணைப்பு கேட்டு காத்திருந்து, வேண்டிய நபர் எதிர் முனையில் வந்த பின்தான் பேச முடியும். பல நேரங்களில், அழைப்பு கிடைக்காது.
அன்று வன உயிர் மருத்துவருக்குத் தனியாக வண்டி கிடையாது. ஏன், சரகருக்கே வண்டிகள் பிற்காலத்தில்தான் வந்தன. அன்று வண்டி டி.எப்.ஓ.வுக்கு மட்டும்தான். அதுவும் அவர் பணிபுரியும் இடத்தில்தான் இருக்கும். அந்த நாட்களில் யானை டாக்டருக்கு வரும் அவசரத் தகவல் எல்லாம் தந்தி / மின்தபால் மூலமாகத்தான் அனுப்பப்படும். டாக்டர் கே என்ற ஒரு தனி மனிதனுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தந்தி, மின்தபால் யாவும் ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டது என்றால் மிகையாகாது. அவசரத் தொடர்புக்கு அதுதான் தீர்வு அன்று.
அதேபோல, கால்நடை மருத்துவர் ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இருப்பர். அதுவும் தலைமை அலுவலகத்தில். அன்று அந்த அலுவலகம் கோவையில் இருந்தது. டாக்டர் கே (கிருஷ்ணமூர்த்தி) அங்குதான் இருப்பார். தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் அவரது சேவை தேவைப்படுகிறதோ, அங்கு அவர் செல்ல தலைமை வன உயிரின காப்பாளரிடம் அனுமதி பெற்றுச் செல்வார். எல்லோரும் த.வ.கா.விற்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். அவருக்கென்று வண்டி இல்லாததால், டாக்டர் கே, பேருந்தைப் பிடித்து சம்பவ இடத்திற்கு விரைவார். அங்கு வண்டி இருந்தால், அதில் போவார் அல்லது மற்றொரு பேருந்து. அதன்பின் நடை. சாதாரணமாக, அடுத்த நாள் அல்லது மூன்றாம் நாள்தான் அவர் செல்ல இயலும். சராசரியாக ஒரு மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் அவர் முதுமலை மற்றும் ஆனைமலை காடுகளில் உள்ள யானை முகாம்களில் இருப்பார். பெயருக்குத்தான் கோவையில் முகாம் என்ற நடைமுறை!
மேலும், 1987 வரை அவர் ஒருவர்தான் வனக்கால்நடை மருத்துவர்! இடையில், ஒருசில கால்நடை மருத்துவர்கள் வந்தாலும், அவர்கள் நிலைக்கவில்லை. அந்நாட்களில், டாப் ஸ்லிப்பிலும், முதுமலையிலும் யானைகள் முகாம் நல்ல முறையில் கிட்டத்தட்ட 80 யானைகளுடன் இயங்கிக் கொண்டிருந்த நேரம். அடிக்கடி போக வேண்டி நேரிடும். ஆயினும் ஒரு வண்டி கிடையாது. பின்னாட்களில், அதாவது 1973-ம் வருடத்திற்கு பிறகு முகாம்களுக்குச் செல்ல அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு வண்டி கிடைத்தது. ஆனால், அந்த வண்டியை கோவை வன பாதுகாவலர் கேட்கும் போதெல்லாம் அவர் பயன்பாட்டிற்கும் கொடுக்க நேரிடும். அந்த நேரங்களில் பழையபடி பேருந்து, நடைதான்! யானைக்கு அல்லது ஏதேனும் விலங்குக்குப் பிரச்சனை என்று தந்தி வரும். இவர் இரவில் கூடச் செல்ல வேண்டி இருக்கும். இவரால் அதன் பின் வீட்டில் இருக்க மனம் வராது!
இந்தத் தடங்கல்களைப் படிக்கும் வாசகர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால், எத்தனை இடர்ப்பாடுகளுக்கிடையில் அவர் பணிப்புரிந்தார் என்பதை உணர இயலாது. எப்படி வ.உ.சி.யின் மகத்தான தியாகத்தை இன்று நம்மால் உணர இயலாதோ; உ.வே.சா.வின் தமிழுக்கான முயற்சிகளை முழுவதும் அறிய இயலாதோ; திருப்பூர் குமரனின் மகத்தான தியாகத்தை இன்று நம்மால் உணர இயலாதோ; அப்படி இவரது பணியின் மகத்துவத்தை, இந்தச் சூழ்நிலையை அறியவில்லை என்றால் பாராட்ட இயலாது. இத்தனை இடர்ப்பாடுகளுக்கிடையில் அவர் சாதித்ததை நாம் நன்றாக உணர அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழலை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். நாமும் அந்தக் காலத்திற்கு மானசீகமாகப் போக வேண்டும். அவை இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவையாக தோன்றலாம். ஆனால், அன்றைய வாழ்வின் மதிப்பு முறை முற்றிலும் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். டாக்டர் கே-வின் பணி நெறியையும், அர்ப்பணிப்பையும் நாம் உணர அந்தக் காலத்திற்கும் அதன் மதிப்பு முறைக்கும் செல்ல வேண்டும்.
அப்படி நீங்கள் தயாரான பின் யானை டாக்டரின் கதையைத் தொடங்குகிறேன், அடுத்த வாரத்தில் இருந்து.
(தொடரும்)