Skip to content
Home » யானை டாக்டரின் கதை #33 -யானைகள் மறுவாழ்வு முகாம் வந்த கதை

யானை டாக்டரின் கதை #33 -யானைகள் மறுவாழ்வு முகாம் வந்த கதை

முந்தைய அத்தியாயங்களில், கோவில் யானைகள் எப்படிச் சரிவர நடத்தப்படுவதில்லை என்பதையும், அதன் பின்விளைவுகளையும் நான் போகிற போக்கில் குறிப்பிட்டிருந்தேன். வெகு ஆழமாக சென்று பேசவில்லை. டாக்டர் கே இதுகுறித்துப் பல தருணங்களில் பேசினாலும், அரசு முடிவாக எதுவும் நடக்கவில்லை. இங்கே, ஊடக அழுத்தம் எவ்வாறு வேலை செய்தது என்பதை பிரபல ஊடக செய்தியாளர் திரு.ஒப்பிலி பதிவு செய்கிறார். அது எப்படி டாக்டர் கேவின் வாயிலாக நிகழ்ந்தது என்பதையும் தெளிவுப்படுத்துகிறார். அவரது  கட்டுரை மிக நன்றாகவும் எளிமையாகவும் இருந்ததால், நான் ஒருசில இடங்களில் சிறிய திருத்தங்கள் செய்தது தவிர வேறெதுவும் செய்யவில்லை. ஒப்பிலிக்கு என் நன்றிகள்.

‘டாக்டர் கே உடனான எனது முதல் சந்திப்பு 1999ஆம் ஆண்டில். அப்பொழுது அவர் ஆந்திராவில் உள்ள குப்பம் பகுதியில், பயிர்களை மேயும் ஒரு காட்டு யானையைப் பிடித்து வேறு காட்டு பகுதியில் விடும் வேலையை முடித்துவிட்டு அப்போதுதான் சென்னை திரும்பி வந்துள்ளார். அவரை ஆந்திர அரசு இந்த வேலைக்காக அழைத்திருந்தது. காலை வழக்கம் போல கிண்டி பாம்பு பண்ணைக்கு வந்திருந்தார். அப்பொழுதுதான் எனக்கு அவரது அறிமுகம் கிடைத்தது. அவருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் அவை புதிய பகுதிகளை நோக்கி நகர தொடங்கி உள்ளதாகக் கூறினார். அதன் வெளிப்பாடே குப்பம் பகுதியில் யானைகள் வந்துள்ளதாக அவர் கூறினார்.

அதுவரை குப்பம் பகுதிக்குள் யானைகள் வந்ததே இல்லை. பிறகு சிறு எண்ணிக்கையில் வர ஆரம்பித்த யானைகள் தற்பொழுது கூட்டமாக வருவதும், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு காட்டுப் பகுதியிலிருந்து வெளி வந்து பிறகு ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்குச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. யானைகளின் வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து அப்பொழுதே அவர் தன் கவலையை வெளிப்படுத்தினார் டாக்டர் கே.  ஒரு கப் தேநீர் அருந்திவிட்டு காட்டு யானைகளுடனான அவரது நட்பு மற்றும் அவற்றின் பழக்க வழக்கங்கள் குறித்து விரிவாகப் பேசிக்கொண்டிருந்தார்.

நான் அவரை முதன் முறையாக அன்றுதான் பார்க்கிறேன் அதுவும் ஒரு பத்திரிகையாளராக. ஆனால் அவர் எந்த ஒரு தயக்கமும் இன்றி என்னிடம் நட்பாகப் பேசினார். பொதுவாகவே எந்த ஓர் அரசாங்க அதிகாரியும்  தங்களைவிட வயது குறைந்தவர்களிடம் சகஜமாகப் பேச யோசிப்பார்கள். அதிலும் பத்திரிகையாளர் என்றால் பொதுவாகவே அதிகாரிகள் அவர்களைத் தவிர்க்கப் பார்ப்பார்கள். அதற்கு ஒரு விதி விலக்கு  டாக்டர் கே.

அதன் பிறகு ஹிந்து பத்திரிகையின் மெட்ரோ இணைப்பிதழில் அவரது நேர்காணல் செய்தியாக வெளி வந்தது. அதன் பிறகு எங்கள் இருவரின் நட்பு வளரத்தொடங்கியது. எப்படியும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் டாக்டர் கேவைச் சந்திப்பது எனக்கு வாடிக்கையாகி விட்டது. பலமுறை நான் வனம் மற்றும் யானைகள் குறித்து எழுதும் கட்டுரைகளுக்குப் பல தகவல்களை என்னிடம் கூறியுள்ளார்.

டாக்டர் கேயின் சிறப்பே அவரது எளிமையான உரையாடல்தான். ஒரு முறை பேசிக்கொண்டிருந்த பொழுது ’ஒப்பிலி நீங்கள் வனத்தில் உள்ள யானைகள் பற்றியும் வனங்களில் ஆக்கிரமிப்பு குறித்தும் எழுதுகிறீர்கள். அதேபோல தனியார் வசம் மற்றும் கோயிலில் உள்ள யானைகள் குறித்தும், அவை எவ்வாறு துன்பப்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும் விரிவாக ஒரு கட்டுரை உங்கள் பத்திரிகையில் எழுதவேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அது குறித்த தகவல்கள் அனைத்தும் தருவதாகவும் கூறினார்.

இப்போது உள்ளதுபோல இணைய வசதிகள் இல்லாத காலம் அது. அதனால் யானைகள் பராமரிப்பு குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாத நேரம் அது. அந்தக் கால கட்டத்திலேயே டாக்டர் கே தனியார் மற்றும் கோவில்களில் உள்ள யானைகள் சரியான முறையில் பராமரிப்பது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார்.

சில நாட்கள் கழித்து அவரை சந்தித்தபோது ’உங்கள் புகைப்பட நிபுணரை திருவேற்காடு கோயிலுக்குச் சென்று அங்குள்ள யானையின் நிலைமையைப் புகைப்படம் எடுக்கச் சொல்லுங்கள்’ என்றார். நானும் உடனே எனது அலுவலகத்தின் தலைமைப் புகைப்படக்காரரிடம் தகவல் சொல்லி ஒரு புகைப்படக்காரரை திருவேற்காடு கோயிலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். பின் என்னிடம் டாக்டர் கே எவ்வாறு அந்தப் பெண் யானை சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்பதை விளக்கினார்.

பொதுவாகவே யானைகள் தங்கள் கால்களை, குறிப்பாக பின்னங்கால்களை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டே இருக்கும் பழக்கம் உடையவை. எனவே அவை நிற்கும் பகுதி சிமெண்டால் பூசிய பகுதியாக இல்லாமல், மண் தரையாக இருப்பது நல்லது. ஏனெனில், யானை தன் கால்களை ஆட்டும்பொழுது தரையில் உரசும். அவ்வாறு உரசும்பொழுது மண் தரையாக இருந்தால் யானையின் காலில் எவ்வித காயமும் ஏற்படாது. அதுவே சிமெண்ட் பூசிய தளமாக இருந்தால், யானையின் உள் பாதத்தில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு காயங்கள் ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், அது யானையின் உயிருக்கே ஆபத்தாக முடியும். யானைகளுக்கு அதன் தும்பிக்கை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் கால்கள். எனவேதான் கோயில்களில் உள்ள யானையின் கால்களில் எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி கூறினார் டாக்டர் கே. அதேபோல பல கோயில் யானைகளுக்குச் சரியான மருத்துவ வசதிகள் இல்லாமால் நோய்களால் பாதிக்கப்பட்டு   இறப்பது குறித்தும் விளக்கி கூறினார் அவர். இந்தப் பிரச்னைகள் குறித்து உங்கள் பத்திரிகையில் விரிவாக ஒரு கட்டுரை எழுதினால் மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கும் என்பதையும் அவர் எனக்குச் சொன்னார்.

அவர் கூறிய அனைத்து தகவல்களையும் வைத்து தனியார் மற்றும் கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளின் நிலை குறித்த ஒரு கட்டுரை தி ஹிந்து பத்திரிகையில் பெரிய செய்தியாகப் போடப்பட்டது. அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா அவர்கள். பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்து விட்டு அரசு உடனடியாக ஒரு குழுவை ஏற்படுத்தியது. அதன் தலைவராக டாக்டர் கேவை நியமித்து. எந்த மாதிரியான பராமரிப்பு முறைகள் யானை வைத்துள்ளவர்கள் (தனியார் மற்றும் கோயில்) பின்பற்ற வேண்டும்;  யானைகளுக்கான வைத்திய முறைகள் மற்றும் அவற்றிற்கான உணவு முறைகள் குறித்தும் அந்தக் குழு ஆலோசனை கூறவேண்டும் என்று அரசு உத்தரவு வெளியானது. அந்த உத்தரவில் குழுவின் ஆலோசனைகளைச் சில மாதங்களுக்குள் அரசுக்கு அளிக்கவும் கூறப்பட்டிருந்தது.

அந்தக் குழுவின் ஆலோசனைப்படி, குறிப்பாக டாக்டர் கேயின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் 45 நாட்களுக்கு இந்து அறநிலையத் துறையின் மூலம் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது. யானைகளின் புத்துணர்ச்சி முகாம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு முழு முதற் காரணம் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்று சொன்னால் மிகையாகாது.’.

இப்படியாக, யானைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், அவர் பின் வாங்கவில்லை. மற்றவர்கள்போல, அரசு நம்மைக் குறை சொல்லுமோ என்ற பயமும் இன்றி, இது ஒரு வன உயிரின மேம்பாடு குறித்த நல்ல முயற்சி என்ற எண்ணத்தில், தன்னால் எந்த அளவு உதவ முடியுமோ அந்தளவு உதவி, இந்த நல்ல காரியம் வெற்றி பெற அவர் ஒத்துழைத்தது, டாக்டர் கேவின் ஈடுபாடு மற்றும் அர்பணிப்பைக் காட்டுகிறது. ஒப்பிலி சொன்னதுபோல, யானைகள் மறு வாழ்வு முகாம் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. என்ன, சரியானபடி இந்த முகாம் நடந்தால், நாட்டில் இருக்கும் வளர்ப்பு யானைகள் பலன் பெறும்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *