Skip to content
Home » யானை டாக்டரின் கதை #13 – ஐஜி என்ற அற்புத யானை

யானை டாக்டரின் கதை #13 – ஐஜி என்ற அற்புத யானை

டாக்டர் கேயின் முதல் பகுதி டாப்ஸ்லிப் அனுபவத்தை முடிக்கும் முன், நான் அவரது செல்லப் பிள்ளையான ஐஜியைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. இந்திய நூலான மதங்க லீலாவில், நான்கு வகையான யானைகள் குறிப்பிடப்படுகின்றன. முதல் வகை பத்ரா அல்லது அரச வகை; இரண்டாவது மந்த வகை; மூன்றாவது ம்ருகா– மானைப் போன்றது; நான்காவது மிஸ்ர அல்லது கலவையானது. டாக்டர் கேவும் பல இடங்களில், யானைகள் நடத்தையாலும், பண்பாலும் வேறுபடும் என்று நினைத்தார்.

மனிதர்களைப்போல தனித்துவம் யானைகளில் தென்பட்டது அல்லது உள்ளது என்பது பல சமயங்களில் நிரூபணம் ஆன ஒன்று. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. காரணம், ஜேன் கூடாலின் சிம்பன்ஸி குரங்குகளின் ஆராய்ச்சியில் இது தெளிவு படுத்தப்பட்டுள்ளது. யானைகளும் அதுபோலத் தனித்துவம் காட்டின எனப் பல யானைகளுடன் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் அடுத்துப் பழகிய யாரும் சொல்வர். அந்த வகையில், ஐஜி ஒரு ராஜரீகமான (அரச வகை) யானை என்பது டாக்டர் கேயின் முடிவு. அதைப் பார்த்த எல்லோரும் இந்தக் கூற்றை ஒப்புக் கொள்வார்கள். காரணம், ஒன்பது அடி உயரமும், 3.8 டன் எடையும் கொண்ட ஓர் ஆஜானுபாகுவான கொம்பன் யானை, ஒருபோதும் (மதத்தில் இருந்த போதும்) அட்டகாசம் (நம் பத்திரிக்கைகள் சொல்வதுபோல) செய்ததில்லை. எப்போதும் அமைதியாக, பண்புடன் நடந்துகொண்டதால், பத்ரா யானை ஆகத்தான் இருக்க வேண்டும்.

நான் பலரிடம் பேட்டி காணும்போது ஐஜியைப் பற்றிக் கேட்கக் கேட்க, என்னுள் ஓர் ஆதங்கம் எழுந்தது உண்மைதான். அந்தக் காலத்தில் நானும் டாப்ஸ்லிப்பில் இல்லாமல் போனேனே என்று வருந்தினேன்.

எலிபன்ட் மென் என்கிற பிபிசியின் படத்தில், டாக்டர் கே ஐஜியைப் பற்றி குரல் தழுதழுக்கப் பேசுகிறார். ’ஐஜி ஓர் உன்னதமான கொம்பன். அவன் என் கூடப் பிறந்த சகோதரன்போல. அவனுடன் நான் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் பழகியிருந்தேன். அவன் இறந்த செய்தி கேட்டபோது என் உறவினர் ஒருவர் இறந்ததுபோல உணர்ந்தேன். ஒரு காட்டு யானையால் கோரமாக தாக்கப்பட்டு இறந்தான்’. இதைச் சொல்லும் போது அவர் குரல் அழும் நிலையில் இருப்பதை நாம் நன்கு உணரலாம். இதே போன்ற உணர்வுகளை நாம் இன்று காணும் மூத்த பாகன்களிடமும், அவரவர் யானைகளைப் பற்றிப் பேசும்போது காணலாம். அவர்களைப் பொறுத்தவரை, யானைகளும் அவர்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினர்தான். பல பாகன்கள் வீட்டில் குட்டி யானைகள் குழந்தைகளுடன் சேர்ந்து உறங்குவதைக் காணலாம். அவர்களிடையே அப்படி ஓர் உறவு மற்றும் நெருக்கத்தை நாம் பார்க்கலாம். சமீபத்தில் வந்த எலிபன்ட் விஸ்பரர் என்ற குறும்படமும் இந்தப் பாசப் பிணைப்பைத்தான் காட்டுகிறது. காளன் என்ற பாகன் ஐஜியை எப்படிப் பழக்கி இருந்தார் என்று கேட்கும்போது, இவை எல்லாம் உண்மையா என்று தோன்றும். அந்த அளவிற்கு ஐஜியின் நடத்தை இருந்தது என்பதற்கு இன்று நம்மிடையே இருக்கும் ஸ்ரீதர் சாட்சி.

இப்போது, ஐஜியின் கதைக்கு வருவோம். தற்போது டி.எப்.ஓவாக திருவாரூரில் இருக்கும் திரு. ஸ்ரீகாந்த் கூறுகிறார்: ‘நான் சின்ன வயதில் (அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படிக்கும்போது), என் தம்பியுடன் டாப்ஸ்லிப் போவேன். காரணம், என் தந்தை அங்கு சரகராக பணி புரிந்துகொண்டு இருந்தார். டாக்டர் கே முகாமிற்குப் போகும்போது, எங்களையும் அழைத்துக் கொண்டு போவார். அங்கு போனதும், நாங்கள் ஐஜி யுடன் விளையாடுவோம்; அதன் கொம்புகளைப் பிடித்து தொங்குவோம். எந்தப் பயமும் தெரியாது. டாக்டர் கே இருக்கும் தைரியம். எல்லா யானைகளுடனும் சுவாதீனமாகப் பழகி விளையாடுவோம். இன்று அப்படி செய்வோமா என்பது சந்தேகம்தான். அன்று பாகன்களும், யானைகளை அடக்கி ஆளும் திறமையுடன் இருந்தனர்.

ஒருமுறை, மதிய வெயில் சுட்டெரித்தது. அதனால், என் தம்பி ஐஜியின் கீழ் சென்று உட்கார்ந்து கொண்டான். நிழல் நன்றாக இருந்ததால். ஐஜி மிகவும் ஆஜானுபாகுவான யானை என்பதால் அதன் நான்கு கால்களுக்கிடையில் நல்ல நிழல் பரப்பு இருந்தது. என் தம்பி அங்கே சுகமாக இருந்தான். வெயில் மாறும்போது, அதாவது சூரியன் வானில் ஏறும்போது, நிழல் விழுவது மாறுவது இயற்கை. ஆனால், பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த ஐஜியும், நிழல் தம்பியின் மீது இருக்குமாறு, அந்த வெயிலின் கோணத்திற்கேற்ப சற்றே நகர்ந்து நகர்ந்து கிட்டத்தட்ட நேராக வந்துவிட்டது. என் தம்பியின் மேல் நிழல் எப்போதும் படுமாறு பார்த்துக்கொண்டது. இன்றும் என்னால் ஐஜி யின் அந்த அறிவை நம்ப இயலவில்லை; மறக்கவும் இயலவில்லை. அந்த அளவிற்கு ஐஜி அறிவாற்றல் கொண்ட ஒரு யானை.’

0

சவாரி செல்லும் யானைகள், கோவில் விழாக்களில் பங்கு பெறும் யானைகள், மேலே உள்ள மனிதர்களை அல்லது பொருட்களை கணக்கில் கொண்டு, வாயில் அல்லது மரங்களின் கீழே செல்லும்போது அதற்கேற்றாற்போல், குனிந்தோ அல்லது ஒதுங்கியோ செல்வது இயல்பான ஒன்று. ஆனால், அதை உணர்ந்து நடக்கச் செய்யும் அனிச்சையான அந்த அறிவு எப்படி வந்தது என்று நாம் யோசிப்பதே இல்லை. வெட்டிய மரம் அடுக்கும் பணி செய்யும் யானைகள் எவ்வாறு அவற்றை முறையாக அடுக்குகின்றன. ஒரு கட்டுக்குச் சரியாக இத்தனை மரம் என்று கணக்கிடுகின்றன என்பது ஆச்சரியம்தான். அது போல ஐஜி சற்று நம்ப இயலாத அறிவுத்திறன் கொண்டிருந்தது என்பதற்குப் பல நிகழ்வுகள் உண்டு. அவற்றில் சிலவற்றை நாம் இங்கு பார்க்கலாம்.

அன்று டாக்டர் கே முகாமிற்கு வந்ததும், கிடைத்த முதல் செய்தி, ஐஜி முதல் நாள் இரவு மேய்ச்சலுக்குக் காட்டுக்குள் சென்றபோது, காட்டு யானைகளுடன் ஏற்பட்ட சண்டையில், படுகாயம் அடைந்தது என்பதுதான்! மதத்தில் இருக்கும் காட்டு ஆண் யானைகள் சற்று நிதானமிழந்து இருக்கும். வேறு எந்த யானையைக் கண்டாலும், தாக்கும். முகாம் காட்டுக்குள் இருப்பதால், அவை சில நேரம் உள்ளே வருவதும் இயல்புதான். சில நேரங்களில் அந்தச் சண்டைகள் தீவிரமடைவதும் உண்டு. அப்படி ஒரு நிகழ்வில், காட்டு யானைகளை விரட்டி விட்டு ஐஜி நின்றாலும், சண்டையில் காயங்கள் ஏற்படுவது இயல்புதானே.

விழுப்புண்களுடன் நின்ற ஐஜியைப் பார்க்க டாக்டர் கே விரைந்தார். அந்த இரவில், ஐஜி இரண்டு கொம்பன்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. எனவே சேதாரம் அதிகம். பத்தொன்பது இடங்களில் காயங்கள். சில மிக ஆழமான காயங்கள்; சில தலையின் கீழ்; சில பக்கவாட்டில் எனச் சற்று கவலை அளிப்பதாகத்தான் இருந்தன. அன்று ஸ்ரீதரும்கூட இருந்தார். தந்தையுடன் முகாமுக்கு விஜயம். யானையைப் படுக்க வைத்து புண்களுக்கு மருந்திடலாம் என்றால், பக்கவாட்டில் உள்ள புண்கள் தரையில் பட்டுத் தொற்று ஏற்படலாம்; மேலும் அந்தப் புண்களுக்கும் மருந்து போட வேண்டும். நமக்குச் செய்வதுபோல கட்டு போட முடியாது. யானையின் உயரத்திற்கும் அகலத்திற்கும் பேண்டேஜ் துணி போட முடியாது. டாக்டர் கே யோசித்தார். பின் ஐஜியிடம் பேசினார்!. ‘டேய், நான் தலையில கட்டு போடனும்னா, உன் தந்தத்து மேலே ஏறிதான் செய்யனும். பேசாமக் கொள்ளாம ஒரு அரை மணி நேரம் சும்மா அப்பிடியே நில்லு’ என்று கூறினார்.

ஐஜி என்ன புரிந்து கொண்டதோ, பாகன்கள் உதவியுடன் டாக்டர் கே அதன் இரண்டு தந்தங்களின் மேலே ஏறி ஒரு சரியான நிலையில் நிற்க உதவியது. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, டாக்டர் கே சொன்னதுபோல, ஆடாமல் அசையாமல் ஒரே நிலையில் நின்றது. பாகன்களும், ஸ்ரீதரும் தேவைப்பட்ட உபகரணங்கள், மருந்துகளைத் தர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. சின்னச் சின்ன எலும்புத் துண்டுகள், பிய்ந்த தசைத் துணுக்குகள் என எல்லாவற்றையும் எடுத்து விட்டு மருந்திட்டு, பின் பஞ்சிட்டு மூடி, பிளாஸ்திரி இட்டு நிலைப்படுத்தினார். சில காயங்களுக்குத் தையல் போடவும் நேர்ந்தது. இப்படி ஐஜிக்கு அன்று ஒரு கண்காணாத காட்டில், எந்தவித வசதிகளும் அற்ற சூழலில், மிகத் திறமையாக டாக்டர் கே சிகிச்சை செய்தார். என் ஒரே வருத்தம், அந்த நிகழ்வை ஆவணப்படுத்த முடியாமல் போனதே என்பதுதான்.

இன்றுபோல அன்று படம் எடுக்க மொபைல் போன்கள் கிடையாது; ஆவணப்படம் எடுக்க ஆட்கள் கிடையாது. மற்றொரு விஷயம், இந்த நிகழ்வுகள் எல்லாம் அந்தந்த நேரத்துக்கு ஏற்றாற்போல், இருக்கும் வசதிகளை வைத்து களத்தில் முடிவு செய்து செயல்படுத்தியவை. ஒரு புகழுக்கோ, பேருக்கோ அல்லது விளம்பரத்திற்கோ செய்யப்பட்டவை அல்ல. அங்கு அடிபட்டு நிற்கும் யானைக்கு ஆசுவாசம் தர ஆத்மார்த்தமாக, அங்குள்ள எளிய மக்களின் உதவியுடன், இருக்கும் சில மருந்துகளைக் கொண்டு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்யப்பட்ட மருத்துவம். அதில் பெரும் பங்கு டாக்டர் கேயின் அணுகுமுறையும் யோசனையும் செயல்திறனும் மட்டும்தான். ஆயினும், அதன் விளைவு நம்ப இயலாத முடிவுகளைத் தந்தது. ஐஜி பல ஆண்டுகள் நலமுடன் வாழ வழி வகுத்தது.

இதைக் குறித்து, டாக்டர் கே எலிபன்ட் மென் என்கிற பிபிசியின் படத்தில், மேற்கு வங்கத்தில், ஜதா பிரசாத் என்ற வேறொரு யானைக்குச் சிகிச்சை செய்யும்போது தெளிவாக எடுத்துரைக்கிறார். சில ஆவணங்களும் இதைப் பற்றிப் பேசுகின்றன. டாக்டர் கே கம்பீரமாக ஐஜியின் கொம்புகளின் (தந்தங்களின்) மேல் நின்றுகொண்டு (கிட்டத்தட்ட 8 அடி உயரத்தில்) அதன் காயங்களுக்கு மருந்து போடும் காட்சியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்ற குறை எனக்குக் கடைசி வரை இருக்கும்.

அதேபோல மற்றொரு முறை, ஐஜி மதத்தில் இருக்கும்போது, அருகில் இருந்த நீரோடைக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது. அது முகாமில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த இடம். அங்கு ஒரு சின்னப் பழங்குடியினர் குடியிருப்பு (10 வீடுகள் உள்ள சின்ன குடியிருப்பு) வரும் வழியில் இருக்கும். அன்று, அந்த ஒற்றையடிப் பாதையில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. குழந்தையின் தாய் தூரத்தில் நீரோடையில், துணி துவைத்துக் கொண்டோ, குளித்துக்கொண்டோ இருந்திருக்கிறார். ஐஜி அவர்கள் ஓடைக்கு வந்த பின்னர் வந்திருக்கலாம். அழும் குழந்தையைக் கண்ட ஐஜி, அந்தக் குழந்தையை மென்மையாகத் துதிக்கையில் தூக்கிக் கொண்டு சென்று அந்தக் குடியிருப்பில் இருந்த குடிசையின் வாசலில் வைத்து விட்டு முகாமை நோக்கி நடந்தது. இத்தனைக்கும் ஐஜி மதத்தில் இருந்தது. டாக்டர் கே அதனால்தான் ஐஜியை ஒரு கனவான் என்று சொல்கிறார். எப்படி ஜிம் கார்பெட் புலியை கனவான் என்று சொல்கிறாரோ அதுபோல.

இவற்றுக்கெல்லாம், சிகரம் வைத்ததுபோல இருப்பது, ஐஜியின் பெருங்குணம். பெருந்தன்மை என்றுகூடச் சொல்லலாம். எல்லா யானைகளுக்கும், குளிப்பாட்டிய பின்னர் உணவு கொடுப்பார்கள். அது கேழ்வரகு, வெல்லம், சுக்கு, அரிசி மாவு, கொள்ளு போன்றவற்றை வேகவைத்து, பின் ஆற வைத்து கட்டிகள் ஆக்குவர். யானையின் அளவு, வேலைத் தேவைக்கேற்ப உப்பும் சேர்க்கப்படும், .ஒவ்வொரு யானைக்கும், அதன் எடை, பாலினம் (ஆண், பெண்), வயது, இவற்றிற்கேற்ப கட்டிகளின் எண்ணிக்கை இருக்கும். 10 அல்லது 14 என்று. ஐஜி மட்டும், சரியாக 14 கட்டிகளைத் தின்று விட்டால், அந்த இடத்தில் நிற்காது. ராஜ நடையில் திரும்பி அதன் இடத்திற்கு போய் விடும். தாமதம் செய்யாமல், 14 கட்டிகள் சாப்பிட்டதும் நடையைக் கட்டிவிடும். ஒரு சில யானைகள் ஒன்றிரண்டு கட்டிகள் அதிகம் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லாது. இது, ஐஜிக்கு எண்ணவும் தெரியும் என்பதைக் காட்டுகிறது. விலங்குகளின் நுண்ணறிவு குறித்து இன்றும் பல விஷயங்கள் நமக்குச் சரிவரத் தெரியவில்லை என்பதே உண்மை. பழைய சில ஆராய்ச்சிகளைக் கொண்டு இன்னும் நாம் இந்தத் துறையில் புழங்கிக் கொண்டிருக்கிறோம். நிலைமை மாறும் என்று எதிர்பார்ப்போம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *