Skip to content
Home » யானை டாக்டரின் கதை #28 – பட்டியிட்ட முதல் யானை

யானை டாக்டரின் கதை #28 – பட்டியிட்ட முதல் யானை

டாக்டர் கே , யானைகளுக்கு காலரிங் (கழுத்துப் பட்டி இடுதல்) திட்டத்தை முதன்முறையாகச் செய்தாலும், விரைவிலேயே அதில் நிபுணத்துவம் கொண்டவராக ஆகி விட்டார். இதற்கு முக்கியக் காரணம், அவரது இயல்பான மதிநுட்பமும், எதையும் முயன்று பார்க்கும் பரீட்சார்த்த மனமும். மேலும், அவர் எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் எப்போதும் இருந்தார். முயற்சி திருவினையாக்கும் என்பதைப் புரிந்து வைத்திருந்தார். எல்லாவற்றையும்விட, டாக்டர்கே அவரது குழுவின் மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்தார். டாக்டர்கே வனத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின், பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க யானைத் திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். காரணம், அவரது யானைகளைக் குறித்த அறிவு இந்தியா முழுவதும் அந்தக் காலகட்டத்தில் பேசுப் பொருளாக இருந்தது. எல்லா ஆராய்ச்சியாளர்கள், விலங்கு நல ஆர்வலர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் இடையே அவரது புகழ் பரவி இருந்தது. பலருக்கும், டாக்டர்கேவை யானை டாக்டர் என்றே தெரிந்திருந்தது. முதன்முதலில், முதுமலையில், அவர்கள் காலரிங் செய்த நிகழ்வை, அதில் பங்கு பெற்ற முனைவர் திரு.சிவகணேசன், மிக அருமையாக விளக்குவதைக் கேட்போம், வாருங்கள். துரதிர்ஷ்ட வசமாக, அவருடன் அன்று ஆராய்ச்சிப் பணி புரிந்த அஜய் தேசாய் இன்று நம்மிடையே இல்லை. இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருந்தால், இந்த வாழ்க்கை வரலாறு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவருக்கும் டாக்டர் கேவுக்குமான நட்பு, அன்னியோன்னியம் அது போன்ற தன்மை உடையது. இப்போது, முனைவர் சிவகணேசனின் குறிப்பைப் பார்ப்போம்.

‘டாக்டர் கே கோவையில் வன கால்நடை அதிகாரியாக இருந்த காலத்தில், வி. பத்மநாபன் ஐ.எஃப்.எஸ் தலைமை வனவிலங்கு காப்பாளராக (CWLW) இருந்தார். அரசாங்கத்தின் பெரும்பாலான வனவிலங்கு சம்பந்தப்பட்ட கோப்புகளில், டாக்டர் கே. வனவிலங்கு காப்பாளருக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனத் துறையுடன் டாக்டர் கே அத்தகைய உறவைக் கொண்டிருந்தார். வனவிலங்கு விஷயங்கள் குறித்த அவரது கருத்துக்களை வனவிலங்கு காப்பாளரும் ஏற்றுக்கொண்டார். யானைகள் பற்றிய அறிவைத் தவிர, வனவிலங்குச் சட்டங்கள் மற்றும் வனப் பாதுகாப்புக் கொள்கை குறித்து டாக்டர் கே முழுமையாக அறிந்திருந்தார். கால்நடைத் துறையைத் தாண்டி, வனத்துறையுடன் இணைந்து பணியாற்றினார். முதுமலையில் யானைகளுக்கு வண்ணப் பட்டைகள் போட பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்துக்கு அனுமதி பெற்றுத் தருவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். அந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவெற்றப்பட்டது. மேலும் டாக்டர் கே, கேரளாவைச் சேர்ந்த மற்றொரு நிபுணர் டாக்டர் சீரனை இத்துறையில் உருவாக்கினார். டாக்டர் கே ஓர் உலகாதய நடைமுறை அறிந்த நபர். மிகவும் திறமையான நபர். ஆயினும்,  மற்றவர்களிடமிருந்து புதிய நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும், எந்தவொரு முக்கியமான திட்டத்திற்கும் மற்ற நிபுணர்களையும் பயன்படுத்தினார். இரண்டு யானைகளுக்கு  இரண்டு வண்ணக் காலர்கள் இடப்பட்டன. பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தால் இது வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது இந்தியாவில் பிற்காலத்தில் ரேடியோ காலர்கள் இடுவதற்கான ஒரு திறப்புக் கதவாக அமைந்தது. முதுமலையிலேயே, அட்மிரலுக்கு பின்னர் ரேடியோ காலர் இடப்பட்டது. இந்திய வனவிலங்கு நிறுவனம் பின்னர் யானைகளுக்கு ரேடியோ காலரிங் முயற்சி செய்தது, முதலில், டாக்டர்கே வுடனும் பின்னர், உணவு மற்றும் விவசாய நிறுவன நிபுணர்களான டாக்டர் சேல் மற்றும் டாக்டர் ரோஜர்ஸ் ஆகியோருடனும். தென்னிந்தியாவில் யானைகளுக்கு காலர் கட்டுவதில் முன்னோடியாக டாக்டர் கே  இருந்தார்.

நானும் அஜய் தேசாயும் ஒரு அறியப்பட்ட மந்தையிலிருந்து 15 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் யானையை காலர் இட அடையாளம் கண்டோம். அந்த மந்தை முதுமலையின் முச்சந்தி எல்லையிலிருந்து, பந்திப்பூர் புலிகள் சரணாலயமான தொட்டகட்டியை ஒட்டிய முதுமலையின் சுற்றுலா மண்டலத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்தது. அதன் (தாயக) வாழ்விட  எல்லை எது வரை என்பதை அறிய விரும்பினோம். ரேடியோ காலர் கட்ட வசதி இல்லை. எனவே, வண்ணம் கொண்ட பலவண்ண காலர் கட்ட  முடிவு செய்தோம். டாக்டர் கேவும் டாக்டர் சீரனும் மயக்க மருந்து போடும் வேலைக்கு மருந்துகளைத் திட்டமிட்டனர். மயக்க மருந்துகளைப் பெறுவது கடினம். அரசாங்கத்திடமிருந்து சிறப்பு அனுமதி தேவை. காலர் கட்ட அனுமதி பெற, டாக்டர் கே பொறுப்பேற்றார். டாக்டர் கே வனத்துறையுடனான நெருங்கிய தொடர்பால் மயக்க மருந்துப் பொருட்கள் கிடைக்கச் செய்யப்பட்டன. டாக்டர்கள் வி.கே., சீரன் மற்றும் கார்லைல் ஜகநாதன் ஆகியோர் கும்கி யானை மேல் இருந்தனர். வனத்துறையின் கால்நடை உதவியாளர் திரு. மணி, திரு. ரெங்கசாமி மற்றும் உள்ளூர் காவலர்கள் மற்றும் டி. மணி, எஃப்.ஆர்.ஓ. ஆகியோர் களத்தில் எங்களுக்கு உதவினர். பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க இயக்குனர், மறைந்த ஜெசி டேனியல், அபயரண்யம் ஓய்வில்லத்தில் தங்க வைக்கப்பட்டார். அந்த யானைக் கூட்டம் சிக்கலா வயலுக்கு அருகிலுள்ள தொட்டஹட்டியில் நிலைத்திருந்தது. அது கோடைக்காலம் என்பதால், எலுமிச்சை புல்லின் வெப்பம் எங்கள் குழுவின் செயல்பாட்டைக் கடினமாக்கியது.. டாக்டர் கே தேர்ந்தெடுத்த கும்கிகளாக இந்தர் மற்றும் முதுமலை ஆகியவற்றைப் பயன்படுத்தினர். நண்பகல் 3.30 மணியளவில், அஜய், நாங்கள் பின்தொடர்ந்த பெண் யானையை அடையாளம் கண்டு கால்நடை மருத்துவர் குழுவிடம் காட்டினார். நானும் அஜய்யும் எங்கள் உதவியாளர்கள் கிருஷ்ணன் மற்றும் பொம்மாவுடன் மந்தையைப் பின்தொடர்ந்தோம். இரண்டு கும்கி யானைகளும் யானைப் பாகன் மாறனின் அறிவுறுத்தல்களின்படி நன்றாகச் சென்றன.

கூட்டம் கொஞ்சம் உயரமான பகுதியில் ஒரு தட்டையான நிலப்பரப்பை அடைந்தபோது, இலக்கு வைக்கப்பட்ட விலங்கின் மேல் மயக்க மருந்தைச் செலுத்த, கால்நடை மருத்துவர் குழுவிடம் நாங்கள் சமிக்ஞையை வழங்கினோம். டாக்டர் கேயின் வழிகாட்டுதலுடன் டாக்டர் சீரன் அந்த விலங்கை டார்ட் செய்தார். டார்ட்  ஊசி, பிட்டம் பகுதியில் சரியாகச் சென்று தைத்தது. கூட்டம் வேகமாக நகர்ந்தது. எங்கள் உதவியாளர்களின் துணையுடன் நாங்கள் இருவரும் மந்தையை வேகமாகப் பின்தொடர்ந்தோம்.  காலரைப் போடுவதற்கு விலங்கு சரியான நிலையில், அதாவது பக்கவாட்டில், விழுந்தது. பச்சை நிறத்தில் காலர்  அணிவிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரையிலான முழுச் செயல்பாடும் மாலை 4 மணிக்குள் நிறைவடைந்தது. டாக்டர் கேயின் சிறந்த அறிவு மற்றும் அனுபவங்களால் யானையின் முதல் காலரிங் வெற்றிகரமாக முடிந்தது. இது நீலகிரி பல்லுயிர் கோளம், யானையின் வாழ் வரம்பை மதிப்பிடுவதற்கு மேலும் ஒரு காலரிங் செய்ய எங்களைத் தூண்டியது. அதன் பின், கடைசியாக மோழையான அட்மிரல் என்ற யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.  இதனால் டாக்டர் கே யானை ஆராய்ச்சியாளர்களுக்கு முன்கூட்டியே தொழில்நுட்பத்தில் உதவியுள்ளார் என்பது தெரிகிறது. காலரிங் செயல்பாட்டில்  25க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர். திட்டம் முதல் முறையாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால், திரு. ஜே.சி. டேனியல் அபயரண்யம் ஓய்வு விடுதியில் முழு குழுவினருக்கும் இரவு உணவு  வழங்கினார். அந்தக் காலகட்டத்தில் திரு. கே.எஸ். நீலகண்டன் ஐ.எஃப்.எஸ், வனவிலங்கு மேலான்மையின் வார்டனாக இருந்தார். அவர் யானைகளைப் பற்றிய அற்புதமான அறிவுக்காக டாக்டர் கேவை மிகவும் மதித்தார். டாக்டர் கே நல்ல ஒழுங்கான செயல்பாடுகள் கொண்ட நபராக இருந்தார். நாங்கள் களத்தில் நடந்தவற்றை வைத்து இதை அறுதியிட்டுக் கூற முடியும்.

 

களத்தில் காலரிங் காலத்தில், எப்போதும் அவரது முதல் கவனம் கும்கிகளைத் தேர்ந்தெடுப்பதாக இருக்கும். டார்ட்டிங்கின் போது இலக்கு விலங்குகளை அணுகுவது குறித்து பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு அறிவுறுத்துவார். குழுவின் பாதுகாப்பில் அவர் கவனம் செலுத்தினார். விலங்குகளின் தனிப்பட்ட அடையாளக் குறிகளை, கருப்பு மற்றும் வெள்ளை படங்களின் அடிப்படையில், டார்ட்டிங் செய்வதற்கு முன்பு டாக்டர் கே விலங்கை நன்கு அறிந்து வைத்திருப்பார். அஜய் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர். ஒரு மாணவராக, தளத்தில் நிலப்பரப்பு, நீரோடைகள் மற்றும் தாவரங்கள் உள்ளிட்ட எங்கள் கள அறிவை அவர் கவனித்து, செயல்பாட்டுக்கு முன் எல்லாவற்றையும் கேட்பார். விலங்குக்கும் கால்நடை மருத்துவக் குழுவிற்கும் இடையிலான பாதுகாப்பான டார்ட்டிங் தூரத்தை அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். டார்ட்டிங் செய்த பிறகு டார்ட் செய்த விலங்கைப் பாதுகாப்பாக அடைவது முக்கிய களப் பணியாகும். விலங்கு சரியாக கீழே விழுவதற்கு டார்ட் பாதுகாப்பாக செலுத்தப்பட்டதா என்பதை அவர் கவனமாகக் கவனித்தார். யானையிலிருந்து இறங்குவதற்கு முன் யானைக் கூட்ட உறுப்பினர்களின்  இயக்கத்தை மதிப்பிடுவதற்கு ஸ்கேன் செய்தல் மற்றும் காத்திருந்து பார்த்தல் போன்ற நுட்பங்களைப் பின்பற்றினார். மயக்க நிலை மற்றும் காலரிங் செய்வதற்கு ஏற்றதா என்பதை மதிப்பிடுவதற்கு விலங்கை அணுகிய முதல் நபர் டாக்டர் கே ஆவார். காலரிங் நடவடிக்கையைத் தொடர, அதன் பின்னர்தான் மீதமுள்ள குழுவினர்  இணைவார்கள். குழுவைப் பாதுகாக்க கும்கி யானைகள் மற்றும் யானை பாகன்கள் மற்றும் காவடிகள் சரியான நிலையில் நிறுத்தப்படுவர். விலங்குக்குக் கொடுக்கப்பட்ட மருந்து செயல்படும் நேரத்திற்குள் (மயக்க நிலைக்குள்)  காலரிங் செய்வது எப்படி என்று டாக்டர் கே எங்களுக்கு வழிகாட்டினார். அவர் அதை முழுமையாக அறிந்திருந்தார்’ என்று கூறுகிறார் முனைவர் சிவ கணேசன்.

இந்த விரிவான குறிப்பை நான் இங்கு தந்ததன் நோக்கம், டாக்டர்கே வின் கவனமிக்க முன்னேற்பாடுகளை நேயர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. கும்கி யானைகளின் தேர்வில் இருந்து, யார் எந்த எந்த வேலையைச் செய்வது என்பதிலும், டிராக்கர்கள் யானையை அடையாளம் காட்டுவதில் இருந்து, கூட்டத்தைக் கண்காணிப்பது, காலர் இட உதவுவது என எல்லாவற்றையும் ஒரு தேர்ந்த இசைக் கலைஞர் நல்ல பாட்டு தருவது போல, டாக்டர்கே  ஒருங்கிணைத்து,  ஒரு சிறந்த பயனுள்ள முடிவைத் தந்துள்ளார். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம், அவரது தன்னம்பிக்கையும், உணர்ச்சி வயப்படாத செயல்பாடும், கவனம் சிதறாத வேலையும்தான். அதே நேரத்தில், உலகாதய மனப்பான்மையும், அவருக்குப் பெரிதும் கை கொடுத்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *