Skip to content
Home » யானை டாக்டரின் கதை #17 – ஆதரவற்ற யானைகள்

யானை டாக்டரின் கதை #17 – ஆதரவற்ற யானைகள்

சாதாரணமாக நமக்கு ஒரு சில வருடங்களிலேயே பல நிகழ்ச்சிகள் மறந்து போய்விடும். எனக்கு என்னுடன் படித்த பல நண்பர்களை இன்று நினைவுகூர்வது பெரிய சவாலாக இருந்தது. 1972ஆம் ஆண்டு பள்ளியில் எடுத்த ஒரு புகைப்படத்தை நண்பர்கள் அனுப்பி அதில்  இருந்தவர்களை அடையாளம் காண முடியுமா என்று கேட்டனர். என்னால் என்னையே அடையாளம் காண முடியவில்லை. மிகுந்த சிரமத்துடன் எட்டு பேரை (40 பேரில்!) அடையாளம் கண்டுபிடித்தேன். எவ்வளவு முயன்றும், பாக்கி உள்ளவர்களை என்னால் நினைவுகூர இயலவில்லை. ஆனால், முகாமில் பழகிய, பழக்கிய யானையைப் பொது இடத்தில் கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பின் அடையாளம் காண்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு சாதனைதான். அப்படி, வேலையில் ஈடுபாடும், அர்ப்பணிப்பும்  கொண்ட டாக்டர் கேவின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள் இவை.

டாக்டர் கேயை அறிந்தவர்கள், அவர் முகாமில் உள்ள எல்லா  யானைகளைப் பற்றியும் நன்கு அறிந்திருப்பதை வியப்புக்குரிய விஷயமாக  நினைக்க மாட்டார்கள். ஒவ்வொரு யானையின் குணம், வயது, தந்தை, தாய் பெயர், எங்கு பிடிக்கப்பட்டது என மொத்த ஜாதகத்தையும் அவர் நினைவில் வைத்திருப்பார். ஒவ்வொரு யானையுடனும் அன்புடன் பழகி நல்ல உறவைப் பேணிக் காப்பாற்றுவார். இதனால், யானைகள் அவரை எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டு நேசம் பாராட்டும்.

அருண் வெங்கட்ராமன் என்ற பேராசிரியர் சொல்கிறார், ‘எல்லா முகாம் யானைகளும் அவரை அடையாளம் கண்டு அருகில் வந்து உரசி, ஒரு முனகல் ஒலி எழுப்புவது, நண்பனைக் கண்டது போல் மகிழ்வது, இவையெல்லாம் ஆச்சரியம் இல்லை. காரணம், அந்த அளவிற்கு அவர் அவற்றுடன் நேசம் பாராட்டி, இனிப்புகளைக் (வெல்லம், கரும்பு) கொடுத்து பழகியிருப்பார்’ என்று. மீனா வெங்கட்ராமன் என்ற மற்றொரு வன உயிர் ஆராய்ச்சியாளர் சொல்கிறார், ’டாக்டர் கே ஒவ்வொரு யானையைப்  பற்றி விவரிக்கும்போதும் நமக்குக் கண்முன்னே அவற்றைப் பற்றிய தகவல்கள் ஒரு படம்போல விரியும்’ என்று.

இவ்வளவு கச்சிதமாக அனைத்து விவரங்களையும் ஒருவர் நினைவில் வைத்திருக்க முடியுமா என்று பலர் வியந்து போனதில் ஆச்சரியம் இல்லை. இங்கு அவர் எப்படி யானைகளைப் பிற இடங்களிலும் வெகு துல்லியமாக அடையாளம் கண்டார் என்பதோடு, யானைகள் எப்படி அவரிடம் குழந்தைபோலக் கட்டுப்பட்டன; அவையும் அவரை எப்படி அடையாளம் கண்டு கொண்டன என்பதைப் பார்ப்போம்.

1973 முதல் 1975 வரை (இரண்டு ஆண்டுகளுக்கு) ஹாசனூரில் பல யானைகள் பிடிக்கப்பட்டன. டாப்ஸ்லிப்பின் நம்பகமான, திறமையான, அனுபவம் வாய்ந்த யானைப் பாகன்கள், அவர்கள் குழுவினருடன் சேர்ந்து, இந்த நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டனர். டாப்ஸ்லிப்பின் அனுபவம் வாய்ந்த கும்கிகளான சரோஜா, பாண்டியன், லட்சுமணன், கார்த்தி, தேவ், சிவகாமி ஆகிய யானைகள், புளிஞ்சூர் அருகில் யானை பிடிக்கும் நடவடிக்கைகளுக்காக ஹாசனூருக்கு அனுப்பப்பட்டனர். இந்த யானைகள், அங்கு பல விலங்குகளைப் பிடிப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. தென்னிந்தியாவின் சிறந்த கும்கி யானை ‘கலீம்’, ஹாசனூரில் பிடிக்கப்பட்ட யானைகளில் ஒன்றாகும். இன்றும் ஓய்வு பெற்று டாப்ஸ்லிப்பில் உள்ளது. அந்த நாட்களில் இந்த கும்கி யானைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கால்நடையாகக் கொண்டு செல்லப்படுவது  வழக்கம். இன்று போல் வண்டிகள், மற்ற வசதிகள் இல்லாத காலம்.  இந்த விலங்குகள் டாப்ஸ்லிப்பில் இருந்து ஹாசனூருக்கு கால்நடையாகவே கொண்டு செல்லப்பட்டன. பகல் நேரத்தில் யானைகள் போதுமான தீவனமும் குடிநீரும் கிடைக்கும் இடத்தில் கட்டப்படும். மேலும், அனைத்தும் மருத்துவர் டாக்டர் கேவால் மட்டும் திட்டமிடப்படும். இந்த யானைகள் அன்றைய தினம் முகாமிடும் பகுதியை அவர்தான் தேர்ந்தெடுப்பார். இரவில், யானைகள் நடத்திக்கொண்டு போகப்படும். இது ‘அணிவகுப்பு திட்டம்’ என்று அழைக்கப்பட்டது. யானைகள் இலக்கை அடைய 3-4 நாட்கள் ஆகும்.

ஹாசனூரில் யானைகள் பிடித்து முடித்த பின், இந்த யானைகள் வழக்கம்போல் கால்நடையாக டாப்ஸ்லிப்பிற்குத் திரும்பி வந்தன. முதல் நாளில் யானைகள் சங்கிலியுடன் பண்ணாரி அருகே ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டன. அப்படியே அருகில் காட்டில் மேய வசதியாக, சங்கிலி, கால்களைச் சுற்றி விடப்பட்டு இருந்தது. அவை வேறு எங்கு போய் விட்டாலும், சங்கிலி இழுத்துச் சென்ற தடத்தை வைத்து அந்த யானையைத் திரும்ப தங்குமிடத்திற்கு பாகன்கள் கொண்டு வந்து விடுவர். அன்று கும்கி யானைகளில் ஒன்றான ‘கார்த்தி’ தனது சங்கிலியுடன் காட்டுக்குள் ஓடிவிட்டது. யானையைக் கண்டுபிடிக்க பாகன்கள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே ‘கார்த்தி’ தவிர அனைத்து யானைகளும் பாகன்களுடன் டாப்ஸ்லிப்பிற்குத் திரும்பின. யானை கார்த்தி காவலில் இருந்து தப்பி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த  கார்த்தி 25லிருந்து 30 வயது இருக்கும் பெண் யானை; கார்த்திகை மாதத்தில் பிடிக்கப்பட்டதால், இந்தப் பெயர். மேலும், அபூர்வமாக இந்தப் பெயர் பெண்களுக்கும் வைக்கப்படுவது உண்டு. கார்த்தி ஏன் அப்படிப் போனது என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட 7-8 மாதங்களுக்குப் பிறகு, டாக்டர் கே தெப்பக்காடு முகாமில் முகாமிட்டு, ஒரு மாலையில் யானைகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, முகாமுக்கு அருகில் ஒரு பெண் யானையின் நடமாட்டத்தைக் கண்ட பாகன்கள் அவரிடம் வந்து சொன்னார்கள். டாக்டர் கே, சில பாகன்களுடன், அந்த யானையைக் காணச் சென்றார். பார்வைக்கு காட்டு யானைபோல தோன்றினாலும், ஒரு காலில் சங்கிலியின் மிச்சம் இருந்தது. இன்னும் சற்று அருகில் சென்றபோது, டாக்டர் கேவுக்கு அது ஒரு முகாம் யானை என்று பொறி தட்டியது. டாக்டர் கே ஆச்சரியப்படும் விதமாக, அது வேறு யாருமல்ல, ‘கார்த்தி’தான்.  பண்ணாரியில் தப்பிய யானை கார்த்தியைப் பெயர் சொல்லி அழைத்தார். யானை உடனடியாக அவர் அருகில் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது; அதன் ஒலிகளால் ஆன வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளத் தொடங்கியது. டாக்டர் கே அதன் காதைப் பிடித்து முகாமிற்கு அழைத்து வந்தார். மற்றவர்களுக்கு எப்படி கார்த்தி பண்ணாரியில் தொலைந்துபோனது என்ற கதையைச் சொன்னார். கார்த்தியை உடனே முகாமில் கட்டி வைத்தனர். பின்னர் அதே கார்த்தி யானை ஏலத்தில் ஒருவருக்கு விற்கப்பட்டது ஒரு சோகமான நிகழ்வு.

இது தெப்பக்காடு முகாம் பெண் யானை சுகுணாவின் கதை. 1976 ஆம் வருடமாக இருக்கலாம்.  தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்த ஒரு சில யானைகளை விற்றுவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. காரணம், அத்தனை யானைகளை வைத்துப் பராமரிக்க போதிய நிதி இல்லாததுதான். அரசின் இந்த முடிவு நல்லதல்ல என்று யானை டாக்டர் கே வாதிட்டும் பயனில்லை. அன்றைய முதன்மை வன உயிரின காப்பாளர் பத்மநாபன், அரசின் ஆணைக்கிணங்க, சுகுணா  உள்ளிட்ட  சில யானைகளை விற்றுவிட முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து  விற்பனையும் முடிந்தது.  சுகுணாவை கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் வாங்கிச் சென்றார்.  அதோடு எல்லோரும் அந்த விற்பனையில் வெளியேறிய முகாம் யானகளை மறந்து விட்டனர். நமது கதையில் வரும் சுகுணா யானை முகாமில் இருந்த ஒரு நல்ல பெண் யானை. மேலும், சில குட்டிகளை ஈனும் நிலையில் இருந்த ஆரோக்கியமான யானை.  அந்தக் காலகட்டத்தில். கோவை ஒரு சிறிய நகரமாகத்தான் இருந்தது. லாலி ரோடு வரைதான் நகரம். வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கி மலை அடிவாரம் வரை கழனிகள் அல்லது காடு. அதேபோல, செல்வபுரம் வரைதான் நகரம். பேரூர் வெளிப்பகுதி. அதன்பின் கழனிகள் அல்லது காடு. ஆலந்துறை தொடங்கி காப்புக் காடுகள்தான். இருட்டுப்பள்ளம், சாடிவயல் அருகே ஓரிரண்டு பழங்குடி மக்களின் சிறு கிராமங்கள் இருந்தன. கழனிகளில் ஊர்க்காரர்கள் பயிர் செய்து வந்தனர். அங்கு அவ்வப்போது  வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும், ஆனால் பயப்படத் தக்க வகையில் அல்ல. அப்போது, சாடிவயல் அருகே உள்ள கிராம மக்கள் தொடர்ந்து ஒரு யானையின் நடமாட்டத்தைக் கண்டனர். அது நிற்காமல் தொடர்ந்தது கண்டு வனத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அன்றைய நடைமுறையில், முதன்மை வன உயிரின காப்பாளர் அலுவலகம் கோவையில்தான் இருந்தது (மாநிலம் முழுமைக்கும்). டாக்டர் கேயும் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டுதான் பணி புரிந்து வந்தார். தேவைக்கேற்ப அங்கிருந்து பிற இடங்களுக்குப் போய் வருவார்.

இந்த யானை காட்டு யானைபோல அல்லாமல், நாட்டு மக்களைக் கண்டு பயப்படாமல் உலவியது. பல சமயங்களில், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே பயமின்றி வந்தது. அவர்கள் ஏதேனும் தின்னக் கொடுத்தால், வாங்கித் தின்றது. வளர்ப்புப் பிராணியைப் போல அந்தப் பகுதியில் சுற்றி வந்தது. ஆயினும், மக்கள் இது நல்லதில்லை என்று நினைத்தனர். காரணம், காட்டு யானை எப்போது எப்படி நடந்து கொள்ளும் என்று கூற இயலாது என்பதால். சில நேரங்களில், இரவுப் பொழுதிலும் வரத் தொடங்கியதால், எல்லோரும் பயந்து போயினர். விபரீதம் ஏதும் நடப்பதற்கு முன் அந்த யானையை வனத்துறையினர் பிடித்துக் கொண்டு போனால் நல்லது என்று எண்ணி  வனத்துறைக்குத் தகவல் தந்தனர்.  அவர்களின் கணிப்பில் அது பெண் யானை என்று முடிவு.

முதன்மை வன உயிரினக் காப்பாளர், டாக்டர் கேவை இந்த சாடிவயல் யானையின் பிரச்னையைப் பார்த்து வரச் சொன்னார். டாக்டர் கே வன ஊழியர்களுடன் சாடிவயல் பகுதியில் யானை உலவும் கிராமத்திற்குச் சென்று சோதனை செய்தார். தொலைவில் யானை நின்று கொண்டிருந்தது. அந்த மாலை நேரத்தில், யானையின் அருகில் போவது உசிதமல்ல என்றாலும், அதன் நடத்தையையும், அது ஆணா, பெண்ணா என்பதையும் அறிந்து கொண்டால், மறுநாள் ஒரு சரியான செயல் திட்டத்தை வகுக்கலாம் என்று சற்று முன்னேறிச் சென்று நோட்டம் விட்டார். சில நேரங்களில், மோழை யானைகள் இதுபோன்று தொல்லை தரும்; அவற்றைப் பெண் யானை என்று தவறாக எண்ணி விடுவர். ஆனால், இது பெண் யானைதான் என்பது தெளிவானது. எதற்காக இப்படித் தனியாக உலவுகிறது என்று அவர் யோசிக்கும் போது, அந்த யானை நன்றாகத் திரும்பி  அவர் இருக்கும் திசையை நோக்கி  நின்றது. பின் மெதுவாக முன்னே வரத் தொடங்கியது.

டாக்டருடன் வன ஊழியர்கள் இருந்தாலும், யானையை அருகே வர விடுவது நல்லதல்ல. ஏனெனில், பிளிறிக் கொண்டு ஒரு யானை தாக்க வரும்போது, யாரும் தடுக்க இயலாது என்பதுடன், பயத்தில் ஓடி விடத்தான் செய்வார்கள். அவரவருக்கு அவரது உயிர் வெல்லம்தான். ஆனால் இந்த யானை தாக்க வருவதுபோல் இல்லாமல், நிதானமாக வந்தது. வனத்துறை ஊழியர்கள் டாக்டரிடம், ‘சார், இனியும் நிற்பது சரியில்லை. ஓடி விடலாம்,’ என்றனர். டாக்டர் அதற்குள், அந்த யானையின் தோற்றத்தை வைத்து, அது பழைய முகாம் யானையாக இருக்கலாம் என்று கணித்து விட்டார். அவரது மூளையில் உள்ள கம்ப்யூட்டர், அது சுகுணா என்று சொல்லியது. டாக்டர் முகாம் யானைகளை எப்படி பெயர் வைத்து அடையாளம் காண்பார் என்பதை நான் பல மாவுத்தர்கள், காவடிகள் சொல்லக் கேட்டு வியந்திருக்கிறேன். அதேபோல, முகாம் யானைகளும் டாக்டரை அடையாளம் காண்பதோடு, நேசம் பாராட்டும் என்றும் அவர்கள் சொல்வர்.  அருகில் வந்த யானை, அவர் ‘சுகுணா’ என்று அழைத்ததும், நாய்க்குட்டிபோல நின்றது. அசந்து போய் நின்ற மக்களும், ஊழியர்களும் இந்த  நிகழ்வை நம்ப இயலாமல் பார்த்தனர். அவருக்கு ஏதேனும் தெய்வீகச் சக்தி உண்டோ என்றும் சந்தேகப்பட்டனர். உடல் மெலிந்து, உணவின்றி யானை தவிக்கிறது என்று டாக்டருக்குப் புரிய வெகு நேரம் ஆகவில்லை. அவர்களால் முடிந்த அளவு உணவுப் பண்டங்களைச் சேகரித்துத் தரச் செய்தார் டாக்டர் கே. அதன் பின் சுகுணாவுடன் சற்று நேரம் அளவளாவினார். கூடியிருந்த மக்கள், டாக்டர் இப்படி யானையிடம் நாய்க்குட்டியுடன் அன்போடு பேசுவதுபோலப் பேசி அனுபவிப்பதைக் கண்டு வியந்தனர். டாக்டர் அவர்களிடம் சுகுணாவின் கதையை விவரித்து, எப்படி வாங்கிய போலீஸ்காரர் இப்படி பிச்சை எடுக்க விட்டு விட்டார் என்பதையும் சொன்னார். இங்கு நான் இது போன்ற மற்றொரு  சம்பவத்தைச் சொல்ல வேண்டும். மசினகுடி அருகே வாழைத்தோட்டம் என்ற கிராமத்தில் சில வருடங்கள் முன் வரை ரிவால்டோ என்ற காட்டு யானை இதுபோல ஊரில் வெகு சுவாதீனமாக உலவி வந்தது. ஒரு வன ஊழியர் அதைத் தினமும் கவனித்து அதனுடன் நாய்க்குட்டியுடன் பழகுவது போல நட்பாக இருந்தார்.

சுகுணா யானையை வாங்கிச் சென்ற போலீஸ்காரரைத் தேடிப் பிடித்து, யானையை இப்படிப் பிச்சை எடுக்க விடுவது குற்றம் என்று உணர்த்தினர். மீண்டும் நடந்தால், அவரைத் தண்டிக்கவும் செய்வோம் என்று அறிவுறுத்தி, யானையை அவருடன் அனுப்பி வைத்தனர். ஆனால், அவரது நிதி நிலைமை அவரை யானையைச் சரியானபடி பராமரிக்க விடவில்லை என்பதோடு, அவரும் சில தகாத பழக்கங்களுக்கு அடிமை ஆனதால், மீண்டும் யானை அந்தப் பகுதியில் உலவத் தொடங்கியது. சில மாதங்களில் அது சரியான உணவின்றி இறந்தும்போனது. கிரிஸ் வெம்மர் என்கிற மேல்நாட்டு கால்நடை மருத்துவர் டாக்டர் கே, எப்படி இதைக் குறித்து வருத்தப்பட்டார் என்று பதிவு செய்துள்ளார். சரியான கவனிப்பு இன்றி எப்படி ஒரு நல்ல பெண் யானையை முகாம் இழந்தது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த நிகழ்வில், நாம் பாராட்ட வேண்டிய விஷயம், யானைகளுடன் டாக்டருக்கு இருந்த போற்றத் தக்க உறவுமுறை. கடமைக்குப் பணிபுரியும் யாரிடமும் இந்தக் குணம் இருக்காது என்பதுடன், கிட்டத்தட்ட 200 யானைகளைப் பார்த்த அவர் எல்லா யானைகளையும் நினைவு வைத்திருந்ததுடன், அடையாளம்  கண்டு பிடித்ததும் ஒரு சாதாரண விஷயம் அல்ல. எத்துணை  ஈடுபாடும், லயிப்பும் பணியில் இருந்திருந்தால், இப்படி ஓர் அசாதாரண நிகழ்வை அவர் செய்திருக்க முடியும். நேற்று நடந்ததைக்கூட இன்று மறந்து விடும் மனிதர்களின் நடுவில் அவரது இந்த வேட்கை ஒரு அதிசயம்தான். அதேபோல மிருகங்களும், அவற்றுடன் பழகியவர்களைப் பல காலம் ஆனாலும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் என்பதும் உண்மைதான். இன்றும், காட்டில் இருந்து என்றோ வெளிவரும் ரிவால்டோ, வாழைத்தோட்டம் மக்களை நன்றாக அடையாளம் வைத்திருக்கிறது.

இது குறித்து மேல் நாட்டில் புகழ் பெற்ற கால்நடை மருத்துவர் கிரிஸ் வெம்மர், தன்னுடைய குறிப்புகளில், டாக்டர் கேயின் இந்த அசாதாரண நினைவாற்றலைப் பற்றி மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார். டாக்டர் கே எந்த அளவிற்கு யானைகளை விற்கக் கூடாது என்று போராடினார் என்பதையும் பதிவு செய்துள்ளார். ஆயினும், பராமரிக்க பணம் இல்லாததால், அரசு இத்தகைய முடிவை எடுத்தது. ஆங்கிலத்தில் ஐசிங்க் ஆன் தி கேக் என்பர்கள். இங்கு, அது டாக்டர் கேயின் சரியான அனுமானிப்புதான். இது சுகுணாதான் என்று கண்டு பிடித்தது, உண்மையிலேயே ஒரு சாதனை என்றால் மிகையாகாது. அந்த அளவு பணியுடனும், அவர் பார்த்து வந்த மிருகங்களுடனும் மனம் ஒன்றிக் கடமையை ஆற்றினார் என்பது மிகவும் பாராட்டத்தக்கது மட்டுமல்ல. ஒரு முன்மாதிரியும் ஆகும். எல்லாருக்கும் அது அமையாது. தன் தொழிலைத் தெய்வமாக எண்ணுபவரால் மட்டுமே இதுபோல பணிபுரிய இயலும்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *