அன்றைய கம்பம் கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியாகத்தான் இருந்தது. காரணம், அங்கு அனைவரும் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களாகவோ, அல்லது உரிமம் இன்றி துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களாகவோ இருந்தனர். வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற செயல்கள் அங்கு சர்வ சாதாரணம். சில சமுதாயத்தினரை வெள்ளையர்கள் அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பானவர்கள் (outlaws) என்று முத்திரை குத்தி இருந்தது. காடுகள் கேட்பாரின்றி வெட்டப்பட்டன; வன விலங்குகள் வேட்டை சர்வ சாதாரணமாக நடைபெற்றது. வனத்துறை அலுவலர்கள், தாணாக்காரர்கள் எல்லாம் பெரும் பயத்துடனேதான் பணி செய்து வந்தனர்.
குத்து, வெட்டு, கொலை என்பதெல்லாம் தினமும் நடக்கும். பெரியகுளத்தில் இருந்து கம்பம் அல்லது குமுளி வரையிலான பெரிய நிலப்பரப்பு அன்று மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. சின்னமனூரைச் சேர்ந்த பெரியவரிடம் பேசும்போது, அதற்கான காரணத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னார். ‘அய்யா, அன்று மக்கள் படித்திருக்கவில்லை; மேலும், சரியான வாழ்வாதாரங்கள் கிடையாது; வெள்ளையர்களின் ஆளும் முறையில் ஒரு சில சமூகத்தினர் புறந்தள்ளி வைக்கப்பட்டனர்; இவற்றுக்கு இடையில் சாதிப் பிரிவினைகள் வேறு. எனவே, இது போன்ற நடவடிக்கைகள் வெகு சாதாரணமாக இருந்தன. தினமும் ஒரு வழக்கு காவல் நிலையத்தில் பதிவாகும். அரசாங்க வேலைக்காரர்கள் தவிர யாரும் திருட்டு பயமின்றி இருக்க இயலாத நிலை; வழிப்பறிக் கொள்ளைகள் சர்வ சாதாரணம். மாலையில், ஏழு மணிக்குப் பின் வீடு திரும்புதல் ஆபத்தான வேலை. இதன் காரணமாகவே பெரும்பாலானோர் போலீஸ் வேலைக்கோ, வனத்துறை வேலைக்கோ வரத் தயங்குவார்கள். காரணம், சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று தெரியாத மக்கள். என்று பிரசங்கம் செய்தார். இந்த இடத்திற்குத்தான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் வந்து சேர்ந்தார் டாக்டர் கே.
அந்தக் காலத்து காடுகளைப் பற்றியும், வன உயிரினங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள, மதுரை ஜில்லா கெஜட்டியரை நான் படித்தேன். ஏனென்றால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாரும் கிடைக்கவில்லை. எண்பது வயதான ஒரே ஒரு கால்நடை மருத்துவர், அதுவும் கம்பத்துக்காரர், கிடைத்தும் பயனில்லை. காரணம், அவர் பெரிய அளவில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்ததனால், டாக்டர் கேவைப் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தக்கால காடுகளைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. அவர் அங்கு வாழ்வது எப்படி ஒவ்வொரு நாளும் பெரும் சவாலாக இருந்தது என்பதை மட்டும் சொன்னார். அலுவலகம் விட்டால் வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று வெளி உலகே தெரியாமல் வாழ்ந்த கதையைத்தான் சொன்னார்.
கெஜட்டியர், பழனி மலையிலும், பெரியகுளத்தில் இருந்து குமுளி வரை படர்ந்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தாவர வளத்தையும், வன உயிரின வளத்தையும், வேட்டையாடிகளையும் ஓரளவு நன்றாகவே விளக்குகிறது. வெள்ளையர்கள் இந்தக் காடுகளை வியாபார ரீதியில் எப்படி அணுகினார்கள், மரங்களை எப்படி வளர்க்கலாம், வளர்த்த மரங்களை எப்படி அறுவடை செய்யலாம் என்றெல்லாம் சிந்தித்தார்கள் என்றும் தெளிவுபடுத்துகிறது. இங்கிலாந்தின் மரத் தேவையை எப்படி இந்தக் காடுகள் பூர்த்தி செய்தன என்றும் அறிய முடிகிறது. முக்கியமான விஷயம், இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பெரும்பாலான காடுகள் அன்று பல நிலச்சுவான்தாரர்களின் கைகளில், பல குட்டி ராஜாக்களின் சொந்த சொத்தாக இருந்தன என்பதுதான். எந்தக் கட்டுப்பாடும் மேற்பார்வையும் இல்லாமல் பல காலங்களாக அவை பராமரிப்பின்றிக் கிடந்ததே வேட்டையாடுதல் அதிகரித்ததற்கும், மற்ற குற்றங்கள் பெருகியதற்கும் மற்றொரு முக்கியக் காரணம்.
இந்தச் சூழலில், டாக்டர் கே. கம்பத்தில் இருந்த ஆடு வளர்ப்புப் பண்ணைக்கு கால்நடை மருத்துவராகப் பணி ஏற்றார். அந்தக் குறுகிய கால (1953-56) வாழ்க்கையைப் பற்றி எழுத, டாக்டர் கிரிஸ் வெம்மரின் குறிப்புகள்தான் எனக்குப் பெரிதும் உதவின. அவருக்கு வயது 80க்கும் மேல். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இருந்தாலும், நானும் ஸ்ரீதரும் இணைந்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு உடனே பதிலளித்தது மட்டுமல்லாமல், அவரும் டாக்டர் கேவைப் பற்றி எழுத உள்ளதாகத் தெரிவித்தார். அவரது பெருந்தன்மையும் ஆர்வமும் நாங்கள் தொடர்பு கொண்ட சிலரிடம் இல்லையே என்று நான் வருத்தப்பட்டது உண்மைதான். இத்தனைக்கும் அவர்கள் டாக்டர் கேவினால் பயனடைந்தவர்கள். அது அடிநாக்கில் தங்கிய கசப்பைப்போல ஒரு வெறுப்பைத் தந்தது. படிப்பும் பதவியும் பொருளும், வாழ்வில் நல்ல மனிதர்களை உருவாக்குவதில்லை என்ற உண்மையை உணர்த்தியது.
வழக்கமாக டாக்டர் கே-வின் நாள் காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் தொடங்கும். அந்த ஆடு வளர்ப்புப் பண்ணை கம்பத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. டாக்டர் கே. சைக்கிளில் போவார். அங்கு உள்ள ஆடுகளுக்கு வைத்தியம் பார்க்க நேரிட்டால் (சிறு காயங்கள், உடல் நலக் குறைவு போன்றவற்றிற்கு), வைத்தியம் பார்ப்பார். அங்குள்ள ஆடுகளின் நலனை மேற்பார்வை செய்வார். இரண்டு மணி நேர உணவு இடைவேளைக்குப் பின் வேறு அலுவலகக் கோப்புகள், பொது மக்களின் கால்நடைகளுக்கு வைத்தியம் என்று பொழுதுபோகும். மாலை ஆறு மணிக்கு இரண்டு மூன்று மெய்க்காவலர்கள் துணையுடன் வீடு திரும்புவார். இல்லையேல் பாதுகாப்பு கிடையாது. ஆயினும், டாக்டர் கே அந்த ஊர் மக்களிடம் எளிதில் நல்லுறவு கொண்டுவிட்டார். காரணம், அவரது கடமை உணர்வு. அன்புடன் பழகும் தன்மை, யாரையும் கடிந்து பேசாத குணம், உதவத் தயங்காத மனம். ஆயினும், தேவையற்ற ரிஸ்க் எடுக்காமல், பிரசவத்திற்கு அவர் மனைவியைப் பிறந்த இடத்திற்கே அனுப்பி வைத்தார்.
யானைகளின்பால் அவர் ஈர்க்கப்பட்டதற்கு இந்தக் கம்பம் வாழ்க்கையும் ஒரு காரணமானது. அன்றைய நடைமுறைப்படி, காட்டில் இறந்த யானைகளைப் பிணக்கூராய்வு செய்த பின்னரே புதைக்க வேண்டும் என்று அரசாங்க ஆணை. யானைகள் பாதுகாப்பு சட்டம் 1876-ன் படி, இறந்த யானைகள், வேட்டையாடப்பட்ட யானைகளைப் பிணக்கூராய்வு செய்ய வேண்டும். அந்தப் பணி கால்நடை மருத்துவரைச் சார்ந்தது என்பதால், டாக்டர் கே அங்கு இறந்த யானைகளைப் பிணக்கூராய்வு செய்ய நேர்ந்தது. இப்படியாக, யானைகளுடன் அவர் தொடர்பு தொடங்கியது. கம்பம் காடுகளில் வண்ணாத்திப் பாறை, சுரங்கனாறு, குதிரையாறு போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம். வேட்டையாடிகள், அந்தப் பகுதிகளில்தான் பெரும்பாலும் யானைகளைத் தந்தத்திற்கு வேட்டையாடுவார்கள். பல நேரங்களில், இறந்த யானையை, வெகு தாமதமாகத்தான் கண்டுபிடிப்பார்கள். காரணம், உயிரைப் பணயம் வைத்து காட்டில் ரோந்து போக எந்த வனத்துறை ஊழியர் முன் வருவார்? டாக்டர் கே சொல்வதுபோல, பல சமயங்களில், காட்டில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்தான் இது போன்ற வன உயிர் இறப்பை துறைக்குத் தெரிவிப்பார்கள். பல நேரங்களில் யாரும் அறியாமல் போவதும் நிகழும். அப்படி வேட்டையாடப்பட்ட யானைகளின் உடல், பெரும்பாலும் அழுகிய நிலையில்தான் இருக்கும். மாமிசப் புழுக்கள் நிறைந்து உடல் முழுவதும் அப்பிக் கிடக்கும். தந்தங்களை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு, உடலை அப்படியே விட்டுச் சென்றிருப்பார்கள். ஜெயமோகனின் யானை டாக்டர் கதை நினைவில் வருகிறதா? அதன் வேர் இங்கேதான்.
இதைப் பற்றி டாக்டர் கே, வெம்மெரிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘பெரும்பாலான இறந்த யானைகளின் உடல்கள் (பிணங்கள்) சேதமில்லாமல் அப்படியேதான் இருக்கும். தந்தங்கள் இருக்கும் கடைவாய் பகுதி தவிர. ஏனெனில், அவை வேட்டையாடப்படுவது தந்தங்களுக்காக மட்டுமே. எத்தனை நாட்களாக அழுகிப் போயிருந்தாலும், நாம் ஒரு நல்ல பிணக்கூராய்வு செய்யலாம். என்ன, அப்பிக் கிடக்கும் மாமிசப்புழுக்களை ஒரு துடைப்பம் கொண்டு பெருக்கித் தள்ளிவிட்ட பின், கிருமிநாசினி தெளித்த பின், கால்நடை மருத்துவர் பணியைத் தொடங்க வேண்டும். அது கால்நடை மருத்துவருக்கு அவரது திறமைக்கான சோதனை. அவருக்கு சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பணி செய்யும் திறனும், மிகுந்த மன உறுதியுடன் கடினமான வயிறும் வேண்டும். வாந்தி வராமல் இருக்கணுமே!
சில சரகர்கள், பணியாட்களுக்கு வாசனை திரவங்கள், ஊதுபத்தி, ஏன், சந்தனக் கட்டைகளைக்கூடத் தருவார்கள், அந்தக் கொடூர நெடியில் இருந்து விடுபட. எப்படி இருந்தாலும், ஒரு சில புழுக்கள் மேலே ஏறி விடும்; நெடி இரண்டு மூன்று நாட்களுக்கு நம் உடலை விட்டு விலகாது!’. இங்கு ஓய்வு பெற்ற டி.எஃப்.ஓ பத்ரசாமியின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. ‘டாக்டர் கே ஒரு சைவ மதத்தினர். மேலும் பிராமணர். ஆனாலும், அவரைப்போலப் பிணக்கூராய்வு செய்த ஒரு கால்நடை மருத்துவரை நான் என் 40 வருட சர்வீசில் பார்த்ததில்லை. அனாயாசமாக, யானையின் பிணத்திற்கு உள்ளே நின்றுகொண்டு முக்கியப் பாகங்களின் பகுதிகளை வெட்டி எடுப்பார். அங்கேயே நின்றுகொண்டு டீயும் பருகுவார். அவரைப் பொறுத்தவரை அது அவர் கடமை. விருப்பு வெறுப்புக்கு இடமில்லை!’ Anglia Productions ஆவணப்படம் யானையின் வயிற்றுக்குள் டாக்டர் கே இருக்கும் காட்சியுடன்தான் தொடங்கும்.
இதுகுறித்து மேலும் விளக்கும் டாக்டர் கே, ‘பிணக்கூராய்வு, வனத்துறையைப் பொறுத்தவரை, இறந்த யானை ஆணா, பெண்ணா என்று அறியவும், ஏதாவது தொற்று நோயால் இறந்ததா என்று அறியவும்தான் செய்யப்படுகிறது. குறிப்பாக ஆந்த்ராக்ஸ் நோய் (சிலர் அடைப்பான் என்றும் சொல்கின்றனர்) உள்ளதா என்பதுதான் பெரும் கவலை. ஏனெனில் அது ஓர் உயிர்க்கொல்லி நோய் மட்டுமல்ல, விரைவில் மற்ற மிருகங்களுக்கும் பரவக் கூடியது. இதற்காக, இறந்த உடலின் சில பாகங்களையும் திசுக்களையும் எடுத்த பின், பிணக்கூராய்வு முடிவடையும்.
ஒரு ஆழமான பிணக்கூராய்வு செய்ய குறைந்த பட்சம் 6 மணி நேரம் தேவை. தந்தங்களை எடுக்க வேண்டும் என்றால், மேலும் 2 மணி நேரம் தேவைப்படும். காரணம், அவற்றை எடுக்க மண்டை ஓட்டை ஒரு குறிப்பிட்ட முறையில் பிளந்து, தந்தங்களை அவற்றின் பற்குழியில் இருந்து சிதையாமல் எடுக்க வேண்டும். வேட்டையாடிகளைப்போல கோடரியால் தாடையில் வெட்டி எடுத்தால், முழுத் தந்தமும் கிடைக்காது. யானையின் மேல் தோலை அந்தப் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களால் கிழித்து ஒரு பாதை உண்டாக்குவார்கள். பின், நான் எனது உபகரணங்களைக் கொண்டு சில உடல் பாகங்களை அறுத்து எடுப்பேன்’ என்கிறார்.
டாக்டர் வெம்மர், அந்தப் பழங்குடி மக்களுக்கு நியாயமான சம்பளம் கிடைத்ததா என்றும், அவர்களுக்கு இந்த வேலைகளைச் செய்ய மது வழங்கப்பட்டதா என்றும் கேட்கும்போது டாக்டர் கேவின் பதில் அவரது பரந்த உள்ளத்தையும், பழங்குடிகளின் பால் அவருக்கிருந்த கரிசனத்தையும் வெளிக்காட்டுகிறது.
‘அவர்களை வரவழைப்பது சரகரின் வேலை. ஒரு சிலர் மது வேண்டும் என்று கேட்கலாம்; ஆனால் நான் அதை ஆதரிப்பதில்லை. தேவைப்பட்டால், யுடிகோலோன், யார்ட்லி போன்ற வாசனைத் திரவியங்களோ அல்லது சந்தனக் கட்டையை எரிக்கவோ பரிந்துரைப்பேன். அவர்கள் பெரும்பாலும் உடலில் விளக்கெண்ணெய்யைத் தடவிக் கொண்ட பின்தான் வேலையைத் தொடங்குவார்கள். கத்தியில் படியும் கொழுப்பை வெங்காயம் கொண்டு அகற்றுவார்கள். அதேபோல, அவர்களுக்கு சம்பளம் சற்று தாராளமாகக் கொடுங்கள் என்று சொல்வதோடு, கொடுக்கிறார்களா என்றும் உறுதிப்படுத்திக் கொள்வேன். ஆயினும், சரகர்களும் வன ஊழியர்களும் அவர்கள் என்ன பிணக்கூராய்வா செய்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புவார்கள். அவர்கள் செய்வது ஒரு நன்றி மறந்த வேலை. என்ன செய்ய? நான் என் வரையில் அவர்களுக்கு நல்ல வகையில் எல்லாம் கிடைக்க முயற்சி செய்வேன். அவர்களை நல்ல முறையில் நடத்துவேன்’ என்று டாக்டர் கே கூறுகிறார். ஆயினும், இன்றும் இந்த சமுதாயத்தில், கடைநிலை ஊழியர்களை நடத்தும் விதம் பெரிதாக மாறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்த நிலை சற்றே முன்னேறி உள்ளது என்றாலும், போதாது.
டாக்டர் கே பிணக்கூராய்வு பற்றி மேலும் கூறுகையில், ‘பெரும்பாலும் நான் பிணக்கூராய்வை நெஞ்சுப் பகுதியில் இருந்துதான் தொடங்குவேன். அதன்பின் வயிற்றுப் பகுதி, குடல், சீகம் அல்லது பெருங்குடல் வாய், பெருங்குடல், பின்னர் கல்லீரல் என செல்வேன். அதன் பின் தோராக்ஸ் பகுதியும் கபாலமும். சில நேரங்களில், இறங்கி, வயிற்றினுள் நுழைய வேண்டி வரும். அதற்கு இந்த முறைப்படி போக இயலாது. சில நேரங்களில், தலையில் இருந்து தொடங்கி ஆசனவாய், பிறப்புறுப்புகள் வரை பிறழ் முறையில்போக வேண்டி வரும். அந்தந்த நேரத்திற்கு ஏற்றாற்போல் நம் தேவையை ஒட்டி பிணக்கூராய்வு நடக்கும். கிட்டத்தட்ட 18 இறந்த யானைகளை நான் கம்பத்தில் இருந்தபோது பிணக்கூராய்வு செய்திருக்கிறேன். அவற்றில் 12க்கும் மேற்பட்டவை வேட்டையாடிகளால் தந்தத்திற்காகக் கொல்லப்பட்டவை. அவற்றில் ஒரே ஒரு யானையின் தந்தத்தை மட்டும் மீட்க இயன்றது. மற்றவை எல்லாம் திருடப்பட்டு விட்டன. இதற்கு முன் இரண்டு சர்க்கஸ் யானைகளுக்கு வைத்தியம் பார்க்க நேர்ந்தது. இந்தப் பிணக்கூராய்வுகள், யானைகளைப் பற்றிய என் அறிவை மேம்படுத்தின. இவற்றுடன் வேறு சில காட்டு விலங்குகளையும் பிணக்கூராய்வு செய்ய நேர்ந்தது. இவ்வாறு பணி சுறுசுறுப்பாக இருந்தாலும், எனக்கு வேலையில் ஒரு திருப்தி இல்லாமல்போனது. காரணம், என்னுடைய மேலதிகாரி ஒரு முசுடு. குறையை மட்டுமே கண்டுபிடிக்கும் இயல்பு கொண்டவராக இருந்தார் என்பதுதான்’ என்கிறார்.
மருத்துவர் கே இவ்வாறு இயங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், வனத்துறையில் வேலை பார்க்க கால்நடை வைத்தியர்கள் தேவை என்ற அறிவிப்பு வெளியானது!
(தொடரும்)