Skip to content
Home » யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்

யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்

நான் முன்பே சொன்னதுபோல, பாரம்பரிய மருந்துகளை உதாசீனம் செய்யாமல் பயன்படுத்தினார் என்பதோடு, நவீன மருந்துகளை அதிகமாகவும், தேவைக்கேற்பவும் அவர் பயன்படுத்தினார் டாக்டர் கே. அதேபோல், பல கால்நடை  மருத்துவ நூல்களைப் படித்துத் தன்னை மேம்படுத்திக் கொண்டு, நவீன மருத்துவ முறைகள், மருந்துகள், சிகிச்சைகள் என அன்றைய நிலையை அறிந்த மருத்துவராக இருந்தார். இதை டாக்டர் மிர் கௌஹர் அலி கான் நினைவுகூர்ந்த அனுபவத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். மிர் கௌஹர் அலி கான், ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பணிபுரிந்த கால்நடை மருத்துவர். 1964ஆம் ஆண்டு நேரு உயிரியல் பூங்காவில் சேர்ந்த அவர், கிட்டத்தட்ட மொத்த பணிக் காலத்தையும் அங்கேயே கழித்தவர். ஒரு சில வேலைகளுக்காக, 1980 வாக்கில் அவர் தெப்பக்காடு வர நேர்ந்தது. டாக்டர் கேயுடனான அவரது அனுபவம், டாக்டர் கேயின் குணநலன்களையும் ஆளுமையையும் அழகாகச் சித்தரிக்கிறது.  அந்த நிகழ்வை அவர் எழுதியவாறே நான் கீழே கொடுத்துள்ளேன்:

‘நான் 1964ஆம் ஆண்டு, ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் சேர்ந்து கிட்டத்தட்ட என் மொத்த வாழ்க்கையையும்  அங்கேயே பணியாற்றி கழித்தேன். இந்தக் கதை டாக்டர் கே பற்றியது. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எப்படி இருந்தார் என்பது பற்றியது.

ஒருநாள், நான் பணியாற்றிக் கொண்டிருந்த நேரு மிருகக்காட்சி  பூங்கா கண்காணிப்பாளர் என்னை அழைத்து, ‘தலைவர் முந்தைய நாள் இங்கே வந்தார் – நீங்கள் தெப்பக்காடு யானை முகாமுக்குச் சென்று நம் மிருகக்காட்சி சாலைக்கு 3 யானைக் குட்டிகளைத் தேர்ந்தெடுத்து, கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.’ என்றார். அப்படியே, அவர் என்னை மைசூர் மிருகக்காட்சி சாலைக்குச் சென்று, பெரிய பூனைகள் (புலிகள்) இனப்பெருக்கத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்து வருமாறு வலியுறுத்தினார், ஏனெனில் எங்கள் நேரு மிருகக்காட்சி  பூங்கா புலிகள் சிறிது காலம் நன்றாக இனப்பெருக்கம் செய்து, பின்னர் முழுமையாக நின்றுபோயின. இது மிருகக்காட்சிசாலையில் உள்ளவர்களுக்கு யானை அளவிலான பிரச்னையாகிப்போனது. எனக்குத் தெரிந்த அனைத்து தீர்வுகளையும், முறைகளையும் நான் முயற்சித்தேன். ஆனால், பலன்தான் ஒன்றும் இல்லை. அவை இனப்பெருக்கம் செய்யாமல் இருந்தன. மைசூர் மிருகக்காட்சி சாலையில் அவை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துகொண்டு இருந்தன. அவர்கள் என்ன முறையைப் பின்பற்றுகிறார்கள் என அறிய வேண்டி அங்கும் செல்லச் பணிக்கப்பட்டேன்.

அடுத்த நாள் நான் எனது அனைத்து பயணப் பைகள், சாமான்களுடன் தெப்பக்காடுக்குப் புறப்பட்டுச் சென்றேன்.  நான் யானை முகாமை அடைந்து வன ஓய்வு இல்லத்தில் முகாமிட்டேன். காலையில் யானைகளுக்கும் அவற்றின் குட்டிகளுக்கும் கழுத்தில்  மணிகள் கட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். எச்சரிக்கையுடன் அவை சாய்வில் இறங்கி ஓடையில் குளிக்கச் சென்றன; அவற்றில் சில யானைகள் தண்ணீரில் அசையாமல் கிடந்தன; அதே நேரத்தில் பல யானைகள் குளித்தன. முழுமையாகக் குளித்த பிறகு அவை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அந்த இடம், குட்டிகள், முகாம் யானைகள் மற்றும் வயதான பெண் யானைகளுக்கு ஓய்வெடுக்கும் இடமாக இருந்தது, ஆனால் கொம்பன்கள் இல்லை. முகாமில் உள்ள அனைத்து யானைகளுக்கும் வேகவைத்த அரிசி அல்லது உப்பு மற்றும் வெல்லம் கலந்த ராகி உணவளிக்கப்பட்டது. சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கரும்பு, குட்டி யானைகளுக்கு ஒரு விருந்தாக இருந்தது.

அங்கிருந்து கால்நடை மருத்துவர், மருத்துவப் பரிசோதனைக்காக ‘சிகிச்சை கொட்டகைக்கு’ அழைத்துச் சென்றார். முகாம் கால்நடை மருத்துவர் வேறு யாருமல்ல, டாக்டர் வி கிருஷ்ணமூர்த்திதான். அவர் தனது நாற்பதாவது வயதின் பிற்பகுதியில் இருந்தார். சாம்பல் நிற நெற்றியுடன் மெலிந்திருந்தார். அவர் என்னை ஒரு புன்னகையுடன் வரவேற்றார். அவரது மின்னும் கண்களும், வழுக்கைத் தலையும், பளபளப்பான மேற்புறத்தின் கீழ் உள்ள அவரது மூளை ஞானத்தால் நிறைந்திருக்க வேண்டும் என்று என்னை நினைக்க வைத்தது. நான் நினைத்தது சரிதான். யானைகள், அவற்றின் நோய்கள் மற்றும் சிகிச்சை பற்றி நாங்கள் பேசினோம். அவர் பினோதயாசின், திரவ ஆர்சனிக், பெரியட் அமோன், சிட்ரஸ், டர்பெண்டைன் எண்ணெய் மற்றும் செம்பு சல்பேட் போன்ற பழைய மருந்துகளில் நம்பிக்கை கொண்டிருப்பதைக் கண்டேன். அவர் நவீன மருந்துகளைப் பயன்படுத்த வில்லை என்று சொல்ல முடியாது.  அவரது ரேக்கில் சல்பா மருந்துகள், பென்சிலின் மற்றும் அனைத்து வகையான மைசின்களும் (நுண்ணுயிர்க் கொல்லிகள்) நிறைந்திருந்ததைக் கண்டேன்.

ஜெர்மன் தயாரிப்பு நுண்ணோக்கியையும் என்னால் பார்க்க முடிந்தது. பல ஆய்வகங்களைப் போல ஒரு மணி ஜாடியால், நுண்ணோக்கி மூடப்படவில்லை. மாறாக ஒரு மேஜையில் திறந்த நிலையில் வைக்கப்பட்டு, கண்ணாடி ஸ்லைடுகள் சுற்றிலும் சிதறிக்கிடந்தன.  மற்றும் இரண்டு சிறிய பிளாஸ்டிக் தட்டுகள், ரத்தக்கறை பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களால் நிரம்பி இருந்தன. பின்னர் யானைகளின் சில பொதுவான நோய்கள் பற்றி நான் அவரிடம் கேட்டேன், எனக்குக் கிடைத்த பதில் ‘தோல் ஃபைலரிராசிஸ்’. அவர் பாதிக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றை என்னிடம் காட்டி, மார்பு மற்றும் வயிற்றில் பரவியுள்ள முடிச்சு வளர்ச்சியைக் காட்டினார். அவர் ஒரு முடிச்சை ஒரு ஊசியால் குத்தி இரத்தத்தை எடுத்தார். கண்ணாடி ஸ்லைடில் ரத்தத்தைப் பரப்பி, அதை வண்ணம் தீட்டி, நுண்ணோக்கியின் கண்ணாடியின் கீழே வைத்தார். இந்த சிறிய உயிரினங்களில், பல வேகமாக நகர்வதையும்,  அவற்றின் சுறுசுறுப்பான உடல்களால் இரத்தத்தைத் தெறித்து, ஒன்றையொன்று மேலெழுப்புவதையும் நான் கண்டேன். நான் இதற்கு என்ன தீர்வு என்று கேட்டேன். அவர் ‘ஆந்தியோமலியன்’ பயன்படுத்துவதாக பதிலளித்தார்.

நான் முகாம் யானைகளிலிருந்து, 16 மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான 3 பெண் குட்டிகளைத் தேர்ந்தெடுத்தேன். அவை, ஆஷா, மேரி மற்றும் மாகோ. நான் அவற்றை ஒரு லாரி மூலம் தலைமை விலங்குப் பராமரிப்பாளருடன் சேர்த்து, ஐதராபாத்திற்கு அனுப்பி விட்டேன்.  மறுநாள் காலை மைசூருக்குப் புறப்பட முடிவு செய்தேன். அன்றிரவு டாக்டர் கே என்னை இரவு உணவிற்கு அழைத்தார். நான் அவரது தங்கும்  இடத்திற்குப் போகும்போது, வேறு எந்த மனிதக் குரலும் கேட்கவில்லை. கிரிக்கெட்டுகளின் (சுவர்க்கோழி) கூச்சலிடும் சத்தம் போன்ற இயற்கை ஒலிகளைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. வெராண்டாவில் வெளிர் ஒளியில் ஒரு பலவீனமான மின்சார பல்பு. கதவைத் தட்டிய பிறகு, நான் உள்ளே அனுமதிக்கப் பட்டேன். உதவியாளர் என்னை டாக்டரின் படிப்பு அறைக்கு அழைத்துச் சென்றார். ‘அய்யா சமையலறையில் மும்முரமாக இருக்கிறார். சில நிமிடங்களில் வருவார்,’ என்று அவர் கூறினார். ஒரு சிரிப்புடன் அவர் உள்ளே சென்றார். தெப்பக்காடு ஒரு தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு யானை முகாம். இயற்கையாகவே கால்நடை மருத்துவர் சில வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். அவர் இங்கே தனது குடும்பத்துடன் வாழ முடியாது என்று நினைத்தேன்.

ஒரு பிரம்பு சோபாவில் வசதியாக உட்கார்ந்து, நான் அவருடைய அறையைப் பார்த்தேன். மேசையின் மேலிருந்த குவியலில், மற்ற புத்தகங்களின் மேல் ஒரு புத்தகம் கிடந்தது என் கண்களில்பட்டது. அது லண்டன் மிருகக்காட்சி சாலையின் ஊட்டச்சத்து பற்றிய புத்தகம், டாக்டர் கே சிவப்பு பென்சிலில் எதையோ குறித்திருந்தார்.  ‘வைட்டமின் ஏ-யின் முக்கிய ஆதார உணவான கல்லீரல், பெரிய பூனைகளின் உணவில் இருந்து அகற்றப்படும்போது, அவற்றின் இனப்பெருக்கப் செயல்முறை குறைகிறது. பூனைகள் நன்றாக இனப்பெருக்கம் செய்ய கல்லீரல் உணவு உதவுகிறது என்று விளக்கி இருந்தனர்.  என்னை வாட்டி வந்த பெரிய பூனைப் பிரச்னைக்கு எனக்குப் பதில் கிடைத்தது. மைசூருக்குச் செல்ல வேண்டாம் என்று உணர்ந்தேன். காரணம்,  நாங்கள் பெரிய பூனைகளின் உணவில் இருந்து கல்லீரலை, புழுக்கள் இருந்ததால் நீக்கியதன் மூலம்  ஒரு பெரிய தவறு செய்து விட்டோம்.

டாக்டர் கே குளித்து, நேர்த்தியாக உடை அணிந்து, என்னைச் சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் எங்கள் நாற்காலிகளை மேசைக்கு அருகில் இழுத்துச் சென்று சமையலை ரசிக்க ஆரம்பித்தோம். அவர் அவரது சைவ உணவையும், நான் அவர் எனக்காகச் சமைத்த அசைவ உணவையும் சாப்பிட ஆரம்பித்தேன். ‘இது செம்மறி ஆடுகளின் கல்லீரல்’ என்று அவர் எனக்குப்  பரிமாறும்போது கூறினார்.  எனது புதிய புத்தக அறிவுடன், கருவுறுதலுக்கு அவசியமான வைட்டமின் ஏ நிறைந்த உணவு என்று சொன்னேன். ‘மிகவும் சரி.  சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளின் ஊட்டச்சத்து பற்றிய ஓர் அழகான புத்தகம் உள்ளது,’ என்றார் அவர். தனது அலமாரியில் நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததை அறியாமல் கூறினார். ‘அந்த புத்தகம் விலங்குகளைப் பண்டமாற்று செய்ய வந்த ஐரோப்பிய வியாபாரிகளால் எனக்கு வழங்கப்பட்டது,’ என்று விளக்கினார்.  லண்டன் மிருகக்காட்சி சாலையின் ஊட்டச்சத்து பற்றிய புத்தகம் என்று கூறினார். நான் அந்தப் புத்தகத்தைப் பார்த்ததையும், அவர் அடிக்கோடிட்ட பகுதியைப் படித்ததையும் சொல்லவில்லை.

அடுத்த நாள் காலை மைசூர் மிருகக்காட்சி சாலைக்குச் செல்வதற்குப் பதிலாக, நான் ஐதராபாத்திற்கு நேராக ஒரு பேருந்தைப் பிடித்தேன். புலி இனப்பெருக்கப் பிரச்னையைத்  தீர்க்க முழு நம்பிக்கையுடன். புத்தகத்தைப் படித்து கல்லீரலின் முக்கியத்தைத் தெரிந்து கொண்ட பிறகு, எங்கள் பெரிய பூனைகளின் உணவில் இருந்து கல்லீரலை நீக்கியதன் மூலம் நான் பெரிய தவறு செய்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். டாக்டர் கே உடனான எனது சிறிய நேர்காணலில்,  பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்தது. நீண்ட காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்தக் கதையில், பிரபலமான யானை மருத்துவரான டாக்டர் கேவுக்கு எனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளேன். யானை வளர்ப்பு மற்றும் சிகிச்சைத் துறையில் அவரது மதிப்புமிக்க சேவை எப்போதும் நினைவில் இருக்கும்.’

இதில் நான் ஆச்சரியப்படும் விஷயம், கௌஹர் அலி கானுக்கு டாக்டர் கே அசைவ உணவு சமைத்துக் கொடுத்ததுதான். விருந்தோம்பலின் உச்சக் கட்டம் என்பேன். காரணம், அவர் தீவிர சைவம். முட்டைகூட சாப்பிடாதவர். வந்த விருந்தாளியை உபசரிக்க அவர் மிகச் சாதாரணமாக அசைவத்தையும் சமைத்துத் தந்தார் என்றால், அந்த மனநிலையைப் பாராட்டாமல் இருக்க முடியுமா? சமையலில் அவர் நளன் என்பதைக் கிட்டத்தட்ட நான் சந்தித்த அனைவரும் சொல்லி விட்டனர். மற்றொன்று, தன் கள அறிவை அன்றைய நிலைக்கு உயர்த்திக் கொண்டு இருந்தார் என்பது. இல்லையென்றால், லண்டன் மிருகக்காட்சி சாலை நூலை அவர் ஏன் படிக்க வேண்டும். அடிக்கோடிட்டு வைக்க வேண்டும்? இப்படி நிறையப் போற்றத்தக்க குணங்கள் இருந்ததால்தான், அவரை ஒரு சரித்திர நாயகன் என்று  கால்நடை மருத்துவர்கள் உலகமே கொண்டாடியது.

(தொடரும்)

 

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *