Skip to content
Home » யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

சாதாரணமாக, ஒரு வைத்தியரின் திறமை அவரது வியாதியைக் கணிக்கும் தன்மையைப் பொறுத்தே அமையும். நோயாளியின் நிலை, உடல்மொழி, அசைவுகள் மற்றும் வெளியில் புலப்படும் அறிகுறிகள் போன்றவற்றைக் கண்டு, ஒரு நல்ல வைத்தியர், அவருக்கு இன்ன நோய் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார். உலகப் புகழ்பெற்ற ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் நாஷ், நோயாளி மருத்துவமனைக்குள் வரும்போதே, அவரை வகைப்படுத்தி விடுவார் என்று சொல்வார்கள். அதாவது, இவர் நக்ஸ் வாமிகா, அவர் பெல்லடோன்னா என்று கொடுக்க வேண்டிய மருந்துகளின் பெயராலேயே அழைப்பாராம். அதேபோல, நம்ம ஊர் ஜாம்பவான் வைத்தியர் ரங்காச்சாரியைப் பற்றி நிறையச் சம்பவங்கள் உண்டு. அவரைப் பற்றி திருமதி. ராஜம் கிருஷ்ணன் எழுதியுள்ள புத்தகம் ஒரு சிறந்த வாழ்க்கை வரலாறு. நமது டாக்டர் கேவும் அதுபோல, யானைகளின் உடல் மொழி மற்றும் அறிகுறிகளை வைத்தே அவற்றுக்கு என்ன வியாதி என்று கண்டுபிடித்து விடும் திறன் படைத்தவராக இருந்தார். நான் பார்த்த எல்லா யானைப் பாகன்களும் அவரைப் பற்றி சொல்லும்போது, ‘நம்ம டாக்கிடரு வந்து கையை வெச்சார்னா போதும், சாகப் போகிற யானை கூட எழுந்து நின்னிடும்’ என்று மறக்காமல் கூறுவர். அந்த அளவிற்கு அவரது திறமை, புகழ் பெற்றிருந்தது.

அன்று டாக்டர் கே முதுமலை தெப்பக்காடு அருகே உள்ள அபயாரண்யத்தில், பி.என்.ஹெச்.எஸின் கள நிலையத்தில் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம். அது, அவர் வனத்துறையில் இருந்து பணி ஓய்வு பெற்றபின் எடுத்துக் கொண்ட ஆய்வு வேலை. பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் அவரை விரும்பி அழைத்து அவர்களது யானை ஆராய்ச்சி பணியின் தலைவராக நியமித்த காலம். கூடலூர் அருகே உள்ள மண்வயல் என்ற இடத்தில் யானை ஒன்று சுகமின்றிச் சரிந்துவிட்டது. அது ஒரு தனியார் எஸ்டேட். அந்த எஸ்டேட்காரர்கள், அங்குள்ள சில வேலைகளுக்காக யானையை வரவழைத்திருந்தார்கள். எதிர்பாராத விதமாக, யானை நோயுற்று படுத்துவிட்டது. எஸ்டேட்காரர்களுக்கு, யானை டாக்டர் முதுமலையில் இருப்பது நன்றாகத் தெரியும். காரணம், டாக்டர் கேயின் புகழ் தென்னிந்தியா முழுவதும், ஏன், இந்தியா முழுவதுமே பரவியிருந்த காலம். வன உயிரின  ஆராய்ச்சியாளர்கள், மிருகக் காட்சி சாலை இயக்குனர்கள், சுற்றுச்சூழல், இயற்கைப் பாதுகாவலர்கள் என அனைவரும் டாக்டர் கே குறித்து அறிந்திருந்தனர். உடனே, எஸ்டேட்காரர்கள் வண்டியுடன் வந்து டாக்டர் கேயின் உதவியை நாடினர். டாக்டர் கேவும், மறுக்காமல் அவர்களுடன் மண்வயல் எஸ்டேட்டுக்குச் சென்றார்.

சென்று பார்த்ததில், யானைக்கு ஏற்பட்டுள்ள வியாதி மலக்குடல் அடைப்பு என்று தெரிந்தது. மனிதர்களுக்கு எப்படிச் சில நேரங்களில் மலம் சரியாகப் போகாமல் சிக்கல் ஏற்படுகிறதோ, அதேபோன்று யானைகளுக்கும் நேரும். உண்ணும் உணவில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது புதிய உணவு சேராமல் போனாலோ, அதுபோல நேரிடும்; சரியான அளவில் நார்ச் சத்து இல்லாத உணவைத் தொடர்ந்து உண்டாலும், இது நேரிடும். அந்த நேரங்களில் யானை மிகவும் சோகமாகக் காணப்படும்; துதிக்கையால் வயிற்றுப் பகுதியைத் தட்டியவாறு இருக்கும்; கால்களை மாற்றி மாற்றி வைத்து நிலையில்லாமல் கஷ்டப்படும்; சில நேரம் கால்களால் வயிற்றைத் தட்டும்; பாகனை ஏக்கத்துடன் பார்க்கும். நிலைமை முற்றிவிட்டால், படுத்து விடும்; நீண்ட பெருமூச்சு விட்டு, மிகவும் சிரமப்படும். முக்கியமாக, வயிறு உப்பி கோபுரம்போல காணப்படும். கட்டி தட்டிய மலம், சில நேரம் ஆசனவாயில் வெளியே வர இயலாமல் நிற்கும். இந்த யானை அது போன்ற ஒரு நிலையில் தரையில் படுத்துக் கிடந்தது. டாக்டர் கேயின் அனுபவத்தில் இது ஒரு சாதாரண கேஸ். என்ன, சற்றுச் சிக்கலானால், மருந்துகள் மற்றும் வேண்டிய உபகரணங்கள் கிடைப்பது கடினம். காரணம், அன்றைய கூடலூர் சின்ன கிராமம். ஊட்டியோ அல்லது மைசூரோ போக வேண்டி வரும்.

யானையின் மலக்குடல் மூன்றிலிருந்து நான்கு மீட்டர் வரை (வயதிற்கேற்ப) நீண்டிருக்கும். மருத்துவரின் கை முழுவதும் அதற்குள் போனாலும், அடைப்பு உள்ள இடத்தைப் பிடித்து, அடைப்பை வெளியே கொண்டு வருவது சில நேரத்தில் முடியாமல் போகலாம். பெரும்பாலும், யானை முக்கி முக்கி மலம் கழிக்க முயன்றதால், அடைப்பு மிக உள்ளே இருக்க வாய்ப்பு இருக்காது. ஆனால், சில நேரங்களில் அப்படி இருக்காது. இது மனிதர்களுக்கு எனிமா தருவதுபோலத்தான். என்ன, யானையின் ஆசன வாய் பெரியது. கையை நுழைத்து எடுத்து விடலாம். இல்லையென்றால், வெந்நீரை சிறிய குழாய் மூலம் சோப்புத் தண்ணீருடன் மலக்குடலுக்குள் செலுத்தி முயற்சி செய்யலாம். டாக்டர் கே பாகனிடம், யானையைச் சமாதானப் படுத்தச் சொல்லி விட்டு, கையுறையை அணிந்து கொண்டு யானையின் பின்புறம் சென்றார். மெதுவாக ஆசன வாயைத் திறந்து கையை உள்ளே நுழைத்து லாகவமாக அடைப்பு உள்ள இடத்தையும் பொருளையும் தேடினார். அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. கட்டியாக, அடைத்துக் கொண்டு நின்ற நார் முடிச்சைப் பிடித்து வெளியே இழுத்துப் போட்டார். அவ்வளவுதான், உள்ளே இருந்து மடை திறந்த வெள்ளம்போல அது வரை தேங்கி நின்ற கழிவுகள், வெளியே வந்து கொட்டின. டாக்டர் கே சமயோசிதமாக, யானையிடம் இருந்து விலகி விட்டதால், அந்தப் பிரவாகத்தில் இருந்து தப்பித்தார்.

அதை விட அதிசயம், அது வரை போராடிக்கொண்டிருந்த யானை, ஐந்து நிமிடங்களில் எழுந்து நின்றது. டாக்டர் கே, ‘சபாஷ்’ என்று அதைத் தட்டிக் கொடுத்தார். பின், பாகனிடமும், மற்றவர்களிடமும் சொன்னார்: ‘நீங்க யானைக்கு ஊர்ல என்ன உணவு கொடுக்கிறீங்களோ, அதையே கொடுங்க. இங்க வந்து மாற்றிக் கொடுத்தால், சேராமல் போகும். அதேபோல, நிறைய தழை, புல் மேய விடுங்க. உங்களை மாதிரி அதையும் நல்லாப் பாத்துக்குங்க.’ இதைக் கால்நடை ஆய்வாளர் மணி சொல்லும்போது, எனக்கு அந்தக் காட்சியை மனக்கண் முன் காண முடிந்தது. அவர் சொன்ன விதம் தத்ரூபமாக இருந்ததுடன், அந்த உணர்வுகளை நான் அனுபவிக்க முடிந்தது. மற்றொரு காரணம், சிவனத்தம் மாரியம்மன் கோவில் அருகே, இதே போன்ற நிலையில் ஒரு காட்டு யானையை நான் கண்டதும், எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் நின்றதும் என் மனதில் நிழலாடியது. கழுகுகளின் காடு புத்தகத்தில் இதை நான் எழுதி இருக்கிறேன். அன்று சத்தியமங்கலம் ஒரு புலிகள் காப்பகம் இல்லை; தனியாக ஒரு கால்நடை மருத்துவர் கிடையாது; மருத்துவர் கோவையில் இருந்தோ அல்லது சத்தியில் இருந்தோதான் வர வேண்டும்; சத்தியில் வன உயிரின மருத்துவர் வசதி இல்லை; சாலை வசதி கிடையாது; குறுக்கே ஆற்றைக் கடந்து பரிசலில் வர வேண்டும். அந்த யானையும் இதே காம்பாக்ஷன் நோயால்தான் பாதிக்கப்பட்டு இருந்தது. அன்று நான் டாக்டர் கே போன்று ஒருவர் இல்லையே என்று உண்மையாக வருந்தினேன். காரணம், நடக்க அஞ்சாத, எந்த இடத்திற்கும் போகத் துணிச்சல் உள்ள வன உயிரின மருத்துவர்களைக் காண்பது அரிது மட்டுமல்ல, அந்த நிபுணத்துவமும் அரிதுதான். அதைவிட, அந்த மனம், ஈடுபாடு, யானைகளின்பால் காதல், இவையெல்லாம் கிடைப்பது மிக மிக அரிதான ஒன்று.

இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், இதைப் போன்ற சிகிச்சைகளை முகாமில் இருந்த கால்நடை ஆய்வாளர், பாகன்கள், உதவியாளர்கள் அவசர காலத்தில் செய்யக் கற்று வைத்திருந்ததுதான். எப்படி செவிலியர்கள், ஆபத்துக் காலத்தில் சில சாதாரண சிகிச்சை முறைகளைக் கையாளுகிறார்களோ, அதுபோல. இன்றும், எனிமா கொடுப்பது, ஊசி போடுவது, புண்ணுக்கு மருந்திடுவது போன்ற சாதாரண சிகிச்சை முறைகளை ஆஸ்பத்திரியில் உதவியாளர்கள்தான் செய்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற சின்ன வேலைகளைச் செய்ததன் மற்றொரு காரணம், அன்று டாக்டர் கே மட்டுமே மொத்த தமிழக வனத்துறைக்கும் கால்நடை மருத்துவர். இன்றுபோல், ஒவ்வொரு சரணாலயத்திற்கும் தனித்தனியாகக் கால்நடை மருத்துவர் கிடையாது. அதனால், டாக்டர் கே வரும் வரை முதலுதவிபோல, சின்னச் சின்ன வைத்தியங்களை அவர்கள் செய்யப் பழகி இருந்தார்கள்; டாக்டர் கேவும் அதை ஊக்கப்படுத்தினார். அவரது காலத்தில் மிகவும் அருமையாகப் பேணப்பட்ட முகாம்கள் என்ற பெயரை இதனால் பெற்றிருந்தனர்.

இப்போது காணப்போவது, லைட் பாடி கிருஷ்ணன் எவ்வாறு காட்டு யானைக்கு எனிமா கொடுத்தார் என்கிற கதை. முதுமலைக்கும் பந்திபூருக்கும் இடையில் ஓடும் நெடுஞ்சாலைக்கு இடதுபுறம், சாலைக்கு இணையாகக் காட்டுக்குள் ஒரு சாலை உண்டு. அதை மண் சாலை என்று அழைப்பர். ஒருமுறை அதன் வழியே ரோந்து போன வனத்துறை ஊழியர்கள், ஒரு காட்டு யானை கீழே விழுந்து துடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டனர். வயிறு உப்பி, அம்பாரம்போல இருந்தது; நிலத்தில் கிடந்து சுற்றிச் சுற்றி நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. உடனே அவர்கள் ஓடி வந்து டாக்டர் கேயிடம் தகவல் சொன்னார்கள். துரதிர்ஷ்டவசமாக, அன்று டாக்டர் கேவுக்கு உடல்நிலை சரியில்லை. சரியான ஜுரம்; மூட்டு வலியால் நடக்க முடியாத நிலை. ஆனாலும், இதைக் கேள்விப்பட்டதும், அவர் கிருஷ்ணனைக் கூப்பிட்டார். அவருக்கு கிருஷ்ணனின் திறமை பற்றி நன்றாகத் தெரியும். அது மட்டுமல்லாது, கிருஷ்ணனுக்கு அந்தக் காட்டில் தெரியாத இடமே கிடையாது. யானைகளைப் பற்றிய பயம் இல்லாதவர். காரணம், எந்த ஆராய்ச்சியாளர் முதுமலைக்கு யானைகள் பற்றிப் படிக்க வந்தாலும் அவருக்கு அன்றிலிருந்து இன்றுவரை வழிகாட்டுவது கிருஷ்ணன்தான். குரும்பர் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், அந்த அளவிற்குக் காட்டையும், யானைகளையும் அறிந்தவர். மேலும், இந்தச் சின்ன வைத்திய முறைகளையும் நன்கு கற்றறிந்தவர். என் அடுத்த ஆசை, அவரையும் அவர் அனுபவங்களையும் பற்றி எழுத வேண்டும் என்பதே. குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கு இந்தக் காடு அவர்களது வீடு போலத்தான். இன்று நாம் பெரிதாகப் பேசும், இயற்கையோடு இயைந்து வாழ்தல் என்பதை முற்றிலும் உணர்ந்தவர்கள் அவர்கள்.

‘கிருஷ்ணா, இவங்க சொல்றதைப் பார்த்தால், யானை இம்பாக்ஷன் (காம்பாக்ஷன்) ஆனதால், மலம் கழிக்க முடியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறது. நீ அங்க போய் யானையைப் பாரு. வயிறு உப்பி, தரையில் உதைத்துக் கொண்டு கீழே கிடந்து அல்லாடிக்கொண்டு இருந்தால், நாம எப்பிடி கையை உள்ளே விட்டு சாணியை வெளியே இழுத்து விடுறோமோ, அதே மாதிரி செய். சாணியெல்லாம்  வெளியே வந்துருச்சுன்னா, உடனே அங்கேருந்து ஓடி வந்துரணும். ஏன்னா, யானை சில நிமிஷத்துலே எழுந்திரிச்சுரும். தூர இருந்து, அது சரியாகி, நடந்து போகுதான்னு மட்டும் பாத்துட்டு வந்திரு. கிளவ்ஸ், கயிறு, எல்லாம் எடுத்துக்க,’ என்று தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்தார்.

‘அய்யா ஒண்ணும் கவலைப் படாதீங்க. நான் போய் எல்லாம் நல்ல படியா முடிச்சிட்டு வரேன்,’ என்று கிருஷ்ணன், உபகரணங்களை எடுத்துக்கொண்டு, கூட இரண்டு உதவியாளர்களை அழைத்துக் கொண்டு, சாண்ட்ரோடு விரைந்தார். வன ஊழியர்கள் சொன்ன இடத்தில் (அந்தக் காலத்தில் மொபைல், கூகுள் மேப் எல்லாம் கிடையாது!) யானை விழுந்து கிடப்பதைப் பார்த்தார். டாக்டர் கே சொன்னதுபோல வயிறு உப்பி இருந்தது; நிலை கொள்ளாமல் தவித்தது. ஆயினும், அந்த நிலையில் யானையால் எதுவும் செய்ய இயலாது என்பதை கிருஷ்ணன் நன்றாக அறிந்திருந்ததால், கவனமாக அதன் பின்புறத்தை அணுகினார். உதவிக்கு இருவர் இருந்ததால், சற்றுத் தெம்பு வந்தது.

முதலில், கயிற்றால் யானையின் கால்களைக் கட்டினர். பின்னர், துதிக்கையை அசையாமல் கட்டினர். யானை மிகவும் போராடிக் களைத்து விட்டதால், இதெல்லாம் சுலபமாக முடிந்தது. பின்னர், மலக்குடலுக்குள் கையுறை அணிந்த கையை முழுவதும் விட்டு, கட்டித் தட்டிப் போயிருந்த மலத்தை அகற்றி, உள்ளே இருந்தவற்றையும் வெளியே இழுத்துப் போட்டார். அவ்வளவுதான், உள்ளே தேங்கி கிடந்த மொத்த மலமும், ஆறுபோலப் பொதபொத வென்று வந்து விழுந்தது. உடனே, மடமடவென்று, கயிற்றை அவிழ்த்தனர். ஒரே ஓட்டமாக 100 மீட்டர் தொலைவில் இருந்த மரத்தடியில் சென்று நின்று கொண்டனர். பத்து நிமிடத்தில் யானை எழுந்து நின்றது; சுற்றுமுற்றும் பார்த்தது; பின் காட்டுக்குள் சென்று மறைந்தது! இதை கிருஷ்ணன் என்னிடம் சொல்லும்போது, அவர் கண்களில் மின்னிய ஒளியைக் கண்டு பரவசமானேன். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பின் இந்த நிகழ்வை என்னிடம் சொல்லும்போது அதை மறுபடியும் அவர் மனதில் வாழ்ந்து ரசிப்பதை நான் உணர முடிந்தது. டாக்டர் கேயின் நினைவுகள், முகாமில் அன்று இருந்த எல்லா பாகன்கள், காவடிகள், உதவியாளர்கள் ஆகியோரிடம் ஒரு பொற்காலத்தை நினைவுபடுத்தியதை நான் உணர முடிந்தது. என்ன, அவர்களைப்போல எனக்கு ஒரு பேறு கிட்டவில்லை என்ற ஏக்கம்தான்.

(இந்த அத்தியாயத்தை எழுதுவதற்குப் பெரும் உதவியாக இருந்த சத்தியமங்கலம் வனத்துறை கால்நடை மருத்துவர் திரு. சதாசிவம் அவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.)

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *