டாக்டர் கேயின் நாள் அதிகாலையிலேயே தொடங்கி விடும். காரணம், டாப்ஸ்லிப்பில் இருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ. தொலைவில் உள்ள வரகலையாறு முகாமிற்கு அந்தக் காலத்தில் நடந்துதான் செல்ல வேண்டும். சுமார் ஆறு மணியளவில் புறப்பட்டால்தான் பத்து மணிக்குள் போக முடியும். அப்போதுதான் பாகன்கள் யானைகளைக் மேய்ச்சலில் இருந்து மீட்டு, குளிக்க வைத்து, முகாமிற்குக் கொண்டு வந்திருப்பார்கள். அப்போது தொடங்கினால், மதியம் இரண்டு அல்லது மூன்று மணிக்குள் யானைகளைக் கவனித்துவிட்டு, மீண்டும் டாப்ஸ்லிப்பிற்குத் திரும்பச் சரியாக இருக்கும். இல்லையென்றால், மாலை வெகு நேரமாகிவிட்ட திரும்ப நேரிடும். அதுவும் நடையில். இது பாதுகாப்பல்ல.
டாக்டர் கேயின் மற்றொரு வித்தியாசமான குணம், எந்த வேலைக்குப் போவதானாலும் குளித்து, பூஜை செய்த பிறகுதான் புறப்படுவார். அது, பிணக்கூறாய்வாக இருந்தாலும் சரி. இதற்கென்றே அவரது கைப்பையில் சின்ன விநாயகர் சிலை இருக்கும். சட்டென எடுத்து பூஜை செய்வார்.
கிரிஸ் வெம்மர் இதுகுறித்து அழக்காக கூறுகிறார்.’டாக்டர் கே எளிமையான மனிதர். நேர்மையும் அறிவும் நிரம்பப் பெற்றவர். தீவிர இறை நம்பிக்கை உள்ள ஹிந்து. தீவிர சைவம். மற்றவர்கள் தங்கள் நாளைத் தொடங்க எத்தனிக்கும்போது டாக்டர், அணிலைப்போலப் பிரகாசமான கண்களுடனும் அடர்ந்த வாலுடனும் தயாராகி விடுவார்!’
வெம்மரின் இந்த உவமை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. சுறுசுறுப்புக்கு இதைவிட நல்ல ஒப்பீடு இருக்க முடியாது. சுறுசுறுப்பான குணங்கள் கொண்ட டாக்டர் கே, இப்படி ஒரு பழக்க வழக்கத்தைக் கொண்டிருந்ததில் வியப்பில்லை. இப்படி வாரத்தில் குறைந்தது நான்கு, ஐந்து நாட்கள் வரகலையாறு முகாம் பயணம் இருக்கும்.
சரியாக ஆறு மணி அளவில் டாக்டர் கே தன் குடியிருப்பில் இருந்து வெளி வருவார். வீட்டின் எதிரே இருந்த ஜேம்ஸின் டீக்கடையில் காலை நேர வியாபாரம் தொடங்கி இருக்கும். அந்தக் கரி படிந்த கடையில், பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், அருகில் உள்ள பழங்குடியினர், முன்தினம் வந்த பாகன்கள், காவடிகள் (பாகனின் உதவியாளர்), மரம் வெட்ட வந்த கூட்டம் (அந்த நாட்களில் கூப்பு (coupe) என்று குறிப்பிட்ட பகுதியை வெட்ட அனுமதிப்பர்) என்று ஒரு சிறு கூட்டமே இருக்கும். இப்போது அந்தக் கடை இல்லை. பதிலாக, கெஸ்ட் ஹவுஸ் மேட்டில் ஒரு காண்டீன் இருக்கிறது. பெரும்பாலும், அங்கிருந்த பாகன்கள், காவடிகளில், அல்லது கூப்பு ஆட்களில் ஒருவர், டாக்டர் கேயுடன் சேர்ந்து கொண்டு வருவர். சில சமயங்களில், டாக்டர் கே தனியாகவே நடந்து செல்வதும் உண்டு. அங்கிருந்து, அந்தப் புலர் காலை வேளையில், காட்டினூடே நடந்து செல்லும்போது அத்தனை ரம்மியமாக இருக்கும். அதிகாலைப் பொழுதில் பறவைகளின் குரலோசை வாழ்க்கையை வெறுத்தவனைக்கூட மயக்கி விடும். பல குரல் மன்னன் ராக்கெட் வால் கரிச்சான் அட்டகாசம் செய்யும். மைனாக்கள் கதை பேசும். கிளிகள் கொஞ்சும். இருவாட்சிகள் எழிலாகப் பறக்கும். மாங்குயில்கள் கீதம் பாடும். மான்கள் மருண்டோடும். காட்டெருமைகள் கனைக்கும். யானைகள் எங்கோ தொலைவில் பிளிறும். இப்படிப் பேசவே தேவையில்லாமல், அந்த நடை பயணம் இனிது. ஆயினும், டாக்டர் கே உரையாடலில் தேர்ந்தவர் என்பதால், எவருடனும் பேசுவதில் தயக்கம் இருக்காது. என்ன பேசுவது என்ற குழப்பம் இருக்காது. சில பல சிரிப்பூட்டும் கதைகளைப் பேசிக்கொண்டும், ஊர் வம்பு பேசிக்கொண்டும், அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு வரகலையாறு முகாமிற்கு போய்ச் சேர்ந்து விடுவார்.
வரகலையாறு முகாமிற்குப் போகும் வழி இயற்கை எழில் கொஞ்சும் பாதை. எருமைப்பாறை (காடர்களின் குடியிருப்பு) வரை நெடுஞ்சாலை. அதன் பின் இடதுபுறம் உள்ள காட்டு வழியில் திரும்பி கண்ணாடி பங்களா போகும் வழியில் சென்று, மவுண்ட் ஸ்டுவர்ட் என்ற விக்டர் ஹியூகோவின் கல்லறையை ஒட்டிச் சென்று சீச்சாளி பள்ளம் சேர வேண்டும். இந்தக் கண்ணாடி பங்களாவிற்குக் கரடி பங்களா என்ற பெயரும் உண்டு. காரணம், அதன் அருகில் கரடிகள் அடிக்கடி தென்படும். எப்போதாவது, சிறுத்தையும் வரும். சீச்சாளி பள்ளம், நீர் வடியும் ஓடை. அதனால், அங்கு யானைகள் நடமாட்டம் இருக்கும். அதைத் தாண்டியதும், ஆனைக்குந்தி சோலை. அது, இந்தப் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஓர் அற்புத படைப்பு. அங்குள்ள தாவரங்களும், தவளை, ஆமை, ஓணான் போன்ற சிறிய உயிரினங்களும் வேறு எங்கும் காண இயலாத வகையில் இருக்கும். சமதரையில் வாழும் நமக்கு என்றும் வற்றாத நீர் தரும் அமுத சுரபிகள் அவை. அதனை அடுத்து மீன் மேட்டுப்பள்ளம். இதுவும் ஒரு சிற்றோடை. எனவே, விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இங்கும் எச்சரிக்கையுடன் கடக்க வேண்டி வரும். அடுத்த மேட்டில் ஏறி இறங்கினால், வரகலையாறு. ஆயினும், வழி எல்லாம் திறந்த வெளி போன்று சுற்றுமுற்றும் நோட்டம் விட்டவாறு போகலாம். காரணம், மலையின் மேடு பள்ளங்களின் நடுவே பாதை போவதால் இருபுறமும் நன்கு கவனித்துப் போக முடியும்; விலங்குகள் தென்பட்டால், நின்று வழி விட்டுப்போக முடியும். என்ன, ஆனைக்குந்தி சோலையை அடுத்து சற்று நிதானமாகச் செல்ல வேண்டி வரும். அங்கு தாவரங்களின் செறிவு மிக அடர்த்தியாக இருக்கும்.
இந்தச் சோலைக் காடுகள், யுனெஸ்கோவின் கலாசார விழுமியம் என்று வரையறுக்கப்பட்ட இடங்களில் ஒன்று. அந்த அளவு அவற்றில் இயற்கைச் செல்வங்கள் புதைந்து கிடக்கின்றன. ஓங்கி வளர்ந்த வெள்ளைக் குங்கிலியம், வெள்ளை அகில், வெடிப் பலா (அயினி), சுரபத்திரி, மரவட்டை போன்ற அரிய வகை மரங்கள், பறக்கும் தவளை, மூங்கில் ஆமை, சிங்கவால் குரங்கு, செம்பழுப்பு ஆந்தை போன்ற அரிய விலங்கினங்கள் நிறைந்த ஒரு தனி உலகம். இங்குள்ள சீதோஷ்ண நிலை மற்றும் வாழிடம் இருந்தால் மட்டுமே அவை உயிர் வாழ இயலும். மற்ற பிரதேசங்களில் அவை வாழ இயலாது. எனவே, இவற்றை ’குறிப்பிட்ட வாழிட உயிரினங்கள்’ (restricted range species) என்று அழைக்கின்றனர். இங்குள்ள தாவரங்களின் மூலிகைப் பண்புகளை முழுவதும் அறிந்தவர்கள் வெகு குறைவு. பழங்குடிகள், நடைமுறை அறிவு கொண்டு இவற்றைப் பயன்படுத்துகின்றனர். அன்றி, விஞ்ஞான பூர்வமாக அவற்றை ஆய்வு செய்து அல்ல. ஆனால், அவை மருத்துவப் பயன் கொண்டவை என்பது தெளிவு. இதனால், இந்தக் காடுகள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் இப்போது மீண்டும் டாக்டர் கேயின் கதைக்கு வருவோம். இந்தக் காடுகளின் கதையைப் பின்னொரு சமயம் பார்க்கலாம்.
வரகலையாற்று சரிவில் டாக்டர் கே இறங்கும்போதே, எல்லோரும் பார்த்துவிட்டு தயாராக இருப்பார்கள். இல்லை என்றாலும், யானைகள் தங்கள் உருட்டலொலிகளை உண்டாக்கும். டாக்டர் கே நெருங்க நெருங்க, அவை நிலை கொள்ளாமல் தவிக்கும். நாங்கள் பேட்டி கண்ட ஒரு பாகன் சொன்னதை அப்படியே இங்கு தருகிறேன். ’நம்ம டாக்கிடரு வர்ரது எப்பிடிதா யானைங்களுக்கு தெரியுமோ எனக்கு தெரியாது. அவரு சரிவுல வந்தாலே போதும். குர்ர், குர்ர்னு எல்லாம் சத்தம் போடும். ஒன்னு ரெண்டு லேசா பிளிறும். காம்பே திடீருன்னு சுறுசுறுப்பாகிடும். அவரு உள்ள வந்ததும், ஒன்னுக்கொன்னு போட்டி போட்டு அவரு கிட்ட போகப் பாக்கும். அவரு வந்து கிட்ட நின்னு ஏதாவது கொடுத்தாதான் சமாதானம் ஆகும்’
இதை நான் ஆனைமலையிலும் முதுமலையிலும் பல பாகன்கள், பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். கேட்டு வியந்திருக்கிறேன். பல ஆராய்ச்சி மாணவர்கள் இந்தத் தகவலை வேறு விதமாகச் சொல்வார்கள். கையில் ஒரு துண்டு கரும்புடன், ’என்னடி பாமா, சோகமா இருக்கே?’ என்று கேட்டபடி கரும்பைக் கொடுத்து விட்டுத் தட்டிக் கொடுப்பார் என்று ஒரு யானை ஆராய்ச்சியாளர் என்னிடம் சொன்னார். ‘ஒரு துண்டு கரும்புக்கு இத்தனை பணிவா என்று நான் வியந்திருக்கிறேன்’ என்று சொன்னார். முன்னர் பேசிய பாகன், ’அவரு மட்டும் இருந்திருந்தாருன்னா, எங்க புள்ளைங்கள்ளே ஒன்னு ரெண்டு பேராவது டாக்கிட்டர் ஆகியிருப்பாங்க அய்யா’ என்றார். இதையெல்லாம் கேட்கும்போது என்னால் அவரது ஆளுமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லோரிடமும் நேயத்தோடும், மனம் விட்டும் பழகியதால், அவரை ஒரு வித்தியாசமான நிலையில் வைத்துப் பார்த்திருக்கிறார்கள்.
வெம்மர் இன்னும் வித்தியாசமாக சித்தரிக்கிறார். ‘யானைகளுடன் வேலை செய்வது கடினம். அதற்கு நிறையப் பொறுமை தேவை. டாக்டர் கேவுக்கு அது இயல்பாகவே இருந்தது. காரணம், அவரது சாந்தமான குணம். நடைமுறை பழக்க வழக்கங்களை அனுசரித்துப் போகும் தன்மை. அவர் முகாமின் செயல்பாட்டிற்கும், வேகத்திற்கும் ஏற்பத் தன்னை தயார்படுத்திக் கொண்டது நல்ல உத்தி. குல்லாவுக்கு ஏற்ற தலை என்ற வழக்கத்திற்கு மாறாக (அரசு இயந்திரங்கள் அவ்வாறுதான் பெரும்பாலும் இருக்கும். காரணம், கொள்கைகள் நடைமுறைக்கு அல்லது மக்களுக்கு ஏற்ற வகையில் இருப்பது இல்லை) தலைக்கு ஏற்ற குல்லாயாக டாக்டர் கே மாறினார். இங்கு தலை, யானைகள் முகாம்; குல்லாய் டாக்டர் கே. மற்றொன்று, முகாமின் வேகத்தை மாற்ற அவர் முயலவில்லை. அதன் போக்கிலேயே சென்று தன் காரியத்தைச் சாதித்தார்’.
ஆங்கிலத்தில், மேன் மேனேஜ்மென்ட் என்று சொல்வார்கள். அதைத் திறம்பட செயல்படுத்தினார் டாக்டர் கே என்று புரிகின்றது. பாகன்கள், பழங்குடியின மக்களின் இயல்பான நல்ல விஷயங்களை அவர் மாற்ற முயலவில்லை. மாறாக, இடையிடையே சில நல்ல விஷயங்களை மட்டுமே சேர்த்தார். இதனால், இருவருக்கும் நல்ல புரிதல் வந்தது. யானைகளின் நலன் பேணப்பட்டது.
இதையும் வெம்மர் வேடிக்கையாகச் சொல்கிறார். ’யானைகள், பழங்குடியினரோடு இருந்த டாக்டர் கேயின் நெருக்கம், அவருக்கு யானைகளைப் பற்றியும், மருத்துவச் செடிகளைப் பற்றியும் உள்ள அறிவை ஒரு புதையல்போலத் தந்தது. மிக நுண்ணியத் தகவல்களையும் அறிய உதவியது. அதை வகைப்படுத்தவும், அளவிடவும் அவரால் முடிந்தது. ஒவ்வொரு யானையின் பெயர், மருத்துவ விவரம், குணாதிசயங்களை நன்கு அறிய இயன்றது. ஒவ்வொரு யானையின் பாகனையும் அவர் அறிவார். ஆயினும், எல்லாத் தகவலும் யானையைச் சுற்றித்தான் சுழலும். அதாவது, பாகன் நஞ்சனின் யானை சரஸ்வதி என்று ஒருபோதும் அவர் சொல்ல மாட்டார். மாறாக, சரஸ்வதியின் பாகன் நஞ்சன் என்றுதான் குறிப்பிடுவார். இந்த உலகமே யானைகளைச் சுற்றித்தான். மற்றவை எல்லாம் யானையுடன் தொடர்பு படுத்தித்தான் பார்க்கப்படும். அதேபோல டாக்டர் கே வரும்போது, யானைகள் மட்டுமல்லாது, அந்தக் குடியிருப்பே டாக்டரைச் சூழ்ந்துகொள்ளும். அவர்களது எல்லாக் குறைகளுக்கும் செவி சாய்க்கக் கூடிய ஒரே மனிதர் டாக்டர் கேதான். சின்னச் சின்ன உடல்நலக்குறைவுகளுக்கு மருந்து தருவதுடன், மற்ற விஷயங்களுக்கும் இலவச ஆலோசனை டாக்டர் கேயிடம் கிடைக்கும்’.
மிகக் குறைந்த காலம், அதுவும் தொடர்ச்சி இல்லாமல் ஒரு சில வாரங்கள், டாக்டர் கேயுடன் பழகிய கிரிஸ் வெம்மர், இவ்வளவு விவரங்களை எழுதியிருப்பது கண்டு உண்மையிலேயே நான் வியந்துபோனேன். அவர் மட்டும் ஓரிரு வருடங்கள் தொடர்ந்து டாக்டர் கேயுடன் இருந்திருந்தால், ஒரு புதையலே கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு டாக்டர் கே, வெம்மர் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். கிரிஸ் வெம்மர் அமெரிக்காவின் சிறந்த கால்நடை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)