ஆனைமலை போன்ற வன உயிரினங்கள் வாழும் காட்டில் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது எளிதல்ல. அதுவும் இரு மாநிலங்களுக்கிடையே அமைத்து பயன் தரக்கூடிய வகையில் அமைப்பது அதைவிடக் கடினமான பணி. அந்தக் காலகட்டத்தில், இயற்கைப் பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் ஒரு கொள்கையோ, சட்ட திட்டங்களோ இல்லாமல் இருந்ததால், இந்த பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் சற்று எளிதாகச் செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இது, அன்று தொடங்கப்பட்ட பல திட்டங்களுக்குப் பொருந்தும். இதனால் நேர்ந்தது என்னவென்றால், வன உயிரினங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கம் அன்று பலருக்குத் தெரியவில்லை. இன்றுவரை, இத்திட்டத்திற்காகக் குடையப்பட்ட சுரங்கங்கள், சமமட்ட கால்வாய்கள் போன்றவற்றில் வன உயிரினங்கள் சிக்கி இறந்து போவது தொடர் கதையாக இருக்கிறது. இந்தத் திட்டம் ஒரு பொறியியல் அற்புதம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லைதான். உலகில் வேறு எங்கும் சமமட்ட கால்வாய்கள் மூலம் இதுபோல பாசனத்திற்கு, இத்தனை தூரம் நீரை கொண்டு சென்றதில்லை என்பதும் உண்மைதான். அன்றிருந்த பொறியாளர்களின் திறமை போற்றத்தக்கது என்பதும் உண்மைதான். ஆயினும், வன உயிரினங்கள் இந்த நீரோடும் சுரங்கங்கள், சமமட்ட கால்வாய்கள் போன்றவற்றில் சிக்கி இறந்து போவது ஒரு சோகமான அம்சம்தான். காரணம், இவை திறந்தவெளி அமைப்பைக் கொண்டிருப்பதுதான். மேலும், பெரும்பாலானவை, பாறைகளையோ மலையையோ குடைந்து அல்லது வெடி வைத்துத் தகர்த்தோ உருவாக்கியவை. ஆகவே நன்கு சிமெண்ட்டால் பூசப்பட்ட நாட்டுக் கால்வாய்களைப்போல இருக்காது; சுற்றிலும் தடுப்புகள் கிடையாது.
திறந்தவெளி அமைப்பைக் கொண்டிருப்பதால், குறைந்தது ஒருபுறம் காட்டை ஒட்டி இருக்கும். அதனால், அங்கு வரும் விலங்குகள் தவறி உள்ளே விழுந்து விடும் அபாயம் அதிகம். அவற்றின் ஆழம் குறைந்தது பத்தில் இருந்து பன்னிரண்டு அடி இருக்கும்; அகலம், ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடி இருக்கும்; யானை போன்ற பெரிய விலங்குகள்கூட உள்ளே விழுந்து விட்டால், வெளியே வருவது சுலபமல்ல. அவற்றைத் தூக்கி எடுக்கவும் அன்று உபகரணங்கள் கிடையாது.
நாம் 1960களின் பிற்பகுதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். சுற்றிலும் அடர்ந்த காடு, வண்டிகள் போக இயலாதவாறு. காட்டினுள் சாலையும் கிடையாது! இந்தச் சுரங்கங்கள் மற்றும் சமமட்ட கால்வாய்களில், சுழித்துக் கொண்டு ஆரவாரத்தோடு தண்ணீர் பொங்கிப் புனலாகப் பாயும்போது, பார்க்கவே அச்சமூட்டும்படி இருக்கும். அத்தனை ஆழத்தில், முழு வேகத்தில் நீர் சுழன்று கொண்டு வரும்போது, யானைகள் கூட சமாளிக்க முடியாது. வெளியே வர இயலாதபடி இரு கரைகளும் கரடு முரடாக இருப்பதாலும், ஆழம் அதிகமாக இருப்பதாலும், நீரின் வேகம் இழுத்துச் செல்வதாலும், எந்த மிருகத்திற்கும் சமாளித்து வெளியே வருவது இயலாத செயல்தான். அன்றைய காலகட்டத்தில், மனித சக்தியும், மனிதப்படையும்தான் மீட்புப் பணியில். ஜேசிபிக்களோ, கிரேன்களோ கிடையாது. கயிறும் மனிதர்களும்தான் இந்த நீரின் வேகத்தையும் ஆழத்தையும் மீறி விலங்குகளை மீட்க வேண்டும். எனவே நூற்றில் ஒரு முயற்சி ஜெயிக்கும்.
இங்கு, இது பற்றிப் பேச வேண்டிய அவசியம், டாக்டர் கே இது போன்ற மீட்புப் பணியிலும் ஈடுபட்டதால்தான். தூணக்கடவில் இருந்து வெளியேற்றப்படும் நீர், சுரங்கம் வழியாகச் சென்று சர்கார்பதி செல்லும் சமமட்ட கால்வாய் போய் சேரும். தூணக்கடவு அணையில் இருந்து ஆரவாரமாகப் புறப்படும் நீர், கீழே உள்ள பன்னிரண்டு அடி ஆழமுள்ள சுரங்கத்துள் நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து, சுழித்துக் கொண்டு ஆர்ப்பரித்து ஓடும். சுரங்கத்துக்கும், நீர் விழும் இடத்திற்கும் இடையில் சிறிய இடைவெளி ஒன்று பெரும் பள்ளமாக இருக்கும். அங்குதான் நீர் விழுந்து சுரங்கத்துக்குள் பாயும்.
இந்தப் பகுதி கேரளத்தில் இருக்கிறது. இதன் ஆழம் 20-25 அடி இருக்கும்.


நீரின் வேகம், மிக அதிகமாக இருந்த சமயம். காரணம், மழைக் காலம். இந்தச் சம்பவம் 1968இல் தீபாவளி முடிந்த ஒரிரு நாட்களில் நடந்தது. தங்களது வழக்கமான ரோந்து பணியில் சென்ற மின்வாரிய ஊழியர்கள், தூணக்கடவு சுரங்கத்துக்குள் இரண்டு யானைகள் சிக்கி அல்லல் படுவதைப் பார்த்தனர். உடனே தூணக்கடவு சரகருக்குத் தகவல் தரப்பட்டது. சரகர் சென்று பார்த்தபோது, யானைகள் வலு இழந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தன. அத்தனை ஆழத்தில், கரடு முரடான பாறைப் பிளவின் இடையில் அவை தத்தளித்துக் கொண்டிருந்தன. ஒரு தாயும் குட்டியும்தான் இப்படிக் கிடந்தன. நீரின் வேகம் மிக அதிகமாக இருந்ததாலும், சுழல் போல உருண்டு இழுத்ததாலும், யானைகள் மிகவும் போராடி களைத்துப் போய் இருந்தன.
வழக்கம்போல எஸ்ஓஎஸ், டாக்டர் கேவுக்கு அனுப்பப்பட்டது. தூணக்கடவு சரகர் பொள்ளாச்சி வந்து, டாக்டர் கேவுக்குத் தந்தி கொடுத்தார். அந்தக் காலத்தில் அதுதான் விரைவான செயல்பாடு. தீபாவளி முடிந்து சற்று ஓய்வில் இருந்த டாக்டர் கே உடனே புறப்பட்டு வந்தார். துணைக்கு அவர் மகன் ஸ்ரீதரையும் அழைத்துக் கொண்டு விரைந்தார். என்ன பெரிய விரைவு. பொள்ளாச்சி, டாப்ஸ்லிப் வரை பேருந்து, பின்னர் நடை அல்லது வண்டி. எப்படியும் எட்டு, பத்து மணி நேரம் விரயமாகி இருக்கும். டாக்டர் கே வந்து பார்க்கும்போது, யானைகளின் கையறு நிலை தெளிவாகப் புரிந்தது.
மின்வாரிய ஊழியர்கள் கண்டுபிடிக்கும்போதே, கிட்டத்தட்ட ஒருநாள் கடந்திருக்கிறது. டாக்டர் கே வர மேலும் ஒருநாள் கடந்துவிட்டது. ஆக, முழுமையாக 48 மணி நேரம் யானைகள் போராடி, களைத்துப் போனதோடு, உயிருக்குப் போராடும் நிலையையும் கடந்து, செயலிழந்துவிட்டன. உடனடியாக என்ன செய்யலாம் என்பதை டாக்டர் கேவும் சரகரும் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய நிலை. ஏனெனில், மின்வாரிய ஊழியர்கள், வேறு துறையைச் சார்ந்தவர்கள். இந்த நடவடிக்கைகளில் அனுபவம் இல்லாதவர்கள். ஒரே நல்ல விஷயம், அங்கு ஒரு பலகைப் போன்ற அமைப்பைப் பயன்படுத்தி, பள்ளத்தின் ஆழத்திற்குச் செல்லும் வகையில் ஒரு தூக்கி (மின் தூக்கி- லிஃப்ட்) அணையில் இருந்து நீர் வெளியேறும் இடத்திற்கு அருகில் இருந்தது. ஆனால், அதைப் பயன்படுத்த இயலாத வகையில் தண்ணீரின் வேகமும் சுழலும் இருந்தன. மேலும், அது சாதாரண நாட்களில் சில வேலைகளுக்குப் பயன்படும் எந்திரம். ஒரு 100 கிலோ வரை கனம் தாங்கக்கூடியது. யானையைத் தூக்குவதற்கு அல்ல. அந்தத் தூக்கி மூலம் ஷட்டர்களில் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்வர். அதனுடன் ஒரு பலகை போன்ற நீள மரத் துண்டும் வைத்திருந்தனர். அது ஏதாவது இறக்கத்திலோ, ஏற்றத்திலோ செல்லப் பயன்படும். இந்தச் சூழலைப் பார்த்துப் புரிந்து கொள்ளவும், முடிவுகளையும் எடுக்க இன்னொரு நாள் போயிற்று.
அசாதாரணமான இந்தச் சூழ்நிலையில், விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதோடு, முடிவைப் பற்றி கவலைப்படவும் கூடாது. என்றாலும், நிலைமையின் தீவிரம், முயற்சி பலனளிக்கும் தன்மை, இவற்றையும் ஆய்ந்தே முடிவெடுக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது. ஏனெனில், இயற்கையின் சீற்றத்திற்கு முன் மனித முயற்சிகள் எப்போதும் வெல்ல இயலாது என்பது யதார்த்தமான உண்மை. அப்போது அவர்கள் செய்யக் கூடியது, நீர் வெளியேறும் அளவைக் குறைத்து, அதன் பின் யானைகளை மீட்க முடியுமா என்று பார்ப்பதுதான். உடன் சில மின்வாரிய ஊழியர்களும் இருந்ததால், அவர்களிடம் பேசி நீர் வெளியேறும் அளவைக் குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தமாக நிறுத்துவதும் முடியாது. நல்ல வேளையாக, அணைக்கு வரத்து பயப்படும் வகையில் இல்லாததால், அது சாத்தியமாயிற்று. இப்போது, எப்படி யானைகளைக் கட்டி இழுப்பது என்ற பிரச்சனை. நீர் வெளியேறும் அளவு குறைந்தாலும், பள்ளத்தில் (சுரங்க வாயிலருகில்) இறங்கி எத்தனை பேர் யானையைக் கட்டி இழுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான். அத்தனை ஆழத்தில், நீரின் வேகத்தை எதிர்த்து, மூன்றரை டன் எடையுள்ள யானையைக் கரை சேர்க்க இயலுமா? ஆட்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டால் என்ன செய்வது? யார் இறங்குவார்கள்? இப்படிப் பல எண்ணங்கள், யோசனைகள் அங்கு விவாதிக்கப்பட்டன. பின்னர், டாக்டர் கே ஒரு முடிவுக்கு வந்தார். யாராவது இரண்டு பேர் அந்தத் தூக்கியின் மூலம் குட்டி யானையின் அருகே இறங்கி, முடிந்தால் சுருக்கிட்டு அதை வெளியே இழுப்பது; அது வெற்றிகரமாக முடிந்தால், தாயை மீட்பது பற்றி யோசிப்பது என்று முடிவு செய்தார். அதற்கான உதவிகளை மின்வாரிய ஊழியர்கள் செய்வது என்று முடிவாயிற்று. தூக்கி அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? யார் இறங்குவது என்பது பற்றி டாக்டர் கே பெரிய கவலை கொள்ளவில்லை.
ஏனென்றால், அங்குள்ள பழங்குடி மக்களுக்கு, குறிப்பாக காடர்களுக்கு, இந்த வகை வெள்ளத்தை, நீரின் அமானுஷ்ய வேகத்தை அடிக்கடி கண்டு கொண்டிருப்பதால், பயம் கிடையாது. காட்டு வாழ்க்கையில் அது ஒரு அங்கம். மேலும், யானைகளைச் சுருக்குப் போட்டுப் பிடிப்பதில் தேர்ந்தவர்கள் என்பதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். காட்டைப் பற்றிய முழுமையான அறிவும், அதன் இயற்கை இடர்பாடுகளை நன்றாக அறிந்தவர்கள் பழங்குடியினர். காரணம், அங்கேயே வாழ்ந்து, நாள்தோறும் மாறும் ஆறுகளையும் விலங்குகளையும் அனுசரித்து வாழும் கலையையும் பயின்றவர்கள் அவர்கள். எனவே, அவர்களில் ஒருவர், அந்தத் தூக்கியின் வழியாக நீர் மட்டம் வரை இறங்கி, மிதந்து கொண்டு இருக்கும் குட்டி யானையைச் சுருக்கிடுவது என்று முடிவாயிற்று. சுருக்கிட்டவுடன், குட்டியை கரையை நோக்கி இழுத்து ஒரு ஓரமாக மீண்டும் சுழலில் சிக்காமல் பார்த்துக் கொள்வது; அப்போது தூக்கியைக் கீழே நீரில் இறக்கி, குட்டி யானையை அதன் மேலே மிதக்கும்படி செய்வது என்று முடிவாயிற்று. இடையில் ஒரு பலகையையும், குட்டியின் அடியில் அது கரையை ஒட்டி இருக்கும்போது நிறுத்துவது. அதுவரை காடர் இனத்தவர் மிதந்து கொண்டே இவற்றைச் சரிவர செயல்படுத்துவது என்று தீர்மானித்தார் டாக்டர் கே.
காடரை, தனியே ஒரு கயிறு கட்டி தூக்கிக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது என்று திட்டம். எனக்குச் சொல்வதற்குக் கடினம்; உங்களுக்குப் புரிவது கடினம். நேரில் பார்த்த ஸ்ரீதருக்கேகூட இப்போது தெளிவாகச் சொல்வது எளிதல்ல. காடர் தனிக் கயிற்றால் கட்டப்பட்டு இறக்கப்பட்டார்; தூக்கியும் இறக்கப்பட்டது. குட்டியின் அருகே சென்று சுருக்கைச் சரியாகப் போட்டார் நண்பர் காடர். பின் மெதுவாகக் குட்டியைக் கரைக்கு அருகில் கொண்டு வந்தார். தூக்கிக்கு மேலே வருமாறு கயிற்றால் அதை வழிப்படுத்தினார். அந்தப் பெரிய சதுரப் பலகையும், குட்டியின் கீழே இருக்குமாறும், கரையின் அருகே இந்த மொத்த விஷயமும் நடக்குமாறு உறுதிப்படுத்தப்பட்டது. இல்லையென்றால், நீரின் வேகம் எல்லாவற்றையும் கெடுத்து விடும்.
குட்டி, பலகை, தூக்கியின் மேல் மிதக்கும் நேரம், தூக்கியை ஜாக்கிரதையாக மேலே ஏற்றினர். காரணம், பலகையுடன் குட்டியும் அதில் வர வேண்டும். இதை மிதந்து கொண்டிருந்த காடர் நிலைப் படுத்தினார். ஒரு வழியாக எல்லாம் செவ்வனே நடந்து குட்டி மெதுவாக மட்டத்தின் அளவில் வந்தது. அதன் பின் தூக்கியை கரையை நோக்கி இழுத்த பின், குட்டி தரையில் வந்து இறங்கியது. இதற்குப் பல முறை முயற்சி செய்த பின்தான் பலன் கிட்டியது. ஒரே முயற்சியில் அல்ல!
கரையில் குட்டி இறங்கியதும், தயாராக இருந்த கும்கி யானை ஐஜியும், முகாமின் மற்ற பாகன்கள்களும் வழிநடத்தி முகாமுக்குக் கொண்டு போயினர். இதுதான் திட்டமிடுதல் என்பது. டாக்டர் கேயின் சிறந்த குணங்களில் ஒன்று, சரியான திட்டமிடலும் சீரான குழு முயற்சியும். இங்கு முகாம் பாகன்களான மலசர்கள், கும்கிகளுடன் காத்திருப்பது; காடர்கள் யானையைப் பிடிக்க உதவுவது; மின்வாரிய ஊழியர்கள் தூக்கியைச் சரியான முறையில் இயக்குவது; சரகரும் டாக்டர் கேவும் எந்த நிலையிலும் அவர்களுக்கு உதவவோ, அல்லது சரியாகச் செயல்படவோ தயாராக இருப்பது என மிகச் சரியாக திட்டமிட்டு அதைத் துல்லியமாக நிறைவேற்றினார். அதைப் போல, பழங்குடி இன மக்கள், தங்கள் இயல்பான நுண்ணறிவால் திறம்பட செயல்பட்டு, இந்தத் திட்டம் வெற்றி பெற உதவினர். அவர்கள் துணை இன்றி இந்தச் செயல் இத்தனை வெற்றி அடைந்திருக்காது என்பதும் உண்மை. காட்டின் பல இடங்களில், பல நேரங்களில், எல்லா இடர்பாடுகளையும் சந்தித்து இருப்பதால், அவர்களுக்கு கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் (இடர்பாடு மேலாண்மை) கை வந்த கலை. நமக்கு மலைப்பாகத் தெரியும் விஷயங்கள் அவர்களுக்குச் சாதாரணம். காரணம், தினமும் ஏதோ ஒரு சிக்கலைச் சந்திப்பதென்பது காட்டில் வெகு சகஜம். வெள்ளம் ஆற்றில் கூடியிருந்தால், மாற்று வழி அல்லது கட்டைகளைப் போட்டு கடப்பது; யானைகள் கூட்டமாக இருந்தால், அரிவாள் கொண்டு ஓசை எழுப்பி வழி ஏற்படுத்துதல்; என அந்தந்த நேரத்திற்கேற்ப செயல்படும் திறன் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும். அதைச் சரியானபடி முறைப்படுத்த ஒருவர் இருந்தால், செய்யும் செயல் செவ்வனே முடிந்து விடும். அதைத்தான் டாக்டர் கே செய்தார்.
மற்றவர்களைப் போல, யார் படித்தவன், பதவியில் இருப்பவன் என்று அகந்தை கொள்ளாமல், நமது நோக்கம் குட்டியை மீட்பது என்று செயல்பட்டதால், வெற்றி கிட்டியது. அந்தப் பணிக்கு ஏற்ற ஆள் யார் என்று தேர்ந்து, அதை அவர் கையில் கொடுத்ததால், எல்லாம் சரியாக நடந்தது. திருக்குறளில் சொன்னது போல,
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
எல்லாம் சரி அய்யா, தாய் யானை என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா? இந்தப் போராட்டத்தில், மூன்று நாட்களாகப் போராடி மிகவும் பலவீனமான தாயை மீட்பது முடியாத செயல் என்பதை டாக்டர் கே முதலிலேயே உணர்ந்து விட்டதால், அதற்கு முயற்சி செய்யும் நேரத்தில், குட்டியைக் காப்பாற்றுவதுதான் யதார்த்தமானது, நடைமுறைக்கு ஒத்தது என்று முடிவு செய்தார். ஒரு பிரசவத்தில், தாயும் குழந்தையும் ஆபத்தில் இருக்கும் நேரம், யார் உயிரைக் காப்பது என்பது போன்ற ஒரு நிலை இது. அன்று அங்கு இருந்த சூழலில், குட்டியைக் காப்பது என்று அவர் தீர்மானித்தார்! காரணம், மூன்றரை டன் எடையுள்ள யானையைத் தூக்கியால் தூக்கவும் முடியாது; மற்றும் இருந்த ஆட்களால் அந்த யானையைக் கட்டி நீரின் வேகத்திற்கு எதிராக இழுக்கவும் முடியாது. இரண்டு வயது குட்டியை மீட்பது எளிது மட்டுமல்ல, மீட்பாளரின் உயிருக்கும் உத்தரவாதம் உண்டு. சில நேரங்களில், சில கடினமான அல்லது சமயோசித முடிவுகள் எடுக்க நேரிடும். அந்த முடிவு உணர்வு அல்லது இரக்கத்தின் பால்பட்டதாக இருக்க அவசியமில்லை. அவற்றை நாம் பின்னர் பகுப்பாய்வு செய்யும்போது பல வகை விமர்சனங்கள் வரும்; வரலாம். ஆனால், அன்று முடிவெடுக்கும் நிலையில் விமரிசகர் இல்லை என்பதுதான் உண்மை. தாய் யானை இறந்து மிதந்து வரும்போது, கால்வாயின் ஒரு குறுகலான பகுதியில் மறித்து மீட்கப்பட்டு, பின்னர் எரிக்கப்பட்டு விட்டது என்பது அன்றிருந்த சரகர் நாகராஜன் சொல்லக் கேள்வி. அதையேதான் ஸ்ரீதரும் ஆமோதிக்கிறார்.
இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அடர்ந்த காடுகளுக்கிடையில், இது போன்ற வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, அங்குள்ள வன உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வின் மூலம் அறியலாம். தொழில்நுட்ப முன்னேற்றமும், ஆற்றல் பெருக்கமும் தேவைதான். ஆனால், அதே அளவு, காடுகளும் காட்டுயிர்களும் காக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமான ஒன்றுதான். இது குறித்து 2013, மே மாதம் 5ஆம் தேதியில், தி இந்து நாளேட்டில், திரு.ஒப்பிலி எழுதிய கட்டுரை, விரிவாக விவாதிக்கிறது. அதாவது, இத்திட்டம் வந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும், வன உயிரினங்கள் இந்தக் கால்வாய்களிலும் சுரங்கங்களிலும் சிக்கி இறப்பது வேதனைக்குரியது. அன்று 1968இல் எந்த வசதிகளும், உபகரணங்களும் இல்லாத காலத்தில் வேறு வழியில்லை என்று நாம் சொல்லலாம். இன்று அப்படியில்லையே. இன்றும் வன உயிர் பாதுகாப்பு பின் தள்ளப்படுகிறது. பின்னொரு சமயம், டாக்டர் கேயின் சில யதார்த்த, சமயோசித முடிவுகள் பற்றி நான் எழுதுவேன். அப்போது அவர் எந்த அளவிற்கு ஒரு யதார்த்தவாதி என்று விளங்கும். இத்தனை களேபரங்களுக்கு நடுவில் ஸ்ரீதர் தீபாவளிக்கு வாங்கிய சட்டை, கால்சராயுடன் இந்த மூன்று நாட்களும் சுற்றிக் கொண்டிருந்தார். இத்தனை நாட்கள் எடுக்கும் என்று தெரியாததால், மாற்று உடை கொண்டு வரவில்லை.
(தொடரும்)