டாக்டர் கேயின் மற்றொரு பரிமாணம், அவரது யானைகள் ஆராய்ச்சிக்கான பங்களிப்பு. கால்நடை மருத்துவத்தில் மட்டும் சாதனைகளைச் செய்தார் என்று நாம் முடிவு கட்டிவிட முடியாது. பணி ஓய்வு பெற்ற பின், அமெரிக்காவின் மிகச் சிறந்த அறிவியல் நிறுவனமான மீன் மற்றும் வன உயிரின சேவைகள் (US Fish and Wildlife Service) நிறுவனம், டாக்டர் கேவை ஆசிய யானைகள் குறித்த கள ஆய்வு திட்டத்தின் தலைவராக நியமித்தது. சில சிறந்த கள ஆய்வாளர்களையும் அவர் கீழ் பணிபுரிய வைத்தது. இந்தத் திட்டத்தை மும்பையில் இருந்த பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS) செயல்படுத்தியது. கள ஆய்வாளர்களாக, அஜய் தேசாய், சிவகணேசன், ஹேமந்த் தாத்யே ஆகிய இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். அஜய்யும், சிவாவும் முதுமலையில் கள ஆய்வு செய்தனர். ஹேமந்த் தாத்யே டால் மாவில் கள ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் யானைகளின் வலசை எல்லை (சுற்றித் திரியும் பகுதி), அவற்றின் வலசைப் பாதை, நேரிடும் இடையூறுகள், எனப் பலவற்றை அறிந்து கொள்ள முடிந்தது. மனித எல்லைகள் யானைகளுக்குப் பொருந்தா. ஏனெனில், யானைகள் சுற்றித் திரியும் பகுதிகள் பெரிய அளவில் ஆனவை; மாநிலங்களுக்கு இடையில் அவை புகுந்து சுற்றும்; வேட்டையாடிகள் அவற்றை எளிதில் வேட்டையாடுவர். வேட்டையாடிகள் மிகுந்திருந்த காலம் அது. கொம்பன்கள் எல்லாம் அருகிப் போய்க் கொண்டிருந்தன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், டாக்டர் கேயின் தலைமையில், யானைத் திட்டம் தொடங்கியது. அமெரிக்க மீன் மற்றும் வன உயிரின சேவைகள் நிறுவனத்தில் முதுநிலை கால்நடை மருத்துவராக பணி புரிந்த டேவ் பெர்குஸன், இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அவர், டாக்டர் கேயின் நினைவாக வெளியிட்ட கீழ் வரும் குறிப்பு, டாக்டர் கேயின் திறமை, குணநலன் மற்றும் தொழில் பாண்டித்தியம் போன்றவற்றைத் தெளிவாகக் கூறும். இந்தியாவிற்கே புதியதான இந்தக் களப் பணியிலும், டாக்டர் கே தன் வெற்றிக் கொடியை நாட்டினார் என்பதை நாம் பெருமையுடன் நினைவுகூரலாம். யானைகளுக்கு மயக்க மருந்து தருவதில் அவர் எந்த அளவு தேர்ச்சி பெற்றவர் என்பதை ஸ்ரீரங்கம் கோவில் கிருஷ்ணனைப் பிடித்தபோதே, நாம் அறிந்தோம். புதிய முறைகள் மற்றும் கருவிகளுடன், அதை மேலும் பரிமளிக்கச் செய்தார் என்பதை டேவ் கூறுவதில் இருந்து அறிகிறோம். காலரிங் என்றழைக்கப்படும் பட்டியிடுதல், அன்றைய சூழ்நிலையில், ஒரு கஷ்டமான வேலைதான். ஏனெனில், யானையின் கழுத்தைச் சுற்றி ஒரு பெரிய பட்டையான பட்டியைப் பொருத்த வேண்டும். எவ்வளவு பெரிது என்று ஊகித்துக் கொள்ளுங்கள். அதுவரை யானை, அதுவும் காட்டு யானை, மயக்கத்தில் இருக்க வேண்டும். பின், மயக்கம் தெளிய மருந்து தந்து, யானை இயல்பாக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். இன்று ஒரு தம்மாத்துண்டு சிப் போதும். ஆனால் அன்றைக்கு அப்படியல்ல. இதுகுறித்து டேவ் பெர்குசன் கூறுவதைப் பார்ப்போம்.

‘தாமதமாக நன்றி தெரிவிக்கும் மருத்துவர் – டேவ் பெர்குசன்’
பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் மற்றும் அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை ஆகியவற்றுடன் ஆசிய யானை பற்றிய பல ஆண்டு சூழலியல் ஆய்வை செயல்படுத்தும்போது, அதிர்ஷ்டவசமாக, தமிழ்நாடு வனத்துறையில் அரசு சேவையிலிருந்து சமீபத்தில் (ஜூன் 1987) ஓய்வு பெற்ற டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தியை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். யானைகளுடன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய மரியாதைக்குரிய மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் கே. டாக் என்று அவர் செல்லமாக அழைக்கப்பட்டார். ரேடியோ காலரிங்கின்போது யானைகளை அசையாமல் இருக்கச் செய்வதற்கும், பராமரிப்பதில் உதவுவதற்கும் அவர் அழைக்கப்பட்டார். இது திட்டத்தின் புதிய மற்றும் அதுவரை முயற்சிக்கப்படாத அங்கமாகும். டிரான்ஸ்மிட்டர்களுடன் ரேடியோ காலர்களைப் பொருத்த, யானைகளை அசையாமல் இருக்கச் செய்வது என்பது நிபுணத்துவம் வாய்ந்த யானை கால்நடை மருத்துவர் செய்ய வேண்டிய பணி. இது நடைமுறை அனுபவம் தேவைப்படும் கடினமான மற்றும் ஆபத்தான வேலையாகும். இந்தியாவில் ஆசிய யானைகள் இந்த முறையில் கண்காணிக்கப்பட்டு ஆராயப்படுவது இதுவே முதல் முறை. டாக்கின் (டாக்டர் கே) நட்பு இயல்பு, எளிதான சுபாவம் மற்றும் யானைகள் பற்றிய அறிவு அனைவரையும் விரைவாகக் கவர்ந்தது. அவர் விரைவில் பம்பாய் இயற்கை வரலாற்று யானைக் குழுவின் தவிர்க்க முடியாத பகுதியாக ஆனார்.
இந்தத் திட்டம் 15-20 யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி, அவற்றின் நடமாட்டத்தை (வலசைப் பாதையை) டெலிமெட்ரி மூலம் கண்காணிக்க விண்ணப்பம் கொடுத்திருந்தாலும், 5 யானைகளை மட்டுமே பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. முதுமலையில் முதல் யானை – சுமார் 15-16 வயதுடைய ஒரு பெண் யானை. பிப்ரவரி 26, 1991இல் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. அதன் பிறகு 1991இல் 4 கூடுதல் யானைகள் (இரண்டு பெண் யானைகள் மற்றும் இரண்டு ஆண் யானைகள்) அசையாமல் வைக்கப்பட்டு காலர் பொருத்தப்பட்டன. கடைசி யானை 35 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெரிய ‘மக்னா’ (மோழை) ஆகும். இது முதுமலையில் வசித்து வந்தது. ஆனால் அடிக்கடி பயிர்களை வேட்டையாடும். ‘அட்மிரல்’ என்று செல்லப் பெயர் பெற்ற இந்த யானைக்கு பம்பாய் வரலாற்றுச் சங்கம் பல மாதங்களாக காலரை கழுத்தில் கட்ட முயற்சித்தது. அதன் பயிர்களை மேயும் பழக்கம் காரணமாக, இந்த விலங்கின் நடமாட்டத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வது முக்கியம் என்று கருதப்பட்டது, நவம்பர் 22, 1991 அன்று, ‘ஹார்ன்பில் 1992 (2)’ சஞ்சிகையில் வெளியான ஜே.சி. டேனியல் எழுதிய கட்டுரையான ‘காலரிங் தி அட்மிரல்’ , தெளிவாக ‘அட்மிரலை’ பிடித்து காலர் கட்டுவதில் இந்தக் குழு வெற்றி பெற்றதை விவரிக்கிறது.
டார்ட்டிங் (மயக்க மருந்து ஊசி போடுதல்) மற்றும் அசையாமை (மயக்கமடைந்து) போன்ற நடவடிக்கைகள் முழுவதிலும், டாக் தொடர்ந்து ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார். அவர் ஒரு டார்ட் செய்யப்பட்ட விலங்கிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்த தகவல்களை வழங்கினார்; சூழ்நிலைகள் மாறும் போது, உத்திகளைத் தேவைக்கேற்ப திட்டமிட்டு திருத்தினார்; எரிச்சலூட்டப்பட்ட அல்லது பயமுறுத்திய யானைகளிடமிருந்து வந்த ஆபத்துகளையும், அடிக்கடி குறுக்கிட்ட அடர்ந்த தாவரங்களின் ஊடே நெருக்கமாகப் பின்தொடர்ந்து செல்வதால் ஏற்படும் இன்னல்களையும் மீறி, கீழே விழுந்த விலங்குகளை உடனடியாகக் கவனித்துக்கொண்டார். அவற்றுக்குத் தக்க பாதுகாப்பையும், சிகிச்சையையும் வழங்கினார். விழுந்த யானைகள் பக்கவாட்டில் சாய்ந்தவாறு இருப்பது மிகவும் முக்கியம். அவை அவ்வாறு இல்லாவிட்டால், மாவுத்தர்கள் மற்றும் கும்கி யானைகளின் உதவியுடன், விழுந்த யானையை பக்கவாட்டு நிலைக்குக் கொண்டு வருவார். இல்லையென்றால், குத்திட்டு இருக்கும் நிலையில் யானையின் இதயம் அடிபட வாய்ப்பு உண்டு. டாக் இருப்பது இந்த சூழ்நிலையை சீராக்கும். இயற்கை வரலாற்றுச் சங்க குழுவினரால் ரேடியோ காலர்கள் பொருத்தப்படும்போது, டாக்டர் யானையின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, உடல் வெப்பநிலை, சுவாசம் மற்றும் துடிப்பு விகிதங்களைச் சரிபார்த்து, ஈரமான துணியில் தண்ணீரைப் பயன்படுத்தி மருந்தினால் உண்டான வெப்பத்தைக் குறைப்பார். காலரிங் முடிந்ததும், மருத்துவர் யானையின் காதில் மாற்று மருந்தை செலுத்துவார். பின்னர் அனைவரையும் விலங்கிலிருந்து பாதுகாப்பான தூரத்திற்கு அழைத்துச் செல்வார்.
ஒட்டுமொத்தமாக, யானைத் திட்டம் (Elephant Project) இந்த இனங்களைப் பற்றிய அறிவுக்கு பெரிதும் பங்களித்தது. முனைவர் கல்விப் பட்டங்களைப் பெற்ற பல இளம் அனுபவம் வாய்ந்த களப்பணியாளர்களை உருவாக்கியது. இன்று ஆசிய யானைகளின் நிலையை நேர்மறையாகப் பாதிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தூண்டியது. டாக்க்கின் உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் அசையாமை (Immobilisation) மற்றும் ரேடியோ-காலரிங் செயல்பாடுகளில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் இந்த வகையான செயல்பாடுகளுக்கான தரத்தை அமைத்தது. யானைகளைக் கண்காணித்ததில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், யானைகளின் நடமாட்டம், வலசை எல்லைகள் மற்றும் இடம்பெயர்வு முறைகள் பற்றியவற்றை நமது அறிவியல் உலகிற்குல் கணிசமாகச் சேர்த்துள்ளன.
டாக்டர் கே ஒரு தனித்துவமான, திறமையான நபர். அவரைத் தெரிந்து கொள்ள ஒருவர் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும். அவர் நிச்சயமாக இந்தப் பூமியில் தனது நேர்மறையான செல்வாக்கிற்கும், அவரது தாக்கத்தின் கீழ் வந்த எண்ணற்ற வன அதிகாரிகள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் தனது பங்களிப்பைத் தந்தார். அவரது மிகப்பெரிய பரிசு, காட்டு மற்றும் முகாம் யானைகளுக்குச் சென்றது. அவர் யானைகளிடம் கற்றுக்கொண்டு, எப்போது வேண்டுமானாலும் திரும்பக் கொடுத்தார். இந்தியாவின் மற்றொரு பிரகாசமான விளக்கு அணைந்து விட்டது. டாக்டர் கேயை நாம் இழந்தாலும், நம் நினைவுகளில் அவரைப் பற்றிக் கொள்வோம்.’
இவ்வாறு எழுதுகிறார் டேவ் பெர்குசன்.
இதுதான், சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள இயலாத டாக்டர் கேயின் சாதனை. உலகமே வியந்து கொண்டாடும் அளவிற்கு மிகவும் இயல்பாகப் பல விஷயங்களை அவர் செய்து விட்டு மறைந்து விட்டார். இன்று போல, அன்று விளம்பரம் செய்ய ஆளில்லை; இருந்தாலும், செய்திருப்பார்களா என்று தெரியாது. கர்மயோகி என்று கூறக் கேட்டிருக்கிறோம். அதன் மொத்த உருவம் டாக்டர் கேதான்.
(தொடரும்)

