Skip to content
Home » யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை

யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை

யானைகள் முகாம்கள் அமைக்கப்பட்ட காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பெருமளவில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் மரங்கள் தேவை பட்டதால்தான். அன்று ரயில்வேக்கு மரங்கள் வேண்டி இருந்தன. காரணம், அப்போதுதான் ரயில் போக்குவரத்து அதிகமாகிக் கொண்டிருந்த காலம். ஸ்லீப்பர் கட்டைகள் பெருமளவில் தேவைப்பட்டன. அதேபோல இங்கிலாந்திலும் மரங்களின் தேவை அதிகமாக இருந்தது. இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தக் காடுகளில் இருந்த மரங்கள் வெட்டிச் செல்லப்பட்டன.

அன்று காடுகள், மரத்தின் மதிப்பு கொண்டு அளவிடப்பட்டதே அன்றி, பல்லுயிர் பெருக்கம் கொண்டு அல்ல. வெட்டிய மரங்களைக் கடத்த பெரும் செலவு செய்ய நேர்ந்தது. டாப்ஸ்லிப் என்ற பெயரே மரங்களை மேலிருந்து உருட்டிக் கீழே அடிவார ஆற்றில் வருமாறு செய்ததால், வந்த பெயர் என்று எல்லோருக்கும் தெரியும். இடையில், யானைகளைக் கொண்டு, வெட்டிய மரங்களை இலகுவாக அப்புறப்படுத்தலாம் என்று கண்டறிந்த உடன், வடகிழக்கு மாநிலங்களிலும் தென்னிந்தியாவிலும் பெரிய அளவில் யானைகள் முகாம்கள் அமைக்கப்பட்டன. யானைகளுக்கு வெட்டிய மரங்களை அடுக்கி வைப்பது, லாரிகளில் ஏற்றுவது, மலைச் சரிவில் உருட்டி விடுவது, இழுத்துச் செல்வது போன்ற பணிகள் தரப்பட்டன. அவை மனிதனையும் எந்திரங்களையும்விட நன்கு பணி செய்ததால், அவற்றைப் பராமரிக்கத் தொடங்கினர். முகாம்கள் அமைத்தனர். வைத்தியர்கள் அனுப்பப்பட்டனர். முகாம்களைச் சுற்றி குடியிருப்புகள் வந்தன. அது ஒரு தொழிலாக மாறியது. இப்படியாக, ஆனைமலையில் மூன்று நான்கு முகாம்கள் இருந்தன. சில தற்காலிக முகாம்கள், சில நிரந்தர முகாம்கள். யானைகளை நன்றாகக் கவனிப்பது ஒரு முக்கிய வேலையாகிப் போனது.

இதற்கிடையில், 1955க்கு பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, யானைகளும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டிற்கிடையில் பிரிக்கப்பட்டன. முன்னொரு இடத்தில் சொன்னதுபோல, டாப்ஸ்லிப்பில் 170 யானைகளில் வெறும் 26 யானைகள் மட்டும் தமிழ்நாட்டிற்கு மிஞ்சின. மீதமுள்ளவை, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. எனவே, இந்த முகாமில் உள்ள வேலைகளைச் செய்ய மேலும் யானைகள் தேவைப்பட்டன. அந்த அளவிற்கு அன்று மரம் வெட்டும் தொழில் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது. அதுபோக, களக்காடு, நாகர்கோவில் காடுகளுக்கும், தேவைப்படும் தனியார் தோட்டங்களுக்கும் யானைகளை அனுப்ப வேண்டிய சூழ்நிலை. எனவே, அன்றிருந்த மூன்று முகாம்களில், ஒரு முகாமுக்கு குறைந்தது முப்பதில் இருந்து முப்பத்தைந்து யானைகள் தேவைப்பட்ட காலம். இதற்கு அவர்கள் காட்டு யானைகளைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அந்த வேலையும் நடந்து கொண்டிருந்தது.

அந்தக் கால முகாமை இன்றுள்ள முகாம்களை மனதில் வைத்துக் கொண்டு புரிந்துகொள்ள முடியாது. இன்றுள்ள முகாம்களில் யானைகளுக்குப் பெரிதாக எந்த வேலையும் கிடையாது; ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல சவாரி செல்லும் வேலையும் இல்லை. யானைகள் முகாமிலேயே பெரும்பாலும் அடைபட்டுக் கிடக்கின்றன. அன்று, அவை பாதிநாள் மர வேலையில் ஈடுபடுத்தப்படும்; பின் மேய்ச்சலுக்குக் காட்டுக்குள் செல்லும்; (காட்டிற்குள் தானே முகாமே இருக்கிறது); சவாரிக்கும் சில நேரங்களில் அனுப்பப்படும். இப்படி அவற்றின் மூலம் அரசாங்கமும் வருவாய் ஈட்டியது; யானைகளும் நல்ல உடல் உழைப்புடன் ஆரோக்கியமாக இருந்தன. கால்நடை வைத்தியருக்கும் தொடர்ந்து பணி இருந்தது!

டாக்டர் கேயின் காலத்தில், தமிழ் நாட்டில், அவர் கிட்டத்தட்ட 150 யானைகளைக் கவனிக்க வேண்டி இருந்தது (பல இடங்களில்). கிரிஸ் வெம்மர் சொல்வதுபோல, அவரைப் போன்ற கால்நடை வைத்தியர்கள் இன்றைய காலகட்டத்தில் பொருத்தமில்லாத அல்லது ஒவ்வாத மனிதர்கள். காரணம், எல்லா மதிப்பு முறைகளும் மாறிவிட்டது மட்டுமல்ல, நடைமுறை கோட்பாடுகளும் வேறுபட்டுள்ளன. ஆயினும், வெம்மர் போன்றவர்கள் டாக்டர் கேயின் அறிவையும் அனுபவங்களையும் தனிச்சிறப்புடைய தாகவும், நிகரற்றதாகவும் கருதுகின்றனர். அதற்குக் காரணம், டாக்டர் கேயின் காலத்தால் புடம் போடப்பட்ட அமைதியான ஞானம், நெறிமுறைகளில் நம்பிக்கை, மற்றும் அனுபவத்தால் வரும் யதார்த்தம் என்று வெம்மர் கூறுகிறார்.

இதுபோன்ற ஒரு காலகட்டத்தில் டாக்டர் கே பணி புரிந்ததால், யானைகளைப் பற்றியும், யானைகளுக்கான மருத்துவத்திலும், யானைகளைப் பிடிக்கும், பழக்கும் கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். அவர் காலத்தில் முதுமலை, கோழிக்கமுத்தி, வரகலையாறு ஆகிய முகாம்கள் முழுக் கொள்திறனில் இருந்ததில் வியப்பில்லை என்கிறார் வெம்மர். எனக்கு இந்தக் காரணங்களை மீறித் தெரிவது டாக்டர் கேயின் உள்ளார்ந்த ஈடுபாடும், தொழிலின் பால் அவருக்கிருந்த அளவு கடந்த பக்தியும் ஞானமும். இவை இல்லையென்றால், எப்படிப்பட்ட சாதகமான சூழல் இருந்தாலும், ஒருவர் சாதிக்க இயலாது. உள்ளிருந்து ஒரு கனலாகப் பேரார்வம் இருந்தால் மட்டுமே முடியும்.

அன்று டாக்டர் கே வரகலையாறு முகாம் எதிரில் உள்ள சரிவில் இறங்கி வரும்போது முகாம் சற்று பதட்டமாக இருந்தது. பாகன்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். டாக்டர் கேவைப் பார்த்ததும், ’அய்யா வந்தாச்சு. அடுத்தது என்ன செய்யனும்னு கேட்டுக்கிடலாம்,’ என்று அவரை நோக்கி வந்தனர். ’என்ன காளன், ஐஜி எப்பிடி இருக்கான்? காயமெல்லாம் கொஞ்சம் சரி ஆகி இருக்கா?’ என்று கேட்டபடி டாக்டர் கே முகாமிற்குள் வந்தார். பாகன்கள் ஒரே குரலில், ’அய்யா, நேத்து போட்ட குழியில ஒரு குட்டி ஆண் ஆன விழுந்திருக்குங்க. காலையில போன பொம்மன் பாத்துட்டு வந்து தகவல் குடுத்தானுங்க,’ என்றனர். பொம்மனும், ’ஆமாங்க. நான்தான் காலையில பாத்தேன்,’ என்றார்.

’சரி. அப்போ ஐ ஜி, சரோஜா, இன்னும் ரெண்டு யானைங்களோட குழி இருக்கற இடத்துக்குப் போக ரெடி ஆகுங்க. வேற முக்கியமான வேலை ஏதாவது இருக்கா?’ என்று கேட்டவாறு டாக்டர் கேவும் தயாரானார். அவர்கள் குழு காட்டினுள், முகாமிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருந்த குழியை நோக்கிச் சென்றது. அந்த வெட்டப்பட்ட குழியில் ஒரு ஆண் யானைக்குட்டி, வெளியே வர இயலாததால், பிளிறியவாறு கிடந்தது. சுற்றுமுற்றும் நோட்டம்விட்ட டாக்டர் கே, ’இவனே, யானக்கூட்டம் பக்கத்தில இருக்கான்னு பாத்துக்குங்க. ஜாக்கிரதயா, குட்டிய வெளிய எடுக்கணும்’ என்றார். யானை பிடிப்பதில் வல்லவர்களான காடர்களில் (ஒரு பழங்குடி இனப் பிரிவினர்) ஒரு சிலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் தயாராக நான்கைந்து வடக் கயிறுகளை (வக்கனா மரப் பட்டையில் செய்தவை) சுருக்கு போட்டு கொண்டு வந்திருந்தனர்.

இரு காடர்கள் யானையின் முன்னே சென்று ஒரு கோலில் (குச்சியில்) ஒரு வெள்ளைத் துணியைக் கட்டி ஆட்டினர். அனிச்சையாக, யானைக்குட்டி அதைப் பிடிக்க தும்பிக்கையைத் தூக்கியது. அவ்வளவுதான். அருகிலிருந்த காடர், பட்டென்று சுருக்குக் கயிற்றை குட்டியின் கழுத்து வரை தும்பிக்கை வழியே நுழைத்து விட்டார். இதற்கிடையில், குழியின் பக்கவாட்டு விளிம்பில் கிடையாகப் படுத்து, மற்றொரு காடர் அந்தச் சுருக்குக் கயிறு குட்டியின் கழுத்தை இறுக்கி விடாமல், சுருக்குக்கு முன்னால் ஒரு கட்டையை நுழைத்தார். அந்தக் கட்டை சுருக்கு இறுகாமல், அதே நேரம் கழுத்தை விட்டு விலகாமல் இருக்க உதவும். யானை வெள்ளைத் துணியைப் பார்த்தவாறு இருப்பதால், அவர் கையை விட்டு இந்த வேலையைச் செய்ய இயன்றது.

அதேபோல மற்றொருவர், பின்புறம் இருந்து, குட்டி கால்களை மாற்றி வைக்கும்போது ஒரு சுருக்குக் கயிற்றை பின் கால் ஒன்றில் மாட்டிவிட்டார். அவர்கள் முறையாகப் பயிற்சி பெற்றதுடன், இந்தத் தொழிலில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் என்பதால், வெகு வேகமாகவும் இலகுவாகவும் இந்த வேலையைச் செய்து முடித்தனர். அனுபவம் இல்லாதவர்கள் இத்தனை நேர்த்தியாகவும் வேகமாகவும் செய்ய இயலாது. அதன் பின்னர், அந்தக் கயிறுகளைக் கொண்டு வந்த கும்கி யானைகளுடன் கட்டிவிட்டனர். அப்படியே குட்டியை மெல்ல குழியில் இருந்து மேலே ஏற்றினர். பின் குட்டியின் இருபுறமும், இரண்டு கும்கி புடைசூழ மற்ற இரண்டு கும்கிகள் கயிற்றை இழுத்துச் செல்ல, புதிய வரவான ஆண் குட்டி யானை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இடையில் மக்கர் செய்த குட்டியை ஐஜி ஒரு தட்டுத் தட்டியது. அதன்பின் குட்டி யானை நல்ல பிள்ளையாக முகாமை வந்தடைந்தது. டாக்டர் கே குட்டியை நன்கு பரிசோதித்த பிறகு இரு யானைகள் அதைச் சமாதானம் செய்த பின்னர், கிராலில் போடப்பட்டது. பிடித்தல், பயிற்சி போன்றவற்றை நான் மிக விளக்கமாகச் சொல்லாததன் காரணம், இது டாக்டர் கேவைப் பற்றிய கதை என்பதால்தான். இப்படிப் பல அற்புதமான பழங்குடிக் கலைகள் காலப்போக்கில் அருகி விட்டன என்பது உண்மைதான். அதைப் பற்றியும் பழங்குடி மக்களின் கலாச்சாரம் பற்றியும் பின்னர் பேசுவோம்.

அவ்வப்போது யானைக் குட்டிகளைப் பிடிப்பது நடந்து கொண்டிருந்ததால், கிரால் (கூண்டு) எப்போதும் தயாராக முகாமில் இருக்கும். குட்டியை அதனுள் சேர்த்த பின், பயிற்சி தொடங்கும். பயிற்றுவிப்பாளர்கள், மலசர்கள். மலசர் மற்றொரு பழங்குடி இனப் பிரிவினர். இவர்கள் யானை பிடிப்பதில் ஈடுபட மாட்டார்கள். இப்படி ஸ்பெஷலிஸ்ட்கள் அடங்கிய குழு அன்று டாக்டர் கேயின் தலைமையில் வரகலையாறு முகாமில் பணி செய்தது. யானையைப் பயிற்றுவிப்பது எப்படி என்றறிய வேண்டும் என்றால், ஹாரி மார்ஷலின் ’தி எலிபன்ட் மென்’ என்ற பழைய டாக்குமெண்டரி படத்தைப் பார்க்கவும். எவ்வாறு ஆனைமலை பாகன்கள், மேற்கு வங்கம் சென்று அங்கு பயிர்களுக்குச் சேதம் விளைவித்த யானைகளை டாக்டர் கேயின் தலைமையில் பிடித்துப் பழக்கினர் என்பதை மிக அழகாகக் காண்பித்திருப்பார்கள். நம்ம ஊர் திரை ஒளிப்பதிவாளர் அல்போன்ஸ் ராய்தான் அதன் படமாக்கம். டாக்டர் கேயின் திறமையை உலக அளவில் எடுத்துச் சென்ற ஒரு படம் அது! குட்டி யானைகளைப் பழக்குவது எளிது. வெகு குறுகிய காலத்தில் அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். பெரிய யானைகளைப் பழக்குவது சற்றுக் கடினம். நிறையப் பொறுமையும், விடாமுயற்சியும் தேவை. அதனால்தான், குட்டி யானைகளைப் பிடிப்பதில் முகாம் ஆட்கள் ஆர்வம் காட்டுவார்கள். மற்றொரு காரணம், குட்டிகள் விரைவில் மனிதர்களுடன் ஒன்றிப் பழகி விடும். இப்படி யானையைப் பிடிக்கும் முறைக்கு ‘குழி முறை’ (Pit Method) என்று பெயர். இது பெரும்பாலும் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட முறை. கர்நாடகாவில், இதைப் போன்ற ஆனால், மாறுபட்ட ’கெட்டா’ (khedda) முறைதான் சமீபகாலம் வரை பயன்பட்டது. இது சாண்டர்சன் என்கிற ஆங்கிலேயர் பயன்படுத்திய முறை.

இந்தக் குழி முறை யானை பிடிக்கும் நடைமுறை வருமாறு:

யானைகள் காட்டில் வெகுவாகப் பயன்படுத்தும் தடங்களில் மூன்று அல்லது நான்கு குழிகள் வெட்டப்படும். அவை மேல்புறம் 12*12 அளவில் தோண்டப்பட்டு, கீழ் புறம் குறுகி, 9 அடியாக இருக்கும். அதாவது, சற்று மேலிருந்து சரிவாக இறங்கும். இந்தக் குழிகளை பாறை அல்லது கீழே கடினமான அமைப்பு உள்ள இடங்களில் தோண்ட மாட்டார்கள். நல்ல மண் உள்ள இடத்தில் யானைகள் செல்லும் பாதையை ஒட்டி மேல்புறம் ஒன்றும், பக்கவாட்டில் இரண்டும், தேவை என்றால் கீழ் புறம் ஒன்றும் தோண்டுவார்கள். தோண்டிய மண்ணை வெகு தூரம் சென்று எறிந்து விட்டு வருவார்கள். ஏனெனில், யானைகளுக்கு சந்தேகம் வரக் கூடாதே, அதனால். அதேபோல, இலை தழைகள், தக்கையான மூங்கில் குச்சிகள் கொண்டு குழியை மூடுவார்கள். பார்க்க வித்தியாசமாகத் தெரியக் கூடாது. குழியின் அடியில் மெத்தென்று இருக்க, சிறிய உடைந்த கிளைகள் (சுள்ளிகள்) இட்டு அதன் மேல் புல் மற்றும் தழைகளைக் கொண்டு நிரப்புவர். உள்ளே விழும் யானைக்கு பெரிய அடி படாமல் இருக்க இந்த முன்னேற்பாடு. கெட்டா முறையில் யானைகளை, வெட்டப்பட்ட குழிகளை நோக்கி விரட்டுவார்கள், இங்கே யானைகள் போகும் வழியில் அவை தானே விழும் வகையில் அமைப்பார்கள். சில நேரங்களில், விழுந்த யானைக் குட்டியைக் கூட்டம் மீட்டுச் செல்வதும் நடக்கும்!

யானைக் குட்டி ஒரு வழியாக முகாமில் இணைக்கப்பட்டு, பழகவும் ஆரம்பித்து விட்டது. டாக்டர் கே வரும் போதெல்லாம், அதனுடன் விளையாடுவார். அந்தக் குட்டியும் அவரிடம் பாசத்துடன் முட்டிப் பழகும். குட்டி யானைகளின் குறும்பை நாம் சரியாக உணர, ஒரு யானை முகாமில் சில நாட்கள் இருந்து பழக வேண்டும். வளர்ப்புப் பிராணிகளைவிடக் குறும்பு அதிகம். டாக்டர் கேவுக்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்கு ஆகிப் போனது. மூன்று வயதுக் குட்டியாக வந்தது, இப்போது ஐந்து வயது விடலையாக நின்றது. டாக்டர் கே முகாமிற்கு வந்ததும், அவருடன் சேர்ந்து சுற்றும். அவர் படுத்தால், அருகில் சென்று தொல்லை செய்யும். இப்படி ஒரு செல்லப் பிள்ளைபோல இருந்தது. முகாம் ஊழியர்கள், ஒரு நாள் டாக்டர் கேயிடம், ’அய்யா, குட்டி வந்து நாளாச்சு. நல்ல பேர் ஏதாவது வெச்சுடலாங்க,’ என்றனர். ’அப்படியா, என்னைக்கு இவனப் பிடிச்சோம்? தைப்பூச நாள் தானே? சுப்பிரமணின்னு வச்சிடலாம்,’ என்று அவருக்கே உரிய பாணியில் சிரித்தார். ’ஆமாங்கய்யா, அதுதான் சரி’ என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர். அன்றிலிருந்து சுப்பிரமணி எல்லோருக்கும் செல்லமாகிப் போனான். முகாமின் செல்லப் பிள்ளை என்றாகிவிட்டான். முற்றிலும் பழகிய யானை இல்லைதான். ஆனாலும் அவன் முகாமின் கவர்ச்சி நாயகன் ஆனான்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *