Skip to content
Home » யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்களுக்குத் தாங்கள் படித்த அல்லது படிக்கும் புத்தகங்களில் காணும் கருத்துக்கள்தான் உண்மையானவை, விஞ்ஞானப் பூர்வமானவை என்ற எண்ணம் இருப்பதில் வியப்பில்லை. காரணம், மேல்நாட்டு கல்விதான் சிறந்தது என்ற எண்ணம், பிரிட்டிஷ்காரர்கள் வந்த பின் கிட்டத்தட்ட  எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகிவிட்டது. ஏனெனில், உலகம் முழுவதும் அல்லது பெரும்பான்மை நாடுகளில் கல்வி முறை ஏக தேசம் அந்த முறையில் இருப்பதுடன், வாழ்முறையும் மேற்கத்திய நடைமுறையில் வந்து விட்டதன் விளைவு இது. மற்ற நல்ல விஷயங்களையும் கருத்துக்களையும் எளிதில் ஏற்க இயலவில்லை. அத்துடன், சொந்த அனுபவங்கள் சேரும்போது, சில நேரங்களில் வறட்டுப் பிடிவாதமாக நாம் கொண்ட எண்ணமே சரி என்ற முடிவிலும் இருப்போம்.  இதை முனைவர் ஈசா, தன் சொந்த அனுபவத்தில் இருந்து விவரிக்கக் கேட்டு, நான் பிரமிப்பு அடைந்தேன்.  முனைவர் பி.எஸ். ஈசா, திருச்சூரைச் சேர்ந்தவர்; யானைகளைக் குறித்த ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றவர்; ஆசிய யானைகளின் வல்லுனர்கள்  குழுமத்தில் உறுப்பினர்; உலகம் முழுவதும் அறியப்பட்ட யானை ஆராய்ச்சியாளர்; இந்திய அரசின் யானை பாதுகாப்புக் குழுவின் அங்கத்தினர். டாக்டர் கேயுடனான அவரது அனுபவங்கள் ஆக்கப்பூர்வமானவை. அவர் சொல்கிறார்:

‘அப்போது நான் பரம்பிக்குளத்தில் யானைகள் குறித்த ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அது டாப்ஸ்லிப்பை அடுத்துள்ள காட்டுப் பகுதி. ஆனால், கேரளாவைச் சேர்ந்தது. எனக்கு யானைகள் குறித்து நல்ல அறிவு முன்பே இருந்தது. காரணம், நான் திருச்சூரைச் சேர்ந்தவன். அங்குதான் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழா நடக்கும்; கோவிலில் 20-30 யானைகள் இருக்கும். அதுபோக, கேரளாவில் பலரும் யானைகளை வளர்த்து வந்த காலம் அது. யானைகளைப் பற்றியும் அவற்றின் மனநிலை பற்றியும் கேட்டும், கண்டும் உணர்ந்தவன் நான். யானைகள் அங்கு தறிகெட்டு ஓடுவது மிகச் சாதாரணமான விஷயம். பூரம் திருவிழாவின்போது, குறைந்தது ஐந்தாறு பேர் யானை வெருண்டு ஓடுவதால், காயமடைவர்; சில நேரம் மரணம் நிகழும். ஆனால், ஒரு சம்பவம்கூட இல்லாமல் பூரம் நடந்ததே இல்லை. பாகன்களும், சர்வ சாதாரணமாக அங்குசத்தைப் பயன்படுத்தி, யானைகளைத் துன்புறுத்துபவர்; கழிகளால் அடிப்பர். இதனால், யானைகள் முகாம் என்றாலே எனக்கு ஒரு வெறுப்பு இருந்தது. யானைகளைத் துன்புறுத்தும் இடத்திற்கு எதற்காகப் போக வேண்டும் என்று நான் ஆரம்ப காலங்களில், கோழிகமுத்திக்கோ, வரகலையாற்றுக்கோ போவதே இல்லை. இத்தனைக்கும், நான் இருந்த பரம்பிக்குளம், இந்த முகாம்களில் இருந்து கூப்பிடு தூரத்தில்தான் இருந்தது.

பின், மெல்ல மெல்ல டாக்டர் கேயுடன் பழகத் தொடங்கினேன். காரணம், அங்கு வேறு பொழுதுபோக்கு கிடையாது. மேலும், டாக்டர் கே யானைகளைக் குறித்து அறிந்தவர்; அங்குள்ள மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தார்; அவரைப் பற்றி பலர் உயர்வாகப் பேசுவர்; குறிப்பாக, வனத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும். எனவே, எங்கள் தொடர்பு நட்பாக மாறியது. அப்போது, ஒருநாள் அவர் டாப்ஸ்லிப் வந்திருக்கும்போது என்னையும் வரகலையாற்று முகாமுக்கு அழைத்துப் போனார். ‘வா, சும்மா நம்ம கேம்பைப் பார்த்துட்டு வரலாம்,’ என்று அழைத்துப் போனார். வேண்டாவெறுப்பாகத்தான் நான் போனேன். அங்கு போன பின், என்னுடைய எண்ணங்கள் முற்றிலும் மாறிவிட்டது. பின்னர், நான் அடிக்கடி அங்கு போகத் தொடங்கினேன். ஏனென்றால், டாக்டர் கே இருந்த எந்த முகாமிலும், அங்குசத்தைப் பயன்படுத்துவது கிடையாது. யானைகளைத் துன்புறுத்துவது கிடையாது. யானைகள் மற்றவர்களைப்போல முகாமில் சுதந்திரமாக உலா வந்தன. அவற்றை நெறிப்படுத்த ஒரு சின்னக் குச்சிதான் பயன்படுத்தினர். அதுவும் மெல்லிய உண்ணிச் செடி (லாண்டானா) குச்சி. முதலில் என்னால் இதை நம்ப முடியவில்லை. நான் அதுவரை பார்த்த யானைக் கொட்டாரம்போல இல்லை.

அதைவிட என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, டாக்டர் கே  முகாம் யானைகளுடன் கொண்டிருந்த நட்பு. ‘என்னடா ஐஜி, எவன்கூட நேத்து சண்டை போட்டே?’ என்று கேட்டுக்கொண்டு அவனருகே போய் தட்டிக் கொடுத்து விட்டு, அவன் கால்களுக்கு அடியில் புகுந்து அடுத்த யானையான சரோஜாவைக் கவனிப்பார். பின், சரோஜாவின் கால்களுக்கு அடியில் புகுந்து அடுத்த யானையைக் காணப் போவார். என்னால் இதையெல்லாம் நம்ப இயலவில்லை. ‘டாக்டர், இப்படிச் செய்வது ஆபத்தில்லையா?’ என்று கேட்டேன். ‘ஸீ, எனக்கு என் மேல் நம்பிக்கை உண்டு, என் முகாம் யானையின் மேலும் நம்பிக்கை உண்டு. அதோடு சீக்கிரம் போகலாமே,’ என்று சிரிப்பார் டாக்டர் கே. ‘ஆனாலும், நாம் ஜாக்கிரதையையும் விடக்கூடாது’ என்று பின்னர் கூறுவார். அதைவிட என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது, ஐஜியின் சாந்த சுபாவம். ஆஜானுபாகுவான அந்தக் கொம்பன், நல்ல மதத்தில் இருக்கும்போது, ஒரு ஆறேழு வயதுள்ள ஒல்லியான குச்சி போன்ற சிறுவன், அனாயாசமாக ஐஜியைக் குளிப்பாட்ட ஆற்றுக்குக் கொண்டுபோவான். பூரம் உற்சவத்தில் அம்பாரி கட்டப்படும் பெரிய ஆண் யானையை ஒத்த ஐஜியை ஒரு சிறுவன் கையாளுவது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்த அளவிற்கு யானைகளும் மனிதர்களும் ஒன்றி இருந்தனர் இந்த முகாமில்.

இதைத் தொடர்ந்து நான் டாக்டர் கேயிடம், ஆண் யானையின் மதநீர் வேண்டும் என்று கேட்டேன். சில ஆய்வு முடிவுகளை எட்ட, மதநீரின் ஒரு மாதிரி தேவைப்பட்டது. ‘ஓகே. நீ வந்து எடுத்துக்கோ,’ என்றார்! நான், ’டாக், என்னால் எல்லாம் எடுக்க முடியாது. ஹெல்ப் மீ,’ என்றேன். ‘வா, கேம்புக்கு போய் எடுத்துக்கலாம்,’ என்று என்னை முகாமிற்கு அழைத்துப் போனார். ஐஜி அப்போது (மஸ்த்தில்) மதத்தில் இருந்தது.  அவனருகே சென்று, ‘உம், எடுத்துக்கோ.’ என்றார். ஆடிப்போன நான், ’டாக், என்னால் முடியாது,’ என்றேன். என்ன இருந்தாலும் மதம் கொண்ட யானை அல்லவா? உடனே டாக்டர் கே மேலே இருந்த சிறுவனிடம், ‘டேய், இந்தக் குப்பியில கொஞ்சம் மத நீர் பிடிச்சுக் கொடு,’ என்றார். அவனும் சற்று அந்தச் சுரப்பியை அழுத்தி, கொஞ்சமாக மத நீரை நிரப்பிக் கொடுத்தான். நம்ப இயலாமல் நான் பார்த்துக் கொண்டு நின்றேன். ‘என்ன, இப்போ நீதான் எடுக்கனும்,’ என்ற டாக்டரின் குரல் கேட்டு நான் ஆடிப் போனேன். ‘ப்லீஸ், டாக், என்னால் முடியாது,’ என்றேன். டாக்டர் கே குப்பியை வாங்கி தானே மத நீரை எடுத்தார். ‘உம், இப்போ நீ எடு,’ என்று என்னை வற்புறுத்தி, மத நீரை எடுக்க வைத்தார். இப்படி அவர் என்னுள் இருந்த தயக்கம், பயம் ஆகியவற்றை என் செயல் மூலமே அகற்றினார். இத்தனை ரகளைக்கு நடுவில் ஐஜி அலுங்காமல், அமைதியாக நின்றது.

மற்றொரு முறை, நாங்கள் ஒரு பெண் யானையை பரிசோதித்துக் கொண்டிருந்தோம். ‘ஓகே. இவள் கர்ப்பமாக இருக்கிறாள். கொஞ்சம் எக்ஸ்ட்றாவா கவனிக்கனும்,’ என்றார் டாக்டர் கே. நான், ‘எப்படி டாக் கண்டுபிடிச்சீங்க?’ என்று கேட்டேன். ‘வா. கையை இந்த இடத்துல வச்சு பாரு,’ என்றார். நான் அந்த யானையின் வயிற்றுப்பகுதியில், மென்மையாக  கையை வைத்துப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. ‘என்ன, பூவ தொடுவது மாதிரி தொடுரெ, இது பூனக்குட்டி இல்லே, யானை! நல்லா அழுத்திப் பாரு,’ என்றார். நான் கையை வைத்து நன்றாகப் பலத்துடன்  அழுத்தினேன். உள்ளே இருந்து ஒரு மென்மையான உதை பதிலாக வந்தது. குட்டியின் அனிச்சையான எதிர்வினை. நான் அசந்துபோனேன். டாக்டர் கேயின் அணுகுமுறை வித்தியாசமானது மட்டுமல்ல, மிகவும் உணர்வு பூர்வமானது. யானைகளை வெறும் மிருகங்களாகப் பார்க்காமல், நண்பர்கள்போல பாவித்ததன் விளைவு, அவரால் அந்த அளவிற்குச் சாதிக்க முடிந்தது. என்னிடம்கூட அவர் வாதம் செய்து என்னை மாற்றவில்லை; நேரிடையான அனுபவத்தைத் தந்து, என் முன் வெறுப்பை மாற்றினார். அதேபோல அவர் யாருக்கும் அறிவுரைகள் அல்லது பிரசங்கங்கள் கொடுப்பதில்லை. மாறாக, இயல்பான நகைச்சுவையுடன் உண்மையை விளக்குவார். மிக வித்தியாசமான, ஆனால் பலனளிக்கும் பண்பு அது. ஆயினும், எல்லோரும் அவர்போல இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை.’

முனைவர் ஈசா, எப்படி அவர் டாக்டர் கேயுடன் சில விஞ்ஞான கட்டுரைகளைப் பதிப்பித்தார்; எப்படிச் சிலர் அதைத் திருடி தங்கள் பெயரில் வெளியிட்டனர் என்ற கதைகளை எல்லாம் சொன்னார். ஆயினும் அவை டாக்டர் கேயின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கவில்லை என்பதால், நான் அவற்றை எல்லாம் இங்கு பதிவிடவில்லை. ஆனால், நான் மறக்காமல் பதிவிட வேண்டியது, எப்படி அரசியல்வாதிகள் இது போன்ற சரித்திர நாயகர்களின் பெயரைக் கெடுக்கிறார்கள் என்ற விவரத்தை. ஏனெனில், அவர்கள்தான் இது போன்ற ஆளுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். காங்கிரஸ் அரசு மத்தியில் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம் அது. ஒரு முன்னாள் சுற்றுச்சூழல்துறை பெண் அமைச்சர் யானைகள் சிறப்பு பணிக்குழு உறுப்பினர் ஆக இருந்தார். முனைவர் ஈசா மற்றும் அஜய் தேசாய் இருவரும் அந்தக் குழுவில் அங்கத்தினர்களாக இருந்தனர். அந்தக் குழுவில் டாக்டர் கேவையும் இணைக்க அவர்கள் முடிவு செய்து அதற்கான கூட்டம் கூட்டப்பட்டது. முன்னாள் பெண் அமைச்சர் வரத் தாமதம் ஆனது. அன்றிருந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர், அந்த முன்னாள் அமைச்சர் இல்லாமல் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார். ஏனெனில், அவர் சுற்றுச்சூழல் துறையில் வல்லவர் என்று பெயரெடுத்தவர். இவர்களுக்குத் தெரியாது, தாமதத்தின் காரணம், வேறொருவர் தன் பெயரைப் பரிந்துரைக்க  அந்த முன்னாள் பெண் அமைச்சரை நாடியதுதான் என்று. ஒரு வழியாக அந்த முன்னாள் பெண் அமைச்சரும் வந்து சேர்ந்தார்.

டாக்டர் கேயின் பெயரைப் பரிந்துரைத்ததும், முன்னாள் பெண் அமைச்சர், வேகமாக ஆட்சேபித்தார். டாக்டர் கேவுக்கு நல்ல பெயர் இல்லை; யானைகளைச் சரியாக பராமரிப்பதில்லை என்று சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். முனைவர் ஈசாவும், அஜய் தேசாயும், அவரை எதிர்கொண்டு, எந்த விதத்தில் அந்தக் குற்றச்சாட்டுகளை அவரால் நிரூபிக்க முடியும் என்று வாதிட்டனர். ஏனெனில், இவர்கள் இருவரும், டாக்டர் கேயுடன் பல ஆண்டுகள் பழகியவர்கள் மட்டுமல்ல, கூட இருந்து பணி செய்தவர்கள்; அவரால் பயிற்றுவிக்கப் பட்டவர்கள். முன்னாள் பெண் அமைச்சரால், எந்த ருசுவும் கொடுக்க முடியவில்லை. ஆனால், டாக்டர் கேவைவிட அவர் சிபாரிசு செய்தவர் சிறந்தவர் என்று கூறினார். முனைவர் ஈசா பின்னர் அந்த ஆணையத்திற்கு கடிதமும் எழுதினார், தன் நிலைப்பாட்டை வலியுறுத்தி. பின்னொரு அத்தியாயத்தில், எப்படி விலங்கு நல ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் வியாபாரம் செய்கிறார்கள் என்பதை நான் எழுதுவேன். அப்போது, இந்தத் துறையில் உள்ள அரசியல் புரியும். திறமை எங்கிருந்தாலும் வெல்லும் என்பது எவ்வளவு தவறு என்பது புரியும். அதனால்தான், ஜெயமோகன், யானை டாக்டர் கதையில், டாக்டர் கேவுக்கு எப்படி பத்மஸ்ரீ  விருது கிடைக்காமல் போனது என்று எழுதினார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *