புலர் காலைப் பொழுது கடந்து, கதிரவனின் கிரணங்கள் மெல்ல உல்லந்தி சரகக் காடுகளையும் டாப்ஸ்லிப்பைச் சுற்றியுள்ள காடுகளையும் பொன்வண்ணமாக்கிக் கொண்டிருந்தது. நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும் அவனி (காட்டுப்பலா), பிள்ளை மருது, மருதம் மற்றும் வேங்கை மர உச்சியில் பொன் வெயில் ஜாலங்களைக் காட்டிக் கொண்டிருந்தது. அடர்த்தி குறைந்த மேகத்திரள்கள் சில, ஓய்வு விடுதியின் முன் உள்ள மேட்டில் தவழ்ந்து சென்றன. பிள்ளை மருதின் செந்நிற பழங்கள் அந்த மஞ்சள் வெயிலில் தீப்பிழம்புகள்போலத் தகதகத்தன. காட்டின் ஊடே சில்லென்ற மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. இயற்கையின் தூரிகை கொண்டு தீட்டிய இந்த ஓவியம் மனதைக் கொள்ளை கொண்டது. நேரம், காலம் இரண்டும் அப்படியே செயலற்று நின்றன. தூரத்தில் மெல்லிய ‘க்ளங்க், க்ளங்க்’ என்ற மணியோசை கேட்டது. நிதான நடையில் வரகலையாற்றில் இருந்து புறப்பட்ட ஜாலும், சரோஜாவும் டாப்ஸ்லிப்பை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தன. அந்த அதிகாலையில், அந்த இரண்டு யானைகளும் இத்தகைய ஒரு சூழலில் மணி ஓசையுடன் அன்ன நடையில் வருவதைப் பார்க்க கண் கோடி வேண்டும். அந்த அமானுஷ்ய அமைதி நிலவும் காட்டின் நடுவேதான் டாக்டர் கேயின் குடியிருப்பு இருந்தது.
குடியிருப்பின் பின்புறம், அடர்ந்த காடு தொடங்கி விடும். பல நேரங்களில், வன விலங்குகள் அந்தக் காட்டில் இருந்து எதிரே உள்ள காட்டிற்கு வீட்டை அடுத்து கடந்துசெல்லும். எதிர்புறம் உள்ள ஓய்வு விடுதியின் பின்னும் காடுதான். இந்தச் சூழலுடன் அந்தப் பகுதியில், அந்தக் காலத்தில், மின் வசதி கிடையாது. என்ன, அந்தக் குடியிருப்பை ஒட்டி ஒரு சரக அலுவலகமும், மருந்துகள் மற்றும் பொருட்களை வைக்க ஒரு கிடங்கும், ஒரு பழங்குடி தொடக்கப் பள்ளியும் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் அங்கு ஆள் நடமாட்டம் இருக்காது. காலை 8 மணிக்கு மேல் பள்ளி தொடங்கும், ஒரு 20, 25 பிள்ளைகளுடன். டாக்டர் கேயின் பிள்ளைகளும் (ஸ்ரீதரும் அவரது மூத்த சகோதரியும்) அங்குதான் தொடக்கக் கல்வி பயின்றனர். பள்ளியும் மதியத்துடன் முடிந்து விடும். பின்னர், ஒரே அமைதிதான். அதிகாலையில் பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் பேருந்து இன்னும் வரவில்லை.
யானைகள் தங்கள் மாவுத்தர்களுடன் வரகலையாற்றில் இருந்து டாப்ஸ்லிப்பிற்கு வந்து, டாப்சிலிப்பில் அமைந்துள்ள கடையில் இருந்து அந்தப் பழங்குடி மக்களுக்குத் தேவையான ரேஷன் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு பின்னர் வரகலையாறு செல்லும். பாகன் களுக்கு இதைவிட வசதியான போக்குவரத்து கிடைக்காது. ஏனெனில், பேருந்து பரம்பிக்குளம் செல்லும் சாலையில்தான் போகும். அந்தச் சாலையில் இருந்து மேலும் ஒரு 18 கி.மீ. உள்ளே போனால்தான் வரகலையாற்றை அடைய முடியும். யானைக் காட்டில் அத்தனை தூரம் நடப்பதைவிட, யானையின் மேலேறி வருவது நல்லதுதானே. அதிலும், ஜாலும் சரோஜாவும் தன்மையான, சாந்த சுபாவம் கொண்ட யானைகள். அவற்றின் பாகன்களான பழனியும் ராமசாமியும் தேர்ந்த மாவுத்தர்கள். அவர்களுக்கு யானைகளோடு வருவது ஒரு பிரச்னை இல்லை. நிலைமை இன்றும் பெரிதாக மாறவில்லை. வரகலையாறு போக வேண்டும் என்றால், கோழிக்கமுத்தி சென்று அங்கிருந்து ஒரு 16 கி.மீ. நடந்து செல்லலாம். அல்லது, பேருந்து செல்லும் வழியில் சோதனைச் சாவடி அருகே இறங்கி 18 கி.மீ. நடக்கலாம். அடர்ந்த காட்டில் நடப்பது அவர்களுக்கு பெரிய காரியம் இல்லை என்றாலும், அதில் உள்ள இடர்பாடுகள் மற்றும் ஆபத்து குறித்து நாம் சொல்ல வேண்டியதில்லை. எவ்வித விபத்தும் நேரலாம்.
விலங்குகளால் தொல்லை அல்லது இழப்பு நேரலாம். கொண்டு செல்லும் பொருட்களுக்கு சேதம் நேரலாம். ஆயினும், இன்றும்கூட வராகலையாறு போக, பழங்குடிகளுக்கு இதுதான் வழி. நாங்கள் பாகன்களைச் சந்திக்கச் சென்றபோது, பழனிசாமியும் அவர் மனைவியும் கோழிக்கமுத்தி வரை வண்டியில் வந்து, பின் நடந்துதான் வரகலையாறு சென்றனர். எனக்கு அது உவப்பானதாக இல்லை. என்றாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. காரணம், அதிகாரம் என் கையில் இல்லையே. பழனிசாமி சொன்னது அதை விட கஷ்டமாக இருந்தது. ‘இன்னைக்கு நீங்க கொண்டு போய் விடுவீங்க. நாளைக்கு? எங்களுக்கு இது பழகி போச்சு. மனுஷனை விட யானையும் புலியும் கரடியும் நல்லவங்க சார்’ என்று கூறி விட்டு நடையைக் கட்டினர். இருவர் தலையிலும் சுமையுடன். சுதந்திரத்தின் விலை என்ன என்று எனக்கு விளங்கவில்லை.


அந்த இரு யானைகள் டாக்டர் கேயின் தங்குமிடம் எதிரே நின்றன. ஜால் யானையின் பாகன் பழனியும், சரோஜா யானையின் பாகன் ராமசாமியும், யானைகளின் மேலிருந்து இறங்கினர். ‘டேய், யானை, இங்கேயே சுற்றிக்கொண்டு இருங்கள். சாமான், சட்டு எல்லாம் வாங்கிக் கொண்டு வருகிறோம்’ என்று யானைகளுக்கு சொல்லி விட்டு அவர்கள் இருவரும், ரேஷன் கடை நோக்கி சென்றனர். ஒரு சிறிய புல்வெளி மேட்டில் டாக்டர் கேயின் குடியிருப்பு. அதனைச் சுற்றிலும் காடு. கீழ்புறம் பரம்பிக்குளம் செல்லும் தார் சாலை. சூரல் மரங்களும், கல் வாழை மரங்களும் நிறைந்த காட்டில், மேய்வதற்கு என்ன குறை? நிதானமாக அவை சுற்றுமுற்றும் மேய்ந்து விட்டு, டாக்டர் கேயின் வீட்டருகே வந்து சேரும். யானைகளின் மணி ஓசையும், செல்லப் பிளிறலும், வீட்டின் உள்ளே கேட்கும். கதவைத் திறந்து கொண்டு மைதிலியும் ஸ்ரீதரும் (டாக்டர் கேயின் குழந்தைகள்) வெளியே ஓடி வருவர். ஆஜானுபாகுவான அந்த யானைகளைப் பார்த்து அவர்களுக்கு எந்தப் பயமும் கிடையாது. ‘ஏய், ஜால், எப்படி இருக்கே?’ என்று கேட்டவாறு மைதிலி அதன் தும்பிக்கையைப் பிடித்து தொங்குவாள். ஸ்ரீதர் சரோஜாவின் தும்பிக்கையைப் பிடித்து தொங்குவான் அந்த யானைகளும், இவர்களுடன் பாசமுடன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து விளையாடும். பின்னர், அவற்றின் கால்களுக்கிடையில் புகுந்து அவர்கள் ஓடிப் பிடித்து விளையாடுவார்கள். விளையாட சரியான நண்பர்கள் இல்லாத இடத்தில், யானைகளோடு விளையாடிய பெருமை அனேகமாக இவர்களுக்குத்தான் இருக்கும் என நினைக்கிறேன். பாகன்கள் திரும்பி வரும் வரை இந்தக் களியாட்டங்கள் தொடரும். அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்கள் தவிர, ஊர் கதை பேச, உறவினர்களைப் பார்க்க என்று பல வேலைகள் இருக்கும். அதுபோக, வரும் முதல் பேருந்தில் யாராவது உறவினர்கள், நண்பர்கள் அல்லது பொருட்கள் வரலாம். அதற்காக நிற்க வேண்டி வரும். இந்தப் பழங்குடியின மக்களின் வெளியுலகத் தொடர்பு அன்று இந்த அரசுப் பேருந்து மட்டுமே. அவர்களின் சிறந்த குட்டி தெய்வங்கள், அந்தப் பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும்தான். இன்றும் தெங்குமரஹடா கிராம மக்கள் நன்கு போற்றிப் பாதுகாப்பது அங்கு வரும் ஒற்றைப் பேருந்தின் ஓட்டுனரையும் நடத்துனரையும்தான். ஆங்கிலத்தில் லைப் லைன் என்று சொல்வார்கள். அது இவர்கள்தான் இந்த மக்களுக்கு.
இந்தக் களியாட்டங்கள் முடிந்ததும் யானைகள் மெதுவாக வீட்டின் உள்ளே பார்க்கும். சரஸ்வதி அம்மா (டாக்டர் கேயின் மனைவி) கண்ணில் படுகிறார்களா என்று. அவரைக் காணவில்லை என்றால் மெல்ல நடந்து, பின்புறம் உள்ள சமையல்கட்டின் ஜன்னலைத் தூக்கிப் பார்க்கும். அந்த ஜன்னல்கள், கீழிருந்து மேலாக தூக்கி நிறுத்தும் வகையில் அமைந்திருக்கும். ஏனென்றால், காட்டின் விளிம்பில் இருப்பதால் எதுவும் உள்ளே வந்து விடாமல் இருக்குமாறு அமைக்கப்பட்டவை. டாக்டர் கே 1957 முதல் 1960 வரை உதவி கால்நடை ஆய்வாளராக இருந்த நேரம் அது. இந்த யானைகளை முகாமில் பார்த்துப் பழகி விட்டதால், அவை இது டாக்டர் கேயின் வீடு என்று ஒரு சில மாதங்களிலேயே உணர்ந்ததோடு, அந்த வீட்டு மனிதர்களுடனும் நன்கு பரிச்சயமாகிவிட்டன. சரஸ்வதி அம்மாவின் இடம் சமையல் கட்டு என்றும், சமையல் முடிந்து விட்டால் வீட்டின் மற்ற இடங்களில் இருப்பார் என்றும் யானைகளுக்கு நன்றாகத் தெரியும். அந்தக் குடியிருப்பு என்ன மாளிகையா, யார் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியாமல்போக? ஒரு சாதாரண இரண்டு கட்டு ஓட்டு வீடு. யானை ஜன்னலைத் திறந்து ஒரு சின்ன ஒலியை எழுப்பும். சரஸ்வதி அம்மா, ‘என்ன, இங்க வந்துட்டே? வேற வேலையில்லை உனக்கு’ என்று அதட்டுவார்! ‘ம்யூம்’ என்று சரோஜா முனகும். சரஸ்வதி அம்மா உடனே ஒரு வெல்லக்கட்டி அல்லது ஏதோ ஒரு தின்பண்டத்தை அதன் வாயில் இடுவார். ஜாலும் வந்து தன் பங்கை வாங்கிக் கொண்டு போகும். ஏதேனும் தின்பண்டம் வாங்காமல் அவை போகாது! சில நேரங்களில் ஒன்றும் சட்டெனக் கிடைக்காது. ‘இன்னைக்கு ஒன்னும் இல்ல, போங்கோ’ என்பார். அவை நகராது. டாக்டர் கே இருந்தால், ‘எதுவும் இல்லைன்னா, கொஞ்சம் சாதமாவது போட்டு அனுப்பு’ என்பார். ‘ரசமும் சாதமும்தான் ரெடி ஆயிருக்கு’ என்பார் சரஸ்வதி. ‘அதையே குடு’ என்பார் டாக்டர் கே. சரஸ்வதி அம்மா இரண்டு கவளங்கள் ரசம் சாதத்தைக் கலந்து ஜாலுக்கும் சரோஜாவுக்கும் கொடுத்த பின்தான் அவை அங்கிருந்து நகரும். இப்படியாக ரசம் சாதம் சாப்பிட்ட யானைகள் டாப்சிலிப்பில்தான் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதில் நாம் உணர வேண்டியது, எப்படி ஒரு பேருயிர் (யானை) குழந்தைபோல அன்பிற்குக் கட்டுப்பட்டது என்பதோடு, நுண்ணறிவால் விஷயங்களைப் புரிந்து கொண்டு செயல்பட்டன என்பதுதான். முகாம் யானைகள்தான் என்றாலும், அவை வளர்ப்புப் பிராணிகளை மிஞ்சும் அளவிற்குச் செல்லம் கொஞ்சின என்பதைச் சற்று தயக்கத்துடன்தான் நாம் ஒத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. டாக்டர் கேயின் குடும்பம் டாப்ஸ்லிப்பிற்கு வந்தபோது அங்கு பரம்பிக்குளம் மற்றும் ஆழியார் திட்டப் பணிகள் நடந்துகொண்டிருந்த நேரம். கிட்டத்தட்ட முடிவுறும் தறுவாய். அதனால், அங்கு பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் குடும்பங்கள் சில இருந்தன. திரு.கண்ணன் என்பவர் அங்கு தலைமைப் பொறியாளராக இருந்தார். இவர் டாக்டர் கேயின் நெருங்கிய நண்பர். அப்போது மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்கு அந்தப் பொறியாளர்கள், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம் போர்டு, செஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இவர்களுடன், டாக்டர் கேவும் எல்லா விளையாட்டிலும் பங்கேற்று ஆடுவார். மேலும் டாக்டர் கே விளையாட்டு போட்டிகளில் திறமை உள்ளவராக இருந்ததால், அவர் எல்லா போட்டிகளிலும் சோபிக்க முடிந்தது. இதன் மூலம் அவருடைய நட்பு வட்டம் அதிகரித்தது. முன்பே அவரது விளையாட்டுத் திறமைகளை நாம் பார்த்தோம். மேற்கு நோக்கி பாயும் பரம்பிக்குளம் மற்றும் ஆழியார் ஆறுகளை மலைகளின் வழியாகத் தோண்டப்பட்ட சுரங்கப்பாதைகள் மூலம் இணைக்கும் ‘பரம்பிக்குளம் ஆழியார் திட்டம்’, நாட்டின் மிகச் சிறந்த நீர் பாசன திட்டத்தில் ஒன்றாகும். இதன் மூலம் பரம்பிக்குளம் நீர் மின்சாரம் மற்றும் விவசாயத்திற்காக ஆழியாருடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்குப் பயனளிக்கும் வகையில் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்டது. எம்.எஸ். கணான் மற்றும் டங்கர்லி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பொறியியல் அற்புதங்களில் ஒன்று இந்தத் திட்டம். இத்திட்டங்கள், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தொடங்கப்பட்டவை. அதன் பின் வீணான அரசியல் சிக்கல்களில் சிக்கி, மாநிலங்களுக்கிடையிலான உறவு மோசமானது என்பது வேறு கதை! காரணம், அதிகாரமும் பங்கீடும் இரு மாநிலங்களுக்கிடையே பெரும் தலைவலியாகிப் போனதுதான். அது நமக்குத் தேவையில்லை என்றாலும், நடைமுறையில் சில நேரங்களில் அதையும் பேச வேண்டி இருக்கிறது.
டாக்டர் கே, டாப் ஸ்லிப்பிற்கு வந்தபோது அவருடைய முதல் குழந்தை மைதிலிக்கு 3 வயது. ஸ்ரீதருக்கு 1 வயது. அவர்களது பள்ளி படிப்பு முதன் முதலில் டாப் ஸ்லிப்பில்தான் தொடங்கியது. டாப் ஸ்லிப்பில் உள்ள பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பள்ளிக் காலங்களில் அவர்களது ஒரே நல்ல தோழன் மேற்கூறிய யானைகள்தான். டாப்ஸ்லிப்பிற்கு வந்த பிறகு 1958-ல் மேலும் ஒரு பெண் பிறந்தாள். அவளது அடுத்த சகோதரி 1960-ம் ஆண்டு அந்தக் குடியிருந்த வீட்டிலேயே பிறந்தாள். அதற்காகவே அவளுக்கு வனஜா என்ற பெயரைச் சூட்டினார் டாக்டர் கே. மற்ற பழங்குடியினக் குழந்தைகளோடு இவர்களும் சேர்ந்து படித்தனர். என்ன, நகரங்களில் உள்ளதுபோல இங்கு வசதிகள் கிடையாது; ஆசிரியர்களும் எல்லா நாட்களும் வர மாட்டர்கள் (வர இயலாது); அங்கே இருக்கவும் இயலாது. இப்படிப் பல இன்னல்களுக்கு இடையே அவர்களது இளம் பிராய படிப்பு நிகழ்ந்தது. அந்த நாட்களில் அந்த இடத்தைச் சுற்றி மின்சாரம் மற்றும் சீரான போக்குவரத்து வசதி இல்லை. ஒவ்வொரு காலையிலும் டாக்டர் கே டாப் ஸ்லிப்பில் இருந்து வரகலையாறு வரை நடந்து சென்று விலங்குகளை அவற்றின் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.
வரகலையாறு யானைகள் முகாம் துணக்கடவு மலைத்தொடரில், டாப் ஸ்லிப்பில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இடம். அந்த நாட்களில் டாக்டர் கேவுக்கு வண்டி கிடையாது. வெள்ளையர்களின் முறைப்படி டி.எப்.ஓவுக்கு மட்டும்தான் வண்டி. கவலையின்றி, டாக்டர் கே காட்டு வழியில் பழங்குடி மக்கள் துணையுடன் நடந்து சென்று முகாமை அடைவார். அந்த முகாமை அடுத்த மலைத்தொடர்தான் துணக்கடவு. கேரளாவின் பரம்பிக்குளம் பகுதியில் இருக்கும் இடம். சோலைக்காடுகள் நிறைந்த பகுதி. சில நேரங்களில், மேலே சொன்னது போல யானைகளோடு பாகன்கள் வந்தால் இவரும் அவர்களோடு போவார்.
டாக்டர் கேவின் குடும்பம் டாப் ஸ்லிப்பிற்கு வந்த நேரத்தில் பல அசௌகரியங்கள் இருந்தன. அங்கு இருந்த நான்கு வருடங்களில் மின்சார வசதி இல்லை. அவர்கள் லாந்தர் விளக்கை மட்டுமே நம்பி இருந்தனர். வீட்டு சமையல் அறை வீட்டின் பின்புறம் அமைந்து இருந்தது. இதனால், சரஸ்வதி அம்மா தனது எல்லா சமையல் வேலைகளையும் மாலை 5 மணிக்குள் முடித்து விட்டு வீட்டின் முன்புறம் உள்ள அறைக்கு வந்து விடுவார்கள். பல இரவுகள் அவரும் குழந்தைகளும் தனியே இருக்க நேரிடும். காரணம், டாக்டர் கே சில சிரமமான மருத்துவ சிகிச்சைகளை யானைகளுக்குச் செய்ய வேண்டி வரும். அல்லது அருகில் இருந்து மேற்பார்வை செய்ய வேண்டி வரும். அல்லது நேரம் கடந்து விடும். இரவில் அத்தனை தூரம் காட்டில் வருவது உசிதமில்லை என்று யானைகள் முகாமிலேயே தங்க வேண்டி வரும். அப்போதெல்லாம், சரஸ்வதி அம்மா மனம் கலங்காமல், குழந்தைகளுடன் இருட்டில் லாந்தர் விளக்குடன் விடியும் வரை காத்திருப்பார். பெரிய நகரத்தில் பிறந்து காட்டையே பார்த்திராத ஒரு பெண்மணி, இந்தப் பாங்காட்டில் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்ததோடு, ஒரு பெரிய புகார் ஏதுமில்லாமல் இருந்ததும், மன உளைச்சல் இன்றி துணிவுடன் இருந்ததும் ஒரு சாதனைதான். இதுவும் டாக்டர் கேயின் சாதனைகளுக்கு ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், வீட்டைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், பணியைச் செவ்வனே அவர் செய்ய இது நிச்சயம் உதவி இருக்கும். அவரது ஒருமித்த சிந்தனை யானைகளின் நலம் குறித்து சிதறாமல் இருக்க சரஸ்வதி அம்மாவின் இந்தப் பண்பு பெரிதும் உதவி இருக்கும். மேலும், தன் துணைவி தனியே எதையும் சமாளித்து விடுவார் என்பதே ஆடவருக்கு, குறிப்பாகக் கணவனுக்கு ஒரு பெரிய தெம்பை அளிக்கும். மற்ற கவலைகளை தராது.
(தொடரும்)