ஆங்கில மருத்துவ முறை வந்த பின்னர், மற்ற மருத்துவ முறைகள் விஞ்ஞான பூர்வமானவை அல்ல என்று நினைக்கும் மனோபாவம் வந்துவிட்டது. அதற்குக் காரணம், பெரும்பான்மையான மருத்துவமனைகளும் மருத்துவக் கல்லூரிகளும் ஆங்கில மருத்துவ முறை வழிக் கல்வியைப் போதிப்பதுதான். இப்போது மற்ற மருத்துவ முறையில் பயிற்றுவிக்கும் கல்விச் சாலைகள் வந்து விட்டாலும், பெருவாரியான மக்கள் ஆங்கில முறை மருத்துவமே சிறந்தது என்று நினைக்கிறார்கள். பக்க விளைவுகள் கூடுதலாக இருந்தாலும், அதுதான் சிறந்தது என்று நினைப்பது தவிர்க்க இயலாமல் போய்விட்டது. இன்றும், பல வியாதிகளுக்கு வீட்டு அல்லது நாட்டு வைத்தியம் சிறந்தது என்பதை ஒப்புக் கொள்ள தயக்கம்தான் நிலவுகிறது. மருத்துவர் ஹெக்டே போன்றவர்கள் என்னதான் தரவுகளுடனும், ஆய்வு மூலமும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் சிறப்பைச் சொன்னாலும், கேட்க ஆளில்லை என்பதுதான் உண்மை. அந்த எண்ணம், கால்நடை மருத்துவத்திலும் உண்டு. டாக்டர் கே, இந்த விஷயத்தில் சற்று மாறுபட்டு இருந்தார். காரணம், காலம் காலமாகப் புழங்கி வரும் நல்ல பயனுள்ள மருந்துகளை ஏன் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம். மற்றொன்று, அந்த மருந்துகள் எளிதில் கிடைப்பவை. கையாளும் முறைகளையும் எளிது. எல்லோரும் அறிந்து வைத்திருப்பர், வீட்டில் உள்ள அந்தக் காலப் பாட்டிகளைப்போல.
இங்கு நாம் யானை கணேஷின் கதையைப் பார்ப்போம். டாக்டர் கேவைப் பற்றி எழுதும் யாரையும் கவரும் ஒரு புகைப்படம், அவர் கணேஷுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சி. அருகில் ஆய்வாளர் மணியும் இருப்பார். ஓர் அற்புதமான கறுப்பு வெள்ளை புகைப்படம். இந்த கணேஷ் திருப்பாப்புலியூர் (கடலூர் அருகே) கோவிலில் இருந்த ஆண் யானை. கணேஷின் பாகன் ஒரு மொடாக் குடியன். குடித்து விட்டு கணேஷை அடித்துத் துன்புறுத்துவான். நாளாக, நாளாக அவனது கொடுமை அதிகமாகிப்போனது. குடியினால், நிதானமிழந்து என்ன செய்கிறோம் என்று புரியாமல், அங்குசத்தால் தலையில் குத்திவிட்டான். கொடுமை தாங்காது, கணேஷ் அவன் கீழே இறங்கியதும், அடித்துக் கொன்றுவிட்டது. இன்று பத்திரிக்கையாளர்கள் எழுதுவதுபோல, யானை ஆட்கொல்லியாகிவிட்டது. தறிகெட்ட யானையை எப்படிக் கோவிலில் வைத்திருப்பது என்று, கோவில் நிர்வாகம் வழக்கம்போல, கணேஷை முதுமலை முகாமுக்கு அனுப்பிவிட்டது. அங்கு கணேஷ் மிக சாதுவாக ஆனதுடன், நல்ல முகாம் யானையாக மாறிவிட்டது. இது போன்ற நிகழ்வுகளால்தான், டாக்டர் கே யானைகளைக் கோவிலில் வைத்திருப்பதை விரும்பவில்லை. பெரும்பாலான பாகன்கள் குடிகாரர்களாக இருந்ததும், கோவில் நிர்வாகம் சரியானபடி யானைகளைப் பராமரிக்காததும்தான் முக்கியக் காரணங்கள்.
முகாமிற்கு கணேஷ் வந்ததும், தலையில் அங்குசத்தால் ஏற்பட்ட காயத்தை ஆற்ற, வழக்கம்போல், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், காயத்திற்கு கட்டு என்று சிகிச்சை செய்தனர். ஓரிரு மாதங்கள் புண் ஆறியதுபோல இருக்கும்; பின்னர் சீழ் வரத் தொடங்கும். மறுபடியும், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், புண்ணுக்கு மேற்பூச்சு, கட்டு என மருத்துவம் செய்யப்படும். இது தொடர்கதையாக ஒரு சில வருடங்களாக நடந்து கொண்டிருந்தது. டாக்டர் கே, இதற்கு ஒரு முடிவான தீர்வைத் தர யோசித்தார். பழைய மருத்துவ நூல்களை ஆராய்ந்தார். மயில் துத்தத்தின் பயன்பாடு பற்றி அவற்றில் சில குறிப்புகளைக் கண்டார். நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் வந்த பின், மயில் துத்தத்தின் பயன்பாடு பெரும்பாலும் அருகிப்போன நேரம் அது. பழங்கால மருத்துவ முறைகளில், மயில்துத்தம் புண்களையும் காயங்களையும் ஆற்ற பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. ‘காப்பர் சல்பேட்டில் (மயில்துத்தம்) உள்ள தாமிர அயனிகள் (copper ions) காயங்கள் ஆறும் செயல்முறையை மேம்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே இது சில சருமப் புண்கள் மற்றும் காயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.மரபான பயன்பாடு- சில பாரம்பரிய மருந்துகளில், குறிப்பாக ஆயுர்வேதத்தில், மயில் துத்தம் மற்ற மூலிகைகளுடன் கலந்து காயங்களை ஆற்றப் பயன்படுகிறது (World Journal of Pharmaceutical Science and Research).
மயில் துத்தத்தின் பயன்பாட்டு நம்பகத்தன்மையை அறிந்த பின், டாக்டர் கே, அதை கணேஷின் ஆறாத காயத்திற்குப் பயன்படுத்தினார். அவர், எப்போதும் ஏதோ ஒரு மருத்துவ சஞ்சிகையையோ அல்லது மருந்துகள் குறித்த நூல்களையோ படித்துக்கொண்டே இருப்பார் என்பது மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வில் இருந்து நாம் அறியலாம். அது பின்னர் மற்றொரு அத்தியாயமாக வரும். எல்லோரும் அதிசயிக்கும்படி, அதுவரை ஆறாத கணேஷின் காயம், வெகு விரைவில் ஆறிப்போனது. அது மட்டுமல்ல, அதன் பின், அந்தப் பிரச்னையே முடிவுக்கு வந்தது. இன்றும் முதுமலை முகாமில், கணேஷ் ஆரோக்கியமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் கீழ்த்தரமானவை என்ற பொதுவான எண்ணம் தவறு என்பதை இந்த நிகழ்ச்சி நமக்குத் தெரியப்படுத்துகிறது. எனவேதான், டாக்டர் கே பாரம்பரிய மருந்துகள் மற்றும் முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த நடைமுறை அறிவு வருவதற்கு, ஆழ்ந்த படிப்பும், பாரபட்சம் இல்லாத மன நிலையும் வேண்டும். இல்லையென்றால், பழைய அல்லது பாரம்பரிய மருத்துவ முறைகள் எல்லாமே விஞ்ஞானப் பூர்வமானவை அல்ல என்ற ஒருதலைப்பட்சமான எண்ணம்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் விஞ்ஞானப் பூர்வமானது என நிர்ணயிப்பது எப்படி என்பதே கேள்விக்குறிதான். டாக்டர் ஹெக்டே சொல்வதுபோல, சராசரி குறியீடு விஞ்ஞானம் ஆகாது.
அதேபோல யானைகளைப் பிணைக்க டாக்டர் கே இருந்த காலத்தில், வக்கணா மரத்தின் (பிள்ளை மருது/பூமருது-Terminalia paniculata) பட்டைகளால் ஆன வடங்களைத் (கயிறு) தான் பயன்படுத்தினார்கள். அது யானையின் கால்களை பாதிக்காது; சிராய்ப்புகளை உண்டாக்காது; நெடிய வடுக்களை ஏற்படுத்தாது. காலம் காலமாக யானைப் பாகன்கள் இதைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்; அது நல்ல முறையில் வேலை செய்தது. தற்போது யானைகள் முகாமில், நெகிழி வடங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை சுற்றுச்சூழலுக்குக் கேடு என்பதுடன், யானைக்கு வக்கணை மர வடத்தைப்போலச் சுகமாக இல்லை. ஆனால், இன்றுள்ள அதிகாரிகளுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் அந்தளவு கூர்ந்து நோக்கி, எது சிறந்தது என்று நிர்ணயிக்க இயலவில்லை. இதற்கு பிளாஸ்டிக் வடங்கள் நீண்ட நாட்கள் நீடித்து இருக்கின்றன என்ற காரணம் சொல்லப்படலாம். ஆனால், யானைக்கு எது சௌகரியம் என்பதுதானே முக்கியம்? மேலும், வக்கணை மர வடம் சுற்றுச்சூழல் சாதகமானது என்பது பெரிய நன்மை அல்லவா? அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாமே?
இதை எழுதும்போது, ஆய்வாளர் மணி சொன்ன ஒரு சமீபத்திய நிகழ்வு, பாரம்பரிய முறைகள் எவ்வாறு சிறந்த பலன் தருகின்றன என்பதை உணர்த்துகின்றன. பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை, பல மாதங்களாகப் பாதத்தில் ஆறாத புண்ணுடன் இருந்தது. நடக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அதைக் கவனித்துக் கொண்டிருந்த கால்நடை மருத்துவர், மணியின் நண்பர் என்பதாலும், மணியின் யானை முகாம் அனுபவ அறிவு பற்றி அறிந்ததாலும், அவரைத் தொடர்பு கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறார். திரு. மணி, யானை கட்டப்படும் இடம் குறித்து முதலில் விசாரித்திருக்கிறார். அது நன்றாக சிமெண்டால் கட்டப்பட்ட தரை என்று அறிந்ததும், முதலில் யானையை அங்கிருந்து மண் தரைக்கு மாற்றச் சொன்னார். ஏனெனில், கான்கிரீட் அல்லது சிமெண்ட் தரை யானையின் பாதத்திற்கு ஏற்றது அல்ல. மிருதுவான யானைப் பாதத்தால், அந்த கடினமான மற்றும் சூட்டை இழுக்கும் தரையில், இயல்பாக நடமாட முடியாது. பாதத்தில் வெடிப்புகள் ஏற்படும். பின், பச்சை கற்பூரம், தார் கலந்த கலவையைப் பூசுமாறு ஆலோசனை தந்தார். யானை விரைவில் குணமடைந்தது. இதில், எளிய முறை என்பதால், பாரம்பரிய மருத்துவம் எந்த விதத்திலும் தற்கால வைத்தியத்திற்குக் குறைவானது இல்லை. மேலும், யாரும் எளிமையாக செய்து விடலாம். கடும் ஜலதோஷத்திற்கு மிளகு ரசம்போல.
இதுபோல, சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளை, டாக்டர் கே முகாமிலேயே தயாரிக்கச் செய்வார் என்பதை ஆய்வாளர் மணி விவரிக்கும்போது, நான் வியந்துபோனேன். உதாரணமாக, காயங்களுக்குப் போடப் பயன்படும் அயோடின் களிம்பு, முகாமிலேயே தயாரிக்கப்படும். இதற்காக, வாசலைன் மற்றும் அயோடின் (பொவிடோன் கலவை) இரண்டையும் அரைத்து, வேறு சில மருந்துகளைச் சேர்த்து பெரிய டப்பாக்களில் அடைத்து வைப்பார்கள். ஆய்வாளர் மணி சொல்வதுபோல, அரைத்து அரைத்து, கையெல்லாம் மரண வலியெடுக்கும். ஆனால், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு அது பயன் தரும்.
யோசித்துப் பாருங்கள். யானையின் உருவத்திற்குச் சின்ன டியூபில் களிம்பு வாங்கிக் கட்டுபடி ஆகுமா என்று. ஒரு டியூப், ஒருவேளை உபயோகத்துக்குக் கூடக் காணாது. ஒரு யானைக்கு எத்தனை டியூப்கள் தேவைப்படும் என்று யோசித்தாலே மயக்கம் வந்துவிடும். இதில் முகாமில், 30 யானைகள் உண்டு. பரிந்துரைத்தபின், மருந்து சரியானபடி தரப்படுகிறதா, இருப்பு உள்ளதா, யானைகள் நலம் பெற்றதா என்று அறிய வேண்டும். இவையெல்லாம், மருத்துவருக்கு வேண்டாத ஒன்று என்று நினைக்கலாம். ஏனெனில், அது அவர் பணி அல்லதான். ஆனால், ஒரு ஈடுபாடு உள்ள மருத்துவர் அதையும் பார்க்க வேண்டும். அப்போதுதான் ஈடுபாடு நிறைவடையும். பழைய முறையில், மருந்துகள் தயாரிக்கப்பட்டு நிறைய இருந்தால், எங்கும் சுணக்கம் வராது. இல்லையென்றால், சிவப்பு நாடாவில் சிக்கி, ஒவ்வொரு இடமாக மருந்துகள் வருவது தடைப்படும் அல்லது தாமதமாகும். செலவும் கூடும். அதனால், நடைமுறைச் சிக்கல்கள் வரும். முடிவு, யானைகளைக் கவனிப்பது அடிபடும். நமது இலக்கு யானைகளை நல்லபடி பராமரிப்பது தானே?
(தொடரும்)

