Skip to content
Home » யானை டாக்டரின் கதை #32 – யானைப் பால்

யானை டாக்டரின் கதை #32 – யானைப் பால்

டாக்டர் கே எவ்வளவுக்கு எவ்வளவு வேலையில் முனைப்பாக இருந்தாரோ, அதே அளவு எல்லோரிடமும் இயல்பாகவும், விளயாட்டுத்தனமாகவும் இருந்தார் என்பதைப் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அவர் பழகும் விதம், வேலையில் அவர் பெரும் முனைப்பு உள்ளவர் என்பதைக் காட்டும் விதமாக இருக்காது. இடையிடையில், ஜோக் அடித்துக் கொண்டும், தமாஷ் செய்து கொண்டும் இருப்பதால், அவர் வேலையில் கவனமில்லாமல் இருப்பாரோ என்று பார்ப்பவர்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் அது அவரது குணாதிசயங்களில் ஒன்று என்பதை நன்கு பழகியவர்களுக்குத் தெரியும். எதையும் சிரித்த முகத்துடன் செய்வது அவரது பாணி. நாட்டியக் கலைஞர் சிரித்துக் கொண்டே ஆடுவதுபோல. அதைத்தான், முனைவர் ஈசாவும் பதிவு செய்கிறார்; மற்ற உதவியாளர்களும், பாகன்களும் சொல்கின்றனர். இந்தப் பதிவில் அதை ஆராய்ச்சியாளர் ஜஸ்டஸ் ஜோஷுவாவும் அழகாகக் கூறுகிறார்.

‘1987ஆம் ஆண்டு முதல், அப்போதைய முதுமலை வன விலங்கு சரணாலயத்தில், பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம், யானைத் திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்த போதிலிருந்து, டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை நான் அறிவேன். அனைவரும்  அவரை அன்பாக டாக்டர் கே என்று அழைப்பர்.  நான் மரியாதையுடன் டாக் என்று அழைப்பேன்.  அவர் மிகவும் ஜாலியானவர். ஆனால் தனது பணியில் மிகவும் தீவிரமானவர். அதை அவர் ஆர்வத்துடனும் முழு மனதுடனும் செய்தார். தமிழ்நாடு அரசின் வனத்துறையில் கால்நடை மருத்துவராக இருந்தபோது, காட்டு யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது அவற்றுடன் பேசுவார் என்று அறியப்பட்டதால், யானை மருத்துவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

எனது முனைவர் பட்டத்தின் ஒரு பகுதியாக நரைமயிர் மலை அணில் (கிரிஸில்ட் ஜெயண்ட் ஸ்குரில்) பற்றிய களப்பணிக்குப் பிறகு, 1989ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் டெஹ்ராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் யானைத் திட்டத்தில் சேர்ந்தேன், முக்கியமாக உ.பி.யின் ராஜாஜி தேசியப் பூங்காவில் ஆசிய யானைகளின் நடமாட்டம் மற்றும் வாழ்விடப் பயன்பாட்டை குறித்த ஆய்வில் இருந்தேன். இந்தத் திட்டத்தில் யானைகளின் ரேடியோ காலரிங்கும் அடங்கும்.  மேலும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அனுமதியின் ஒரு பகுதியாக, காலரிங் நடவடிக்கைகளின் தலைவராக கால்நடை மருத்துவர் டாக்டர் கேவை நியமித்தார்கள். 1990 டிசம்பரின் குளிர்காலத்தில் காலரிங் பணியை நாங்கள் திட்டமிட்டோம், டாக்டர் கே வன உயிரின ஆய்வு மையத்துக்கு வந்தார், டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங், டாக்டர் ரவி செல்லம் மற்றும் நான் மூவரும் அவருடன் ஒரு சந்திப்பை நடத்தி முழு காலரிங் பணியையும் திட்டமிட்டோம். இரண்டு பெண் யானைகளையும் ஒரு ஆண் யானையையும் காலர் இட திட்டமிட்டிருந்தோம், எனவே அனைத்து திட்டமிடலும் அதற்கேற்ப செய்யப்பட்டது. நான் டாக்டருடன் நெருக்கமாக இருந்தேன்; யானையின் நடத்தையை பற்றியும், பிற அம்சங்களைப் பற்றியும் விவாதிப்பேன்; இது யானைகள் குறித்து நான் செய்த வேலையில் மிகவும் உதவியாக இருந்தது. இது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது.

ரேடியோ காலரிங் திட்டமிடலின் ஒரு பகுதியாக,  இதுபோன்ற ஒரு விவாதம் முடிந்ததும், நான் டாக்டரிடம் யானைப் பாலை ருசிக்க விரும்புவதாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். மேலும் நாங்கள் அடையாளம் கண்ட, குறிவைத்த இரண்டு பெண் யானைகளும் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட  வயதுடைய கன்றுகளைக் கொண்டிருந்தன என்றும், தாய்ப்பாலூட்டுகின்றன என்றும் அவரிடம் சொன்னேன். அதன் பிறகு நாங்கள் காலரிங் நடவடிக்கையைத் தொடங்கினோம்.  வன உயிரின ஆய்வு மைய திட்ட கள உதவியாளர்கள், வன கள ஊழியர்கள் மற்றும் துணை வனப் பாதுகாவலர் உதவியாளர்கள் (DCF), நாங்கள் மற்றும் டாக் ஆகியோரை உள்ளடக்கிய எங்கள் குழு, காலை முதல் மாலை வரை யானைகளை மயக்க மருந்து ஊசி செலுத்த சரியான இடத்தைக் கண்டறிய கால்நடையாகப் பின்தொடர்ந்து சென்றது. ஏனெனில், சமமில்லாத அலைலையான நிலப்பரப்பைக் கொண்டது சிவாலிக் மலை. 65 வயதுக்கு மேற்பட்ட வயதில், யானையைக் கண்காணிக்க நாங்கள் சென்ற அனைத்து செங்குத்தான, குறுகிய பாதையிலும் டாக் சர்வசாதாரணமாக நடந்து வந்தார். இத்தனைக்கும் அவரது ஒரு காலில் சில ஆண்டுகளுக்கு முன் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. 10 நாட்களுக்குள் பிக்பாஸ் என்ற பெரிய ஆண் யானை ஒன்றுக்கும், பிறகு காலர், காரா என்கிற பெண் யானைகள் இரண்டுக்கும் வெற்றிகரமாக ரேடியோ காலர் பொருத்தினோம், இது அவரது வேலையின் மீதான ஆர்வம், உறுதிப்பாடு, மற்றும் ஈடுபாட்டைக் காட்டுகிறது.

முதலில் நாங்கள் காலர் செய்த  காரா, ஒரு வயது வந்த பெண் யானை. ஒன்பது பேர் கொண்ட குழுவின் தலைவி. இரண்டு வயதுக்குட்பட்ட  ஒரு குட்டியுடன் இருந்தது; குட்டிக்கு பாலும் ஊட்டிக்கொண்டிருந்தது. அந்த பெண் யானை மயக்க ஊசி செலுத்தப்பட்டு மயங்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அதன் குட்டி, குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் சென்றுவிட்டது. காரா அங்கேயே மயங்கி படுத்திருந்தது. நாங்கள் எல்லோரும் ஓடி ஓடி தேவையான அனைத்து தரவுகளையும் பதிவு செய்து கொண்டிருந்தோம். தரவுகள் என்றால், யானையின் உடல்நலக் குறியீடுகள். உடல் வெப்பம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், போன்றவை. திடீரென்று டாக்டர் என்னை, ‘ஜஸ்டஸ்… ஜஸ்டஸ்,’.. என்று அழைப்பதைக் கேட்டேன். நான் யானையின் கழுத்தில் ரேடியோ காலரைச் சரியாக இடும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அதை நான் சிறிது நேரம் நிறுத்திவிட்டு டாக்டரிடம் சென்றேன். அவர் தீவிரமாகத் தனது ஆள்காட்டி விரலைக் காட்டி என்னை நக்கச் சொன்னார். ‘இளைஞனே, நீ யானைப் பாலை ருசிக்க விரும்புவதாக என்னிடம் சொன்னாய். ஆனால், எனக்கு இருந்த எல்லா பலத்தையும் பிரயோகித்து, மிகவும் சிரமப்பட்டு என்னால்  என் விரலில் இருக்கும் ஒரு சொட்டுப் பாலை மட்டுமே பிழிய முடிந்தது’ என்று கூறினார்.

பால் மிகவும் குறைவாக, சொட்டு போல், அவர் விரல் நுனியில்  இருந்தது. நான் உண்மையில் பாலை பார்ப்பதற்குள் அது காய்ந்து போய் விட்டது. சுவைக்க முடியவில்லை. இதேபோல், காலர் பெண் யானையை ரேடியோ காலர் செய்த போதும் நடந்தது. பால் வெகு குறைவாகச் சொட்டுபோல் இருந்ததால், என்னால் சுவைக்க முடியவில்லை. இது அந்த வயதிலும் தீவிரமான வேலையில் ஈடுபட்டபோதும், அவரது வலுவான நினைவாற்றல் மற்றும் விளையாட்டுத்தனத்தைக் காட்டுகிறது. அவர் எவ்வளவு நிதானமாகவும், குளிர்ச்சியாகவும், கூர்மையான சிந்தனையுடனும், மனத்துடனும் இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. அவரை யாராலும் மாற்ற முடியாது. அதே சிந்தனை, அவர் சிகிச்சை அளித்த விலங்குகளுக்கும் இருந்திருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’.

வேலையில் காட்டிய அதே வேகத்தையும், ஈடுபாட்டையும் அவர் பழகுவதிலும் காட்டினார் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டும். பெரும்பாலும், கறாராக, சிரிப்பே இல்லாத முகமும் கொண்டு எப்போதும் எதோ தீவிர எண்ணத்தில் இருப்பதுபோல் இருந்தால்தான், ஒருவர் நன்றாக வேலை செய்கிறார் என்று நினைப்பது உலக இயல்பு. மாறாக, சிரித்துக்கொண்டும், இடையிடையே விளையாட்டுத் தனமாகவும் இருந்தால், அது தலைமைக் குணம் இல்லை என்று நாம் தவறாக எண்ணிக் கொள்ளப் பழகிவிட்டோம், ஆனால் டாக்டர் கே இரண்டாவதாக கூறிய இயல்பில்தான் இருந்தார். அவரது நகைச்சுவை உணர்வு மிகவும் புகழ் பெற்றதுடன், வேலையிலும் வெளிப்படும் என்பதை அவருடன் பணி புரிந்தவர்கள் சொல்வார்கள். இத்தனைக்கும் இடையில் அவர் பணி புரிந்ததுபோல பணிபுரியும் மருத்துவர்கள் வெகு குறைவு என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *