Skip to content
Home » யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில், மற்றொரு அசம்பாவிதம் சர்கார்பதி குகை வாயிலின் அருகே நிகழ்ந்தது. மேலே தூணக்கடவில் இருந்து வரும் தண்ணீர், சர்கார்பதி சமமட்ட வாய்க்காலில் சேரும் இடத்தில் சுரங்க வாயில் நல்ல ஆழமானதாக இருப்பதோடு, அகலமானதாகவும் இருப்பதால், நீர் வெகு வேகமாகச் சுழித்துக் கொண்டு ஓடும். சுமார் 15 அடி ஆழமும், 20 அடி அகலமும் கொண்ட அந்த வாயில் இருந்து நீர் புனலாகப் புரண்டு வரும்போது எந்தத் தடையும் தவிடு பொடியாகி விடும். யானைகள்கூட எதிர்த்து நிற்க முடியாது. சுரங்கத்தில் இருந்து வரும் நீர் போதாதென்று, வாகரை ஆற்றில் (காட்டாறு) வரும் நீர் சுரங்க வாயிலுக்கு மேலே உள்ள பள்ளத்தில் விழுந்து கடும் விசையுடன் சுரங்க வாயிலை வந்துசேரும். ஒரு பேரிரைச்சலோடு பொங்கிப் பிரவகிக்கும் வெள்ளமாக கரை புரண்டு இரண்டு வழியிலிருந்து சேர்ந்த நீர், கீழ் நோக்கிப் பயணிக்கும். அங்கு அகப்பட்ட எந்தப் பொருளும் அந்த வேகத்தை எதிர்க்க இயலாமல் திணறும். அதோடு, சுழலும் நீர் எல்லாவற்றையும் சுழற்றி அடித்துக் கொண்டு ஓடும். என்ன காரணத்தாலோ, ஆறு யானைகள் அந்த வாயில் பள்ளத்தில் விழுந்துவிட்டன. யாரும் நெருங்க இயலாத நிலை. யானைகளால் நீரின் வேகத்தை எதிர்த்துப் போராட இயலாத நிலை. முன்பே சொன்னதுபோல தீபாவளி முடிந்து ஒரு சில நாட்களே கடந்த நேரம். பருவமழை பொத்துக் கொண்டு பெய்தது. எல்லாக் கால்வாய்களிலும், நீரோடைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. யானைகள் சிக்கியதைப் பார்த்ததே பெரிய விஷயம். மீட்பு என்பது நினைத்துக்கூட பார்க்க இயலாத நேரம்.

இருந்தாலும், தெரிந்த பின் வாளாவிருப்பது சரியல்ல என்பதால், டாக்டர் கேவுக்குத் தகவல் தரப்பட்டது. அவர் வந்து சேர ஒரு நாள் கடந்தது, எப்போதும் போல. காரணங்களை நான் முந்தைய அத்தியாயத்தில் எழுதி விட்டேன். டாக்டர் கே வந்து பார்த்தபோது, மீட்பு என்பது முடியாது என்று விளங்கியது. மனித உயிர் மற்றும் பிறவுயிர் சேதாரம் இன்றி மீட்புப் பணி நடக்காது என்பதோடு, சரியான உபகரணங்களும் இல்லை. நீரின் வேகத்தைச் சமாளிக்கும் எந்த ஒரு பொருளும் இல்லை. அபரிமிதமான வெள்ளத்தின் வேகத்தைக் கண்டு துணிச்சலாக இறங்க யாரும் தயாரில்லை. தூணக்கடவில் நீரின் வேகத்தைக் குறைக்க ஷட்டர்களை மூடியதுபோல இங்கே செய்ய இயலாது. மேலும், இங்கு ஒரு காட்டாறு அருவியாக விழுந்து நீரின் வேகத்தைக் கூட்டி விடுகிறது. இந்த நிலையில், யானைகளை அப்படியே விட்டு விடுவதுதான் நல்லது என்று டாக்டர் கே முடிவு செய்தார். இருக்கும் நிலையில், அதுதான் சிறந்த முடிவு என்று அவர் நினைத்தார். இத்தனைக்கும் இடையே நல்ல வாய்ப்பு ஒன்றை அவர் கண்டார். ஒரே ஒரு யானை, கரை ஓரத்தில் வெள்ளத்தில் தடுமாறி மிதந்துகொண்டு இருப்பதைப் பார்த்தார். அதையாவது மீட்கலாம் என்று முடிவு செய்தார். நடு பள்ளத்தில் பயனில்லாத ஒரு வேலையைச் செய்வதைவிட, அந்த யானையை எப்படி மீட்கலாம் என்று அங்கிருந்த பாகன்கள், பழங்குடியினருடன் கலந்தாலோசித்தார். பின், மணல் மூட்டைகளை கரையோரம் ஒரு சாய்வு பலகைபோல நீரின் வேகம் குறைவாக இருக்கும் இடத்தில் அடுக்கி, அதில் யானையை வரச் செய்வது என்று முடிவாயிற்று.

இதுவும் ஒரு முயற்சிதான். நிச்சயம் பலன் தரும் என்று எண்ண முடியாத நிலை. ஆயினும், பெரு முயற்சிக்குப் பின் மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அடுக்கப்பட்டன. இடையறாத மழை. சரியான சாலையும் பெரிய வாகனங்களும் இல்லாத ஓர் இடம். பொறுமையாக, அந்த யானையைக் கரையோரம் அடுக்கப்பட்ட மூட்டைகளின் மேல் ஏறச் செய்தனர். அந்த யானையும், நிலைமையைப் புரிந்து கொண்டு, தன் முயற்சியைக் கை விடாமல் போராடி, மூட்டைகளின் மேல் ஏறிக் கரையை அடைந்தது. சிறிது நேரம், போராடிக்கொண்டு இருந்த மற்ற யானைகளைப் பார்த்தவாறு நின்றது; பின்னர் காட்டுக்குள் சென்று மறைந்தது. மற்ற யானைகள் பின்னர், சமமட்ட கால்வாயின் கீழ்ப் பகுதியில் இறந்த நிலையில் கரை சேர்ந்தன. நாம், அன்றுள்ள சூழ்நிலையில் இந்த நிகழ்வைப் புரிந்து கொள்ளவேண்டும். எந்தவொரு மீட்பு உபகரணங்கள் இல்லாத இடத்தில் அல்லது கிடைக்காத காலத்தில், மனிதச் சக்தியையும், கயிறு மற்றும் தொடக்க நிலை கருவிகளுடன் இது போன்ற சவாலான மீட்புப் பணிகளில் ஈடுபடுவது எத்தனை தூரம் பயனளிக்கும் என்பதை உணர வேண்டும். இதில், குழுவினருக்கு எந்தத் தீங்கும் வரக்கூடாது. சில நேரங்களில், யதார்த்தம் கடுமையாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை எனும்போது, நாம் யதார்த்தமான முடிவைத்தான் எடுக்க வேண்டும் என்பது டாக்டர் கேயின் அணுகுமுறை. உணர்ச்சி மேலீட்டில், இது போன்ற முடிவுகள் தவறாகப் பார்க்கப் படலாம். அது இயல்பு. ஆனால், நிதரிசன வாழ்வில், தர்க்கரீதியான முடிவுகளே சரியானதாக இருக்கும்.

இதற்கு, டாக்டர் கே மற்ற சில தருணங்களில் எடுத்த முடிவுகளை நாம் அறிந்தோம் என்றால், தெளிவாகப் புரியும். ப்ரதிபா சிங் என்ற கான்பூர் மிருகக் காட்சி சாலை இயக்குனர், 2002 இல், தனக்கு டாக்டர் கேவுடன் நேர்ந்த அனுபவத்தைக் கூறுகிறார்– ‘கான்பூர் மிருகக் காட்சி சாலையில் நான் சேர்ந்தது 2000இல். அங்கு இருந்த ஒரு பெண் யானைக்குத் திடீரென உடல் நலக் குறைவானது. கிட்டத்தட்ட இறக்கும் நிலை. அன்று 2002 ஆம் வருடம் நவம்பர் 6ஆம் தேதி. இரவு 11 மணிக்குப் பின் ஐந்து மணி நேரம் நானும், மிருகக் காட்சி சாலை கால்நடை மருத்துவர் திரிபாதியும் எங்களுக்குத் தெரிந்த வைத்தியம் எல்லாம் செய்து பார்த்து, சோர்ந்து போய் வீடு திரும்பினோம். கால்சியம் குறைபாட்டால் விழுந்து விட்டதோ என்று நினைத்து கால்போரால் (Calboral) கொடுத்தோம்; பின் பலவீனத்திற்குக் கொடுக்கும் கோன்சி ப்லெக்ஸ் (Conciplex) கொடுத்தோம். ஒன்றும் பயனில்லை. இரவு முழுவதும் தூங்காமல் கவலையாக இருந்து, பின், காலை ஏழு மணிக்கு டாக்டர் கேவுக்கு போன் செய்தேன். அதுதான் டாக்டர் கேவுக்கு என்னுடைய முதலும் கடைசியுமான போன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு யானையின் நிலையை விவரித்தேன்; கொடுத்த சிகிச்சையைச் சொன்னேன். டாக்டர் கே பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டார். எங்கள் பேச்சு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை நீண்டது. இறுதியில் அவர் சொன்னார்: ’அந்தப் பெண் யானையைச் சுட்டுக் கொன்று விடுங்கள். அவள் பிழைப்பது என்பது இப்போது நடக்காது. உங்களால் செய்யக் கூடியது, அவளது (யானையின்) துன்பத்தைத் தவிர்ப்பதுதான். மீண்டு வருவது இயலாத காரியம்’ என்றார். கீழே விழுந்த அந்த யானை மீளவில்லை. எட்டாவது நாள் இறந்துபோனது. நான் தொடர்பு கொண்ட மற்ற எந்தக் கால்நடை மருத்துவரும் இதுபோல பட்டவர்த்தனமாகப் பேசவில்லை; ஐயத்துக்கு இடமின்றி கருத்து சொல்லவில்லை. இந்த மாபெரும் யானை வைத்தியரைத் தலை வணங்குகிறேன்’.

டாக்டர் கே 2002இல் காலமானார் என்பது அதிகப்படியான தகவல்.

இதேபோல, நான் ஒரு சம்பவத்திற்குச் சாட்சியாக இருந்தேன். அந்தக் காலத்தில் (1980களில்) சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவில், எங்களது சென்னை இயற்கையாளர்கள் சங்கக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். டாக்டர் கே அந்தச் சங்கத்தின் தலைவராகச் சில ஆண்டுகள் இருந்தார். அந்த மாதம் (செப்டம்பர் என்று நினைக்கிறேன்) நானும், சில புதிய உறுப்பினர்களும் கலந்து கொண்டோம். எப்போதும்போல, அவரவர் அனுபவங்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த அந்த மிருகக் காட்சி சாலை மேலாளர், டாக்டர் கேயிடம் சென்று, ‘அய்யா, இங்குள்ள சிங்கவால் குரங்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. வந்து பார்த்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்’ என்றார். உடனே டாக்டர் கே எழுந்து, ‘பாய்ஸ், எல்லோரும் கூட வாங்க’ என்று எங்களையும் (சுமார் 20 பேர்) அழைத்துக் கொண்டு சிங்கவால் குரங்கு உள்ள கூண்டிற்கு நடந்தார். அன்றும் இன்றும், கிண்டி சிறுவர் பூங்காவில் சில மிருகங்கள், பறவைகள், மிருகக்காட்சி சாலைபோல வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. சிங்கவால் குரங்கு உள்ள கூண்டின் அருகில் வந்ததும், பார்த்துவிட்டுக் கூண்டைத் திறக்கச் சொன்னார். குரங்கு அரை மயக்கத்தில் இருப்பதுபோலத் துவண்டு கிடந்தது. அதை எடுத்து தாடையை அசைத்துப் பார்த்தார், டாக்டர் கே. பின் எங்களை நோக்கித் திரும்பி சொன்னார், ‘பாய்ஸ், இவனுக்கு டெடனஸ் (tetanus) வந்து விட்டதால், பிழைப்பது கடினம். முற்றிய நிலையில் இருப்பதால், சிகிச்சை பலன் தராது. இதன் அறிகுறி, லாக்டு ஜா, அதாவது இறுகிப்போன தாடை’ என்று சொல்லி, கிட்டித்துப்போன பற்களிடையே விரல்களை விட்டுத் தாடையைத் திறக்க முயற்சித்தார். முடியவில்லை. ‘இதுதான் பைனல் ஸ்டேஜ் ஆப் டெடனஸ்’, என்று விளக்கி விட்டு, ‘நான் இவனை மீளாத் துயிலில் ஆழ்த்தப் போகிறேன். அதுதான் இவனது துன்பத்தை விரைவில் போக்கும் மருந்து’ என்றார். எங்களில் பலருக்கு அது அன்று புரியவில்லை. மேலும் அவரது செயல் எங்களுக்கு இரக்கம் இல்லாத செயலாகப்பட்டது. எப்படியாவது முயன்று பார்க்க வேண்டாமா என்றும் தோன்றியது. அவரது அனுபவத்திற்கும் அறிவுக்கும் முன் நாங்கள் ஜுஜுபி என்று பின்னர்தான் உணர்ந்தோம்.

அதேபோல காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் யானையின் சிகிச்சை விஷயத்திலும், டாக்டர் கே வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருந்தார் என்பதை தீப்தா சித்திரப்பு எழுதியதில் இருந்து அறிகிறோம். தீப்தா கூறுகிறார்: ‘காமாட்சி கோவில் யானையின் கால் காயங்களுக்கு அவர் அளித்த சிகிச்சை, மிகத் தரமானது. அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் அக்கறையையும் பற்றிச் சொல்ல முடியாது. பாகனின் கொடூரமான சித்திரவதையால் அந்த யானை பட்ட துன்பம் மிக அதிகம். காலில் முள் கம்பியைச் சுற்றிக் கட்டி இருந்தான். அந்தப் புண் புரையோடிப் போய், முற்றிய செப்டிசீமியா போன்ற நிலையால் யானை துன்பப்பட்ட நேரம். சென்னை கால்நடைக் கல்லூரியில் வைத்து வைத்தியம் பார்த்தனர். ஆனாலும், முழுமையாகக் குணமாகவில்லை. டாக்டர் கே சொல்வார்– இதுவே காட்டில் நடந்திருந்தால், நான் முதல் நாளிலேயே அந்த யானையைச் சொர்க்கத்திற்கு அனுப்பியிருப்பேன் என்று. இது போன்ற இரக்கமற்ற செயல்களால், டாக்டர் கே யானைகளைக் கோவில்களில் வைத்திருப்பதை விரும்பவில்லை. காரணம், அங்குள்ள அதிகாரிகளுக்கு யானையைப் பற்றித் தெரியாது; பாகன்கள் அவற்றைப் பிச்சைக்காரர்கள் ஆக மாற்றுவதற்குக் கொடுமைப் படுத்துவார்கள். எனவே, நல்ல பராமரிப்பு சாத்தியம் என்றால் மட்டுமே யானைகளைக் கோவிலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்பார். அந்த யானையும் சில நாட்களில் சிகிச்சை பலனின்றி இறந்தது’. ஆனால், கோவில் யானை என்பதால், அவர்கள் விருப்பப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவற்றைப் படிக்கும்போது, டாக்டர் கே இரக்கமற்ற அல்லது தன் திறமையில் அதீத நம்பிக்கை கொண்ட ஒரு மருத்துவர் போலத் தெரியலாம். சாதாரணமாக நாம் பார்க்கும் மிருக நலன் ஆர்வலர்கள், எப்படியாவது அந்த விலங்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்களாகவும், விலங்கும் மனிதரைப்போல வாழ உரிமை உள்ளது என்றும் உணர்ச்சிப் பூர்வமாக இருப்பார்கள். வெகு சிலர்தான், அந்த விலங்கு படும் துன்பத்தையும் வேதனையையும் அறிவார்கள். அந்த நிலை கருணையின் உச்சகட்டம் என்றுகூடச் சொல்லலாம். அதனால்தான் அதன் ஆங்கிலப் பெயர் மெர்சி கில்லிங்க். அதாவது, கருணைக் கொலை. இன்றும் நம் நீதிமன்றங்களில், சிகிச்சை பலனின்றிப் பல்லாண்டுகளாக, கோமா நிலையில் உள்ள நோயாளிகளைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க மனு செய்வது வழக்கம். அதற்கு மருத்துவரும் பரிந்துரைப்பார். சிகிச்சை நீண்டால், வேதனையும் வலியும் சொல்லொணாத் துயரம் என்பது நிரூபிக்கப்பட்ட மருத்துவ அறிவு. சிகிச்சை பலன் தராத நிலையில் அல்லது பலன் தருமா என்ற சந்தேகம் உள்ள நிலையில்தான் இந்த அறுதி (கடைசி) முடிவை நோயாளியின் நலம் கருதி எடுப்பர். அங்கு உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை. கஷ்டமான மற்றும் தர்க்கரீதியான ஒரு சரியான தீர்வு என்பதை நாம் உணர வேண்டும். டாக்டர் கே அதற்கும் மற்ற விமர்சனங்களுக்கும் அஞ்சியதில்லை. இதுதான் ஒரு சிறந்த மருத்துவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

‘You have a right to perform your prescribed duties, but you are not entitled to the fruits of your actions.’ – Bhagavad Gita 2.47

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *