அந்த முறை டாக்டர் கே தெப்பக்காடு முகாம் வரும்போது, ரதி யானையின் குட்டியைத் தாயிடம் இருந்து பிரித்தல்அல்லது பால் மறக்கடித்தல் நிகழ்வை நடத்துவதாகத் திட்டம். இந்த ஒரு நிகழ்வு, மிகுந்த கஷ்டமான காரியம்; யானைக்கும், குட்டிக்கும், அங்குள்ள எல்லோருக்கும். காரணம், குட்டி பிரிக்கப்பட்டால் தாய் யானை வெகு மூர்க்கமான மனநிலையில் இருக்கும். குட்டியோ தாயைப் பிரிந்து சோகமான மனநிலையில் இருக்கும்; மற்றவர்கள் இவைபடும் துயரத்தைக் கண்டு கொஞ்சம் கலக்கமாகத்தான் இருப்பார்கள். ஆயினும், இது தவிர்க்க இயலாத ஒன்று.
எப்படி மனிதக் குழந்தைகள் பால்குடி மறக்கச் செய்யும்போது அவதிப்படுவார்களோ, அதுபோலத்தான். வளரும் நிலையில் அது எப்படி ஒரு நிகழ்வோ, அதுபோல. ஆயினும், அந்தப் பிரிவு நிலைகொள்ளும் வரை, சற்றே சிரமமாகத்தான் இருக்கும். இந்த நிகழ்வுக்குப் பல ஒத்திகைகள் பார்க்கப்படும். குட்டியை கிராலுக்கு பழக்கப்படுத்தும் வேலைகள் முன்பே தொடங்கிவிடும். தாயுடனே அலைந்துகொண்டிருக்கும் குட்டியை கிராலில் கரும்புத் துண்டுகள் போட்டு அந்தச் சூழலுக்குப் பழக்கப்படுத்துவார்கள். தாய்க்கு, குட்டி கிராலுக்கு அடிக்கடிப்போவது கவலையை அளிக்காத வகையில் கொண்டு செல்லப் பார்ப்பார்கள். பிரிக்கும்போது, பெரிய பிரச்னை வராத வகையில் இதுபோன்று பல உபாயங்கள் கையாளப்படும். குட்டி கிராலுக்கு சென்ற உடன், தாயை வேறு முகாமிற்குச் சில காலம் மாற்றிவிடுவார்கள். உணர்ச்சிகள் சமனப் பட்டபின், அல்லது பால் குடி மறந்த பின், இரண்டு யானைகளும் சேர்ந்திருக்க இயலும். ஆயினும், இது ஒரு கடினமான வேலைதான்.
கிரால் என்பது ஒரு செவ்வக வடிவமான கூண்டு என்று சொல்லலாம். எட்டு கனமான மரத் தூண்களைக் கொண்டு (ஒவ்வொன்றும் அரை டன் எடை இருக்கும்) அமைக்கப்படும் கூண்டு. சின்னக் குட்டிகளுக்கு இத்தனை வலிமையான மரத் தூண்கள் தேவை இல்லை; கீழே கான்கிரீட் தளமும் வேண்டியதில்லை. ஆனால் நிரந்தர கிராலுக்கு இவை அவசியம். இந்த மரத் தூண்கள் கான்கிரீட் தளத்தில் ஒரே அளவான தூரத்தில், செவ்வக வடிவத்தில் பதிக்கப்படும். பின், அந்தத் தூண்களில் துளைகள் போடப்பட்டு ஒவ்வொரு தூணுக்கும் 6 அல்லது 8 குறுக்குக் கட்டைகள், கீழிருந்து மேல் வரை செருகப்படும். இவைதான் கிராஸ் பார் (தாங்கு கட்டை அல்லது குறுக்கு கட்டை). அதேபோல உள்ளறையும், மேலும் சில குறுக்குக் கட்டைகளைச் செருகி, தேவைக்கேற்பக் குறுக்கப்படும். ஆரம்பகால பயிற்சியின்போது, யானைக்கு அதிக இடம் தராமல் சின்ன இடத்திலே வைத்து பயிற்சி தரப்படும். பின், கட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, நன்றாகப் பழகிய பின், பாகனும் போகும் அளவிற்குப் பெரிதாகிவிடும். கிட்டத்தட்ட பன்னிரண்டு அடி உயரம் இருக்கும். குட்டிகளைப் பயிற்றுவிக்க இத்தனை வலிமையான கிரால் தேவையில்லை. சற்றுச் சிறியதாக, மிருதுவான மரம் கொண்டு செய்யப்படும் கிராலே போதும். இங்கே கொடுக்கப்பட்ட படம் ஓரளவு இதன் அமைப்பைப் புரிய வைக்கும் என்று நினைக்கிறேன். எந்த ஒரு யானை முகாமிலும் இதைப் பார்க்கலாம்.
ரதி, நல்ல திடகாத்திரமான பெண் யானை. அவளைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. அதுவும், குட்டியைப் பிரிக்கும்போது வெறி கொண்டு இருக்கும். ஆர்ப்பாட்டம், கோபம், ஆத்திரம் எல்லாம் பன்மடங்கு அதிகரித்து, பாகன்கள் பெரும்பாடு பட வேண்டி வரும். கும்கிகளும் மிகுந்த பிரயாசைப்பட வேண்டி வரும். முகாமே ஒரு போர்க்களம்போல ஆகிப்போகும். மிகுந்த சிரமத்திற்குப் பின்தான், இந்தச் செயலைச் சரியாக முடிக்க முடியும். என்ன, அன்று இந்த வகை நடவடிக்கைகளுக்கு எல்லோரும் நன்றாகப் பழக்கப்பட்டு இருந்ததால், சாதாரண நிகழ்வாக இது பார்க்கப்பட்டது. முதல் முறையாகப் பார்ப்பவர்கள், பயந்துபோய் விடுவார்கள். அந்த அளவு ரணக் களரியாக இருக்கும். திப்பு, முதுமலை, இந்தர், மற்றும் சுப்பிரமணி ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. தெப்பக்காடு முகாமில் இருந்த மிக வலுவான கொம்பன்கள் அவை. சாதாரண யானைகள் அவற்றைக் கண்டாலே மிரண்டு போகும். அந்த அளவுக்கு ஆகிருதியும், உயரமும், பார்த்தாலே மிரளும் தோற்றமும் கொண்டவை. பல காட்டு யானைகளைப் பிடிப்பதில் திறம்பட பணியாற்றியவை. எனவே, ரதியைச் சமாளிப்பதில் பெரிய பிரச்னை வராது என்று எதிர்பார்த்தனர். ரதியும் சாதாரண யானைகள்போல் அல்ல என்றாலும், இந்த நான்கு யானைகளையும் மீறி எதுவும் செய்ய முடியாது என நினைத்தார்கள்.
ரதியின் நான்கு கால்களும், கழுத்தும் சங்கிலியால் பிணைக்கப்பட்டன. சங்கிலிகளின் மற்றொரு முனை கும்கிகளின் துதிக்கைகளில். ரதியால் தெறித்து ஓட இயலாதவாறு அவை அவளைச் சுற்றி நின்றன. குட்டியைக் கரும்பைக் காட்டி கிரால் வரை இழுத்தாயிற்று. இனி, உள்ளே தள்ளிக் கதவை மூட வேண்டியதுதான். அதன்பின், ரதியை கும்கிகளின் உதவியுடன் வேறு முகாமிற்கு மாற்ற வேண்டியதுதான். இதற்கிடையில், டாக்டர் கேயும், ஆய்வாளர் மணியும், கிராலில் உள்ள கட்டைகள் சரியாக வைக்கப்பட்டிருக்கின்றனவா, மேலே இருக்கும் தாங்கு கட்டை சரியானபடி பொருத்தப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். பின், மேலே ஏறி, குட்டி உள்ளே வந்ததும் கதவை மூடி விட்டு, குட்டி எந்த வகையிலும் அடிப்படாதவாறு கண்காணிக்க, அந்தத் தாங்கு கட்டையின் மேலேறி நின்று கொண்டனர். ஏனெனில், குட்டி சில நேரம் மிக மோசமாகக் கட்டைகளில் மோதிக் கொண்டு அடிபடும். காரணம், தாயைப் பிரிந்த சோகம், அதை மிக உக்கிரமாக்கி விடும். அது எழுப்பும் குரல் ஒரு கிலோமீட்டர் வரை கேட்கும். வெறி கொண்டு கிராலுக்குள் முட்டி மோதி ரகளை செய்யும். இதற்காக, பக்கவாட்டு கட்டைகளை நல்ல பருமனான மூங்கில் கழிகளால் செய்திருப்பார்கள். மூங்கில் கழிகள் மற்ற மரங்களைக் காட்டிலும் மிருதுவானவை; அதிகம் அடிபடாது என்பதால் இந்த ஏற்பாடு. குட்டி எப்போதும்போலக் கரும்புத் துண்டுக்காக கிராலுக்குள் நுழைந்ததும், பட்டென்று கதவு மூடப்பட்டது. வெளியே வர முயன்ற குட்டி வழி அடைபட்டிருப்பதைக் கண்டு முட்டி மோதிப் பார்த்தது. பின், பெருங்குரலில் தன் தாயை கூப்பிட்டது. அவ்வளவுதான். மொத்த சூழலும் தலைகீழாக மாறிப்போனது.
நான்கு கும்கிகளின் பிடியில் கட்டுண்டு இருந்த ரதி, குட்டியின் அபயக் குரல் கேட்டதும், மிகவும் உக்கிரமாகி ஐந்து சங்கிலிகளையும் மீறி, கோபாவேசமாக கிராலை நோக்கிப் பாய்ந்து, துதிக்கையை வீசித் தாக்கியது. நான்கு கும்கிகளால் ரதியை நிறுத்த இயலவில்லை. ரதியின் தாய்மைப் பாசம், அவளுக்கு நம்பவியலா வேகத்தையும் வெறியையும் கொடுத்தது. குட்டியை எப்படியாவது இந்த கிராலில் இருந்து மீட்டு விட வேண்டும் என்று தடைகளை மீறி அதி ஆக்ரோஷத்துடன் கிராலை நோக்கிப் பாய்ந்தது. தும்பிக்கை வீச்சில், டாக்டர் கேயும், ஆய்வாளர் மணியும் நின்றுகொண்டிருந்த தாங்கு கட்டை இரண்டாக உடைந்தது. தாங்கு கட்டையின் மேல் நின்றுகொண்டிருந்த டாக்டர் கேயும், ஆய்வாளர் மணியும் திடீரென்று உடைந்த கட்டையில் இருந்து கீழே விழாமல், சமயோசிதமாக, கட்டையின் உடைந்த பகுதியைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கினார்கள். அடுத்து ரதியின் அடி தங்கள் மேல் விழுந்தால் என்னாகுமோ என்ற பயத்தில் தொங்கிக் கொண்டு இருந்தனர். பிழைக்கும் உபாயம் ஒன்றும் தோன்றாமல், மரண பயத்தில் இருந்தனர்.
நல்லவேளை, திப்புவின் பாகன் உடனே சுதாரித்து, ‘சமட்’ என்று திப்புவுக்கு ஆணையிட்டார். ஆஜானுபாகுவான திப்பு, சங்கிலியைக் கொம்பில் (தந்தத்தில்) போட்டுச் சுற்றி, ரதி இழுத்து வந்த சங்கிலியைக் காலில் போட்டு மிதித்து, ரதியை மேலும் கிரால் அருகே போக விடாமல் மறித்து நின்றது. அதற்குள் சுதாரித்துக் கொண்ட மற்ற கும்கிகளும், ரதியைப் பின்னே தள்ளின. இந்த இடைப்பட்ட நேரத்தில், கட்டையில் தொங்கிக்கொண்டு இருந்த டாக்டர் கேவையும், ஆய்வாளர் மணியையும் முகாமில் இருந்த மற்றவர்கள் ஓடிச் சென்று தாங்கிப் பிடித்து இறக்கினர். இந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது, மணியின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதைச் சொல்லத்தான் இவ்வளவு நேரம் ஆனது. ஆனால், அன்று இவை எல்லாம் ஒரு 20 நொடிகளில் நடந்து முடிந்தது. ‘சமட்’ என்றால், யானைகளைப் பழக்கும் மொழியில் மிதி அல்லது மிதித்துப் பிடித்துக்கொள் என்று பொருள்.
‘திப்பு மட்டும் அன்று இல்லாது போயிருந்தால், இன்று இந்தக் கதையைச் சொல்ல நான் இருந்திருக்க மாட்டேன். திப்புவை அந்த அளவுக்கு அதன் மாவுத்தன் அற்புதமான ஆளுமையில் வைத்திருந்தார். இன்று அப்படி ஒரு ஆளுமையைப் பார்ப்பது அபூர்வம். அதேபோல, யானைகளும் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. முகாமில் யானைகளாலோ, மற்றவர்களாலோ எந்த ஆபத்தும் நேர்ந்ததில்லை. சின்னப் பையன்கள்கூட யானையைச் சுலபமாகக் கையாளுவார்கள். வெகு அபூர்வமாகத்தான், எங்கோ ஒரு அசம்பாவிதம் நடக்கும்,’ என்றார் மணி. எனக்கு அவர் விவரித்த முகாமின் ஒரு வீடியோ மனக்கண் முன் விரிந்தது. இதனால்தானே கிரிஸ் வெம்மர், டக்ளஸ் ஹாமில்டன் போன்ற வெளிநாட்டு அறிஞர்கள் டாக்டர் கேவையும், நம் யானை முகாம்களையும் போற்றிப் புகழ்ந்தனர். நான் முன்பே சொன்னதுபோல ‘எலிபன்ட் மென்’ என்ற ஆவணப்படம் மட்டும் இல்லாதிருந்தால், பலருக்கு நான் எழுதுவதை நம்புவதில் நிச்சயம் சிரமம் இருக்கும். மணியின் கூற்றை ஆமோதிப்பது போலத்தான், டாக்டர் கேயின் மகன் ஸ்ரீதரும் பேசுகிறார். இவர்கள் சொல்வதில் இருந்து, நான் புரிந்துகொள்வது, அந்தக் குழு புரிந்துணர்வு இப்போது குறைந்துவிட்டது என்பதுதான்.
எப்போதும்போல, டாக்டர் கே முன்னின்று வழி நடத்தும் ஒரு தலைவராக இங்கும் இருந்தார். எல்லா ஏற்பாடும் சரியாக இருக்கின்றனவா என்று, தானே நின்று அறிந்துகொள்வதில் அவருக்கு நிகர் அவரே. மற்றொரு போற்றத்தக்க குணம், இந்த நிகழ்வுக்கோ அல்லது ரதி எதிர்பார்த்ததைவிட ஆக்ரோஷம் கொண்டு தாக்கியதற்கோ, யாரையும் கடிந்து கொள்ளவில்லை; திட்டவில்லை; மனச் சோர்வு அடையவில்லை. ஒரு தொழிலில் இதுபோன்ற இடர்பாடுகள் சகஜம் என்று பெரும்போக்காய் எடுத்துக்கொண்டு போன விதம், அவருடன் பணி செய்யும் அனைவரையும் மேலும் ஈடுபாடு கொள்ளச் செய்தது; முன்பை விட நேர்த்தியாக வேலை செய்யத் தூண்டியது என்று சொல்லலாம்.
ஒவ்வொரு தொழிலிலும் சில ஆபத்து அல்லது மறையிடர் (ரிஸ்க்) உள்ளடங்கிதான் இருக்கும். அது இல்லாத வேலையே கிடையாது. என்ன, யானைகள் முகாமில், அவை உயிர் தொடர்புடையவைகளாக இருப்பதுதான் கவலை அளிக்கக்கூடியது. ராணுவப் பணி எப்படியோ அப்படித்தான் இதுவும். இதை எழுதும்போது கோவையில் ஒரு கால்நடை மருத்துவர் யானை தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தி வந்தது. டாக்டர் கே இதற்கு பழகிப்போனாலும், மறையிடர் மாறாதே? மறையிடருடன் வாழும் கலையை அவர் நன்றாகக் கற்றுக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
(தொடரும்)

