டாப்ஸ்லிப் வந்த சில மாதங்களுக்குப் பின், டாக்டர் கே, கோவிந்தன் நாயர் என்ற உதவியாளர் ஒருவரை சேர்த்துக் கொண்டார். காரணம், மருந்துகள் வாங்கவும், சில எடுபிடி வேலைகள் செய்யவும் ஓர் உதவியாளர் தேவைப்பட்டதுடன், காட்டில் தனியே போய் வருவது சரியல்ல என்று அவர் நினைத்தார். நாயர் அங்கேயே பல காலம் பழகியவர் என்பதால், அவருக்கு எல்லா வழிகளும் இடங்களும் அத்துப்படி. அன்று காலை வரகலையாறு புறப்பட்டு நடக்கத் தொடங்கி ஆனைகுந்தி சோலைக்கு முன் டாக்டர் கே வந்தபோது, எதிர் சரிவில் ஒரு யானை மெல்ல இறங்கியது. நாயர், சற்று நிதானித்து பின் போகலாம் என்றார். யானை மெதுவாகச் சோலைக்குள் சென்று மறைந்தது. இவர்கள் நூறடி போவதற்குள், ஒரு கரடி சோலையில் இருந்து வெளி வந்து எதிர் சரிவில் ஏறி மறைந்தது. அதன் பின், இருவரும் ஜாக்கிரதையாக மீன் மேட்டுப்பள்ளம் அடைந்து, வரகலையாறு போய்சேர்ந்தனர்.
நல்ல வேளையாக, விருந்தாளியாக வந்திருந்த டாக்டர் கேயின் தம்பியும், மற்றவர்களும் அன்று பாதி வழியிலேயே திரும்பிச் சென்றுவிட்டனர். இல்லையென்றால், அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் வேலை வேறு சேர்ந்துகொண்டிருக்கும். எப்போதும்போல, முகாமில் யானைகள் குளித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன. இனி அவற்றைப் பரிசோதித்து தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை என்றாலும், வழக்கமான நடைமுறையைப் பின்பற்றினால்தான் பின்பு பெரிய பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.
முகாமில் யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றின் முன் அந்தந்த யானைக்கான பாகன்கள் நின்று கொண்டிருந்தனர். முதல் யானை ஜாலின் அருகே வந்த டாக்டர் கே, பாகனிடம் ஒரு துண்டு கரும்பை வாங்கிக் கொண்டு, ‘என்ன ஜால், என்ன விஷயம்?’ என்று கேட்டவாறு, பாகனைப் பின்னே போகச் சொல்லி விட்டு, கரும்பை அதன் வாயில் வைத்தார். யானையைத் தீர்க்கமாக முன்னும் பின்னும் ஒருமுறை பார்த்தார். பாகனிடம், ‘போன தரம் இருந்த பிரச்னை இப்போ இல்லையே’ என்று கேட்டார். அவரும், ‘ஒண்ணுமில்லீங்க அய்யா’ என்றார். ‘குட் பாய்’ என்று யானையைத் தட்டிக் கொடுத்து விட்டு அடுத்த யானைக்கு நகர்ந்தார். அடுத்த யானை பெரிய கொம்புடைய திப்பு. ‘இவனே, தள்ளிக்க’ என்று சொல்லி பாகனை விலக்கி விட்டு டாக்டர் கே திப்புவின் வாயிலும் ஒரு கரும்புத் துண்டைத் தந்தவாறு, ‘என்னடா திப்பு, சேட்டையெல்லாம் பண்ணாம இருக்கியா?’ என்று தட்டிக் கொடுத்தார். பாகனிடம், ‘கொம்பு கூராயிடுச்சு. கொஞ்சம் குறைச்சு மழுங்கப் பண்ணணும். அடுத்த தரம் வரும்போது ஞாபகப்படுத்து,’ என்றார். அடுத்தது சரோஜா. அதேபோல பாகனைத் தள்ளி நிற்கச் சொல்லி விட்டு, ‘என்ன சரோஜா, எப்ப அடுத்த குட்டியைப் பிடிக்கலாம்?’ என்று கேட்டவாறு கரும்புத் துண்டை வாயில் வைத்தார். பின், பாகனிடம், ‘இவனே, இது ஆண் யானைங்களோட சேருதா இல்லையா?’ என்று கேட்டார். ‘அதுதாங்கையா ஒண்ணும் புரியல்ல’ என்றார் பாகன். ஏனெனில், பருவம் வந்து பல வருடம் ஆகியும் அது கருவுறவில்லை. அடுத்தது சுப்பிரமணி, ‘என்னப்பா, டிரைனிங் நல்லா குடுத்தீங்களா?’ என்று கேட்டவாறு, ஒரு சின்னக் குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தார்.
குட்டி யானைகளைப் பழக்க, ஒரு வட்டமான மர மேடை இருக்கும். குட்டி யானையை அதில் ஏற்றிப் பழக்குவார்கள். பழைய காலப் பள்ளி ஆசிரியர்கள்போல, கையில் பிரம்புடன், தங்களது கட்டளைகளுக்கு அவற்றைப் பழக்குவர். இந்தக் கட்டளைகள் பெரும்பாலும் உருதுவில்தான் இருக்கும். சை, உட், ஜுக் என்று. டாக்டர் கேவுக்கு அதுவும் தெரியும். கையில் குச்சியுடன் ‘ஆவோ’ என்று சுப்பிரமணியைக் கூப்பிட்டு மேடையில் ஏற்றினார். ‘ஜூக்’ என்று சொன்னதும் மண்டியிட்டு அது அமர்ந்தது. சபாஷ் என்ற டாக்டர் கே, ‘ஆலா’ என்றார். குட்டி, காலைத் தூக்கியது. பலே, பலே என்று சந்தோஷப்பட்ட டாக்டர் கே, இன்னும் சில கட்டளைகளை சுப்பிரமணி சரியாகச் செய்ததும், ‘இன்னைக்குப் போதும். நல்லா பழக்கியிருக்கானே. யார் அது?’ என்றார். ‘காளன் பையந்தானுங்க’, என்றனர் பாகன்கள். ‘அப்ப, அவன காவடி ஆக்கிடலாமா?’ என்று கேட்டபடி சிரித்தார். ‘அய்யா இஷ்டந்தாங்க’ என்று அவர்களும் சிரித்தனர். இப்படி கிட்டத்தட்ட முப்பது யானைகளின் நலம் விசாரித்து முடித்து, உடல் நலக் குறைவான யானைகளுக்கு மருந்து தந்து, சுப்பிரமணி போன்ற குட்டி யானைகளிடம் விளையாடிவிட்டு, பின் அங்கு பாகன்கள் தரும் சைவச் சாப்பாட்டை தின்றுவிட்டு சற்று ஓய்வு எடுத்துவிட்டு, கிளம்பத் தயாரானார்.
திரும்ப யத்தனிக்கும்போது, பாகன் நஞ்சன் தந்தை வந்து நின்றார். ‘அய்யா, ரெண்டு நாளா உடம்பு சரியில்லீங்க’ என்றார். டாக்டர் கே அவருடைய ஒல்லியான உடலைப் பார்த்தார். ‘சரி, இப்பிடி பக்கத்தில வாங்க’ என்றார். அவர் வந்ததும், அவரது முதுகில் காது வைத்து சிறிது நேரம் கேட்டார். ‘ஒண்ணும் பெரிசா பிரச்சனை இல்ல. செஸ்ட் கஞ்சஷன், நாளைக்கு யானைக்காரங்க மேலே வந்தாங்கன்னா, என்னைப் பாக்க சொல்லு. மருந்து கொடுத்து விடரேன்,’ என்றார். இப்படி உடனடித் தேவைக்கு மருத்துவம். அதன்பின் சிலர், ‘அய்யா, இந்த மாசம் இன்னும் சம்பளமே வல்லீங்க. செலவுக்கு என்ன செய்யறதுன்னு புரியலே’ என்று இழுத்தனர். ‘அப்பிடியா, நான் உடனே ரேஞ்சர் கிட்ட சொல்லி நாளைக்கே போடச் சொல்றேன்’ என்றார். ‘ரொம்பப் பிரச்சனைன்னா சொல்லு. ஏதோ என்கிட்ட இருக்கிற பத்து இருபது கொடுக்கிறேன்’ என்றார். இது 1950களின் பிற்பகுதி. பத்து இருபதுக்கு நல்ல மதிப்பு உண்டு. ‘வேற ஒண்ணும் இல்லியே, நான் புறப்படுறேன். அடுத்த வாரம் பிரதம மந்திரி வர்றாராம். நம்ம எல்லாரும் யானைங்க கூட ரெடியா இருக்கனும்’ என்று அறிவுறுத்தி விட்டு டாப்ஸ்லிப்புக்குப் புறப்பட்டார், கோவிந்தன் நாயருடன். டாக்டர் கே சொன்னதுபோல, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டப் பணி முடிவுற்றதால், நாட்டிற்கு அர்பணிக்கும் விழா அன்றைய பிரதமர் தலைமையில் நடைபெற இருந்தது. அதற்கான வேலைகள் தொடங்கி விட்டிருந்தன.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் (PAP) என்பது தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையேயான பல்நோக்குத் திட்டமாகும். இது மேற்கு நோக்கி பாயும் நீரை கிழக்கு நோக்கித் திருப்பி விடுகிறது. இது இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் (1957-61) கொண்டு வரப்பட்டது. இரு மாநிலங்களுக்கு இடையேயான இத்திட்டம், கருத்தாக்கத்தில் மிகவும் அற்புதமானது, அணுகுமுறையில் துணிச்சலானது. திட்டமிடுவதில் புத்திசாலித்தனமானது. அதன் முடிவில் நன்மை பயக்கும் தன்மை உடையது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் உண்மையிலேயே தனித்துவமான ஒன்றாகும். இது, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நலனுக்காக, ஆனைமலையின் மலைப்பகுதி, சமவெளிகளில் மேற்கு நோக்கி பாயும் 8 ஆறுகளின் திசைதிருப்பலையும் ஒருங்கிணைப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது. கேரள மாநிலத்தின் சித்தூர்புழாவில் உள்ள தற்போதைய நீர்ப்பாசன முறையை நிலைப்படுத்துகிறது.
சுரங்கப்பாதைகள் கொண்ட அணைகள் 8 ஆறுகளில் கட்டப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் ஆறுகளில் தேங்கி நிற்கும் நீரை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களின் சமவெளிகளுக்கும், கேரள மாநிலத்தின் சித்தூர் பகுதிக்கும் திருப்பி விடுகின்றன. இந்த பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய கூறுகள் 10 அணைகள், 4 மின் உற்பத்தி நிலையங்கள், 6 பிரதான சுரங்கங்கள் மற்றும் 7 பாசன கால்வாய்களைக் கொண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட எட்டு அணைகள்: மேல் நீரார் வியர்; கீழ் நீரார் அணை; சோலையாறு நீர்த்தேக்கம்; ஆனமலையாறு நீர்த்தேக்கம்; பரம்பிக்குளம் நீர்த்தேக்கம்; துணக்கடவு நீர்த்தேக்கம்; பெருவாரிப்பள்ளம் நீர்த்தேக்கம்; ஆளியாறு நீர்த்தேக்கம் ஆகியவை.
இந்த நீர்த்தேக்கங்களின் உபரி நீரைத் திருப்பிவிட சுமார் 6 சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன: அவை மேல் நீரார் சுரங்கப்பாதை, கீழ் நீரார் சுரங்கப்பாதை, சோலையாறு சுரங்கப்பாதை, பரம்பிக்குளம் சுரங்கப்பாதை, சர்க்கார்பதி சுரங்கப்பாதை, நவமலை சுரங்கப்பாதை ஆகியவை ஆகும். சுமார் 185 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 4 முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவை கீழ்வருமாறு:
சோலையாறு மின் உற்பத்தி நிலையம் எண். I
சோலையாறு மின் உற்பத்தி நிலையம் எண். II
சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையம்
ஆளியாறு மின் உற்பத்தி நிலையம் (நவமலை)
எனவே, பிரதமர் வந்து தொடங்கி வைப்பது என்பது ஆச்சரியமில்லை.
அன்றிருந்த பிரதமரான ஜவஹர்லால் நேரு வருவதென ஏற்பாடு ஆயிற்று. டாப்ஸ்லிப் விழாக் கோலம் பூண்டது. பிரதமரைப் பிரமாதமாக வரவேற்கத் திட்டமிடப்பட்டது. அதன் பகுதியாக, பிரதமர் நேருவை ஒரு முகாம் யானை மாலையிட்டு வரவேற்கச் செய்வது என்று முடிவாயிற்று. எல்லோரும், அது ஒரு துருதுருவென இருக்கும் குட்டி யானையாக இருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்தனர். அப்படிப்பட்ட குட்டி, சுப்பிரமணியைத் தவிர வேறு யார்? எனவே, சுப்பிரமணியை நன்கு பழக்கினர். அதுவும் ஒத்திகையில் சொன்ன ஆளுக்கு மாலை போட்டது.
விழா, டாப்ஸ்லிப்பில், கெஸ்ட் ஹவுஸ் கீழுள்ள புல்வெளியில் என்று முடிவு செய்யப்பட்டது. அது, வண்டிகள் எளிதில் வந்து சேரத் தோதுவான இடம். அங்கு சிற்றுண்டி சாலையும் இருந்தது. எல்லோரும் விழாவிற்கு வருகை தந்த பிரதமர் நேருவைப் பார்க்கவும், முடிந்தால் கை குலுக்கவும் தயாராக வந்திருந்தனர். விழாவில், பிரதம விருந்தாளிக்கு மாலை அணிவிக்கும் தருணம் வந்தது. பிரதமர் உடன் முதலமைச்சர், அமைச்சர்கள், கன்ஸர்வேட்டர் ஆண்டியப்பன், டிஎப்ஓ ஒளிமுத்து, பரம்பிக்குளம் திட்ட பொறியாளர்கள், மேலதிகாரிகள், டாக்டர் கே என ஒரு பட்டாளமே நின்று கொண்டிருந்தனர். சுப்பிரமணி மாலையுடன் அந்தக் கூட்டத்தை அணுகினான். என்ன அவன் மனதில் ஓடியதோ, தெரியவில்லை. பாகனின் வழிகாட்டுதலை மீறி, டாக்டர் கேவை நோக்கி நேரே சென்று மாலையிட முனைந்தான்!
உடனே சுதாரித்த பாகனும் மற்றவர்களும் சுப்பிரமணியைப் பிடித்து திரும்பக் கொண்டு வந்தனர். மாலையை டாக்டர் கேயின் கழுத்தில் போட்டிருந்தால், ஒரு விரும்பத்தகாத விளைவை உண்டாக்கி இருக்கலாம். உடனே, ஐஜி யானையிடம் மாலையைக் கொடுத்து, பிரதமர் நேருவுக்கு அணிவிக்கச் செய்தனர். ஐஜி, ஆஜானுபாகுவான ஒரு கொம்பன். முகாமின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற யானை. எனவே, அந்த நிகழ்வு எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றது. இந்தச் சின்ன பிறழ்வு பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. எல்லோரும் பெருமூச்சு விட்டனர். பெரும் அவப்பெயர் இல்லாமல் தப்பித்தனர். குட்டி யானைக்கு டாக்டர் கே நன்றாக பரிச்சயப்பட்ட நபர் என்பதோடு, முகாமில் எல்லோரும் அவரிடம் பழகும் விதத்தையும் பார்த்திருக்கிறது. அதனால், அதன் அறிவில் அவருக்குத்தான் மாலை இட வேண்டும் என்று தோன்றி இருக்கலாம். இல்லை, களேபரத்தில், தெரிந்த ஆளுக்கு மாலையைப் போட்டு விடலாம் என்று நினைத்திருக்கலாம். நம்மால், இன்று அதை ஊகிக்கவோ, உணரவோ இயலாது. எனக்கு இச்சம்பவம், டாக்டர் கேயின் யானைகளுடனான உறவுக்கு மற்றொரு உரைகல் என்றே தோன்றுகிறது. எந்த இடத்திலும், யானைகள் அவரை உணர்ந்து கொள்கின்றன என நான் எடுத்துக் கொள்கிறேன்.
(தொடரும்)