Skip to content
Home » யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1

யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1

நாம் பல சொற்களை அதன் சரியான அர்த்தம் புரிந்து உபயோகிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக அர்ப்பணிப்பு என்கிற சொல். ஒரு வேலையைச் சற்றுத் திறம்படச் செய்துவிட்டால் அதை அர்ப்பணிப்புடன் செய்தார் என்போம். அதேபோல் சமயோசிதமாகச் செய்தால் பின்னிவிட்டார் என்போம்; புதிய உத்திகளைக் கையாண்டால், பிரமாதம் என்போம். இப்படிச் சாதாரணச் செயல்களைக்கூட உயர்வு நவிற்சியாகப் பேசி, செய்தவர் ஏதோ இமாலயச் சாதனை செய்த பிரமிப்பை ஏற்படுத்துவோம். இங்கே இன்று நான் சொல்லப்போகும் உண்மைச் சம்பவம் 1982-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நிகழ்ந்தது.

அன்று மதம் கொண்ட யானையை அடக்க இன்றுபோல நெடுந்தூரம் சுடக்கூடிய டெலஸ்கோபிக் துப்பாக்கிகள் கிடையாது. மயக்க மருந்தை எளிதில் பெற முடியாது. கிட்டத்தட்ட எல்லாக் கால்நடை வைத்தியர்களுக்கும் மாடு, நாய், பூனை போன்ற வீட்டுப் பிராணிகளுக்கு மட்டும் வைத்தியம் பார்க்கத் தெரியும். இதில், கால்நடை வைத்தியர் காலில் அடிபட்டு நொண்டி நடக்க வேண்டிய நிலை. இத்தனை இடர்பாடுகளின் இடையில் அவர் அந்த மதம் கொண்ட யானையைப் பிடித்து அடக்க வேண்டும். இதில் அந்த யானையால் குத்தப்பட்டு ஒரு பாகன் வேறு இறந்து விட்டார். எனக்குத் தெரிந்து பல கால்நடை வைத்தியர்கள் உடல்நிலையைச் சாக்குச் சொல்லி தட்டிக் கழிக்கத்தான் பார்ப்பார்கள். இப்படி ஒரு சூழலில்தான் நம் யானை டாக்டர் அர்ப்பணிப்பு, சமயோசிதம், புதிய உத்தி போன்றவற்றைக் கையாண்டு கிருஷ்ணன் என்ற அந்த யானையைப் பிடித்தார். அதை வாருங்கள் பார்ப்போம்.

1982ஆம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு மாலையில் பத்மனாப பணிக்கர் கிருஷ்ணனைப் பார்க்க வந்தபோது அவன் மதத்தில் இருப்பது தெரிந்தது. வலது காதுக்குச் சற்று மேலே மதநீர் வடிந்துகொண்டு இருந்தது. அதோடு அதன் மெல்லிய வாடையும் அடித்தது. சாதாரணமாக அவர், தன்னிடம் உள்ள எந்த யானையின் முன்னங்கால்களையும் பிணைப்பது கிடையாது. யானைகளுடன் பல காலம் பழகியதால், அவற்றின் குணங்களைப் பற்றியும், எதிர்வினை ஆற்றல்கள் பற்றியும் நன்கு அறிந்தவர். அதோடு எந்த யானையையும் எளிதில் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும் திறமையும் பெற்றவர். இதனால் அவரிடம் பெரும்பாலும் அடங்காப்பிடாரி யானைகளைத்தான் அதிகம் அனுப்புவர். அவரது 35 வருட அனுபவத்தில் அவர் ஒருமுறைகூட யானைகளால் தாக்கப்பட்டது கிடையாது என்பதோடு, அன்பினால் யானைகளை அடக்குவதில் பெயர் பெற்றவர்.

மற்ற பாகன்களைக் காட்டிலும் அவர் கொம்பன்களைத் திறமையாகக் கையாளுவார் என்ற நம்பிக்கையும் பெற்றவர். அதனால்தான், கொல்லங்கோடு மஹாரஜா அஹோபில மடத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்த இந்த கிருஷ்ணன் என்கிற கொம்பனை, பத்மனாப பணிக்கரிடம் அனுப்பிப் பார்த்துக் கொள்ளச் செய்தனர்.

இயல்பிலேயே முரட்டுக் குணம் கொண்ட கிருஷ்ணன், பணிக்கரிடம் பவ்யமாகவும் பணிவாகவும் பழகியது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் அவர் பெருங்குரலிலோ, அங்குசத்தாலோ அல்லது கம்பு கொண்டோ அதை நெறிப்படுத்துவது கிடையாது. அவரது கட்டைக் குரலில், ‘தா, தா’ அல்லது ‘ஆனே’ என்று அதட்டுவதோடு சரி.

அந்தத் திறந்தவெளி மேடை ஒரு பெரிய தென்னந்தோப்பினுள் இருந்தது. அந்தத் தோப்பு ஒருபுறம் வசந்த மண்டபத்தின் மதிலாலும், மறுபுறம் கொள்ளிடம் ஆற்றின் கரையாலும் தடுக்கப்பட்டு இருந்தது. மக்கள் வரும் வழி வசந்த மண்டபத்தை ஒட்டி இருந்தது. அதன் அருகே ஒரு சின்னக் கோவிலும் இருந்தது. அங்கு மடத்துக்காரர்கள் பூஜை செய்வார்கள். மற்றொரு முனையில் நந்தவனம் அதன்பின் இருந்த வீடுகளின் மதில்களால் அடைபட்டு இருந்தது. இப்படிக் கிட்டத்தட்ட ஒரு திறந்தவெளி மிருகக்காட்சி சாலை போன்ற இடத்தில் கிருஷ்ணன் குடி இருந்தான். கோவிலுக்கோ அல்லது வசந்த மண்டபத்திற்கோ வரும் பக்தர்கள், அப்படியே கிருஷ்ணனையும் பார்த்துவிட்டு ஏதாவது தின்னக் கொடுப்பது உண்டு. ஆனால் பாகன் மூலம்தான். ஆஜானுபாகுவான கிருஷ்ணனைப் பார்த்து மகிழாதவர்களே இல்லை எனலாம்.

நீண்ட தந்தங்களும், ஒன்பது அடி உயரமும் கொண்ட கிருஷ்ணன் அன்று ஸ்ரீரங்கத்தில் ஒரு ஸ்டார் என்றால் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அடுத்த நாள் காலை அவரது உதவியாளர் கோபாலன் மேடையைச் சுற்றி சுத்தம் செய்து ஒரு நீண்ட கோல் கொண்டு யானையின் காலடியில் கிடந்த சாணத்தையும் குப்பைகளையும் அகற்றிக் கொண்டிருந்தார். பாகனின் உதவியாளர்கள், யானை நன்கு பழகிய பின்னரே அருகில் சென்று வேலை செய்வர். அதுவரை தொலைவில் இருந்துதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். காரணம், யானை சில நேரங்களில் அவர்களைத் தாக்கலாம். யானையிடம் சுவாதீனமாக பழகக்கூடிய நபர் அதன் பாகன் மட்டுமே.

பணிக்கர், மெதுவாக வந்து பார்த்தார். எப்போதும்போல யானையின் முன்கால்கள் சங்கிலியால் பிணைக்கப்படாமல் இருந்தது. அவர் எப்போதும் முன்கால்களைப் பிணைக்க மாட்டார். பின்கால்களை மட்டுமே பிணைப்பார். அவருக்கு அவரது யானையின் மேலும், தன் திறமை மேலும் அத்தனை நம்பிக்கை. அப்போது அவர் யானையின் முன்னங்கால்களைப் பிணைத்து விடுவதுதான் நல்லது என்று முடிவு செய்தார். காரணம், அந்தத் தென்னந்தோப்பிற்குள் இருக்கும் திறந்தவெளி மேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் யானையைக் காண ஊர்க்காரர்களும் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் வருவதுதான். அதனால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம்தான். யானையின் முன் குனிந்து சங்கிலியை எடுத்துக்கட்ட முனைந்தார். யானை கிருஷ்ணனுக்கு என்ன கோபமோ அல்லது ஆத்திரமோ, புரியவில்லை. தனது நீண்டு பருத்த தந்தங்களால் பணிக்கரின் தோளில் குத்தித் தள்ளியது. பணிக்கர் ‘ஐயோ, ஞான் மரிச்சு’ என்று பெருங்குரலில் அலறியவாறு விழுந்தார்.

கோபாலன் உடனே ஓடி, அருகில் இருந்த ஊர்க்காரர்களைக் கூட்டிவந்து, மேடைக்குச் சற்றுக் கீழே குத்துப்பட்டுக் கிடந்த பணிக்கரை இழுத்து தூக்கி வந்து வெளியில் கிடத்தினார்.

யானை மேடையை விட்டு இறங்காமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாக, ஆனால் நிலையின்றி ஆடிக்கொண்டு இருந்தது. பின் கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் அங்கேயே சுற்றி வந்தது. இந்த மக்களின் தைரியத்தை நாம் பாராட்ட வேண்டும். காரணம், மதம் கொண்ட யானையின் அருகிலிருந்து பணிக்கரை வெளியே கொண்டு வர நிறையத் தைரியம் வேண்டும். மிகக் கோரமாக அவரது தோளின் வழியே குத்தி முதுகு வரை அந்தக் குத்து விழுந்திருந்தது. காலர் போன் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் காறை எலும்பின் கீழ் சென்று தோள்பட்டை வழியாக ஒரு ஓட்டைபோல இருந்தது.

உடனே அஹோபில மட ஜீயருக்குத் தகவல் தரப்பட்டது. அவர் முதலுதவிக்கு ஏற்பாடு செய்து அவரைப் புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அத்துடன் தென்னந்தோப்பில் எந்தவித நடமாட்டமும் இனி வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது. திறந்த வாயிலைப்பெரும் கட்டைகள் வைத்து தாற்காலிகமாக அடைத்தனர்.

பணிக்கரை யானை குத்தி கிட்டத்தட்ட இறக்கும் நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற செய்தி காட்டுத் தீயாக, ஸ்ரீரங்கம், திருச்சி, சமயபுரம் போன்ற சுற்றுவட்ட நகரங்களில் பரவியது. மக்கள் திரளாக வரத் தொடங்கினர். எனவே, தோப்பைச் சுற்றி கட்டைகள் கொண்டு வேலி அமைத்தனர்.

எதிர்க்கரை, கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்த பெரும் மணல் சுவர். சமயபுரம், திருவானைக்கா போன்ற கோயில்களில் இருந்த யானைப் பாகன்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களில் யாருக்கும் கிருஷ்ணன் அருகில் சென்று சங்கிலியைக் கட்டத் தைரியம் இல்லை. கிருஷ்ணனின் கோபமும் முரட்டுத்தனமும் அந்த அளவிற்குப் பிரபலம். ஒன்பது அடி உயரமும், திடகாத்திரமான உடலும், நீண்ட தந்தங்களையும் கொண்ட கிருஷ்ணனிடம் யாரும் நெருங்கத் தயாரில்லை. முன்னங்கால்கள் சரியாகக் கட்டப்படவில்லை என்ற உண்மையும், யானை பின் கால் சங்கிலி ஒன்றைத் தளர்த்திக் கொண்டதும் அவர்களைப் பின்வாங்கச் செய்தது. மேலும், பாகன்களின் தலைவர் என்று கருதப்படும் பணிக்கரே அடிபட்டதால், எல்லோரும் மிகவும் தயங்கினர். இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கிருஷ்ணன் மேடையை விட்டு இறங்காமலும், எந்த ஒரு எதிர்ச்செயலும் காட்டாமலும் ஆடிக்கொண்டே இருந்தான். பணிக்கரை குத்தியது குறித்து என்ன மன நிலையில் இருந்தான் என்று யாராலும் சரியாகக் கணிக்க இயலவில்லை. அருகில் இருந்து பார்த்த ஸ்ரீதரன் நாயர் என்ற பாகனும், சேஷாத்ரி என்கிற ஸ்ரீரங்கம் வாசியும், யானை அது குறித்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தது என்று சொன்னார்கள். இருக்கலாம். ஏனெனில், அதன் பின்னர் அதன் ஆர்ப்பாட்டம் முற்றிலும் அடங்கி விட்டது. இதற்கிடையில், பணிக்கர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட செய்தி வந்தது. மிகப்பெரிய சோகம் அஹோபில மடத்தையும் ஊர் மக்களையும் சூழ்ந்தது.

அடுத்து என்ன செய்வது என்பது பெரிய கேள்விக்குறி ஆனது. காரணம், யானையைக் கட்டாமல் வைத்திருப்பது பெரும் ஆபத்து. பாகன் இல்லாமல் யானையை வைத்திருப்பதும் இயலாது. மற்ற பாகன்கள் யாரும் துணிச்சலாக ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை; யானையோ மதத்தில் இருக்கிறது. மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் உறுதிப்படுத்த வேண்டும். இப்படிப் பல வகை சிந்தனைகள்; யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன. இரவில் யானை தெறிகெட்டு ஓடினால் என்ன செய்வது என்று பெரிய சர்ச் விளக்குகளைப் பொருத்தி, ஒரு கால்பந்து மைதானம்போலத் தோப்பை மாற்றினார்கள்.

சுற்றிலும் மின்விளக்குகள், கட்டைகளால் தடுப்பு. யானையைக் கட்ட ஒரு சிலர் துணிந்து சென்றபோது, யானை அவர்களை வெருட்டியது. அவர்கள் பயந்து திரும்பி வந்து விட்டனர். இதே நிலையில் யானையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லை. இதற்குள், தகவல் ஜில்லா கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு வரை சென்றது. அவர்கள் வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். இப்படியே நீடித்தால், மதம் கொண்ட யானையால் வேறு பிரச்னை வரக்கூடும் என்று எண்ணினர். அவர்களது முடிவு, சாதாரண நிர்வாகிகளைப் போலத்தான் இருந்தது!. சட்டம், ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் யானையைச் சுட்டுக் கொன்று விடுவதுதான் நல்லது என்று அபிப்பிராயப்பட்டனர். ஜீயருக்கு அது உவப்பானதாக இல்லை. ஆனால் அவரிடம் எந்த மாற்று ஏற்பாடும் இல்லை. அதோடு எந்தப் பாகனும் இனி அந்த யானையைப் பார்த்துக்கொள்ள வரத் தயாரில்லை. இந்த நிலையில் அவர் எப்படி கலெக்டரையும், போலீஸ் சூப்பிரண்டையும் யானையைச் சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று சொல்ல முடியும்? ஆயினும், அது ஒரு பழிச் செயல், மடத்திற்கும் அவமானம் என்று கருதினார்.

இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள கால்நடை மருத்துவர் வைத்தீஸ்வரனிடம் யோசனை கேட்கப்பட்டது. அதன்படி, வாழைப்பழத்தில் மயக்க மாத்திரைகள் வைத்து யானைக்குத் தூரத்தில் இருந்து ஒரு பெரிய கோல் மூலம் தரப்பட்டது. அதன்பின் சுமார் ஆறு மணி நேரத்திலும் ஒரு மாற்றமும் தெரியவில்லை. அப்போது அவர், ‘எனக்குத் தெரிந்து, யானைகளுக்கு வைத்தியம் பார்ப்பதில் சிறந்தவர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்திதான். அவரைக் கூப்பிடுங்கள். அவர் வனத்துறையில் இருப்பதால், திருச்சி வனத்துறை மூலம் முயற்சி செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினார்.

அதன்படி ஜீயர், வனத்துறையுடன் தொடர்பு கொண்டு மரு. கிருஷ்ணமூர்த்தியை வரவழைக்க ஏற்பாடுகள் செய்தார். கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் ஓரிரு நாட்கள் தவணை கேட்டு மனு கொடுத்தார். அதாவது, மரு. கிருஷ்ணமூர்த்தியின் முயற்சியும் பலனளிக்காமல் போனால் யானையைச் சுட்டுக் கொன்று விடலாம் என்று அவர்களிடம் பேசி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, மரு. கிருஷ்ணமூர்த்தியை உடனே வரவழைக்கச் செயலில் இறங்கினார். இதற்கிடையில் ஒருநாள் போய் விட்டது. ஆச்சரியகரமாக, யானை எந்தவிதப் பிரச்னையும் செய்யாமல், அதன் இடத்தைச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது. சங்கிலி தளர்ந்து வெகு நீளமாக இருந்ததால், யானையால் சற்று உலாவ முடிந்தது. ஆயினும் யாரும் அனாவசியமாக அதன் பக்கம் போகாமல், தொலைவில் இருந்தவாறே உணவு போன்றவற்றைத் தூக்கி வீசினர். முறையான அனுமதியும் பணி ஆணையும் தரப்பட்டுதானே மரு. கிருஷ்ணமூர்த்தி வர முடியும்? அதுவரை இப்படியே ஓட்டலாம் என்று எண்ணினர்! அதற்கேற்றார்போல் யானையும் பெரிய அமர்க்களத்தில் ஈடுபடவில்லை. ஆனால், அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது.

திருச்சி வனத்துறை கன்சர்வேட்டர் (பாதுகாவலர்) கோவையில் இருந்த பிரதான வன உயிர் பாதுகாவலருக்குத் தகவல் தெரிவித்து மரு. கிருஷ்ணமூர்த்தியை அனுப்ப வேண்டுகோள் விடுத்தார். அவரும் ஒப்புக்கொண்டு மரு. கிருஷ்ணமூர்த்தியை ஸ்ரீரங்கம் செல்லப் பணித்தார். அன்று இருந்த வனத்துறை அமைப்பில், பிரதான வன உயிரின பாதுகாவலர் கோவையில்தான் இருப்பார். இப்போதுபோல ஐந்தாறு முதன்மை வனப் பாதுகாவலர்கள் கிடையாது. சென்னை எல்லோருக்கும் தலைமை இடமும் கிடையாது. மரு. கிருஷ்ணமூர்த்தியும் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் சென்று சேவை செய்துகொண்டிருந்தார். ஜீயரும் அவரைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி எப்படியாவது யானையைக் கொல்லாமல் பிடிக்க வகை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அச்சமயம், மரு. கிருஷ்ணமூர்த்தி காலில் அடிபட்டு நடப்பதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஆயினும், யானைகளின் பால் மட்டற்ற அன்பு கொண்டிருந்த மரு. கிருஷ்ணமூர்த்தி, யானையைக் கொல்வது கடைசி முடிவாக இருக்க வேண்டும் என்று நினைத்து வருவதாக ஒப்புக் கொண்டார்.

(தொடரும்)

பகிர:
சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *