வளர்ப்பு யானைகளை மட்டும்தான் டாக்டர் கே அடையாளம் கண்டுகொள்வார் என்று நாம் எளிதாக எண்ணிவிட்டால், அது பெரும் தவறு என்பதை கூடு கொம்பனின் கதை சொல்லும். கூடு கொம்பன் ஒரு காட்டு யானை; வருடத்தில் சுமார் நான்கைந்து மாதங்கள் அவன் முதுமலைக் காடுகளில் தென்படுவான்; மற்ற மாதங்களில், பந்திபூர், நாகர்ஹொளே, கபினி என்று கர்நாடகா பகுதிகளுக்கு சென்று விடுவான். இந்தத் தகவல்கள் எல்லாம் நம் பழங்குடி மக்களின் அவதானிப்பு அல்லது கூர்நோக்கல் மூலமாகத் தெரியவருவது. ஏனெனில், அவர்கள் வேலை பெரும்பாலும் காட்டைச் சுற்றி இருப்பதால், காணும் மிருகங்களின் நடத்தை பற்றி அறிய வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு உண்டு.
அப்போதுதான் காட்டில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், பாதுகாப்பாக போய் வர முடியும். எந்த விலங்கிடம் இருந்து விலகி நிற்க வேண்டும்; எந்த விலங்கைப் பார்த்தால் ஓடித் தப்ப வேண்டும்; எந்த யானை சாது; எந்த யானை முரடு; என்பது போன்ற விஷயங்கள் மன கம்ப்யூட்டரில் தானே பதிவாகிவிடும். கூடு கொம்பன் போன்ற யானையைப் பிரித்தறிவது எளிது. காரணம், கொம்புகள் (தந்தங்கள்) அந்த அமைப்பில் எல்லா யானைகளுக்கும் இருக்காது. இரண்டு தந்தங்களும் நன்கு நீண்டு, நுனிகள் ஒன்றை ஒன்று குறுக்கிட்டு கத்தரிக்கோல்போல இருக்கும். எனவே, இது போன்ற விலங்கை எங்கு கண்டாலும் எளிதில் அடையாளம் காணலாம்.
மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், கூடு கொம்பன் மனிதர்களிடையே உலாவிப் பழகி விட்டவன். நான் போன அத்தியாயத்தில் சொன்ன ரிவால்டோபோல. காரணம், முதுமலை, பந்திபூர், நாகர்ஹொளே, கபினி போன்ற இடங்கள், மனித நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள். அதற்கு அவை சுற்றுலா தலங்களாக இருப்பதும், வண்டிகள் போக்குவரத்து அதிகம் இருப்பதும் ஒரு காரணம். ஏனெனில், மனித நடமாட்டம் அவனுக்குப் பழகிப்போன ஒன்று. மனிதப் பதர்களால் பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை என்று புரிந்துகொண்டவன். ஏதோ சில நேரங்களில், தெறி கெட்டுப் போவார்கள், ஒருசில முறை குண்டடி கிடைக்கும், மற்றபடி பெரும் பிரச்னை இல்லை என்று தெரிந்துகொண்டவன்.
இதை, கால்நடை ஆய்வாளர் மணியின் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அவர் சொல்கிறார், ’ஒருமுறை நான் பெங்களூரு சென்று திரும்பி வரும்போது இரவு மணி பத்தரை. தெப்பக்காடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி குடியிருப்பை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். சுற்றிலும் நல்ல இருள். பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் நடக்க வேண்டும். என்னைத் தவிர அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை; இப்போது போல அந்தக் காலத்தில் (1988) பிரகாசமான விளக்குகளும் கிடையாது. நான் குடியிருப்புக்குச் செல்லும் மேடு ஏறும் இடத்தை அடுத்து நிற்கும் வாகை மரத்தை நோக்கும்போதுதான், யானை ஒன்று அங்கு இருப்பதைப் பார்த்தேன். இருட்டில் என்னால் முன்னமே அதைக் கண்டறிய இயலவில்லை. அப்படியே உறைந்து நின்றேன். அப்போதுதான், அந்த யானை கூடு கொம்பன் என்று தெரிந்தது. உடனே பின் வாங்கி, வேறொரு வழியில் சென்று குடியிருப்பை அடைந்தேன். அந்த யானை கூடு கொம்பனாக இல்லாமல் போயிருந்தால், என்ன நடந்திருக்கும் என்று தெரியாது.’
இப்படி எல்லோருக்கும் அறிமுகமான இந்தக் கூடு கொம்பனை எல்லோரும் எல்லா இடத்திலும் அடையாளம் கண்டு அவன் உலா வரும் காடுகளைக் கணக்கிட்டதில் பெரிய வியப்பொன்றுமில்லை. மேலும், அன்றைய காலகட்டத்தில், பழங்குடிகள் காட்டின் வழியே நடந்து சென்று, அடுத்துள்ள வயனாடு, கர்நாடகா போன்ற பகுதிகளில் வேலை செய்து விட்டு திரும்பி வருவது ஒரு சாதாரண நிகழ்வு. நானே சில ஆய்வுகளுக்காக, அப்படி அவர்களுடன் சென்று வந்ததும் உண்டு. ஆகவே, கூடு கொம்பனை அவர்கள் பல இடங்களில் பார்த்து உறுதி செய்து கொண்டதன் தொகுப்புதான் அவன் இயங்கும் பகுதி பற்றிய முடிவு. டாக்டர் கேயின் அவதானிப்பு இன்னும் சற்றுக் கூர்மையாகவும், தர்க்க ரீதியாகவும் இருப்பதால், அவரால் கூடு கொம்பனைப் போன்ற யானைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள இயலும். இது குறித்துப் பேசும்போது, ‘இவன் ஏன் இங்க வந்தான்? இவன் ஏரியா கர்நாடகா ஆச்சே?’ என்று டாக்டர் கேட்பார் என்று மணி சொல்வார். டாக்டர் கே யானைகளின் வலசை குறித்து பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம் தொடங்கிய ஆய்வுக்கு முன்பே, ஒரு உத்தேசமான வலசைப் பாதைகளைப் பற்றி தீர்க்கமான பார்வையைக் கொண்டிருந்தார். அடிக்கடி முகாமை முற்றுகையிடும் ஆண் காட்டு யானைகளைப் பற்றி ஒரு அலசல் செய்திருப்பார்; நெடுஞ்சாலையில் குறுக்கிடும் யானைகளைப் பற்றிப் பேசுவார். இப்படி அவரைச் சுற்றி இயங்கும் காட்டு உலகை அவர் அறிந்திருப்பார்.
அன்று, அவரது முகாம் வருகையின்போது, மணி, கூடு கொம்பன் சற்றே சங்கடத்தில் இருப்பதைச் சொன்னார். ‘சார், மன்றாடியார் நிழற்சாலையில் கூடு கொம்பன் இரண்டு நாளாகச் சோர்வாக நின்று கொண்டிருக்கிறான். காலில் அடிபட்டதுபோல் தெரிகிறது. நொண்டி, நொண்டி நடக்கிறான். ஏதாவது செய்ய முடியுமா?’ டாக்டர் கே சற்று யோசித்து விட்டு, ‘வந்த வேலையெல்லாம் முடியட்டும். இரண்டு கும்கிகளைத் தயார் செய்துகொள்ளுங்கள். நாம் போய் ஏதாவது செய்து விட்டு வரலாம்,’ என்றார். காட்டு யானைக்கு வைத்தியமா? இங்கே நாட்டு (முகாம் மற்றும் கோவில்) யானைகளுக்கு வைத்தியம் பார்க்கவே அவனவன் தடுமாறுகிறான், இதில் இவர் காட்டு யானைக்கு வைத்தியம் பார்க்கப் போகிறாரா என்று பலருக்கும் ஆச்சரியம். ஆனால், ஆய்வாளர் மணிக்கோ, யானைப் பாகன்களுக்கோ இது பற்றி எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. காரணம், டாக்டர் கேயின் செயல்பாட்டைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அவர்கள். எந்த யானையும் அவர் சொல்படி கேட்கும் என்று நம்புபவர்கள் அவர்கள். டாக்டர் கே சொன்னபடி, இரண்டு கும்கிகளைத் தயார் நிலையில் வைத்தனர். அவை இரண்டும் நல்ல வாட்டசாட்டமான கொம்பன்கள். எந்த யானையும் அவற்றின் உருவத்தையும் கம்பீரத்தையும் பார்த்தால், முரண்டு செய்யாமல் இருக்கும்.
சுமார் ஒன்பது அடி உயரமும், திடகாத்திரமான உடலும் கொண்ட முதுமலையும் திப்புவும்தான், தயார் செய்யப்பட்ட கும்கி யானைகள். பல யானைகளைப் பிடிப்பதிலும், காட்டு யானைகளை விரட்டுவதிலும் கை தேர்ந்தவை. அந்த யானைகளை இயக்கும் பாகன்களும் சிறந்த தரம் வாய்ந்தவர்களாக இருந்ததால், டாக்டர் கேவுக்கு கூடு கொம்பனை அணுகுவதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. கூடு கொம்பனும் சின்ன யானை அல்ல என்றாலும், முதுமலை அல்லது திப்புவுக்கு நிகர் இல்லைதான். இந்த இரண்டு யானைகளும் கூடு கொம்பனின் இருபுறமும் நின்று கூடு கொம்பனை ஒரு கட்டுக்குள் வைத்தன. பின்னர், கூடு கொம்பனை அவை இரண்டும் சமாதானம் செய்யத் தொடங்கின. அதாவது, யானையின் உடல் மொழியில், ஸ்பரிசத்தில், ஒலிகளில் எனச் சிறிது நேரம் கூடு கொம்பனுக்கு, அந்த கும்கி யானைகள், டாக்டர் கே வந்தது அதன் நன்மைக்கே என்று புரிய வைத்தன. அதன் பின், டாக்டர் கே கூடு கொம்பனின் அருகில் வந்தார். அவருக்கே உரித்தான பாணியில் அதனுடன் சற்று அளவளாவினார்; தட்டிக் கொடுத்தார்; தடவிக் கொடுத்தார். கூடு கொம்பன் நிதானமானதோடு, மருத்துவம் செய்து கொள்ளவும் தயாராகி விட்டான். கூடு கொம்பனின் காலில் அடிப்பட்டிருந்ததால், அந்தக் காலின் பின்னால் கும்கி யானையின் காலை அண்டக் கொடுத்து, காயத்திற்கு மருந்திட்டார், டாக்டர் கே. அந்தக் காயத்தின் காரணம், ஒரு பெல்லெட் (சிறிய துப்பாக்கி ரவை). கால் காயத்திற்கு மருந்திட்ட பின், நன்கு பரிசோதித்தபோது மேலும் சில குண்டடிக் காயங்கள் பின் புறமும், மற்ற காலிலும் காணப்பட்டன. அவை பழைய காயங்கள் என்பதோடு, ரவைகள் வெகு ஆழமாக உள்ளே செல்லவில்லை என்பதையும் கண்டார்.
பொறுமையாக அவற்றையும் நீக்கி, மருந்திட்டார். மொத்தம் ஆறேழு இடங்களில், குண்டுகளை நீக்கி மருந்திட்டு, கூடு கொம்பனை ரெடியாக்கி விட்டார் டாக்டர் கே. கணுக்காலில் உள்ள ரவையை எடுக்க அவர் கீழே கால்களுக்கிடையே சென்று அறுவைக் கத்தி கொண்டு நிதானமாக நீக்க வேண்டி இருந்தது. ஆயினும், அவர் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல், பொறுமையுடன் ரவையை எடுத்து விட்டு மருந்திட்டார். பின் நாட்களில் இதே போல அவர் மேற்கு வங்கத்தில் ஜதா பிரசாத்தின் கிழிந்த வயிற்றுப் பகுதியை தைத்ததற்கு முன்னோடியாக இது அமைந்தது என்று நினைக்கிறேன். ஆய்வாளர் மணி என்னிடம் சொன்னார்: ‘இன்று உள்ளது போல, அன்று புகைப்படம் எடுக்கும் வசதிகள் கிடையாது; செல்போன்கள் கிடையாது. டாக்டருக்கு யானைக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு நோக்கமோ, ஆசையோ கிடையாது. இதற்குச் சாட்சி நானும் அந்த மாவுத்தர்களும்தான். இன்று ஒன்றும் செய்யாமல், சில படங்களை மட்டும் வைத்துக்கொண்டு பம்மாத்து செய்வதைபோல் அன்று நாங்கள் இருக்கவில்லை. பின்னர், இதையெல்லாம் ஆவணப்படுத்தும் முயற்சியும் அன்றிருக்கவில்லை. யானைகளின் நலன் மட்டுமே எங்கள் குறிக்கோள் ஆக இருந்தது. அதுதான் நாங்கள் டாக்டர் கேயிடம் படித்தது,’ என்று.
எனக்கு இதில் மிகவும் பிடித்தது, டாக்டர் கேயின் அணுகுமுறை. விலங்குகள் உள்ளுணர்வால், சில விஷயங்களைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை என்பதை உணர்ந்ததனால், டாக்டர் கே இந்த முறையைக் கையாண்டார். மேலும், காயங்கள் கவலை தரும் நிலையில் இல்லாததால், இந்த வழி நல்லது என்று முடிவு செய்தார். அதோடு, அவரது தன்னம்பிக்கை; அவரது உதவியாளர்களிடம் வைத்திருந்த நம்பிக்கை; கும்கி யானைகளிடம் கொண்டிருந்த நம்பிக்கை, அவரது குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாடு; இவையெல்லாம், பல ஆண்டுகளாக இவர்கள் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால், வந்த ஒரு வரம். இல்லையென்றால், திரு.மணி சொல்வது போல், காட்டு யானைக்கு மயக்க மருந்து இல்லாமல் சிகிச்சை செய்தார்கள் என்றால், இன்றுள்ளவர்கள் நம்ப மாட்டார்கள். ஏனெனில், இன்று முகாம் யானைக்கே மயக்க மருந்து கொடுத்துத்தான் சிகிச்சை செய்யப்படுகிறது. இப்படிப் பல விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, சில கணக்கிடப்பட்ட துணிவுடன் அவர் பணி செய்ததால்தான், இன்றும் அவர் ஒரு வியப்பூட்டும் கால்நடை மருத்துவராக அறியப்படுகிறார். யானைகள் மனிதனுடன் பழகிய பின் எப்படி நடந்து கொள்ளும் என்று பலகாலமாக நேரில் பார்த்து உணர்ந்து செயல்பட்டதால், அவரது அணுகுமுறை மற்ற கால்நடை மருத்துவர்களிடம் இருந்து பெரிதும் வேறுபட்டதற்குக் காரணமாக அமைந்தது. அவரது வாழ்க்கையில் யானை சற்று மாறுபட்டு நடந்துகொண்டது ஒரே ஒரு முறைதான் என்று எண்ணுகிறேன். அப்போதுகூட மீண்டும் அதைச் சாந்தப்படுத்தி வழிக்குக் கொண்டு வந்தார் என அறிகிறேன். அந்த அளவிற்கு அவர் தன்னையும் யானைகளையும் அறிந்திருந்தார்.
இங்கு நாம் வருத்தப்பட வேண்டிய மற்றொரு விஷயம், இது போன்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் கலையை அன்றிருந்தவர்கள் கற்காமல் போனதுதான். எல்லாம், தொழிலின் ஒரு பகுதி அல்லது கடமை என்று கடந்து போனதுதான், வருந்தத்தக்கச் சமாசாரம். ஆங்கிலேயர்களைப்போல ஆவணப்படுத்தும் முறையைக் கையாண்டிருக்கலாம். அன்று திரைப்படம் எடுக்கும் வசதிகளோ, பணமோ இருந்திருக்க வாய்ப்பில்லைதான். இன்று, நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது. கவைக்குதவாத சமாசாரங்களை எல்லாம் வீடியோ எடுத்துப் போடும் அல்லது புகைப்படம் எடுத்துப்போடும் நிலை ஆகிவிட்டது. டாக்டர் கேயின் இந்தப் பெரும்போக்கான குணத்தை பற்றி கிரிஸ் வெம்மர் மற்றும் ராமன் சுகுமார் போன்றோர் பல சமயங்களில் பேசி உள்ளனர். அவருக்கு ஒரு விஞ்ஞானக் கட்டுரை எழுதுவது பெரிய கஷ்டம்; அது ஒரு வேண்டாத விஷயம் என்று நினைத்தார். மற்றொரு இடர், இந்த நடுத்தர வர்க்க மனோபாவம். எதிலும் ஒரு விட்டேத்தியான எண்ண ஓட்டம். டாக்டர் கேயின் வாழ்க்கையை ஆராய்ந்தால், இது புலப்படும். வேலையில் இருந்த ஈடுபாடு, அவருக்கு வாழ்வில் இல்லை. இது ஒரு புரியாத முரண்தான். எல்லோர் வாழ்விலும் உள்ளதுதான்.
இதில் நாம் புரிந்து பாராட்ட வேண்டிய மற்றொரு அம்சம், டாக்டரின் உள்ளார்ந்த ஈடுபாடு. அவர் பணி ஓய்வு பெற்ற பின் நிகழ்ந்த சம்பவம் இது. வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், அவரை சில காலம் தொடரச் சொல்லி இருந்தது வனத்துறை. எனவே, இரண்டு மூன்று நாட்கள் வருகை தந்திருந்தபோது இந்தச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, அவருக்கு யாரும் எந்தப் பரிசும் தரப் போவதில்லை, வாய் பாராட்டைத் தவிர. இன்றுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் நம்மிடம் உள்ள இரண்டு யானைகள் முகாம்களிலும் கிடையாது. அவர் பேணிக்காத்த எந்த ஆவணமும் இன்று இல்லை. ஒரு கலைமாமணி விருது கூடக் கிடையாது. ஜெயமோகன் எழுதியது போல, பத்மஸ்ரீ விருதும் காற்றில் போனது. ஆனால், அவர் தன் மனத் திருப்திக்காகப் பணி செய்தார்; தொழிலைத் தெய்வமாக நினைத்தார்; யானைகளைப் பிள்ளைகளாக எண்ணினார். அவர் வரையில் அவர் நிறைவாக ஒரு வாழ்வு வாழ்ந்தார் என்று சொல்லலாம். ஆனால், நம் சமுதாயம் அவரைக் கெளரவிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
(தொடரும்)