Skip to content
Home » யானை டாக்டரின் கதை #24 – ராஜேஸ்வரியின் கதை

யானை டாக்டரின் கதை #24 – ராஜேஸ்வரியின் கதை

பாரம்பரிய மருந்துகள் எப்படிப் பயன் தந்தன என்பது தொடர்பான மற்றொரு நிகழ்வு, ராஜேஸ்வரி என்ற குட்டி யானையின் அடிப்பாதத்தை மீட்ட கதை. நாம் முன்பு பார்த்த ரதியின் ஒரு குட்டிதான் ராஜேஸ்வரி. மிகச் சிறிய குட்டி. இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும். யானைகள் கூட்டமாக வாழும் சுபாவமுடைய விலங்குகள். சின்னக் குட்டிகளைக் கூட்டத்தில் இருக்கும் பெண் யானைகள் இயல்பாகவே கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும். வேண்டுமானால் அத்தை என்று சொல்லலாம், ஆங்கில உயிரியலாளர்கள் சொல்வதுபோல.

தாய் யானையிடம் குட்டிகள் பால்குடி மறக்கும் வரைதான் சுற்றிச் சுற்றி வரும். சற்று வளர்ந்த பின், அவை கூட்டத்துடன் திரியும். இது காட்டு யானைகளுக்கு முற்றிலும் பொருந்தும். முகாமில் உள்ள பெண் யானைகளும், அந்த முகாமில் பிறந்த குட்டிகளை (தன்னுடையது ஆனாலும், மற்றவற்றின் குட்டி ஆனாலும்) பாதுகாத்து கொண்டு செல்லும். காலை, மாலை குளியலுக்குப் போகும்போதும், மேயப் போகும்போதும், பெண் யானைகள் குட்டிகளைப் பேணிப் பாதுகாக்கும். அப்படி ரதி, அதன் குட்டி ராஜேஸ்வரி மற்றும் பெண் யானை கோதாவரி ஆகிய மூன்றும் எப்போதும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருக்கும். பெரும்பாலும், கோதாவரியின் கண்காணிப்பில்தான் ராஜேஸ்வரி இருக்கும். நான் முன்பே சில அத்தியாயங்களில் சொன்னதுபோல, ரதியும்  கோதாவரியும் முகாமில் உள்ள பெண் யானைகளில் தாய்ப் பாசம் மிக்கவை. மிகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும் சுபாவம் கொண்டவை. ஒவ்வொரு யானையின் குணாதிசயம் ஒவ்வொரு ரகமாக இருக்கும். இந்த நிகழ்வு நடந்த அன்று இந்த மூன்று யானைகளும்,  சில்வன் லாட்ஜ் எதிரே நெடுஞ்சாலையைக் கடந்து எதிர்புறம் மேய்ந்து கொண்டிருந்தன. அது வழக்கமான ஒரு செயல்தான்.

குட்டி ராஜேஸ்வரி, சற்று பின்தங்கி, சாலையோரம் உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அதன் காலில் கட்டியிருந்த சங்கிலி நீளமாகச் சாலையின் மீது கிடந்தது. அந்தப் பக்கம் வந்த ஒரு மினி லாரியைக் கண்டு ராஜேஸ்வரி அனிச்சையாக வண்டிக்கு வழி விட்டு, சாலையை விட்டு உள்ளே போக நினைத்து சங்கிலியை இழுத்துக் கொண்டு செல்லத் தொடங்கியது.  சரியாக அந்தத் தருணத்தில், மினி லாரியின் சக்கரம் நீண்டு கிடந்த சங்கிலியின் மேல் ஏறியது.  சங்கிலி வராமல் போகவே, முழுப் பலத்தையும் கொடுத்து வேகமாக இழுத்தது ராஜேஸ்வரி. அவ்வளவுதான். சங்கிலி, பாதத்தின் கீழ் பகுதியுடன் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது. அதாவது அந்த வேகத்திற்கு அடிப்பாத தோல் பிய்ந்து விட்டது. இரத்தம் கொட்டத் தொடங்கியது. குட்டி ராஜேஸ்வரி வலியிலும், அதிர்ச்சியிலும் பெரும் பிளிறல் ஒன்றை வெளியிட்டது. ‘க்வாங்க்’ என்ற அபயக் குரலைக் கேட்ட கோதாவரி, நொடியில் சாலையை அடைந்து மினி லாரியைத் துவைத்து எடுத்துவிட்டது. யானை வந்த வேகத்தைப் பார்த்த ஓட்டுநர், நல்ல வேளையாக உடனே இறங்கி ஓடிப் போய்விட்டான். 20 நொடிக்குள் மினி லாரி சப்பையாகி விட்டது. இந்த இடம், தெப்பக்காடு சுற்றுலா மையத்தின் அருகில் இருப்பதால், உடனே தகவல் அறிந்து, வன ஊழியர்களும் விரைந்தனர். அன்று டாக்டர் கே முகாமிற்கு வருகை தரும் நாட்களில் ஒன்று. எல்லோரும், அவரைக் கூப்பிட முடிவு செய்தனர்.

அன்று சற்று கூட்டம் அதிகமாயிருந்த நாள். அதனால், முதுமலைச் சரணாலயத்தில் இருந்த எல்லாச் சுற்றுலா இருப்பிடங்களும் முன்பதிவு ஆயிருந்தன; அல்லது முக்கியஸ்தர்கள் அவற்றில் தங்கியிருந்தனர். அவர்களுள், முக்கிய வனப் பாதுகாவலர் போஜா ஷெட்டியும் ஒருவர். அவர்தான் தலமை வனப்பாதுகாலவரும்கூட. இதன் காரணமாக, டாக்டர் கே மசினகுடியில் தங்க நேர்ந்தது. மசினகுடி அங்கிருந்து ஒரு 10 கி.மீ. தூரத்தில் இருந்தது. டாக்டர் கே அங்கேதான் இருந்தார். இந்த நிகழ்வைக் கண்டு போஜா ஷெட்டி, உடனே தன் வண்டியை எடுத்துக்கொண்டு மசினகுடி விரைந்தார். அங்குதானே டாக்டர் கே இருக்கிறார். டாக்டர் கே தங்கியிருந்த இடத்தை அடைந்த போஜா ஷெட்டி, ‘டாக்டர், ரொம்ப அவசரம். உடனே வாங்கோ, யானைக்கு ரொம்ப ப்ளீடிங் ஆகுது. எப்பிடியாவது சரி ஆக்கிடுங்கோ,’ என்று பதட்டமாக மன்றாடினார்.

‘கவலைப் படாதீங்க சி.எப் சார். உடனே போகலாம். ஆனா, என்ன நடந்ததுன்னு தெரியலையே? அதைச் சொல்லுங்க,’ என்றார் டாக்டர் கே. ஒருவாறு நடந்ததைத் தெரிந்து கொண்டு அவருடன் அதே வண்டியில் சம்பவ இடத்திற்கும் விரைந்தார். அதற்குள், முகாம் கால்நடை ஆய்வாளர், உதவியாளர் என்று எல்லோரும் குழுமியிருந்தனர். அங்கிருந்து குட்டியை முகாமுக்கு மாற்ற ஏற்பாடு செய்ததோடு, ரத்தப் போக்கை நிறுத்தவும் மருந்து தந்தார் டாக்டர் கே. அவர், போஜா ஷெட்டியிடம், ‘பயப்பட வேண்டாம். இது சின்னக் குட்டிதான். ஹீலிங் சீக்கிரம் நடக்கும். அதனால் சாதாரண டிரெஸ்ஸிங் போதும். சீக்கிரம் குணமாயிடும்’ என்று நம்பிக்கை தந்தார். அதன் பின்தான், போஜா ஷெட்டி சமாதானமானார். பாதத்தின் அடிப்பகுதி பிய்ந்து விட்டாலும், குட்டி என்பதால், விரைவில் குணமாகி விட்டது; தையல் போடத் தேவை இல்லாதுபோனது. பெரிய யானைக்கு இதுபோல நிகழ்ந்திருக்க வாய்ப்பு குறைவு.

சின்னக் குட்டி என்பதால், அடிபட்ட காலைச் சுற்றி உறைபோல பாண்டேஜ் போடப் பயன்படும் காஜ் துணியைக் கீழிருந்து வைத்து சுற்றிக் கட்டினர். பாதத்திற்கு நிறையப் பஞ்சு வைத்து துணியை அதன் கீழே வைத்தனர். மருந்து பஞ்சில் வைக்கப்பட்டு ஒரு ஷூபோல குட்டி யானை ராஜேஸ்வரிக்கு மாட்டி விடப்பட்டது. நன்றாகக் குணமாக வேண்டும் என்பதால், குட்டியின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, ஒரே இடத்தில் இரண்டு வாரங்களுக்குக் கட்டி வைக்கப்பட்டது. காயங்களுக்குப் போடப்படும் மருந்துதான் பயன்பட்டது, அதாவது இவர்களே அரைத்து வைத்திருக்கும் களிம்பு. மற்றபடி குட்டி டாக்டர் கேயின் கண்காணிப்பில் இரண்டு மூன்று நாட்களுக்கு இருந்தது. வேறு பிரச்னைகள் இல்லாததால், அதன் பின் உதவியாளர்கள் கண்காணிப்பில் குணமடையத் தொடங்கியது. இரு வாரங்களில், குட்டியின் காயம் நன்றாக ஆறி விட்டதுடன், குட்டி மெதுவாக நடக்கவும் தொடங்கி விட்டது. இந்த யானை ராஜேஸ்வரி பின்னர் திருவண்ணாமலை கோவிலுக்கு, அவர்கள் கேட்டதற்கு இணங்க அனுப்பப்பட்டு விட்டது. அங்கு சென்ற பின் சில வருடங்களுக்குப் பின் சற்று சிரமப்பட்டது என்று சிலர் சொன்னார்கள். காரணம், குடிகார பாகன் என்றும் கேள்வி. முகாமில் ஆனந்தமாக இருந்திருக்க வேண்டிய ராஜேஸ்வரி, இப்படிக் கோவில் யானையாகி, கஷ்டப்பட நேர்ந்தது விதி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிகழ்வில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. முதலாவது, டாக்டர் கேயின் நிதானமான அணுகுமுறை. கன்சர்வேட்டர் பதறினாலும், இவர் அமைதியாகச் செய்ய வேண்டியதைக் கவனித்தார்; பதட்டப்பட்டு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை; சிகிச்சை முறையைத் தெளிவுடன் யோசித்து, சாதாரண மருத்துவ முறையே போதும் என்று கணக்கிட்டது; சமயோசிதமாக  ஷூபோல பாண்டேஜ் செய்தது, போன்றவை. இரண்டாவது, கன்சர்வேட்டர்  போஜா ஷெட்டி, தானே முன்னின்று மொத்த நடவடிக்கைகளையும் ஒழுங்குப்படுத்தியது. இத்தனைக்கும் அவர்தான் அன்று துறைக்கே மேலதிகாரி. அதைச் செய், இதைச் செய் என்று அவருக்குக் கீழே உள்ள அதிகாரிகளை விரட்டுவது என்றில்லாமல், தானே ஓடிச் சென்று டாக்டர் கேவை அழைத்து வந்து சிகிச்சை செய்ய வைத்தது, அந்த நேரத்தில் அவர் ஒரு விலங்கு நல ஆர்வலராக மட்டும் இருந்தார் என்பதைக் காட்டுகிறது. மேலும், அவரது வேலையில் உள்ள ஈடுபாட்டையும் காட்டுகிறது. மற்றொன்று, தேவையில்லாமல், எதிலும் தலையிடாமல், டாக்டர் கேவை சிகிச்சை செய்யவிட்டது. காரணம், அதிகாரி என்ற தோரணையில் இடைபடாமல், இது அவர் களம் என்று ஒதுங்கி இருந்தது, இந்தச் செயல் வெற்றி பெற உதவியது. அங்கு, டாக்டர் கேதான் ராஜா என்பதை போஜா ஷெட்டி உணர்ந்தது, நல்ல விஷயம் மட்டுமல்ல, அவரது பெருந்தன்மையையும் காட்டுகிறது.

இந்தக் காயத்திற்கான அயோடின் களிம்பு மட்டுமல்லாமல், முகாமில் விக்ஸ் மருந்தும் தயாரிக்கப்படும். அதற்கான மூலப் பொருட்களை வாங்கி, அவற்றை எந்த விகிதத்தில் கலந்து அரைக்க வேண்டும் என்பதை டாக்டர் கே சொல்லிக் கொடுப்பார். அரைக்கும்போது மேற்பார்வை இடுவார். இப்படி முகாமில் இது போன்ற மருந்துகளை அவர்களே தயார் செய்து கொண்டதால், மருந்துக்குத் தட்டுப்பாடும் வரவில்லை; பெரும் செலவு செய்து வெளியில் இருந்து வாங்கவும் நேரவில்லை. முகாமில், எல்லோருக்கும் இதுபோல ஏதாவது வேலை இருந்து கொண்டே இருந்ததால், எல்லோரும் அவரவர் வேலையில் ஈடுபட்டு அதிக  ஓய்வின்றி இருந்தனர். அதேபோல, வயிறு உப்புசத்திற்கு, கார்மி நேடிவ் மிக்சர் என்ற மருந்து தயாரிக்கப்படும். கிட்டத்தட்ட கிரைப் வாட்டர்போல என்று வைத்துக்கொள்ளலாம். ஓமம், கருஞ்சீரகம், சுக்கு, பெருங்காயம் போன்றவற்றுடன், சிறிதளவு குளோரோபம் (டிரேஸஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வர்), மற்றும் ஆல்கஹால் (சாராயம்) சேர்க்கப்படும். வயிறு சம்பந்தப்பட்ட சாதாரண நோய்களுக்கு இதைப் பயன்படுத்துவர். பெரிய கண்ணாடிக் குப்பிகளில் இதை அடைத்து ஒரு அலமாரியில் வைக்கப்பர். பின்னர் அதைப் பூட்டி சாவியை அதிகாரிகளிடம் தந்து விடுவர். காரணம், டாக்டர் கே மாதம் ஒரு முறைதானே வருவார்.

அலுவலக உதவியாளர் மாரன்தான் இவற்றைக் கையாள்வார். சில நேரம், அவர் இந்த மருந்தை எடுத்துக் குடித்து விடுவார். ஏனென்றால், ஆல்கஹால் சிறிதளவு கலந்திருப்பதால் சற்று போதை தரும். எப்படிச் சின்னக் குழந்தைகள் கிரேப் வாட்டர் குடித்ததும் கிறங்கி உறங்கிப் போய் விடுவார்களோ, அதுபோல. டாக்டர் கேவுக்கு இது நன்றாகத் தெரியும். அப்படிக் கொஞ்சம் குடித்து விட்டு மாரன் வரும்போது, ’என்ன மாரன், இன்னைக்குக் கடைக்குப்போகக் காசில்லையா? யானைங்க பாவம்பா. மருந்து அவங்களுக்கு வேண்டாமா?’ என்று கடிந்துகொள்வார். ஆனால், அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து பிரச்சனையாக்க மாட்டார். காரணம், அந்த ஜனங்களின் மனநிலை, பிரச்னைகள், மதுவுக்கு அடிமையான நிலை என எல்லாவற்றையும் உணர்ந்தவர். மற்ற நேரங்களில் அவர்களிடம் பிள்ளைகளைப் படிக்க வைக்கச் சொல்லுவார்; எப்படி அரசாங்க சலுகைகளைப் பயன்படுத்தலாம் என்று பாடம் எடுப்பார்; தேவைப்பட்டால், பண உதவியும் செய்வார். இப்படி முகாம் ஒரு ஒன்றிணைந்த குழுவாக, அதன் குறை நிறைகளுடன் ஓடிக் கொண்டிருந்த காலம் அது. அங்கு டாக்டர் கேதான் தலைவர்; குழுவில் உள்ளவர்களின் தரம், சிறப்புத் திறன், போன்றவற்றை அறிந்து, சேதமில்லாமல் கொண்டு சென்ற கேப்டன். ஃபீல்ட் மார்ஷல் மானெக் ஷா விடம், அவர் தன் வாழ்வில் செய்த சாதனையாக எதைச் சொல்வார் எனக் கேட்டபோது –  ‘எந்த சிப்பாயையும் நான் தண்டித்ததில்லை. அதுதான் என் சாதனை’ என்றார். அது டாக்டர் கேவுக்கும் பொருந்தும். Horses for the races என்ற கோட்பாட்டை தெளிவாக அறிந்தவர் டாக்டர் கே.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *