கர்நாடகத்தின் சிறந்த வனவிலங்கு ஆவணப்படங்கள் எடுப்பதில் 1980 முதல் 2000 வரை நல்ல பெயர் பெற்றவர்கள் கிருபாகர் மற்றும் செனானி. நல்ல புகைப்படக் கலைஞர்களும் ஆவர். அவர்கள் அவ்வப்போது முதுமலை வந்து பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தினருடன் தங்குவது வழக்கம். டாக்டர் கேவுடன் அவர்களும் நல்ல நட்பு கொண்டிருந்தனர். பின்னாட்களில், காட்டு நாய் வாழ்க்கை பற்றிய சிறந்த குறும் படமும் எடுத்தனர். அவர்கள் மிகப் பெருந்தன்மையுடன் தங்கள் நினைவிலிருந்து ஓர் இனிய சம்பவத்தை எனக்கு எழுதி அனுப்பினர்.
அதன் தமிழாக்கத்தை நான் கீழே கொடுத்துள்ளேன். டாக்டர் கேவின் தந்தை போன்ற கவனிப்பு, குழுவுடன் அவருக்கிருந்த பிணைப்பு மற்றும் தொழிலில் இருந்த ஈடுபாடு போன்றவற்றை நன்றாக விளக்கும் ஒரு சிறிய நிகழ்வு இது. அதிகாலையில், குழுவின் மொத்த ஆட்களுக்கும் காப்பி மற்றும் சிற்றுண்டி செய்து, குளிக்க வெந்நீர் போட்டு, என்று அவரது அன்புக்கு என்னவென்று சொல்வது? திட்டத் தலைவர் காலாட்டிக் கொண்டு இருப்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். இங்கே நிலைமை தலைகீழ். உள்ளார்ந்த ஈடுபாடு இருந்தால் மட்டுமே வேலையோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள இயலும் என்பதற்கு ஓர் உதாரணம், டாக்டர் கே.
‘இளைஞனுக்குக் காலை வணக்கம்! சிவா தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு அடுத்த அறையிலிருந்து டாக்டரின் குரல் கேட்டது. அது சத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. அது யாராலும் புறக்கணிக்க முடியாத ஒரு விழிப்பு அழைப்பு. குறிப்பாக, அன்று எதுவும் தவறாக நடக்காமல் பார்த்துக் கொள்ள அனைவரும் நிறைய நேரத்தையும் சக்தியையும் முதல் நாள் இரவு செலவிட்டனர். பல மாதங்களாகத் தொடரப்பட்ட திட்டத்தை உண்மையில் செயல்படுத்தும் நாள். சிவா தனது காலை கடன்களை அரைத் தூக்கத்தில் செய்து, டாக்டரைச் சபித்தார். அஜய் விழித்திருந்தார். ஆனால் இன்னும் படுக்கையில் உருண்டு, நாங்கள் அனைவரும் தயாராகும் வரை காத்திருந்தார். முதல் நாள் இரவு சுமார் 12 மணிக்குத்தான் அவர்கள் அனைவரும் தூங்கச் சென்றதால், அவரைக் குறை சொல்ல முடியாது. ஆயுதங்கள், காலர், மயக்க மருந்துப் பொருள், வாகனங்கள் மற்றும் காலையில் யார் என்ன செய்ய வேண்டும் என்பது உட்பட அனைத்தும் கவனமாகத் திட்டமிடப்பட்டு சரியான இடத்தில் இருப்பதை உறுதி செய்த பிறகு படுக்கையில் விழுந்த கடைசி நபர் டாக்டர் கே. ஆனால் இப்போது மீண்டும், டாக்டர்தான் முதலில் எழுந்தார். ஏற்கெனவே காபியையும் உப்புமாவையும் தயார் செய்து வைத்திருந்தார். எங்களை எழுப்புவதற்கு முன், அவர் தண்ணீர் பாய்லருக்கான நெருப்பை மூட்டி விட்டு குளித்து முடித்திருந்தார். இப்போது அவர் விநாயகரை விரைவாக வணங்கத் தயாராகிக் கொண்டிருந்தார். வெளியே இருட்டாக இருந்தது.
கடைசியாக அஜய் எழுந்திருந்தார். ஆனால் அவர் நேராகத் தனது வேலை அறைக்கு விரைந்து சென்று, காலை உணவுக்கான டாக்டரின் அழைப்பைப் புறக்கணித்து ஏதோ எழுதத் தொடங்கினார். அப்போதுதான் சிவா தற்செயலாக தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அடுத்து நாங்கள் கேட்டது ஓர் உரத்த அலறல். அதைத் தொடர்ந்து மோசமான வசவுகள். நாங்கள் அனைவரும் மேலே பார்த்தோம். கடிகாரம் அதிகாலை 1:50 என்று மணியைக் காட்டியது. டாக்டர் அனைவரையும் 4:30க்கு பதிலாக 1:30 மணிக்கு எழுப்பி விட்டிருக்கிறார்.
இது 1980களின் பிற்பகுதியில், முதுமலை மேல் கார்குடி, ‘கரடி பங்களா’வில் நிகழ்ந்த சம்பவம். நாங்கள் இதுவரை தங்கியிருந்தவற்றுள் மிக அற்புதமான வீடு அது. அது யானைக் காட்டின் நடுவில் இருந்தது, மாலை 6 மணிக்குப் பிறகு எந்த நாகரிக உலகத்திலிருந்தும் துண்டிக்கப்படும். அங்கு, நான்கு இளம் வனவிலங்கு உயிரியலாளர்கள் இயற்கை வரலாற்றுச் சங்கத்தால் தொடங்கப்பட்ட நீண்ட கால ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிய யானைகளின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். சிவகணேசனும், அஜய் ஏ. தேசாயும் தங்கள் ஆய்வு யானைகளில் சிலவற்றை காலர் போட்டு, கள ஆய்வின்போது எழுப்பப்பட்ட சில கடினமான கேள்விகளுக்கான பதில்களைப் பெற திட்டமிட்டிருந்தனர்.
அந்த விஞ்ஞானிகளும், அவர்களின் பழங்குடி டிராக்கர்களான கிருஷ்ணாவும் சென்னாவும், சில யானைகளை அடையாளம் காண, நம்பமுடியாத முயற்சியை மேற்கொண்டனர். மேலும், காலர் இடுவதற்குக் காட்டில் சாதகமான பகுதிகளைக் கண்டுபிடிக்கும் முன்பு, பல மாதங்களாக அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். இது ஒரு மாரத்தான் முயற்சி. இப்போது பந்து டாக்டர் கிருஷ்ண மூர்த்தியின் மைதானத்தில் இருந்தது. திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், மிகவும் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவராகவும் இருந்ததால், எங்கள் அன்பான ‘டாக்டர்’ – பெரும்பாலானவர்களுக்கு நிகரற்ற ‘யானை மருத்துவர்’ – முழு முயற்சிக்கும் முற்றிலும் பொறுப்பேற்றார். குறிப்பாக ஏதாவது தவறு நடந்தால் அவர் அதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார். ஒரு காட்டு யானையை (அமைதிப்படுத்துவது) மயக்க மருந்து கொடுத்து காலர் இடுவது, நூறு தடைகளைக் கொண்டிருந்தது. அவற்றில் 99 டாக்டரின் தலைவலியாக இருந்தன.நாங்கள் வனவிலங்கு பற்றிய ஆவணப்படத் தயாரிப்பாளர்கள். அந்த நேரத்தில் நாங்கள் வளர்ந்து வரும் அமெச்சூர் வனவிலங்கு ஆர்வலர்களாக இருந்தோம். அங்குள்ள விஞ்ஞானிகள் மற்றும் கண்காணிப்புக் குழுவினரிடம் இருந்து நிறையக் கற்றுக் கொள்ளவும், ‘இயற்கை வரலாற்றுச் சங்க இல்லத்தில்’ டாக்டரின் ஆதரவைப் பெறவும் முயன்றோம். அதனால்தான், அந்த நாளில் நாங்கள் அதிகாலை 4:30 மணிக்கு முகாமை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் டாக்டர் தனது உற்சாகத்தில் 1:30 மணிக்கு அனைவரையும் எழுப்பி விட்டார்.
அது எப்படியோ, பின் அனைவரும் அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு விட்டோம், களத்தில் இறங்கி வேலை செய்ய. அதிகாலை ஆறு முப்பது மணிக்கு, அஜய்யும் அவரது பழங்குடி டிராக்கர்களும் தங்கள் இலக்கு (குறிப்பிட்ட) யானையைக் கண்டுபிடித்தனர். கும்கி யானைகள் அந்த இடத்தை அடையும் வரை, அவர்கள் சிறிது தூரம் அந்த யானையைப் பின்தொடர்ந்தனர். குழு மெதுவாக நெருங்கத் தொடங்கியது. எல்லா நேரங்களிலும் காற்றை யானையின் திசையில் இருந்து வருமாறு வைத்திருந்தனர். இல்லையென்றால், யானைக்கு எங்கள் வாடை எட்டி விடும். டாக்டரும் அவரது சக கால்நடை மருத்துவர்களும் இலக்கு யானையின் உடல் நிறையை (எடை) நெருக்கமாக மதிப்பிட்ட பிறகு, மயக்க மருந்தின் அளவை விரைவாகக் கணக்கிட்டனர். அன்று டாக்டரின் கட்டளையின் கீழ் பல ஜூனியர் கால்நடை மருத்துவர்கள் இருந்தனர். யானை சரியான நிலப்பரப்பில் வந்தவுடன், அது மந்தையில் உள்ள மற்ற யானைகளிடமிருந்து சற்று விலகிச் சென்றபோது, அஜய்யும் சென்னாவும் எச்சரிக்கையுடன் மிக அருகில் நெருங்கினர்; யானைகளுக்கு எந்தத் துப்பும் கொடுக்காமல். அடுத்த கணம், காட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. யானைகளுக்குச் சில நொடிகள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. விரைவில் அவற்றில் ஒன்று எங்கள் வாடையைப் பெற்றது. உடனே பீதியடைந்து, வெவ்வேறு திசைகளில் அவை பறந்தன. இப்போது எது டார்ட் செய்யப்பட்டது? எல்லோரும் திகைத்து நின்றனர்.
இந்தியக் காடுகளில் அடர்ந்த புதர்கள் நிறைந்த சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். ஆனால் சில நொடிகளில், ஒரு பாகன், டார்ட் செய்யப்பட்ட பெண் யானையைக் கண்டு, தனது கும்கியில் அதைப் பின் தொடர ஆரம்பித்தார். அனைத்துக் குழு உறுப்பினர்களும் அந்தக் கும்கியின் பின்னால் நகரத் தொடங்கினர். இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. காரணம், மொத்தக் கூட்டமும் பீதியில் இருந்ததாலும், அவர்கள் டார்ட் செய்யப்பட்ட பெண் யானையிடமிருந்து வெகு தொலைவில் இல்லாததாலும். ஆயினும், எந்த அசம்பாவிதமும் நேரவில்லை. மேலும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, டார்ட் செய்யப்பட்ட யானை மெதுவாகக் கீழே சரிந்தது. அதன் தும்பிக்கை இன்னும் ஆடிக் கொண்டிருந்த போதும். டாக்டர் கே தனது இளம் குழுவிற்கு அறிவுறுத்தல்களை வழங்கிக் கொண்டிருந்தார். யானையைக் கண்காணிக்க ஏராளமான விஷயங்கள் இருந்தன. இரத்த அழுத்தம், மூச்சு, உடல் வெப்பம் என யானையின் நிலையைப் பல அலகுகளில் கணிக்க வேண்டியிருந்தது. ஆனால் அதிகாலை 1:30 மணிக்கு விசித்திரமாகத் தொடங்கிய விஷயத்திற்கு, அதன் பின், முழு நடவடிக்கையும் சீராக நடைபெறுவதை டாக்டர் உறுதி செய்தார். டாக்டரின் செயலாற்றல் மிகவும் சரியாக இருந்ததால், மாலைக்குள் அவர் பிரபலமானவராக ஆகிவிட்டார்.
டாக்டரின் ஆர்வமும், ஈடுபாடும் அவர் எதைச் செய்தாலும் தெளிவான முடிவை தந்தது. அது அவர் எதைச் செய்தாலும் பிரதிபலிக்கும். அவரது உற்சாகம் எங்கள் அனைவருக்கும் பரவி, கடினமான காலங்களில் எங்களை உற்சாகப்படுத்தும். சில சிறப்பு சந்தர்ப்பங்களில் அவர் எங்களுக்காகச் செய்த சமையலில்கூட அது பிரதிபலித்தது.
அந்த நேரத்தில், விஞ்ஞானிகள் அனைவரும் இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தனர். டாக்டர் கே, 65 வயதாக இருந்தார். டாக்கின் எல்லையற்ற உற்சாகம், யார் எங்களில் இளைஞர் என்று அடிக்கடி யோசிக்க வைத்தது. அவரைச் சுற்றியுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் அவரது இருப்பு ஒரு நிலையான உத்வேகத்தையும் உறுதியையும் அளித்தது. வயது ஏற, ஏற உற்சாகமும் ஆர்வமும் குறைவது இயல்பானது. ஆனால் டாக்டரிடம் அது ஒருபோதும் நடக்கவில்லை. ஒருவேளை, அந்த மனநிலை, நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பதைவிட, உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது இல்லையா?’
இவ்வாறு அந்த ஆவணப்பட தயாரிப்பாளர்கள் டாக்டர் கே பற்றி எழுதியுள்ளனர்.
(தொடரும்)

