டாக்டர் கே யானைகளின் உடல் கூறாய்வுப் பணியில் நல்ல பயிற்சி பெற்றதற்கு, கம்பத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நிகழ்ந்த யானை வேட்டை முக்கியக் காரணியாக அமைந்தது. அது எந்த அளவில் இருந்தது என்பதை நம்மால் இன்றைய சூழ்நிலையை வைத்து அவதானிக்க முடியாது. காரணம், இன்று சட்டம் ஒழுங்கு பெருமளவில் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் அதிக அளவில் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். வன உயிரின சட்டம் அமல்படுத்தப்படுகிறது. காடுகளும் ஓரளவு நன்கு பாதுகாக்கப்படுகிறது. வேட்டையாடுதல் அறவே கிடையாது என்று சொல்ல முடியாவிட்டாலும், பெருமளவு குறைந்திருப்பதுதான் உண்மை.
அன்றைய நிலைமை குறித்து, டாக்டர் கே, வெம்மரிடம், ‘அன்றிருந்த வேட்டையாடிகள் பயமே அறியாதவர்கள். கொலை, கொள்ளை எதற்கும் அஞ்சாதவர்கள். சிறைக்குப் போவதை ஒரு கௌரவமாக நினைத்தார்கள். ஆனால், கடனைத் திருப்பித் தரவில்லை என்றால் தள்ளி வைத்து விடுவார்கள். நம் வீட்டில் சாப்பிட்டு விட்டால், நமக்கு எந்தத் தொல்லையும் தராமல் விசுவாசமாக இருப்பார்கள்’ என்று கூறுகிறார்.
முன்பே சொன்னதுபோல டாக்டர் கே எல்லோரிடமும் அன்புடன் பழகியதால், அவர்கள் அவரை ஒரு நல்ல மனிதன் என்று ஏற்றுக்கொண்டுவிட்டனர். அதில், ஒச்சா என்ற புகழ் பெற்ற வேட்டையாடி, டாக்டர் கேவின் நண்பர். அவர் எத்தனையோ பெரிய கொம்பன்களை லகுவாக வேட்டையாடியவர். அவரைப் பற்றி டாக்டர் கே, இப்படிச் சொல்கிறார்: ‘ஒச்சாவும் அவர் தம்பியும்தான் யானை வேட்டைக்குப் போவார்கள். தனியாக அலையும் கொம்பன்தான் அவர்கள் இலக்கு. காற்று, யானையின் திசையில் இருந்து இவர்கள் பக்கம் வருமாறு அவர்கள் யானையைப் பின் தொடர்வார்கள். அப்போதுதான், அவர்கள் வாசம் யானைக்குப் போகாது. இப்படி வெகு அமைதியாகப் பின் தொடர்ந்து சென்று, யானையின் அருகில் வந்ததும், இருமுவார்கள் அல்லது தம்பி அதன் வாலைத் தட்டுவான். அப்போது யானை சடாரென்று திரும்பும். அதற்குள் ஒச்சா, துப்பாக்கியைத் தோளில் வைத்திருப்பான். யானை திரும்பியதும், அதன் பக்கவாட்டில் நேராகத் தெரியும் நெற்றிப்பொட்டில் சுட்டு யானையை வீழ்த்துவான். ஒற்றைக் குண்டில் கொம்பன்களை வீழ்த்துவதில் ஒச்சா கில்லாடி. இப்படி இந்த அண்ணன் தம்பி ஜோடி, கிட்டத்தட்ட 80 கொம்பன்களைக் கொன்றிருப்பார்கள்!’
அந்தக் காலகட்டத்தில் வேட்டையாடுவதோ, மரங்களை வெட்டிச் சாய்ப்பதோ பெரிய குற்றமாகப் பார்க்கப்படவில்லை என்பதோடு, சமுதாய அமைப்பும், அதாவது வெள்ளையர்களால் ஒதுக்கப்பட்ட சமுதாய மக்கள் வேறு வழி இல்லாமல் குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலைமைக்கு வித்திட்டது. மற்றொரு தேனிக்காரர் என்னிடம் பேசும்போது சொன்னார்: ‘சார், நானே கிட்டத்தட்ட 7000 ஈட்டி மரங்களையும், மற்ற மரங்களையும் வெட்டியிருக்கிறேன். அன்று வேலையில்லாத் திண்டாட்டத்தால் தினமும் சுமார் 200 பேர் ஊர்வலம்போல காலையில் மரம் வெட்டக் காட்டுக்குப் போவார்கள். மாலை பெரிய தலைக்கட்டாக மரச்சுமையோடு வருவார்கள். ஈட்டி, வேங்கை, மருது, அகர் என கை வைக்காத மரமே இல்லை. யானையை ஒரே குண்டில் சுடும் திறமை பெற்றவர்கள் அன்று இருந்தனர். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் சென்று யானையை வேட்டையாடுவார்கள். யானைக்கு அருகில் சென்று அதன் கவனத்தை ஈர்த்து, சில சமயம் வாலைத் தொட்டு, அது திரும்பியதும் சுடுவார்கள். அன்று பலர் வீடுகளில் யானைத் தந்தங்களை நாம் பார்க்கலாம். யானைகள் பெருமளவில் அன்று இருந்தன. குறிப்பாக, வட்டத்தொட்டி, வண்ணாத்திப் பாறை, குமுளி, கம்பம் மெட்டு, தேவாரம், சுருளி போன்ற இடங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகம். பல வேட்டையாடிகளும் அங்குதான் இருப்பார்கள். வீரப்பனை எல்லாம் மிஞ்சியவர்கள் இவர்கள். யானை வேட்டையை ஒரு கலையாகவே அவர்கள் கற்றிருந்தார்கள்!’ என்கிறார்.
அவர் மேலும் பல விஷயங்களைப் பேசினார். அவை அரசியல், ஜாதி சார்ந்த விஷயங்கள் என்பதால் நான் இங்கு தரவில்லை. எனக்கு வியப்பைத் தந்த விஷயம், டாக்டர் கேயின் கூற்றும், இவரது கூற்றும், யானை வேட்டையைப் பொறுத்தவரை ஒன்றாக இருப்பதுதான். அதுவும் வாலைத் தொடும் சமாசாரம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. வேட்டையாடிகளின் அனுபவ அறிவு, குறிப்பாக வன உயிரினங்களின் நடத்தை பற்றிய அறிவு நம்மை பிரமிக்க வைக்கிறது. என்ன, தவறான வேலைக்கு அது பயன்பட்டது என்று நாம் நினைக்கலாம். அன்றைய சூழலையும் சமுதாய நிலையின் தாக்கத்தையும் நாம் இன்று கணிக்க இயலாது.
இவை கம்பத்தில் மட்டும் நிகழ்ந்தவை அல்ல என்பதை பெரியார் புலிகள் காப்பகச் செய்திக் குறிப்புகள் விளக்குகின்றன. அங்கும் யானை வேட்டை பெருமளவில் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. அதைக் குறைக்க அவர்கள் பல வழிகளை யோசிக்கத் தொடங்கினர். அதில் ஒன்று, விடியல் பாதுகாப்புக் குழு என்ற பெயரில், வேட்டையாடிகளை வனப் பாதுகாவலர்களாக மாற்றிய ஒரு முயற்சி. அந்த நிகழ்வை ‘போச்சர்’ என்ற மலையாளச் சினிமா நன்றாக விளக்குகிறது. அதைப் பற்றிய கட்டுரை கம்பம், தேனி, கேரளத்தின் பெரியார், அதன் சுற்றுப்புறங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிய வைக்கிறது.
வேறு எங்கும் இல்லாத ஒரு திட்டத்தைத் தொடங்கி, ஏன் அவர் குஞ்சுமோனுக்கும் பிறருக்கும் அங்கீகாரம் அளிக்க உதவினார் என்று கேட்டபோது, முன்னாள் வனத்துறை அதிகாரி ராஜு கே பிரான்சிஸ் சொல்கிறார், ‘தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்காலக் குகைக்கு அருகே உள்ள ஒரு மறைவிடத்திலிருந்து குஞ்சுமோன் பிடிபட்டார். மறையூர் காப்பகத்திலிருந்து சந்தன மரங்களை மறைத்து வைக்க உள்ளூர் கும்பல்கள் வழக்கமாகக் குகையைப் பயன்படுத்தினர். அந்த நேரத்தில் அருவி எனும் ஒரு வேட்டைக்காரன் தலைமையில் வனவிலங்கு வேட்டைக்காரர்கள், சந்தன மரக் கடத்தல்காரர்கள் என 23 பேர் அடங்கிய குழு, தமிழ்நாட்டின் கே.ஜி. பட்டி, வருசநாடு, கீழ் கூடலூர் ஆகிய கிராமங்களிலிருந்து செயல்பட்டது. இந்தக் கிராமங்கள் பி.டி.ஆரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தன.
அந்த நாட்களில், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பல வன எல்லை கிராமங்கள், பாரம்பரிய வேட்டைக்காரர்கள், வனவிலங்கு வேட்டைக்காரர்கள், மரம் வேட்டைக்காரர்களின் தாயகமாக இருந்தன. மாவட்டத்தில், குறிப்பாக மறையூர் சந்தன மரக் காப்பகத்தில் வன நிர்வாகத்திற்கு இந்தக் கும்பல்கள் ஒரு குறிப்பிடத்தக்கச் சவாலை முன்வைத்தன. வன அதிகாரிகளைப் போலல்லாமல், இந்தக் கும்பல்கள் தொலைதூரக் காட்டின் ஒவ்வொரு பகுதியையும் நன்கு அறிந்திருந்தனர்.’ வனத்துறையினர் அவர்களைக் கண்காணித்தும் , பல்வேறு நீதிமன்றங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தும்கூட அவர்களால் எப்படித் தொடர்ந்து வனக் கொள்ளையில் ஈடுபடமுடிகிறது என்று ராஜு கேட்டார். இதற்கு அருவியின் பதில் எளிமையாக, அதே சமயம் சிந்தனைக்குரிய வகையில் இருந்தது: ‘வாழ்வாதார நெருக்கடியின் காரணமாகவும், அதிகாரிகளால் எங்கள் குலத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் களங்கம் காரணமாகவும் நாங்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நிலையான மாதாந்திர வருமானத்தை உறுதி செய்வதற்காக வனத்துறை எங்களுக்கு வருமானம் ஈட்டும் வேலைகளை வழங்க முடிந்தால், இந்த நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்துவோம்’ என்றார்.
இப்பொழுது நமக்குப் புரியும், கம்பத்தையும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் ஏன் இத்தனை குற்றங்கள் நிகழ்ந்தன என்று. எதனால் அவற்றைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்று. புரையோடிப் போன சமூக வழக்கங்களும், ஆட்சியாளர்களின் புறக்கணிப்பும் (நிலைமையின் முக்கியக் காரணம் தெரியாமல்), சட்ட ஒழுங்கைப் பராமரிப்பவர்களின் பரிதாப நிலையும், அன்றைய அரசியல் களமும் இதற்குப் பெரிதும் உதவின என்று தோன்றுகின்றது. இதன் இடையில், ஒரு கால்நடை மருத்துவர் எதற்காக இந்தச் சூழலில் பணி புரிய வேண்டும்? அதுவும் மாமியார்போல ஒரு மேலதிகாரியிடம்? பணிச் சூழல் சுகமாக இருந்தால், யாருக்கும் மாற்றம் தேவைப்படாது. மேலும், புதிய வனத்துறை பணியில் சற்றே கூடுதல் படி (மலை வாழ் படி, அதாவது அலவன்ஸ்) கிடைக்கும். இதன் விளைவு, டாக்டர் கே வனத்துறைப் பணிக்குச் செல்ல முடிவு செய்தார். உடனே வனத்துறை பணியில் சேர மனுவை அனுப்பினார். பாங்காடு என்று சத்தியமங்கலம் மக்கள் சொல்வதுபோல (அடர்ந்த காட்டை குறிக்கும் சொலவடை) மகா மோசமான (நகர மக்கள் பார்வையில்) பாங்காடாகிய டாப்ஸ்லிப்புக்குச் செல்லத் துணிந்தார். அவர் மட்டுமே இந்த வேலைக்குச் செல்ல மனு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின், யார் இதுபோன்ற காட்டில் வேலை செய்ய விரும்பி வருவார்கள்? அரசாங்கமும் மிக்க மகிழ்ச்சியுடன் உடனே அவரை டாப்ஸ்லிப்பில் பணி அமர்த்தியது. பலிகடா ஒன்று தானே வந்தது என்று. இல்லையென்றால், ஆண்டுக்கணக்கில் அல்லவா காத்திருக்க வேண்டும்?
எப்படி கல்லம்பாளையம் அல்லது அல்லி மாயாருக்கு ஆசிரியர்கள் போகத் தயங்குகிறார்களோ அதுபோல. இப்படியாக, 1957 முதல் 61 வரை டாக்டர் கேவின் வாழ்க்கை, டாப்ஸ்லிப்பில் மிக மகிழ்ச்சியாகக் கழிந்தது. என்ன, நாகரீக வாழ்க்கையை விட்டுத் தள்ளி இருக்க நேர்ந்தது.
அது மாநிலங்கள் மறுசீரமைப்பு நடந்து கொண்டிருந்த நேரம். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு,ஒவ்வொரு துறையும் சீரமைக்கப்பட்டது. டாப்ஸ்லிப்பில் அன்று இரண்டு கால்நடை மருத்துவர்கள், ஒரு தலைமை கால்நடை மருத்துவர் என்று மூவர் இருந்தனர். தலைமை கால்நடை மருத்துவர் கள்ளிக்கோட்டில் இருந்தார். அவ்வப்பொழுது வருவார். ஒரு கால்நடை மருத்துவர் கோவையில் இருப்பார். மற்றவர் டாப்ஸ்லிப்பில் இருப்பார். மறுசீரமைப்பு செய்யும்போது, 176 யானைகள் இருந்த டாப்ஸ்லிப் முகாமில் வெறும் 26 யானைகள் மட்டுமே தக்க வைக்கப்பட்டன. மற்றவை கேரளா, கர்நாடகா, குடகு போன்ற பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டன. 26 யானைகளுக்கு எதற்கு இரண்டு கால்நடை மருத்துவர்கள் என்று யோசித்த வனத்துறை அதிகாரிகள், அதை ஒன்றாகக் குறைத்தனர். டாக்டர் கோபாலன்தான் அங்கிருந்த பழைய கால்நடை அதிகாரி. அவர் பணி மூப்புக்கு சற்றேறக்குறைய இரண்டு வருடங்களே இருந்ததால், அவரைத் தக்க வைத்துக்கொண்டு, டாக்டர் கேவை கால்நடை துறைக்கே மாற்ற முடிவு செய்தனர். அப்படியாக, 1961-ல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார் டாக்டர் கே.
அது, ஒரு மூன்று வருடங்கள் தொடர்ந்தது. கால்நடைப் பல்கலைக்கழக முதல்வர் இவரை மேற்படிப்பிற்கு அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தும், சில நடைமுறை சிக்கலால் அது தடைப்பட்டுப்போனது. அதற்குப் பதிலாக, உத்திரபிரதேசத்தில் உள்ள முக்டெஷ்வரில் பட்டய மேல்படிப்புக்கு அனுப்பப்பட்டார். அந்தப் படிப்பு முடிந்து கல்லூரிக்குத் திரும்பாமல், ஆட்டுப் பண்ணைக்கு அனுப்பப்பட்டார். அதிலும், கவலையின்றிப் பணிபுரிந்தார். அப்போது ஆண்டு 1966.
சாதாரணமாக, 1963-ல் டாக்டர் கோபாலன் பணி மூப்பு அடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, 1966-ம் ஆண்டு வரை அதை நீட்டித்தார். இதன் விளைவு, டாக்டர் கேயின் டாப்ஸ்லிப் பணி நியமனம் தாமதமானது. ஏனெனில், கோபாலனுக்குப் பின் இவர்தான் என்று வனத்துறையில் முடிவு செய்திருந்தனர். மேலும், டாக்டர் கோபாலனின் உயர் பதவி டாக்டர் கேவுக்கு வர நல்ல வாய்ப்பும் இருந்தது. அதுவும் தள்ளிப்போனது. வெம்மரிடம் பேசும்போது, டாக்டர் கே இது பற்றி மனம் வெதும்பிச் சொல்கிறார், ’எனக்குப் பதவி உயர்வு ஏமாற்றப்பட்டதால் வனத்துறைக்குத் திரும்பிச் செல்ல ஒருபோதும் விரும்பவில்லை. எனக்கு அது 1963-ல் கிடைத்திருக்க வேண்டும். அப்படிக் கிடைத்திருந்தால்…’ என்று சொல்லும்போதே டாக்டர் கே பேசிய ஒலிநாடா முடிந்துவிடுகிறது. இந்த ஒலி நாடா கிரிஸ் வெம்மரால் 1994-ம் ஆண்டு கொலம்போவில் எடுக்கப்பட்டது. பின்னர் வேறு வழியில்லாமல், டாக்டர் கோபாலன் 1966-ல் பணிமூப்பு பெற்றதும், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி டாக்டர் கேவை மீண்டும் கோவைக்கு மாற்றினர். இதுகுறித்து டாக்டர் கேவின் வாக்குகளில், ‘திரு.கோபாலன் பதவிக் காலத்தின் கடைசி ஆண்டில் இருந்தபோது, அவருக்கு இனி நீட்டிப்பு வழங்க முடியாது என்பதால் கோவையிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். எனவே, எனது விருப்பத்தைக்கூட கேட்காமல், மரியாதையின்றி மாற்றப்பட்டேன். அவர்கள் என்னை வனத்துறையில் தள்ளிவிட்டனர். நானாகச் சேரவில்லை. ஏனென்றால், அந்த நாட்களில் நீங்கள் எந்தக் குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட செல்வாக்கையும் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே நீங்கள் பணியமர்த்தப்பட்டால் நீங்கள் முறையிடலாம், ஆனால் கிளர்ச்சி செய்ய முடியாது. அதனால் நீங்கள் பணியமர்த்தப்பட்ட பகுதியில்தான் சேர முடியும். அதனால் நான் சென்று சேர்ந்தேன், கால்நடை இயக்குநரும் மற்றொருவரும் ‘நீங்கள் ஏன் வனத்துறைக்குச் சென்றீர்கள்?’ ‘நீங்கள் மட்டும் பணியமர்த்தப்பட்டீர்கள்?’ என்று கேட்டனர். மேலும் அவர்கள் என்னிடம், ’நீங்கள் துறைக்குத் திரும்ப வர வேண்டியதில்லை. நீங்கள் எங்கு மாற்றப்பட்டாலும் பிழைத்துக் கொள்வீர்கள்’ என்று கூறினார். அதற்கு நான், ‘ஐயா, நான் திரும்பி வரமாட்டேன். உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொண்டேன்.’ என்று சொன்னேன். எனவே 1966 முதல் ’87 வரை தொடர்ந்து 21 ஆண்டுகள் பணியாற்றினேன். எனவே இப்போது முன்பு பணியாற்றியதையும் சேர்த்து மொத்தம் சுமார் 26 ஆண்டுகள் சேவையில், எனது முன்னோடி டாக்டர் கோபாலனின் சாதனையை முறியடித்தேன் (அவர் 24 ஆண்டுகள் பணியாற்றினார்). இது மிக நீண்ட சேவை காலம். எனக்கு வேலையில் திருப்தி இருந்தது. எந்த வருத்தமும் இல்லை. மேலும் எனக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு, அதன் பின் கிடைத்தது. எப்போது வேண்டுமானாலும் கால்நடைத் துறையில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு வரவிருந்தால், வனத்துறையில் (அதாவது சிசி குறிப்பிட்டதுபோல), என் பதவியும் அந்த நிலைக்குச் செல்லும். நான் ஓர் இணை இயக்குநராக ஓய்வு பெற்றேன்’ என்கிறார்.
இப்படியாக, பெரும் போராட்டமாக டாக்டர் கேயின் இரண்டாவது இன்னிங்ஸ், கோவையில் 1966-ல் மீண்டும் தொடங்கியது. அங்கிருந்து அவர் டாப்ஸ்லிப், முதுமலை முகாம்களைக் கவனித்தார். அவரே சொன்னதுபோல, நீண்ட காலம் வனத்துறையில் பணியாற்றிய கால்நடை மருத்துவர் என்ற சாதனையையும் செய்தார். விரும்பி அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார் என்று இல்லா விட்டாலும், காலமும் யானைகளும் பாகன்களும் காவடிகளும், அந்தப் பழங்குடி மக்களும் காடும் அவரை மெல்ல மெல்லச் செதுக்கி ஒரு பிரமிக்கத்தக்க ஆளுமையாக உருவாக்கியது என்பது நிதர்சனம். அந்த மனப் பக்குவம் இல்லையென்றால், அவர் இப்படி ஒரு போற்றத்தக்க வாழ்க்கையை வாழ்ந்திருக்க இயலாது.
‘Remember that sometimes not getting what you want is a wonderful stroke of luck. ’ – Dalai Lama.
அதுதான் டாக்டர் கேயின் வாழ்விலும் நிகழ்ந்தது. அவரது கால்நடைத் துறை அதிகாரி சொன்னதுபோல, காட்டில் அவர் பிழைத்துக்கொண்டது மட்டுமல்ல, பிரகாசிக்கவும் செய்தார். இன்று நாம் இத்தனை தூரம் அவரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், கிடைப்பதை எப்படி நல்ல வாய்ப்பாக மாற்றுவது என்கிற வித்தையை அறிந்திருக்க வேண்டும். அதில் டாக்டர் கே பரிமளித்தார் என்றே சொல்ல வேண்டும்.
(தொடரும்)