Skip to content
Home » யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்

யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்

வாழ்க்கை இப்படிச் சுகமாகப் போய்க்கொண்டிருந்தால், சரியாகுமா? ஏதேனும் தடங்கல் வந்தால்தானே சுவாரஸ்யம் இருக்கும். நான் முன்பே சொன்னபடி, டாப்ஸ்லிப்பில் யானைகள் குறைந்து போனதால் அங்கு இத்தனை கால்நடை அதிகாரிகள் தேவையா என்ற பேச்சு வந்தது. திரு.கோபாலன் ஓய்வு பெறும் நிலையில் இருந்ததாலும், முதுமை காரணமாகவும், அங்கேயே இருக்க வைக்கப்பட்டார். டாக்டர் கே இளைஞராக இருந்ததாலும், பணியில் முதுநிலை அடையாதவர் (ஜூனியர்) என்பதாலும் அவரை விடுவிப்பது என்று முடிவு செய்யப்பட்டு, அவர் சிதம்பரத்துக்கு உதவி கால்நடை மருத்துவராக மாற்றப்பட்டார்.

திரு.கோபாலனின் வேண்டுகோளோ செல்வாக்கோகூட இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். யார் கண்டது? எந்த ஒரு செயலும் செவ்வனே போய்க் கொண்டிருந்தால், கடவுளுக்குப் பொறுக்குமா? இடையில் ஒரு ஆப்பு செருகினால்தானே, அவரை நினைப்பார்கள். வேறு வழியில்லாமல், டாக்டர் கே சிதம்பரம் புலம் பெயர்ந்தார். டாப்ஸ்லிப்பில் இருந்தபோது அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. டாப் ஸ்லிப்பில் பிறந்த காரணத்தால் கடைசியாக பிறந்த பெண்ணுக்கு வனஜா என்று பெயரிட்டார் டாக்டர் கே. சமஸ்கிருதத்தில் வன என்றால் காடு என்று பொருள்; ஜா என்றால் ஜனித்தவள் அல்லது பிறந்தவள் என்று பொருள். இப்படி வனஜாவின் பிறப்பு சிதம்பரம் மாற்றலில் முடிந்தது. சரி, சிதம்பரத்திலாவது நிம்மதியாகத் தொடர இயன்றதா என்றால், அதுவுமில்லை. ஒன்பது மாதங்களுக்குள், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு மீண்டும் மாற்றப்பட்டார்.

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி விரிவாக்கத்தில், மருத்துவ மாணவர்களுக்கு, படிப்புச் சுற்றுலா, மரபியல் பாடங்களுக்கு விரிவுரையாளராக இருந்தார். அது 1962 முதல் 65 வரை. டாக்டர் கே எதிர்பார்த்தது, 1963இல் டாக்டர் கோபாலன் ஓய்வு பெறுவதால், பதவி உயர்வுடன் (உதவி மருத்துவரிலிருந்து மருத்துவர்) கோபாலனின் இடத்தில் அமருவார் என்று. விதி வேறு விதமாக வேலை செய்தது. டாக்டர் கோபாலன், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இருமுறை பணி நீட்டிப்பு செய்து கொண்டார். 1963இல் இருந்து 1965 வரை. டாக்டர் கேவுக்கு முதுகலை பட்டம் இல்லை என்று சொல்லி, பதவி உயர்வு தள்ளிப்போனது.

முதுகலை முழு நேர படிப்புக்குச் சற்று செலவு செய்ய வேண்டி வரும். டாக்டர் கேயின் குடும்பம் சராசரி நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தது. அவருடன் அவரது தம்பி தங்கைகள் சுமார் ஐந்து பேர்; தாய் தந்தை இருந்தனர். எனவே, எல்லா நடுத்தர வர்க்கக் குடும்பங்களைப்போலப் பொருளாதாரச் சிக்கல் நிறைந்த வாழ்க்கைதான். இதனிடையில், முதுகலை முழு நேரப் படிப்புக்கான செலவு செய்ய இயலாத நிலை. தம்பி, தங்கைகளின் படிப்புக்கு வேறு செலவு செய்ய வேண்டும். இது பற்றி டாக்டர் கே கிரிஸ் வெம்மருடன் பேசும்போது வேடிக்கையாகச் சொல்கிறார், ‘என்னுடைய முத்தாத்தா காலத்தில் இருந்து நாங்களெல்லாம் அரசாங்கத்தின் அடிமைகள். அதாவது, எல்லோரும் — என் தாத்தாவின் அப்பா, தாத்தா, அப்பா, நான் என நாலு தலைமுறையாக அரசு ஊழியர்கள். வேறு ஒன்றும் தெரியாது!’.

இப்படி, மாதச் சம்பளத்தை நம்பி வாழும் ஒரு சாதாரணக் குடும்பம்; கடமைகள் அதிகம்; செலவு பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டிய கட்டாயம். இதில் மேற்படிப்பு என்பது எட்டாக் கனவுதான்.

இதற்கிடையில், திரு.மந்திரமூர்த்தி போன்ற நல்ல மனிதர்கள் உதவியால் அவருக்குச் சில வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில், கால்நடை மருத்துவத் துறை சார்பில் அமெரிக்கா சென்று முதுகலைப் படிப்பு படிக்கச் சில முயற்சிகள் நடந்தன. ஆயினும், வேறு சில காரணங்களால் அது ஈடேறவில்லை. டாக்டர் கேவும் வெம்மருடனான நேர்காணலில் இது பற்றித் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனாலும், துறை ரீதியாக அவரை உத்திரபிரதேசத்தில் உள்ள முக்தேசரில், ஆடுகள் குறித்த மேல் படிப்புக்கு (பட்டயப் படிப்பு) 1965இல் அனுப்பினர். அது முடிந்து அவர் திரும்பி வந்ததும் (1966 முன் பகுதி) சாத்தூரில் உள்ள ஆட்டுப் பண்ணைக்குக் கால்நடை மருத்துவராக அனுப்பப்பட்டார். டாக்டர் கேவும் அங்கு ஏழு மாதங்கள் பணிபுரிந்த நிலையில், 1966இன் பிற்பகுதியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி டாப்ஸ்லிப்புக்கு மீண்டும் மாற்றப்பட்டார்.

இது குறித்து, அத்தியாயம் எட்டில் நான் விரிவாகப் பேசி விட்டதால், இங்கு திரும்பச் சொல்ல வேண்டியதில்லை. எது எப்படியோ, யானைகளுடன் அவர் தொடர வேண்டும் என்பது விதி என்றுதான் நான் உணர்கிறேன். அல்லது இறைவனின் திருவுளம். அது தமிழக முகாம் யானைகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் நல்ல காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இம்முறை அவர் டாக்டர் கோபாலனின் இடத்தில் வந்ததால், அவரது தலைமை அலுவலகம் கோவை என்றானது. அங்கிருந்து, வாரம் ஒரு முறை முகாம்களுக்குப் போவது என்று முடிவானது. ஆனால், 1966 முதல் 1973 வரை அவர் முகாம்களுக்குப் பேருந்தில்தான் போக வேண்டியிருந்தது. தனி வண்டி கிடையாது.

அதாவது, டாப்ஸ்லிப் வர வேண்டும் என்றால், கோவையிலிருந்து பொள்ளாச்சி வரை பேருந்து; பொள்ளாச்சியிலிருந்து டாப்ஸ்லிப் வரை மீண்டும் பேருந்து. இதில், டாப்ஸ்லிப்புக்கு அடிக்கடி பேருந்து இருக்காது. எனவே, அந்த நேரத்தை அனுசரித்து வர வேண்டும். பின்னர், எப்போதும்போல டாப்ஸ்லிப்பிலிருந்து முகாம் வரை நடை. முதுமலை போவது சற்றே சுலபம். ஏனென்றால், கோவையிலிருந்து ஊட்டி வரை அதிகமான பேருந்துகள் இருக்கும். அங்கிருந்து மசினகுடிக்கு அடிக்கடி பேருந்துகள் இருக்காது என்றாலும், டாப்ஸ்லிப்போல மோசமில்லை. முகாமும், மசினகுடி, கூடலூர் சாலையை ஒட்டித்தான் இருக்கிறது. இருந்தாலும், எப்படியும் எட்டிலிருந்து பத்து மணி நேரம் ஆகி விடும், முகாமை அடைய. மேலும், மொத்த தமிழ்நாட்டுக்கும் அவர் ஒருவர்தான் வனத்துறை மருத்துவர். மொத்த மாநிலத்தில் உள்ள பிரச்னைகளையும் பார்க்க வேண்டிய கட்டாயம். அன்று யானைகளைக் கொண்டு மர வேலைகள்; இடையிடையே யானை பிடித்தல்; தேவை உள்ள இடங்களுக்கு யானைகளை மாற்றுதல்; கோவில் யானைகளின் பராமரிப்பு; என்று கிட்டத்தட்ட அவருடைய முழு நேரமும் பயணத்திலும் பணியிலும்தான் செலவிடப்பட்டது. இருப்பினும், மாதத்தில் டாப்ஸ்லிப்பிலும் முதுமலையிலும் குறைந்தது நான்கு நாட்கள் (ஒவ்வொரு முகாமிலும்) அவர் செலவிடுவார்.

கூடுதலாக இருப்பாரே அன்றி குறைக்க மாட்டார். நான் முன்பே பல இடங்களில் சொன்னதுபோல, அவரது ஆட்களை வேலை வாங்கும் திறன் அருமையாக இருந்ததால், பெரிய சிக்கல்கள் இல்லாமல், பணிகள் செவ்வனே நடந்தன. இப்போது அதிகம் பேசப்படும் பார்டிசிபேடிவ் மேனேஜ்மென்ட் என்ற பங்கேற்பு மேலாண்மை தத்துவத்தை அவர் அன்றே (உணராமல்) செயல்படுத்தினார். அல்லது அவருடைய குணம் அதை ஒட்டி இருந்ததால், எல்லாம் எளிதாகப் போயிற்று என்றும் சொல்லலாம்.

திரு.ராவ் என்ற ஒரு கன்சர்வேட்டர், 1973இல் ஓய்வு பெற்றுப் போகும்போது, அவரது வண்டியை டாக்டர் கேவுக்கு மாற்றி ஆணை தந்து விட்டுச் சென்றார். ‘இனி இந்த வண்டி உங்களுக்குக்கானது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்’ என்று சொல்லி விட்டுப்போனார். அன்றிலிருந்து, முகாம்களுக்கு கோவையிலிருந்தே வண்டியில் செல்வது தொடங்கியது. கிரிஸ் வெம்மர் அழகாகச் சொல்வார், ‘ஆனைமலையில் டாக்டர் கேயின் பணி முடிந்ததும், அவரது ஜீப் ஓட்டுநர் டாக்டர் கே வை முதுமலைக்குக் கொண்டு சேர்ப்பார். அங்கு பணி முடிந்ததும், கோவையில் உள்ள வீட்டிற்குப் போய், குடும்பத்தைக் கவனிப்பார். இது ஒரு சுழற்சியாக வருடம் முழுவதும் நடக்கும்.’ இடையிடையில் தேவைக்கேற்ப, மற்ற இடங்களுக்குப் போவதும் நடக்கும். நான் முன்பே பல இடங்களில் சொன்னதுபோல, டாக்டர் கே எல்லோரிடமும் நல்ல நட்பு கொண்டிருந்தார். மேலதிகாரிகள் மட்டுமில்லாது கடைநிலை ஊழியர்களான காவடி வரை அவரிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தனர். அதனால், எந்தவொரு வன உயிருக்கு மருத்துவம் பார்க்க நேர்ந்தாலும், டாக்டர் கேதான் என்ற நிலை ஏற்பட்டது. வனத்துறை உயர் அதிகாரிகள் அவர் மேல் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தனர். ஒருமுறை அவரிடம் பழகியவர்கள் அவரை மறந்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றிருந்த உயர் அதிகாரிகளிடம் நான் நேரில் சென்று பேட்டி எடுத்தபோது, இது எனக்குப் புரிந்தது. அவரை ஒரு ஆஸ்தான குரு என்ற இடத்தில் வைத்திருந்தனர் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த அளவிற்கு ஓர் ஆளுமையாக டாக்டர் கே விளங்கினார். இப்படியாக விளக்கினார் வெம்மர்.

அந்த வகையில், திரு.பீட்டர் என்ற மத்தியப் பிரதேசப் பணி நியமன அதிகாரி, கோவையில் இருந்த தெற்குச் சரக பயிற்றுக் கல்லூரி முதல்வராக இருந்தார். அவர் டாக்டர் கேவுடன் நல்ல நட்பில் இருந்தார். அவர் திரும்ப மத்தியப் பிரதேசம் மாற்றலானதும், கான்ஹா புலிகள் காப்பகத்தின் கன்சர்வேட்டர் ஆக நியமிக்கப்பட்டார். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு யானை சவாரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். அவருக்கு உடனே டாக்டர் கேதான் நினைவுக்கு வந்தார். அவரிடம் பேசி, நிலவரத்தைத் தெரிந்து கொண்டு, தமிழ்நாடு வனத்துறையை முறையாகத் தொடர்பு கொண்டு ஐந்து யானைகளை கான்ஹா புலிகள் காப்பகத்திற்கு அனுப்ப அனுமதி பெற்றார். காரணம், மத்தியப் பிரதேஷில் சமீப காலம் வரை யானைகள் கிடையாது. அந்த ஐந்து யானைகளை டாப்ஸ்லிப்பில் இருந்து தேர்ந்தெடுத்து டாக்டர் கே, கான்ஹாவிற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இது போன்ற வேலைகள் ஒரு கால்நடை மருத்துவருடையது அல்ல என்றுதான் எல்லோரும் சொல்வர். ஆனால்,டாக்டர் கேயின் அணுகுமுறை வேறுபட்டது. சரியான யானைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது மட்டும் அல்லாது, சரியானபடி நல்ல முறையில் ரயிலில் கொண்டு செல்ல, தேர்ந்த பாகன்களையும் காவடிகளையும் எடுத்து, தானே கூடச் சென்று யானைகளைப் பத்திரமாகச் சேர்த்து விட்டுத்தான் அவர் திரும்பினார். இது தேவையற்ற வேலை என்று இன்றுள்ளோர் எண்ணலாம்.

காரணம், பொள்ளாச்சியில் இருந்து ஹோஷங்காபாத், ரயிலில் (அந்த நாட்களில்) போக சுமார் இரண்டு வார காலம் ஆகும். டாப்ஸ்லிப்பில் இருந்து பொள்ளாச்சிக்கு யானைகளை நடத்திக் கொண்டுபோக இரண்டு நாட்கள் ஆகும். ஏனெனில், சோர்வடையாமல் இருக்க இரவில் மட்டும்தான் நடத்திக் கொண்டு போவார்கள். இப்படிப் பல இடங்களில் பிரச்னைகள் வர வாய்ப்பு இருந்ததால், டாக்டர் கே தானும் சென்றார். யானைகளை ஒவ்வொரு நாளும் நன்கு கவனித்தும், பாகன்களையும் காவடிகளையும் உற்சாகப்படுத்தியும், டாக்டர் கே யானைகள் எந்த வித உடல்நலக் குறைவும் இல்லாதவாறு, கான்ஹா சேருவதை உறுதிப்படுத்தினார். இத்தனை நீண்ட பயணத்தில், மொழி தெரியாத பாகன்களையும் காவடிகளையும் நம்பி யானைகளை அனுப்புவதும், இடையில் யானைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் வரும் விளைவுகளை கருத்தில் கொண்டும் அவர் தானும் சென்றார்.

இல்லையென்றால், யானைகளைத் தெரிவு செய்வதோடு அவர் நிறுத்திக் கொண்டிருப்பார். இந்தக் குணங்கள், அதாவது செய்வன திருந்தச் செய் என்ற எண்ணம், இடையில் வரக்கூடிய பிரச்னைகளை அனுமானிக்கும் தன்மை, இவைதான் டாக்டர் கேயின் புகழுக்குக் காரணம். அதோடு, யானைகளின் நலன்தான் முதலில் அவர் நினைவில் நிற்பது. பின்னர், யானைகளின் தோழர்களான பாகன்களும் காவடிகளும். அதன் பின்தான் மற்றவை. இதை நான் எழுத நேரம் பிடிக்கவில்லை. சும்மா ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகி இருக்கலாம்.

ஆனால், யானைகளைத் திறந்த சரக்குப் பெட்டிகளில் கொண்டு செல்ல, தனி அனுமதி வாங்க வேண்டும். யானையுடன் பாகன் சேர்ந்து பயணிக்க அனுமதி வேண்டும். குறைந்தபட்ச உணவு (யானைகளுக்கான) இலை, தழை இருக்க வேண்டும். இடையிடையில் டாக்டர் கே இறங்கி எல்லாம் செவ்வனே நடைபெறுகிறதா என்று பார்க்க வேண்டும். இப்படிப் பதினைந்து நாட்கள் பயணித்து, இலக்கை அடைந்து யானைகளைப் பத்திரமாக சேர்க்க வேண்டும். இதற்கு எத்தனை மெனக்கெட வேண்டும் என்பது சொல்லாமலேயே புரியும்! ஆனால், டாக்டர் கே குழு முயற்சிக்குப் பேர் போனவர் மட்டுமல்ல, யாரை எங்கே எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற துறையிலும் கில்லாடி. அவரது குழு அவரது எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் செயல்படும் வகையில் இருக்கும். இல்லையென்றால், நினைத்தாற்போல் இந்தப் பெரும் பணியை முடிப்பது இயலாது. அன்று இன்றுள்ளதுபோல ஜேசிபிக்கள், கிரேன், அசுர லாரிகள் கிடையாது. அந்தக் குறைபாடுகளின் இடையில், இத்தனை கச்சிதமாக இது போன்ற ஒரு கஷ்டமான வேலையை டாக்டர் கே செய்தார் என்றால், அது அவரது குழுவுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம். செயற்கரியவை இந்தக் குழுவுக்கு ஒரு சாதாரண விஷயம் என்பதை நீங்கள் போகப் போகப் பல சம்பவங்களில் உணர்வீர்கள்.

இதன் காரணமாகவே வனத்துறை அதிகாரிகள் அவரை தனி இடத்தில் வைத்து மரியாதை செய்தனர். அன்று பிசிசிஎப்ஆக இருந்த சித்திரப்பு, வன உயிரின காப்பாளர் சுக் தேவ், இன்று பிசிசிஎப்ஆக இருக்கும் திரு.உதயன் எனப் பலரும் டாக்டர் கே என்றால் இன்றும் கண்கள் பனிக்கப் பேசுவதை நான் பார்க்கிறேன். பல ஆராய்ச்சியாளர்கள் அவர் நினைவில் மயங்கி நிற்பதைப் பார்க்கிறேன். பாகன்களும் காவடிகளும் உணர்ச்சிப் பிழம்புகளாக மாறுவதைக் காண்கிறேன். ஒரு தனி மனிதன் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று பிரமித்து போய் நிற்கிறேன். சமீபத்தில் ஜபல்பூரில் நடந்த கால்நடைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியக் கால்நடை மருத்துவர்கள் இணைந்து நடத்திய ஒரு பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு மாநாட்டு முதன்மை விருந்தினர் திரு.ஸ்ரீவாஸ்தவா மற்றும் முதிய அறிஞர்கள் டாக்டர் கேயின் ஆளுமையைப் பற்றி புகழ்ந்துரைக்கக் கேட்டேன். அவர் பெயரில் ஒரு விருது வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தனர். அதை டாக்டர் கேயின் மகன் ஸ்ரீதர் வழங்கினார். இந்தியாவில் உள்ள பல கால்நடை மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இடையில் டாக்டர் கே உயரிய இடத்தில் இருப்பதை உணர்ந்தேன். எப்போதும்போல, டாக்டர் கேயின் நாட்களில் நான் இல்லாமல் போனேனே என்று வருந்துகிறேன். எப்பேர்ப்பட்ட ஒரு வாய்ப்பை இழந்து விட்டேன் என்று மருகுகிறேன்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *