Skip to content
Home » யானை டாக்டரின் கதை #19 – பொம்மியின் குட்டி

யானை டாக்டரின் கதை #19 – பொம்மியின் குட்டி

குட்டியுடன் பொம்மி

யானைகளும் நம்மைப்போல் தனித்துவம் கொண்டவை என்பதை நான் முன்பே விவரித்திருந்தேன். முகாமில் உள்ள எல்லா யானைகளையும் டாக்டர் கே எப்படி அடையாளம் காண்பார், அன்போடு நடத்துவார் என்பதையும் நான் முன்பே கூறியிருக்கிறேன். அதேபோல அவர், ஒவ்வொரு யானையையும் தேவைப்படும் நேரத்தில், பிரத்தியேகமாகக் கவனிப்பார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.

சாதாரணமாக, யானைப் பிரசவங்கள் பெரிய பிரச்சினையாக இருக்காது. காரணம், யானைகளுக்கு இயல்பாகவே பிரசவத்தின்போது எப்படி நிலைகொள்ள வேண்டும், எப்படி முயன்று குட்டியை வெளியே தள்ள வேண்டும் என்றெல்லாம் தெரியும். அதேபோல, குட்டி வெளியே விழுந்ததும், எப்படிச் சுற்றியிருக்கும் தொப்புள் கொடியை நீக்க வேண்டும், படர்ந்துள்ள சளிப் படலத்தை எடுப்பது என்றும் தெரியும். என்ன, அந்தச் செயல், மருத்துவர்கள் செய்வதுபோல வெகு துல்லியமாக இருக்காது. சற்று முரட்டுத்தனமாக இருக்கும். அதேபோலக் குட்டியை உதைத்து எழுப்பும். அதாவது மென்மையான உதைகளால் குட்டியை உயிர்ப்பிக்கும். இதையெல்லாம் யாரும் பெண் யானைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. இயற்கை தானே இந்தச் செயல்களை அனிச்சையாகச் செய்ய உள்ளுணர்வுகளைத் தந்துள்ளது. காட்டில் வாழும் யானைக் கூட்டங்கள் மற்ற பெண் யானை சிசு ஈனும்போது பார்த்து உணர்ந்து கொள்ளும். மேலும், யானைக் கூட்டத்தில், குட்டிகளை ஈனும்பொழுது அந்தக் கூட்டமே சுற்றி நின்று உதவி செய்யும். பிறந்த குட்டிகளை வளர்ப்பதில், கூட்டத்தில் உள்ள பெண் யானைகள் பெரும் பங்கு வகிக்கும்.

முதுமலை தெப்பக்காடு முகாமில் இருந்த பொம்மி என்ற பெண் யானை, மிகவும் சாதுவான யானை. சற்று மந்தம் என்றுகூடச் சொல்லலாம். அதாவது, தானே முனைப்புடன் எந்த வேலையும் செய்யாது. மேலும், சின்னக் குட்டியாகப் பிடிபட்டு வந்ததால், கூட்டு வாழ்க்கையைப் பார்க்காத யானை. வெகு தாமதமாக (வயது அதிகமானதும்) கருவுற்றது. அந்தக் குட்டி பிறந்ததும், அதைச் சரியானபடி உயிர்ப்பிக்க அதற்குத் தெரியவில்லை. குட்டி காலடியில் கிடந்தும், பொம்மிக்கு குட்டியை எப்படிக் கையாளுவது என்று தெரியவில்லை. மற்றவர்களும் (பாகன், காவடி போன்றோர்), அருகே சென்று உதவத் தயங்கினர். காரணம், சாதாரணமாக, தாய் யானை குட்டியிடம் யாரையும் நெருங்கவிடாது. தாயின் உடைமைத்தனம் மிக அபாயகரமானது. அந்த நேரம், யாரையும் மதிக்காது; யாரிடமும் அடங்காது. அதையும் மீறி அருகே சென்றால் அவர்களது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. குட்டியை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் உயிர்ப்பிக்கவில்லை எனில், அது பிழைப்பது கடினம். இந்தக் காரணங்களால், அந்தக் குட்டி இறந்துபோனது. காட்டில் கூட்டமாக வாழ வாய்ப்பில்லாததால், பொம்மிக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை என்றும் அனுமானம் செய்யலாம். எப்படியாயினும், ஒரு குட்டி இறந்துபோனதில், அதுவும் முகாமில், எல்லோருக்கும் வருத்தம். யாராலும் ஒன்றும் செய்ய இயலாமல் போயிற்றே என்ற அங்கலாய்ப்பு. இதை டாக்டர் கேயிடம் சொன்னபோது, அவர் அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

டாக்டர் கே முகாமில் உள்ள அனைவருக்கும் ஒரு கட்டளை இட்டார். அடுத்த முறை பொம்மி இணை சேரும்போது, கவனமாக இருந்து, கருவுறும் நாளைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். அதன்பின் அதன் ஆரோக்கியத்தை நன்கு பராமரித்து, பிரசவ நேரத்தில் தகுந்த வகையில் குட்டியை உயிருடன் பிறக்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதேபோல, பொம்மி கருவுற்றதும், நன்றாகப் பராமரிக்கப்பட்டு பிரசவக் காலத்தை அடைந்தது. டாக்டர் கே தெளிவாக முகாமில் உள்ளோருக்கு அறிவித்தபடி, நான்கைந்து நாட்கள் முன்பே வந்துவிட்டார். வந்ததும், பொம்மியின் உடல்நிலையைப் பரிசோதித்து, வேறு பிரச்னைகள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார். பிரசவ நேரத்திற்கு முன் தினம் முகாம் பாகன்கள், கால்நடை ஆய்வாளர், காவடிகள் எல்லோரையும் அழைத்தார். ‘பாருங்க, பொம்மியைத் தொந்தரவு செய்யாம குட்டி விழுந்ததும், அதை என்னிடம் கொண்டு வந்துடுங்க. எந்த நேரம் ஆனாலும் சரி, நான் இருக்கேன். ஆனா, குட்டியை மிகக் கவனமாகத் தாயின் காலடியில் இருந்து எடுக்கணும். பொம்மி சாதுதான். ஆனா ஒரு தாய். அதனாலே, அதோட  கவனத்தை வேற பக்கம் திருப்பிட்டு, இந்தப் பக்கம் குட்டிய எடுக்கணும். புரியுதா? ரொம்ப ஜாக்கிரதையா செய்யணும். எப்பவும் ஒரு ஆள் அதைப் பார்த்துக்கிட்டே இருக்கணும். குட்டி விழுந்து அஞ்சு நிமிஷத்துக்குள்ள என் கைக்கு வந்துரணும்’ என்றார்.

முகாமே ஒரு போர்க்கால அறைபோல பொம்மியைக் கண்காணிக்கத் தொடங்கியது. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், மொத்த முகாம் ஊழியர்களும் ஒரு அணியாக வேலை செய்தார்கள் என்பதுதான். பொம்மிக்கு என்ன ஆனால் எனக்கென்ன என்று சிலர் போய்விடவில்லை. பொம்மியின் குட்டியைக் காப்பாற்ற அவர்கள் ஒரு குழுவாக நின்றார்கள். அதுதான் டாக்டர் கேயின் மனிதவள ஆளுமை. அவருடைய சொல்லுக்கு அவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இது பொம்மியின் பாகன் அல்லது காவடியின் வேலை என்று மற்றவர்கள் ஏனோ தானோ என்றிருக்கவில்லை. குழு முயற்சியின் வெற்றிக்கு இது ஓர் உதாரணம். பிரசவ வலி வந்து பொம்மி தவிக்கத் தொடங்கியபோது, டாக்டர் கேவுக்குத் தகவல் சென்றது. எப்படியும் ஒரு சில மணி நேரத்துக்குப் பின்தான் குட்டி வெளி வரும். எல்லோரும் ஆயத்தமாக இருந்தனர். இதில் மற்றொரு புகழத்தக்க விஷயம், பொம்மிக்கு வலி எடுத்தது இரவு 11 மணிக்கு மேல். மொத்த முகாமும் அந்த நேரத்தில் உதவிக்குத் தயாராக நின்றது. டாக்டர் கே வேண்டிய உபகரணங்களைத் தயார் செய்துகொண்டார். தேவைப்படும் பட்சத்தில், செயற்கை உயிர்ப்பித்தலைக்கூடக் கையாளத் தயாராக இருந்தார். டாக்டர் கே இதற்காகவே தான் வர வேண்டிய நாட்களை மாற்றி முன்னால் வந்துவிட்டார்.

செயற்கை உயிர்ப்பித்தல் (CPR), சின்ன விலங்குகளுக்குப் பொருந்தும். கால்நடை மருத்துவர்கள், 200 கிலோ எடைக்குக் குறைவாக உள்ள விலங்குகளுக்கு மனிதர்களை உயிர்ப்பிக்கும் முறையான சிபிஆரை பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். அதற்கு மேல், அழுத்தம் கொடுப்பது மிகக் கடினம். காரணம், மிகப்பெரிய விலங்குகளின் இதயத்தின் மேல் அழுத்தம் தந்து பிசைய மனிதர்களால் முடியாது. ஆனால், இங்கோ, வரப்போவது  பிறந்து சில நிமிடங்களே ஆன குட்டி யானை. ஆகவே, இந்த முறை பயன்படும். காரணம், பிறந்த சில நிமிடங்களில் (5 முதல் 10 வரை) அது தானாக மூச்சு விடவில்லை என்றால், சிபிஆர் செய்யலாம். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு டாக்டர் கே இம்முறை பொம்மிக்கு பிறந்த குட்டியை எப்படியாவது காப்பாற்றியே தீருவது என்ற முடிவோடு இருந்தார். நேரம் போய்க்கொண்டிருந்தது. நடுநிசி தாண்டி, கிட்டத்தட்ட அடுத்த நாள் காலை 2 மணி. நாமும் அங்கு இருக்க வேண்டும் என்று டாக்டர் கேவும் முகாமுக்கு வந்துவிட்டார். அந்த நேரம் பொம்மி கன்றை ஈன்றது. உடனே, காவடிகள் பொம்மியைச் சற்றுப் போக்குக் காட்டி, குட்டியை எடுத்துக்கொண்டு பக்கத்தில் காத்துக்கொண்டிருந்த டாக்டர் கேயிடம் விரைந்தனர். அவர்கள் பயந்த அளவு பொம்மி முரட்டுத்தனமாக ஏதும் செய்யவில்லை. அதன் குணம் அந்த அளவுக்கு அமைதியானது. டாக்டர் கே அங்கேயே பக்கத்தில் வைத்து தன் வேலையைத் தொடங்கினார். ஒரு பக்கம், சளி படலத்தைச் சிலர் நீக்க, டாக்டர் கே சிபிஆர் செய்தார்; அத்துடன் அதன் வாயில் (துதிக்கையில்) பலமாக ஊதினார். சில நொடிகளில், குட்டி மூச்சு விடத் தொடங்கியது. முகாமே குதூகலத்தில் ஆடியது.

உடனே, குட்டியை தாய் பொம்மியின் அருகில் விட்டனர். தள்ளாடி, தள்ளாடி நடந்து குட்டி பொம்மியிடம் போய், அனிச்சையாக மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கத் தொடங்கியது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததில் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. சில மாதங்களுக்கு முன், தாய்லாந்தில், ஒரு பெரிய தாய் யானையை இரண்டு பாகன்கள், மேலே ஏறிக் குதித்து சிபிஆர் செய்து பிழைக்க வைத்தது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைப் பார்த்தேன். பிபிசியின் ஒரு வீடியோவும் பார்த்தேன். ஆயினும், 40 வருடங்களுக்கு முன் ஒரு மூலையில் இருக்கும் யானைகள் முகாமில், டாக்டர் கே இதே போன்ற ஓர் அற்புதமான செயலைச் செய்தார் என்று எண்ணும்போது, அவரது தெளிந்த சிந்தனை, இடுக்கண் வரும்போது சமாளிக்கும் திறமை, இடர் மேலாண்மை, மற்றும் அவரது குழுவின் திறமை, இவையெல்லாம் எப்படி இருந்திருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது. வழக்கம்போல, நான் அந்தக் காலத்தில்  இல்லாமல் போனேனே என்ற வருத்தம் சூழ்கிறது. சேரன் என்ற பெயரில் இன்றும் தெப்பக்காடு யானைகள் முகாமில், அந்தக் குட்டியை,  இன்று வளர்ந்த யானையாக (கொம்பனாக) பார்க்கலாம். டாக்டர் கேயின் சரியான கவனிப்பால் இன்றும் கம்பீரமாக உலா வருகிறது.

இந்த நிகழ்வில் நாம் படிக்கக் கூடிய பாடம், வேலையில் அர்ப்பணிப்பு உணர்வு. டாக்டர் கே, இந்த அளவுக்கு ஒரு யானைக்காகப் பாடுபட வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக, இரண்டு நாட்கள் உறக்கம் கெட்டு இருக்க வேண்டிய அவசியம் அவருக்கோ, அவரது குழுவினருக்கோ இல்லை. கடமை உணர்வு ஒருபுறம் இருந்தாலும், அவர்களுடன் இருக்கும் யானைகளின் நலம் நாடும் அந்த உன்னத குணம், இந்தப் பொருளாதாரம் சார்ந்த உலகில் வெகு அபூர்வம். அவர்கள் எந்த அளவு பணியில் ஒன்றி இருந்தனர் என்று இதிலிருந்து தெரிகிறது. இதை வெறும் கூலிக்குச் செய்யும் வேலையாக எண்ணாமல், உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ஒன்றி செய்தனர். பணமோ புகழோ அவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் அடைந்த மனத் திருப்தியும் மகிழ்ச்சியையும் நான் திரு.மணி அவர்கள் இது பற்றி என்னிடம் விவரிக்கும்போது உணர்ந்தேன். அதுதான், ஒரு வேலையைச் சரியான ஈடுபாட்டுடன் செய்யும்போது கிடைக்கும் சிறந்த பரிசு என்பதை அவர் உடல்மொழி சொல்லியது. துரதிர்ஷ்டவசமாக இன்றைய சூழலில், இதுபோன்ற ஈடுபாடு  குறைந்து கொண்டே வருகிறது என்பது கவலைக்குரியது. அத்துடன் தலைவரே முன்னின்று ஒரு வேலையில் இறங்கினால், என்ன பலன் கிடைக்கும் என்பதையும் உணர்த்துகிறது. வெறும் உத்தரவுகளைப் பிறப்பிப்பது மட்டுமே தலைவர் வேலை என்று நம்பும் இந்தக் காலத்தில் இது அதிசயம்தான்.

(இந்தக் கட்டுரையில், கால்நடை மருத்துவர் திரு.என்.எஸ். மனோகரனின் சில குறிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.)

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *